This is a tb_b_20060122 with one sidebar and a fluid (flexible) content.
Advertisement
Thursday, September 27, 2007
நேற்றும் ஒருவன் போனான் - சயந்தன்
நீண்ட நாட்களாக தீண்டப்படாமல் இருந்ததாலேயோ என்னவோ எனது சாரல் வலைப்பதிவை spamblog எனக்கருதி பூட்டி வைத்துள்ளார்களாம். கதவு திறக்கவேண்டுமெனில் அவர்களுக்கு அறிவித்து இரு நாட்கள் காத்திருக்க வேண்டுமாம். பதிவொன்றினை எழுதிக்கொண்டு உட்சென்ற பிறகு தான் இந்த விடயமே எனக்குத் தெரிந்தது. ஆகவே அவசரத்திற்கு வசந்தனின் பக்கத்தினைப் பயன்படுத்தி இப்பதிவை இடுகின்றேன்.
நிசாந்தன் என்னிலும் இருவயது இளையவன். ஆகவே பாடசாலை வகுப்புக்களிலோ அல்லது ரியூசன் வகுப்புக்களிலோ நான் அவனோடு சந்தித்துப் பழகியிருக்க வாய்ப்பில்லை. ஆயினும் ஊரின் கலைநிகழ்வுகள் கோயில் நிகழ்வுகள் அல்லது விளையாட்டுத் திடலாய் நிரந்தரமாய் நாம் மாற்றியிருந்த சீக்காய் வயல் என்பவற்றில் நாம் அறிமுகமாகி நெருங்கியிருக்க முடிந்தது.
நிசாந்தன் சிறுவயது முதலே சங்கீதம் கற்றிருந்தான். என்னோடு மிருதங்கம் கூட கற்க வந்தவன் எனக்கு முன்பே அதை கைவிட்டது ஏனென்று தெரியவில்லை. நடிப்பு ஆற்றலும் கூடவே இருந்தது.
தொன்னூறின் இறுதி , மாவீரர் தினமென்று நினைக்கின்றேன். இசை நிகழ்ச்சி நாடகம் வில்லுப்பாட்டு என பல நிகழ்ச்சிகளில் நானும் அவனும் பங்குபற்றியிருந்தோம்.
பாதைகள் வளையாது - இந்தப் பயணங்கள் முடியாது போகுமிடத்தைச் சேரும் வரைக்கும் பாதைகள் வளையாது - இந்தப் பயணங்கள் முடியாது
என அவன் பாடினான்.
அதன் பின்வந்த ஒரு சில ஆண்டுகளில் ஒரு நவராத்திரி நிகழ்வு. எல்லாளன் நாடகத்தில் துட்டகைமுனுவின் தம்பி பாத்திரத்தை விருப்பமின்றி ஏற்று நடித்தான். எதுவாக இருப்பினும் எல்லாளன் பக்கத்துப் பாத்திரமொன்றைத் தாருங்கள் என்றவனை ஏதோவெல்லாம் சொல்லிச் சமாளித்தார்கள். இறுதியில் கைமுனுவின் தம்பியாக நடிக்கச் சம்மதித்தான். நான் கைமுனுவாக நடித்திருந்தேன். ஒரு காட்சியில் அவன் சுழற்றிய வாள் பார்வையாளர் மத்தியில் விழுந்து பரபரப்பை உண்டுபண்ணியது.
நீண்ட நாட்களுக்குப் பிறகு 2002 இல் மீசை முளைத்த வாலிபனாகக் கண்டேன். கணக்கியல் துறையில் கல்வி கற்றுக்கொண்டிருந்தான். கணணி தொடர்பிலும் நிறைய ஆர்வமுற்றிருந்தான். கொழும்பு சென்று கல்வியைத் தொடர விரும்புவதாகச் சொன்னான்.
அப்போது ஊரின் பொறுப்பான இளைஞனாகிவிட்டிருந்தான். வாசிகசாலை சனசமூக நிலையம் என பல அமைப்புக்களில் பொறுப்புக்கள் அவனிடமிருந்தன.
2005 இல் அவனைச் சந்தித்த போது GCE – O/L பரீட்சையில் சித்தியடைந்த அவ்வூரினைச் சேர்ந்த மாணவர்களை பாராட்டிப் பரிசில் வழங்கும் நிகழ்வொன்றிற்காக மும்மரமாய் நின்றான்.
