Wednesday, March 15, 2006

தமிழ்க்குழப்பம்

பேசும் மொழிக்கு ஒரே பேராயினும் அது இடத்துக்கிடம் மாறுபடும். எல்லோரும் தமிழ் தான் பேசுகிறோமாயினும் தமிழகத் தமிழுக்கும் ஈழத்தமிழுக்குமிடையில் வித்தியாசங்கள். ஈழத்துள்ளும் நிறைய வித்தியாசங்கள். ஒரே மாவட்டத்துள் கூட வித்தியாசங்கள்.
வித்தியாசமென்று நான் சொல்வது உச்சரிப்பு முறைகள், சொற் புழக்கங்கள், ஒரே சொல்லுக்கு வித்தியாசமான பொருள் என்பன.

ஒரே பெயர் இருவேறு பூக்களைக் குறிக்கப் பயன்படுகிறது.
காய், கனி, மரங்கள் என்று எடுத்துக்கொண்டாலும் இப்படிச் சிக்கல்.
உச்சரிப்பைப் பொறுத்தவரை, அது பிராந்தியங்கள் அடிப்படையிலோ மாவட்டங்கள் அடிப்படையிலோ மாறுபடுகிறது என்று பொதுவாக நினைத்திருந்தேன். பிறகு பார்த்தால் அதுகூட இல்லை. தொலைவிலுள்ள ஓர் ஊரும் எனது ஊரும் ஒத்திருக்கும்போது பக்கத்து ஊர்க்காரன் வித்தியாசமாக இருக்கிறான்.

அண்மையில் நடந்த சம்பவமொன்று.

சயந்தனுடன் ஒருநாள் தூதுவனில் அரட்டையடித்துக் கொண்டிருந்தபோது, 'கெரியாத் தாரும்' என்று எழுதினேன்.
'விளங்கேல' எண்டு திரும்ப பதில் வந்தபோது,
'கெரியாத் தாருமப்பா' என்று மீண்டும் எழுதினேன்.
அதை வைத்துக்கொண்டு அவர் என்னைக் கலாய்க்கத் தொடங்கினார். வழமையாக அவர் விடும் தட்டச்சுத் தவறுகளை வைத்து நான்தான் இதைச் செய்வேன். இம்முறை அவர்.
" உது எந்த இடத்துப் பாசை? வன்னிப் பாசையோ?" என்று நக்கலடிக்கத் தொடங்கினார்.
"ஏனப்பா? உதில என்ன பிழை?" என்று கேட்க, 'கெரியா' என்பதைச் சுட்டினார். அது 'கெதியா' என்றுதான் வருமென்று சொன்னார்.
"அதுசரியப்பா. கெதியா எண்டும் கெரியா எண்டும் சொல்லுறது" என்று சொல்லியும் சரிவரவில்லை. என் புரிதலின்படி இரண்டுமே பயன்பாட்டிலிருக்கும் சொற்கள். ஆனால் சயந்தன் 'கெரி' என்ற வடிவத்தைக் கேட்டதேயில்லை என்றார்.
************************************
விரைவாக என்பதை நாங்கள் 'கெதியாக', 'கெரியாக' என்று பேச்சு வழக்கிற் கதைப்பதுண்டு.
முன்பொருமுறை வன்னியில் முனைவர் கு.அரசேந்திரன் அவர்கள் இதுபற்றிச் சொல்லும்போது 'கதி' என்பது 'கெதி' ஆனதென்று (பலம் -> பெலம்) விளக்கமளித்தார். அதன்வழியே கெதி, கெரி ஆயிற்று. கெதி என்று பாவிக்கும் பலரையும் பார்த்திருக்கிறேன். ஆனால் எங்கள் ஊரில் 'கெரி' தான். கெரியை விட கெதி மூலத்துக்குக் கிட்டவாக இருக்கிறது. நான் பாவிப்பது அதன் அடுத்த மருவல் வடிவம். இன்றும் கெதி என்று சொல்லிப் பார்க்கிறேன், ஒப்பீட்டளவில் கடினமாய்த்தான் இருக்கிறது.
************************************
இந்தச் சிக்கலின் பின் இன்னொரு முன்னாள் வலைப்பதிவாளர் ஒருவரைச் சந்தித்தபோது இதுபற்றிக் கேட்டேன். அவருக்கு என்ர 'கெரி' தான் வருது. தவிர அவரின்ர ஊரிலயும் 'கெரி'தான் பாவிக்கப்படுகிறது. அவரின்ர இடம் மானிப்பாய்.

வலைப்பதிவாளர் சயந்தன் கிட்டத்தட்ட எனக்குப் பக்கத்து ஊர்க்காரன். ஆனால் இதையெல்லாம் தாண்டித்தான் மானிப்பாய்க்குப் போக வேணும். தவிரவும் மானிப்பாய்க்கும் எனதூருக்கும் நேரடித்தொடர்பேதும் இருந்ததில்லை இடப்பெயர்வு வரை. ஆனால் பக்கத்து ஊர்க்காரன் கேள்வியேபடாத ஒரு சொல்லை மானிப்பாயில் வழக்காகக் கொண்டிருக்கிறார்கள்.
இதுபற்றி மேலும் விசாரித்துப்பார்த்ததில் எழுவைதீவில் 'கெரி' ஆனால் காரைநகரில் 'கெதி'.

இந்த உச்சரிப்பு மாற்றத்துக்கு எந்தக் காரணிகளையும் பொருத்த முடியவில்லையென்பதே நான் கண்டது.

இதைவிட மிகமிக நீண்டகாலம் பயன்பாட்டிலிருக்கும் சொற்கள்கூட பிறருக்குத் தெரியாமலிப்பதைக் கண்டபோது ஆச்சரியமாய்தானிருந்தது. கவளம், படலை என்ற சொற்கள் ஈழத்தில் - குறைந்தபட்சம் யாழ்ப்பாணத்திற் பரவலாக பாவிக்கப்படுவன. அதிலும் கவளம் தமிழகத்திற்கூட பழக்கமான சொல். அதைவிட இரண்மே இலக்கியங்களிலும் பரவலாக வந்த சொற்களே. ஆனால் இரண்டு சொற்களுமே தெரியாதவர்களை மானிப்பாயிற் சந்தித்துள்ளேன். (இது பற்றி ஏற்கனவே பதிவுகளும் எழுதியுள்ளேன்) அதேபோல் நானறியாத சொற்களும் அவர்கள் பாவிக்கக்கூடும்.

