Monday, August 29, 2005

ஆதித்தனார் புத்தக வெளியீடு

இன்று மெல்பேணில் தமிழர் தந்தை ஆதித்தனார் பற்றி சாமி அவர்கள் (ராணி இதழின் ஆசிரியர்) புத்தக வெளியீடு நடைபெற்றது.
மாலை 5.00 மணியளவில் தொடங்கிய இவ்விழாவுக்கு அப்புத்தகத்தை வெளயிடும் புரவலர் அப்துல் அயூப் அவர்கள் வந்திருந்தார். (இவர் மாயவரத்துக்காரர். இவர் பற்றி பதிவின் இறுதியில்).
சுந்தரேசன் அவர்களின் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் முதலில் ஈகைச்சுடரேற்றல் (இப்படித்தான் அறிவிக்கப்பட்டது) நடைபெற்றது. ஆதித்தனாரின் படத்துக்கு சுடரேற்றி வணக்கம் செலுத்தப்பட்டது. பின் உலகத் தமிழர் பண் இசைக்கப்பட்டது.

சுந்தரேசன் பேசுகிறார். முருகபூபதி, பொன்.சத்தியநாதன், அயூப்.

பின் சுந்தரேசன் அவர்களின் தலைமையுரையைத் தொடர்ந்து ஆதித்தனார் பற்றிய சுருக்கமான குறிப்புக்கள் வழங்கப்பட்டன. பின் பாடுமீன் சிறிஸ்கந்தராசா உரையாற்றினார். அதைத் தொடர்ந்து லெ.முருகபூபதி அவர்கள் புத்தகம் பற்றிய கருத்துரையை வழங்கினார். அதைத் தொடர்ந்து புத்தகம் வெளியிட்டு வைக்கப்பட்டது.

புரவலர் அயூப் அவர்கள் வெளியிட மருத்துவர் பொன். சத்தியநாதன் அவர்கள் பெற்றுக்கொண்டார். அதைத் தொடர்ந்து இன்னுமொரு நூலும் வெளியிடப்பட்டது. தினமணி ஆசிரியராகவிருந்த ஐ.சண்முகநாதன் எழுதிய 'உலக வரலாறு.' புத்தகமது. திருமதி பாலம் லட்சுமணன் அவர்கள் வெளியிட்டு அப்புத்தகம் பற்றிய சிறப்புரையையும் ஆற்றினார். அதன் பின் வெளியீட்டாளர் அயூப் அவர்கள் பேச வந்தார்.

பாலம் லட்சுமணன், சத்தியநாதன், அயூப்.

ஏறக்குறைய அரைமணி நேரம் பேசியிருப்பார். சுவாரசியமான பேச்சு. அவர் ஒரு தொழிலதிபரும்கூட. மயிலாடுதுறையைச் சேர்ந்தவர். (மாயவரத்தான் இப்புத்தக வெளியீடு பற்றிப் பதிவிட்டதுக்கும் இதுக்கும் தொடர்பிருக்கமோ?) மாணிக்க வியாபாரி. ‘நம்ம ஊரு சேதி’ என்ற பத்திரிகையை 12 வருடங்களாக நடத்தி வருகிறார். அதைவிட மூன்று கல்லூரிகளையும் நடத்தி வருகிறார். வானவில் ஒலிபரப்பு என்ற ஒலிபரப்பையும் நடத்திவருகிறார். இதைவிட சில புத்தகங்களையும் எழுதியுள்ளார். பல புத்தகங்களை வெளியிட்டுள்ளார். அமெரிக்காவில் இவரது ஒரு புத்தகத்துக்காக முனைவர் பட்டம் பெற்றுள்ளார்.

