தைப்பொங்கல் தினமே தமிழ்ப் புத்தாண்டுத் தினமாகும்!
படியெடுக்கப்பட்ட கட்டுரையை வாசிப்பதற்கு முன்னர் எனது குறிப்புக்கள் சில: தைத்திருநாளை தமிழர் புத்தாண்டுத் தொடக்கமாகக் கொணடாடுவது தொடர்பாக இரு வருடங்களின் முன்பே வலைப்பதிவில் கதைத்துள்ளேன். அப்போது கல்வெட்டு(எ) பலூன்மாமா பொங்கலைத் தமிழர் திருநாளாகக் கொண்டாடுவது தொடர்பாக பெரியளவில் முயன்றிருந்தார். தைத்திருநாள் சயம நிகழ்வன்று என்பதைச் சொல்லி அவர் விவாதத்தைத் தொடக்கிவைத்தார். அப்போதே எனது இக்கருத்தையும் சொல்லியிருந்தேன். எனது கருத்தென்பது விடுதலைப்புலிகளால் உருவானது என்பதைச் சொல்லியாக வேண்டும். இன்றல்ல; பல ஆண்டுகளின் முன்பே விடுதலைப்புலிகளின் முக்கியத்தர்களால் சித்திரைப் புதுவருடத்துக்கெதிரான கடுமையான எதிர்ப்பும், தைத்திருநாளே தமிழரின் ஆண்டுத் தொடக்கமாக இருக்க வேண்டுமென்ற பார்வையும் வெளியிடப்பட்டு வந்துள்ளன.தமிழீழ நிதித்துறைப் பொறுப்பாளர் தமிழேந்தி, தமிழீழக் கல்விக் கழகப்பொறுப்பாளர் இளங்குமரன் (பேபி சுப்பிரமணியம்), தற்போது வரலாற்றுத்துறைப் பொறுப்பாளராக இருக்கும் யோகரத்தினம் யோகி ஆகியோர் இவர்களுள் முதன்மையானவர்கள். ஓரளவுக்குப் பெரியாரின் தாக்கம் இவர்கள்மேல் இருந்தபோதிலும், மொழிஞாயிறு தேவநேயப் பாவாணரின் தீவிர தொண்டர்கள் எனலாம் (சொற்பிறப்புப் பற்றிய விவாதங்களில் சிலவிடங்களில் பாவாணரிடத்தில் மாறுபாடுடையவர்கள் என்றபோதும்கூட). அவ்வழியே மறைமலை அடிகள், கி.ஆ.பெ. விசுவநாதன் போன்றோரின் கருத்துக்களால் உள்வாங்கப்பட்டவர்கள். அதனாலேயே சித்திரை வருடப்பிறப்பு மீதான கடுமையான எதிர்ப்பும், தைத்திருநாளே ஆண்டுத்தொடக்கமென்ற வாதமும் இவர்களிடமிருந்ததில் ஆச்சரியப்பட ஏதுமில்லை. (கி.ஆ.பெ. விசுவநாதன் பற்றிய சராசரி ஈழத்தவர்களின் அறிவுத்தொடக்கம், தலைவர் பிரபாகரன் பற்றி அவர் வெளியிட்ட கருத்துடன்தான் தொடங்கியது என்று நினைக்கிறேன். அதன்பின் அவர் பற்றிய தேடல் அதிகரித்ததோடு அவரின் கருத்துக்கள் பெருமளவில் மக்களிடம் சென்றன என்பதும் குறிப்பிடப்பட வேண்டிவை.) ஆனால் தமது அரசாங்கத்தில் இதையொரு ஆணையாகக் கொண்டுவராமல் பரப்புரை மூலம் செய்ய இவர்கள் முயற்சித்தார்கள்; முயற்சித்துக் கொண்டிருக்கிறார்கள். இதில் வெற்றி பெறுவார்கள் என்பதிலும் ஐயமில்லை. நிலைமை சீராக வரும்போது ஒருநாள் இவர்களிடமிருந்து அறிப்பு வரும். தமிழீழத்தில் மொழி தொடர்பில் நடைபெற்ற நிறையப் புரட்சிகளுக்கு தமிழேந்தியும், இளங்குமரனும் அத்திவாரங்கள். போராளிகளுக்கான தனித்தமிழ்ப் பெயர்கள், கடைகள் - நிறுவனங்களுக்கான தனித்தமிழ்ப் பெயர்கள், பொருட்களுக்கான தனித்தமிழ்ப் பெயர்கள் எப்போதோ நடைமுறைக்கு வந்துவிட்ட, வெற்றிபெற்ற பல நடவடிக்கைகளுக்கு இவர்களே கால்கள். இராணுவத்துறையிற்கூட தமிழ்க்கட்டளைகளைப் பயன்படுத்த முடியுமா என்ற கேள்விகளைப் புறந்தள்ளி