இவற்றை எப்படிப் புரிந்துகொள்வது?
இடப்பெயர்வுகள் எங்கள் சமூகத்தில் மொழி மட்டில் நிகழ்த்திய சில நல்ல தாக்கங்களைப் பற்றி பிறகு எழுதுகிறேன்.
***********************************
பொதுவாக, பேச்சுவழக்கில் 'ற்' வரிசையிலிருந்து 'த்' வரிசைக்குச் சொற்கள் மாறும்.
[பற்றை ->பத்தை, முற்றம் ->முத்தம், பற்ற வை ->பத்த வை, காற்று ->காத்து.]
ஆனால் இந்தக் 'கெதி' விசயத்தில் தகரத்திலிருந்து மறுவளமாக மாறுகிறது. (இங்கே 'ரி' என்பதை R இன் உச்சரிப்பிலல்லாமல் 'ற்' இன் வல்லின உச்சரிப்பிற் பார்க்க வேண்டும். (நாங்கள் ரிக்கெட், ரின், ரொறண்ரோ என்று எழுதுவது போல)
**********************************
இதை வாசிக்கும் ஈழத்தவர்களே,
நீங்கள் 'கெதியா?', 'கெரியா?' என்பதைக் கெரியா சொல்லுங்கோ.எழுத்துருவைத் தெரிவுசெய்ய.
பாமினி ஆங்கில உச்சரிப்பில்

[மேலுள்ள பெட்டியில் தட்டச்சினால் கீழுள்ள பெட்டியில் ஒருங்குறிக்கு (Unicode) மாற்றப்பட்ட எழுத்துரு கிடைக்கும்]


சுரதா, கிருபாவுக்கு நன்றி


"தமிழ்க்குழப்பம்" இற்குரிய பின்னூட்டங்கள்

 

said ... (15 March, 2006 23:36) : 

//விரைவாக என்பதை நாங்கள் 'கெதியாக', 'கெரியாக' என்று பேச்சு வழக்கிற் கதைப்பதுண்டு.//
இதே விரைவாக என்பதை எங்கள் பகுதியில் "வெறசா" என்று கூறும் வழக்கம் இன்றும் உள்ளது.
இதைததான் வட்டார வழக்கு என்று சொல்கிறார்கள்.
இந்த வட்டார வழக்கில் தமிழ் படைப்புகள் வரத்தொடங்கி வெகு காலமாகிவிட்டது.

 

said ... (15 March, 2006 23:41) : 

எனக்குத் தெரிந்தது கெதிதான்.
கெரியை இன்றைக்குத்தான் கேள்விப்படுகிறேன்

 

said ... (15 March, 2006 23:48) : 

கெதிதான்.
என்னதான் பிளவாளுமையெண்டாலுங்கூட, நீரும் சயந்தனும் இப்பிடி தூதுவனிலை கதைக்கிறியளெண்டால், வருத்தம் முத்திப்போச்செண்டு அர்த்தமெடா தம்பி(யள்).
மினக்கெடாமல், கொண்டுபோய்க் காட்டுங்கோ ராசா. இல்லையெண்டால், பிழைச்சுப்போம்

 

said ... (15 March, 2006 23:59) : 

//விரைவாக என்பதை நாங்கள் 'கெதியாக', 'கெரியாக' என்று பேச்சு வழக்கிற் கதைப்பதுண்டு.//
நாங்கள் மதுரைப் பக்கம் விரைவாக என்பதை 'சீக்கிரம்' என்றும் கூறுவோம்.

 

said ... (16 March, 2006 00:01) : 

எனக்குத் தெரிந்து எஙடை ஊரிலையும் கெதியாய் என்ற சொல்லைத் தான் பாவிக்கிறவையள், சயந்தன் கூறியதைப் போல கெரியாக என்று பாவிப்பதை இதுவரை கேள்விப்பட்டதுமில்லை. உம்மளை மாதிரி சாமியாருக்கு 'கெதி'யின்ரை சுதிதான் எங்கை புரியப்போகின்றது. என்னை மாதிரி சயந்தனை மாதிரி பெண்களை இரசிக்கின்றவனுக்குத்தான் அதன்ரை அருமை புரியும்.

 

said ... (16 March, 2006 00:33) : 

எட, வந்த உடனயே எனக்கு ஆப்புத்தானா?
வாறவையள் அப்பிடியே உங்கட ஊருகளைச் சொன்னாலாச்சும் என்ர ஊரிலயிருந்து குறுக்க கோடுகளைக் கீறி இந்த இந்தக் கோணங்களில இப்பிடியிப்பிடிக் கதைப்பினமெண்டு ஒரு முடிபு எடுக்கலாம்.

வலைப்பதிவரில ஒருத்தன் / ஒருத்தி கூடவா "கெரி"யாக் கதைக்கிறேல?

 

said ... (16 March, 2006 00:39) : 

பாலபாரதி, சந்திரவதனா, மகேஸ் உங்கள் வரவுக்கும் கருத்துக்கும் நன்றி.

டி.சே,
நான் சாமியெண்டதை ஆரப்பா உமக்குச் சொன்னது. ஆனாலும் நானும் சயந்தனும் வேறவேற ஆக்களெண்டதைக் காலந்தாழ்த்தியாவது ஒப்புக்கொண்டது பேச்சந்தோசம்.

பெயரிலி,
நீங்களுமா?
இன்ன இன்னார் ஒரேயாள்தான் எண்டு காட்டிறதில மினக்கெடுற நீங்கள், இன்ன இன்னார் வேறவேற ஆக்கள் எண்டு காட்டுறதுக்குக் கொஞ்சம் மினக்கெடலாமே?;-)

எண்டாலும் இந்தப் பிளவாழுமை கொஞ்சம் சுவாரசியமானது தான். இல்லாட்டி ஒருவருசமா உதை வைச்சே வண்டில் விட்டுக்கொண்டிருக்க முடியுமே?

 

said ... (16 March, 2006 07:05) : 

எங்கட ஊர் பக்கத்தில தான். சண்டிருப்பாய் (சண்டிலிப்பாய் எண்ட பெயர் பிறகு வந்தது). உந்தக் கெரியை இப்பதான் கேள்விப்படுறன். எண்டாலும் நல்ல பதிவு.

 

said ... (16 March, 2006 07:52) : 

மூண்டு பேரைப் போடும்; மூண்டாம் ஆளும் இந்த முதல் ரெண்டுபேரும் வேறையாக்கள் எண்டு காட்டுறன். ;-)

ஆனால், 'கெரி'யை வேற இடத்திலை பள்ளிக்கூடத்திலை பாவிச்சிருக்கிறம். கோன் கெரியில்லையணை. "கெரி வேலை செய்துபோட்டான்" எண்டு பாவிச்சிருக்கிறம். இங்கை 'கெரி' எண்டது 'நம்பிக்கைத்துரோகம்' எண்ட அர்த்தத்திலை பாவிக்கப்பட்டிருக்குது

 

said ... (16 March, 2006 10:00) : 

நான் ரண்டையும் (கெதி, கெரி) பாவிச்சிருக்கிறன். பாவிக்கிறனான். கெதி கெதியா எழுதிட்டு படுத்தாத்தான், விடிய கெரியா எழும்பலாம். :)

 

said ... (16 March, 2006 16:34) : 

கெதி கெரியாச்சுதோ, இல்லை hurry கெரியாச்சுதோண்டு ஒருக்கா யோசிச்சுப்பாரும் தம்பி ;-)

 

said ... (16 March, 2006 17:56) : 

உது வன்னிப்புற உச்சரிப்பு என்றே நினைக்கிறன்.. :-)

நீண்ட நேரம் நாங்கள் எப்படி உச்சரிக்கிறது என்பத "யோசிக்க" (கஸ்ரம்!)வேண்டி வேற இருந்தது..(ஆனா கெரியா ஞாபகம் வரேல்ல!)இன்னொருவருக்கு 'வித்தியாசமாய்' ஒலிக்கறபோதுதான் - நாம வித்தியாசமா உச்சரிப்பது தெரியுது..

 

said ... (17 March, 2006 01:42) : 

எனக்கு தெரிஞ்சது கெதி எண்ட சொல்லு தான்.

கெலி, பிடிச்சது எண்டா என்ன எண்டு சொல்லுமன்.

