Monday, January 21, 2008

மரங்கள் - 1 - வெடுக்குநாறி

தெரிந்த மரங்களின் பெயர்கள் சிலவற்றைத் தொகுத்து வைக்கும் நோக்கத்தோடு இது எழுதப்படுகிறது.

மரங்கள் பற்றிய அறிவு, அனுபவம் என்பன வித்தியாசமானவை. பாடப் புத்தகங்களிலும், வேறு வழிகளிலும் மரங்கள் பற்றிய அறிவைப் பெறுவது ஒருமுறை. ஆனால் மரங்களை நேரிற்பார்த்து பழகி அனுபவம் பெறுவது வேறொரு முறை. நாம் அறிபவற்றில் அனுபவிக்கக் கிடைப்பவை சிலவே. அது நாம் வாழும் அமைவிடங்களைப் பொறுத்தது.

சிலமரங்கள், வெவ்வேறு இடங்களில் வெவ்வேறு பெயர்களில் அழைக்கப்படுவதைக் கண்டிருக்கிறோம். பூக்களின் பெயர்கள் தமிழகத்துக்கும் ஈழத்துக்கும் வேறுபடுவதை வலைப்பதிவுகளில் கண்டிருக்கிறோம்.

இங்கே, மரங்களை அறிமுகப்படுத்த முடியாது. அவைபற்றிய முழுமையாக தரவுகள், படங்களுடன் இடுகையெழுத முடியாது. ஆனால் நான் பழகிய மரங்களின் பெயர்களைப் பதிந்து வைப்பது என்பதே இவ்விடுகையின் நோக்கம். இன்னும் ஈராண்டுகள் கழித்து, எனக்கே சில மரங்களின் பெயர்களை ஞாபகப்படுத்திக்கொள்வதுதான் இதன் முதன்மை நோக்கம்; மற்றவர்களுக்குப் பயன்படுமென்று நினைக்கவில்லை.

இப்படிச் செய்யவேண்டி வந்ததற்கு தலைப்பிலுள்ள 'வெடுக்குநாறி' தான் காரணம்.
இம்மரம் பற்றிய சம்பவமொன்றை அசைபோட்ட பொழுதில், அம்மரத்தின் பெயர் உடனடியாக நினைவுவர மறுத்துவிட்டது. இதென்ன கொடுமை? மிக அதிகளவில் பழகிய மரத்தின் பெயரொன்று வெறும் மூன்று வருடத்துக்குள், சடாரென்று நினைவு வராமற் போகுமளவுக்கு மங்கிவிட்டது திகைப்பாக இருந்தது. கொஞ்சம் யோசித்து பெயரை நினைவுபடுத்திக்கொண்டேன்.

சரி, இப்பிடியே போனா இன்னும் ரெண்டு வருசத்தில் மூளை மக்கிப்போன நேரத்தில இன்னும் பிரச்சினையாக இருக்குமே எண்டு நினைச்சு, அந்த நேரத்தில் உதவக்கூடிய மாதிரி எழுதி வைக்கிறதெண்டு முடிவெடுத்ததன் விளைவுதான் இவ்விடுகை.

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

யாழ்ப்பாணத்தில் இருந்தபோது அறிந்த மரங்களின் தொகை மட்டுப்படுத்தப்பட்டது. யாழ்ப்பாணத்திற் காணக்கிடைக்காத மரங்களில் நான் கேள்விப்பட்டிருந்த பெயர்கள்: பாலை, முதிரை, கருங்காலி போன்றன. இவைகள் தளபாடங்கள் மூலம் அறிந்த பெயர்கள். இவற்றில் பாலையைத் தவிர ஏனையவற்றை வன்னிக்கு நிரந்தரமாக இடம்பெயரும்வரை நேரிற் கண்ட ஞாபகமில்லை. இரண்டொருமுறை யாழ்ப்பாணத்திலிருந்து மடுத் திருநாளுக்காக வந்து போனதில் பாலைமரம் நல்ல பரிச்சயம். அவற்றைவிட வீரை, சூரை என்பவற்றைக் கேள்விப்பட்டதன்றி நேரிற் பார்த்ததில்லை.

