Saturday, March 15, 2008

கேள்விக்குறி - கவர்ந்த தமிழ்த் திரைப்படம்

கேள்விக்குறி என்ற தமிழ்த் திரைப்படமொன்றை அண்மையில் பார்க்கக் கிடைத்தது. சிலவிதங்களில் என்னை அது கவர்ந்திருந்தது.
ஆனால் இப்படம் அதிகம் பேசப்பட்டதாகத் தெரியவில்லை. வலைப்பதிவுகளில் இப்படம் பற்றி ஒரிடுகைகூட வந்திருக்கவில்லையென்றே கருதுகிறேன்.

அதிகம் பேசப்படாமற்போன ஒருபடம். ஆனால் தமிழ்ச்சினிமாவில் அண்மையில் வந்தவற்றுள் கவனிக்கத்தக்க படம் என்றே கருதுகிறேன்.

படத்தில் காதல் இல்லை; நகைச்சுவை நடிகர்கள் இல்லை; நகைச்சுவைக்கென தனியான காட்சிகளில்லை; வில்லன் என்று தனியாக ஒருவனில்லை. நாயகன் தனியாக பத்துப்பதினைந்து பேரை பறந்துபறந்து அடிக்கும் காட்சிகளில்லை. நடனங்கள் இல்லை; ஏன் பாடல்களே இல்லை.

ஒரேயொரு பாடல் படத்தின் இறுதிப் பாகத்தில் வருகிறது. அதுகூட கதைக்குத் தேவையான சந்தர்ப்பத்தில் வருவதாகவே கருதவேண்டும். கணவனுக்கும் மனைவிக்குமிடையிலான நெருக்கத்தை, அன்பை, காதலைச் சொல்ல வேண்டிய ஒரு சந்தர்ப்பத்தில் அப்பாடல் வருகிறது. அதைக்கூட பாடலில்லாமல் வேறு முறைகளில் காட்டியிருக்கலாமென்பது எனது கருத்து.

தமிழிலே இப்படியொரு படத்தை எடுத்திருக்கிறார்கள் என்பது வியப்புத்தான். (அண்மையில் பாடல்களேயில்லாமல் 'அசோகா' என்றொரு தமிழ்ப்படமும் வந்ததைக் குறிப்பிடத்தான் வேண்டும்.)

படத்தின் நாயகன் ஒரு குடும்பத்தலைவன். வில்லன் என்று சொல்ல வேண்டுமானால் காவல்துறையைச் சொல்லலாம்.

படமானது முக்கியமான சிக்கலொன்றை கேள்விக்குட்படுத்துகிறது. அது 'விசாரணை முறை'. படத்தின் அடிநாதமே காவல்துறையினரின் விசாரணை முறைகள் மீதான கேள்விதான். அதை மையமாக வைத்துத் திரைக்கதை பின்னப்பட்டுள்ளது.

படத்தின் இறுதிக்கட்டத்தில் நாயகன் சொல்வான்:
"விசாரணை என்பது அறிவு தொடர்பானது. குற்றங்களையும் குற்றவாளிகளையும் கையாள்வதும் விசாரணை செய்வது அறிவுபூர்வமாக இருக்க வேண்டும். மிருகத்தனமாக எல்லோரையும் போட்டு அடித்து நொருக்குவதற்குப் பெயர் விசாரணை இல்லை. பலர்கூடி பலகோணங்களில் விசாரித்து, தகவல்கள் திரட்டி, அலசி ஆராய்ந்து முடிவுக்கு வருவதுதான் விசாரணை"

மிகமுக்கியமான விவாதமொன்றை எழுப்பியிருக்க வேண்டிய படமானது எதுவுமின்றி படுத்துவிட்டது. திரைப்படத்திலும் இவ்விடயத்தைச் சரியான முறையில் அழுத்தமாகச் சொன்னார்களா என்பதில் எனக்கு ஐயமுண்டு. 'தமிழ்ப்படம்' பார்க்கிறோம் என்ற உணர்வைக் கழற்றிவைத்துவிடும் ஒருவசதி தேவையென்பதும் முக்கியம்.