 

said ... (17 March, 2006 01:59) : 

எழுதிக்கொள்வது: johan-paris

எங்க பக்கம், விதியே என்று "கெதி"யே தான் பாவிக்கிறோம்.
யோகன்
பாரிஸ்

16.25 16.3.2006

 

said ... (17 March, 2006 07:35) : 

இளைஞன்,
கெரியாப் போய்ப் படும்.

பெயரிலி,
பள்ளிக்கூடத்தில எங்களுக்கு உப அதிபராயிருந்த சுவாமி hurry up எண்டு உறுக்கிச் சொல்லேக்க, "கெரியா" எண்டுதான் சொல்லிறார் எண்டு நினைச்சிருக்கிறன். ஆனா கொஞ்ச நாளிலயே விளங்கீட்டுது.

'கெதி', 'கெரி' ரெண்டையும் சொல்லிப்பாத்தா பெரிய வித்தியாசமிருக்கிறதாத் தெரியேல. கொஞ்சம் எட்ட நிண்டு கேட்டா ரெண்டும் ஒரேமாதிரித்தான் விளங்கும். (இஞ்ச எங்கட 'ரகர' உச்சரிப்பைப் பற்றி உங்களுக்கு விளங்கப்படுத்தத் தேவையில்லை)
hurry யில இருந்து கெரி வந்திருக்கிற வாய்ப்பில்லை.

மண்டைதீவு, வல்வெட்டித்துறையிலயிருந்தும் 'கெரி' க்கு ஆதரவு இருக்கு. குமரேஸ் இஞ்சால் பக்கம் வந்தா ஒருக்கா அவரிட்டயும் கேக்க வேணும். இப்ப உதப் போய் விசாரிச்சுக் கொண்டு திரிஞ்சா என்னைப் பைத்தியம் எண்டே முடிவு கட்டிப்போடுவாங்கள்.
***************************
பெயரிலி,
அப்ப நீங்கள் பிடிச்ச முயலுக்கு மூண்டுகால் தான் எண்டுறியள்.
நான் சொல்லப்போற மூண்டாவது ஆளையும் எங்கள் ரெண்டு பேரோடையும் சம்பத்தப்படுத்த மாட்டியள் எண்டு என்ன நிச்சயம்? அதால இதை இதோட விடுறன். (உப்பிடித்தான் நாங்கள் ரெண்டு பேரும் வேறவேற எண்டு நிரூபிக்கிறதுக்காக ஷ்ரேயா(தெரியுமோ ஆளை? முன்பொரு காலத்தில வலைப்பதிவு வச்சிருந்த சிட்னிவாசி)வைச் சயந்தன் நேர சந்திச்ச அதேநேரம் அவவோட தொலைபேசியில நான் கதைக்க வேண்டியிருந்திச்சு.)

 

said ... (17 March, 2006 08:50) : 

வசந்தன் நான் தீவுப்பகுதியைச் சேர்ந்தவன்.எங்கள் பக்கம் "கெதியாக"-கெதியாகத் தாங்கள்",கெதியாகப் போகங்கள்"தாம் நடைமுறை!மண்டைதீவிலும் இஃதே நடைமுறை!


அடுத்து யாழ்ப்பாணத்தில் வதிப்பவர்கள்:அகப்பையை"ஏப்பை"யென்றும்,அதுவென்பதை"உது"வென்றும்,மகனே என்பதை"மோனே"-மகளே"மோளே" என்றும் கூறுவார்கள்!தீவுப்பகுதியில் இம்மாதிரியான பழக்கமில்லை.

கெரியா என்பதை நாப்பழக்கமாக எடுக்கலாம்!சிலருள் "ண-ன" போன்றவை தனியே"ன"த்தாம்!இதுமாதரித்தாம் உங்கள் நிலையுமென நான் கருதினால் அதுவும் பிழையாக இருக்கும்.ஏனெனில் உங்கள் கிராமம்(நகரம்?)முழுவதுமாகக் கோணங்கித் தனமாகக் குரலிடுவதாகச் சொல்லுகிறீர்கள்...அடச்சீ!கோணங்கித்தனமென்று...அப்படியில்லை.மன்னிக்கவும்!என்றபோதும்"கெதியாக"என்பது ஈழத்தில் பெரும்பாலும் பேசப்படும் சொல்!

 

said ... (17 March, 2006 09:02) : 

எங்கட இணுவிலிலும் "கெதியா" எண்டுதான் சொல்லுவினம். எங்கட அம்மம்மா "சுறுக்கா " எண்டும் சொல்லுவா.

 

said ... (17 March, 2006 16:11) : 

எங்கட ஊரிலயும் (அல்வாய்) கெரி என்றுதான் சொல்றனாங்கள்.

ஒரு வயசு போனாள் ஒருநாள் என்னட்ட கேட்டா என்ன பிள்ளை பறையாம போறாய் என்று...எனக்கு அவாவ அடையாளம் தெரியேல்ல பறையாமல் என்றாலும் என்னண்டு தெரியாது அப்ப...நான் முழுசிக்கொண்டு நிக்க அவாவே nhசன்னா பறையாமல் என்றால் கண்டிட்டு கதைக்காமப் போறதெண்டு அர்த்தமாம் நவக்கிரியில.

 

said ... (17 March, 2006 16:24) : 

/ஷ்ரேயா(தெரியுமோ ஆளை? முன்பொரு காலத்தில வலைப்பதிவு வச்சிருந்த சிட்னிவாசி)வைச் சயந்தன் நேர சந்திச்ச அதேநேரம் அவவோட தொலைபேசியில நான் கதைக்க வேண்டியிருந்திச்சு./

தம்பி கையிலை பொம்மை ஒண்டை வச்சுக்கொண்டு தனக்காண்டி வாயாடிக் கதைச்சுக்கொண்டு பொம்மைக்காண்டி வாயாடாமலும் கதைக்கிறது வெண்டிக்குலரிசமோ வெண்டிக்காயிசமோ என்னவோ சொல்லுவினம். அவர்கள் படத்திலையோ அப்ப வந்த வேறையொரு படத்திலையோ கமலகாசன் அப்படியா வருவார். நீர் அங்கையெல்லோ போயிட்டீர். உம்மடை திறமையை என்னவெண்டுவன் என்னவெண்டுவன்?!!

 

said ... (17 March, 2006 16:31) : 

//எங்கட ஊர் பக்கத்தில தான். சண்டிருப்பாய் (சண்டிலிப்பாய் எண்ட பெயர் பிறகு வந்தது).//

சிறிதரன்,
உந்தப் பெயர் விளக்கத்துக்கு நன்றி.
உங்கட இடத்து ஆக்கள் பெரிய சண்டியரா இருந்திருப்பினமோ?
******************************

பொடிச்சி,
இது வன்னிப்புறத்தில மட்டுந்தான் கதைக்கிறதெண்டு சொல்லிக்கொள்ள ஏலாது.
என்ர 'கெரி' யாழ்ப்பாணத்திலயிருந்து வந்ததுதான். (நீங்கள் 'கெரி' எண்டு தானே சொல்லிறனியள்? குறைந்தபட்சம் வன்னியில இருந்தபோதாவது?)
***********************


குழைக்காட்டான், யோகன் ஆகியோருக்கும் நன்றி.

 

said ... (17 March, 2006 16:36) : 

This comment has been removed by a blog administrator.

