சங்கதி வலையிதழுக்காக ஆர்வலன் கண்ட செவ்வி.
திருமாவளவன் அவசரப்பட்டுவிட்டார் என்று மருத்துவர் இராமதாசு கூறியிருக்கிறாரே?
திருமாவளவன்: கடந்த இரண்டு மாதங்களாகவே தமிழக அரசியலில் தேர்தல் பரபரப்பு சூடு பிடிக்கத் தொடங்கிவிட்டது. தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் அனைத்தும் 2004ம் ஆண்டு நாடாளுமன்றப் பொதுத்தேர்தலிருந்தே தி.மு.க. கூட்டணியில் இடம் பெற்றுள்ளன. அப்போது தி.மு.க. கூட்டணியிலிருந்த விடுதலைச் சிறுத்தைகள். தொகுதி ஒதுக்கீடு தொடர்பாக ஏற்பட்ட முரண்பாட்டையடுத்து அக்கூட்டணியிலிருந்து வெளியேறியது என்றாலும், அ.தி.மு.க. அணி பக்கம் தாவாமல் தலித் மற்றும் இசுலாமியர்களை ஒருங்கிணைத்து 'மக்கள் கூட்டணி" என்னும் மாற்று அணியை உருவாக்கி தேர்தலைச் சந்தித்தது. அதன் பின்னர் பா.ம.க.வுடன் கைகோர்த்து. தமிழ்ப் பாதுகாப்பு இயக்கக் களத்தில் தமிழ்த் தேசிய அரசியலை முன்னெடுத்தது.
உலகத் தமிழர் பேரமைப்புத் தலைவர் பழ.நெடுமாறன் மற்றும் தமிழ்த் தேசிய உணர்வாளர்கள் பலரையும் ஒருங்கிணைத்து ஈழத்தமிழர் ஆதரவு உள்ளிட்ட பல்வேறு தளங்களில் போராடியது. தமிழ்ப் பாதுகாப்பு மாநாட்டுக்கென ஊர்திப் பயணங்களை தொடங்கி வைப்பதற்கு, தி.மு.க. கூட்டணியைச் சார்ந்த தலைவர்களான கலைஞர், வைகோ, நல்லகண்ணு ஆகியோரை அழைக்க வேண்டுமென விடுதலைச் சிறுத்தைகளே முன்மொழிந்தது. அதன்படி அழைக்கப்பட்டு அவர்கள் அதில் பங்கேற்றனர்.
இவ்வாறு கடந்த இரண்டு ஆண்டுகளாக தமிழ், தமிழர் என்னும் தமிழ்த் தேசிய அரசியல் களத்திலும் தாழ்த்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினருக்கான சனநாயக உரிமைக் களங்களிலும் விடுதலைச் சிறுத்தைகள் தனித்தன்மையோடு இயங்கிவந்தது.
குறிப்பாக. பா.ம.க.வுடன் ஏற்பட்ட நல்லுறவைப் பயன்படுத்தி பா.ம.க நிறுவனர் மருத்துவர் தமிழ்க்குடிதாங்கி இராமதாசு அவர்களின் விருப்பத்தை நிறைவேற்றும் வகையில். தி.மு.க. கூட்டணியை விடுதலைச் சிறுத்தைகள் நெருங்கி வந்தது. ஆனாலும் தி.மு.க தலைவர் கலைஞர் அவர்கள். விடுதலைச் சிறுத்தைகளோடு நல்லிணக்கமான அணுகுமுறையை கையாள விரும்பியதாகத் தெரியவில்லை. தனிப்பட்ட முறையிலோ அல்லது தி.மு.கவை பற்றியோ கடுமையான விமர்சனங்கள் எதுவும் விடுதலைச் சிறுத்தைகள் செய்திடவில்லை என்றாலும், விடுதலைச் சிறுத்தைகளுடன் ஒரு தோழமையான உறவை வைத்துக்கொள்வதில் தி.மு.க. நாட்டம் கொள்ளவில்லை.
