அடிமட்டம்….அடிமனத்திலிருந்து
அடிமட்டம்… (Scale) என் நினைவுகளின் அடிமட்டத்தில் தேங்கியிருக்கும் ஒரு சொல். ஆரம்பப் பள்ளியில் நான் அடியெடுத்து வைத்தபோது எனக்கு அறிமுகமானது அடிமட்டம். இரும்பில், நெகிழத்தில் (பிளாஸ்ரிக்) என விதவிதமாய் வந்தாலும், முதலில் எனக்கு அறிமுகமானது மர அடிமட்டம் தான். அடிமட்டம் என பெயர் வந்தது ஏன் என்ற என் கேள்விக்கு, ஓர் அடி நீளமாயிருப்பதால் என்றொரு பதில்; foot ruler என்று ஆங்கிலத்திற் சொல்வதால் என்று இன்னொரு பதில். ஆனால், காய்த்துப்போன என் கைகளின் மொளிகள் சொல்கின்றன, "அடிக்கப் பயன்படுவதாலேயே அது அடிமட்டம்". மொளியில் அடிமட்டத்தின் விளிம்பால் அடிவாங்கியவர்களுக்குத் தெரிந்திருக்கும் அதன் வலி. ‘கைய நீட்டு’ என்று கட்டளை வரும்போது மூளையே தீர்மானித்து விடும்; தடி வைத்திருந்தால் உள்ளங்கை; அடிமட்டம் வைத்திருந்தால் புறங்கை. கணக்குப் பாடத்துக்கு மட்டும் நாள்தவறாமல் அடிமட்டம் என் மொளிகளில் நர்த்தனமாடும்; வகுப்பில் அதிகப்புள்ளிகள் எடுப்பவன் நான்தானென்றாலும் கூட. எதற்குமே சீக்கிரத்தில் அழுதுவிடும் நான், மொளிகளில் அடிவாங்கும்போது மட்டும் ஏனோ அழுவதில்லை. அதற்காகவே அதிகமாய் அடி விழும். விறைத்து நிற்குமென்னை "புட்றூலரால்" அடித்துக்கொண்டே, ‘பார் புட்றூல் விழுங்கினவன் மாதிரி நிக்கிறான்’ என்று சொல்லி அடித்ததை நினைத்தால் இன்று ரசிக்க முடிகிறது. (வளர்ந்த பின் இது அலவாங்கு விழுங்கியாக மாறியது). ஆண்டு - 5 புலமைப் பரிசில் தேர்வில் சித்தியடைந்தபோது, அதுவும் கணக்கில் 88 புள்ளிகள் பெற்றபோது (என் ஊரில் 5 வருடங்களின் பின் சித்தியெய்திய ஒருவன் நான் தானாம்) மொளிகளின் நோவு தெரியவில்லை. ஆனால் அதன் பின் வந்த, என் மொளிகள் எப்போதும் காயப்படாத காலங்களில், நான் கணக்குப் பாடத்தில் 50 க்கு மேல் புள்ளிகள் பெற்றதில்லை. (பிருஸ்டம் பிய்ய அடி வாங்கினாலும்). இப்போது நினைக்கிறேன், யாராவது மொளியில் அடிமட்டத்தால் அடித்துப் படிப்பித்திருக்கக் கூடாதாவென்று. சே! மொளியில் அடிச்சுப் படிப்பிக்காத வாத்தியளும் ஒரு வாத்திமாரோ? ஆனாலும், மரத்துப் போன என் மொளிகள் எனக்குப் பயன்பட்டன, ‘ஆத்திரம் வரேக்க ஆற்றயேன் மூஞ்சேல குத்த’ குறிப்பு: மொளி என்பது புறங்கையில் காணப்படும், விரல்கள் கையோடு பொருந்தும் பகுதி. இச்சொல்லில் ‘ள’கர ‘ழ’கர பிரச்சினை எதிர்கொண்டபோது தேடியதில் இச்சொல் அகராதியிலும் இல்லை. எனவே பலருக்குத் தெரியுமா என்ற சந்தேகம் வந்துவிட்டது. மேலும் இன்னும் நான் பாவித்த ‘ள’கரம் சரியா என்ற சந்தேகமுண்டு. Labels: அனுபவம் |
"அடிமட்டம்….அடிமனத்திலிருந்து" இற்குரிய பின்னூட்டங்கள்
எழுதிக்கொள்வது: ஒருவன்
மொளி என்பது எந்த மொழியிலிருக்கிறது?
