Thursday, February 23, 2006

கடவுளின் முதல் தோல்வி.

(காயின், ஆபேல் இருவரும் கடவுளின் முதல் மனிதப்படைப்புக்களான ஆதாம், ஏவாளின் புத்திரர்கள் என்று விவிலியக் கதை கூறுகிறது).

முதலில் ஒன்றைத் தெரிந்து கொள்ளுங்கள். காயின் கெட்டவனில்லை. கடின உழைப்பாளி. ஆனால் கோபக்காரன். உழைப்பாளிக்குக் கோபம் வருவது புதிதா என்ன? அவன் கடினமாயுழைத்துத் தானியங்களைப் பயிரிட்டு வந்தான்.

அவனது தம்பி ஆபேல் சாந்தமானவன். மந்தை மேய்த்து வந்தான். மந்தையை மேயவிட்டு கிடைக்கும் ஓய்வு நேரங்களில் புல்லாங்குழல் வாசிப்பான். வெயில் கடுமையென்றால் மரநிழலில் இருந்து இளைப்பாறுவான். அதே கொடும் வெயிலில் வயலில் வேலை செய்துகொண்டிருக்கும் காயினுக்கு, தன் தம்பி நிழலில் இளைப்பாறியபடி புல்லாங்குழல் வாசிப்பதோ யாழ் மீட்டுவதோ இனிக்குமா?
சரி இளையவன் தானே? விட்டுவிடுவோமென்றிருந்திருப்பான்.

வீட்டிற்கூட ஆபேல்மீதுதான் எல்லாருக்கும் பாசம். காயினை யாரும் கண்டுகொள்வதில்லை. வீட்டிலே இளையவன் மீது பாசம் அதிகமாயிருப்பது புதிதா என்ன? அதையும் பொறுத்துக்கொள்வோமென்றிருந்திருப்பான்.

விளைச்சலில் பத்திலொன்றைக் கடவுளுக்குக் கொடுக்க வேண்டுமாம்.
இங்கே காயின் 'சிந்திக்க'த் தொடங்கினான்.

"கடவுள் இந்தக் காணிக்கையைச் சாப்பிடப்போவதில்லை. வெறுமனே நெருப்பிலெரிந்து சாம்பலாகப் போகிறது. இதில் யாருக்கு என்ன இலாபம்? நான் கடினமாயுழைத்து விளைவித்ததை ஏன் காணிக்கையென்ற பேரிற் சாம்பலாக்க வேண்டும்? கடவுளாற் படைக்கப்பட்ட நாம் அவருக்குச் செலுத்தும் காணிக்கைதான் இது என்று தாய்தந்தையர் சொல்கின்றனரே, சரி. அதன்படியே காணிக்கை கொடுக்கலாம். அதாவது எம்மைப் படைத்துக் காத்துவரும் கடவுளுக்குரிய கூலிதான் பத்திலொன்றென்றால் ஒவ்வொரு விளைச்சல் முடிவிலும் அதைத் தாராளமாகக் கொடுக்கலாம். ஆனால் அத்தோடு கடவுளிடம் கணக்கு முடிந்துவிடுகிறதே. பிறகேன் அவரைத் துதிபாடவும், சேகவம் செய்யவும் வேண்டியுள்ளது?"

நிறைய சிந்திக்கத் தொடங்குகிறான் காயின். காணிக்கை கொடுக்க - அல்லது காணிக்கையென்ற பேரில் தானியங்களைச் சாம்பலாக்க அவனுக்கு முழுமையான விருப்பமில்லை. வெயில், மழையென்று பாராது உடலை வருத்தி உழைத்து- தான் விளைவித்த தானியம் கண்முன்னே யாருக்கும் பயனின்றி எரிந்து சாம்பலாவதை எந்த "உண்மையான" உழைப்பாளிதான் பார்த்துக்கொண்டிருப்பான்?