இந்நிலையில்தான். பா.ம.க நிறுவனர் தமிழ்க்குடிதாங்கி அவர்கள் கடந்த ஓராண்டு காலமாகவே தி.மு.க. கூட்டணியில் விடுதலைச் சிறுத்தைகள் இடம் பெறவேண்டும் என்று வெளிப்படையாக கூறிவந்தார். அதற்கு தி.மு.க தலைவரிடம் இருந்து இணக்கமான பதிலேதும் இல்லை. செய்தியாளர்கள் அதுபற்றி நேரடியாக கேட்டபோதெல்லாம் பா.ம.க நிறுவனரின் கருத்தை வரவேற்க கூடிய வகையில் ஒரு போதும் கலைஞர் விடையளிக்கவில்லை. கடந்த பிப்ரவரி 4ஆம் நாளன்று அ.தி.முக. பொதுக்குழு கூடிய பிறகு தேர்தல் அரசியல் மேலும் சூடு பறக்கத் தொடங்கியது. தி.மு.க. கூட்டணியிலிருந்து ம.தி.முக. உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் வெளியேறி அ.தி.மு.க கூட்டணியில் சேரப்போவதாக வலுவான வதந்திகள் கிளம்பின. அப்போது எந்த அணியிலும் இடம் பெறாத விடுதலைச் சிறுத்தைகளும் அ.தி.மு.க அணிப்பக்கம் போகலாம் என்கிற வதந்தியும் பரவியது.
தி.மு.க அணியிலேயே இருக்கின்ற கட்சிகள் வெளியேறுவது என்பதில் சிக்கல்கள் இருக்கலாம். அவ்வாறான சிக்கல் ஏதும் விடுதலைச் சிறுத்தைகளுக்கு இல்லை. ஆனாலும்;. பா.ம.கவுடனான நட்புறவு, தமிழ்ப்பாதுகாப்பு இயக்கப் பணிகள் ஆகியவற்றுக்காக பா.ம.கவுடன் இணைந்தே இருக்க வேண்டுமென்கிற தேவையை விடுதலைச் சிறுத்தைகள் உணர்ந்திருந்தது. அந்த ஒரே காரணத்திற்காக மட்டுமே அ.தி.மு.க பக்கம் செல்ல முடியும்; என்கிற வாய்ப்பையும் விடுதலைச் சிறுத்தைகள் பயன்படுத்த முனையவில்லை. தி.மு.க அணியில் இடம் கிடைக்கும் என்பதற்காக விடுதலைச் சிறுத்தைகள் ஏங்கிக் காத்திருந்ததைப் போன்ற ஒரு தோற்றத்தை திட்டமிட்டே உருவாக்கினர்.
இந்நிலையில்தான் கலைஞர் செய்தியாளர்களிடம் பேசும் போது. 'தி.மு.க கூட்டணியில் விடுதலைச் சிறுத்தைகளைச் சேர்த்துக் கொள்ள ஆசை தான்; ஆனால், இடமில்லை" என்றதுடன். 'வேண்டுமானால். பா.ம.க தமக்கு ஒதுக்கப்படுகிற இடங்களில் விடுதலைச் சிறுத்தைகளுக்கு உள் ஒதுக்கீடு, செய்துகொள்ளட்டும்" என்று கூறினார். ஆக விடுதலைச் சிறுத்தைகளுக்கு கூட்டணியில் இடமில்லை என்பதை அவருக்கே உரிய நடையில் உறுதிப்படுத்தினார்.
அதன் மூலம், கூட்டணிக்கட்சிகளுள் ஒரு கட்சியாக இணைத்துக் கொள்வதற்கு விடுதலைச் சிறுத்தைகளுக்குத் தகுதி இல்லை என்பதையே கலைஞர் மறைமுகமாக வெளிப்படுத்தியதாக உணரமுடிகிறது. அத்துடன். பா.ம.கவும் விடுதலைச் சிறுத்தைகளும் ஒரே அணியில் இருப்பதன் மூலம் தாழ்த்தப்பட்டோரும் வன்னிய சமுதாயத்தினரும் அரசியல் ரீதியாக ஒருங்கிணைவதை கலைஞர் விரும்பவில்லை என்றே எண்ணமுடிகிறது. இவ்வாறான நிலையில்தான் விடுதலைச்சிறுத்தைகள் 'மாற்றுஅணி" என்கிற முயற்சியில் இறங்கியது.
பா.ம.கவும் விடுதலைச்சிறுத்தைகளும் தி.மு.க அணியில் ஒருங்கிணைய வாய்ப்பில்லை என்கிற நிலையில்தான். சமூக ஒற்றுமையை கருதி பா.ம.க தலைமையில் தி.மு.க. அ.தி.மு.கவுக்கு மாற்றாக தலித் மற்றும் சிறுபான்மை அமைப்பு களையெல்லாம் ஒருங்கிணைத்து மாற்று அணியை உருவாக்கிட மருத்துவர் தமிழ்க்குடிதாங்கி அவர்களுக்கு விடுதலைச்சிறுத்தைகள் வெளிப்படையான அழைப்பை விடுத்தது. உடனடியாக. மருத்துவர் தமிழ்க்குடிதாங்கி அவர்கள். 'மாற்று அணி என்ற பேச்சுக்கே இடமில்லை" என்று மறுதலித்து விட்டார்.