இத்திரைப்படத்தில், எதைச்சொல்ல வந்தார்களோ, அதை மட்டும் சொல்கிறார்கள். தேவையற்ற அலட்டல்களில்லை.

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
காவல்துறையின் தலைமை அலுவலர் ஒருவரின் வீட்டினுள் புகும் நாயகன் அங்குள்ளவர்களைப் பணயக் கைதியாக்குவதோடு படம் தொடங்குகிறது.
தலைமை அலுவலரைக் கட்டிவைத்துவிட்டு தேவையானவர்களை அங்கு வரவழைத்து நாயகனே விசாரணை செய்கிறான். படம் முழுவதும் விசாரணைதான். விசாரிக்கப்படும் ஒவ்வொருவரினதும் வாக்குமூலங்கள் காட்சிகளாகக் காட்டப்படுகின்றன.
அப்படி என்னதான் விசாரிக்கிறான்?

குற்றவாளி ஒருவனைப்பற்றி விசாரிப்பதற்காக கணவனும் மனைவியும் காவல் நிலையத்துக்கு அழைக்கப்படுகிறார்கள். இருவரையும் பிரித்துவைத்து விசாரிக்கிறார்கள். கணவனை மிகுந்த சித்திரவதை செய்கிறார்கள். மறுநாள் அவனை விடுவிக்கிறார்கள். ஆனால் மனைவிக்கு என்ன நடந்ததென்று தெரியவில்லை. மனைவி குற்றவாளியுடன் ஓடிவிட்டாள் என காவல்துறை
தரப்பிற் சொல்லப்படுகிறது. என்ன நடந்ததென்று எதுவுமே தெரியாதநிலையில்தான் நாயகன் தலைமை அலுவலரின் முன் தனது விசாரணையைத் தொடங்குகிறான்.

இறுதியில் என்ன நடந்ததென்று தெளிவாகிறது. அதற்குள் அவ்வீட்டை சிறப்புப்படை சுற்றிவளைத்துவிடுகிறது. நாயகன் காவற்றுறை அமைச்சரிடம் சில கோரிக்கைகளை முன்வைக்கிறான். அவற்றுள் முதன்மையானது எல்லாக் காவல்நிலையங்களிலும் வீடியோ கண்காணிப்பு இருக்க வேண்டுமென்பது.

கோரிக்கை நிறைவேற்றப்படுகிறதா இல்லையா என்று தெரிவதற்கிடையில் சிறப்புப்படை படத்தை முடித்துவிடுகிறது.

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
விமர்சனங்கள் இல்லாமலில்லை. விசிலடிச்சான் குஞ்சு மனப்பான்மையோடு சில காட்சிப்படுத்தல்கள் உள்ளதாகப் படுகிறது. நாயகனிடம் அடிவாங்கியிருக்கும் காவல்துறையினரைப் பார்த்துப் பரவசப்படும் நபர்கள், 'என்ன இன்னும் போட்டுத்தள்ளலையா?' என்று நிமிடத்துக்கொருதரம் கேட்டு அந்தரித்துக்கொண்டிருக்கும் நபர் போன்ற பாத்திரங்கள் அதீதமானவையாகப் படுகின்றன. இருந்தாலும் இறுதிவரை படத்தின் முடிவு பற்றிய எதிர்பார்ப்பு இருந்துகொண்டேயிருந்தது. திரைக்கதை ஓட்டத்தின்படி எதுவேண்டுமானாலும் நடக்கலாம் என்பதை பார்வையாளர்களை நம்ப வைத்திருக்கிறார்கள்.

நட்சத்திர அந்தஸ்து இல்லாத நடிகர்களின் படமாதலால் கதையை விரும்பியபடி சொல்லியிருக்கிறார்கள். இல்லாவிட்டால் இப்படத்தின் இறுதிக்காட்சி வேறுமாதிரித்தான் எடுத்திருக்க வேண்டிவரும்.

படத்திலிருக்கும் வேறோர் அபத்தம் என்னவென்றால் ஏ.கே இரக துப்பாக்கியை ஒற்றைக் கையால் சுடுவது. 'றம்போ' இரகப் படங்களைப் பார்த்துக் கெட்டுப்போனாரா இயக்குநர்? ஆனாலும் அந்தக்காட்சி எந்தவிதத்திலும் உறுத்தாத அளவுக்கு திரைக்கதைப் போக்கு இருந்தது என்பது உண்மைதான்.