1996 இன் தொடக்கத்தில் வன்னிக்கு வந்தபின்பு புதுப்புது மரங்கள் பலவற்றை அறியக்கூடிய வாய்ப்புக் கிடைத்தது. அவற்றிலொன்றுதான் இவ்விடுகைக்குரிய தலைப்பான 'வெடுக்கு நாறி'.

இந்தப் பெயர்வர என்ன காரணமென்று தெரியவில்லை. இம்மரத்தை வெட்டினால் ஒரு மணம் வரும், எல்லா மரத்துக்கும் வருவதைப் போலவே. ஆனால் அருவருக்கத்தக்கதாக அது இருக்காது. வெடுக்கு, நாறுதல் போன்ற சொற்களுக்கு தற்காலத்தில் நாம் கொண்டிருக்கும் பொருட்படி பார்த்தால் அது கொஞ்சம் அருவருக்கத்தக்க மணத்தைக் கொண்டிருக்க வேண்டும். ஆனால் அப்படியில்லை.

இது நெடுநெடுவென்று நேராக உயர்ந்து வளரும், கிட்டத்தட்ட தேக்குப் போல. இளம் வெடுக்குநாறிகளைப் பார்த்தால் மின்கம்பங்களாக நடக்கூடிய மாதிரித்தான் நேராக உயர்ந்து வளர்ந்திருக்கும். பின்னர் முற்றிப் பருக்கும். நாலைந்து பேர் சுற்றிநின்று கட்டிப்பிடிக்கக் கூடியளவுக்குப் பருமனான வெடுக்குநாறிகளைப் பார்த்திருக்கிறேன். ஆனால் இப்படிப் பருத்த மரங்கள் எண்ணிக்கையில் குறைவாகவே காணப்படுகின்றன. அந்த நிலைக்கு வருவதற்கு முன்பே ஏதோவொரு வகையில் இம்மரங்கள் தமது வாழ்நாளை முடித்துக்கொள்வதாகக் கருதுகிறேன்.

இதன் இலைகள் கரும்பச்சை நிறத்திலிருக்கும். இதன் பட்டை கறுப்பாக இருக்கும். கொஞ்சம் தூரத்திலிருந்து பார்த்தால் கருங்காலி மரத்துக்கும் வெடுக்குநாறி மரத்துக்கும் உடனடியாக வித்தியாசம் பிடிக்க முடியாதபடி இருக்கும். கருங்காலிக்கு பட்டை தனிக்கறுப்பாக இருக்கும். அத்தோடு சிறிய செதில்கள் போல பட்டைத் துண்டுகள் மேற்கிளம்பியிருக்கும்.
ஆனால் வெடுக்குநாறிக்கு பட்டை மேற்பரப்பு மிகமிக அழுத்தமாக இருக்கும். அத்தோடு கறுப்பினிடையே (உண்மையில் வெடுக்குநாறியின் பட்டையின் நிறத்தைக் கறுப்பென்று சொல்லமுடியாது. கறுப்பும் கடும்பச்சையும் கலந்தவொரு நிறம்) வெளிர்நிறக் கோடுகள் நெடுக்காகத் தெரியும்.

அதைவிட மரத்தின் கிளையமைப்பு வெடுக்குநாறிக்கு வித்தியாசம். நெட்டையாக நிற்கும் இள வெடுக்குநாறிகளின் கிளைகள் கற்தேக்குப் போல ஓரளவு குடைவடிவக் கிளையமைப்பைக் கொண்டிருக்கும். (ஆனால் நன்கு முற்றிப் பருத்த வெடுக்குநாறி மரம் முற்றிலும் மாறுபட்டு சாதாரண மரங்கள் போன்று காட்சிதரும்.)