 

said ... (17 March, 2006 16:53) : 

சிறிரங்கன், எனக்குப் பக்கத்தில இருக்கிற மண்டைதீவுக்காரர் 'கெரி' எண்டுகினம். இந்தப் பதிவு எழுதினபிறகு கேட்டு எழுதினேன். அதைவிட எழுவைதீவுக்காரரும் 'கெரி'க்கிறார். அதைவிட வல்வெட்டித்துறை ஆளொருத்தரும் 'கெரி' தான். இப்ப அல்வாய்க் காரியும் 'கெரி'ப் பக்கம். ஏற்கெனவே மானிப்பாய்க் காரரைப் பற்றிச் சொல்லிவிட்டேன்.

நீங்கள் சொல்லும் மோன், மோள், ஏப்பை எல்லாம் என் கிராமத்திலுமுண்டு. (ஆம் கிராமமே தான். பட்டினத் தன்மை கூட அதற்கு இல்லை)
இவையெல்லாம் பேச்சு வழக்கு என்று எடுத்துக்கொள்ளலாம். ஆனால் 'உது' என்பது தமிழின் இலக்கணப்படி சரியே. தொல்காப்பியத்திற் சொல்லப்பட்ட 'அ, இ, உ' என்ற சுட்டெழுத்துக்களில் உகரத்தை இன்னும் பாவிப்பது நாங்கள் தான். (உவன், உவள், உங்கே, உது). தமிழகத்தில் இச்சுட்டெழுத்து மறைந்து விட்டதாக நினைக்கிறேன். நீங்கள் சொல்வது போல் 'உ'கர சுட்டெழுத்து தனியே யாழ்ப்பாணத்தில் மட்டுமே பாவிக்கப்படுவதில்லை. இது ஈழத்தவர்க்குப் பொதுவாகச் சொல்லலாம். தீவகத்தில் 'உது' இல்லாமற்போனதை என்னால் நம்ப முடியாமலுள்ளது.

இந்தக் 'கெரி'த்தனத்தை எப்படி அழைப்பது என்று யோசித்துக் கொண்டிருந்தேன். "கோணங்கித்தனம்" என்ற சொல்லைத் தந்ததுக்கு நன்றி.
'கெதி' என்பது ஈழத்திற் பரவலாகப் பேசப்படும் சொல்லென்பதை ஒத்துக்கொள்கிறேன். மேலும் அதுதான் மூலத்துக்குக் கிட்டவாக (கதி) உள்ள சொல்லென்றும் ஒப்புக்கொள்கிறேன்.

 

said ... (17 March, 2006 17:07) : 

சினேகிதி,
வருகைக்கு நன்றி.
வலைப்பதிவில ஒராளாவது 'கெரி'யாக் கதைச்ச சந்தோசம்.

//பறையாமல் என்றால் கண்டிட்டு கதைக்காமப் போறதெண்டு அர்த்தமாம் நவக்கிரியில. //
இல்லை சினேகிதி.
"பறை" எண்டது ஈழத்திற் பாவிக்கப்படும் ஒரு வினைச்சொல். அது "பேசு", "கதை" என்ற அர்த்தங்களில் பொருள் தரும். என்றாலும் ஒவ்வொரு சொல்லும் வெளிப்படுத்தும் உணர்வு வேறுவேறானவைதான்.
'பறையாமல்' எண்டா 'கதைக்காமல்' எண்டுதான் கருத்து. பல இடங்களில் பறைதலென்பது அரட்டையடித்தல் என்றுகூட வரும்.
பறை தமிழ்சொல்லே. அது மலையாளத்திலும் அதே பொருளில் வருகிறது. (இடையில் தமிழகத்தில் விடுபட்டதேனென்று யோசிக்க வேண்டும்.)
'அங்க என்ன பறைஞ்சுகொண்டு நிக்கிறாய்?' என்றால் 'அங்க என்ன அலட்டிக்கொண்டு நிக்கிறாய்' எண்டு கருத்து.
'கொப்பர் ஏதும் உது பற்றிப் பறைஞ்சவரே?' எண்டால் 'அப்பா இது பற்றி ஏதாவது சொன்னாரா?' என்று கருத்து.
'என்ன ஒண்டும் பறையாம நிக்கிறாய்?' எண்டால், ஏதாவது கேள்வி கேட்டுவிட்டு, பதில் வராதபோது அல்லது ஏதாவதொன்றை அவர் சொல்லவேண்டுமென்று எதிர்பார்த்து நிற்கும்போது சொல்லப்படுவதாக எடுக்கலாம்.
'அவனுக்குத் தெரிஞ்சா ஊரெல்லாம் பறைஞ்சு கொண்டு திரிவான்' எண்டா ஒரு விசயத்தை ஊர் முழுவதும் சொல்லித் திரிவது என்ற அர்த்தத்தில் வரும்.
**************************
அதுசரி, என்ன இப்ப அதிகம் காணக்கிடைக்கிறேல?
**************************
குழைக்காட்டான்,
நீங்கள் என்ன அர்த்தமோ தெரியாது, நான் 'கெலி' பிடிச்செண்டா, அவாப்பிடிச்சுத் திரியிறதெண்டு பாவிக்கிறன்.

 

said ... (17 March, 2006 17:41) : 

(பின்னூட்டங்களைப் படிக்கிறபோது) நீங்கள் சொன்னமாதிரி சொற்கள இன்ன இன்ன இடத்துக்குரியதென்று பிரிக்க முடியாதுதான். வன்னியில் அம்மம்மாட வயதை ஒத்த கிழவிகள் (!) 'சுறுக்கா' என்ற சொல்லை பாவித்ததும் ஞாபகம். நெடுந்தீவிலும் 'கெரி'யா என்றுதான் பாவிக்கிற என்று நினைக்கிறன்... (நெடுந்தீவில் எல்லா (வினைச்?) சொல்லும் முடியிறபோது 'ing' இல முடியுமெண்டு சில பேர் நக்கலடிப்பதுண்டு (இருக்கிறங்/ போறங்/ வாறங்/ இத்தியாதி))... அதேபோல சிநேகிதி சொன்ன 'பறைதல்' (பறைதல் என்றால் பேசுதல், பறையாம என்றால் பேசாமல்!)பறையாம என்றதும் தீவுப்பகுதிகளுக்குரியது (அல்லது அங்கே பரவலானது?)..
கெலியெண்டா கிலேசம் = அவாப்பிடிச்சுத் திரியிறதெண்டு!

தீவுப்பகுதிகளிலிருந்த போன மக்கள்தான் வன்னி இன்ன பிற நிலங்களில் வாழ்கிறார்கள் எனுகிறபோது அதே சொற் பாவனைகள் ஆச்சரியமில்லைத்தானே? சிலவேளை குறிப்பிட்ட பகுதியிலிருந்து போற மக்கள் (அடுத்த கிராமத்தில் இல்லாமல் அதற்கடுத்த கிராமத்தில் குடிபெயருகிறபோது)அது, உங்களது இடத்தில் பரிச்சயமான சொல் அடுத்தடுத்த ஊர் தள்ளிப் பாவனையிலிருக்க காரணமாய் இருந்திருக்கும்...(இப்படித்தான் ஒரு குத்துமதிப்பாத் தோணுது, சரியா தெரியா)

மொழி தொடர்பான சுவாரசியமான பதிவு; பின்னூட்டங்களும்..