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
சித்திரவதை செய்து விசாரணை செய்யக்கூடாது என்ற கருத்தை விவாதப்பொருளாக வைத்து நகர்த்தப்பட்ட கதையில் நாயகனின் விசாரணை முறையும் அதேபாணியில் - அதாவது காவல்துறையினரை அடித்துத் துன்புறுத்தி விசாரிக்கும் முறையிலேயே இருக்கிறது.
அது முரணாக இல்லையா?
படத்தில் நேரடியாக அதற்குப் பதிலில்லை. பத்திரிகையாளரை வைத்து இப்படியொரு கேள்வியை எழுப்பி அதற்குரிய விளக்கத்தை இயக்குநர் கொடுத்திருக்கலாம். (அல்லது இயக்குநரிடமே அற்குரிய பதிலில்லையோ என்னவோ?)

ஆனால் காட்சிகளில் இருந்து நானொன்றை உணர்ந்துகொண்டேன். அதாவது நாயகனின் விசாரணையில் காவல்துறையினர் யாருமே உண்மை சொல்லவில்லை. எல்லோருமே தாம் தயார்ப்படுத்தி வைத்திருந்த அல்லது தான் தப்புவதற்காக அந்தநேரத்தில் தோன்றிய கதையைத்தான் சொல்கிறார்கள். கட்டித் தொங்கவிட்டு அடித்தும்கூட காவல்நிலையப் பொறுப்பதிகாரி தான் தயாரித்து வைத்திருந்த கதையை மட்டுமே இறுதிவரை சொல்லிக்கொண்டிருந்தான். உண்மை படிப்படியாக வெளிவருவது ஒவ்வொருவரும் தனித்தனியாகச் சொல்லும் முரண்பட்ட கதைகளிலிருந்துதான். அத்தோடு சம்பவம் நடந்தபோது காவல்நிலையத்தில் தடுத்துவைக்கப்பட்டிருந்த இன்னொரு கைதியின் துணையும் சேர்ந்து முழுக்கதையும் வெளிவருகிறது.

ஆக, அடித்துத் துன்புறுத்தினாலும் சரியான உண்மை வெளிவருவதற்கு உத்தரவாதமில்லையென்பதை நாயகன் காவல்துறையினரைத் துன்புறுத்துவதன் ஊடாகவும் இயக்குநர் வெளிப்படுத்தியிருக்கிறார் என்றே நான் கருதுகிறேன். ஆனால் இதை பத்திரிகையாளனைக் கொண்டு கேட்கவைத்து நாயகனைக் கொண்டு பதில் கொடுத்திருக்கலாம். (பார்ப்பது தமிழ்ப்படமாயிற்றே. இப்படி வசனங்களை வைத்துப் பேசினால் மட்டுமே புரிந்துகொள்ளும் நிலைமையிலிருக்கிறோம். நகைச்சுவையொன்றைச் சொல்லிவிட்டு அதைவிடவும் அதிகநேரம் அதைப்பற்றி விளங்கப்படுத்தி நடிக்கும் விவேக்கை 'ஜனங்களின் கலைஞன்' என்ற அடைமொழி கொடுத்து மிகச்சிறந்த நகைச்சுவையாளனாக தூக்கிவைத்த இரசிகக்கூட்டத்திடம் இப்படி திரைக்கதையிலேயே விடையைச் சொல்லும் உத்தி பலனளிக்குமோ தெரியவில்லை.) சிலவேளை இயக்குநருக்கே இப்படியெல்லாம் தோன்றாமல் தற்செயலாக அமைந்த காட்சிகளுக்கு நான்தான் புதுப்புது விளக்கம் கொடுத்துக்கொண்டிருக்கிறேனோ என்னவோ? ;-)

~~~~~~~~~~~~~~~~~~~~~~
தமிழ்ப்படங்களை விட்டு வெளியில் சென்றால் திரைப்படங்களுக்கான வகைப்படுத்தல்கள் பலவுள்ளன.
Action, Adventure, Comedy, Documentary, Drama, Horror, Romance, SciFi, Fantasy Thriller என்று பலதரப்பட்ட வகைப்படுத்தல்களுள்ளன.

இன்றைய காலகட்டத்தில் எந்தத் தமிழ்ப் படத்தையெடுத்தாலும் மேற்படி வகைகளுக்குள் தனித்தனியாக அடக்கமுடியாது. 'மசாலா' என்ற வகைக்குள் மட்டுமே அடக்கக்கூடியதாக உள்ளது. அதாவது அனைத்து வகைகளையும் கலந்துகட்டிய ஒரு பொட்டலாம்தான் மசாலா. (தமிழில் வந்த முழுநீள நகைச்சுவைப் படங்கள் சிலவற்றை மட்டும் விதிவிலக்காக 'நகைச்சுவை' என்ற வகைக்குள் அடக்கலாம்.)
மசாலா என்பதற்கு வெளியில் தனியொரு வகைப்படுத்தலுக்குள் அடக்கக்கூடியதாக மிக அருந்தலாக வந்துள்ள தமிழ்ப்படங்களில் 'கேள்விக்குறி'யும் ஒன்று.