ஆனாலும் அவனால் மறுக்க முடியாது. "அவன்" இன்றி அணுவும் அசையாதல்லவா? அவரைச் சாந்தப்படுத்தாவிட்டால், அவர் கட்டளையை நிறைவேற்றாவிட்டால் அவனால் உயிர்வாழ முடியாதென்பதும் - வாழ்ந்தாலும் நிம்மதியாக வாழ முடியாதென்பதும் அவனுக்கு நன்கு தெரியும். கட்டளையை மீறியதால் தன் தாய்தந்தையர் படும் துன்பத்தைப் பார்த்தவனாயிற்றே. (ஏதேன் தோட்டத்திலிருந்து துரத்தப்பட்டது, பிரசவ வலி உட்பட பேருபாதைகள்)

அதனால் (விருப்பமின்றியே - அல்லது குழப்பத்துடனே) காணிக்கை செலுத்தத் தயாராகிறான் காயின். விளைச்சலில் நல்லவற்றைத் தெரிந்து பத்திலொன்பதைத் தானெடுத்துக்கொண்டு மிகுதியைக் காணிக்கையாகக் கொண்டு வருகிறான். (அல்லது காயின் மீதான புறக்கணிப்பை நியாயப்படுத்த கதைசொல்லிகள் 'நல்லவற்றைத் தானெடுத்துக்கொண்டான்' என்று இப்படிச் சொல்லியிருக்கக்கூடும்).

ஆபேலும் தயாராகிறான். தன் மந்தையில் கொழுத்தவற்றைக் கொண்டுவருகிறான்.

இருவரும் காணிக்கையைப் படைத்துவிட்டு, கடவுள் ஏற்றுக்கொள்ள வேண்டிக் காத்திருக்கின்றனர். ஆபேலின் "கொழுத்த" காணிக்கையை மட்டும் கடவுள் ஏற்றுக்கொள்கிறார். காயினின் காணிக்கை ஏற்றுக்கொள்ளப்படாமல் அப்படியே இருக்கிறது.

இப்புறக்கணிப்பு காயினுக்கு ஆத்திரத்தை மூட்டுகிறது. உண்மையில் ஆத்திரம் ஆபேல் மீதானதில்லை. அது கடவுள் மீதானது. கடவுள் மேல் ஆத்திரப்பட்டு என்னாவது? எங்கிருக்கிறாரென்றே தெரியாத "ஆனாமதேய"ப் பேர்வழியோடு எப்படிப் பொருதுவது? வருந்தியுழைத்த தன் காணிக்கை புறக்கணிக்கணிக்கப்பட்டதும், தானே தன்பாட்டில் மேய்ந்து கொழுத்த மந்தையைக் காணிக்கையாக்கின ஆபேலின் காணிக்கை ஏற்கப்பட்டதும் (காயினின் பார்வையில் சொகுசான தொழிலாகவே ஆபேலின் தொழில் இருந்திருக்கும்) அவனாற் பொறுக்க முடியவில்லை. இனி இதைவைத்தே தன்னை தாய்தந்தையுட்பட எல்லோரும் மட்டந்தட்டுவார்களென்ற எண்ணம் அவனுக்கு வந்தது. தொடர்ச்சியான பல நிகழ்ச்சிகளிலிருந்து காயின் ஒன்றை உணர்ந்து கொண்டான். அதுதான் "கடவுள் ஆபேலை மட்டும் தேர்ந்தெடுத்திருக்கிறார்".

