இலங்கையில் இதுவரை நடந்தவை
படிப்பதிவு விடுதலைப்புலிகளின் சட்டஆலோசகர் உருத்திரகுமாரனால் தற்போதைய அமைதி நடவடிக்கைகள் பற்றிய அறிக்கை ஒன்று வெளிவிடப்பட்டு இருக்கிறது. அதில் அவர் அமைதி நடவடிக்கையின் போதான தமிழர்தரப்பு நியாயப்பாடுகளை வாத அடிப்படையில் முன்வைத்து செல்கிறார். அதில் அவர் குறிப்பிட்ட விடயங்களை தொகுத்து தருகின்றேன். முதலாவதாக அமெரிக்காவின் செப்ரம்பர்-11 2001 தாக்குதலுக்கு முன்னதாகவே விடுதலைப்புலிகளால் அமைதிமுயற்சிகள் டிசம்பர் 2000 அளவில் முன்னெடுக்கப்பட்டது. அதாவது விடுதலைப்புலிகளே பேச்சுவார்த்தைக்கான அடிப்படையை உருவாக்கினார்கள். இதற்காக விடுதலைப்புலிகளால் ஒரு தலைப்பட்சமான போர்நிறுத்தம் அறிவிக்கப்பட்டு கடைப்பிடிக்கப்பட்டது. விடுதலைப்புலிகளாலும் அப்போது ஆட்சிபீடமேறிய அரசினாலும் இடைக்கால நிர்வாகம் ஒன்றை இலங்கையின் வடக்கு கிழக்கு பகுதியில் ஏற்படுத்துவதே பேச்சுவார்த்தைகளுக்கான ஆரம்பமுயற்சியாக கருதப்பட்டு அதற்கான ஆணையும் மக்களால் பெறப்பட்டது. ஆனால் தெற்கில் தொடர்ந்த கடும்போக்குவாத நிலைப்பாட்டால் அதனை ஏற்படுத்தமுடியாத நிலையில் அப்போதைய அரசு இருந்தது. அந்த விடயத்தில் கூட விடுதலைப்புலிகள் நெகிழ்வுதன்மையை பேணி வேறு வழிகளில் அமைதி முயற்கிகளை தொடர சந்தர்ப்பம் வழங்கினர். அதன்படி அரசு – புலிகள் இணைந்த சம அங்கத்துவமுடையதாக உபகுழுக்களை அமைக்கும் முயற்சி பரிந்துரைக்கப்பட்டு விடுதலைப்புலிகளால் ஏற்றுக்கொள்ளப்பட்டது. குறிப்பாக, இக்குழுவிலிருந்த அரசு தரப்புக்கு வீட்டோ அதிகாரம் வழங்கப்பட்டு இருந்தது. ஆனாலும் இவ்வாறான கட்டமைப்பை சிறிலங்கா அரசியல் யாப்பின் கீழ் நடைமுறைப்படுத்த முடியாதென காரணங்களை கூறி அவ் உபகுழுக்களும் செயலிழக்கம் செய்யப்பட்டது. இவ்வாறான சூழ்நிலையில் விடுதலைப்புலிகளால் முதன்முதலாக ஒக்ரோபர் 31 2001 இல் இடைக்கால தன்னாட்சி அதிகாரசபை வரைபு முன்வைக்கப்பட்டது. இதனை ஆரம்பகட்டமாக கொண்டு பேச்சுவார்த்தைகளை முன்னெடுப்பதற்கான சந்தர்ப்பத்தை அது வழங்கியது. ISGA என அழைக்கப்பட்ட இத்திட்டமானது ஐந்து ஆண்டுகளுக்கு மட்டுப்படுத்தப்பட்ட இடைக்கால செயல்திட்டமாக இருந்தது. துரதிஸ்டவசமாக அப்போது சனாதிபதியாகவிருந்த சந்திரிகா குமாரதுங்கா பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டிருந்த ரணில் விக்கிரமசிங்கவின் ஆட்சிக்குள் இருந்த மிக முக்கிய அமைச்சுப் பொறுப்புக்களை தன்வசப்படுத்தி அமைதி முயற்சிகளை முடக்கினார். டிசம்பர் 2005 ஏற்பட்ட சுனாமியை தொடந்து ஓர் இணக்கமான சூழ்நிலையை ஏற்படுத்தி சமாதான பேச்சுவார்த்தைகளை முன்னெடுக்கலாம் என பலரும் எதிர்பார்த்தனர். அவ்வாறான தொடர்முயற்சிகளின் விளைவாக PTOM என அழைக்கப்பட்ட நிர்வாக கட்டமைப்பு ஏற்படுத்தப்பட்டது. அரசு – புலிகள் என இருதரப்பும் ஏற்றுக்கொண்டு கையெழுத்திட்ட இக்கட்டமைப்பை