 

said ... (17 March, 2006 23:28) : 

பெயரிலி,
என்ர திறமை தொடர்பில் உம்மட பாராட்டுக்கு நன்றி.
அப்ப எனக்கும் பாத்துக்கீத்து ஒரு பட்டம் தாங்கோவன்.

பொடிச்சி,
'சுறுக்கா' எண்டது எங்கட இடத்திலயும் இருக்குத்தான்.
நெடுந்தீவுத் தகவலுக்கு நன்றி.
'பறைதல்' எல்லா இடத்துக்கும் பொதுதான். காலப்போக்கில மாறீடும். இப்ப என்ன மாதிரியோ தெரியாது. 95 இடப்பெயர்வு வரை 'பறைஞ்சு' கொண்டு தான் திரிஞ்சனாங்கள்.

//பின்னூட்டங்களைப் படிக்கிறபோது) நீங்கள் சொன்னமாதிரி சொற்கள இன்ன இன்ன இடத்துக்குரியதென்று பிரிக்க முடியாதுதான். //
உண்மைதான். இப்போது ஒரே ஊருக்குள்ளும் உது சரிவராது போலத்தான் கிடக்கு. சிறிரங்கன் மண்டைதீவில 'கெதி' மட்டும்தான் எண்டுறார். ஆனா எனக்குப் பக்கத்தில இருக்கிற மண்டைதீவுக்காரர் 'கெரி' எண்டுறார். மண்டைதீவுக்கும் எங்கட ஊருக்கும் திருமண சம்பந்த உறவு நிறைய இருக்கிறதால உந்தக் கெரி அங்கயும் போட்டுதோ என்னவோ?;-)

எழுவைதீவு, மண்டைதீவு, வல்வெட்டித்துறை எல்லாம் எங்கட ஊரோட மிகநெருங்கின உறவுள்ளவை. ஆனால் மானிப்பாய், அல்வாய், நெடுந்தீவு என்பவற்றோடு அறவே இல்லையென்றுகூடச் சொல்லலாம்.
**********************************
என்னோட இருந்த இணுவில் பெடியனொருத்தன், 'கேந்தியக் கிளப்பாத' எண்டுவான். 'ஆற்றா ஜேயந்தியக் கிளப்பிறது?' எண்டு நாங்கள் திருப்பிச் சொல்லுவம். 'கோவத்தைக் கிளப்பாத', 'விசரக் கிளப்பாத' எண்ட அர்த்தத்தில தான் இந்தக் 'கேந்தியக் கிளப்பாத'. கோவம், எரிச்சல் எண்ட பொருளில 'கேந்தி' பாவிக்கப்பட்டதை அவனிட்டதான் பாத்தன். கேந்தி எதிலிருந்து மருவினது எண்டும் கண்டுபிடிக்க ஏலாமக்கிடக்கு. (கானா பிரபா இதுபற்றி ஏதும் சொல்லக் கிடக்கா?)
இப்படி ஊருக்கு ஊர் சுவாரசியமான வழக்குகள் இருக்கு.

 

said ... (18 March, 2006 09:14) : 

அண்ணை வசந்தன், நீர் பிடிச்ச முயலுக்கு மூன்று காலெண்டு காவடியெடுக்காமல், மெஜாரிட்டியான சனம் என்ன சொல்கிறது எண்டு கேளும். உம்மடை தொல்லை தாங்கேலாது அம்மாவிடமும் இதைப் பற்றிக் கேட்டேன். உம்மடை ஊருக்கு மேற்கிற்குத் திசையில் திருமணஞ்செய்யமுன்னர் வாழ்ந்த அவாவும் கெதியாய் தான் தாங்கள் பாவித்ததாய் சொல்கிறா...தமிழ்மணத்திலே இதைப் பற்றியும் கருத்துக்கணிப்பு எடுக்கச் சொல்லி காசிக்கு ஒரு மெயில் போடப்போகின்றேன்.கெதியாய்வந்து வாக்குப்போடும் சரியா...:-)

 

said ... (18 March, 2006 09:19) : 

//கேந்தி எதிலிருந்து மருவினது எண்டும் கண்டுபிடிக்க ஏலாமக்கிடக்கு//

இந்தக் 'கேந்தி' என்ற சொல் தென்னிலங்கையில் குறிப்பாக இஸ்லாமியத் தமிழர்கள் அதிகம் பாவிப்பதுண்டு.

 

said ... (18 March, 2006 09:27) : 

அப்ப எனக்கும் பாத்துக்கீத்து ஒரு பட்டம் தாங்கோவன்

விண்பூட்டிவேணுமோ? பூட்டாமல், வாலோட மட்டுமோ?

 

said ... (18 March, 2006 09:32) : 

பெயரிலி,
விண்பூட்டித்தான். அதிருந்தாத் தானே ஊர் முழுக்கப் பறைதட்டலாம்? ஆனா உரைப்பை நூல் கோர்த்து சும்மா அரைகுறை விண் வேண்டாம்.

ஆனா வால் வேண்டாம். குஞ்சம் மட்டும் வைச்ச ஒரு பட்டம்.

 

said ... (18 March, 2006 09:50) : 

டி.சே த்தம்பி (நான் கூப்பிட முதல் முந்திக்கொண்டு என்னை அண்ணை எண்டதால;-)),
இதில மேற்கென்ன கிழக்கென்ன பாக்கக் கிடக்கு? உதெல்லாம் சரிவராது எண்டதுதான் இந்தப்பதிவின்ர முதன்மைக்கருத்தே.

தான் பிடிச்ச முயலுக்கு மூண்டுகால் எண்டு நிக்கிறது நானில்லை, வேற ஆள். வேற விசயத்தில (முந்தியதொரு பின்னூட்டத்தில் சொல்லியிருக்கிறன் பாரும்;-)). ஆனா இந்தப்பதிவின்ர பின்னூட்டங்கள் சிலதிலயே 'கெரி' எண்டும் ரெண்டொருவர் சொல்லியிருக்கினம் பாரும்.

பெரும்பான்மை 'கெதி'தான். அதிலென்ன சந்தேகம்?
என்ன பிரச்சினையெண்டா, உதெல்லாம் எழுத வெளிக்கிடேக்க தான் சிக்கலா வருது. மற்றும்படி நான் 'கெரி' எண்டு சொன்னாலும் கெதிக்கும் அதுக்குமுள்ள வித்தியாசத்தை உன்னிப்பா ரெண்டு மூண்டுதரம் கேட்டாலேயன்றி உங்களால கண்டுபிடிக்க முடியாது.
****************************
யோவ், இதுக்கெல்லாம் என்னப்பா வாக்கெடுப்பு வேண்டிக்கிடக்கு?
அதவிட தமிழ்மணத்தின்ர வாக்குப் பெட்டி என்ர கணிணியில வேல செய்யுதில்லை. வாக்குகளின்ர தற்போதைய நிலைவரத்தைத்தான் பார்க்க முடியுது. வாக்குப் போட முடியாது.
கெரியைத் தேர்தலில இருந்து நான் விலக்கிக் கொள்ளிறதால நீங்களே போட்டியின்றி வெற்றி பெற்றதாக அறிவித்து விடவும்.

 

said ... (18 March, 2006 09:52) : 

சிறிதரன்,
கேந்தி, நான் சொன்ன அர்த்தத்தில் தானா பாவிக்கப்படுகிறது?
நான் நான் சொன்ன அந்த இணுவில் பெடியனுக்கும் தென்னிலங்கைக்கும் தொடர்பிருப்பதாகத் தெரியேல.

