Friday, July 28, 2006

இலங்கையில் இப்போது நடப்பவை

கடந்த நாலைந்து நாட்களுள் இனச்சிக்கலின் நிலை தீவிரமடைந்துள்ளது.


கண்காணிப்புப் பணியிலிருந்து தனது நாட்டு அங்கத்தவரை விலக்கிக் கொள்வதாக பின்லாந்து அறிவித்துள்ளது.
ஐரோப்பிய யூனியனைச் சேர்ந்த நாடுகள் யுத்தநிறுத்தக் கண்காணிப்புக் குழுவிலிருந்து விலகிக்கொள்ள வேண்டுமென புலிகள் கேட்டிருந்தனர். அவர்கள் செயற்படுவதற்கான கால எல்லையையும் வரையறுத்திருந்தனர்.
அதன்படி இன்னும் ஒரு மாதமேயுள்ள நிலையில் சம்பந்தப்பட்ட 3 நாடுகளில் பின்லாந்து தன் விலகல் முடிவை அறிவித்துவிட்டது.

அம்மூன்று நாடுகளும் கண்காணிப்புப் பணியிலிருந்து விலகவேண்டுமென்ற கோரிக்கை தொடர்பில் விமர்சனத்துக்கு இடமேயில்லை. மிகமிக நியாயமான கோரிக்கையே. தங்கள் சொந்த அரசியலுக்காக சகட்டுமேனிக்குப் பட்டியல் வெளியிடுவதும் இன்னொருவர் மீது தமது விருப்பத் தீர்வைத் திணிப்பதும் தாங்கள் நினைத்த எதையும் மற்றவர் மீது செய்துவிடலாம் என்ற மமதையுமாக இவர்கள் ஆடும் கூத்துக்கு ஓர் ஆப்பு வைக்கப்பட வேண்டும். முடிவைப் பரிசீலிக்கச் சொல்லி புலிகளுக்கு இவர்கள் விடும் கோரிக்கையிலும் எச்சரிக்கையிலும் எந்தவித தார்மீக நியாயமுமில்லை.
என்வரையில் சம்பந்தப்பட்ட நாடுகள் கண்காணிப்புப் பணியில் ஈடுபடக்கூடா என்பதில் இன்னுமின்னும் தமிழர் தலைமை இறுக்கமாக இருக்கவேண்டுமென்பதே அவா.

ஏற்கனவே சும்மா பெயரளவில் மட்டுமே இருந்துகொண்டிருக்கும் குழுவுக்கு இவ்வெளியேற்றத்தால் ஏதும் வித்தியாசம் தெரியுமென்று தோன்றவில்லை. அறிக்கை விடுவதை மட்டும்கூட பக்கச்சார்பற்றும் ஒழுங்காகவும் செய்யமுடியாத நிலையிலிருக்கும் கண்காணிப்புக்குழு, அப்படி வெளியிடும் அறிக்கைகளுக்கும் துளியும் மதிப்பற்ற நிலையில் அறிக்கை வெளியிடும் கண்காணிப்புக்குழு எண்ணிக்கை குறைவதாலோ அதிகரிப்பதாலோ ஏதும் வெட்டிப் பிடுங்கப் போவதில்லை.
பெருமெடுப்பில் ஒரு இராணுவ நடவடிக்கையே நடைபெற்ற 'வாகனேரி'ச் சம்பவத்தில் இக்கண்காணிப்புக்குழு என்ன செய்தது என்பது எனக்குத் தெரியவில்லை.
கருணா குழுவை இயக்குவது / ஆதரவளிப்பது அரசபடைதான் என்று இவர்கள் வெளயிட்ட அறிக்கைக்கு ஏதும் பலனிருந்ததாகவும் தெரியவில்லை.
*************************************************
நோர்வேயின் சிறப்புத் தூதுவர் இலங்கை வருகிறார்.
ஜப்பானிய தூதுவர் அகாசியின் இலங்கை வரவு தொடர்பான செய்திகளும் கருத்துக்களும் பரவலாக அடிபடுகின்றன.
முன்பும் பிரபாகரனைச் சந்திப்பது என்று வந்து நிறைவேறாமலேயே அவரது பயணம் முடிந்தது.
இந்தமுறையும் பிரபாகரனைச் சந்திப்பது என்பது தான் அவரது முழு நோக்கமாம்.