~~~~~~~~~~~~~~~~~~~~~~


காவல்துறையின் அராஜகப் போக்கு, குற்றவாளியைக் கண்டுபிடிக்காமல் யாராவது ஒருவரைக் குற்றவாளியாக்குவதையே முதன்மை நோக்கமாகக் கொண்டு செயற்படுவது, பெண்களை நடத்தும் முறை என்பன நாளாந்தம் நாம் அனுபவித்து வரும் நிகழ்வுகளே. அந்நிகழ்வுகளையும் அவற்றால் பாதிக்கப்படும் அப்பாவிகளையும் அவர்களின் பாதிப்புக்களையும் சரியாகக் காண்பித்திருக்கிறார் இயக்குநர்.

~~~~~~~~~~~~~~~~~~~~~~~
இப்படத்தில்தான் இசையமைப்பாளருக்கான பணி சரியாகப் பொருந்திவரும். தமிழ்த்திரைப்படங்களில் இசையமைப்பவர்களுக்கு இருக்கும் முதன்மை நோக்கம் நாலு பாடல்களை வெற்றிகரமாக இசையமைத்துவிட்டால் சரி. மக்கள் எதிர்பார்ப்பதும் அதைத்தான். திரைப்பட விமர்சனங்கள்கூட இசையமைப்பைப் பற்றிய குறிப்பில் பாடல்களைப்பற்றிக் குறிப்பிடுவதோடு சரி.
உண்மையில் இசையமைப்பென்பது படத்துக்கான பின்னணி இசைதான். அதில் கவனம் செலுத்த ஏதுவான சூழ்நிலையில் அதிகம் படங்கள் வருவதில்லை. யாராவது மிக நுணுக்கமாக பின்னணி இசை கோர்த்திருந்தாலும் அதுபற்றிப் பேசப்படுவதில்லை. பாடல்கள் "மட்டுமே" இசையமைப்பாளர் ஒருவரின் தகுதியை நிர்ணயிக்கும் காரணியாகவுள்ளன.

இந்நிலையில் ஒரேயொரு பாடலை மட்டுமே கொண்ட இப்படத்தில்தான் இசையமைப்பாளரின் தேவை சரிவர உணரப்பட வாய்ப்புண்டு. அவ்வகையில் இப்படத்தின் இசையமைப்பாளர் திருப்திகரமாகவே செய்துள்ளார் எனச் சொல்லலாம்.
~~~~~~~~~~~~~~~~~~~~~~

இறுதியாக,
அண்மையில் வந்தவற்றுள் சிறந்த படமாக எனக்குத் தெரியும் தமிழ்ப்படமிது.
அதிகம் கவனிப்படாமல் போய்விட்டது.