நிகழ்வின் இறுதியில் இசை நிகழ்வு - அன்றும் அவன் பாடினான் - முதன் முறையாக அவ்வாறான நிகழ்வொன்றிற்காக நான் அறிவிப்புச் செய்தேன். சொல்லத்தான் நினைக்கிறான் பாடலைப் பாடப்போவதாய்ச் சொன்னவனை மேடைக்கு அழைத்து உண்மையாகவே காதல் சுகமானது தானா எனக் கேட்ட போது வெட்கப்பட்டுச் சிரித்தான். நான் விளங்கிக் கொண்டேன்.
இதற்கு மேல் நேற்றைய புதினம் இணையச் செய்தியினைப் படியுங்கள்.
யாழில் சிறிலங்கா இராணுவத்தினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் இரண்டு பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். யாழ். மானிப்பாய் காரைநகர் சாலையில் இன்று செவ்வாய்க்கிழமை காலையில் சிறிலங்கா இராணுவத்தினர் நடத்திய இத்துப்பாக்கிச் சூட்டில், சங்கானை சிவப்பிரகாச வித்தியாசாலை இசை ஆசிரியையான சாரதா பரஞ்சோதி , உடுவில் உதவி அரசாங்க அதிபர் செயலக தொழில்நுட்பப் பணியாளர் காந்தன் நிசாந்தன் ஆகியோர் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.
முன்னே விரித்துக் கிடக்கும் ஆல்பத்தில் கசூர்ணா கடற்கரையோரத்தில் நானும் அவனும். தன் விரல்களால் என் தலையின் பின்னால் கொம்புகள் வைத்தபடி சிரித்த முகத்துடன் நிசாந்தன் !
பெரிய குடிகாரனாக என்னைப் புரிந்துகொள்ளும் உங்களிற் பலருக்கு நான் குடிகாரனான கதை தெரிந்திருக்க வாய்ப்பில்லை. அதனாலென்ன? கட்டாயம் தெரிந்திருக்க வேண்டியளவுக்கு இதுவொன்றும் முக்கியமானதன்று. என் அலட்டல்களை விழுந்துவிழுந்து வாசிக்க நானொன்றும் புரட்சிக்காரனோ கலகக்காரனோ அல்லன். விரல்கள் குறுகுறுத்த விசர்ப் பொழுதொன்றில் எழுதப்பட்ட/தட்டப்பட்ட என் குடிப்புராணத்தைப் படிக்க விரும்புவோர் மேற்கொண்டு படிக்கலாம்.
முதலில ஒண்டைச் சொல்ல வேணும். தொடக்கத்தில, குடி மீது எனக்கு மோகம் இருக்கேல; மாறா குடிகாரர் மேலதான் மோகமிருந்தது, நூற்றுக்குத் தொன்னூற்றொன்பது சதவீதமான குடிகாரரைப்போல.
குடிக்கத் திட்டமிட்ட நாளும் வந்தது. திட்டமிட்டது நானும் என்ர நண்பனொருவனும். எங்களுக்கெல்லாம் கள்ளைவிட்டால் கதியேது? அரைப்போத்தல் கள்ளைவாங்கி வீட்டில குடிச்சா ஆட்டத்தில் சேர்த்தியில்லை. தவறணையில குடிச்சால் மட்டுமே குடிகாரராக் கணக்கெடுபடும். அதால தவறணையில குடிக்கிறதெண்டு முடிவெடுத்தாச்சு.
ஊர்த்தவறணையில குடிக்க வெட்கமா இருந்திச்சு. இது ஒருவிதத்தில் களவாகச் செய்யிற விளையாட்டுத்தான். ஒருநாள் பொழுதுபட அயலூர்த் தவறணைக்குப் போய்க் குடிச்சம். நண்பன் நேர தன்ர வீட்டுக்குப் போயிட்டான். 'சோம்பேறி மடம்' எண்டு செல்லமா அழைக்கப்படுற, இராத்திரியில நண்பர்கள் கூடியிருந்து கடுதாசியோ தாயமோ விளையாடுற இடத்துக்கு நான் போனன். வீட்ட போய் பிரச்சினை கிளப்பிறதைத் தவிர்க்கிறது ஒரு நோக்கமெண்டால், நான் குடிச்சிருக்கிறதை நண்பர்களுக்குக் காட்டிறதும் ஒரு நோக்கம்தான். சைக்கிளோட்டத்தில ஒரு சிக்கலுமில்லை.