 

said ... (18 March, 2006 09:52) : 

வசந்தன்,மண்டைதீவில் பரவலாக நான் கடமையாற்றியுள்ளேன்.அந்தவ+ரிலுள்ள மக்களிடம்"கெரியா"என்பதை நானறியக் கேட்டறியேன்.நெடுந்திவிலுள்ள எனது உறவினர்களிடம் இந்த வார்ர்தையை நான் காணவில்லை.பொடிச்சி சொல்வது சரியாகவும் இருக்கும்.எனது வீட்டின் வாழ்சூழலில் நான் பேச்சு மொழியின்றி எழுத்து மொழியில் பேசியே பழகிவிட்டேன்.அதற்கு எனது தாயாரே காரணம்.அவர் பேச்சுத் தமிழில் உரையாடுவதுதில்லை.எனக்கு இது புரியிவில்லை.அம்மாவின் தமிழ் எழுத்துத் தமிழ்.எந்த விஷயத்தையும் அப்படியே எழுத்துத் தமிழிலேயே உரைத்தார்.அந்த அம்மா பழக்கிய தமிழால்,நான் பலரிடம் பைத்தியம்,பனி,என்ற சுட்டல்களைப் பெற்றவன்.இப்போதுங்கூட யாராவது"பேந்து"போகேக்க"என்று பேசும்போது,எனக்கு எரிச்சல் வரும்.நான் "போகும்போது","பிறகு"-"பின்பு வருகிறேன்"எனும்போது அவர்களுக்கு எரிச்சல்! எனது அம்மா இன்றும் எழுத்துத் தமிழிலேதாம் உரையாடுவார்.என்ன செய்ய?


நானறிய அம்மாவிடமிருந்து எத்தனையோ தாலாட்டுப்பாடல்களைக் கேட்டிருக்கிறேன்.நோய் நொடியில் வருந்தும்போது மிக உருக்கமாக அம்மன் தாலாட்டுப் பாடல்களோடு அம்மா அருகினில் வந்து படுப்பார்.அப்போது நோயின் வலிகள் தெரியவில்லை.இப்படித்தாம் தமிழ் எனக்கு அறிமுகமாகிறது.எனவே பேச்சு மொழி எனக்கு எழுதுத்துத் தமிழே.பார்த்திபனின் தொடர் நாவலான "கனவை மிதித்தவன்"; கதையை வாசித்தபோதுதாம் அதிகமாக வட்டாரவழக்கு எனக்கு உவப்பானது.எனவே நான் கூறுவதில் தவறுகள் இருக்கும்.


கிராமிய,பிரதேசப் பேச்சுவழக்கு எனக்குகச் சற்று அந்நியமானதுதாம்.எனது கிராமத்திலும்"கேந்தியைக் கிளப்பாதே" என்பது பாவனையில் உண்டு.கேந்தியென்பது"கேந்திரம்"எனும்சொல்லின் மரூ என்றால் அதற்கும் கோபத்துக்கும் என்ன பொருத்தப்பாடென்று நானறியேன்.


அடுத்து,
பிரதேசவழக்குப் பேச்சுமொழி எங்ஙனம் ஒரு மொழியாகிறதென்பதைப்பாருங்கள்:

கேரளா மக்களின் மலையாளப் பண்பாட்டுக்கும் யாழ்பாணப் பண்பாட்டுக்கும் அவ்வளவு வித்தியாசமில்லையென்று கூறலாம்.பெருங்கற்கால யாழ்பாணப் பண்பாடு(Megalithic Culture) கேராளாவை மிகவும் ஒத்தது.எனவே கேரளம் என்பது தமிழர்களின் மாநிலம்தாம்.அந்த மக்கள் தமிழர்களே.அவர்கள் பேசும் இன்றைய மொழி பிரதேசத் தமிழ்ப்பேச்சு வழக்கு காலத்தால் ஒரு மொழியாகிவிட்டது.இந்தவுண்மைகளை ஆதாரமாக அறிய வரலாற்று நூல்கள் அவசியம்.யாழ்பாண இராச்சியத்தைப் பற்றிய வரலாற்று நூல்கள் குறைவு.எனினும் கைலாய மாலை,வையாபாடல்,யாழ்பாண வைபமாலை மற்றும் முதலியார் செ.இராசநாயகம்,சுவாமி ஞனப்பிரகாசர்,ஆசுகவி கல்லடி வேலுப்பிள்ளை போன்றோர்களின் எழுத்துக்களில் பரவாலாக இந்த வட்டார வழக்கு,தொடர்ச்சி பற்றி நாம் பல தகவல்களை அறியலாம்.பேராசிரியர் கா.இந்திரபாலா மற்றும்சி.பத்மநாதன் போன்றோரின் "யாழ்ப்பாண இராச்சியத்தின் தோற்றமும் வளர்ச்சியும்",யாழ்ப்பாண இராச்சியம்(;(The Kingdom of Jaffna)போன்ற நூல்கள் நமது மரபுகளை அறிய நல்ல நூல்கள்.யாழ்பாணத்தில் 28.000. வருடங்களுக்கு முன் நிலவிய குறுங்கற்கால(குறுணிக்கற்கால)பண்பாடானது(Microlithic or Mosolithic Culture) தமிழகத்தின் திருநெல்வேலிக்குச் சொந்தமானதென்பது அறிஞர்கள் கருத்து.

வட்டார,பிரதேசத் தமிழ்பற்றிய ஆய்வுகளுக்கு, இந்த வரலாற்றவில் சார்ந்திருந்து "ஆய்வுகளை" முன்வைக்க வேண்டும்.பெரும்பாலும் நமது பண்பாட்டின் விருத்தியானது"பெருங்கற்காலப் பண்பாட்டிலிருந்தே"தொடர்கிறது.இது தென்னிந்தியாவுக்கே உரிய சிறப்பான பாண்பாட்டு வாழ்வு.கி.மு.நான்காம் நூற்றாண்டிலிருந்து இதன்காலத்தை வரையறை செய்யலாம்.

 

said ... (18 March, 2006 10:04) : 

/ஆனா உரைப்பை நூல் கோர்த்து சும்மா அரைகுறை விண் வேண்டாம்./
அசல் பனைநார் தம்பி; அசல் பனைநார். உருவித்தட்டிக் காயவைச்ச பனைநார் அப்பு. சும்மா தட்டினா, சுள்ளெண்டும் காணும்.

கேந்தியைக் கிளப்பாதையெண்டுறது யாப்பாணத்தில தொடங்கினதெண்டு நினைக்கேல்லை.

 

said ... (18 March, 2006 10:09) : 

/மெஜாரிட்டியான/
அது மஜோரிட்டி தம்பி. அளவுக்கு மிஞ்சி தமிழ்நாட்டு எலைக்சன் வடை பாயாசம் நெற்றிலை சாப்பிடுறீர்போலை.