அதைச் செய்துகாட்டியவர்கள். தமிழ் மீட்பை ஒரு வெறியாகவே செய்துவருபவர்கள். இந்திய இராணுவம் ஈழத்தைவிட்டு வெளியேற்றப்பட்ட பின்னர், "யாழ்ப்பாணத்தில்" தமிழ்த் தேசியம் மீளெழுச்சியுற்ற ஒரு பொற்காலம் எனலாம். யாழ்ப்பாணத்தில் சடுதியான மாற்றங்கள் நிகழ்ந்தன. "முத்தமிழ் விழா" என்ற பெயரில் சில இடங்களில் நடத்தப்பட்ட மூன்றுநாள் பெருவிழாவை யாரும் மறந்திருக்க மாட்டார்கள். மிகப்பெருமெடுப்பில் புலிகளால் நடத்தப்பட்ட இவ்விழா உண்மையில் மிகப்பெரும் வெற்றியைப் பெற்றது. இவ்விழா குறித்து எதிர்த்தரப்புக்கள் அதிகம் கவலைப்பட்டது உண்மை. 'புலிகள் தமது படைப்பலத்தால் தோற்றாலும்கூட இவ்விழாக்கள் மூலம் மீளவும் தம்மைக் கட்டியெழுப்பி விடுவார்கள்' என்று கொழும்புப் பத்திரிகைகள் எழுதின. தென்மராட்சியில் நடைபெற்ற முத்தமிழ் விழாவில் ஆயிரக்கணக்கானோர் முன்னிலையில் தலைவர் பிரபாகரன் பகிரங்கமாகத் தொன்றி பொதுமக்களுக்கு மேடையில் வைத்துப் பரிசளித்தார். அதேகாலத்தில் அறிவிப்புப் பலகைகளின் பெயர்களைத் தமிழில் மாற்றுவது, நிறுவனப்பெயர்களை தமிழில் மாற்றுவது உட்பட பல வேலைத்திட்டங்கள் புலிகளால் வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டன. தைத்திருநாளை எழுச்சியாகக் கடைப்பிடிப்பதும் அப்போதே தொடங்கியது. அதுவரை தைப்பொங்கல் இந்துக்களுக்குரிய நாள் என்றிருந்த கருத்துருவாக்கம் உடைக்கப்பட்டது. 1991 ஆம் ஆண்டுக்குரிய தைத்திருநாளை, யாழ்ப்பாணத்துக் கத்தோலிக்கத் தலைமை கொண்டாடி, அது தமிழர் திருநாளே என அறிவித்தது. அவ்வாண்டுக்குரிய தைப்பொங்கல் கத்தோலிக்கத் தேவாலங்களில் கொண்டாடப்பட்டது. தைத்திருநாள் சிறப்புத் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டு கோவிலிலேயே பொங்கி மக்களுக்குப் பகிர்ந்தளிக்கப்பட்டது. அதன்பிறகு கத்தோலிக்கர் வீடுகளிலும் பொங்கும் நிகழ்வை அங்கொன்றும் இங்கொன்றுமாகத் தொடங்கினர். திபாவளிக்கெதிரான கருத்துக்கள் அன்றுதொடக்கம் விடுதலைப்புலிகளாற் சொல்லப்பட்ட வருகின்றன என்றபோதும் அவை நிறுத்தப்படவில்லை. ஆனால் இந்தியாவோடு ஒப்பிடும்போது ஈழத்தில் திபாவளியென்பது (புலிகள் கட்டுப்பாட்டைக் கொண்டுவருவதற்கு முன்பேகூட) முக்கியமான பண்டிகையாக இருந்ததில்லையென்றே தெரிகிறது. இன்றும் தீபாவளி தமிழருக்கான பண்டிகையன்று என்ற கருத்து வலுவாகச் சொல்லப்பட்டு வருகிறது; பெருமளவானோர் அதை ஏற்றுக்கொண்டுள்ளார்கள் என்றும் கூறலாம். வன்னியில் இது சாத்தியப்படக் காரணமுள்ளது. தீபாவளியையும் சித்திரை வருடப்பிறப்பையும் கொண்டாட்டமாக்குவதில் முக்கிய காரணியாக இருக்கும் குறிப்பிட்ட நாட்களுக்குரிய சிறப்புத் திரைப்பட வெளியீடுகள் வன்னியில் இல்லையென்பதே அது. ~~~~~~~~~~~~~~~~~~~ தைத்திருநாளையே தமிழரின் ஆண்டுத்தொடக்கமாகக் கருத வேண்டும் என்ற தமிழக அரசின் அறிவிப்பைத் தொடர்ந்து வலைப்பதிவுலகில் பல்வேறு விவாதங்கள் நிகழ்ந்தன. ஆதரவு / எதிர்ப்புப் பதிவுகளைப் படித்து இது தொடர்பான கருத்துக்களைப் பெற்றுக்கொள்வது சிறப்பு. ** இது தொடர்பான மேலதிக விவாதங்கள் நிகழ்த்தப்பட்டால் நன்று. நிறையத் தகவல்கள் அறிந்து கொள்ளலாம். என் பங்குக்கு, ஆதரவுக் கட்டுரையொன்றை இடுகிறேன். தமிழ்நாதம் இணையத்தளத்தில் வெளிவந்த கட்டுரையிது. தைப்பொங்கல் தினமே தமிழ்ப் புத்தாண்டுத் தினமாகும்! ஆக்கம்: சபேசன் - மெல்பேர்ண் - அவுஸ்திரேலியா தமிழரின் தேசியத் திருநாளான தைப்பொங்கல் நாள் குறித்துப் பல கருத்துக்களை, வரலாற்று வழியாகவும், வாழ்வியல் வழியாகவும், பண்பாட்டு வழியாகவும், ‘பண்டைய காலக் கணக்கு முறை’ வழியாகவும் முன் வைத்துத் தர்க்கிப்பதுவே இந்தக் கட்டுரையின் நோக்கமாகும். தமிழீழத்திலும், தமிழ் நாட்டிலும் மட்டுமன்றி, உலகளாவிய வகையில் இன்று புலம் பெயர்ந்திட்ட தமிழ் மக்களும் தைப்பொங்கல் திருநாளைக் கொண்டாடுகின்ற இக் காலகட்டத்தில் இவ்வகையான தர்க்கங்கள் பல ஆக்கபூர்வமான சிந்தனைகளைக் கிளர்ந்தெழச் செய்து அவற்றைச் செயற்பட வைப்பதற்கும் உதவக் கூடும்! “பொங்கல்” என்கின்ற பழந்தமிழ்ச் சொல்லுக்கு உரிய அர்த்தங்கள்தான் என்ன? பொங்குகை, பெருங்கோபம், மிளகு-சீரகம்-உப்பு-நெய், முதலியன கலந்து இட்ட அன்னம், உயர்ச்சி, பருமை, மிகுதி, கள், கிளர்தல், சமைத்தல், பொலிதல் என்று பல பொருட்களைத் தமிழ் மொழியகராதியும், தமிழ்ப் பேரகராதியும் தருகின்றன. அத்தோடு இன்னுமொரு பொருளும் தரப்படுகின்றது. ‘சூரியன் மகரராசியில் பிரவேசிக்கும் நாளான தை மாத முதற்தேதியன்று சூரியனை வழிபட்டுப் பொங்கல் நிவேதனம் செய்யும் திருவிழா’-என்ற பொருளும், பொங்கல் என்ற சொல்லுக்குத் தரப்பட்டுள்ளது. இந்தப் பொருளுக்கு உள்ளே, பல முக்கியமான விடயங்கள் பொதிந்திருப்பதை நாம் காணக் கூடியதாக உள்ளது. அதாவது பொங்கல் திருவிழா என்பது தமிழ் மக்கள் வாழ்வில் வரலாற்று ரீதியாக, ஒரு பண்பாட்டு அங்கமாக, அவர்களது வாழ்வியலில் திகழுகின்ற திருவிழாவாக இருந்து வந்துள்ளது என்பது புலனாகின்றது. அத்தோடு பண்டைத் தமிழர்கள் இயற்கையின் காலக்கணக்கைக் கணித்து, சரியாக எந்த நாளில் தைத்திருநாளைக் கொண்டாட வேண்டும் என்பதையும் அறிந்திருந்தார்கள் என்பதையும் நாம் அறியக் கூடியதாக உள்ளது. இதனைச் சற்று ஆழமாகக் கவனிப்போம். பண்டைத் தமிழன் இயற்கையை வணங்கி, இயற்கையோடு ஒன்றிணைந்து வாழ முனைந்தவன் ஆவான்! தன்னுடைய வாழ்க்கைக் காலத்தில் வித்தியாசமான காலப்பருவங்கள் தோன்றுவதையும் அவை மீண்டும் மீண்டும் தொடர்ந்து வருவதையும் தமிழன் அவதானித்தான். ஒரு குறிப்பிட்ட காலச் சேர்வையில், மழை, வெயில், குளிர், பனி, தென்றல், வாடை, ஆகியவை மாறி மாறித் தோன்றி, தமிழனின் வாழ்வை ஆண்டு வந்ததால் இந்தக் காலச் சேர்வையைத் தமிழன் ‘ஆண்டு’ என்று அழைத்தான் - என்று அறிஞர் வெங்கட்ராமன் என்பார் கூறுவார். தமிழகத்தில் வானியலில் தேர்ச்சி பெற்ற அறிஞர்களை ‘அறிவர், பணி, கணியன்’ -என அழைத்தார்கள். மூவகைக் காலமும் நெறியினாற்றும் ‘அறிவர்கள்’ குறித்துத் தொல்காப்பியர் குறிப்பிடுகின்றார். அரசர்களுடைய அவைகளில் ‘பெருங் கணியர்கள்’ இருந்ததாகச் சிலப்பதிகாரமும் குறிப்பிடுகின்றது. தொல்காப்பியத்திலும், சங்க நூல்களிலும் தென்படுகின்ற வானியற் செய்திகள் முழுமையாக உருப்பெற்றமைக்குப் பல ஆயிரம் ஆண்டுகள் தேவைப்பட்டிருக்கும் என்பதில் ஐயமில்லை. அத்தோடு ஆரியர்களது ஊடுருவலுக்கு முன்னரேயே தமிழர்கள் வானியலில் பெரிய அளவில் முன்னேறி இருந்தனர் என்று பல் நாட்டு அறிஞர்களும் கூறியுள்ளார்கள். மேல்நாட்டு அறிஞரான சிலேட்டர் என்பவர் ‘தமிழருடைய வானநூற் கணித முறையே வழக்கில் உள்ள எல்லாக் கணிதங்களிலும் நிதானமானது’ என்று குறிப்பிட்டுள்ளார். தமிழகத்துப் பரதவர்கள் திங்களின் நிலையைக் கொண்டு சந்திரமானக் காலத்தைக் கணித்தனர் என்றும், தமிழகத்து உழவர்கள் சூரியன், திங்கள் ஆகியவற்றின் இயக்கங்களையும் பருவங்களையும் மிகத் தெளிவாக அறிந்திருந்தனர் என்றும் ஆய்வுகள் தெரிவிக்கின்றன. (A Social history of the Tamils-Part 1) தமிழர்கள் இயற்கையை ஆதாரமாகக் கொண்டு, காலத்தைப் பகுத்தார்கள். ஒரு நாளைக் கூட ஆறு சிறு பொழுதுகளாகத் தமிழர்கள் அன்றே பகுத்து வைத்தார்கள். ‘வைகறை, காலை, நண்பகல், ஏற்பாடு, மாலை, யாமம்’ என்று அவற்றை பகுத்து அழைத்தார்கள். அது மட்டுமல்ல, அந்த ஆறு சிறு பொழுதுகளின் தொகுப்பையும் அறுபது நாழிகைகளாகப் பகுத்துக் கணக்கிட்டார்கள். அதாவது ஒரு நாளில் ஆறு சிறுபொழுதுகள் உள்ளன. அந்த ஆறு சிறு பொழுதுகள் கழிவதற்கு அறுபது நாழிகைள் எடுக்கின்றன என்று தமிழர்கள் பண்டைக் காலத்தில் கணக்கிட்டார்கள். ஒரு நாழிகை என்பது தற்போதைய 24 நிமிடங்களைக் கொண்டதாகும். அதாவது பண்டைக் காலத்தமிழர்களது ஒரு நாட்பொழுதின் அறுபது நாழிகைகள் என்பன தற்போதைய கணக்கீடான 1440 நிமிடங்களோடு - அதாவது 24 மணித்தியாலங்களோடு - அச்சொட்டாகப் பொருந்துகின்றன. தமிழர்கள் ஒரு நாட் பொழுதை, தற்போதைய நவீன காலத்தையும் விட, அன்றே மிக நுட்பமாகக் கணித்து வைத்திருந்தார்கள் என்பதே உண்மையுமாகும். தைப்பொங்கல் தினத்தின் முக்கியத்துவத்தைக் காட்டுகின்ற தமிழர்களின் ஆண்டுப் பகுப்பை அடுத்துக் கவனிப்போம். பின்னாளில் வந்த ஆரியர்கள் ஓர் ஆண்டை நான்கு பருவங்களாக மட்டும்தான் வகுத்தார்கள். ஆனால் பண்டைக்காலத் தமிழர்களோ, தமக்குரிய ஆண்டை, அந்த ஆண்டுக்குரிய தமது வாழ்வை, ஆறு பருவங்களாக வகுத்திருந்தார்கள். 1. இளவேனில் - ( தை-மாசி மாதங்களுக்குரியது) 2. முதுவேனில் - (பங்குனி - சித்திரை மாதங்களுக்குரியது) 3. கார் - (வைகாசி � ஆனி மாதங்களுக்குரியது) 4. கூதிர் - (ஆடி - ஆவணி மாதங்களுக்குரியது.) 