Thursday, February 16, 2006

கவளம் - ஒரு நினைவு.

எங்கட சொந்த பந்தங்களின்ர வகைதொகையளப் பற்றி ஏற்கனவே "அம்மாச்சி"யின்ர பதிவில சொல்லியிருக்கிறன். எங்கட அம்மம்மாவின்ர மூன்றாவது சகோதரிய "சூட்டி" என்ற அடைமொழியோடு உறவுமுறையையும் சேர்த்துக் கூப்பிடுவோம். அதாவது சூட்டியக்கா, சூட்டியம்மா, சூட்டியம்மம்மா...
எனக்கு அவ 'சூட்டியம்மம்மா' எண்டாலும் அது 'சூட்டியம்மா' எண்டுதான் வாயில வரும். அதால ஒருசந்ததி முந்தியதாகக்கூடச் சொல்லலாம்.

எங்கட சொந்தத்துக்க ஏதாவது விசேசமெண்டா குறைஞ்சது ஓர் இரவெண்டாலும் எல்லாரும் அந்தவீட்டில தங்கிறது வழக்கம். எத்தினை நாளெண்டது விசேசங்களைப் பொறுத்து மாறுபடும். பெரும்பாலும் எல்லாரும் ஒரே கிராமத்திலதான் (சொந்த ஊரில இருக்கும் வரைக்கும்) எண்டபடியா இது வசதியாயுமிருந்திச்சு. பல நாட்கள் அப்பிடியான நேரங்களில சின்னாக்களின்ர பட்டாளம் பெரிசா இருக்கும். விளையாட்டும் கும்மாளமுமாய்ப் பொழுது போகும். அந்த நாட்களில இரவுச்சாப்பாடும் அதற்கடுத்த நாள் காலைச்சாப்பாடும் பெரும்பாலும் **கவளம்** தான். அண்டைக்கு மத்தியானத்தான் கறி, சோறு எல்லாத்தையும் பிரட்டி, உருண்டையாத் திரட்டி, ஒவ்வொருவரும் வளமான கையில ஏந்திச் சாப்பிடுறதுதான் கவளம். அனேகமா அதுக்குள்ள இறைச்சியும் பருப்பும் கட்டாயமிருக்கும். மற்றக்கையில அப்பளப்பொரியலோ மிளகாய்ப்பொரியலோ இருக்கும்.

இரவு விளையாடிக்கொண்டிருக்கிற நேரத்தில எட்டரை - ஒன்பதுக்கு, "சின்னாக்கள் எல்லாரையும் சாப்பிட வரட்டாம்" எண்டொரு சத்தம் வரும். நாங்கள் உடனடியாக ஒன்றுகூடிவிடுவதில்லை. விளையாட்டின் சுவாரசியத்தைப் பொறுத்து அது மாறுபடும். பிறகு நாலைந்து வெருட்டல்களுக்குப்பிறகு எல்லாரும் வந்து விறாந்தையில் குந்துவோம். அப்ப ரெண்டொருபேர் - அனேகமா விடலைப்பருவத்தில இருக்கிறவை, வந்து குந்தப் பஞ்சிப்படுவினம். தாங்கள் சின்ன ஆக்கள் இல்லையெண்ட நினைப்போட இருப்பினம். பிறகு நாலு நக்கல் வேண்டிக்கொண்டு வந்திருப்பினம்.

தனிய சின்னாக்கள் மட்டும்தான் எண்டில்ல, பெரிய ஆக்களும் சிலவேளை வந்து கவளத்துக்குக் குந்துவினம். எப்பிடியும் பதினைஞ்சு பேர் ஒரு பந்திக்கு வந்திடுவினம். பந்தியெண்டாப்போல வரிசையா இருக்கிறேல. கும்பலா இருப்பம். குந்திலயோ, குத்தியிலயோ இருக்கலாம். எழும்பிவந்து கவளத்தை வாங்கிக்கொண்டு போனால் சரி. இந்தக் கவளத்தைத் திரட்டித்தாறது எங்கட 'சூட்டியம்மா'தான் ("சூட்டியம்மம்மா" தான் சரியான சொல் எண்டாலும் நடைமுறையில நான் கூப்பிட்ட சொல்லையே இனி வாற இடங்களில பாவிக்கிறன்). நானறிய சூட்டியம்மா தவிர்ந்து வேற ஆக்கள் இப்பிடியான நேரங்களில கவளம் திரட்டி நான் பார்த்ததில்லை. அவதான் கவளம் திரட்ட வேணுமெண்டது எழுதப்படாத விதி. அவவுக்குப் பெரிய உடம்பு. பெரிய சருவச்சட்டியில எல்லாத்தையும் குழைச்சுக் கொண்டு வந்து இருந்தாவெண்டா எல்லாரும் சாப்பிட்டு முடியத்தான் எழும்புவா. இப்பவும் அவ குந்தியிருந்து கவளம் திரட்டுறது மனசுக்க நிக்குது.