அவரது கதையைப் பார்த்தால் அவர் பிரச்சினை தொடர்பாக ஏதும் ஆக்கபூர்வமாகச் செய்வதாகத் தெரியவில்லை. இலங்கை வருவதாக திட்டம் அறிவிக்கும்போதே புலியை வெருட்டும் விளையாட்டைத் தொடங்குகிறார். சில வெருட்டல்களோடு, தன் பிரபாகரனைச் சந்திக்கவேண்டுமென்று சொல்லி, அப்படி அவர் சந்திக்க மறுத்தால் ஏற்படும் பின்விழைவுகள் என்று தொடர்ந்து சில வெருட்டல்கள்.
இந்த நேரத்தில் புலிகள் டோக்கியோ மாநாட்டைப் புறக்கணித்தது ஞாபகம் வருகிறது.
இப்படி ஒவ்வொருவரும் ஒவ்வொரு 'சொறிக்கதை' கதைத்துக்கொண்டிருப்பார்கள்.
இப்போதைய நிலையில் அபிவிருத்தி, இடைக்கால நிர்வாகம், சுனாமிக் கூட்டமைப்பு என்பவை சாத்தியமற்ற நிலை தெளிவாகத் தெரிகிறது. இன்னொரு சுழற்சி நடக்க வேண்டும்போல உள்ளது. இந்நிலையில் ஜப்பான் ஏதாவது செல்வாக்கைக் கொண்டிருப்பதாக வெளிப்பார்வைக்குத் தெரியவில்லை.
தனிப்பட்டவனாக என்னுடைய கருத்து என்னவென்றால், அகாசியுடனான சந்திப்புக் கோரி்க்கையை புலிகள் மறுத்துவிடவேண்டுமென்பதே.
ஆனால் இன்று பிரிட்டன் தூதுவருடன் வன்னியில் சந்திப்பை நடத்தியதைப் பார்த்தால் அகாசி வன்னி வருவார் போலத்தான் கிடக்கு.
*************************************************

கொஞ்சக்காலமாக அடங்கிக் கிடந்த வான் தாக்குதல்கள் மீளத் தொடங்கியுள்ளன.
சரத் பொன்சேகா மீதான தாக்குதல் முயற்சிக்குப் பதிலடியாகத் தொடங்கப்பட்டது இம்முறை. திருகோணமலை சம்பூரில் நடந்த முதல்தாக்குதலில் 16 பொதுமக்கள் கொல்லப்பட்டனர். அதன்பின் வன்னியில் பலதடவைகள் வான்தாக்குதல்கள் நடத்தப்பட்டன. இவற்றில் பெரும்பாலானவை புலிகளின் ஓடுபாதை எனச்சொல்ப்படும் இடம்மீது நடத்தப்பட்ட தாக்குதல்கள். அதைவிட திருகோணமலையில் சரமாரியான எறிகணைத் தாக்குதல்களும் நடத்தப்பட்டன. ஏறக்குறைய முப்பதாயிரம் பேர் இத்தாக்குதல்களால் இடம்பெயர்ந்தனர்.
இவையனைத்தும் தம்மீதான தாக்குதலுக்கான "மட்டுப்படுத்தப்பட்ட எதிர்வினை" என்று அரசு சொல்லிற்று.