*************************************
விவிலியத்தில் கடவுளின் "தேர்ந்தெடுப்பு" பலமுறை நிகழ்ந்திருக்கிறது. தன் ஆசீர்வதிக்கப்பட்ட இனமொன்றை உருவாக்க, குறிப்பிட்ட ஒருவரைத் தேர்ந்தெடுத்து அவருக்கூடாக சந்ததியைத் தழைக்க வைப்பார். இப்படித்தான் நோவாவைத் தேர்ந்தெடுத்ததோடு மிகுதியானோரை அழித்தார். ஆபிரகாமைத் தேர்ந்தெடுத்தவர், அவரின் மகனான ஈசாக்கை மட்டும் தேர்ந்தெடுத்தார். மற்றவரைப் "புறவினத்தார்" ஆக்கினார். (புறவினத்தாரென்றால் இறைவனால் ஆசீர்வதிக்கப்படாத அல்லது தேர்ந்தெடுக்கப்படாதவர்கள்). ஈசாக்கின் பிள்ளைகளில் யாக்கோபை மட்டும் தேர்ந்தெடுத்தார்.
இப்படித் தேர்ந்தெடுப்புக்களைச் செய்த கடவுள், ஆதாம் ஏவாளிலிருந்து அடுத்த சந்ததியில் தன் ஆசிர்வதிக்கப்பட்ட இனத்தை உருவாக்க ஆபேலைத் தேர்ந்தெடுத்திருந்தார். (இது விவிலியத்தில் நேரடியாக இல்லை.) இவ்வுண்மையைத் தெரிந்துகொண்டான் காயின்.
************************************

மிகுந்த ஆத்திரமுற்றிருந்த பொழுதொன்றில் காயின் ஆபேலைத் தனியாக அழைத்துச்சென்று கொன்று போடடான். அவன் கொன்றதற்கான துல்லியமான காரணம் கண்டுபிடிப்பது கடினமே.
உண்மையில் ஆபேல் மீதான ஆத்திரம்தான் நூறுவீதமும் காரணமா?
இல்லவேயில்லை. கடவுள் மீதான ஆத்திரத்தில் அவரின் செல்லப்பிள்ளையான ஆபேலைக் கொன்றானா?

என்ன இருந்தாலும் கடவுளின் மாபெரும் திட்டமொன்றைத் (அதுதான் 'ஆபேல் மூலம் ஆசீர்வதிக்கப்பட்ட சந்ததியை உருவாக்குவதும் - மற்றவர்களைப் புறவினத்தாராக்குவதும்') தவிடுபொடியாக்கிக் கடவுளையே அதிர்ச்சிக்குள்ளாக்கிவிட்டான் காயின். மறைந்திருக்கும் சக்தியொன்றோடு மோத அவனுக்கு இதைத்தவிர வேறுவழியில்லை. (விவிலியக் "கதையை" உண்மையென்று யாராவது நம்புவார்களாயின், ஒடுக்கப்பட்ட அல்லது புறக்கணிக்கப்பட்டவர்களின் முதலாவது எதிர்ப்பு அல்லது போராட்டமென்று இதைக் கொள்ளலாம்)

வரலாற்றில் கடவுளின் முதல்தோல்வி இதுதான்.

தான் அயர்ந்திருந்த நேரத்தில் நடந்த இத்தோல்வியோடு கடவுள் உசாராகிவிட்டார். அதன்பின் அவர் படு உசாராகச் செயற்பட்டாரென்றே நினைக்கிறேன்.

நோவாவின் பெட்டகத்தைத் தவிர ஏனையவற்றை மூழ்கடித்தது,
பாபேல் கோபுரம் கட்டி மானுடன் தன் வலிமையைப் பறைசாற்றப் புறப்பட்டபோது அவனைப் பிரித்துச் சிதறடித்தது,
தனது இன்னொரு தெரிவான சூசையைக் (இவர் யாக்கோபின் பன்னிரு புத்திரர்களில் பதினோராவது.) கொல்ல அவரது சகோதரர்கள் முயன்றபோது அவரைக்காப்பாற்றியது,
எகிப்திலிருந்து கானான் தேசம் நோக்கிய "விடுதலைப்பயணத்தில்" தன்னை வணங்காதவர்களையெல்லாம் கொன்றது,
அதன்மூலம் மக்களை வெருட்டி வைத்தது,
தேவையான நேரங்களில் போர்களை உருவாக்கி 'புறவினத்தார்களை'யோ தன் ஆசிர்வதிக்கப்பட்ட இனத்திலேயே தனக்குப் பிடிக்காதவர்களையோ அழித்தது

என்று கடவுளின் படு உசாரான நடவடிக்கைகளினூடு வரலாறு பயணிக்கிறது.