5. முன்பனி � (புரட்டாசி � ஐப்பசி மாதங்களுக்குரியது) 6. பின்பனி � (கார்த்திகை - மார்கழி மாதங்களுக்குரியது) (இதைத் தவிர, ஓர் ஆணின் வாழ்க்கைக் காலத்தை, ஒரு பெண்ணின் வாழ்க்கைக் காலத்தை, ஏன் ஒரு மலரின் வாழ்க்கைக் காலத்தைக் கூடத் தமிழன் பல காலத் தொகுதிகளாக வகுத்து வைத்துள்ளான் என்பதானது இன்னுமொரு தளத்திற்குரிய ஆய்வுக் கருத்துக்களாகும்!) காலத்தை, அறுபது நாழிகைகைளாகவும், ஆறு சிறு பொழுதுகளாகவும், ஆறு பருவங்களாகவும் பகுத்த பண்டைத் தமிழன் தன்னுடைய புத்தாண்டு வாழ்வை இளவேனிற் காலத்தில்தான் தொடங்குகின்றான். இங்கே ஒரு மிக முக்கியமான விடயத்தை நேயர்கள் கருத்தில் கொள்ள வேண்டும்! பண்பாட்டுப் பெருமை கொண்ட மற்றைய பல இனத்தவர்களும், தங்களுடைய புத்தாண்டு வாழ்வை, தங்களுடைய இளவேனிற் காலங்களில்தான் ஆரம்பிக்கின்றார்கள். தமிழர்கள் மட்டுமல்ல, சீனர்களும், ஜப்பானியர்களும், கொரியர்களும், மஞ்சூரியர்களும் என, பல கோடி இன மக்கள் - தொன்மையான பண்பாட்டு வாழ்வினைக் கொண்ட பெருமை வாய்ந்த மக்கள்- தங்களுடைய இளவேனிற் காலத்தையே தமது புத்தாண்டாகக் கொண்டாடி வருகின்றார்கள். தமிழர்கள் மட்டுமல்ல, உலகத்தில் பலகோடி வேற்று இன மக்களும் தத்தமக்குரிய இளவேனிற் காலத்தையே புத்தாண்டாக கொண்டாடி வருவதாக குறிப்பிட்டிருந்தோம். உதாரணத்திற்காக யப்பானிய மக்களின் புத்தாண்டை, தமிழர்களின் புத்தாண்டான பொங்கல் திருநாளோடு ஒப்பிட்டுப் பார்ப்போம். தமிழர்-யப்பானிய பண்பாட்டு ஒற்றுமை நிலையை வெளிப்படுத்தும் நடைமுறையாகத் தைப்பொங்கல் விளங்குகிறது. யப்பானியர் தை 14ம் திகதி அன்று பழைய பயன்பாட்டுப் பொருட்களை எரிப்பார்கள். தமிழர்களும் அவ்வாறே செய்கின்றார்கள். தை 15ம் நாள் யப்பானியர்களும், தமிழர்கள் போன்று தோரணங்களைத் தொங்கவிட்டு புதுநீர் அள்ளி, பருப்புச் சேர்த்து சமைத்த பொங்கலைப் பரிமாறுகின்றார்கள். தமிழர்கள் பொங்கல் பானையில் பால் பொங்கும் போது ‘பொங்கலோ பொங்கல்’ என்று மகிழ்ச்சி ஆரவாரம் செய்வார்கள். அதே போல் யப்பானியர் தமது புத்தாண்டான தை 15ம் நாளில் FONKARA - FONKARA� என்று மகிழ்ச்சி ஆரவாரம் செய்வார்கள். தை 16ம் நாள் பணியாளர்களுக்குப் புத்தாடை வழங்கல், முன்னோர்க்குப் படையல் செய்தல், கலை நிகழ்ச்சிகளை நிகழ்த்தல், மாடுகளுக்கு உணவளித்தல் போன்ற காரியங்களைத் தமிழர்கள் செய்வது போலவே யப்பானியர்களும் செய்கிறார்கள். பருப்புத் தவிடு பொங்க - பொங்க அரிசித் தவிடு பொங்க - பொங்க -என்ற கருத்துப்படப் பாடப்படும் யப்பானிய வாய் மொழிப் பாடலில் ‘பொங்க-பொங்க’ என்ற சொற்களுக்கு யப்பானிய மொழியில் ‘uONGA-uONGA’ என்றே பாடுகிறார்கள். இடையில் தமிழன் மட்டும் மாறி விட்டான்! ஆளவந்த ஆரியர்களின் அடிமையாக மாறியது மட்டுமல்லாது, இன்றும் கூட ஆரியர்களின் பண்டிகைகளான சித்திரை வருடப்பிறப்பு, தீபாவளி போன்ற பண்டிகைகளை, தன் இனத்துப் பண்டிகைகளாக எண்ணி மயங்கிப் போய்க் கிடக்கின்றான். இவை குறித்து பேராசியரியர் க.