சரி, வெடுக்குநாறியின் பயனென்ன எனக் கேட்டால் குறிப்பிட்டுச் சொல்லும்படி ஒன்றுமில்லை. இதிலிருந்து தளபாடங்கள் எவையும் செய்ய முடியாது. வைரமான மரமன்று. விறகுக்குக்கூட இதைப் பயன்படுத்துவதில்லை. காய்ந்தபின், அடர்த்திகுறைவாகத் தெரியும்.
ஆனால் குறுகிய கால நோக்கில் இம்மரம் அதிகளவில் பயன்படுத்தப்படுகிறது. நேராக நெடுத்து வளருவதால், அவ்வாறான கம்பங்களின் தேவையை இம்மரங்கள் நிறைவேற்றுகின்றன. அண்ணளவாக ஓராண்டு காலம்வரை இம்மரத்தைக் கொண்டு குறிப்பிட்ட பயனைப் பெறலாம். காய்ந்த பின் நிறை மிகக்குறைவாக இருப்பது இன்னொரு சிறப்பு.

அவசரமாக பதுங்கு - குழியமைக்க, கிணற்றுக்குக் குறுக்காக வளையொன்று (கப்பி கட்ட) போட, குறுகியகால வதிவிடம் அமைக்க வளையாக, தீராந்தியாக, கப்பாக என இம்மரம் பயன்படுத்தப்படுகிறது.

இவ்வின மரங்கள் வன்னிக் காடுகளில் மிகமிகச் செறிவாகக் காணப்படுகின்றன.
~~~~~~~~~~~~~~~~~~~~~
இம்மரத்தைப் பற்றிய மேலதிக தகவல்கள் தெரிந்தவர்கள், அல்லது எனது தகவல்களில் முரண்படுகிறவர்கள் பின்னூட்டங்களில் கருத்துக்களைத் தெரிவியுங்கள்.

இன்னொரு மரத்தோட அடுத்த இடுகையிற் சந்திக்கும் வரை வணக்கம் கூறி விடைபெறுகிறேன்.

நன்றி.

~~~~~~~~~~~~~~~~~~~~~

இடுகைக்குத் தொடர்பில்லாதது; டி.சேயின் பின்னூட்டத்தைத் தொடர்ந்து இப்படம் இங்கு இணைக்கப்படுகிறது.
நாயுண்ணிப் பூவின் படம். (பீநாறியும் நாயுண்ணியும் வெவ்வேறு செடிகள்)படம்: அருச்சுனா

Labels: , , , ,

எழுத்துருவைத் தெரிவுசெய்ய.
பாமினி ஆங்கில உச்சரிப்பில்

[மேலுள்ள பெட்டியில் தட்டச்சினால் கீழுள்ள பெட்டியில் ஒருங்குறிக்கு (Unicode) மாற்றப்பட்ட எழுத்துரு கிடைக்கும்]


சுரதா, கிருபாவுக்கு நன்றி


"மரங்கள் - 1 - வெடுக்குநாறி" இற்குரிய பின்னூட்டங்கள்

 

said ... (22 January, 2008 13:47) : 

நீங்க சொல்றது மெத்தச் சரி. சாபம் விடும்போது மண்ணை வாரித்தூத்தி வெறியோடு கத்திக்கூப்பாடு போடும் தாய்களை நான் பார்த்திருக்கிறேன்.

குழாயடிச் சண்டை....அப்பப்பா நம் காது ஜவ்வு கிழிந்தால் தேவலை என்று இருக்கும்.

பாட்டுக்காட்சிகள் தேவையே இல்லை. அதுபோலவே அலவுக்கு அதிகமான சண்டைக்காட்சிகளும். ஒவ்வொரு சமயம்பத்தி நிமிஷம் ஓடும் சண்டைகளைப் பார்க்கப் பொறுமை இருப்பதில்லை அவை எவ்வளவு நன்றாக கம்போஸ் செய்யப்பட்டிருந்தாலும்.

க்ரூப் டான்ஸ், குத்துப்பாட்டு எல்லாம் வெட்டுனா எந்த ஒரு தமிழ்ப்படத்தையும் ஒரு மணி நேரத்தில் பார்த்து முடிச்சுறலாம்.

