ஆங்கில ஒலியியல் தட்டச்சு – 2: கிருத்திகனுக்குப் பதில்
இது இரண்டாவது பகுதியென்றால், முதலாவது? அது இங்கே இருக்கிறது. ஆங்கில ஒலியியல் தட்டச்சு முறையை விமர்சிக்கவெனப் போய் அதை முழுமையாக விமர்சிக்காமல், அம்முறைக்குச் சார்பான கருத்துக் கொண்டவர்களை விமர்சித்ததால் அது திசைமாறிப்போனது. ஆங்கில ஒலியியல் தட்டச்சால் ஏற்படும் விளைவுகள் தொடர்பாக ஒரு கட்டுரை எழுதப்படுமென்ற அறிவிப்போடு அவ்விடுகைக்கான பின்னூட்ட வசதி மூடப்பட்டுள்ளது. ஆனால் சொல்லப்பட்ட கட்டுரைதான் இன்னும் எழுதப்படவில்லை. இந்நிலையில் இன்று கிருத்திகனின் வலைப்பதிவில் அவர் ஆங்கில ஒலியியல், பாமினி, தமிழ்நெற்-99 முறைகளில் தட்டச்சுவது பற்றிச் சொன்ன கருத்தொன்றுக்கான எதிர்வினையாற்ற இவ்விடுகை எழுதப்படுகிறது. தொடரிலக்கத்தைப் பார்த்து அதிகம் யோசிக்காதீர்கள். நாங்களெல்லாம் தொடர் எழுதினாலும் ஆண்டுக்கொரு பாகம் எழுதும் பேர்வழிகள். ‘மரங்கள்’ தொடரைப் பார்த்து விளங்கிக் கொள்க ;-) ஆங்கில ஒலியியல் முறையில் தட்டச்சும்போது தட்டச்சுபவரின் மூளையில் ஆங்கில வரிவடிவங்களூடாகவே அவர் எழுத்துக்கூட்டுவார் என்பது அம்முறைக்கெதிரான ஒரு வாதம். சிறிது கால இடைவெளியில் அது தாக்கத்தைத் தராது; ஆனால் வருடக்கணக்கில் ஒருவர் அப்படியே தொடர்ந்தும் தட்டச்சுவாராக இருந்தால் அம்முறை அவரின் தமிழ்ச்சிந்தனையில் பாதிப்பை ஏற்படுத்தும் என்பது ஒரு விளக்கம். அதை மறுக்க வந்த இடத்தில் கிருத்திகன் இப்படிச் சொல்கிறார். //மற்றபடி Phonetic முறைப்படி ‘அம்மா' ‘ammaa' என்று பதிவது போலவே பாமினியில் 'அம்மா' ‘mk:kh' என்றும் தமிழ் 99ல் ‘அம்மா' ‘akfkq' என்றும்தான் பதியும்.// கிருத்திகன், முதலில் உமக்கு எனது பாராட்டு. ஏனென்றால் ஆங்கில ஒலியியல் முறைக்கெதிரான வாதமாக வைக்கப்படுபவற்றுள் ஒன்றான ‘ஆங்கில வரிவடிவங்கள் மூளையில் பதிதல்’ என்பதைச் சரியாக விளங்கியிருக்கிறீர். அதை ஏற்றுக்கொள்ளாதது, மறுப்பது, அது தேவையற்ற பயம் என்று சொல்வது நியாயமான நடவடிக்கையே. இப்போது நான் மேலே மேற்கோளிட்ட உம்முடைய கருத்துக்கு வருவோம். உமது கருத்து முற்றிலும் தவறானது என்பது என் கருத்து. பாமினியிலோ தமிழ்நெற்99 இலோ தட்டச்சுபவர்கள் ஆங்கில வரிவடிவங்களூடாக மனதில் எழுத்துக்கூட்டுவதில்லை, ஆனால் ஆங்கில ஒலியியல் முறையில் தட்டச்சுபவர்கள் ஆங்கில வரிவடிவங்களூடாகவே எழுத்துக்கூட்டுகிறார்கள் என்பது எனது கருத்து. இவற்றில் ஆங்கில ஒலியியல் முறையில் தட்டச்சுபவர்கள் ஆங்கில வரிவடிவங்களூடாக மனதில் எழுத்துக்கூட்டுகிறார்கள் என்பதை