அவுஸ்திரேலிய வலைப்பதிவர் மாநாடு.
அவுஸ்திரேலியாவில் நடந்து முடிந்த வலைப்பதிவர் மாநாடு. வணக்கம்! நேற்று வெள்ளிக்கிழமை, அவுஸ்திரேலிய வலைப்பதிவர் மாநாடு எதிர்பார்த்தபடி பெரு ஆரவாரமாக நடந்து முடிந்தது. மெல்பேணில் சிறப்பாக ஒழுங்கமைக்கப் பட்ட இடத்தில் (அவ்விடத்தைத் துல்லியமாக வெளியிட முடியாதுள்ளது. தொடர்ந்தும் சந்திப்புக்கள் நடத்தப்படவுள்ளதால் பாதுகாப்புக் காரணங்களுக்காக வெளியிட முடியாது.) பின்னேரம் 4.00 மணியளவில நான் மண்டபத்துக்குப் போகேக்க ஏற்கெனவே அங்க எனக்காக காத்திருந்த சயந்தன் ஓடிவந்து கைகுடுத்து வரவேற்றார். பிறகு மாநாடு துவங்கேக்க சம்பிரதாயமா ஒரு பாட்டுப் பாடி துவங்குவம் எண்டு சயந்தன் சொல்ல, எவ்வளவு யோசிச்சும் ஒரு பாட்டும் ஞாபகம் வராமப் போக, கடசியா ஒரு பெட்டியக் குடஞ்சு தேடி பாட்டுக் கசட் ஒண்டக் கண்டெடுத்து அதப் பாடவிட்டு மாநாட்டத் துவக்கி வச்சார் சயந்தன். பாரதிதாசனிண்ட ‘தமிழுக்கும் அமுதென்று பேர்’ எண்ட அருமையான பாட்ட முழுக்கக் கேக்கப் பொறுமையில்லாமலே மாநாடு துவங்கீச்சு. ஆரம்பத்தில ஊர்ப்புதினம் பிறகு வலைப்புதினம் எண்டு போய் கடசியில பொடிச்சியின்ர கவித எதிர்ப்பு இயக்கம் பற்றி வந்தீச்சு. நான் அதுக்கு ஆதரவாயும் சயந்தன் எதிராயும் வாதிச்சு, கடசியில பிரயோசினமெதுவுமில்லாம இடையிலயே அந்தக் கத நிண்டுபோச்சு. (ஆரேன் பக்கத்திலயிருந்து ஏத்தி விட வேணுமெல்லோ). இடையில, ‘எழுதுவது என்றால் என்ன’ எண்டு அதிமுக்கியமான ஒரு கேள்வியக் கேட்டு அருமையான விவாதமொண்ட துவக்கினார் சயந்தன். ‘எழுதிறதெண்டால் எழுதிறது தான்’ எண்டு சுருக்கமா நான் சொன்ன பதிலோட ஆள் கதைய திசை திருப்பினார். நான் சொன்னது விளங்கீற்றுது எண்டுதான் நினைக்கிறன். எண்டாலும் இது சம்பந்தமா சந்தேகமிருக்கிற ஆக்களுக்காக அடுத்து இதப்பற்றி ஒரு சிறுகதை எழுதலாமெண்டு யோசிக்கிறன். கதைச்சுக்கொண்டு இருக்கேக்கயே நான் கொண்டு போயிருந்த முக்கியமான தின்பண்டப் பாசலைப் பிரிச்சேன். ஒரு வித்தியாசமா இருக்கட்டுமேன் எண்டு நான் கொண்டு போன அதப் பாத்த உடன சயந்தன் திகைச்சுப் போனார். அது பினாட்டு. எழுதேக்குள்ள பனாட்டு எண்டு எழுதிறவை. பனம் பினாட்டு எப்பிடிச் செய்யிறதெண்டு ஒரு பதிவு எழுதிற எண்ணமிருக்கு. அந்தப் பாசலைத் திறந்த உடன எனக்கு முகம் சுளிச்சுப்போச்சு. இவ்வளவு நாள் பொத்திப்பொத்தி வச்சிருந்ததில சாதுவா பூஞ்சணம் பிடிச்சிருந்தீச்சு. பின்னயென்ன? எங்கட ஊரிலயெண்டா அடுப்புப் 'போறணை'க்க கட்டித் தூக்கிவிட்டா ஒரு கிருமி அணுகாது. இஞ்ச 'போறணை'க்கு எங்க போறது. இருந்தாலும் பினாட்ட விடேல. மேல்ப்பக்கத்த மெதுவாத் துடச்சு