நிகழ்வுக்கு வந்திருந்தவர்கள் குஞ்சு குருமனுகளையும் சேர்த்து மொத்தம் 28 பேர்தான். அதைப்பற்றிச் சொல்லும்போது இவர்கள் ஒவ்வொருவரும் ஆயிரக்கணக்கானவர்களுக்குச் சமன் என்றார். (நான் வலைப்பதிவதனால் சிலருக்கு இச்செய்தி போய்ச்சேர்கிறதென்பதை அறிந்திருந்தாரோ என்னவோ) ஆதித்தனார் பற்றி, பத்திரிகை நடத்துவதன் சிரமங்கள் பற்றி, பெரியார் பற்றிப் பேசினார்.
பெரியார் சிந்திக்க வைத்தார், ஆதித்தனார் வாசிக்க வைத்தார் என்றார். இன்றும் வந்துகொண்டிருக்கும் கன்னித்தீவு தொடரைப் பற்றிச் சொன்னார். வாசிப்புலகில் தினத்தந்தியின் பங்களிப்பைச் சொன்னார். அரசியலில் தினத்தந்தியின் பங்களிப்பைச் சொன்னார். தாய்மொழிக்கல்வியின் அவசியத்தை அருமையாகத் தெளிவுபடுத்தினார். மேலும் பகுதிநேர வேலை செய்துகொண்டு உயர்தர மாணவர்கள் படிக்கவேண்டிய அவசியத்தை எமது நாடுகளிலும் ஏற்படுத்துவதன் அவசியத்தைச் சொன்னார். இப்படிப் பலவிடயங்களை சுவாரசியமாகச் சொன்னவர், அடிக்கடி இப்படி நிகழ்வுகளை நடத்தவேண்டுமென்று கேட்டுக்கொண்டார்.

அத்தோடு நிகழ்வு நடந்த அரங்கத்தையும் அதன்நேர்த்தியையும் புகழ்ந்து தள்ளியவர், இதுபோன்றதொரு அரங்கத்தை தான் மயிலாடுதுறையில் நிறுவவேண்டுமென்ற அவா தனக்கு இப்போது ஏற்பட்டுள்ளதாகவும் விரைவில் அதைச் செய்வேன் என்றும் சொன்னார். லெ. முருகபூபதி பேசியபோது ஒரு வேண்டுகோள் விடுத்தார். ஆதித்தனாரின் வாழ்க்கையை ஒரு ஆவணப்படமாக வெளிக்கொணர வேண்டுமென்று. அதை ஏற்றுக்கொண்ட அயூப் அவர்கள், காமராஜ் படத்தைப்பற்றிச் சொன்னார். அப்படியொரு படம் வெளிவந்ததே தனக்குத் தெரியாதென்றும். தற்செயலாக ஒரு இறுவட்டில் கண்டுகொண்டேன் என்றும், அதைப் பார்த்தபோது இவ்வளவு அருமையான முயற்சி சரியான விளம்பரமின்றி அமுக்கப்பட்டதாகத் தான் கருதியதாகச் சொன்னார். காமராஜர் தந்த இலவசக்கல்வியால் தான் இவ்வளவுதூரம் வந்தேனென்றும் இல்லாவிட்டால் நிலமை வேறாகத்தான் இருந்திருக்குமென்றும் நன்றியோடு காமராஜரை நினைவுகூர்ந்தார்.

நன்றியுரை: சுஜாதா.

விழா முடிய சிலர் உடனேயே வெளியேறினார்கள். மீதியாயிருந்த 15 பேர் பக்கத்திலிருந்த ஓர் உணவு விடுதிக்குச் சென்று இராப்போசனம் உட்கொண்டோம். பின் இனிதே விடைபெற்றோம்.


விழாவுக்கு மக்கள் குறைவாக வந்ததுக்கு பல்வேறு காரணங்களுண்டு. பத்திரிகையில் மட்டுமே விளம்பரம் கொடுத்திருந்தார்கள். நூல் வெளியீட்டுவிழாவுக்குப் பொதுவாக மக்கள் குறைவாகத்தான் வருவார்கள். அதுவும் எழுதியவர் கலந்துகொள்ளாத ஒரு நிகழ்வு. மேலும் தமிழகத்தோடு சம்பந்தப்பட்டதாகவே இந்நிகழ்வு கருதப்பட்டிருக்கக்கூடும். (ஆனால் பங்குகொண்டவர்கள் பேசியவர்களில் நால்வரைத் தவிர மிகுதியானவர்கள் ஈழத்தமிழர்களே) பலருக்கு ஆதித்தனார் யார் என்பதே தெரியாது. அத்தோடு இயல்பாகவே தமிழ்ச் சங்கங்களுக்குள்ளும் (பெரீஈஈய சங்கங்கள். நாலுபேர் சேந்தா ஒரு சங்கம்) அமைப்புகளுக்குள்ளும் இயல்பாக இருக்கும் குழு மனப்பான்மையும் காரணம். சாதாரணமானவர்கள் வராதது பிரச்சினையில்லை. இலக்கியத்துடன் தொடர்புள்ளவர்கள் எழுத்தாளர்கள், (இதற்குள் முற்போக்கு எழுத்தாளர்கள் என்றும் அவர்களின் அமைப்புக்குப்பேர்) கூட தெரிந்தும் வராமலிந்தது வருந்தத்தக்கது. ஆனால் விசாரித்த அளவில் இது ஆண்டுக்கணக்காக நடக்கும் பனிப்போர் என்று புரிந்தது. அவன் போகும் நிகழ்வுக்கு நான் வரமாட்டேன் எனச் சொல்லித்திரிவது சர்வசாதாரணம்.