ஒத்துக்கொள்ளும் நீர் மற்ற வடிவங்களில் தட்டச்சுபவர்களும் அப்படியே என்கிறீர். உண்மையில் மற்ற வடிவங்களில் தட்டச்சுபவர்களின் நிலை அப்படியில்லை. அவர்கள் தமிழ் வரிவடிங்களூடே சிந்திக்கிறார்கள். ஆறு வருடங்களாக மிகமிகச் சரளமாகத் தமிழில் தட்டச்சிக் கொண்டிருக்கும் பாமினிக்காரன் ஆகிய எனக்கு அம்மா என்று தட்டச்சுவதற்குரிய விசைகளின் ஆங்கில வரிவடிங்களைச் சொல்ல முடியாது. நீர் தந்திருக்கும் ஆங்கில எழுத்துக்கள் சரிதானா என்பதைக்கூட நான் சோதித்துப் பார்க்கவில்லை. எனக்குத் தெரிந்ததெல்லாம் ‘அ’வுக்கு எந்த விரல், ‘ம்’ எழுத எந்த விரல்கள் ‘மா’ எழுத எந்த விரல்கள் எந்த வரிசையில் தட்ட வேண்டும் என்பதே. சரளமாகத் தட்டச்சக்கூடிய தமிழ்நெற்99 முறைக்காரன் ஒருவருக்கும் அம்மா என்று தட்டச்சுவதற்கான விசைகளின் ஆங்கில வரிவடிவங்களைச் சட்டெனச் சொல்ல முடியாது. [நான் எங்காவது வேலையாக நிற்கும்போது ‘டேய் ‘கூ’வன்னா அடிக்க வேணுமெண்டா எந்தக் கீ அடிக்க வேணும்?’ என்று தொலைபேசியில் கேட்பார்கள். விசைப்பலகை என்முன் இல்லையென்றால் உடனே என்னால் சொல்லமுடியாது. ஒருசுற்றுவழி மூலம் இதைக் கண்டுபிடித்துச் சொல்வேன். அச்சுற்றுவழி இறுதியில்…] இன்னும் விளக்கமாக ஓர் எடுத்துக்காட்டு சொல்லலாம். பாமினியிலோ தமிழ்நெற்99 இலோ நீண்டகாலம் தட்டச்சிக்கொண்டிருக்கும் உம்முடைய நண்பரொருவரை கடற்கரையிலோ உணவுக்கடையிலோ தெருவிலோ பூங்காவிலோ எங்கேயாவது சந்திக்கிறீர் என்று வைத்துக்கொள்வோம். முக்கியமான விடயம், உங்களிடத்தில் கணனியோ விசைப்பலகையோ இருக்கக்கூடாது. இப்போது உம்முடைய நண்பரைப் பார்த்துக் கேளும், “ஐசே, ‘அம்மா இங்கே வாவா, ஆசை முத்தம் தாதா’ எண்டு எழுதிறதுக்கு நீர் அடிக்கப்போற விசைகளின்ர ஆங்கில எழுத்துக்களை வரிசையாச் சொல்லும் பாப்பம்”. உமது நண்பரால் சொல்ல முடியாது. எழுதிக்காட்டவும் முடியாது. (சிலவேளை ஒன்றிரண்டு எழுத்துக்கள் மிகச்சிரமப்பட்டுச் சரியாகச் சொல்லக்கூடும்). ஏனென்றால் பாமினியிலும் தமிழ்நெற்99 இலும் தட்டச்சுபவர்கள் ஆங்கில வரிவடிவங்களூடு சிந்திப்பதில்லை. (அப்படித்தான் சிந்திப்பார்களென்றால் அவர்களால் உடனடியாக உமது கேள்விக்கான பதிலை கடகடவெனச் சொல்ல முடியும். அத்தோடு ஆங்கில ஒலியியல் முறைக்கெதிரான விமர்சனம் அவர்களுக்கும் பொருந்தும். தட்டச்சத் தொடங்கி நீண்டகாலமாகியும் விசைப்பலகையைப் பார்த்துப் பார்த்துத்தான் ஒவ்வொரு விசையாகக் குத்திக் கொண்டிருப்பார்களென்றால் சிலவேளை அவர்கள் இந்த வகைக்குள் வரக்கூடும்.) ஆனால் இதே கேள்வியை ஆங்கில