 

said ... (18 March, 2006 11:04) : 

வசந்தன்,
கேந்தியைப் பற்றி இப்பதான் கேள்விப்படுகிறன், கேந்தியைக் கிளப்பாதேங்கோ

 

said ... (18 March, 2006 12:05) : 

//அது மஜோரிட்டி தம்பி. அளவுக்கு மிஞ்சி தமிழ்நாட்டு எலைக்சன் வடை பாயாசம் நெற்றிலை சாப்பிடுறீர்போலை.//
ப்ரோ, உது பெரிய பிரச்சினையாகக் கிடக்கிறது. கொஞ்ச நாளுக்கு முன்னர் ஒருத்தருக்கு மடலெழுத, கனக்க தமிழ்நாட்டுச் சொற்கள் இருக்கு என்று அவரும் பேசியிருந்தார். முத்துலிங்கத்தாரைத் திட்டித்திட்டி எழுதி, இப்ப எனக்கும் அவரின்ரை நிலை வந்திட்டே எண்டு ஒரே கவலையாய்த்தானிருக்கிறது. நெற்றிலை தமிழ்நாட்டு எலக்கன் வடை பாயசம் வெட்டியதாலே அல்ல, அஸினில் மயங்கியதால் வந்த பாதிப்பு எண்டுதான் நான் நினைக்கிறன்.
....
அண்ணை வசந்தன் கோபிக்காதையும். தேவையான பதிவுக்கு தேவையில்லாத விடயங்களைப் பேசுவதில் நாங்கள் விண்ணர் எண்டு உமக்கு ஒண்டும் சொல்லதேவையில்லைத்தானே. நீர் பெயரிலி கட்டித்தாற பட்டத்தை விண்ணோடு ஏற்றும். நான் இரவோடு இரவாய் வந்து நூலை அறுத்துவிடுகின்றேன் :-).

 

said ... (18 March, 2006 13:46) : 

Kanags is right regarding 'kaenthi'; it's in use among Muslims in Colombo and other areas.
கேந்தி, கோபம் என்ற அர்த்தத்தில் பாவிக்கப்படுவதை பார்த்திருக்கிறேன்.

 

said ... (18 March, 2006 13:48) : 

/நான் இரவோடு இரவாய் வந்து நூலை அறுத்துவிடுகின்றேன் :-)ஓஒ/. mb bm/bbbb .,./
ஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஒ

 

said ... (18 March, 2006 13:53) : 

டி.சே,
நூலறுத்த அனுபவங்கள் இருக்குது போல?

உடன அறுக்காமல் ஆறுதலா அறுக்கிறதுக்காக நாங்கள் நூலில சுண்ணாம்பு தடவி விடுவம். உண்மையில சுண்ணாம்பு நூலை அறுக்குமா இல்லையா எண்டதெல்லாம் தெரியாது. ஆரேன் தெரிஞ்சாச் சொல்லுங்கோ.

பெயரிலி நீங்கள் போட்ட சத்தத்துக்குப் பொருள் விளங்கேல. (ஏதோ முக்கிற மாதிரிக்கிடக்கு.)

 

said ... (18 March, 2006 16:49) : 

பெயரிலி,
//அசல் பனைநார் தம்பி; அசல் பனைநார். உருவித்தட்டிக் காயவைச்ச பனைநார் அப்பு. சும்மா தட்டினா, சுள்ளெண்டும் காணும்.//
பனைநாரெண்டாச் சரியண்ணை. சொன்ன சாமானெல்லோ?
"கேந்தியக் கிளப்பிறதை" இதோட விடுவம். உதின்ர மூலம் தேடிவெளிக்கிட்டா என்ர வலைப்பதிவு தாங்காது. 'கெரி'யோடயே பட்டபாடு போதும்.;-)
தக்கநேரத்தில அசின் தாசனுக்குக் கு(கொ)ட்டினதுக்கு நன்றி.
***************
சிறிரங்கன்,
நீண்ட பின்னூட்டத்துக்கு நன்றி. பறைதல் என்ற சொல்லை வைத்தே நான் மலையாளியா என்று கேட்கப்பட்டிருக்கிறேன். மதுரையில் இருந்த சிலநாட்களில் எங்கள் குடும்பத்தை மலையாளிக்குடும்பமென்றுதான் சிலர் சொல்லித் திரிந்தார்கள். மலேசியர் ஒருவர் மலையாளிகளினதும் எங்களினதும் கதைவேகமும் லயமும் ஒன்றாக இருப்பதாகச் சொல்வார். (ஒப்பீட்டளவில் தமிழகத்தாரை விட எங்கட கதை கொஞ்சம் வேகம் என்ற கருத்து எனக்கு இருக்கு).
சிறிதரன், விளக்கத்துக்கு நன்றி.

 

said ... (19 March, 2006 07:19) : 

இண்டைக்குத்தான் நானும் கெரியைக் கேள்விப்படுகிறேன்.சுறுக்காய் கெதியாய் கேந்தியை என்பதெல்லாம் பாவித்திருக்கிறேன்.

ஆனால் இந்தக் கெரியாயை தூதுவனில் எழுதும்போது பிழை விட்டுவிட்டு சயந்தனிடம் இது சரி என நிருபிக்க தனியே ஒரு பதிவு போடவேண்டியிருந்திருக்க வேண்டுமென்பதில்லை.

எனது மானிப்பாய நண்பர் சொன்னார் எந்த விசரன் சொன்னவன் மானிப்பாயில் கெரியாய் என கதைப்போம் என .. கெதியாய் கேட்டார்..

எந்த விசரன் என நான் சொல்லவில்லை:)

 

said ... (19 March, 2006 10:10) : 

//ஆனால் இந்தக் கெரியாயை தூதுவனில் எழுதும்போது பிழை விட்டுவிட்டு சயந்தனிடம் இது சரி என நிருபிக்க தனியே ஒரு பதிவு போடவேண்டியிருந்திருக்க வேண்டுமென்பதில்லை//

சரி, சரி, மன்னிப்போம். மறப்போம் அந்தக் 'கெரி'யை:)

 

said ... (20 March, 2006 15:59) : 

Hallo vasanthan ist es netter Pfosten. Ich habe auch als selben wie dieses geschrieben. Wie ist das Gehen in Australien?

 

said ... (20 March, 2006 17:16) : 

ஐயா, சயந்தன்,
ஒரு கோதாரியும் விளங்கேல.
தமிழிலயே எழுதும்.
தொடர்பு இல்லாமப் போட்டுது. மின்னஞ்சலாவது போடும்.

 

said ... (20 March, 2006 17:47) : 

சயந்தன் இப்பதான் டொச் படிக்கிறார் போல. freetranslation.com இன் படி இப்படி எழுதியிருக்கிறார்:

It is nice posts. I wrote also this as same how. How is the going in Australia?

 

said ... (20 March, 2006 21:18) : 

எழுதிக்கொள்வது: Roahan

நான் மானிப்பாயை சேர்ந்தவன்.அங்கு கெதியா என்றே பாவிக்கப்hடுகிறது.

11.44 20.3.2006

 

said ... (21 March, 2006 22:42) : 

ஐயோ.. தெரிந்த தமிழயும் தெரியாம செய்யுறதுக்கே "கெரி" "கெதி" எண்டு குழப்பிறியள். நானும் "கெதி"க்குத்தான் வாக்களிப்பேன். விட்டா, தமிழ் அகராதியிலேயே "கெரி"ய சேர்க்க வேணும் எண்டு உண்ணாவிரதப் போராட்டம் நடத்துவியள் போல இருக்கு. அதுவும், உந்த மெல்பண் குளிரில தாங்குமா?...

அது சரி, சயந்தன் எங்க, நாட்டில நல்லத சுருட்டிக்கொண்டு ஊருக்கு ஓடிட்டாரா எண்டு ஆக்கள் கேக்கினம்.