செயற்படுத்தமுடியாதவாறு சிறிலங்காவின் நீதித்துறை தடுத்துவிட்டது. விடுதலைப்புலிகளால் வெளிக்காட்டப்பட்ட ஒவ்வொரு சமாதானத்துக்கான அர்ப்பணிப்பும் சிறிலங்கா சட்டங்கள் யாப்புக்களின் பெயரால் செயல்முடக்கம் செய்யப்பட்டது. போர்நிறுத்த வன்முறைகளை பொறுத்தவரை – SLMM குறிப்பிடுவதுபோல – சிறிலங்கா தேசிய கொடியை வடக்குகிழக்கு பகுதியில் ஏற்றுவதற்கு தடுக்கப்படுவதையும் தமிழர் வாழ்விடங்களிலிருந்து தமிழர்களை வெளியேற்றி சிங்கள இராணுவத்தினர் தமது இராணுவ தளங்களை அமைத்து இருப்பதையும் தமிழர்கள் மீன்பிடித்தொழிலையோ விவசாயத்தையோ செய்யமுடியாதவாறு தடுக்கப்படுவதையும் ஒருங்கே ஒப்பிட்டுபார்க்க முடியாது. சிறிலங்கா அரசானது விடுதலைப்புலிகளே ஆகக்கூடுதலான போர்நிறுத்த வன்முறைகளில் ஈடுபட்டதாக கூறுகிறது. ஆனால் ஆயிரக்கணக்கான தமிழர்கள் தமது வீடுகளுக்கு திரும்பிச்செல்லமுடியாதவாறு நான்கு வருட சமாதான காலத்தில் கூட தடுக்கப்பட்டு இருக்கிறார்கள். இந்த நான்கு வருட காலத்தின் 1460 நாட்களையும் கருத்தில் எடுத்தால் உண்மையில் சிறிலங்கா அரசுதான் ஆகக்கூடுதலான போர்நிறுத்த வன்முறைகளில் ஈடுபட்டிருக்கிறது. போர்நிறுத்த உடன்படிக்கையின் பந்தி 2 படி, இராணுவத்தினர் பாடசாலைகள், ஆலயங்கள் பொதுக்கட்டடங்கள் அனைத்திலிருந்தும் வெளியேறி பொதுமக்களின் இயல்பான வாழ்க்கையை உத்தரவாதப்படுத்தி இருக்கவேண்டும். ஆனால் இதுவரை இராணுவத்தினர் அவ்வாறு வெளியேறவில்லை. யாழ்குடாநாட்டில் பொதுமக்கள் வாழக்கூடிய பிரதேசங்களின் மூன்றிலொரு பகுதியில் இராணுவத்தினர் தமது இராணுவதளங்களை அமைத்துள்ளனர். இராணுவவலுச்சமநிலை பாதிக்கப்படாமல் இருப்பதற்காக பொதுமக்கள் வாழ்விடங்களில் இராணுவத்தினர் தளங்களை அமைக்கலாம் என சில தரப்பினரால் கூறப்படுகிறது. சர்வதேச சட்டங்களின்படி பொதுமக்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு அல்லது இராணுவரீதியான தவிர்க்கமுடியாத மிக முக்கிய காரணங்களுக்காக பொதுமக்கள் வெளியேறுமாறு கோரப்படலாம். ஆனால் நான்கு வருடங்களாக போர்நிறுத்தம் நடைமுறையில் இருக்கும்போது இராணுவ வலுச்சமநிலைக்காக ஒரு அரசாங்கமானது மக்களை குறிப்பிட்ட பிரதேசத்தில் வாழக்கூடாது என கூறமுடியாது. அத்தோடு சர்வதேச சட்டமாக ஏற்றுக்கொள்ளப்பட்ட ஹேக் உடன்படிக்கையின் கீழ் பொதுமக்களின் சொத்துக்களை கையகப்படுத்தப்படுவது முற்றாக தடைசெய்யப்பட்டுள்ளது. புறூண்டி, ஜோர்ஜியா, பொஸ்னியா, கம்போடியா, கொசோவா, குவாட்டமாலா, எல்சல்வோடர், மசிடோனியா, சியாராலியோன், லைபீரியா போன்ற எந்த நாடுகளின் அமைதி உடன்படிக்கைகளிலும் இடம்பெயர்ந்த மக்கள் மீள தமது சொந்த இடங்களுக்கு சென்று குடியேறுவதை இராணுவவலுச்சமநிலையோடு கருதி பிரச்சனைகளை இழுத்தடித்து செல்லவில்லை. அரச ஆதரவுடனான துணைஆயுதப்படைகளின் செயற்பாடுகளும் அமைதி முயற்சிக்கான பெரிய முட்டுக்கட்டையாக