23.14 22.3.2005
வசந்தன்! அடிமட்டம்னா ஸ்கேலா?? இது தெரியாம என்பதிவுல உங்க பின்னூட்டத்தை படிச்சி ரொம்ப குழம்பிட்டேன்! :)
நாங்க அதை அடிஸ்கேலு ன்னு சொல்லுவோம்... நல்லா இருக்கு.. தொடரட்டும் உங்க ஆட்டோகிராப்..
மொளி அகராதியில் இருக்கிறது.
மொளி - விரல் மூட்டு அல்லது விரல் முட்டி - Knuckle
எழுதிக்கொள்வது: சயந்தன்
ஒரு கவிதைச் சாயலில் எழுதியிருக்கிறீர்கள். வாழ்த்துக்கள். நானும் அடிவாங்கியிருக்கிறன். ஆனால் பெரிசா கவலைப்பட்டதில்லை. ஒரே ஒரு விடயத்தினை தவிர.. பொம்பிளைப் பிள்ளையளுக்கு முன்னாலை அடிக்கினமே என்று தான்..
0.40 23.3.2005
//ஆனால், காய்த்துப்போன என் கைகளின் மொளிகள் சொல்கின்றன,
"அடிக்கப் பயன்படுவதாலேயே அது அடிமட்டம்".//
இந்த வரிகள் அந்த மாதிரி..
அது அது... கவிதை மாதிரி
ஓய் சயந்தன்!
உமக்கென்ன விசரே!
புழுகிறதுக்கும் ஒரு அளவு கணக்கு வேண்டாமோ? உதப் பாக்க கவித மாதிரியே இருக்கு? உம்மப் போல ஆக்களால தான் தமிழில இம்மென்ன முதல் இருநூறு கவித பிறக்குது. இப்பிடியான ஆக்கள் ஜால்ரா அடிக்க இருக்கிற மட்டும் எவனும் கவிதயெண்டு என்னவும் எழுதுவான். எடுத்த உடன எல்லாத்தையும் கவித எண்டு சொன்னா எப்பிடி?
உங்களப் போல ஆக்களால தான் பொடிச்சி கவித எழுதிறதுக்கு எதிரா ஒரு இயக்கமே தொடங்க வேண்டி வந்தது. அதுவும் என்னட்டப் போய் வாய் குடுத்திருக்கிறியள். நான் பொடிச்சி ஆரம்பிச்ச கவித எதிர்ப்பு இயக்கத்தின்ர முதலாவது போராளியாக்கும்.
இணையத்தில எழுதிறதில இருக்கிற சிக்கல இதுதான்;. நேரிலயெண்டா உம்மட மொளியில அடிமட்டத்தால நாலு போட்டிருப்பன்.
This comment has been removed by a blog administrator.
This comment has been removed by a blog administrator.
//இணையத்தில எழுதிறதில இருக்கிற சிக்கல இதுதான்;. நேரிலயெண்டா உம்மட மொளியில அடிமட்டத்தால நாலு போட்டிருப்பன்//
ஒரு குறியீட்டுக்குத் தானே? ஹி ஹி ஹி..கவிதைச்சாயல் அல்லது கவிதை 'மாதிரி' எண்டு தானே சொன்னன்..(சயந்தன் நல்லா சமாளிக்கிறாயடா)கவிதை எண்டு சொல்லவேயில்லையே.. (ஜகா வாங்கிட்டேன்..)