(இடையில் தன்னையொத்த கடவுளர்களோடும் பொருதும் துர்ப்பாக்கியம் வந்து சேர்ந்தது கடவுளுக்கு. அதற்கும் மானுடனையே பயன்படுத்த முடிவெடுத்தார்.)

ஆனாலும் கடவுளின் உசார் நடவடிக்கைகளுக்குள்ளும் மானுடன் வெற்றி பெறுகிறானென்றே நினைக்கிறேன். யார் கண்டது? வெற்றி பெறுபவர்களெல்லாம் கடவுளின் "தேர்ந்தெடுக்கப்பட்ட" இனத்தவர்களென்று புதிய கதையொன்று எழுதப்படலாம்.
************************************
பத்துப் பன்னிரண்டு வருடங்களின் முன் யாழ்ப்பாணத்திற் கண்ட நாடகப்படியொன்று இதன் கருமூலம்.


எழுத்துருவைத் தெரிவுசெய்ய.
பாமினி ஆங்கில உச்சரிப்பில்

[மேலுள்ள பெட்டியில் தட்டச்சினால் கீழுள்ள பெட்டியில் ஒருங்குறிக்கு (Unicode) மாற்றப்பட்ட எழுத்துரு கிடைக்கும்]


சுரதா, கிருபாவுக்கு நன்றி


"கடவுளின் முதல் தோல்வி." இற்குரிய பின்னூட்டங்கள்

 

said ... (23 February, 2006 22:13) : 

எழுதிக்கொள்வது: திரு (thiru)

வசந்தன்! இது ஒரு இனிய பதிவு. இதுவரை முதலாளித்துவம் சார்ந்து சொல்லப்பட்ட விவிலிய கதைகளின் ஆணிவேரை அசைக்கும் அரிய சிந்தனைகள்... தொடர்ந்து எழுதுங்கள். மதங்கள் சொல்லுகிற கதைகளின் முரண்பாட்டை புரிந்தால் தான் விடுதலை பிறக்கும்.12.32 23.2.2006

 

said ... (24 February, 2006 00:13) : 

//விவிலியத்தில் கடவுளின் "தேர்ந்தெடுப்பு" பலமுறை நிகழ்ந்திருக்கிறது. தன் ஆசீர்வதிக்கப்பட்ட இனமொன்றை உருவாக்க, குறிப்பிட்ட ஒருவரைத் தேர்ந்தெடுத்து அவருக்கூடாக சந்ததியைத் தழைக்க வைப்பார். //

ஆம்,தேவன் தெரிந்தெடுக்கிறார்!


உபாகமம் 14:2
நீங்கள் உங்கள் தேவனாகிய கர்த்தருக்குப் பரிசுத்தமான ஜனங்கள்; பூமியின்மீதெங்குமுள்ள எல்லா ஜனங்களிலும் உங்களையே கர்த்தர் தமக்குச் சொந்த ஜனங்களாயிருக்கத் தெரிந்துகொண்டார்.
//காயின் ஆபேல் பற்றின அந்தச் சுருக்கமான அறிமுகத்தையும் சேர்த்திருக்கலாமே.//-Vasanthan


அறிமுகம் சேர்த்தாயிற்று வசந்தன்.

நன்றி.

