Monday, May 16, 2005

முசுப்பாத்தி பற்றி முசுப்பாத்தியாக...

முசுப்பாத்தி...
இது எம்மிடையே(ஈழத்தில்) பேச்சு வழக்கில் பரவலான பாவனையிலிருக்கும் சொல். பம்பல் என்பதன் ஒத்த கருத்தாகப் பாவிக்கிறோம். பம்பல் என்பதும் புரியாதவர்களுக்கு:
நகைச்சுவையாகப் பேசுதல் அல்லது நகைச்சுவை எனும் பொருளில் பாவிக்கப்படுகிறது.
'இது நல்ல முசுப்பாத்தி' என்றால் 'நல்ல நகைச்சுவை' என்று கருத்து. 'முசுப்பாத்தியான ஆள்' என்றால் 'நகைச்சுவையான மனிதன்'.
'முசுப்பாத்தியாகப் பேசக்கூடியவர்' என்றால் 'நகைச்சுவையாகப் பேசக்கூடியவர்'.

இச்சொல்லை நானும் இன்னும் ஈழத்தைச் சேந்த சிலரும் வலைப்பதிவிற் பாவித்துள்ளோம். இந்தச் சொல் எப்படி வந்தது என்று சிந்தித்ததுண்டு. அனேகமாய் ஏதாவது ஐரோப்பிய மொழியிலிருந்து தான் வந்திருக்கும் என்று நினைத்திருந்தேன். இன்றுதான் ஒரு இச்சொல் பற்றி அறியும் ஒரு வாய்ப்புக் கிடைத்தது.

பண்டிதர் வீ. பரந்தாமன் எழுதியுள்ள ஒரு புத்தகத்தில் (வேர் - அடி வழித் தமிழ்ச் சொற்பிறப்பியற் சிற்றகர முதலி. – பெயரைப் பார்த்துப் பயப்பட வேண்டாம்) இச்சொல் பற்றி எழுதியுள்ளார். ஆச்சரியமாயிருக்கிறது, இது தமிழ்ச்சொல் என்பது. இதை முனைவர் கு. அரசேந்திரனும் வியந்துள்ளார். இனி பண்டிதர் பரந்தாமனின் எழுத்து அப்படியே.

முசுப்பாத்தி: முசி – (முசிப்பு + ஆற்றி) – முசிப்பாற்றி – முசிப்பாத்தி = இளைப்பாறுகை, இளைப்பாற்றுகைப் பொருட்டுப் பேசும் வேடிக்கைப் பேச்சு, நகையாட்டு.

முசிதல் = 1.அறுதல்.
2.கசங்குதல்.
3.களைத்தல்.
4.ஊக்கங் குன்றுதல்.
5.மெலிதல் “அற்பமனம் முசியாள்” (அரிச்சந்திர மயான காண்டம். 115) 6.அழிதல்.

முசித்தல் = 1.களைத்தல்.
2.வருந்துதல்.
3.மெலிதல்.
4.அழிதல்.
5.கசங்குதல்.

முசிப்பு < முசி = 1.மெலிவு. 2.களைப்பு. 3.அழிவு. முசிப்பாற்றி = இளைப்பாற்றுகை. (Winslow's Tamil English Dictionary)
முசிப்பாறுதல் = இளைப்பாறுதல். (Winslow's Tamil English Dictionary)

முசிப்பாற்றி – முசிப்பாத்தி - முசுப்பாத்தி.
சிலர் அறியாமையினால் இச்சொல்லை பிறமொழிச் சொல்லெனக் கூறுகின்றனர். அதற்கு இச்சொல் பிழையாக, ‘முஸ்பாத்தி’ என்று உச்சரிக்கப்படுவதும் ஒரு காரணமாகும். இவ்வாறே பல தமிழ்ச் சொற்களைப் பிறமொழி ஒலிகளில் உச்சரித்து வேற்று மொழிச் சொற்களாகக் காட்டுகின்றனர். பண்டிதரேயானாலும் சொல்லியல் மொழிநூற்புலமையிலாராயின் பொருடெரியிற் சொல்வதேயன்றி, அச்சொல் இன்ன மொழிச் சொல்லென்று துணிந்து கூறுதலை ஒழித்தல் வேண்டும்.