வந்திருந்த கூட்டம்.

எழுத்துருவைத் தெரிவுசெய்ய.
பாமினி ஆங்கில உச்சரிப்பில்

[மேலுள்ள பெட்டியில் தட்டச்சினால் கீழுள்ள பெட்டியில் ஒருங்குறிக்கு (Unicode) மாற்றப்பட்ட எழுத்துரு கிடைக்கும்]


சுரதா, கிருபாவுக்கு நன்றி


Saturday, August 27, 2005

பங்குபற்றுங்கள் பரிசை வெல்லுங்கள்.

இது போட்டிகளின் காலம்.
ஆகவே நானுமொரு போட்டி வைக்கலாமென்று முடிவெடுத்து இந்தப் போட்டியை வைக்கிறேன்.


இந்தப்படத்திலிருப்பது யார்?
‘செத்தல்’ போலவோ ‘நெத்திலி’ போலவோ இருக்கும் (நிற்கும்) இவர் யார்?

சுமார் 8 வருடங்களின் முன் எடுக்கப்பட்ட படம்.பார்க்கப் பாவமாக இருக்கிறதென்று யாரும் இரக்கப்படாதீர்கள். கையிலிருக்கும் மணிக்கூட்டையும் கமராவையும் பாருங்கள்.
இன்று ஆள் பெரிய வில்லன்.

இவர், இடிந்துவிழாமலிருக்க முட்டுக்கொடுத்துக்கொண்டிருப்பது வன்னியின் வளங்களில் ஒன்றான முத்தையன் கட்டுக்குளத்தின் அணைக்கட்டுச் சுவரை.

முத்தையன் கட்டுக்குளம்.
நான் வன்னியில் நீண்டகாலம் ஊடாடிய குளம்.
மிகப்பிடித்த இடமும்கூட.
இதைப்பற்றிக் கதைக்கவே நிறைய இருக்கு.

சரி போட்டியில் பங்குபற்றுங்கள் பரிசினை வெல்லுங்கள்.
இந்தப் போட்டியில் வெல்பவருக்கு என்ன பரிசென்று பின்னர் தீர்மானிக்கப்படும்.

எழுத்துருவைத் தெரிவுசெய்ய.
பாமினி ஆங்கில உச்சரிப்பில்

[மேலுள்ள பெட்டியில் தட்டச்சினால் கீழுள்ள பெட்டியில் ஒருங்குறிக்கு (Unicode) மாற்றப்பட்ட எழுத்துரு கிடைக்கும்]


சுரதா, கிருபாவுக்கு நன்றி


Wednesday, August 24, 2005

கதிர்காமர் கொலை

கதிர்காமர் கொலை செய்யப்பட்டது யாவரும் அறிந்தவிசயமே. ஆனால் அதன்பின்னாலுள்ள சூட்சுமத்தை யாரும் அறியவில்லை. எனக்குக்கிடைத்த சில தகவல்களைப் பகிர்ந்துகொள்கிறேன்.

கதிர்காமர்
கதிர்காமர்
கதிர்காமர்
கதிர்காமர்
கதிர்காமர்
கதிர்காமர்
கதிர்காமர்

கதிர்காமர்
கதிர்காமர்
கதிர்காமர்
கதிர்காமர்
கதிர்காமர்
கதிர்காமர்

ரஜனி புதுப்படம்
ரஜனி புதுப்படம்
ரஜனி புதுப்படம்
ரஜனி புதுப்படம்
ரஜனி புதுப்படம்
ரஜனி புதுப்படம்
ரஜனி புதுப்படம்
ரஜனி புதுப்படம்
ரஜனி புதுப்படம்