பின் கொழும்பில் மேஜர் ஜெனரல் பாரமி குலதுங்க மீதான தற்கொலைத்தாக்குதல் நடத்தப்பட்டு அதில் அவர் கொல்லப்பட்டபோது ஆச்சரியப்படும்படி அரசதரப்பு எந்த எதிர்த்தாக்குதலையும் செய்யவில்லை. அதற்கு முன் இறுதியாக நடத்ப்பட்ட வான்தாக்குதலைத் தொடர்ந்து விடுதலைப்புலிகள் விடுத்த கடுமையான எச்சரிக்கையும், அதன் நீட்சியாக கொழும்புத் துறைமுகம் மீதான பெரிய தாக்குதலுக்கான திட்டமொன்று சிக்கலுக்குள்ளான நிலையில் அதோடு சம்பந்தப்பட்ட இருவர் படையினரால் கைதுசெய்யப்பட்டதும், அதையும் தொடர்ந்து வெடிபொருட்கள், படகுகள், முகவர்கள் என புலிகளின் கணிசமான விசயங்கள் கொழும்பில் தெரியவந்ததும்தாம் அரசபடையினரின் அமைதிக்குக் காரணமென ஊகிக்கப்பட்டது.

குறிப்பிட்ட இடைவெளியின்பின் மீண்டும் அரசவான்படை தாக்குதலைத் தொடங்கியுள்ளது. இம்முறை படையினர் மீதான தாக்குதலுக்கான பதிலடியாக இன்றி வேறொரு பிரச்சினைக்கு நடந்துள்ளது. புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிக்குள்ளால் வரும் மாவலியாற்று நீர் படையினரின் பகுதிக்கு வராமல் தடுக்கப்பட்டதால் இத்தாக்குதல் என அறிவிக்கப்பட்டது.
மூன்றுநாட்களாக திருகோணமலையில் சம்பந்தப்பட்ட பகுதிகள் மீது வான்படைத் தாக்குதலும் எறிகணைத் தாக்குதலும் நடத்தப்பட்டுள்ளன. இதில் நேற்று நடந்த குண்டுவீச்சில் ஐந்து புலிகள் கொல்லப்பட்டுள்ளனர்.
ஆதேவேளை வன்னியிலும் வான்படைத் தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன. வன்னியில் முல்லைத்தீவுப் பகுதியிலும் அதையண்டிய "கேப்பாப்புலவு" எனுமிடத்திலும் தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன. திருகோணமலையின் நீர்ப்பிரச்சினைக்கு வன்னியில் தாக்குதல் நடத்தியாக எடுக்க முடியாது. அண்மைக்காலமாக புலிகள் முல்லைத்தீவை அண்டிய பகுதியில் பெரிய விமான ஓடுபாதை அமைப்பதாக அரசதரப்பு செய்தி வெளியிட்டு வந்தது. அதன் பின்னணியில் அப்பகுதி மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

கேப்பாப்புலவு என்பது, புதுக்குடியிருப்பிலிருந்து முள்ளியவளை செல்லும் வீதியில் வரும் இடம். சிறு காட்டுத் துண்டுகளையும் கணிசமான விவசாய நிலங்களையும் அதேபோல் குறிப்பிடத்தக்களவு சிறுபற்றை மற்றும் கட்டாந்தரைகளையும் கொண்ட பகுதி. வீதியின் ஒருபக்கம் சில வயற்காணிகளைத் தாண்டி நந்திக்கடல் நீர் நிற்கும். மறுபக்கம் வயற்காணிகளைத் தாண்டி காட்டுப்பகுதி இருக்கும். மக்கள் செறிவாக வாழாத வயல், சிறுபற்றை, மந்துக்காடுகளைக் கொண்ட நிலப்பகுதிதான் கேப்பாப்புலவு.