Labels: , , , , ,

எழுத்துருவைத் தெரிவுசெய்ய.
பாமினி ஆங்கில உச்சரிப்பில்

[மேலுள்ள பெட்டியில் தட்டச்சினால் கீழுள்ள பெட்டியில் ஒருங்குறிக்கு (Unicode) மாற்றப்பட்ட எழுத்துரு கிடைக்கும்]


சுரதா, கிருபாவுக்கு நன்றி


"முசுப்பாத்தி பற்றி முசுப்பாத்தியாக..." இற்குரிய பின்னூட்டங்கள்

 

said ... (16 May, 2005 13:03) : 

நல்ல முசுப்பாத்தியா இருக்கே!

 

said ... (16 May, 2005 13:18) : 

எழுதிக்கொள்வது: ஜீவா

நான் எதோ சப்பாத்தி/ரொட்டி வகைதானே என நினக்கப்போனேன் வசந்தன்!

23.45 15.5.2005

 

said ... (16 May, 2005 13:35) : 

இன்னும் "முசிப்பாற்றி"யாக பல பதிவுகள் எழுதவும்:o)

 

said ... (16 May, 2005 15:03) : 

எழுதிக்கொள்வது: அருணன்

வசந்தன் இப்படியான தலைப்புகளை தேடிப்பிடித்து எழுதிறதில உண்மையாகவே ஒரு ஆத்ம திருப்திதான்.

இதோட 'அந்தமாதிரி' 'அட்டகாசமா இருக்கு' போன்ற சொற்களுக்கும் விளக்கத்தை தாருங்கோவன்.

15.23 16.5.2005

 

said ... (16 May, 2005 15:52) : 

ஹா அற்பபதரே, அன்புமணி, தமிழ்க்குடிதாங்கி, திருமா இவர்களின் தூண்டுதலிலேதானே இப்படியெல்லாம் தூயதமிழிலே எழுதுகிறாய்? லக்ககலகலக்லககலலகலா!! ;-)

ஊரிலே லோக்கல் எண்டால் கூடாதெண்ட அர்த்தமிருந்ததே. அதுவும் ஞாபகம் வருகுது.

"காவாலி" எண்டால் என்னவெண்டு தெரியுமோ?

 

said ... (16 May, 2005 17:36) : 

எழுதிக்கொள்வது: kulakaddan

நல்லாயிருக்கே.............அப்ப அது நல்ல தமிழ்தான்

10.2 16.5.2005

 

said ... (16 May, 2005 18:16) : 

அம்புஸ் அடிக்கிறதெண்டு ஒரு சொல்லு இருக்கு.. சில வேளை அம்புசு அடித்தலோ தெரியாது. அதுவும் தமிழாக இருக்க கூடும். உமக்கு ஏதாவது அது பற்றி தெரியுமோ?

 

said ... (16 May, 2005 21:29) : 

நன்றி துளசிகோபால், ஜீவா, ஷ்ரேயா, அருணன், பெயரிலி மற்றும் மஸ்ட்டூ.

ஜீவா!
தோட்டத்துக்கு கட்டிற பாத்தி பற்றி நினைக்கேலயோ? எங்கடயளுக்கு பனம்பாத்தி கூட ஞாபகம் வந்திருக்கும்.

ஷ்ரேயா!
இந்தப் பதிவு முசிப்பாற்றியாத்தான் படுகுதோ? வேறயும் ஆக்களுக்கு இது முசுப்பாத்திப் பதிவாத்தான் படுகிது போல.
இப்ப சொல்லுறன். இது உண்மையிலயே வேர்ச்சொல் ஆராய்ச்சிப் புத்தகத்திலயிருந்து எடுத்த பதிவு. பண்டிதர் பரந்தாமனைத் தெரியுமோ தெரியாது. அவரிண்ட புத்தகமொண்டு வெளியீட்டுக்கு வருகுது. அதில கன விதயங்கள் இருக்கு. நானும் அகராதியப் பாத்து அதில உறுதிப்படுத்திப் போட்டுத்தான் எழுதிறன். முசிப்பாற்றி என்று போட்டு அதற்கு நாம் பாவிக்கும் அர்த்தத்திலேயே பொருள் கொடுக்கப்பட்டுள்ளது. பின்ன என்ன? அது எங்கட சொல்லேதான்.