அசின்
அசின்
அசின்
அசின்
அசின்
அசின்
அசின்
அசின்
அசின்


புலிகள்
புலிகள்
புலிகள்
புலிகள்
புலிகள்
புலிகள்
புலிகள்
புலிகள்
புலிகள்
புலிகள்


கடவுள்
கடவுள்
கடவுள்
கடவுள்
கடவுள்
கடவுள்
கடவுள்
கடவுள்
கடவுள்

மதம்
மதம்
மதம்
மதம்
மதம்
மதம்
மதம்

எழுத்துருவைத் தெரிவுசெய்ய.
பாமினி ஆங்கில உச்சரிப்பில்

[மேலுள்ள பெட்டியில் தட்டச்சினால் கீழுள்ள பெட்டியில் ஒருங்குறிக்கு (Unicode) மாற்றப்பட்ட எழுத்துரு கிடைக்கும்]


சுரதா, கிருபாவுக்கு நன்றி


Friday, August 19, 2005

ஈழப்போராட்டத்தில் சாட்சியங்கள்.

ஈழப்போராட்டத்தில் இது ஒரு சாட்சியம்.

இனவாத அரசின் செயற்பாடுகளால் எழும் வன்முறைகள் அடிமனத்தின் ஆழத்தில் புதையுண்டு போய், அதுவே சந்ததி வழியாகக் காவிச் செல்லப்பட்டு இயலுமை உண்டானபோது வெளிப்போந்து வீரியம் பெறுகின்றது. என் மகனும் இவ்வெளிப்பாட்டின் ஒரு குறியீடே. இவன் போராடப்போனபோது நான் எனக்குள் வருந்தியதுண்டு. போராடப் போய்விட்டான் என்பதற்காக அன்று. எனக்குச் சொல்லாமல் போய்விட்டான் என்பதற்காக. அது அவனுக்கும் தெரியும். ஒருநாள் விளையாட்டாக அவன் ‘அம்மா நான் போராடப் போறன்’ என்றான். நானும் நாடகப் பாணியில் ‘மகனே நான் உனக்கு என்ன குறையடா வைத்தேன்?’ என்றேன். ‘எனக்குத் தமிழீழம் இல்லாத குறைமட்டுந்தான்’ என்றான்.

ஒவ்வொரு போராளியின் பின்னணியிலும் ஒரு சரித்திரமுண்டு. கேணலாக இருந்தாலும் சாதாரணப் படைவீரனாக இருந்தாலும் உணர்வு நோக்கம் ஒன்றுதான். அந்தப் பிஞ்சு உள்ளத்தின் ஆதங்கத்தை நான் மதித்தேன். ஒருநாள்… ஒரேயொருநாள் அவனைத் துப்பாக்கியேந்தியவனாய்ச் சீருடையிற் பார்க்கத் துடித்தேன். கல்மடுவில் நிற்பதாய் ஒரு செய்தி. கைநிறையப் பலகாரம் கொண்டு ஓடிப்போனால் கால்மணி நேத்துக்கு முன்னரே முகாம் கைவிடப்பட்டிருந்தது. விடுதலைப் புலிகளும் மக்களும் வீதி திருத்தும் வேலையில் ஈடுபட்டிருந்தனர். அவ்வழியில் நான் வேறு வேலையாகப் போனேன். அறிமுகமான ஒருவர் ‘உங்கட மகன் இப்பதான் உந்த ரைக்ரரில போறார்’ என்று கூற, என் முழுச்சக்தியையும் கொடுத்து மிதிவண்டியைச் செலுத்தினேன். வளைவுகள் நிறைந்த காட்டுப்பாதை. உழவு இயந்திர ஓசைகேட்டுக் கொண்டேயிருந்து ஒருகட்டத்தில் மறைந்துவிட்டது. ஏமாற்றத்தோடு மீண்டேன்.

“ஓமந்தையில உங்கட மகனை இப்ப கண்டனான்” ஒரு போராளி கூறினான். பலகாரம் செய்ய ஏது நேரம்? பத்து ரொபி வாங்கிக்கொண்டு ஓடினேன். அவர்கள் சாப்பிட்ட இலையை நாய் நக்கிக் கொண்டிருந்தது. அவர்கள் புறப்பட்டுப் போய்விட்டார்கள் என்ற செய்தி எனக்குக் கிடைத்தது. இப்படிப் பலமுறை. அவனைப் பார்ப்பேனென்ற நம்பிக்கை எனக்கு.