ஓயாத அலைகள்-3 இன்பின் புலிகள் கைப்பற்றி வைத்திருக்கும் பெரிய நிலப்பரப்பில் இன்னும் சில இடங்கள் இவ்வாறு "விமான ஓடுபாதை அமைக்கும்" இடமாக அரசதரப்பால் சொல்லப்படும். மிகப்பெரும் நிலப்பரப்பு சும்மா இருப்பதால் புலிகள் அரசைப் பேயக்காட்டவோ அல்லது உண்மையாகவோ விமானத்தள வேலைகளைச் செய்வர் என எதிர்பார்க்கலாம். (திருகோணமலையின் சம்பூரும் புலிகளின் விமானத்தளப் பெயரைப் பெற்றுத்தான் கொஞ்சக்காலம் பிரபலமாக இருந்தது)

திருகோணமலை நீர்த்தகராறு விசயம் கடுமையாக மாறியுள்ளது. இன்று தரைவழியாக அப்பகுதியைக் கைப்பற்றும் நோக்கில் படையெடுப்பொன்று நடைபெற்றதாகவும் அதை தான் முறியடித்ததாகவும் புலிகள் தெரிவித்துள்ளனர்.
நீர் நிறுத்தப்பட்டதற்கான சரியான காரணம் தெரியவரவில்லை. அப்பகுதி மக்கள் கண்காணிப்புக் குழுவோடு நடத்திய சந்திப்பில் முன்வைத்தவற்றுள் மூதூருக்கு சொந்த நீர்த்தாங்கி, குறிப்பிட்ட பாதையொன்றில் சுதந்திரமான போக்குவரத்து அனுமதி மற்றும் தம்மீதான பொருளாதாரத்தடை நீக்கம் என்பன இருந்ததாகச் செய்திகள் தெரிவிக்கின்றன.
அப்பகுதி மக்கள் மீதான பொருளாதாரத் தடையென்பது ரணில் காலத்திலேயே நடைமுறைக்கு வந்துவிட்ட ஒன்று. பல சந்தர்ப்பங்களில் அத்தியாவசியப் பொருட்களுக்காக மக்கள் தொடர் போராட்டங்களைச் செய்திருக்கிறார்கள். புரிந்துணர்வு ஒப்பந்தப்படி பொருளாதாரத் தடை ஒரு மீறல்.
மூலப்பிரச்சினை இனிமேல்தான் வெளிவரும். ஆனால் சம்பந்தப்பட்ட அணைப்பகுதியைக் கைப்பற்ற இராணுவம் முயல்வதன் மூலம் பிரச்சினை வலிந்த சண்டையொன்றை ஏற்படுத்தும்.

முன்பு "வான் தாக்குதல் நடத்த்பபட்டால் பதிலடி நிச்சயமுண்டு" என்று புலிகள் அறிவித்தபடி ஏதாவது செய்வார்களா என்று தெரியவில்லை. இத்தாக்குதலுக்கு புலிகள் கடுமையாக ஏதும் சொல்லாமலிருப்பதை எப்படி எடுத்துக் கொள்வதென்று தெரியவில்லை.
************************************************************
பிந்திய செய்தியின்படி கிழக்கு மாகாணத்தில் வவுணதீவு புலிகளின் சோதனைச் சாவடியொன்றின் மீது 'தற்கொலைத் தாக்குதல்' நடத்தப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. முச்சக்கர வாகனமொன்று வெடித்ததை புலிகள் தரப்பும் உறுதிப்படுத்தியுள்ளது.
இதில் தற்கொலைத் தாக்குதல் என்பதற்கு இருக்கும் சாத்தியம் என்வரையில் மிகமிகக் குறைவே. தாக்குதலுக்குக் கொண்டுவந்த வெடிபொருட்கள் தவறுதலாக வெடித்திருக்கலாம் (குறிப்பாக நேரக்கணிப்புக் குண்டு). அதிலும் குண்டுவெடிப்பு நடந்த இடம் அரசகட்டுப்பாட்டுப் பகுதியென்றும் சொல்லப்படுகிறது. அதாவது புலிகளின் நிலைக்குச் செல்ல முன்பேயே வெடித்ததாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.
உண்மையில் தற்கொலைத் தாக்குதல் முயற்சியாக இருந்தாற்கூட திகிலடைய ஒன்றுமில்லையென்றே நினைக்கிறேன். அதிரச்சியாக ஏதாவது பின்னர் வெளிவரலாம்.
**********************************************************