கவளத்தின்ர அளவு ஆக்களுக்கேற்ற மாதிரி மாறுபடும். சூட்டியம்மா ஆகப்பெரிசா திரட்டிற கவளம் ஒருநேரச்சாப்பாட்டுக்குக் காணும். நாங்களெல்லாம் வேலியில நிக்கிற பூவரசில நல்ல பெரிய இலையாப் பாத்துப் பிடுங்கி அதைக் கையில வைச்சு அதிலதான் கவளம் வாங்கிச் சாப்பிடுறது வழக்கம். கவளம் கொஞ்சம் ஈரப்பதனா இருந்தா விரல் இடைவெளியளுக்கால ஒழுகும் எண்டதால இப்படியொரு ஏற்பாடு. ஆனா வடிவாச்சாப்பிட்டா கைகழுவ வேண்டிய தேவையிராது. என்ர ஞாபகத்தில பூவரசமிலையும் கவளமும் பிரிக்க முடியாதவை.

**************************************
கவளம் திரட்டிச் சாப்பிடுறது மிக அலாதியானது. நான் நாளாந்தம்கூட கவளம் திரட்டிச் சாப்பிட்டிருக்கிறேன். விடுமுறை நாட்களில் அம்மம்மா வீட்டில் எனக்கென்றே பழங்கறியும் சோறும் இருக்கும். ஒரு பிரட்டுப் பிரட்டி அம்மம்மா தாற கவளத்தை, சுட்ட 'சீலா'க் கருவாட்டோடை சாப்பிட்ட சுகம் தனி.
*************************************

இடம்பெயர்ந்து மானிப்பாய் வந்திருந்தோம். வந்த புதிதில் இரவு நேரத்தில் மத்தியானத்தான் சோறு கறிகளைப் பிரட்டி கவளமாக அம்மா தர, அப்பளப் பொரியலோடு சாப்பிடுவது வழக்கம். இது, அம்மாவுக்குச் சமைக்கப் பஞ்சியெண்டதால இல்லை. அது எங்களுக்குப்பிடிச்சிருந்திச்சு. அப்ப நானும் தங்கச்சியவையும் பக்கத்து வீட்டுக்காரரோட இரவு முத்தத்திலயிருந்து கதைக்கிறது வழக்கம். ஒருநாள்,

"இரவு என்ன சாப்பாடு?" எண்டு கேட்டீச்சினம்.
"கவளம்" எண்டு தங்கச்சி சொன்னாள்.
அடுத்த இரவும் அதே கேள்வி - அதே பதில்.

அடுத்த நாள் காலமை எங்கட அம்மாவிட்ட அந்த வீட்டுக்கார அம்மா வந்தா.
"இஞ்ச... நிங்கள் செய்யிற அந்த இரவுச்சாப்பாடு எப்பிடிச் செய்யிறதெண்டு ஒருக்காச் சொல்லித்தாறியளே?"
"என்ன சாப்பாடு?"
"அதுதான் கவளமோ... கிவளமோ..."

அம்மாவுக்கு அப்பதான் பிரச்சினை விளங்கீச்சு. பிறகு அவைக்கு விளங்கப்படுத்தினா. கவளம் எண்ட சொற்பாவனை எல்லா இடத்திலயும் இல்லையெண்டது அப்பதான் எனக்கு விளங்கீச்சு.
*************************************

நீண்டகாலத்தின்பின் சொந்தக்காரர் பலர் சந்தித்த ஒரு கொண்டாட்டமது. 2004 ஆம் ஆண்டின் தொடக்கம். கொழும்பு தொடக்கம் பல இடங்களிலிருந்தும் குடும்பத்தோடு எல்லாரும் யாழ்ப்பாணம் வந்திருந்தார்கள். அதற்கு முன் பார்த்திராத பல முகங்கள். மழலைப் பட்டாளங்களை இன்னாரின் பிள்ளைகள் என்று அறிமுகப்படுத்தினார்கள். பத்துவருடத்தில் புதிதாக வந்த பல சொந்தங்களை அப்போதுதான் பார்த்தேன்.
வழமைபோலவே இரவும் வந்தது.