பதிலளித்த அனைவருக்கும் நன்றி. சந்திரவதானா! நான் எம். வின்சுலோவின் தமிழ் அகராதியையே பார்த்தேன். அதில் இல்லை. எனினும் தக்க நேரத்தில் வந்து விவரமளித்ததற்கு நன்றி. ஒருவன்! உமக்கான பதில் சந்திரவதனா தந்து விட்டா.
சயந்தன்! சும்மா ஒரு பம்பலுக்குத் தான்.
இளவஞ்சி! ஓமோம். அடிமட்டம் எண்டுதான் சொல்லிறனாங்கள். உங்கட பின்னூட்டத்தில நான் விவரமா எழுதாதது என்ர பிழ தான். சொல்லப்போனா இந்தப் பதிவே, உங்கட பதிவின்ர எச்சம் தான். அதின்ர தாக்கத்தில தான் இத எழுதினனான்.
நன்மாணவர்களை(!) ஆசிரியர்கள் அடித்துப் பெருமை தேடிக்கொள்வதுதான்! வாய்ப்புக்கிடைத்தால் கணிதவாத்திக்கு வெட்டு வைக்கத்தான் -இப்பவும்- அடிமனத்திலிருந்து புகை கிளம்புது. எங்க இருந்துதான் கணித வாத்தியள் மட்டும் (அதிகமா) இப்பிடி வருகிறாகளோ.
அப்பறம்
நடக்கோணுமெண்டு நினைச்சுத்தான் கனவுகளக் காணுறது.. பிறகு நினைக்கிற மாதிரியே எல்லாம் நடக்குது? தோழ,தோழிகளிட ஆதரவின்மை காரணமா கவிதை எதிர்ப்பு இயக்கம் கலைக்கப்பட்டாச்சு..(ஆதரவுதராதது கூடப் பறவாயில்லை, ஆனா தொடர்ந்து கவிதை எண்டு எழுதிச்சினம்/எழுதீனம் பாருங்க, அதுதான் பெரீய இன்சல்ட்டிங் ஆப் போச்சுது) இதுகளுக்குள்ள முதல் போராளி மட்டும் உந்த வஞ்சகப்புகழ்ச்சியள்ள எல்லாம் மயங்காம அலேர்ட்டா இருக்கிறத இட்டு பேச்சந்தோசம்.. ஏதோ இ- (அதுதான் இயக்கம்!) கலைக்கப்பட்டாலும் கொள்கைகளாவது வாழுதே...
இந்த 'மொளி'பற்றி ஒருவன் கேட்டது தொடர்பா, அனேகமான ஈழத் தமிழ்ச் சொற்களிற்கு 'க்ரியா தற்காலத் தமிழ் அகராதி' யில அர்த்தம் போட்டிருக்கு. இல்லாட்டி வாங்கிக்கொள்ளலாம்.
எழுதிக்கொள்வது: Shreya
நாங்களும் மொளி என்ற சொல்லைப் பாவிக்கிறனாங்க. எழுத்துக்கு வரேக்குள்ளதான் "ழ"வா "ள"வா என்று குழப்பம் வருது.
//ஆனாலும்,
மரத்துப் போன என் மொளிகள் எனக்குப் பயன்பட்டன,
‘ஆத்திரம் வரேக்க ஆற்றயேன் மூஞ்சேல குத்த’// :o)
9.12 23.3.2005
மனதில் ஆழத்தில் இருந்த, மற்ந்துபோய்விட்டேனென்று நினைத்த சொற்களையும் நினைவலைகளையும் திரும்பக் கொண்டு வ்ர்ரீங்க வசந்தன். தொடரட்டும் உங்கள் பணி.
நான் சயந்தன் மாதிரி கவிதை எண்டெல்லாம் உளற மாட்டன். பொடிச்சியின் கவிதை எதிர்ப்பு இயக்கத்தில் நான் ஒரு அணிலாக்கும்ம்ம்ம்.