பொ. இரத்தினம் அவர்கள் கீழ் வருமாறு அன்று கூறியிருந்தார். “சித்திரை வருடப்பிறப்பு” என்பது சாலிவாகனன் என்ற வடநாட்டு அரசனால் பின்னாளில் நிலைநாட்டப்பட்டது. இந்த அரசனுக்கு முன்னர் பல்லாயிரம் ஆண்டுகளாக நயத்தக்க நாகரிகத்துடன் வாழ்ந்த தமிழ் மக்கள் தம் நாட்டுப் பெருமகன் ஒருவனுடன் இணைந்த தொடர் ஆண்டை நிலை நாட்ட முயலாதது பெரும் விந்தையாக உள்ளது….. …….. (சித்திரை வருடப் பிறப்பை) வரவேற்று, (அதன் மூலம் ) தமிழினத்தின் பழமையையும், பண்பையும், சிறப்பையும், செல்வாக்கையும் (இன்றைய தமிழர்கள்) சிதைத்து வந்துள்ளமை பெரும் வெட்கத்திற்கு இடமானதாகவும் இருக்கின்றது. தமிழ் மக்களிடையே நிகழ்ந்த மானக்கேடான, நகைப்புக்கிடமான செயல் இது ஒன்று மட்டும்தானா? - தமிழ் மக்களின் கோவில்களிலே இன்று தமிழ் மொழியும், தமிழ் இசையும் ஒதுக்கப்பட்டுள்ளன. . . என்று பேராசிரியர் க.பொ. இரத்தினம் அவர்கள் மிகக் கடுமையாக விமர்சித்து இருந்தார். தமிழர்களின் தேசியத் திருநாளான தைப்பொங்கல் தினத்தை தமிழர்களுடைய பண்டைக் காலத்திலிருந்தே வரலாற்று வழியாகவும், வாழ்வியல் வழியாகவும்;, பண்பாட்டு வழியாகவும், வானியல் அறிவு வழியாகவும் தமிழர்கள் இனம் கண்டு அறிந்துணர்ந்து கொண்டாடி வந்துள்ளார்கள் என்பதையும் நாம் தர்க்கித்ததோடு, ஆரியர்கள் எம்மீது திணித்த சித்திரை வருடப் பிறப்பு குறித்தும் நாம் சில கருத்துக்களைத் தெரிவித்ததற்குக் காரணங்கள் உண்டு! “தைப்பொங்கல் தினமான, தைத்திங்கள் முதல் நாள்தான் தமிழனுக்குரிய தமிழ்ப் புத்தாண்டுத் தினமாகும்!!” பொங்கல் திருநாள்-தமிழ்ப் புத்தாண்டுத் திருநாள்-என்பதானது, சிலர் பிதற்றித் திரிவதுபோல் இந்துக்களின் விழா அல்ல! உண்மையில் இது, சமய சார்பற்ற, இயற்கை சார்ந்த, எல்லாத் தமிழர்களுக்கும் பொதுவான திருநாளாகும்! மற்றைய எல்லாத் திருநாட்களையும் எடுத்து ஒப்பிட்டுப் பார்த்தால் அங்கே ஏதாவது ஓர் அரசனை, வீரனை, கடவுளைக் குறிப்பிட்ட ‘கதை’ ஒன்று புனையப்பட்டு அந்தத் திருநாள் உருவாகியதற்கான காரணம் ஒன்றும் கற்பிக்கப்பட்டிருக்கும். ஆனால் தைப்பொங்கல் திருநாள் அப்படியான ஒன்றல்ல! அது வான் சார்ந்து, மண் சார்ந்து, முழுமையான இயற்கை சார்ந்து உருவாகிய திருநாளாகும்! இது தமிழர்களான எமக்குப் பெருமையையும் மகிழ்ச்சியையும் தருகின்ற திருவிழாவாகும்! இத் திருநாளைப் புறம் தள்ளுவதும், இதற்கு மதம் சார்ந்த கற்பிதங்களை உருவாக்குவதும், தமிழினத்தைக் கேவலப்படுத்தும் செயல்களாகும்! தைப்பொங்கல் திருவிழாவிற்குச் சமயச் சாயம் பூச முற்படுபவர்களை மறைமலை அடிகளாரும் கடுமையாகச் சாடியுள்ளார். இது குறித்த வரலாற்றுப் பதிவு ஒன்றை இங்கே குறிப்பிட விரும்புகின்றோம். 1935ம் ஆண்டு திருச்சியில் அகிலத் தமிழர் மகாநாடு என்ற பெயரில் ஒரு மகாநாடு நடைபெற்றது. பசுமலை சோமசுந்தரப் பாரதியார் தலைமையில் நடைபெற்ற இந்த மகாநாட்டில் கா. சுப்பிரமணியனார், மதுரை தமிழவேள், பி.டி. இராசன், தெ.பொ.