Wednesday, December 10, 2008

மரங்கள் - 3 - தேன்தூக்கி -

==============================
நான் இவ்வலைப்பதிவில் எழுதத் தொடங்கி
நான்காண்டுகள் நிறைவடைகின்றன.
இதற்காக ஓரிடுகை. ;-)

==============================

மரங்கள் - 1 - வெடுக்குநாறி
மரங்கள் -2- விண்ணாங்குகடந்த ஈரிடுகைகளிலும் முறையே வெடுக்குநாறி, விண்ணாங்கு ஆகிய மரங்கள் பற்றிப் பார்த்திருந்தோம். இப்போது 'தேன் தூக்கி' என்றொரு மரம் பற்றி கொஞ்சம் அலசலாம்.

இதன் பெயர்க்காரணம் சரியாகத் தெரியவில்லை. தேனுக்கும் இம்மரத்துக்கும் ஏதும் தொடர்பிருப்பதாகவும் தெரியவில்லை. வேறேதேனும் பெயரிலிருந்து மருவி 'தேன் தூக்கி' என்று வந்திருக்கலாம். வேறிடங்களில் இம்மரம் வேறு பெயர்களில் அழைக்கப்படவும் கூடும்.

உருவம், பயன்பாடு:
வன்னிக் காடுகளில் இம்மரம் மிக அதிகளவில் வளர்கிறது. மிகப்பெரிய மரமாக வளராது; அதேநேரம் சிறியதாகவும் இல்லாமல் இடைப்பட்ட அளவில் வளரும். சுமார் முப்பது தொடக்கம் நாற்பது அடி உயரத்துக்கு வளரும். இளம் பருவத்தில் இதன் பட்டை மஞ்சள் கலந்த மண்ணிறமாக இருக்கும். மரத்தின் உட்பாகமும் மஞ்சளாகவே இருக்கும். முற்றிய மரமாயின் தண்டின் நடுவே கோறையாக இருக்கும். காய்ந்த நிலையில் சோத்தியான மரமாகவே இருக்கும்.

பச்சையாகவே வெட்டினால் குறிப்பிட்ட காலத்துக்கு இம்மரத்தைப் பயன்படுத்தலாம். கப்புகளுக்கு இம்மரம் பயன்படுத்தப்படுவதுண்டு.
விறகுத் தேவைக்கு இது பயன்படுத்தப்படுவதில்லை.

தேன்தூக்கி மரத்தின் சிறப்பியல்பு ஒன்றுண்டு. இது தனக்குக் கீழ் எதையும் வளரவிடாது. வெயில் கிடைக்கும் இடமாயிருந்தால் புற்கள் மட்டும் பசுமையாக வளரும், மற்றும்படி வேறெந்தத் தாவர வகைகளும் இம்மரத்தின் கீழ் வளரா. இது அனுபவத்தில் கண்டது தானேயொழிய விஞ்ஞானபூர்வமான முடிபு அன்று.

வன்னியில் 'வெட்டைக்காடு' என்ற சொல்லாடல் உண்டு. வெட்டையும் காடும் எதிர்மறையான பொருளுடைய இரு சொற்கள். வெட்டை என்பது மரஞ்செடிகளற்ற வெறும் வெளியைக் குறிக்கும். பிறகெப்படி இரண்டும் சேர்ந்து ஒரு சொல்லானது?

இங்கு 'வெட்டைக் காடு' என்பது உயரிய மரங்களைக் கொண்ட அடர்ந்த காடாகவுள்ள அதேநேரத்தில் பற்றைகளையோ உயரம் குறைந்த சிறு மரஞ்செடிகளையோ -அதாவது கீழ்வளரிகளைக் கொண்டிராத காடுகளைக் குறிக்கும்.

பெரிய மரங்களைக் கொண்டிருந்தாலும் நிலப்பகுதியில் அடர்த்தியான பற்றைகளைக் கொண்ட காடுகளுமுண்டு. இக்காடுகளில் இருபது யார் தூரத்துக்கப்பால் எதையும் அவதானிக்க முடியாதிருக்கும். இவற்றில் மனித நகர்திறன் மிக மோசமாக இருக்கும். அவ்வாறன்றி, நிலமட்டத்தில் பற்றைகளின்றி வெளியாக இருக்கும் அடர்ந்த காடுகளுமுள்ளன. நூறு யார் தூரத்துக்கும் அப்பாற்கூட நன்றாக அவதானிக்கலாம். தெருவில் நடப்பதைப் போல கைவீசிக் கொண்டு நடந்து போகலாம். அதேவேளையில் வெயில் நிலத்தில் விழாதபடி மிக அடர்ந்த காடாகவும் அது இருக்கும். இப்படியான காடுகளையே 'வெட்டைக் காடு' என்ற சொல்லால் அழைப்பதுண்டு.