"பவளம் மாமி எல்லாரையும் சாப்பிட வரட்டாம்"
என்று 3 வயதுப் பிள்ளையொன்று எல்லோரையும் அழைத்தது.
"யாரது பவளம் மாமி? எனக்குத் தெரிந்து யாருமில்லையே? "
என்று நினைத்தபடி முற்றத்துக்கு வருகிறேன். அங்கே அதே சூட்டியம்மா சருவச்சட்டியோடு கவளம் திரட்டியபடி. அவவைச் சுத்தி சின்னப் பட்டாளமொன்று. அப்பதான் விளங்கிச்சு. அச்சிறுமி சொன்னது 'பவளம் மாமி' இல்லை, "கவளம் மாமி". சூட்டியம்மாவுக்கு, 'கவளம் மாமி' எண்டே பேர் வச்சிட்டுதுகள்.

சிலர் கையில Lunch sheet வைத்து அதில கவளத்தை வேண்டிச்சாப்பிட்டினம். அவையளில ஒரு பிரச்சினையுமில்லை. ஏனெண்டா பூவரசமிலை பறிக்க வேலியில்லை. அது சுத்துமதிலாகியிருந்திச்சு. இப்பிடி பட்டாளமாயிருந்து சூட்டியம்மாவிட்ட கவளம் வாங்கிச் சாப்பிட்டு ஏறத்தாள பத்து வருசமாகியிருந்திச்சு.
அண்டைக்கு நானும் ஆசைதீரக் கவளம் திரட்டிச் சாப்பிட்டன்.

கவளத்தின் அளவோ சுவையோ, திரட்டித்தரும் சூட்டியம்மாவோ, அவ குந்தியிருக்கிற நிலையோ எதுவுமே மாறவில்லை. கையிலே பூவரசமிலைக்குப் பதிலாக Lunch sheet. அவ்வளவுதான்.

எழுத்துருவைத் தெரிவுசெய்ய.
பாமினி ஆங்கில உச்சரிப்பில்

[மேலுள்ள பெட்டியில் தட்டச்சினால் கீழுள்ள பெட்டியில் ஒருங்குறிக்கு (Unicode) மாற்றப்பட்ட எழுத்துரு கிடைக்கும்]


சுரதா, கிருபாவுக்கு நன்றி


"கவளம் - ஒரு நினைவு." இற்குரிய பின்னூட்டங்கள்

 

said ... (16 February, 2006 21:32) : 

ஆஹா ஆஹா வாயூறுது:)

 

said ... (16 February, 2006 22:19) : 

அருமையான பதிவு வசந்தன். சில சமயங்களில் வீட்டில் அம்மா அப்படித் தருவதுண்டு. ஆனால் இப்படி கூட்டத்தோடு சாப்பிடுவது கொண்டாட்டம்தான்.

போன பதிவும் நன்றாக இருந்தது.

 

said ... (17 February, 2006 01:03) : 

வசந்தன்,
நல்லதொரு நனவோடையில் நடை ;-) [எதுகை மோனை சேரோணுமெண்டதுக்காண்டி]

உந்தக்கவளம் பதிவு நான் எட்டாம் வகுப்பிலை படிக்கேக்கை நடந்ததை ஞாபகப்படுத்தியிட்டுது. தமிழ் ரீச்சர் அப்பவே வயசு போன மனுசி, "உங்களுக்கெடா கவளமா திரட்டித் தீத்தினாலும் ஏறாது" எண்டு பகிடிக்கு வகுப்பைத் திட்டும். பிடிச்சுக்கொண்டமெல்லோ? அவவை வகுப்புக்கு வந்தோண்ணை, "எப்ப ரீச்சர் கவளம் தரப்போறியள்?" எண்டு கேட்டு அலுப்புக் குடுக்கத் தொடங்கியிட்டம். கடைசியிலை வருசம் முடியிற நேரத்திலை, ஒரு நாள், மனுசியின்ரை வகுப்பு முடியிற நேரம், ரீச்சரின்ரை வீட்டிலையிருந்து ரெண்டுபேர், பெரிய கிடாரத்தோடை. கறியெல்லாம் குழைச்சு சோறு. மனுசி கவளம் பிடிச்சு ஆளுக்கொண்டு எண்டு வகுப்புத் தருகுது.