மீனாட்சி சுந்தரனார், புலவர் கா.ப. சாமி, திரு.வி.க. மறைமலை அடிகளார் முதலான பல தமிழறிஞர்கள் கலந்து கொண்டார்கள். தந்தை ஈ.வெ.ரா. பெரியாரும் இந்த மகாநாட்டில் கலந்து கொண்டிருந்தார். இந்த மகாநாட்டின் போது தைப்பொங்கல் சமயவிழாவா? இல்லை சமயமற்ற விழாவா? என்று பலத்த விவாதம் எழுந்தது. இறுதியாக, மறைமலை அடிகளார் திட்டவட்டமாகக் கீழ்வருமாறு கூறினார். “பொங்கலைச் சமயவிழா என்று சொல்லிச் சர்ச்சையைக் கிளப்பிக் குழப்பம் செய்ய யார் முயன்றாலும் அவர்கள் இம் மாநாட்டை விட்டு வெளியேறி விடவேண்டும். இது சமய சார்பு இல்லாத விழா! எந்த சமயத்துக்காரன், எந்த சாத்திரக்காரன் இந்த விழாவை எடுத்துள்ளான்? எந்தச் சூத்திரம் இதற்கு இருக்கிறது? எந்த இதிகாசம் இதற்கு இருக்கிறது? ஆனால் தமிழில் புறநானூற்றில், பிட்டங்கொற்றன் வரலாற்றில், கதப்பிள்ளை சாத்தனாரின் பாடலில் சான்று இருக்கின்றது. இதை என்னுடைய அருமை நண்பர் ஈ.வெ.ரா ஏற்றுக் கொண்டாலும் சரி, ஏற்றுக் கொள்ளாவிட்டாலும் சரி” - என்று மறைமலை அடிகளார் முழங்கினார். “இல்லை - நான் ஏற்றுக் கொள்கின்றேன்”- என்று ஈ.வெ.ரா. பெரியார் தெளிவாகப் பதிலுரைத்தார். அனைவரும் கையொலி எழுப்பினர். அதனையடுத்து திரு.வி.க. அவர்கள் இதனைப் பாராட்டிப் பேசினார். ஆகவே தைப்பொங்கல் திருவிழா என்பது ஒரு சமய விழா அல்ல! தமிழரின் பண்பாட்டு விழா! காலக் கணிப்பை மேற் கொண்டு மிகச் சரியாகத் தமது புத்தாண்டுக்குரிய இளவேனிற் காலத்தின் முதல்நாளை வகுத்தறிந்து தமிழரின் தமிழ்ப் புத்தாண்டு ஆரம்பத்தைக் கொண்டாடும் நாள்! பொங்கல் திருநாளுக்கு முதல் நாளை ‘போகி’ (போக்கி) என்று அழைத்தார்கள். போகி என்பது போக்கு, போதல் என்பதாகும். (ஓர் ஆண்டைப் போக்கியது- போகி -போகியது). இத் தினத்தில் பழைய பொருட்களை எரித்தல், பழைய குடில்களை எரித்தல் போன்ற நடைமுறைகள் மேற் கொள்ளப்படுகின்றன. (முன்னாளில் யாழ்ப்பாணத்தில் பட்டி அடைக்கின்ற வயற்குடில்களை எரிக்கும் பழைய நடைமுறை இருந்தது. ஆனால் இப்போது இந்த நடைமுறை அருகி விட்டது.) தமிழ்ப் புத்தாண்டான தைப்பொங்கல் தினமன்று புத்தாண்டுக்குரிய சகல நடைமுறைகளும் மேற்கொள்ளப்படும். தோரணம் தொங்கவிடல், புதுநீர் அள்ளுதல், வீட்டை அழகுபடுத்தல், பொங்கலிடுதல், புத்தாடை அணிதல், கையுறை பெறுதல் போன்ற நடைமுறைகள் மேற்கொள்ளப்படும். தைப்பொங்கல் தினத்திற்கு அடுத்தநாள் நடைபெறுகின்ற நடைமுறைகள் புத்தாண்டின் தொடக்கத்தை உணர வைப்பதாக உள்ளன. பயிர்ச் செய்கையிலே இணைந்து தொழிற்படும் மாடு, தமிழரால் பொங்கலின் மறுநாள் சிறப்பிக்கப்பட்டு அது மாட்டுப் பொங்கல் தினமாக அறியப்பட்டது. அத்துடன் மாட்டுப் பொங்கலின் மறுநாள், உறவினர் வீடுகளுக்குச் செல்லும் நடைமுறையைக் ‘காணும் பொங்கல்’ என்று அழைப்பர். , தமிழரிடையே இருந்த தவப்படையல் என்ற நடைமுறை இப்போது அருகி விட்டது. யாழ்ப்பாணத்தில், வடமராட்சிப் பகுதியில் தைப் பொங்கல் தினமன்றே