சிறுசிறு விமர்சனங்களைத் தாண்டி இப்படியொரு முயற்சி எடுத்ததற்காகவே பாராட்டப்படவேண்டிய துணிச்சல் இது.
அந்தச் சிறுசிறு விமர்சனங்கள்கூட இப்போதிருக்கும் தமிழ்ச்சினிமா ஓட்டத்தில் பொருட்படுத்தத் தேவையற்றவை.

~~~~~~~~~~~~~~~~~~~~

படத்தைப் பற்றி மட்டும் எழுதியிருக்கிறேன்.

படத்தின் நாயகன் ஜெய்லானி தான் இப்படத்தின் இயக்குநரும் என அறிகிறேன்.
ஜெய்லானிக்கு உளமார்ந்த வாழ்த்து.

கமரா: கே.வி. மணி.
இசை: சத்யபிரசாத்
Photo: tamilcinema.com

Labels: , ,

எழுத்துருவைத் தெரிவுசெய்ய.
பாமினி ஆங்கில உச்சரிப்பில்

[மேலுள்ள பெட்டியில் தட்டச்சினால் கீழுள்ள பெட்டியில் ஒருங்குறிக்கு (Unicode) மாற்றப்பட்ட எழுத்துரு கிடைக்கும்]


சுரதா, கிருபாவுக்கு நன்றி


"கேள்விக்குறி - கவர்ந்த தமிழ்த் திரைப்படம்" இற்குரிய பின்னூட்டங்கள்

 

said ... (15 March, 2008 00:22) : 

படத்தில் காதல் இல்லை; நகைச்சுவை நடிகர்கள் இல்லை; நகைச்சுவைக்கென தனியான காட்சிகளில்லை; வில்லன் என்று தனியாக ஒருவனில்லை. நாயகன் தனியாக பத்துப்பதினைந்து பேரை பறந்துபறந்து அடிக்கும் காட்சிகளில்லை. நடனங்கள் இல்லை; ஏன் பாடல்களே இல்லை.//

நீர் தமிழ்ப்படம் பாத்தீர் என்பதை எங்களை நம்பச் சொல்கிறீரா ?

 

said ... (15 March, 2008 00:49) : 

>>>>>>>>>> நகைச்சுவையொன்றைச் சொல்லிவிட்டு அதைவிடவும் அதிகநேரம் அதைப்பற்றி விளங்கப்படுத்தி நடிக்கும் விவேக்கை 'ஜனங்களின் கலைஞன்' என்ற அடைமொழி கொடுத்து மிகச்சிறந்த நகைச்சுவையாளனாக தூக்கிவைத்த இரசிகக்கூட்டத்திடம் இப்படி திரைக்கதையிலேயே விடையைச் சொல்லும் உத்தி பலனளிக்குமோ தெரியவில்லை.) சிலவேளை இயக்குநருக்கே இப்படியெல்லாம் தோன்றாமல் தற்செயலாக அமைந்த காட்சிகளுக்கு நான்தான் புதுப்புது விளக்கம் கொடுத்துக்கொண்டிருக்கிறேனோ என்னவோ? ;-)
<<<<<<<,

Very True ... any where this movie is available in the web ?! i dont think this movie would be released in theatres here..

 

said ... (15 March, 2008 02:12) : 

இப்படி ஒரு படம் வந்ததே நீங்கள் சொல்லித்தான் தெரியும். CD/DVD கிடைக்கிறதா பார்க்கிறேன். வித்தியாசமான படத்தை அறிமுகப் படுத்தியதற்கு நன்றி.

 

said ... (15 March, 2008 03:09) : 

Where did you see this movie ? Any online download available ?

 

said ... (15 March, 2008 09:33) : 

வசந்தன்,
வருசக் கண்க்காய் படம் பாக்காமல் இருக்கும் என்னையும் உங்கடை விமர்சனம் இந்தப் படத்தை ஒருக்கால் பாத்தால் என்னெண்டு நினைக்க வைச்சிருக்கு. :-))

நல்ல விமர்சனம்.

/* நட்சத்திர அந்தஸ்து இல்லாத நடிகர்களின் படமாதலால் கதையை விரும்பியபடி சொல்லியிருக்கிறார்கள். இல்லாவிட்டால் இப்படத்தின் இறுதிக்காட்சி வேறுமாதிரித்தான் எடுத்திருக்க வேண்டிவரும். */