ஒன்பது ரூபாய் நோட்டில் எனக்குப் பிடிக்காத ஒரு காட்சி.....பள்ளிக்கூடத்துச் சிறுமியின் தொலைபேசி இச்(-:

எல்லாம் பிஞ்சுலேயே பழுக்குதுங்கள்னு சொல்லவராரா தங்கர்?

 

said ... (22 January, 2008 13:51) : 

தவறான பதிவில் பின்னூட்டிட்டேன்(-:

அது ஒன்பது ரூபாய்க்குப் போகவேண்டியது.

 

said ... (22 January, 2008 15:28) : 

இண்டைக்கு தான் இந்த மரம் குறித்துக் கேள்விப்படுகின்றேன், நன்றாக ஆய்ந்து எழுதியிருக்கிறியள்.

இது வேற, பூநாறி மரம் வேறையா?

 

said ... (27 January, 2008 14:39) : 

எனக்கு சூரை மரம் தெரியும். நீங்கள் சொன்ன மிச்ச ஒரு மரமும் தெரியாது.

ஆமணக்கு என்றொரு மரம் (செடி?) இருக்கல்லோ..அதின்ர காயைப்பிடுங்கி உடைச்சுப் பார்த்தால் அதுக்குள் வெள்ளையும் நாவலுமா குட்டி குட்டிக் குழந்தைகள் படுத்திருக்கும் :-)) பார்த்திருக்கிறீங்கிளோ.


பிரபாண்ணா கேட்ட கேள்விக்கு என்ன பதில்? பூநாறி கேள்விப்பட்ட பெயரா இருக்கு.

 

said ... (28 January, 2008 19:31) : 

துளசி கோபால்,
உங்கள் பின்னூட்டத்தைப் படியெடுத்து சரியான இடுகையில் ஒட்டிவிட்டேன்.

வருகைக்கு நன்றி.

கானாபிரபா,
வருகைக்கு நன்றி.
வெடுக்குநாறி யாழ்ப்பாணத்தில் இல்லை.
'பூநாறி' கேள்விப்பட்ட பெயராகத் தெரிகிறது. எனினும் உடனடியாக மரம் ஞாபகம் வரவில்லை.

ஆனால் 'பீநாறி' என்ற ஒருவகை தெரியும். இது மரமன்று; ஒருவகைச் செடி. பற்றையாக வளரும். பீநாறிப் பற்றை எனச் சொல்வதுண்டு. கிட்டத்தட்ட நாயுண்ணிப் பற்றைகள் போல இருக்கும்.

பெயர்க்காரணம் சரியாகத் தெரியவில்லை.

 

said ... (28 January, 2008 19:49) : 

நன்றி வசந்தன்.

//பெயர்க்காரணம் சரியாகத் தெரியவில்லை. //


சரியாப்போச்சு :-)))))

 

said ... (29 January, 2008 12:52) : 

பதிவையே ஒரு மாதிரி தான் படித்தேன்,முதல் பின்னூட்டம் பார்த்தவுடனே நமக்கு என்னவோ ஆகிவிட்டது என்று முடிவு கட்டிட்டேன். :-))
இப்படி ஒரு மரமோ/பெயரோ நான் இதுவரை கேள்விப்பட்டதில்லை.

 

said ... (30 January, 2008 16:49) : 

/'பீநாறி' என்ற ஒருவகை தெரியும். இது மரமன்று; ஒருவகைச் செடி. பற்றையாக வளரும். பீநாறிப் பற்றை எனச் சொல்வதுண்டு. கிட்டத்தட்ட நாயுண்ணிப் பற்றைகள் போல இருக்கும்./

பூநாறியும், பீநாறியும் ஒன்றல்லவா நினைத்துக்கொண்டிருந்தேன். வெவ்வேறானதா?
http://padamkaadal.blogspot.com/2005/09/niagara-visit-aftermath.html

 

said ... (30 January, 2008 23:08) : 

சினேகிதி,
வருகைக்கு நன்றி.