தவப் படையல் செய்யப்படும் வழக்கமிருந்தது. இப்படையலில் மீன்-இறைச்சி முதலியன படைக்கப்பட்டன. இத்தினத்தில் கலை நிகழ்வுகள், அரங்கேற்ற நிகழ்வுகள், புத்தாண்டுப் போட்டிகள் போன்ற நிகழ்ச்சிகளும் இடம் பெறும். தமிழாண்டின் தொடக்கக் காலகட்டம் உழைப்பின் பயனைப் பெற்று மகிழும் காலகட்டமாகவும் அமைந்தது. புத்தொளி வழங்கிய கதிரவனைப் போற்றிய தமிழ் நெஞ்சம், உழைப்பையும் தனக்குத் துணை நின்ற உயிரையும் போற்றியது. கதிரவனின் சுழற்சியைக் கொண்ட காலக்கணிப்பைக் காட்டும் அறிவியலும், நன்றியுணர்வை வெளிப்படுத்துகின்ற முதிர்ந்த பண்பாடும் பொங்கல் விழாவில்; போற்றப்படுவதை நாம் காணலாம். அன்புக்குரிய வாசகர்களே! இன்றைய நடைமுறை யதார்த்தத்தை சுட்டிக் காட்டித் தர்க்கிக்கவே நாம் இவ்வாறு மேற்கோள் காட்டினோம். இல்லாவிட்டால் யார்-யார் எந்த எந்த நாளில், எந்த எந்தக் கொண்டாட்டங்களையும் கொண்டாடுவதைத் தடுப்பதற்கு நாம் யார்? எவரும் - எதையும் - எப்படியும் கொண்டாடட்டும் ஆனால் பெயரை மட்டும் சரியாகச் சொல்லட்டும். தனித்துவமான மொழியைப் பேசுகின்ற, தனித்துவமான பண்பாட்டைக் கொண்டுள்ள, தனித்துவமான கலைகளைக் கொண்டுள்ள, தமக்கென பாரம்பரிய மண்ணைக் கொண்டுள்ள மக்கள், ஒரு தேசிய இனத்தவர் ஆவார்கள். அவர்களுக்குச் சுயநிர்ணய உரிமைக் கோட்பாடு உரித்தானதாகும் என்று உலகச்சட்டமொன்று சொல்கிறது. இப்போது எமக்கு ஒரு தனித்துவமான பண்பாடு இருக்கின்றதா? என்ற கேள்வி எழுவதைத் தவிர்க்க முடியவில்லை. அன்புக்குரிய எமது வாசகர்களே! தமிழனின் வாழ்க்கையையும் பண்பாட்டையும் எதிரிகள் சிதைத்தது போதாதென்று நாமும் கூட ஆரிய மாயையில் மயங்கிப்போய் எமது பண்பாட்டை இகழ்ந்தும், இழந்தும் வருகின்றோம். இந்தக் காலகட்டத்தில் தமிழ்ப் புத்தாண்டு தினமான தைப்பொங்கல் குறித்துச் சில வரலாற்று உண்மைகளை உங்களுடன் பகிர்ந்து கொள்ள முனைந்தோம். அனைவருக்கும் எமது இனிய தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துக்கள்! இந்தக் கட்டுரைக்குப் பல நூல்களும், ஆய்வுநூல்களும் பயன்பட்டன. முக்கியமாகத் தொல்காப்பியம், சிலப்பதிகாரம், எட்டுத்தொகை-பத்துப்பாட்டு, தமிழர் நாகரிகமும் பண்பாடும், ஒப்பியன் மொழி நூல், வாக்கிய பஞ்சாங்கம், பண்பாட்டுக் கட்டுரைகள், செம்பருத்தி சஞ்சிகைக் கட்டுரைகள், பொங்கலே தமிழ்ப் புத்தாண்டு - மலேசியச் சிறப்பு மலர், தமிழர் - யப்பானியர் வாழ்வில் தைப்பொங்கல் போன்ற நூல்கள் பேருதவி புரிந்தன. சில சொல்லாக்கங்ககளும் சொல்லாடல்களும் அப்படியே எடுத்தாளப்பட்டுள்ளன. சம்பந்தப்பட்ட அனைவருக்கும் எனது மனங் கனிந்த நன்றிகள். காலத்தின் தேவை கருதி ஏற்கனவே என்னால் எழுதப்பட்ட ஆய்வுக் கட்டுரைகளின் சில கருத்துக்கள் மீண்டும் இடம் பெற்றுள்ளன. இவ் ஆய்வு மீள்பிரசுரமாகும்.(2008) Labels: அறிமுகம், தமிழர் நலன், தொன்மை, நிகழ்வு, வரலாறு, விவாதம், விழா |