அவனை ஈச்சங்குளத்தில் புலிக்கொடி போர்த்து நாலு புலிவீரர்கள் தூக்கிவர ஒரு மலர்மாலையுடன் அவனை நிச்சயம் சந்திப்பேன். அந்தத் துணிவை, மனவலிமையை எனக்குத் தா என்று இறைவனை எந்நாளும் பிரார்த்தித்தேன்.

எனக்கு அந்தத் துணிவைத் தரமுடியாது என இறைவன் நினைத்தானோ என்னவோ இந்தக் காட்சியும் என் கனவோடு முடிந்துபோயிற்று. ஆகாயக் கடல்வெளிச் சமரிலே அவன் ஆகுதியான செய்தியும் எனக்கு ஆறுதலாகத் தான் வந்தது.

என் மகன் இறந்துபோகவில்லை. சீருடை தரித்த ஆயுதம் தாங்கிய ஒவ்வொரு போராளியின் உள்ளேயும் அவன் வாழ்க்கிறான். அதுதான் உண்மை.
அவர்களுக்காகவே நான் வாழ்ந்தேன். வாழ்கிறேன், வாழுவேன். அவர்களுடைய விருப்பமே என் விருப்பம். புதிராகிப்போன என் மக்களைப்பற்றி நான் புலம்பியதில்லை. பொல்லாத உலகம் என்னைப் புரிந்துகொள்ளவில்லை. கல்லான மனமென்று காறி உமிழ்ந்தது.
--------------------------------------------
--------------------------------------------

இது தற்போது முழுநேரப் போராளியாகச் செயற்பட்டுக்கொண்டிருக்கும் போராளி, ஆசையாய் வளர்த்த மகனை போராட்டத்தில் களப்பலியாகக் கொடுத்த தாயொருத்தி, அந்த வீரச்சாவின் பின்னரும், இறந்தவனுக்கு நேர் மூத்தவன் தானும் போராடப்போவதாகக் கேட்டதால் தானே கொண்டுசென்று இயக்கத்திலிணைத்த தாயொருத்தி, எழுதிய சாட்சியம்.



'தமிழ்க்கவி அம்மா' என ஆசையாக அழைக்கப்படும் இவர் ஓர் எழுத்தாளர், கலைஞர், கவிஞர், மொழிபெயர்ப்பாளர் எனப் பல பரிமாணங்களைக் கொண்டவர். பத்ரி அவர்கள் முன்பு தெல்கா வெளியிட்ட கட்டுரையைப் பற்றி எழுதிய பதிவில் குறிப்பிட்டிருந்த அதே தமிழ்க்கவி தான். தெல்காவும் இவரது செவ்வியை வெளியிட்டிருந்தது.

ஈழப்போராட்டத்தில் இவையும் சாட்சியங்கள்தாம்.
இன்றும் தடம்புரளாமல் இயங்கும் சாட்சியங்கள்.
-------------------------------------------------

‘இனி வானம் வெளிச்சிரும்’ என்ற ஒரு படைப்பு இவரால் வெளியிடப்பட்டது. அதில்வரும் பார்வதி இவர்தான். ஒரு ஏழைத்தாயின் வாழ்க்கை, போராட்டம் என்பன அழகாகச் சொல்லப்பட்ட நவீனம்.
புனைவற்ற உண்மைக் கதை.
இதை வாசித்த யாராவது அறிமுகம் (அல்லது விமர்சனம்) செய்யலாம்.
டி.ஜே. இப்படைப்பைப் பற்றியெழுதலாம்.
எழுதுவார்கள் என்று நம்புகிறேன்.
------------------------------------------------
படஉதவி: தெல்கா

எழுத்துருவைத் தெரிவுசெய்ய.
பாமினி ஆங்கில உச்சரிப்பில்

[மேலுள்ள பெட்டியில் தட்டச்சினால் கீழுள்ள பெட்டியில் ஒருங்குறிக்கு (Unicode) மாற்றப்பட்ட எழுத்துரு கிடைக்கும்]


சுரதா, கிருபாவுக்கு நன்றி


Monday, August 08, 2005

மெல்பேர்ண் மெல்லிசை நிகழ்ச்சி

நேற்று முன்தினம் மாலை மெல்பேணில் தமிழர் புனர்வாழ்வுக்கழக நிதிக்காக மெல்லிசை நிகழ்ச்சியொன்று நடைபெற்றது. மாலை 6.00 மணிக்குத் தொடங்குமென அறிவிப்பு இருந்தபோதிலும், ‘எங்கட சனத்தின்ர நகழ்ச்சி தானே’ என்ற நினைப்பில் சரியான நேரத்துக்குச் செல்ல முயலவில்லை. நான் மண்டபத்தை அடையும்போது 6.15.
உள்ளே “அந்தி மழை பொழிகிறது” பாட்டுப் போய்க்கொண்டிருந்தது. துலைவார் சரியா 6.00 க்கு ஒரு நிமிசமும் பிந்தாமல் நிகழ்ச்சியத் தொடங்கிப்போட்டாங்கள்.