எடுத்திட்டு சாப்பிட்டம். கனநாளுக்குப் பிறகு சாப்பிடிறபடியா நல்லா இருந்திச்சு. தேங்காச் சொட்டும் புளுக்கொடியலும் இல்லாத குறதான் பெரிசாத் தெரிஞ்சுது. அடுத்த முறைச் சந்திப்புக்கு எப்பிடியெண்டாலும் புளுக்கொடியலும் பாணிப்பினாட்டும் எடுப்பிக்கிறதெண்டு சயந்தன் சொன்னவர். நல்ல யோசின தான். எனக்கு இன்னொரு ஆச இருக்கு. கள்ளும் பிளாவும் எடுப்பிச்சுக் குடிக்கோணுமெண்டு. ஆனா இதெல்லாம் நடக்கிற காரியமே? பத்தாததுக்கு வாற முற மற்ற வலைப்பதிவாளரும் வந்தீச்சினமெண்டா எங்கள் ரெண்டு பேரயும் விட மற்றதுகளெல்லாம் பெண்டுகள். அவயள வச்சுக்கொண்டு என்னெண்டு குடிக்கிறது. ஆனா 'மொடர்ன் கேரள்' குடிப்பா எண்டு நினைக்கிறன். 'நெப்போலிய'னுக்கு வக்காலத்து வாங்கினவவெல்லே. மற்ற வலைப்பதிவாளர்மாரைக் கூப்பிட முடியாமப்போனது கவலையாத்தான் இருந்தீச்சு. நாங்களென்ன செய்ய? ஒருத்திரிண்ட மின்னஞ்சல் முகவரியோ தொலைபேசி இலக்கமோ எங்களிட்ட இல்ல. அடுத்த முறைக்கு எப்பிடியும் எல்லாரையும் கூப்பிடிறது எண்டு ஏகமனதா முடிவெடுத்தம். ஷ்ரேயா, சந்திரலேகா, மார்டன் கேர்ள் ஆக்கள் தானே அவுஸ்திரேலியாவிலயிருந்து எழுதிகினம். நட்சத்திரன் செவ்விந்தியனும் இஞ்சதான் இருக்கிறாரெண்டு சயந்தன் சொன்னார். மாநாடு முடிஞ்சதும் மண்டபத்துக்குப் பக்கத்திலயிருக்கிற புல்வெளியில போயிருந்து பம்பலடிச்சம். அங்க நிறைய காதல் ஜோடியள் சுத்திக்கொண்டு திரிஞ்சினம். எதிர்காலத்தில் இலக்கியத்த தலைகீழாப் பிரட்டப்போற எங்கள் ரெண்டு பேரையும்பற்றி அவயள் ஒருத்தரும் கவனமெடுக்கேல. அந்த புல்வெளியில இருக்கேக்க எனக்கொரு ஆச வந்திச்சு. இப்பிடி மாநாடுகள் நடத்தேக்க இதில 'கிட்டிப்புள்ளு' இல்லாட்டி 'கிளித்தட்டு' (இத 'தாச்சி' எண்டும் 'யாடு' எண்டும் சொல்லிறது. தமிழீழத்தின் தேசிய விளையாட்டாக இதைப் பரகடனப்படுத்தியிருக்கினம்.) விளையாட வேணுமெண்டு எனக்கொரு ஆச. ஆனா வாற பெண்டுகளுக்கு அதுகள் விளையாடத்தெரியுமோ, தெரிஞ்சாலும் விளையாட ஏலுமோ தெரியேல. இருந்தாலும் ஆக்கள் காணாது தானே. இப்பிடியாயிருக்கேக்க, நல்ல மம்மல் நேரத்தில புகைப்படம் எடுத்தனாங்கள். ஒரு வெள்ளைச் சோடியொண்டு தான் எங்களப் படமெடுத்தது. அருமையா வந்திருக்கு. இந்தப் படத்த சயந்தன் வெளியிடுவார் எண்டு நினைக்கிறன். அட! நானே எல்லாத்தையும் கதச்சுக் கொண்டிருந்தா எப்பிடி? மாநாட்டில கதச்ச விசயங்கள் மற்றும் தவறுப்பட்ட விசயங்களப் பற்றி சயந்தன் எழுதுவார். அடுத்த மாநாடு கூழோடையோ கள்ளோடையோ எண்டு தீர்மானிக்கேல. Labels: பதிவர் வட்டம் |
"அவுஸ்திரேலிய வலைப்பதிவர் மாநாடு." இற்குரிய பின்னூட்டங்கள்
மாநாட்டு மலர் எதுமில்லையா?