:-))

/* படத்தில் காதல் இல்லை; நகைச்சுவை நடிகர்கள் இல்லை; நகைச்சுவைக்கென தனியான காட்சிகளில்லை; வில்லன் என்று தனியாக ஒருவனில்லை. நாயகன் தனியாக பத்துப்பதினைந்து பேரை பறந்துபறந்து அடிக்கும் காட்சிகளில்லை. நடனங்கள் இல்லை; ஏன் பாடல்களே இல்லை. */

வசந்தன், என்ன மோனை சொல்லுறீர்? ஏதாவது கனவு கினவு கண்டனீரோ? :-))

 

said ... (15 March, 2008 21:12) : 

//Where did you see this movie ? Any online download available ?//

;-))))

 

said ... (21 March, 2008 20:23) : 

கொழுவி,

வருகைக்கு நன்றி.
கனகாலத்துக்குப்பிறகு வந்திருக்கிறியள்.

யாத்திரீகன், சரவணன், அனானி

அனைவருக்கும் நன்றி.

பிந்திய பின்னூட்டங்களுக்கு மன்னிக்க

 

said ... (24 March, 2008 13:16) : 

வெற்றி,
வருகைக்கு நன்றி.
பாருங்கோண்ணை கஸ்டகாலத்தை!
நீங்கள் படம்பாக்கவெண்டா வெளிக்கிட்டா அந்தப்படத்தை எடுக்கவே ஏலாமல் கிடக்கு. அனேகமாக இந்தப்படம் உங்களுக்குக் கிடைக்காமலே போகலாம்.

கானாபிரபா,

என்னத்துக்கு முப்பத்திரண்டு பல்லையும் காட்டுறீர்?
அதுசரி, நீர் படம் பார்த்திரோ இல்லையோ?
அட... நானொரு விசரன் உங்களோட தமிழ்ப்படம் பற்றிக் கதைச்சுக்கொண்டிருக்கிறன்.

 

said ... (24 March, 2008 13:25) : 

அனானி,
உங்களுக்காக tubetamil தளத்தில தேடிப்பார்த்தன். படத்துக்கு இணைப்புப் போட்டிருக்கிறாங்கள். ஆனால் ஒண்டும் வேலை செய்யுதில்லை. படம் வந்து மூண்டு மாசமாகிறதால எடுத்திட்டாங்களோ என்னவோ தெரியேல.

துளசியம்மாவும் இந்தப்படம் பற்றிக் கதைச்சதாத் தெரியேல.
அவட பக்கம் இன்னும் DVD வரேலப் போல கிடக்கு.

 

said ... (28 March, 2008 01:01) : 

Vasanthan Avargale,
Nanri!
En padathai ivvaluvu unnippaga kavanithu vimarsanam seithathu veru yarumillai.

ungalai ponra theevira cinema rasiganin manathai ooralavirku en padam thottirukkirathu ena ariyum pothu perumaiyai irukkirathu.

padathai patri neengal eluppiya sila kelvikkalukku ennidamulla pathilai innoru santharpathil tharugiren.

Anbudan
Jailani
Filmmaker.

 

said ... (19 May, 2008 00:58) : 

இயக்குநர் ஜெய்லானி,

வருகைக்கு நன்றி.
நீங்கள் உண்மையில் இயக்குநர் தானே? (வலைப்பதிவில் எதுவேண்டுமானாலும் நடக்கலாம் ;-)
உங்கள் மேலதிக விளக்கங்களை ஆவலோடு எதிர்பார்த்துள்ளேன்.

 

said ... (19 May, 2008 03:09) : 

வசந்தன், கேள்வி சரிதான்:-)
நான் இயக்குனர் தான். எனது இ-மெயில் : mjailani அட் gmail டாட் com. ஆர்குட்டில் இதெ இ-மெயிலை தேடினால் எனது பக்கம் கிடைக்கும், புகைப்படத்துடன். ஆனால் அதிலும் தில்லுமுல்லு செய்ய இயலும் என்பது வேறு விசயம்.