இசைக்குழு ஜோய் மகேஸ்வரனது என்று ஏற்கெனவே தெரியும். 'ஜோய்' யாரென்று கேட்கிறீர்களா? விடுதலைப்புலிகளின் பொருளாதார ஆலோசகராக பல சுற்றுப் பேச்சுவார்த்தைகளிற் கலந்து கொண்டவர். சுனாமி மீள் கட்டமைப்பு மற்றும் ஏனைய ஆலோசனைச் சபைகளிலும் கலந்து கொண்டவர். இன்றும் தமிழர் புனர்வாழ்வுக்கழகத்தின் பணியாளராயிருப்பவர். இவர் அந்த இசைக்குழுவை நெறிப்படுத்துபவர் என்றே நினைத்து வைத்திருந்தேன். ஆனால் அவரே பாடகராகவும் வாத்தியக் கலைஞராகவும் இருப்பார் என்று நினைக்கவில்லை. ஒருநேரம் தபேலாவுடனும் பலநேரம் கிற்றாருடனும் இருந்தார். அவர் பாடிய சுனாமிப் பாடல் நெஞ்சை உருக்கியது. இசையும் வரிகளும் அற்புதம் என்றாலும் ஜோய் மகேஸ்வரனின் குரல் தான் உண்மையான உணர்வைத் தந்தது.

பாடப்பட்ட பாடல்கள் மனத்தைத் தொட்டன. பாடல்தெரிவுகள் என் ரசனைக்கு ஏற்றாற்போல் இருந்தன.
“அந்தி மழை பொழிகிறது”
“பொத்தி வச்ச மல்லிகை மொட்டு”
“கூட்டத்திலே கோயில் புறா”
“குமரிப்பெண்ணில் உள்ளத்திலே”
“பாட்டுப் பாடவா பார்த்துப் பேசவா”
“செந்தூரப் பூவே செந்தூரப் பூவே… சில்லென்ற காற்றே”
“பொன்மகள் வந்தால் பொருள்கோடி தந்தாள்”

மனதை வருடும் இடைக்கால மற்றும் பழைய பாடல்கள். இந்தப் பாடற்றெரிவுக்கு முக்கிய காரணமாக நான் நினைப்பது ரசிகர்களைத்தான். வந்திருந்தவர்களில் அந்தப் பாடல்களுக்குரிய ரசிகத் தலைமுறைதான் அதிகமானது. இளையவர்களில் மொழி தெரிந்து ரசிக்கத்தக்கவர்கள் எத்தனை பேரென்று தெரியாது. அவர்களின் ரசனைக்காகவும் சில பாடல்கள் பாடப்பட்டன. குறிப்பாக இரண்டு இந்திப்பாடல்கள். சும்மா சொல்லக்கூடாது இந்திப்பாடல்களை நன்றாகவே பாடினார்கள். குறிப்பிட்ட திசையிலிருந்து பலமான வரவேற்புக் கிடைத்தது. (“ஈழத்தில் இந்தியெதிர்ப்பு இல்லாமையால் தான் இப்படி இந்திப்பாடல் பாடவும் அதைக்கேட்டு ரசிக்கவும் முடிகிறது, குறைந்த பட்சம் ஒஸ்ரேலியாவில் இந்தியெதிர்ப்பு இல்லை” என்றுகூட பின்னூட்டம் வந்தாலும் ஆச்சரியப்படப்போவதில்லை)