 

said ... (17 February, 2006 08:58) : 

வசந்தன்,

நீங்கள் உங்கள் பதிவின் மூலம் ஊருக்குக் கொண்டுபோட்டீங்கள்.
கவளத்தைச் சாப்பிடேக்க அதுக்குள்ள ஒளிச்சிருந்து பல்லுக்குள்ள கடிபடுகின்ற
பிலாக்கொட்டைக் கறியும், எங்களூரில் சாப்பாட்டுத்தட்டாகப் பயன்படும் பலாவிலை
மணமும் சாப்பாட்டுக்கு மேலதிக சுவையாக இருப்பதும் இப்போதும் நாசியை நிறைக்குது.

நல்ல எழுத்து நடை.

 

said ... (17 February, 2006 11:44) : 

சிறிதரன், தங்கமணி,
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

 

said ... (17 February, 2006 13:57) : 

பெயரிலி,
எதுகை மோனைக்காகச் சொல்லிறதெண்டால் நீங்கள் சொல்லாமலே இருந்திருக்கலாம். (முதுகு சொறிதல் பற்றி அடிக்கடி காரசாரமாக எழுதிவிட்டு இப்படிச் செய்யலாமோ?)

உங்கட கவளக்கதை நல்ல சுவாரசியமா இருக்கே.
அந்தக் கவளத்தோடையெண்டாலும் உங்களுக்குத் தமிழ் ஏறிச்சோ என்னவோ?
உங்கட தமிழுக்கு அந்தக் கவளம் தான் காரணமெண்டால் வலையுலகில கவளம் தின்னக் கனபேர் காத்திருப்பினம். (இது முதுகு சொறிதலன்று)

 

said ... (18 February, 2006 01:34) : 

கானா பிரபா,
உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

 

said ... (18 February, 2006 03:35) : 

அருமையான பதிவு வசந்தன்!

சாப்பாட்டின் சுவை சேர்க்கும் உப்புக்காரத்தில் மட்டுமல்ல... பரிமாறும் விதமும் சமைக்கும் ஆளையும்கூட பொறுத்தது!!

உங்க ஊரு தமிழில் படிச்சது இன்னும் நல்லா இருக்கு...

 

said ... (18 February, 2006 13:35) : 

இளவஞ்சி,
வருகைக்கும் பின்னூட்டுக்கும் நன்றி.

 

said ... (18 February, 2006 15:48) : 

வசந்தன் வாயூற வைக்கின்ற பதிவு. நானும் அவ்வப்போது ஊரில் இருக்கின்றபோது கவளம் சாப்பிட்டிருக்கின்றேன். ஆனால் உங்களை மாதிரி எல்லா உறவுகள் என்று கூடி குதூகலமாய் இருந்து இல்லை :-).
....
பெயரிலி, இப்படி ரீச்சரிட்டை கவளம் கேட்டமாதிரி பக்கத்து இந்து மகளில் கல்லூரி பிள்ளைகளிடம் கேட்டு, அவையள் இந்தாரும் கவளம் எண்டு கல்லால் எறிந்தவை என்று கேள்விப்பட்டனான். உண்மையோ தெரியாது. எல்லாம் அந்த கோணேஸ்வரருக்கே வெளிச்சம்.

 

said ... (18 February, 2006 21:17) : 

எழுதிக்கொள்வது: ஈழநாதன்

கவளம் ஒரு நினைவு போட்டாச்சு பவளம் ஒரு கனவு எப்ப போடப் போறீர்.
ஈழநாதன்

18.45 18.2.2006

 

said ... (19 February, 2006 00:49) : 

டி.சே,
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
எங்களைச் சீண்டிறதில ஒரு நியாயமிருக்கு.
ஆனா பெயரிலி தரவளியளிட்டப் போய் பெட்டையள் கல்லெறிஞ்ச கதையைக் கேக்கிறது நியாயமாப் படேல.
எல்லாரும் உம்மை மாதிரி ஓட்டை வாயளோ?