பேச்சு வழக்கில் 'ற்' வரிசை 'த்' வரிசையாத் திரியிறது வழமைதானே.
பற்ற வைத்தல் - பத்த வைத்தல்.
பற்றை - பத்தை.
ஆக இது எங்கட சொல்லேதான். பயப்பிடாமல் முசுப்பாத்தி விடலாம்.

 

said ... (16 May, 2005 21:41) : 

அருணன்!
தலைப்பைத் தேடிப் பிடிக்கிறேல. தலைப்புத்தான் என்னப் பிடிச்சிருக்கு.

பெயரிலி!
இன்னொரு பதிவுக்கு தூபம் போட்டிருக்கிறியள். லோக்கல் பற்றின ஒரு முசுப்பாத்திய அடுத்த பதிவா எழுதிறன்.
அது சரி உங்களுக்கும் "சந்திரமதி" ஆவி தொத்தீட்டுதோ? படம் பாத்திட்டியளோ?

முதலில என்ர பதிவப் பற்றி என்ன சொல்லிறியள் எண்டு விளங்கேல. நான் புருடா விடுறன் எண்டு நினைக்கிறியளோ அல்லது???
எதுக்கிப்ப திருமா ராமதாஸ் எல்லாம் இதுக்க?
பதிவில இருக்கிற தமிழ் கொஞ்சம் நல்லாயிருக்கு எண்ட படியாலோ?
ஐயோ அது பண்டிதரிண்ட தமிழ்.

காவாலி எண்டதின்ர பொருள் தெரியும். அதின்ர வரலாறு தெரியாது. தெரிஞ்சாச் சொல்லுங்கோ.

 

said ... (16 May, 2005 21:44) : 

mustdo!
அம்பு 'சூ' என்ற ஒலியோடு பறந்து போய் தாக்குவதிலிருந்துதான் அம்புஷ் என்ற சொல் வந்தது என்று எழுதலாம். ஆனா நான் முசுப்பாத்தி பற்றி எழுதினது முசுப்பாத்தியில்ல. (இப்ப தான் நினைக்கிறன். என்ர பதிவுத்தலைப்பே பிழையான பொருளைத் தருகிதெண்டு.) அகையால் நான் அப்பிடி எழுத ஏலாது. Ambush எண்டது அங்கிலச் சொல்தான்.

 

said ... (17 May, 2005 00:59) : 

எழுதிக்கொள்வது: Linakm

ம். நல்ல முசுப்பாத்தியாத்தான் இருக்கு.

1.28 17.5.2005

 

said ... (17 May, 2005 03:23) : 

வசந்தன், பாமக, தூயதமிழ் பற்றி எழுதியது உங்களுக்கு நக்கலுக்கு அல்ல; வலைப்பதிவுகளிலே பார்த்திருப்பீர்களே; ரஜனியின் "ஸ்டைல்" தமிழுக்குத் தலையைக் கொடுக்கும் சிலர் ராமதாஸ்-திருமாவளவன் என்ன செய்தாலும், ரஜனி காரணமாக எதிர்த்துக்கொண்டேயிருக்கின்றதை. அதைத்தான் சொன்னேன். இதுக்கும் ஏதாச்சும் சொல்லுவார்கள். அதுதான்.

 

said ... (17 May, 2005 04:11) : 

முசுப்பாத்தி தெரியாது. சப்பாத்தி தெரியும். பாத்தி தெரியும். தீ தெரியும் :-)
நல்லது.

 

said ... (17 May, 2005 04:32) : 

வசந்தன் நீங்கள் சரியான அளாப்பி

கதிர்காமஸ் முசு தெரியாதா?

 

said ... (17 May, 2005 07:36) : 

பம்பல் என்பது கிட்டத்தட்ட 'எதையோ மறைத்துப் பதுங்குதல்' என்ற அர்த்தத்திலும் சிலசமயம் உபயோகப்படுத்தப்படுவதுண்டு.