ஒலியியல் முறையில் தட்டச்சும் ஒருவரிடம் கேட்டுப்பாருங்கள். தயக்கமே இல்லாமல் பதில் வரும். இப்போது புரிகிறதா ‘ஆங்கில வரிவடிவங்ளூடாக’ மனதில் எழுத்துக்கூட்டுவது என்று எதைச் சொல்கிறோமென்று? பாமினியிலோ தமிழ்நெற்99 முறையிலோ தட்டச்சுபவர்கள் தமிழெழுத்துக்களாகவே சிந்திக்கிறார்கள். ============================== தமிழெழுத்துக்கான விசையின் ஆங்கில வடிவத்தைக் கண்டுபிடிக்க ஒரு சுற்றுவழியைப் பயன்படுத்தலாமென்று சொல்லியிருந்தேன். அது என்னவென்றால் விசைப்பலகையில் தட்டச்சுவது போன்று கற்பனை பண்ணி அதன்மூலம் கண்டுபிடிப்பது. எடுத்துக்காட்டாக ‘அ’ என்ற எழுத்துக்கான விசையின் ஆங்கில எழுத்தைக் கண்டுபிடிக்க வேண்டுமென்று வைத்துக்கொள்வோம். விசைப்பலகையில் ‘அ’ தட்டச்சுவதைப் போன்று செய்து பார்த்துக் கொள்வது, பிறகு ஆங்கிலத்தில் அதேமுறையில் விரலைப் பயன்படுத்தும்போது வரும் எழுத்து எதுவென்று பார்ப்பது. அதுகூட சுலபமான காரியமன்று. “அம்மா இங்கோ வாவா, ஆசைமுத்தம் தாதா” என்ற வசனத்தை நான் முயன்று பார்த்தேன். அதாவது அவற்றுக்குரிய விசைகளின் ஆங்கில வரிவடிவங்களை வரிசையாகச் சொல்ல வேண்டுமென்று. அவ்வெழுத்துக்களைத் தட்டச்சுவது போன்று கற்பனை பண்ணி ஆங்கிலத்தில் அதேபோன்று தட்டச்சும்போது உருவாகும் எழுத்துக்களைக் கண்டுபிடிக்க முயன்றேன். மிகமிகக் கடினமாக இருந்தது. ஏனென்றால் பொதுவாக ஓரெழுத்தை எப்படித் தட்டச்சுவது என்றுதான் பழக்கப்பட்டிருக்கிறோம். விரல்கள் இயல்பாகவே அந்தந்த நிலைக்குச் சென்று விசைகளை அழுத்துகின்றன. ஆனால் இந்த விரலால் இப்படித் தட்டச்சினால் என்ன எழுத்து வரும்? என்று எதிர்வளமாக யோசித்தால் விடை காண்பது எளிதன்று. எமது மனம் அதற்குப் பழக்கப்பட்டிருக்கவில்லை. Shift உடன் வலதுகையின் நடுவிரலை நடுவரிசையில் அழுத்தினால் ‘மு’ வருமென்று கண்டுபிடித்துவிட்டேன். ஆனால் ஆங்கிலமுறையில் இதேமாதிரித் தட்டச்சினால் என்ன எழுத்து வரும்? ம்ஹும். தெரியவில்லை. ஆனால் ஆங்கிலத்தில் ‘K’ எழுதவேண்டுமென்று கேட்டால் தன்னிச்சையாகவே இடது சின்னிவிரல் shift விசையை அழுத்திப்பிடிக்க வலதுபக்க நடுவிரல் நடுவரிசையில் தனக்குரிய விசையை அழுத்துகிறது, அதாவது ‘மு’ எழுதுவதற்குப் பயன்படுத்திய அதே விசை. இத்தோடு இவ்விடுகை நிறைவுபெறுகிறது. இவ்விடுகைகூட அவசரமாகவே எழுதப்படுகிறது. நேரமிருந்தால் பிழைதிருத்தியோ இன்னும் விளக்கம் அதிகமாகவோ மேம்படுத்தலாம். - பின்னூட்டங்களில் சந்திப்போம். Labels: கலந்துரையாடல், தமிழர் நலன், பதிவர் வட்டம், விமர்சனம், விவாதம் |