இருக்கின்றது. இராணுவத்தோடு சேர்ந்து இயங்கும் அனைத்து துணை ஆயுதப்படைகளும் செயல்முடக்கம் செய்யப்பட்டிருக்கவேண்டும். தற்போதும் துணைப்படைகளின் செயற்பாடு இருப்பதை SLMM உம் அமெரிக்காவின் 2006 ஆம் ஆண்டுக்கான அறிக்கையும் வெளிக்காட்டியுள்ளது. போர்நிறுத்த உடன்படிக்கையானது அவ்வுடன்படிக்கை ஏற்படுத்தப்பட்ட காலப்பகுதியிலிருந்த துணைப்படைகளை மட்டுமே குறிப்பதாகவும் அதற்கு பின்னர் உருவான துணைப்படைகளை அது கட்டுப்படுத்தாது எனவும் வாதம் முன்வைக்கப்படுகிறது. போர்நிறுத்த உடன்படிக்கையானது செயற்பாட்டு நடைமுறையில் உள்ள உயிர்நிலை உடன்படிக்கை என்பதால் அது அனைத்து துணைப்படைகளையும்தான் கருதுகிறது. அவ்வாறு இல்லாவிடில் இரண்டு தரப்புமே வெவ்வேறு பெயர்களில் துணைப்படைகளை உருவாக்கி தமது நடவடிக்கைகளை தொடர்ந்து மேற்கொள்ளக்கூடியதாக இருக்கும். அடுத்து சிறிலங்கா ஆயுதப்படைகளின் வலிந்து தாக்கும் நடவடிக்கைகளும் குறிப்பிடத்தக்கயாகும். 2003 ஆம் ஆண்டில் மூன்று வெவ்வேறு சம்பவங்களில் 24 விடுதலைப்புலிகளின் உறுப்பினர்கள் கடலில் கொல்லப்பட்டிருக்கிறார்கள். விடுதலைப்புலிகளின் வணிககப்பல் ஒன்று சர்வதேச கடற்பரப்பில் மூழ்கடிக்கப்பட்டபோதும் புலிகள் அதியுச்ச சகிப்புத்தன்மையை வெளிக்காட்டி சமாதான முயற்சிகளில் தொடர்ந்தும் ஈடுபட்டனர். சிறிலங்கா அரசானது விடுதலைப்புலிகளின் கப்பலானது ஆயுதங்களை கொண்டிருந்ததாகவும் அதனால்தான் அதனை மூழ்கடித்ததாகவும் கூறியது. அவ்வாறு புலிகளின் கப்பல்கள் ஆயுதங்களை கொண்டிருந்தாலும் அதனை தாக்குவதற்கான அதிகாரத்தை சிறிலங்கா அரசாங்கமானது கொண்டிருக்கவில்லை என்பது முக்கியமானதாகும். வெளிப்படையாக போர்நிறுத்த உடன்படிக்கையில் விடுதலைப்புலிகளின் ஆயுதப்போக்குவரத்துக்கள் பற்றி குறிப்பிடுவதை இரண்டு தரப்பாலுமே வேண்டுமென்றே தவிர்க்கப்பட்டிருந்தன. ஏனெனில் விடுதலைப்புலிகளுக்கான வழங்கலகள் கடல்வழியாகத்தான இருக்கின்றன என்பது வெளிப்படையாக அனைவருக்கும் தெரிந்திருந்தன. ஆனால் போர்நிறுத்த உடன்படிக்கையின் கீழ் வரையறுப்பதில் உள்ள நடைமுறை சிக்கல்கள் காரணமாகவே அவை தவிர்க்கப்பட்டிருந்தன. விடுதலைப்புலிகள் ஒரு தேசிய விடுதலைப் போராட்ட இயக்கமாகும். அதன்காரணமாக, U.N General Assembly Resolution சரத்து 3034 மற்றும் 3014 படி விடுதலைப்புலிகள் ஆயுதங்களை இறக்குமதி செய்வதற்கான உரிமையை கொண்டிருக்கிறார்கள். அடுத்ததாக சர்வதேச சமூகம் சரியான முறையில் அமைதி முயற்சிகளை முன்னெடுக்க உதவவில்லை. சர்வதேச சமூகம் எப்போதும் இறுதித்தீர்வானது ஐக்கியப்பட்ட சிறிலங்காவுக்குள் அமையவேண்டும் என வற்புறுத்திவருகிறது. இது தமிழ்மக்களின் சுயநிர்ணய கோட்பாட்டை கேள்விக்குள்ளாக்கிறது. அத்தோடு உலகின் வேறு பகுதிகளில் பின்பற்றப்படும் சர்வதேச நடைமுறையுடன் முரண்படுகிறது. Machakos Protocol ஆனது தென்சூடான் மக்களின் தனிநாடு