சரி, அதை விடுவம். நான் ஏன் குடிக்கத் தொடங்கினன் எண்டு உங்களுக்குச் சொல்லேலயெல்லோ?
எல்லாருக்கும் குடிக்கத் தொடங்கிறதுக்கு காரணங்கள் இருக்கு. நண்பர்களிடத்திலயும் சமூகத்திலயும் ஓர் அதிர்வை ஏற்படுத்திறது, பயத்தை உருவாக்கிறது எண்டு சிலது இருக்கு. குடிச்சா பெரியாளாகக் காட்டிக்கொள்ளலாம் எண்டதும் இருக்கு. புகைபிடிக்கிறதுக்கு உது முக்கியமான ஒரு காரணம். சிகரெட் பத்தினால் தாங்கள் பெரிய கொம்பனுகள் எண்டு சிலருக்கு நினைப்பிருக்கு. பெட்டையள் விரும்புவாளவை எண்டுகூட பிடிக்கத் தொடங்கினவை சிலர் இருக்கினம்.
உதெல்லாத்தையும்விட நான் குடிக்கத் தொடங்கினதுக்கு ஒரு காரணம் இருக்கு. புரட்சிக்காரனாகவும் கலகக்காரனாகவும் உருவாவது அல்லது காட்டிக்கொள்வதுதான் அது.
இளம்வயசில திடீரெண்டு உந்த ஆசை வந்திட்டுது. புரட்சிக்காரனாக, கலகக்காரனாக, தீவிர சிந்தனையாளனாகக் காட்டிக்கொள்ளிற ஆசை வந்திட்டுது. வட்டத் தொப்பியொண்டை சரிச்சுப் போட்டுக்கொண்டு விசரன் மாதிரி றோட்டுவழிய திரிஞ்சிருக்கிறன். சேட்டின்ர மேல் ரெண்டு பட்டினையும் திறந்துவிட்டிட்டு, நெஞ்சில முளைக்காத மயிரைச் சபிச்சுக்கொண்டும் திரிஞ்சிருக்கிறன். எந்தநேரமும் ஏதோ ஆழ்ந்த சிந்தனையில இருக்கிற மாதிரி நடிச்சுக்கொண்டு திரிஞ்சிருக்கிறன். உந்த விசயத்துக்கு பெட்டையளிட்ட நல்ல வரவேற்புக் கிடைச்சது. ஒருத்தரும் வாசிக்காத, இலகுவில விளங்கமுடியாதபடி எழுதப்பட்டிருக்கும் ஏதாவது புத்தகத்தை (குறிப்பா ரஸ்யனிலிருந்து தமிழுக்கு மொழிபெயர்த்த சில புத்தகங்கள்) எந்தநேரமும் கொண்டு திரியிறது, இடைக்கிடை அதை வாசிக்கிறமாதிரி நடிக்கிறது எண்டெல்லாம் உந்த விளையாட்டுக்கள் தொடந்தது.
இப்பிடியாக நான் நடத்திய சில கூத்துக்களுக்குப்பிறகு, முழுமையான கலகக்காரனாக, புரட்சிக்காரனாக உருவாகிறதுக்கு மிஞ்சியிருந்த ரெண்டு விசயங்களில ஒண்டான குடிக்கிறதைத் தொடங்கினன். இதுதான் நான் குடிகாரனானதுக்கான காரணம்.
நான் புரட்சியாளனாவதற்கு குடிகாரனாகவேண்டியிருந்தது.
"ஒரு புரடசியாளன் உருவான கதை" எண்டு இன்னோர் இடுகை எழுதக்கூடும். உண்மையில "புரட்சியாளனொருவன் உருவான கதை" எண்டுதான் தலைப்பு வரவேணும். இவ்விடுகைக்குக்கூட "குடிகாரனொருவன் உருவான கதை" எண்டுதான் தலைப்பு வச்சிருக்க வேணும்.
அதனால் என்ன? பிழையாக எழுதுவதுகூட புரட்சி என்றாகிவிட்ட இன்றைய நிலையில் புரட்சியாளனாகிய நான் பிழையாகத்தானே எழுதவேணும்?
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~ லேபிள்ஸ்: கொழுவி குடிகாரன் கலகக்காரன் புரட்சிக்காரன் கள்ளு தூசணம் நடிப்பு கோதாரி