 

said ... (22 March, 2006 00:38) : 

தம்பி செந்தூரன்,
வருகைக்கு நன்றி.

சயந்தன் சுருட்டிக்கொண்டு ஓடினாரோ, சுருட்டாமல் ஓடினாரோ எண்ட பிரச்சினை இருக்கட்டும். நானும் ஆள் தாயகத்திலதான் நிப்பாரெண்டு நினைச்சுக்கொண்டிருந்தன். அண்டைக்கு அவரின்ர ஐடிக்குள்ளால டொச்சில பின்னூட்டம் வரேக்கயே ஒரு சந்தேகம் வந்திட்டுது.
பிறகு விசாரிச்சுப் பாத்தா, அம்மான் தாயகத்திலயிருந்து வேறபக்கம் பாஞ்சிட்டார்.
உங்க என்னத்தைச் சுருட்டிறாரோ, ஆருக்குத் தெரியும்.

சிலவேளை அடுத்தகட்டப் பேச்சுவார்த்தைக்குத்தான் அடுக்குப் பண்ணிறாரோ?

 

said ... (22 March, 2006 04:02) : 

//உந்த மெல்பண் குளிரில தாங்குமா?...//
அட போங்கையா.. மெல்போண் குளிரெல்லாம் ஒரு குளிரா..?

வசந்தன் அண்ணா.. எங்கு பாய்ந்தாலும் திரும்பிற இடம் அப்பிடி இப்பிடி ஒரு மாதிரியான இடம் தான். ஆகவே.. அண்ணா.. அளந்து எழுதுங்கோ..

எதைப்பற்றியெல்லாமோ எழுதுறீங்க.. எனக்கு எதைப்பற்றியும் யோசிக்கவும் நேரமிருக்காது எண்டு உங்களுக்கு தெரியும் தானே.. ஹி ஹி ஹி

பதிவாம்.. தமிழ்மணமாம்.. பின்னூட்டமாம்.. யாருக்கு வேணும்.. (இப்போதைக்கு.. பிறகு பழைய குருடி கதவை திறடி தான்.. )

 

said ... (22 March, 2006 04:05) : 

//தாயகத்திலயிருந்து வேறபக்கம் பாஞ்சிட்டார்.//

ஏனப்பா.. பாய்ஞ்சிட்டார் எண்ட சொல்லப் பாவிக்கிறீர்..?

 

said ... (23 March, 2006 12:04) : 

வசந்தன் பயப்பிட வேண்டாம். யாழ்ப்பாணத்தில் ரெண்டு வழக்குகளும் உள்ளன.

 

said ... (26 March, 2006 02:53) : 

வசந்தன் அண்ணா மட்டக்களப்பில் "டக்கெண்டு" என்று ஒரு சொல்
புழக்கத்தில் இருக்குது.அதையும் கவனிக்க.

 

said ... (26 March, 2006 10:28) : 

கலாநதி,
ஏன் மட்டக்களப்புக்குப் போவான்?

உது யாழ்ப்பாணமுட்பட எல்லா இடத்திலயும் இருக்கிறதுதான்.
("எந்த விசரன் சொன்னது, யாழ்ப்பாணத்தில டக்கெண்டு கதைக்கிறதெண்டு?" என்று பின்னூட்டம் வந்தாலும் நான் ஆச்சரியப்படப்போவதில்லை;-))

நீர் எனக்குத் தம்பியா அண்ணணா? டக்கெண்டு சொல்லும் பாப்பம்.
*************************
சாதாரணன், (நீர்தான் மலைநாடனா? அவரும், தான் சாதாரணன் எண்டுதான் தன்ர வலைப்பக்கதில எழுதி வச்சிருக்கிறார் ;-))
நான் ஏன் பயப்பிட வேணும்?
நீங்கள்வேணுமெண்டா 'கெரி'யை ஒப்புக்கொள்ளப் பயப்பட்டுக்கொண்டு 'சாதாரணன்' ஆக வந்து சொல்லலாம். நான் அப்படியில்லை கண்டீரோ?;-)
*************************
சயந்தன்,
'பாய்ஞ்சது' எண்டது 'ஆழமான' பல அர்த்தங்களைக் கொண்டது. நீர் எந்தவகையில பாய்ஞ்சனீர் எண்டது கொஞ்சநாட்களில தெரியத்தானே போகுது?

 

said ... (29 March, 2006 13:57) : 

//ஷ்ரேயா(தெரியுமோ ஆளை? முன்பொரு காலத்தில வலைப்பதிவு வச்சிருந்த சிட்னிவாசி)வைச் சயந்தன் நேர சந்திச்ச அதேநேரம் அவவோட தொலைபேசியில நான் கதைக்க வேண்டியிருந்திச்சு.//

வலைப்பதிவுப்பக்கம் வராட்டி இப்பிடிக் கவுக்கிறதோ! :oP
என்னண்டாலும் பெயரிலி போட்ட போடு!! ம்ம்..இந்தக் கோணத்தில நான் யோசிக்கேலையே!!!! (யோசிக்க வைச்சதுக்கு பெயரிலிக்கு நன்றி)

கானா பிரபாட அம்மம்மா மாதிரி எங்கட அம்மாவும் "சுறுக்கா வா" என்டு சொல்றவ.

கேந்தியைப் பற்றின ஆராய்ச்சிய இடையில விட்டிட்டீங்க. தெம்பிலி(தம்பிலி), உருளோசு(ஒரளோசுவ) மாதிரி அதுவும் சிங்களச் சொல். (அடைப்புக் குறிக்குள்ள இருக்கிறது சிங்களம்.)

 

said ... (29 March, 2006 14:05) : 

வாங்கோ வாங்கோ,
அதுதான் நீங்கள் கும்பகர்ண நித்திரையிலயிருந்து எழும்பீட்டியளெண்டு தெரிஞ்சுபோச்சே.

உந்த தம்பிலி, உருளோசு எண்டதுகள நான் இப்பதான் கேள்விப்படுறன்.
(நாங்கள் 'அலுக்கோசு' எண்டு சொல்லுறதுதான் உருளோசோ?)

உந்த ரெட்டைவேடம், பிளவாளுமை பற்றியெல்லாம் இனிக் கதைக்கிறதாயில்லை. அதெப்படி முன்னால இருக்கிற ஒருத்தன் பேசாம இருக்க, அதேஆள் தொலைபேசியில பேசலாமெண்டதை நீங்கள் தான் சொல்ல வேணும்.

 

said ... (29 March, 2006 14:14) : 

"புட்டுவ" சாப்பிட்ட கதைதான் போல. (என்ன கதையெண்டு கேட்காதீர், 30% - 40%தான் ஞாபகமிருக்கு)

//முன்னால இருக்கிற ஒருத்தன் பேசாம இருக்க, அதேஆள் தொலைபேசியில பேசலாமெண்டதை நீங்கள் தான் சொல்ல வேணும்.//
அதெல்லாம் எனக்குத் தெரியாது, இப்பத்தான் நித்திரையால எழும்பியிருக்கிறன், கோப்பி குடிச்சிட்டு வாறன் யோசிக்க!

 

said ... (08 November, 2009 16:05) : 

முள்ளியவளையில் நாங்கள் கெரியா, டக்கென்று, சுறுக்கா பேன்ற சொல்லுகளைப் பாவிக்கிறனாங்கள்.

 

post a comment

© 2006  Thur Broeders

________________