தேன் தூக்கி பற்றிக் கதைக்க வந்து வெட்டைக்காடு பற்றி கதைக்கத் தேவையென்ன?
தேன்தூக்கி மரங்கள் அதிகமுள்ள காடுகள் அனேகமாக வெட்டைக் காடுகளாக இருக்கும். ஏனென்றால் தேன்தூக்கியின் கீழ் பற்றைகளோ வேறு தாவரங்களோ வளரா.

வன்னியில் முத்தையன்கட்டுப் பகுதிக் காடுகள் - குறிப்பாக முத்தையன்கட்டுக் குளத்தைச் சுற்றியுள்ள காடுகள் அடர்ந்த வெட்டைக் காடுகள்.

தமக்குக் கீழுள்ளவர்களின் வளர்ச்சியைப் பாழாக்கும் அதிகாரிகளை 'தேன்தூக்கி' என்று அழைக்கலாம். ;-)

தேன்தூக்கி தொடர்பில் இன்னொரு குறிப்புண்டு.
இம்மரத்தில் ஒருவகை உண்ணி இருக்கும். (அல்லது இவ்வகை உண்ணி இம்மரத்தில்தான் அதிகமாக இருக்கும்). தனியொரு உண்ணியை வெற்றுக்கண்ணால் உடனடியாகப் பார்த்துக் கண்டுபிடிக்க முடியாதபடி மிகமிகச் சிறிய உண்ணி. கூட்டமாக ஊர்ந்தால்தான் உடனடியாகக் கண்ணுக்குத் தட்டுப்படும். தேன்தூக்கி இலைகளில் கும்பலாகக் குடியிருக்கும் இக்கூட்டம் அவ்வழியே நகரும் மனிதர் மீது ஒட்டிக்கொள்ளும். பின் உரோமங்கள் அதிகமுள்ள இடங்கள் தேடி அமர்ந்துகொள்ளும். தேவையான நேரத்தில் அவ்வப்போது கடித்துக்கொள்ளும். ஒருவர் முழுமையாக உண்ணி பொறுக்கி முடிய இரண்டு மூன்று நாட்கள் கூட ஆகலாம்.

ஆனால் தேன்தூக்கி உண்ணியின் தாக்குதலுக்கு உள்ளாவது மிக அருந்தலாகவே நடைபெறும். ஆயிரத்தில் ஒருவருக்குத்தான் அந்த அதிஷ்டம் கிடைக்கும்.

Labels: , , , ,

எழுத்துருவைத் தெரிவுசெய்ய.
பாமினி ஆங்கில உச்சரிப்பில்

[மேலுள்ள பெட்டியில் தட்டச்சினால் கீழுள்ள பெட்டியில் ஒருங்குறிக்கு (Unicode) மாற்றப்பட்ட எழுத்துரு கிடைக்கும்]


சுரதா, கிருபாவுக்கு நன்றி


"மரங்கள் - 3 - தேன்தூக்கி -" இற்குரிய பின்னூட்டங்கள்

 

said ... (10 December, 2008 13:49) : 

//ஆயிரத்தில் ஒருவருக்குத்தான் அந்த அதிஷ்டம் கிடைக்கும்.//
அந்த அதிர்ஸ்டம் உங்களுக்குக் கிடைத்ததா வசந்தன் :-)

 

said ... (11 December, 2008 08:58) : 

தேன்தூக்கி மரத்தின் சிறப்பியல்பு ஒன்றுண்டு. இது தனக்குக் கீழ் எதையும் வளரவிடாது.//

:)
மரங்களைப் பற்றி எழுதும் போது கூட பிராந்தியம் சர்வதேசியம் என்று புகுத்தித்தான் எழுதுறாங்கப்பா..

 

said ... (12 December, 2008 08:14) : 

பொடிச்சி,

வாங்கோ. கண்டு கனகாலம்.

தேன்தூக்கியிலயிருக்கிற உண்ணித் தாக்குதலுக்கு ஆளாகிற அதிஷ்டம் கிடைக்கேல; ஆனால் அந்த அதிஷ்டம் கிடைச்சாக்களோட இருந்து அவையின்ர பாடுகளைக் கண்டுகளிக்கிற வாய்ப்புகள் கிடைச்சிருக்கு.