 

said ... (19 February, 2006 09:15) : 

எட! உங்க பாரடா!
"ஆவி"கள் கூட என்ர பதிவில பின்னூட்டங்கள் போட வெளிக்கிட்டிட்டுதுகள்.
சிங்கைச் சிங்கனுக்குப் பவளம் மேலோரு கண் ஏன்?

 

said ... (24 February, 2006 02:52) : 

எழுதிக்கொள்வது: Snegethy

அது சரி ஆளப்பார்க்கவே தெரியுது..பெரிய கவளம் உங்களுக்குத்தான் நடுக கவளம் மாமி தாறவா போல.எங்கட வீட்டில துவசம் என்றால் கட்டாயம் கவளச்சோறு கிடைக்கும்.இறைச்சி ஒருநாளும் வராது.:-)

11.17 23.2.2006

 

said ... (24 February, 2006 10:44) : 

அது சரி ஆளப்பார்க்கவே தெரியுது..பெரிய கவளம் உங்களுக்குத்தான் நடுக கவளம் மாமி தாறவா போல.எங்கட வீட்டில துவசம் என்றால் கட்டாயம் கவளச்சோறு கிடைக்கும்.இறைச்சி ஒருநாளும் வராது.:-)

 

said ... (13 March, 2006 21:10) : 

அடடா, சினேகிதி,
என்ன கனநாளாக் காணேல.
படிப்பெல்லாம் எப்பிடிப் போகுது.
பல்கலைக்கழகக் கணிணியிலயிருந்து பதிவு போடாட்டி நீங்களெல்லாம் படிக்கிறதில துளிப்பிரியோசினமுமில்லை.

 

said ... (29 March, 2006 14:06) : 

பிந்திப் பிந்தி வந்து பின்னூட்டம் போடுறன்!! :O)

கவளத்தை மட்டக்களப்புப் பக்கம் படையல் எண்டும் சொல்றவை. படையல் எண்டுற சொல் இதே அர்த்தத்தில யாழ்ப்பாணப்பக்கம் புழக்கத்தில இருக்கா?

 

said ... (29 March, 2006 14:11) : 

படையல் எண்டா மதத்தோட சம்பந்தப்பட்டிருக்கு.
கடவுள்களுக்குப் படையல் வைப்பதைவிட,
இறந்து போனவர்களுக்குப் படையல் வைப்பதுமுண்டு.
ஆனால் கவளத்தைப் 'படையல்' எண்டு பாவிச்சு நானறியேல.
***************************
என்ன இப்பதான் எல்லாம் தூசிதட்டி வாசிக்கிறியள் போல?

 

said ... (29 March, 2006 14:35) : 

தட்டின தூசில தும்மித்தும்மி மூளை கலங்கீட்டுது. குழையல் என்டுறதுக்குப் பதிலா படையல் என்டிட்டன்!!

சரி, படையலுக்குக் கேட்ட கேள்வியை இப்ப குழையலுக்குக் கேட்கிறன், சொல்லும்.

 

said ... (29 March, 2006 14:39) : 

குழையல் எண்டு குழைக்கப்பட்ட சோற்றைச் சொல்வதுண்டு. ஆனால் அது உருண்டையாகத் திரட்டப்பட்ட குழையலைக் குறிப்பதில்லையென்றே நினைக்கிறேன். யாழ்ப்பாணத்தில் குழையல் என்று அந்தச் சோற்றுருண்டையைச் சொல்லும் இடங்கள் இருக்கக்கூடும். (கவளம் என்று சொல்லாத ஊர்களுள்ளதைப்போல). அப்படித் தெரிந்தவர்கள் யாராவது சொல்ல வேண்டும். அதுசரி, நீங்கள் எந்த இடத்தைப் பிதிநிதித்துவப் படுத்துகிறீர்கள்? மட்டக்களப்பு? பதுளை? கொழும்பு? சுத்தமாக யாழ்ப்பாணம் இல்லைப்போல?

 

said ... (29 March, 2006 14:40) : 

//பிதிநிதித்துவப் படுத்துகிறீர்கள்? //

பிரதிநிதித்துவம்.

 

said ... (29 March, 2006 17:07) : 

//அதுசரி, நீங்கள் எந்த இடத்தைப் பிதிநிதித்துவப் படுத்துகிறீர்கள்? மட்டக்களப்பு? பதுளை? கொழும்பு? சுத்தமாக யாழ்ப்பாணம் இல்லைப்போல//

குறிப்பா இதுதான் இடமெண்டு பிரநிதித்துவப்படுத்தேல. ஆனா யாழ்ப்பாணம் போனதெல்லாம் விடுமுறைக்கு மட்டுமே எண்டபடியா கட்டாயமா யாழை பி.நி.படுத்தேல.