மீண்டும், என் படத்தை பற்றிய உங்களின் மனமார்ந்த பாரட்டுகளுக்கு நன்றி. மிகச்சில உறுத்தல்களையும் சுட்டிக்காட்ட்டியுள்ளீர்கள்.

//"நாயகனிடம் அடிவாங்கியிருக்கும் காவல்துறையினரைப் பார்த்துப் பரவசப்படும் நபர்கள், 'என்ன இன்னும் போட்டுத்தள்ளலையா?' என்று நிமிடத்துக்கொருதரம் கேட்டு அந்தரித்துக்கொண்டிருக்கும் நபர் போன்ற பாத்திரங்கள் அதீதமானவையாகப் படுகின்றன."//

இந்த படம் முழுக்க முழுக்க காவல்துறையினரால் அன்றாடம் பாதிக்கப்படும் சாமான்ய மக்களின் பார்வையில் எடுக்கப்பட்டது. அதை இன்னும் அழுத்த்தமாக்கும் நோக்கத்த்தில் தான் 'போட்டுத்தள்ளலயா' நபரின் கோபமான வார்த்தைகள் சேர்க்கப்பட்டன. ஆனால் உங்களைபோல இன்னும் சிலரும் அது எரிச்சலூட்டுவதாய் உணர்ந்து என்னிடம் சொல்லியிருக்கிறார்கள்.

//"ஏ.கே இரக துப்பாக்கியை ஒற்றைக் கையால் சுடுவது. 'றம்போ' இரகப் படங்களைப் பார்த்துக் கெட்டுப்போனாரா இயக்குநர்?"//

இது தெரிந்தே செய்த பிழை.. தவிர்க்கமுடியாத நிலை. காரனம் வேடிக்கையானது. இந்த காட்சி படப்பிடிப்பின் போது, இதற்கு முந்தைய மற்றும் அடுத்த காட்சிகள் ஏற்கனவே படமாக்கபட்டுவிட்டன.

இக்காட்சியில் நான் இரன்டு கைத்துப்பாக்கிகளுடன் வெளியெ வருவேன், கமிஷனரையும் உதவி கமிஷனரையும் மிரட்டியபடி.. இந்த நிலையில் மூன்றாவதாய் ஏ கே ரக துப்பாக்கியை பறித்து நான் சுட வேன்டிய நிலை. கமிஷனரையும் விட்டுவிடக்கூடாது. அப்போதே ஒரு விதமான காமெடியாய் தோன்றியது எனக்கு. மற்ற காட்சிகளை திரும்ப எடுத்து சரி செய்ய பொருளாதார நிலை இல்லை.ஒரு வழியாய் சமாளித்து ஒரு கையில் கைதுப்பாக்கியுடன் கமிஷனரை மிரட்டியபடி இன்னொரு கையால் ஏ கே ரக துப்பாக்கியால் சுடுவதாக எடுத்தோம்.:-)

//"சித்திரவதை செய்து விசாரணை செய்யக்கூடாது என்ற கருத்தை விவாதப்பொருளாக வைத்து நகர்த்தப்பட்ட கதையில் நாயகனின் விசாரணை முறையும் அதேபாணியில் - அதாவது காவல்துறையினரை அடித்துத் துன்புறுத்தி விசாரிக்கும் முறையிலேயே இருக்கிறது.
அது முரணாக இல்லையா?
படத்தில் நேரடியாக அதற்குப் பதிலில்லை. பத்திரிகையாளரை வைத்து இப்படியொரு கேள்வியை எழுப்பி அதற்குரிய விளக்கத்தை இயக்குநர் கொடுத்திருக்கலாம்.(அல்லது இயக்குநரிடமே அற்குரிய பதிலில்லையோ என்னவோ?)
"//
:-) என்னிடம் நீங்கள் சொன்ன அதே பதிலிருந்தது. ஆனால் அதை சொல்லவேண்டுமென அப்போது தோன்றவில்லை.

//"ஒரேயொரு பாடல் படத்தின் இறுதிப் பாகத்தில் வருகிறது. அதுகூட கதைக்குத் தேவையான சந்தர்ப்பத்தில் வருவதாகவே கருதவேண்டும். கணவனுக்கும் மனைவிக்குமிடையிலான நெருக்கத்தை, அன்பை, காதலைச் சொல்ல வேண்டிய ஒரு சந்தர்ப்பத்தில் அப்பாடல் வருகிறது. அதைக்கூட பாடலில்லாமல் வேறு முறைகளில் காட்டியிருக்கலாமென்பது எனது கருத்து."//