இதைவிட சருகுண்ணி, அந்த உண்ணி, இந்த உண்ணி எண்டு இயல்பாகவே இருக்கிற ஆபத்துக்களில அடிக்கடி மாட்டுப்பட்ட அனுபவங்கள் இருக்கு.

மலையகத்தில் இரத்தம் உறிஞ்சுற அட்டை இருக்கு எண்டு யாழ்ப்பாணத்தில சொல்லக் கேட்டிருந்தோம். ஆனால் உண்மையில் அவ்வகை அட்டைகளின் தொல்லையை நாளாந்தம் வன்னியில் அனுபவித்திருக்கிறேன்.

குளத்தில் குளிக்கவோ வேறு தேவைக்கோ நீரில் இறங்கினால் இவ்வகை அட்டைகளிடம் மாட்டுப்பட நேரிடும். அணைக்கட்டுப் பக்கமாக இவற்றின் தொல்லை இருப்பதில்லை. மாறாக சதுப்பாக இருக்கும் கரைகளில் இவை அதிகம் இருக்கும். காலில் ஊர்வதோ இரத்தம் உறிஞ்சுவதோ எம்மால் உணர முடியாது. கரையேறும்போது காலில் இரத்தம் ஓடிக்கொண்டிருக்கும்.

தொடக்கத்தில் பெரிய அதிர்ச்சியாகவும் பயமாகவும் இருந்தது. பிறகு போகப்போகப் பழகிவிட்டது.

 

said ... (12 December, 2008 23:36) : 

சயந்தன்,

வருகைக்கு நன்றி.

சே!
எதையெழுதினாலும் பிராந்திய, சர்வதேசியப் பார்வையில தான் பாக்கிறாங்களப்பா.
என்ன செய்ய? உலகத்தை எங்கட எழுத்தாலயே உய்விப்போம் எண்டு கதைவிட்டு எல்லாரையும் நம்ப வைச்சுப்போட்டம்.

 

said ... (13 December, 2008 20:34) : 

தமக்குக் கீழுள்ளவர்களின் வளர்ச்சியைப் பாழாக்கும் அதிகாரிகளை 'தேன்தூக்கி' என்று அழைக்கலாம். ;-)


ம்....இயோ.....ஜயோ.....எல்லாம் பட்ட அனுபவம் போல! ம்............நடக்க்ட்டும் நடக்கட்டும்!

 

said ... (14 December, 2008 13:44) : 

Could u plz let him know!
Hi Dear Vasanthan! how is going? Good luck for u'r New Tamil voice unicode work. When are u going to realese this cute product? Can i plz have a data cd/ Software cd of u'r product??? i can spend any thing for that product. because my probolem i can speak tamil. But i can't type tamil unicode. do u know vasanthan one thing? my mother tung is English. My Grand father ""Kozhuvi" he look like a tamil genius. but i don't think abt my situation. i always follow my mother toung Enlish. But Mr "KOZUVI'' he never like english also he doesn't know how to speak english.
plz Mr Vasanthan Can i get a crak verson of u'r soft ware??? can i Downloaded from internet?? is it available at the moment??? plz reply as sooon ass.........posi.....Bye Vasanthan Uncle

 

said ... (18 December, 2008 22:22) : 

This comment has been removed by a blog administrator.

 

said ... (09 February, 2009 15:05) : 

pls visit and give feedback


http://peacetrain1.blogspot.com/

 

said ... (17 March, 2009 23:30) : 

மெல்பேண் கமல்,

வருகைக்கு நன்றி.

கொழுவியின் கொள்ளுப் பேரன்,

//My Grand father ""Kozhuvi" he look like a tamil genius. But Mr "KOZUVI'' he never like english also he doesn't know how to speak english. //
இதை நீர் சொல்லித்தான் எனக்குத் தெரியவேணுமா என்ன?

அதுசரி, உந்த "Tamil voice unicode work" பற்றி ஆர் கதைச்சது? ஏன் என்ர பேர் உதுக்குள்ள இழுபடுது? நானப்பிடியொண்டும் செய்யேலத் தம்பி. ஆரேன் நாலுலூசுகள் உப்பிடிக் கதைவிட்டுத் திரிஞ்சா அதுக்கு நானே பொறுப்பு?

முதலில உந்தக் கதயளை ஆருமக்குச் சொன்னதெண்டு சொல்லேலுமே?

 

post a comment

© 2006  Thur Broeders

________________