அடுத்து ஆப்பிரிக்காவில் இருந்து எதிர்பார்க்கிறேன்:P
எழுதிக்கொள்வது: ஒரு பொடிச்சி
"எண்டாலும் இது சம்பந்தமா சந்தேகமிருக்கிற ஆக்களுக்காக அடுத்து இதப்பற்றி ஒரு சிறுகதை எழுதலாமெண்டு யோசிக்கிறன்."
சிறுகதைகளுக்கெதிரான போராட்டம்?!
15.32 25.3.2005
எழுதிக்கொள்வது: டிசே
வசந்தன்,
//இன்னொரு ஆச இருக்கு. கள்ளும் பிளாவும் எடுப்பிச்சுக் குடிக்கோணுமெண்டு//
இதைச் செயற்படுத்தும்போது எனக்கும் தகவல் தாங்கோ. எங்கையாவது அறாவிலை வட்டிக்கு கடனெடுத்தாவது அவுஸ்திரேலியாவிற்கு பற்ந்து வருகின்றேன்.
//'எழுதிறதெண்டால் எழுதிறது தான்'// என்று பெரிய தத்துவங்கள் எல்லாம் விவாதித்திருக்கின்றீர்கள். நான் தான் இவையெல்லாம் கேட்க கொடுத்து வைக்கவில்லை. ம்...
15.58 25.3.2005
எழுதிக்கொள்வது: கிஸோக்கண்ணன்
உந்த சயந்தன் காட்லிக் கல்லூரியில் படித்தவரா?
அப்புறம், வேறென்னவெல்லாங் கதைசீங்கள்? எனக்கென்னமோ நீங்கள் தணிக்கை செஞ்சு எழுதுற மாதிரி ஒரு feelingகு.
16.52 25.3.2005
எழுதிக்கொள்வது: முத்து
எனக்கு அடிக்கடி வசந்தன், சயந்தன் ரெண்டு பேருல குழப்பம் வருது :-) .
23.45 25.3.2005
என்னையும் கூப்பிடுவதாகச் சொல்லிவிட்டு கடைசிநேரத்தில் ஏமாற்றிவிட்டார்கள்.சரி சரி எப்போவாவது சந்திக்கலாம் என்ற நம்பிக்கையுடன்.
கிஸோ நீங்கள் எங்கே இருக்கிறீர்கள்.முடிந்தால் மின்னஞ்சல் போடுங்கள்.
தங்கமணி! மாநாட்டு மலர் வெளியிடுற திட்டமில்ல. ஆனா புகைப்படம் வெளியிடுறதெண்டு சயந்தன் சொன்னவர். அவரிண்ட தளத்தில பாக்கலாம்.
தல! (பொடிச்சி) நான் எழுதப்போறன் எண்டு சொன்னதே ஒரு போராட்ட வடிவம் தான். அதனால நீங்கள் உங்கட அடியார்(ட்)கள் மேல கோபப்படத் தேவையில்ல.
டீ.சே.! ஆருக்குத் தெரியும் அடுத்த சந்திப்பு எப்பவெண்டு. அதயெல்லாம் 'அவன்' எல்லோ தீர்மானிக்க வேணும்.
கிஸோக்கண்ணன்! அந்த சயந்தன் ஹாட்லியில படிச்சிருக்கச் சந்தர்ப்பமில்ல. ஏனெண்டா எனக்குக் கிட்டத்தான் அவரும். எதுக்கும் அவரிண்ட தளத்தில அவரிட்டையே கேளுங்கோவன். ஆ.... கண்டு பிடிச்சிட்டியள் பாத்தியளே. நாங்கள் தணிக்கை செய்து தான் எழுதிறம். அதோட A.P.O (Anti Poet Organization) இயக்கத்தில இருக்கிறபடியா எல்லாத் தகவலும் வெளியிட ஏலாதெல்லே. மாநாட்டு மண்டபம் கூட சொல்லேல எண்டாப் பாருங்கோவன்.