 

said ... (24 February, 2006 08:10) : 

// யார் கண்டது? வெற்றி பெறுபவர்களெல்லாம் கடவுளின் "தேர்ந்தெடுக்கப்பட்ட" இனத்தவர்களென்று புதிய கதையொன்று எழுதப்படலாம்.//


வெற்றி பெற்றவர்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்களாக ஆவதும்; தங்களது வெற்றியின் (சுரண்டலை, ஆக்கிரமிப்பை) குற்ற உணர்வைக் குறைக்க அதை கடவுளின் பரிசு என்றும் மற்றவர்களுக்கு கடவுளின் தண்டனை எனவும் சொல்வதும், தங்களது நலனுக்காகத் தொடுக்கும் பெரிய போர்களை கடவுளின் பெயரால், அவரது கட்டளையின் படிச் செய்வதாய்ச் சொல்வதும்...எல்லா மதத்திலும் நடப்பதுதான். இதுதான் நிறுவனப்படுத்தப்பட்ட சமயத்தின் வரலாறு; வேதம்; நடைமுறை.

பதிவுக்கு நன்றி வசந்தன்.

 

said ... (25 February, 2006 00:44) : 

திரு,
கருத்துக்கு நன்றி.

ஞானபீடம்,
நீங்கள் எடுத்துக்காட்டிய விவிலியத் துண்டுக்குள்ளால் என்ன சொல்ல வருகிறீர்களென்று தெரியவில்லை.
எனினும் ஆதாரத்துக்கு நன்றி.
உங்கள் பதிவில் விடுபட்டவற்றைச் சேர்த்ததுக்கு நன்றி.

 

said ... (28 February, 2006 10:29) : 

பரவாயில்லை. நல்லாயிருக்கு. நீளம் தான் கொஞ்சம் கூடிற்று..

 

said ... (01 March, 2006 00:46) : 

வந்து கருத்துச் சொன்னதுக்கு நன்றி செந்தூரன்.
நீளத்தைக் குறைக்க முடியாது என்றே நினைக்கிறேன்.
அதுசரி, உப்புக்கரிக்கும் கவிதைகள் என்னாயிற்று?

 

said ... (16 March, 2006 09:28) : 

எழுதிக்கொள்வது: சிறில் அலெக்ஸ்

அருமையான பதிவு வசந்தன். இப்படி ஒரு கோணம் எல்லா மதக் கதைகளுக்கும் நம்பிக்கைகளுக்கும் கொடுத்தால் சில தீர்வுகளை எளிதில் பெற முடியும்.

பலரும் தன் நம்பிக்கையின் மறுபக்கத்தை தேட மறுக்கிறார்கள்.

16.51 15.3.2006

 

said ... (17 March, 2006 06:20) : 

வசந்தன்,

காயீன் ஆபேல் கதை தெரியுமே தவிர இவ்வளவு விரிவாகத் தெரியாது.
நல்ல பதிவு.
கடவுளைப் பற்றித் தெரிந்து கொள்ள முடிந்தது!

 

said ... (17 March, 2006 08:49) : 

நன்று வசந்தன்.

கடவுள் யாரை தேர்ந்தெடுத்தாரோ இல்லையோ. கடவுள் பெயரால் தேர்ந்தெடுப்புகள் இன்றும் நம்மால் நிகழ்த்தப்படுன்றன. இன்றைய சமூகப்பிரச்சனைகளின் மூலகாரணமே இந்தத் தேர்ந்தெடுப்புகளும் அதன் விளைவான பிரிவினைகளும் தானே.

வல்லான் வகுப்பதே வரலாறு. அவற்றிலிருந்து உண்மையை உணர பல வேறு கண்ணோட்டங்கள் தேவைப்படுகின்றன.

உங்களுடையதும் நல்ல கண்ணோட்டம். நல்ல பதிவு.
சுகா

 

said ... (17 March, 2006 23:30) : 

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சுகா.

 

said ... (19 March, 2006 11:31) : 

எழுதிக்கொள்வது: jawahar

அருமையான கதை.
உத்தி அதைவிட அருமை.
புரியுமா மனிதனுக்கு?

16.19 18.3.2006

 

said ... (07 April, 2008 21:29) : 

கடவுளின் முதல் தோல்வி - ஆதாமின் கீழ்படியாமை

 

post a comment

© 2006  Thur Broeders

________________