_____________________________________________

Labels: ,

எழுத்துருவைத் தெரிவுசெய்ய.
பாமினி ஆங்கில உச்சரிப்பில்

[மேலுள்ள பெட்டியில் தட்டச்சினால் கீழுள்ள பெட்டியில் ஒருங்குறிக்கு (Unicode) மாற்றப்பட்ட எழுத்துரு கிடைக்கும்]


சுரதா, கிருபாவுக்கு நன்றி


"இலங்கையில் இப்போது நடப்பவை" இற்குரிய பின்னூட்டங்கள்

 

said ... (29 July, 2006 01:24) : 

எழுதிக்கொள்வது: Logan

நல்ல தொகுப்பான பதிவு. கண்காணிப்புக்குழுத் தலைவர் இருந்தபோதே விமானத்தாக்கதல் நடத்தப்பட்டு அதில் ஒரு பாடசாலை தரைமட்டமானதாக தெரிகிறது.
நீர் திறந்துவிடும் பிரச்சினை பெரிதாக வரும்போல்தான் தெரிகிறது.



1.46 29.7.2006

 

said ... (29 July, 2006 02:56) : 

எழுதிக்கொள்வது: karikaalan

நல்ல விடயங்களை சொல்லியிருக்கின்றீர்கள் வசந்தன்.

13.17 28.7.2006

 

said ... (29 July, 2006 14:52) : 

லோகன், கரிகாலன்,

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

இப்போது டென்மார்க்கும் கண்காணிப்புக் குழுவிலிருந்து விலகும் முடிவை அறிவித்திருப்பதாக பிபிசி தெரிவிக்கிறது.
எஞ்சியிருப்பது சுவீடன்தான்.

 

said ... (29 July, 2006 20:10) : 

இன்று மட்டக்களப்பிலும் புலிகளின் முகாம் மீது வான்தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. அதில் எட்டுப் போராளிகள் கொல்லப்பட்டுள்ளதோடு மேலும் சிலர் காயமடைந்துள்ளனர்.
நேற்று திருகோணமலைத் தாக்குதலில் ஏழு போராளிகள் வீரச்சாவடைந்திருந்ததும் குறிப்பிடத்தக்கது.
இன்று நான்காம் நாளாக வான்தாக்குதல்கள் நடைபெறுகின்றன.

 

said ... (30 July, 2006 12:06) : 

புலிகளுக்கு எதிரான தற்கொலைத் தாக்குதல் பற்றிய செய்திகள் பிசுபிசுத்துவிட்டன.
சம்பவ இடத்துக்கு பொலிஸ் சென்று பார்வையிட்டதாக செய்திகள் வந்தன. என்றால் அது அரசகட்டுப்பாட்டு ஏரியா தானே?

 

said ... (01 August, 2006 09:54) : 

பிந்திய செய்திகள்:
சுவீடனும் கண்காணிப்புக்குழுவிலிருந்து வெளியேறும் முடிவை அறிவித்துள்ளது.
விடுதலைப்புலிகள் தெரிவித்த 3 நாடுகளும் கண்காணிப்புக்குழுவிலிருந்து விலகும் முடிவை எடுத்துள்ளன.

இதனிடையே கண்காணிப்புக்குழு தனது கண்காணிப்புப் பணியை இடைநிறுத்தியுள்ளதாக அறிவித்துள்ளது. அரசபடைகள் தாக்குதலை நிறுத்தும்வரை தம்மால் பணி செய்ய முடியாதென்பதால் தாம் பணியை நிறுத்தியுள்ளதாகத் தெரிவித்துள்ளது.
மீண்டும் போர் தொடங்கிவிட்டதால் ஏனைய கண்காணிப்புக்குழு உறுப்பினர்களுக்கும் அங்கு வேலையில்லை என்பதால் அவர்களும் நிரந்தரமாகவே மூட்டை கட்ட வேண்டியதுதான்.

 

post a comment

© 2006  Thur Broeders

________________