முத்து அண்ணா! நீங்கள் குழம்பத் தேவையில்ல. வசந்தனாகிய நான் என்ர பேரிலயே வலைப்பதியிறன். சயந்தன் சாரல் எண்டு பதியிறார்.
எழுதிக்கொள்வது: சயந்தன்
//மாநாட்டு மலர் எதுமில்லையா?//
மெல்பேண் மலர் எண்டு ஒன்றை வைரமுத்து சொல்லியிருந்தவர். மெல்பேண் மலர் போல சிரிப்பவள் இவளா எண்டு..(சரியா அது) அந்த மலரை மாநாட்டு மலரா வெளியிடுற ஒரு யோசினையை வசந்தனுக்கு அனுப்பியிருக்கிறன். பாப்பம் அவர் என்ன சொல்லறார் எண்டு
22.50 26.3.2005
Melburne மலர் என்டு ஒன்டுமில்லை, வைரமுத்து சும்மா புளுகியெழுதிவிட்டார் என்று எஸ்.பொ ஒரு விழாவில் வைரமுத்துவை செமையாக கிழிகிழியென்று கிழித்தவர். மாநாட்டு மலர் என்று இதை வெளியிடப்போகிறியள் என்று சொல்கிறியள். கவனம், எஸ்.பொவும் உங்கட ஊரில்தான் இருக்கிறார். ஒரு முன்னெச்சரிக்கைக்காய் இதைச் சொல்கின்றன்.
ஆர் சொன்னது அந்த மலர் வெளியிடப் போறோமெண்டு?
சயந்தன்! அது 'சிரிப்பவள் இவளா' இல்ல. 'மெல்பேர்ண் மலர் போல் மெல்லிய மகளா'. உடன மாத்தியிருந்தாப் பிரச்சினையில்ல.
//அந்த சயந்தன் ஹாட்லியில படிச்சிருக்கச் சந்தர்ப்பமில்ல. ஏனெண்டா எனக்குக் கிட்டத்தான் அவரும். //
வசந்தன்,
அப்படியென்டால், சயந்தன் பண்டத்தரிப்பு Hindu Ladies Collegeலிலா படித்தார் :-) ?
டி.சே.!
கிட்ட வந்திட்டியள் போல கிடக்கு. கெரியா சொதி பற்றி ஒரு பதிவு எழுதுவன். அப்ப என்ர ஊரின்ர கத வரும். மற்றாக்களுக்கும் யோசிக்கச் சந்தர்ப்பம் குடுப்பமே. ஆனா நீர் என்னெண்டு கண்டுபிடிச்சனீர் எண்டு எனக்குத் தெரியும். பள்ளிக்கூடம் கண்டுபிடிச்சிட்டீரோ?
மூர்த்தி! நீங்கள் மட்டும்தான் உருப்படியா யோசின சொல்லியிருக்கிறியள். நன்றி. முயற்சிக்கிறம்.
//பள்ளிக்கூடம் கண்டுபிடிச்சிட்டீரோ?//
எண்டுதான் நினைக்கின்றேன். நீங்கள் படித்த பள்ளிக்கூடத்திற்கும் இலண்டன் மகாராணிக்கும் ஒரு தொடர்பு இருந்தால் என் கணிப்பு சரியாயிருக்கக்கூடும்.
//காசி said...
அடுத்து ஆப்பிரிக்காவில் இருந்து எதிர்பார்க்கிறேன்:P //
ஆப்ரிக்காவிலே அடுத்த கூட்டமா? சோமாலியாவிலயா? :)
எழுதிக்கொள்வது: suratha
பிள்ளையள் மாநாட்டு மலருக்கு விளம்பரம் கிளம்பரம் ஏதும் தேவையோ??
12.12 27.3.2005
விளம்பரம் வேண்டாம். கிளம்பரம் புதுசா கிடக்கு.. எப்பவும் புதிய விஷயங்களுக்கு முன்னுரிமை குடுக்கிறது எண்டு இருக்கிறம். அதனாலை ரண்டு மூண்டு கிளம்பரம் தரமுடியுமோ?
சயந்தன்!
உதுகள விட்டிட்டு எடுத்த படத்தப் போடும் பாப்பம்.
வாசக நேயர்களுக்கு அன்பான வணக்கம்.
நீங்கள் எதிர்பார்த்த (?) மாநாட்டுப் படம் புதிய பதிவாகப் போடப்பட்டுள்ளது. இதற்கு அடுத்ததுக்கு அடுத்தப் பதிவில் சென்று பார்க்கவும்.