வசந்தன் அடிமட்டம் அடிமட்டத்திலிருந்து பேசியது நன்றாக இருக்கிறது வழமை போலவே குரல்பதிவும் செய்து மற்றவர்களைப் பயமுறுத்தலாமே.
குரல் பதிவு செய்யும்படி 'கொழுக்கட்டை அக்கா' சொல்லிற்றுப் போறா
மதி எழுத மறந்தது:
கொழுக்கட்டை அக்கா: நல்லாத்தான் இருக்கு. குரல்பதிவு இல்லாததுதான் குறை.
பின்னூட்டமிட்ட தலைவிக்கு (பொடிச்சி) நன்றி. சத்தியமா அந்த வாத்திமாரில எனக்குக் கோபமில்ல. அதிலயே தந்திருக்கிறன் ஏனெண்டு. அதோட இயக்கத்தக் கலச்சது கவலையா இருக்கு. மதியக்காவும் அதில இருக்கிறாவாம். எனக்கென்னண்டா அந்தப் பதிவ திருப்ப ஒருக்காப் பதியிறது நல்லதெண்டு நினைக்கிறன். ஏனெண்டா கனபேர் வாசிக்க முடியாமக் கிடந்திருக்கு எண்டு தான் நான் நினைக்கிறன்.
மதியக்கா! 'கொழுக்கட்டை' அக்காவிட்டச் சொல்லுங்கோ, அடுத்த முற குரலில பதியிறேனாம் எண்டு.
ஆனா எல்லாருக்கும் ஒண்டு சொல்லிறன். நான் குரலில பதியாட்டி எல்லாருமாச் சேந்து ஈழநாதனுக்கு 'மொத்தி'னியள் எண்டாச் சரி. பாருங்கோ அவரிண்ட நையாண்டிய.
ஸ்ரேயா! (என்ர தட்டுப்பலகயில சரியான முதலெழுத்து அடிக்குதில்ல)
மொளி எண்ட சொற்பாவனை எல்லா இடத்திலயும் இருக்கெண்டுதான் நினைக்கிறன். தமிழகம் உட்பட. இதுபற்றி அறிய விருப்பம்.
கடசியா எல்லாருக்கும் ஒண்டு சொல்லவேணும். சயந்தன ஆரும் திட்டக்கூடாது. அவருக்கு நான் மட்டுந்தான் திட்டலாம். பாவம். ஆரோ எழுது எண்டு ஏத்திவிட அவர் வந்து கவித எண்டு குளறீற்றுப் போறார்.
// பாவம். ஆரோ எழுது எண்டு ஏத்திவிட அவர் வந்து கவித எண்டு குளறீற்றுப் போறார். //
ஆரோவா? சரி! அப்படியே ஆகட்டும்!
எழுதிக்கொள்வது: கிஸோக்கண்ணன்
படிப்பில் அடிமட்டத்தில் இருப்பவர்களும், குழப்படியில் மேல் மட்டத்திலும் இருப்பவர்களும், சிலவேளைகளில் பொதுமக்களும் (அப்பாவி மாணவர்களும்) அடிமட்டத்திற்கு இரையாவதாக திருக்குறள் சொல்லிப் போம்.
எனக்கு அடிவிழும்போது நான் மனசுள் எண்ணுவது: "நான் வாத்தியாரா வந்து உவரின்ரை பிள்ளையளுக்கு நல்ல அடி போட வேணும்".
அப்படி ஒரு கனவை வளர்த்த அடிமட்டத்திற்கு நன்றி!
வசந்தன், நன்றாகப் படிச்சும், ஏன் தான் ஐயா அடி வாங்கினீர்கள்?
19.57 24.3.2005
//வசந்தன், நன்றாகப் படிச்சும், ஏன் தான் ஐயா அடி வாங்கினீர்கள்?//
கிசோக்கண்ணன்!
இது பற்றி பொடிச்சி மேல எழுதியிருக்கிறா.