றகுப்பி, உங்களது சமீபத்திய பெயர்க்கொலை கில்லட்டினில் சிக்கியது கார்த்திக்ராமஸின் பெயரா? கதிர்காமஸ் ஆக்கிக் கலாய்த்துவிட்டீர்கள்!! :-)

 

said ... (17 May, 2005 10:48) : 

பெயரிலி!
விளக்கத்துக்கு நன்றி.
இப்போது ரவியின் பதிவிலும் அப்பிடியொரு போக்கில்தான் அன்புமணிமீது சேறு பூசப்படுகிறது.
அட விடுங்க நமக்கெதுக்கு வம்பு. தமிழ் பற்றி எங்கடயளோடயே சண்ட பிடிக்க ஏலாமக் கிடக்கு. இதுக்க "சீமைக்கு" ஏன் போக வேணும்.

பெயரிலி, லோக்கல் பற்றி என்ர அனுபவம் ஒண்ட எழுதியிருக்கிறன்.

கறுப்பி!
நீங்கள் சொல்லுறது சுத்தமா எனக்கு விளங்கேல. அளாப்பி எண்டா 'சரியான விதிமுறைகளைப் பேணாமல் எதிராளியை ஏய்ப்பவன்' என்ற கருத்தில் தான் பாவிக்கிறோம். நீங்கள் ஏன் சொன்னீர்களென்று தெரியவில்லை. நீங்கள் சொன்ன மாதிரி நான் ரியூப் லைற் தான்.

 

said ... (17 May, 2005 12:08) : 

மாண்டி!
நீங்கள் சொல்வது "பம்மல்" என்ற சொல்லைப் பற்றி.
அதுதான் நீங்கள் சொன்ன அர்த்தத்தில் வரும்
பம்பல் என்பது களித்திருத்தல் என்று வரும்.
பம்பலடித்தல் - நகைச்சுவையாகப் பேசி களித்திருத்தல்.
பம்பலாக கதைத்தல் - நகைச்சுவையாகப் பேசல்.

றகுப்பி சொன்ன 'கதிர்காமஸ் முசு' பற்றி எனக்குத் தெரியாது.
கதிர்காமரத் தெரியும்.
கார்த்திக் ரமாசுக்கும் நன்றி.

 

said ... (17 May, 2005 18:03) : 

வசந்தன்
முசுப்பாத்திதானே ஆறுதலாக வாசிப்போம் என நினைத்து Favaritenஇல் போட்டு வைத்தேன்.
இப்போ வாசித்த போதுதான் நல்ல பயனுள்ள பதிவு என்பது தெரிந்தது.
நான் முசுப்பாத்தி என்ற சொல்லை ஒரு பேச்சு வழக்குச் சொல் என்றே நினைத்திருந்தேன்.

 

said ... (17 May, 2005 18:06) : 

This comment has been removed by a blog administrator.

 

said ... (10 January, 2007 17:44) : 

எழுதிக்கொள்வது: இலவசக்கொத்தனார்

வசந்தன்,

முசுப்பாத்தி என்ற ஒரு சொல்லை நம்ம பதிவில் போட்டு இப்படி உசுப்பேத்தி விட்டுட்டீங்களே! தெரியாத சொல் ஒன்றைத் தந்து பொருளும் கூறி அதன் வரலாற்றையும் தந்துவிட்டீரே. அருமை அருமை!

இப்படிக்கு,
இது போல் மேலும் பல பதிவுகள எதிர்பார்க்கும்
கொத்ஸ்

20.6 9.1.2007

 

said ... (11 January, 2007 09:35) : 

சந்திரவதனா,
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி (ஒன்றே முக்கால் வருசத்துக்குப்பிறகு நன்றி சொல்லிறன்;-))

கொத்தனார்,
விளக்கம், வரலாறு எல்லாம் நான் எழுதியதன்று. அது பண்டிதர் பரந்தாமன் எழுதியது.
அதை இங்குப் பதிவாக்கியது மட்டும்தான் என்னுடைய வேலை.

வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி.

 

post a comment

© 2006  Thur Broeders

________________