கடந்த சனவரி 11, பிப்ரவரி 15 ஆகிய நாட்களில் நடைபெற்ற விடுதலைச் சிறுத்தைகளின் மையக்குழுவில். 'தி.மு.க கூட்டணியே வேண்டாம்" என்று முடிவெடுத்த நிலையிலும், பா.ம.கவின் உறவுக்காக, வரவுக்காக விடுதலைச் சிறுத்தைகள் காத்திருந்தது. சனவரி 15ல் இருந்து பிப்ரவரி 27 வரை 46 நாட்கள் பா.ம.க வுக்காக காத்திருந்த பின்னரே அ.தி.மு.கவின் அழைப்பை ஏற்று கடந்த 27.2.2006 அன்று விடுதலைச்சிறுத்தைகள் அ.தி.மு.கவுடன் கை கோர்த்தது.
'விடுதலைச்சிறுத்தைகள் தி.மு.கவிடம் கெஞ்சுகிறது, பா.ம.கவின் தயவுக்கு காத்திருக்கிறது" போன்ற விமர்சனங்களையல்லாம் தாங்கிக் கொண்டு, 'கூட்டணியில் இடமில்லை பா.ம.க.வின் தொகுதிகளில் உள் ஒதுக்கீடு" என்கிற கலைஞரின் கேலி, கிண்டலையும் பொறுத்துக் கொண்டு, அ.தி.மு.க கூட்டணிக்கு செல்வதற்கான வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்கிற பதைபதைப்பே இல்லாமல் பா.ம.கவின் உறவுக்காக, தமிழுக்காக இத்தனை நாள் அமைதியாக காத்திருந்தும் கூட 'திருமாவளவன் அவசரப்பட்டுவிட்டார்" என்று மருத்துவர் தமிழ்க்குடிதாங்கி அவர்கள் ஏன் சொல்கிறார் என்று புரியவில்லை.
கூட்டணித் தலைவருக்குப் பிடிக்காமல், கொல்லைப்புறம் வழியாக கூட்டணியில் நுழைவது என்பது, விடுதலைச் சிறுத்தைகள் மற்றும் தாழ்த்தப்பட்ட தமிழர்களின் தன்மானத்திற்கு விடப்படும் சவாலாக அமையாதா? 'கூட்டணியில் இடமில்லை; உள்ஒதுக்கீடு தரட்டும்" என்று கூறிய கலைஞருக்குப் பதிலளிக்காமல் அமைதிகாத்த மருத்துவர், காலம் கடந்த எமது நிலைப்பாட்டை எப்படி அவசரம் என்கிறார்?
அ.தி.மு.க கூட்டணியில் சேர்ந்ததும் நட்சத்திர விடுதியில் செய்தியாளர்களை சந்தித்தீர்களாமே? திருமாவளவன்: கடந்த 28.2.2006 அன்று சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள பாம்குரோவ் விடுதியில் செய்தியாளர்களைச் சந்தித்தோம். அந்த விடுதி நட்சத்திர தகுதி உடையதல்ல என்பது நாட்டுக்கே தெரியும். மேலும் அந்த விடுதியில் இதற்கு முன் கடந்த 5 ஆண்டுகளாக பலமுறை செய்தியாளர்களைச் சந்தித்திருக்கிறோம்.
பொடா எதிர்ப்பு முன்னணி உருவாக்குவதற்கான கலந்துரையாடல் கூட்டம், பாப்பாப் பட்டி. கீரிப்பட்டி தொடர்பான கலந்துரையாடல் கூட்டம், கட்டாய மதமாற்றத் தடைச்சட்டம் தொடர்பான கலந்துரையாடல் கூட்டம் என்று அங்கு எத்தனையோ முறை செய்தியாளர்களைச் சந்தித்து இருக்கிறோம். விடுதலைச்சிறுத்தைகளின் அலுவலகம் மிகச் சிறிய இடம். அது, முக்கியமான பிரச்சனைகளின் போது ஏராளமான செய்தியாளர்கள் பங்கேற்பதற்கு வசதியாக இருக்காது. அதனால் அலுவலகத்திற்கு பதில் அந்த விடுதியில் செய்தியாளர்களைச் சந்திப்பது வழக்கம். ஆனால், வேண்டுமென்றே காழ்ப்புணர்ச்சி கொண்ட கும்பல், இவ்வாறு விடுதலைச் சிறுத்தைகளுக்கு எதிரான அவதூறுகளை பரப்புவதையே குறியாக கொண்டு செயல்படுகின்றனர். இதிலிருந்தே விடுதலைச் சிறுத்தைகள் போன்ற தலித் மக்களுக்கான அமைப்புகளை தமிழகத்தைச் சார்ந்த ஊடகங்கள் எப்படி மதிப்படுகின்றன என்பதை உணர்ந்து கொள்ள முடியும்.