இதற்கிடையில் சில கோமாளிப்பாடல்களும் (என்னைப் பொறுத்தவரை) பாடப்பட்டன. போய்ஸ் படத்திலிருந்து ஒரு பாட்டு. அதற்குள் ஹரினியும் சித்தார்த்தும் அந்தரத்தில் தொங்கும் காட்சிகளும் போட்டுக்காட்டினார்கள். பாடலின் இறுதியில் ஓ..ஓ..ஓ..ஓ.. என்று ஊளையிடவும் வேண்டும். ஆனால் பலர் ரசித்தார்கள் என்பதையும் சொல்லத்தான் வேணும். (பாடல்கள் மூலத்திலிருந்து வேறுபடவில்லை. என் எரிச்சல் மூலப்பாடல்கள் மீதே இருக்கிறது.) பாடப்பட்ட புதியபாடல்களில் நான் ரசித்தது, சங்கமம் படத்தில் வரும்,
“ஒரு முறை கிள்ளிப் பார்த்தேன், முதல் முறை கண்ணில் வேர்த்தேன்”

ஆறிவிப்பாளருக்கு வைரமுத்துவின் நினைப்பும் எடுப்பும் இருக்கிறது போலுள்ளது. அதே வகிடெடுத்த தலைமுடி, வெள்ளையுடை, கவிதையாகவே அறிவிப்புச் செய்கிறாராம். இறுதியில் அவை தான் எழுதியவையல்ல, சிறிஸ்கந்தராசா தான் எழுதினார் என்பதையும் சொன்னார். அறிவிப்பாளினி ஜோய் மகேஸ்வரனின் மனைவி. அறிவிப்பு கலகலப்பாக இருந்தாலும் அதிகமாகப் போய்விட்டது போன்ற உணர்வு வந்தது.

நடனப்பள்ளியை இயக்கிவரும் பெண்மணியொருவரை மேடையிலழைத்துக் கௌரவித்தார்கள். வழமையாக ஒவ்வொரு மேடையிலும் கலைத்துறை சார்ந்த ஒருவரைக் கௌரவம் செய்வது வழமையாம்.

இடைவேளைக்குப் பின் நிகழ்ச்சியில் பாடல்களுக்கு விசிலடிப்பதும் கூக்குரலிடுவதும் சேரத்தொடங்கியது. குறிப்பாகப் பல்கணியில் இருந்த கூட்டத்திடமிருந்து தான் இந்த வரவேற்பு வந்தது. அபிமான ‘வலைப்பதிவாள’ரும் அந்த விசிலடிச்சான் கூட்டத்தின் நாயகமாக இருந்திருப்பார் என்பதை நான் சொல்லத்தேவையில்லை.

ரசிகர்களிடமிருந்து அதிக வரவேற்புக் கிடைத்த பாடல், இதயக்கோவில் படத்தின் “கூட்டத்திலே கோயில் புறா”. ஆனால் நான் அதிகம் விரும்பி ரசித்தது, “பாட்டுப் பாடவா பார்த்துப் பேசவா”.

நிகழ்ச்சியின் இறுதியில் சில பாடல்களைக் கலந்துகட்டி தந்தார்கள். ஒவ்வொருவரும் ஒவ்வொரு சரணம் பாடினர். ஜோய் மகேஸ்வரன்,
அஞ்சுக்குள்ள நால வையி,
ஆழம் பாத்துக் கால வையி
.”
என்ற ‘அருமையான’ தத்துவப்பாடலின் ஒரு சரணத்தைப் பாடிச் சென்றார். என்னைக் கேட்டால் அந்த இறுதிச்சாம்பாறு தேவையில்லாத ஒன்று என்றே சொல்வேன். எனக்கு எரிச்சலைத் தந்ததும் அதுதான். ஆனால் வந்திருந்த ரசிகர்களில் நான் ஒருவன் மட்டுமே.

எப்படியிருந்தாலும் மனதுக்கு நிறைவான, இனிமையான ஓர் இரவு நிகழ்ச்சியென்பதில் ஐயமில்லை. பொதுவாக எனக்கு இசை நிகழ்ச்சிகள் பற்றியிருந்த அபிப்பிராயம் ஓரளவு மாறியிருந்தது.

படங்கள் எதுவும் கைவசமில்லையென்பதால் போடமுடியவில்லை. மன்னிக்கவும். சயந்தனின் பதிவில் படங்களுடன் போட்டுள்ளார்.

எழுத்துருவைத் தெரிவுசெய்ய.
பாமினி ஆங்கில உச்சரிப்பில்

[மேலுள்ள பெட்டியில் தட்டச்சினால் கீழுள்ள பெட்டியில் ஒருங்குறிக்கு (Unicode) மாற்றப்பட்ட எழுத்துரு கிடைக்கும்]


சுரதா, கிருபாவுக்கு நன்றி


Monday, August 01, 2005

போராட்டத்தில் பாடகனும் நடிகனும்.