ஆமணக்கு எங்கட ஊரில கடற்கரைப்பக்கம் ஏராளமாக இருந்தது.
ஆமணக்கிலயும் பலவகையள் இருக்கு. காட்டாமணக்கு (காட்டு + ஆமணக்கு) தான் எங்கட பக்கம் இருந்தது. ஆடுகளுக்கு இது ஆகாது. சாப்பிட்டால் செத்துப் போகும் என்று சொல்வார்கள். அதனாலோ என்னவோ ஆடுகள் ஆமணக்குப் பக்கம் நெருங்கா.

எங்கட ஊர்ப்பக்கம் கடற்கரையை அண்டிய பகுதி மணலிலதான் பனம்பாத்திகள் போடுறது வழக்கம். எவ்வளவு தூரமெண்டாலும் பனங்கொட்டைகளைக் காவிக்கொண்டு கடற்கரைக்குப் போய், பொதுக்காணிகளில பனம்பாத்திப் போடுவார்கள். பனம்பாத்தி போட்டபிறகு இந்த ஆமணக்குச் செடிகளைப் பிடுங்கி பாத்திக்கு மேல போட்டுவிடுவம். பாத்திகளை ஆடுகளிடமிருந்து பாதுகாக்க இந்த ஏற்பாடு.

மருத்துவத் தேவைக்காக ஆமணக்கிலிருந்து எண்ணைய் எடுப்பார்கள். ஆனால் எங்கட ஊர்ப்பக்கம் ஆமணக்கின் ஒரேயொரு பயன்பாடு, பனம்பாத்திப் பாதுகாப்புத்தான்.

பூநாறி/பீநாறி பற்றி ஏற்கனவே சொல்லிவிட்டேன். பீநாறி ஒருவகை பற்றை, மரமன்று. நாயுண்ணியைப் போன்ற பற்றை.

 

said ... (31 January, 2008 14:35) : 

துளசியம்மா,

//சரியாப்போச்சு :-)))))//

பிழையாப் போனாத்தான் பிரச்சினை.

வடுவூர் குமார்,
வருகைக்கு நன்றி.

 

said ... (01 February, 2008 12:42) : 

டி.சே,
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

//பூநாறியும், பீநாறியும் ஒன்றல்லவா நினைத்துக்கொண்டிருந்தேன். வெவ்வேறானதா?
http://padamkaadal.blogspot.com/2005/09/niagara-vis//

பீநாறி/பூநாறி இரண்டும் ஒன்றுதான் என்று நினைக்கிறேன்.
ஆனால் நாயுண்ணியும் பீநாறியும் ஒன்றல்ல. உங்கள் இடுகையில் நீங்கள் வெளியிட்டிருக்கும் படம் நாயுண்ணியுடைது. அதை அங்கே கொழுவி சொல்லியுள்ளார்; பெயரில்லாதவரும் ஆமோதித்துள்ளார்.

எனது இவ்விடுகையிலும் நாயுண்ணியின் படத்தை அருச்சுனா தளத்திலிருந்து இட்டுள்ளேன்.

பீநாறியென்பது நாயுண்ணியை விட சற்று வித்தியாசமானது. நாயுண்ணி இலைகள் சிறிதாகவும் தடிப்பாகவும் இருக்கும். பீநாறி இலைகள் நாயுண்ணியைவிட சற்றுப்பெரிய இலைகள், அதேநேரம் ஒப்பீட்டளவில் மெல்லிய இலைகள்.
பீநாறியை விட நாயுண்ணிக் கொப்புக்கள் பலமானவை. பீநாறியின் தண்டுகள் (கொப்புக்கள் என்று சொல்ல முடியாது) மிகப்பலவீனமானவை. தாமரைத்தண்டு போல சடக்கென்று முறிந்துவிடும் இயல்புடையவை. வெறும் கோதாகவே இருக்கும். மேலும் பீநாறி கிளைகள் விட்டு பரந்து வரளாது. நெடுத்து வளரும்.

பீநாறிப் பற்றைகளுக்குள்ளால் நகர்வது ஒப்பீட்டளவில் சுலபம். சடக் சடக்கென்று முறிந்து வழிவிடும். ஆனால் நாயுண்ணிப் பற்றைகள் அப்படி முறிந்து வழிவிடா.

 

post a comment

© 2006  Thur Broeders

________________