அ.தி.மு.க கூட்டணியில் இணைந்ததனால் ஈழத்தமிழர்கள், விடுதலைப் புலிகள் தொடர்பாக இனி உங்களால் பேச முடியாது என்கிறார்களே? திருமாவளவன்: தேர்தல் கூட்டணி உடன்பாடு என்பது அரசியல் அதிகாரப் பகிர்வு தொடர்பான ஒரு இடைக்கால உறவேயாகும். ஒவ்வொரு கட்சிக்கும் வெவ்வேறு கொள்கைளும் திட்டங்களும் உண்டென்றாலும் தேர்தல் களத்தில் அவரவர் வலிமைக்கேற்ப அதிகாரத்தைப் பகிர்ந்துக்கொள்வதற்காக ஒரு உடன்பாட்டுக்கு வருவதென்பது தவிர்க்க முடியாத நிலையாகும். தேர்தல் கூட்டணியில் ஒன்று சேர்வதனால். ஒருவர் கொள்கையில் இன்னொருவர் தலையிடவேண்டும் என்கிற தேவை எழுவதில்லை. அது ஒரு நிபந்தனையாகவும் இருக்க முடியாது. அந்த வகையில் அ.தி.மு.க கொள்கைகளில் விடுதலைச் சிறுத்தைகளோ, அல்லது விடுதலைச் சிறுத்தைகளின் கொள்கைகளில் அ.தி.மு.கவோ ஒரு போதும் தலையிடுவதற்கு வாய்ப்பில்லை. கூட்டணியின் வெற்றிக்கு ஏதுவான கருத்துக்களை பேசவேண்டும் என்பது மட்டுமே கூட்டணிக் கட்சிகளுக்கிடையேயான முதன்மையான கட்டுப்பாடாக இருக்க முடியும்.
ஈழத்தமிழர் தொடர்பாக விடுதலைச் சிறுத்தைகள் எவ்வளவு உறுதிமிக்க ஈடுபாட்டைக் கொண்டுள்ளது என்பது அ.தி.மு.கவுக்கு மிக நன்றாகவே தெரியும். தேர்தல் பரபரப்பு தொடங்கிவிட்ட நிலையிலும் கடந்த பிப்ரவரி 14ம் நாள் விடுதலைச் சிறுத்தைகள் சென்னையில் ஈழத்தமிழர் பாதுகாப்பு மாநாட்டை மிகுந்த எழுச்சியோடு நடத்தியது. தேர்தல் நேரமாயிற்றே என்று விடுதலைச் சிறுத்தைகள் தயங்கவில்லை. விடுதலைச் சிறுத்தைகளின் இத்தகைய ஈடுபாட்டை அறிந்த நிலையில்தான் அ.தி.மு.க எமக்கு அழைப்புவிடுத்தது. அப்படியென்றால், ஈழத்தமிழர் விவகாரங்களில் அ.தி.மு.கவுக்கு மிகப்பெரிய அளவில் முரண்பாடு இல்லை என்றுதானே பொருளாக முடியும்? அண்மையில் கூட ஈழத்திலிருந்து தமிழர்கள் அகதிகளாக தமிழகத்தை வந்து சேர்ந்த போது. '1983ம் ஆண்டு சிங்களர்கள் நடத்திய இணவெறியாட்டத்தை இது நினைவுப்படுத்துகிறது" என்று தமிழக முதல்வர் ஜெயலலிதா கருத்து தொவித்தார். அத்துடன். 'சிங்கள அதிபர் மகிந்த ராஜபக்சே தமிழகத்திற்கு வந்தால். கறுப்புக் கொடி காட்டி எதிர்ப்போம்" என்று விடுதலைச் சிறுத்தைகள் விடுத்த அறிவிப்பு, மற்றும் பிற தமிழர் தேசிய அமைப்புகள் விடுத்த கண்டனம் ஆகியவற்றை மதிக்கிற வகையில், மகிந்த ராஜபக்சேவை வரவேற்கப் போவதில்லையென்று தெரிவித்து அவரது தமிழக வருகையை முதல்வர் தடுத்து நிறுத்தினார். எனவே, அ.தி.மு.க ஈழத்தமிழர்களுக்கு முற்றிலும் எதிரான நிலையில் இல்லை என்பதை இவற்றின் மூலம் அறிய முடிகிறது.