இன்று மேஜர் சிட்டு அவர்கள் வீரச்சாவடைந்த நாள். தமிழீழ எழுச்சிப் பாடல்களில் எழுபதுக்கும் மேற்பட்ட பாடல்களைப் பாடிய இம்மாவீரன் 01.08.1997 அன்று ஓமந்தை இராணுவ முகாம் மீதான தாக்குதலில் வீரச்சாவடைந்தார்.

இவர் பாடிய அனைத்துமே அருமையான பாடல்கள். என்றாலும் ‘உயிர்ப்பூ’ படத்தில் இவர் பாடிய ‘சின்னச் சின்னக் கண்ணில்’ என்ற பாடல் அனைவரையும் உருக்கியது. தனியே பாடலைக் கேட்பதைவிட படத்தோடு பார்த்தால் அப்பாடலின் முழு அனுபவத்தையும் பெற முடியும்.

அப்படத்தில் மூத்த பிள்ளை (நகுலன்) ஊர்ப்பெண்ணொருத்தியின் தண்ணீர்க்குடத்தை விளையாட்டுத் தனமாக உடைத்ததால் தந்தையால் வீட்டை விட்டுத் துரத்தப்படுகிறான். அவன் மீது அளவற்ற பாசம் கொண்ட தம்பி, தமையனை நினைத்து நொடித்துப்போகிறான். ஒரு குந்தில் இருந்து கொண்டு தமையன் (நகுலன்) தம்பியை நினைத்துப்பாடும் பாடல் தான் இது.

சிட்டுவின் குரல் அழகாக இழைந்தோடும். அந்தப் பாத்திரமாகவே மாறிவிட்ட தமையன், தம்பி இருவரின் நடிப்பும் பாடலுக்கு மேலும் மெருகூட்டும். அந்த நகுலன் பற்றியும் சிறிது சொல்ல வேண்டும்.

அந்தப் படத்தின் கதையின்படி, எந்தப்பொறுப்புமற்றுச் சுற்றித் திரியும் மூத்தபிள்ளை தான் நகுலன். ஒரு நேரத்தில் உணர்ந்து கடற்றொழிலுக்குச் செல்கிறான். தன் தம்பியை சிங்களக் கடற்படையினரின் துப்பாக்கிக் குண்டுக்குப் பலிகொடுக்கிறான். பின்னொரு நாள் தந்தையையும் அவ்வாறே கண்ணெதிரில் பலிகொடுக்கிறான். பின் போராட்டத்திலிணைந்து ஒரு கட்டத்தில் கரும்புலியாக எதிரியின் கப்பலை மோதி அழிக்கிறான்.

இதுதான் அடிப்படைக்கதை. இதில் நகுலன் நடிக்கும்போதே போராளி. பின்னொரு நாளில் அப்படத்தில் நடந்தது போலவே சம்பவம் நடந்தது. ஆம் ‘உயிர்ப்பூ’ படத்தில் இறுதியாக கரும்புலியாக எதிரியின் கப்பலைத் தகர்ப்பதாய் நடித்த அதே நகுலன், புல்மோட்டைக் கடற்பரப்பில் எதிரியின் டோறாப் பீரங்கிப்படகொன்றைத் தாக்கி மூழ்கடித்து கடற்கரும்புலி மேஜர் நகுலனாக வீரச்சாவடைந்தான்.


போர்க்குயில்களாய்ப் பாடித்திரிந்த மேஜர் சிட்டு, மேஜர் மாதவன் போன்றோர் (இன்னும் பலர்) களத்திலேயே சமரிட்டு வீரச்சாவடைந்தனர். அப்படியே நகுலனும் நடிகனாகவே இருந்துவிடவில்லை.

நகுலனையும் அவனோடு விரச்சாவடைந்த கண்ணாளனையும் நினைந்து பாடும் பாடல்




படஉதவி:- அருச்சுனா இணையத்தளம்.

எழுத்துருவைத் தெரிவுசெய்ய.
பாமினி ஆங்கில உச்சரிப்பில்

[மேலுள்ள பெட்டியில் தட்டச்சினால் கீழுள்ள பெட்டியில் ஒருங்குறிக்கு (Unicode) மாற்றப்பட்ட எழுத்துரு கிடைக்கும்]


சுரதா, கிருபாவுக்கு நன்றி


© 2006  Thur Broeders

________________