அமைப்பதற்கான உரிமையை ஏற்றுக்கொள்கிறது. அதன்படி ஆறு வருடங்களுக்கு பின்னர் சர்வசன வாக்கெடுப்பின் மூலம் அவர்கள் பிரிந்து சென்று தனிநாடு அமைப்பதா? அல்லது சூடானுடன் இணைந்து இருப்பதா? என முடிவெடுக்க முடியும். அதேபோல Good Friday உடன்படிக்கையானது வட அயர்லாந்து மக்கள் தங்களது அரசியல் எதிர்காலத்தை ஏழு வருடங்களுக்கு ஒரு முறை தீர்மானித்துக்கொள்வதற்கு வழிவகை செய்கிறது. இதேவிதத்தில் சேர்பியன் – மொன்ரிகிறின் உடன்படிக்கையானது மொன்ரிகிறின் மக்களின் தனிநாடு அமைப்பதற்கான அவர்களது உரிமையை ஏற்றுக்கொள்வதுடன் அதற்கான வாக்கெடுப்பை அடுத்த மூன்று வருடங்களில் நடாத்தப்படுவதற்கு வழிவகை செய்கிறது. பப்பூவா நியூகினியா - போகன்விலே உடன்படிக்கையானது போகன்விலே மக்கள் தங்கள் எதிர்காலத்தை தீர்மானித்துக்கொள்ளும் வாக்கெடுப்பை 10 – 15 வருடங்களுக்கு இடையில் நடாத்தப்படுவதை ஏற்றுக்கொள்கிறது. சர்வதேச சமூகமானது மேற்கூறப்பட்ட எந்த உடன்படிக்கைகளையும் – அந்தந்த நாடுகளின் ஐக்கியத்தையும் ஓருமைப்பாட்டையும் பாதித்தபோதும் – எதிர்க்கவில்லை என்பதையும் சர்வதேச சமூகம் பேச்சுவார்த்தைகளின் மூலம் பெறப்படும் தீர்வுக்கு முன்னரே அதற்கான எல்லைகளை வரையறுத்து இருக்கவில்லை என்பதையும் கருத்தில் கொள்ளவேண்டும். இவ்வாறு மேற்கூறப்பட்ட நாடுகளில் காணப்பட்ட பிரச்சனைகளுக்கு தீர்வாக பல்வேறு வடிவங்களான சுயநிர்ணய உரிமையை ஏற்றுக்கொண்டபோதும், இலங்கை இனநெருக்கடியில் காணப்படும் தீர்வானது இலஙகையின் ஐக்கியத்தையும் ஒருமைப்பாட்டையும் பேணக்கூடியதாக இருக்கவேண்டும் என கூறுவது சர்வதேச சமூகம் இரட்டை அணுகுமுறையை கடைப்பிடிப்பதாக கருதவேண்டியுள்ளது. இவ்வாறு தமிழர்களின் நியாயமான கோரிக்கையான சுயநிர்ணய உரிமையுடன் கூடிய தீர்வினை சர்வதேச சமூகம் ஆதரிக்காதுவிட்டால், அது சிறிலங்கா அரசை நியாயமான தீர்வொன்றை முன்வைக்க உந்துதலாக அமையமாட்டாது. அதேவேளை சர்வதேச சமூகம் தமிழர்களது சுயநிர்ணய உரிமையை ஏற்றுக்கொள்ளும்போது தமிழர்களும் பேச்சுவார்த்தைகளில் நம்பிக்கை வைத்து செயற்படுவர். விடுதலைப்புலிகளின் சட்டஆலோசகரின் முழுமையான அறிக்கை உயர்வலய பாதுகாப்புவலயங்கள் சம்பந்தமான இன்னொரு பதிவு நன்றி: தமிழ்வாணன். _____________________________________________ தமிழ்ப்பதிவுகள் Labels: ஈழ அரசியல் |
"இலங்கையில் இதுவரை நடந்தவை" இற்குரிய பின்னூட்டங்கள்
நல்ல பதிவு.
இப்போது தான் பார்த்தேன். பல உண்மைகளை வெளிக்கொணர்கிறது. எல்லோரும் வாசிக்க வேண்டும்.
இங்கே எழுதியதற்கு நன்றி.
வருகைக்கு நன்றி பெயரில்லாதவரே,
இதை எழுதியதும் வெளியிட்டது தமிழ்வாணன் என்ற பதிவாளர்தான். நான் இங்கு அதை வெளியிட்டது ஒரு சேமிப்பு நடவடிக்கை மாதிரித்தான். எப்போதாவது வலைப்பதிவில் அரைகுறைப் புரிதலுடன் யாராவது வருவார்கள். அப்போது இணைப்புக் கொடுக்க வசதிப்படும்.