படம் துவக்கிய நேரத்தில் பாடல் வைப்பதாய் எண்ணமே இல்லை. ஆனால் இருவரின் நெருக்கத்தை ஒரு சிறு கவிதையாய் சொல்லவேண்டுமெனெ நினைத்திருந்தேன். அதே காட்சிகளை ஒரு பாடலின் பின்னனியில் காட்டினால் படத்தின் விளம்பரத்திற்க்கும் உதவும் என்ற கருத்து வந்த போது அது தவறாகவோ, திணிப்பதாகவோ எனக்கு தெரியவில்லை.

 

said ... (27 May, 2008 23:14) : 

இந்த படத்தை கலைஞர் தொலைக்காட்சில் ஒளிபரப்பிவிட்டார்கள் என்று ஞாபகம். படத்தின் முக்கால்வாசி நானும் பார்த்தேன் என்ற வகையில் சில கருத்துக்கள்.

நிச்சயமாக பொருளாதார உதவியுடன் பிரபலமான நட்சத்திரங்களுடன் படம் வெளிவந்திருந்தால் பரவலான பாராட்டைப்பெற்றிருக்க கூடிய படம்தான் அதில் சந்தேகமேயில்லை.

நாயகன் சிலரை வீட்டில் அடைத்து வைத்து தன் காதலியின் மரணத்துக்கு யார் காரணம் என்று கேட்கும் காட்சியிலிருந்துதான் நான் பார்க்க ஆரம்பித்தேன். மிகச்சாதாரணமான/பொருளாதாரத்தை மனதில் கொண்டு அறிமுக நடிகர்களை தேர்ந்தெடுத்ததாக இருந்தாலும் கதாநாயகியின் நடிப்பை எப்படி நடிப்பென்று ஒத்துக்கொள்ள முடியும். அவருக்கு சுத்தமாக நடிக்க வரவில்லை. அவருடைய வாயசைவுக்கும் வசனத்துக்கும் சம்பந்தமேயில்லை. விஜய் படமாக இருந்தால்கூட காட்சி பிடிக்கவில்லையென்றால் சடக்கென்று மனம் மாறுகிறது என்னத்த படம் எடுத்திருக்கான்னு அதேமாதிரி லோபட்ஜெட் படத்துக்கும் பொருந்தும். ஒருசில காட்சிகளில் நாயகனின் நடிப்பு இருந்தது அது தொடர்ந்திருக்க வேண்டும். குறிப்பாக கதவு பக்கத்திலிருந்து போலிஸ் அதிகாரியுடன் பேசும் காட்சிகள். பாராட்டவேண்டிய முயற்சிதான். சாதாரண ஆட்களிடமே கூட அசாதாரண நடிப்பு வெளிப்படுவதை பல படங்களில் நாம் காண்கிறோம். ஆனால் கதையின் மையமே கதாநாயகிமேல் விழும் வன்முறையைச் சுற்றிதான் படர்கிறது அந்த கதாநாயகி பேசும் காட்சிகளோ சவுகார்பேட்டை சேட்டுப்பெண்கள் பேசுவதுபோல் அமைந்துவிட்டது பெரும்கொடுமை.

படத்தில் காதல் இருந்தும், நகைச்சுவை இருந்து, வில்லன் இருந்தும், நாயகன் 2 கோடிபேரை தனியாளா வீழ்த்தும், நடனங்கள் இருந்தும், அட்டகாசமான பாடல்கள் இருந்தும் படங்க படு மட்டமாக ஊத்திக்கொள்கின்றன என்பதையும் மனதில் கொள்ளவேண்டும். உதாரணம் குருவி, அ.த.ம.... இன்னும் பல.

பிரபலமில்லாதவர்கள் நடித்து கதைக்கரு நன்றாக பொருந்தியிருந்தபோதும் படம் ஓடவில்லை என்றால் படத்தில் உள்ள குறைகளே அன்றி வேறு யாருமில்லை.

இயக்குனர் அடுத்த படத்தில் இக்குறைகளை களைவார் என்று நம்புவோம்.

 

post a comment

© 2006  Thur Broeders

________________