இந்நிலையில், கூட்டணி வெற்றிக்கு ஊறு ஏற்படாத வரையில் விடுதலைச்சிறுத்தைகளின் நடவடிக்கைகளில் அ.தி.மு.க தலையிட வாய்ப்பே இல்லை. என்றாலும் விடுதலைச் சிறுத்தைகள் தேர்தல் அரசியலுக்காக தம்முடைய நிலைப்பாடுகளையும் கொள்கை கோட்பாடுகளையும் ஒரு போதும் மாற்றிக் கொள்ளாது.
இனிவரும் காலத்தில் பா.ம.கவுடனான உறவு மற்றும் தமிழ்ப்பாதுகாப்பு இயக்கத்தின் நடவடிக்கைகள் பற்றி? பா.ம.கவும் விடுதலைச் சிறுத்தைகளும் தேர்தல் நேரத்தில் வெவ்வேறு அணிகளில் இருந்தாலும், தமிழ்ப்பாதுகாப்பு இயக்கத்தின் மூலம் மலர்ந்த நட்புறவு பாதிக்கப்பட வாய்ப்பில்லை. கடந்த ஒன்றரை ஆண்டுகளாக இரு கட்சிகளுக்கும் இடையே உருவான நல்லிணக்கம் அடிமட்டத்தில் உழைக்கும் மக்களிடையே சமூக ஒற்றுமை, மற்றும் சமுக அமைதிக்கு அடித்தளத்தை அமைத்துள்ளது. ஒருவரையொருவர் புரிந்து கொள்வதற்கான வாய்ப்பை தமிழ்ப்பாதுகாப்பு இயக்கம் வழங்கியுள்ள நிலையில், தேர்தல் நெருக்கடியினால் ஏற்பட்டுள்ள இந்த அணி மாற்றங்கள் எத்தகைய பாதிப்பையும் உருவாக்காது என்று நம்புகிறோம். பா.ம.கவும் விடுதலைச்சிறுத்தைகளும் தனித்தனியே களம் கண்டாலும், இருவரும் அதிகார வலிமைப் பெற்றவர்களாய் மறுபடியும் கைகோர்க்கும் போது, தமிழ்ப் பாதுகாப்பு இயக்கம் மேலும் கூடுதலான வலிமையைப் பெறும். ஆகவே, பா.ம.கவின் உறவோ தமிழ்ப்பாதுகாப்பு இயக்கத்தின் நடவடிக்கைகளோ எந்த சூழலிலும் முடங்கிபோகாது. என்றார். ***********************************
நன்றி: சங்கதி. ***********************************
மேற்படிச்செவ்வியில், ஜெயலலிதாவின் ஈழத்தமிழர், விடுதலைப்புலிகள் குறித்த பார்வையில் மாற்றமென்பதை என்னால் நம்பமுடியவில்லை. அது கூட்டணிக்கட்சியைப் பற்றிய திருமாவின் சமாளிப்பு என்பதே என் கருத்து.
மேலும், பா.ம.க. வுடன் உறவு முறியாது, பிரச்சினை வராது என்று சொல்வதும் நம்ப முடியாமலுள்ளது. இருதரப்பிலும் இப்போதுதான் முளைவிடத் தொடங்கியிருக்கும் நட்பும், புரிந்துணர்வும் இத்தேர்தலில் பாதிக்கப்படுமென்றே அஞ்சுகிறேன். குறிப்பாக எதிர்த்தரப்புப் போட்டியாளரை வைது, கேலி பேசி, திட்டி, தூற்றி (மட்டுமே) தேர்தல் பிரச்சாரம் நடைபெறும் - நடைபெற்றாக வேண்டிய சூழலில் உறவு பாதிக்கப்படாதென்று சொல்வது எப்படியென்று புரியவில்லை. அரசியற்றலைமைகளின் உறவு வேண்டுமானால் பாதிக்கப்படாமலிருக்கலாம். நான் கதைப்பது இரு சமூகங்களைச் சேர்ந்த மக்களைப்பற்றி. |