மட்டக்களப்பிலேயும் கொழும்பிலயும் நிறைய நாள் இருந்ததால அந்த இடத்துச் சொல்லுகள்/ வழக்குகள்(முக்கியமா மட்டக்களப்பு) ஓரளவு தெரியும்.

இப்பிடித்தான் ஒருக்கா ஆரோ நான் துலைச்ச சாமானைப் பற்றிக் கேட்க நான் சொன்னன் "அது காணாமத்துப் போய்ட்டுது" (எழுத்துப்பிழைகளில்லை) என்று. கேட்ட ஆளோ யாழ்வாசி. "இதெந்த ஊர்ப்பாசை..கொழும்பா?" என்டு கேட்டுப் பகிடி பண்ணத் தொடங்கிட்டார். இந்தச் சொல் என்னுடைய மட்டக்களப்பு அகராதியிலிருந்து.

என் விளக்கம்: காணாமல் அற்றுப் போய்விட்டது = காணாமல் அத்துப் போய்விட்டது (றகரம் தகரமாய்த் திரிவது) = காணாம அத்துப் போய் விட்டது = காணாமத்துப் போய்ட்டுது.

சரியென நினைக்கிறீரா? இது உமக்கு(ம்) புதுச் சொல்லா?

 

said ... (29 March, 2006 18:23) : 

இல்லை. எனக்குப் புதுசில்லை. நான் பாவிக்கிறேலயே ஒழிய, சொற்பயன்பாடுகள் தெரியும். (எல்லாம் வன்னி தந்ததுதான்.)
மட்டக்களப்பிற்கூட எழுவான்கரைக்கும் படுவான்கரைக்கும் நிறைய வித்தியாசம். இங்கே இருக்கும் சிலர் எழுவான்கரை மட்டக்களப்பார். ஆனால் அவர்களின் கதை யாழ்ப்பாணக் கதையிலிருந்து பெரிதும் வேறுபடவில்லை. நானறிந்து வைத்திருந்த மட்டக்களப்புத் தமிழில் அவர்கள் கதைப்பதில்லை. அவர்களிடம் விசாரித்துத்தான் அறிந்துகொண்டேன். நான் இவ்வளவுநாளும் நினைத்து வைத்திருந்த மட்டக்களப்புத்தமிழ், படுவான்கரைக்குரியதென்று. (வன்னி வந்த மட்டு - அம்பாறைப் போராளிகளிற் பெரும்பான்மையானோர் படுவான்கரை) எனக்கு நெருங்கிய உறவினர்கூட நிரந்தர மட்டக்களப்பு வாசியாக இருக்கின்றனர். அவர்கள் சொற்களைக் கையாள்கிறார்கள் (பூலி, மறுவா, மடு), ஆனால் கதையின் தொனி, நடை என்பன எம்மைப்போன்றுதான்.

 

said ... (30 September, 2006 07:32) : 

குழையல் எண்ட சொல் யாழ்ப்பாணத்தில பாவனையில் உண்டு. எங்கள் ஊரில் ஏதாவது விசேசமெண்டால் இரவில் அல்லாட்டி அடுத்தநாள் விடிய இந்தக் குழையல் நிச்சயம் இருக்கும். கஆனா இப்பிடியான விசேசங்களில ஆர் குழைச்சதெண்டு எனக்கு நினைவில இல்லை. என்ர பெரியம்மாவின் குழையலெண்டா எங்கட வீட்டில எல்லாருக்கும் நல்ல விருப்பம். அவ எப்ப வீட்ட வந்தாலும் (அவாவின் இருந்தது வேற ஊரில) அவா நிக்குமட்டும் இரவில குழையல்தான். ஆனா மரக்கறிச் சாப்பாடெண்டாத்தான் எங்கட ஊரில குழைப்பது வழக்கம். அவாவின் குழையலுக்காகவே அவாவின் வருகைய நான் எதிர்பாக்கிறனான். இப்ப கிட்டடியிலதான் அவா இறந்தவா.உங்கட பதிவு அவான்ர இழப்பின் துயரத்தை அதிகரிக்கச் செய்துள்ளது.

 

post a comment

© 2006  Thur Broeders

________________