மரங்கள் - 3 - தேன்தூக்கி -
============================== நான் இவ்வலைப்பதிவில் எழுதத் தொடங்கி நான்காண்டுகள் நிறைவடைகின்றன. இதற்காக ஓரிடுகை. ;-) ============================== மரங்கள் - 1 - வெடுக்குநாறி மரங்கள் -2- விண்ணாங்கு கடந்த ஈரிடுகைகளிலும் முறையே வெடுக்குநாறி, விண்ணாங்கு ஆகிய மரங்கள் பற்றிப் பார்த்திருந்தோம். இப்போது 'தேன் தூக்கி' என்றொரு மரம் பற்றி கொஞ்சம் அலசலாம். இதன் பெயர்க்காரணம் சரியாகத் தெரியவில்லை. தேனுக்கும் இம்மரத்துக்கும் ஏதும் தொடர்பிருப்பதாகவும் தெரியவில்லை. வேறேதேனும் பெயரிலிருந்து மருவி 'தேன் தூக்கி' என்று வந்திருக்கலாம். வேறிடங்களில் இம்மரம் வேறு பெயர்களில் அழைக்கப்படவும் கூடும். உருவம், பயன்பாடு: வன்னிக் காடுகளில் இம்மரம் மிக அதிகளவில் வளர்கிறது. மிகப்பெரிய மரமாக வளராது; அதேநேரம் சிறியதாகவும் இல்லாமல் இடைப்பட்ட அளவில் வளரும். சுமார் முப்பது தொடக்கம் நாற்பது அடி உயரத்துக்கு வளரும். இளம் பருவத்தில் இதன் பட்டை மஞ்சள் கலந்த மண்ணிறமாக இருக்கும். மரத்தின் உட்பாகமும் மஞ்சளாகவே இருக்கும். முற்றிய மரமாயின் தண்டின் நடுவே கோறையாக இருக்கும். காய்ந்த நிலையில் சோத்தியான மரமாகவே இருக்கும். பச்சையாகவே வெட்டினால் குறிப்பிட்ட காலத்துக்கு இம்மரத்தைப் பயன்படுத்தலாம். கப்புகளுக்கு இம்மரம் பயன்படுத்தப்படுவதுண்டு. விறகுத் தேவைக்கு இது பயன்படுத்தப்படுவதில்லை. தேன்தூக்கி மரத்தின் சிறப்பியல்பு ஒன்றுண்டு. இது தனக்குக் கீழ் எதையும் வளரவிடாது. வெயில் கிடைக்கும் இடமாயிருந்தால் புற்கள் மட்டும் பசுமையாக வளரும், மற்றும்படி வேறெந்தத் தாவர வகைகளும் இம்மரத்தின் கீழ் வளரா. இது அனுபவத்தில் கண்டது தானேயொழிய விஞ்ஞானபூர்வமான முடிபு அன்று. வன்னியில் 'வெட்டைக்காடு' என்ற சொல்லாடல் உண்டு. வெட்டையும் காடும் எதிர்மறையான பொருளுடைய இரு சொற்கள். வெட்டை என்பது மரஞ்செடிகளற்ற வெறும் வெளியைக் குறிக்கும். பிறகெப்படி இரண்டும் சேர்ந்து ஒரு சொல்லானது? இங்கு 'வெட்டைக் காடு' என்பது உயரிய மரங்களைக் கொண்ட அடர்ந்த காடாகவுள்ள அதேநேரத்தில் பற்றைகளையோ உயரம் குறைந்த சிறு மரஞ்செடிகளையோ -அதாவது கீழ்வளரிகளைக் கொண்டிராத காடுகளைக் குறிக்கும். பெரிய மரங்களைக் கொண்டிருந்தாலும் நிலப்பகுதியில் அடர்த்தியான பற்றைகளைக் கொண்ட காடுகளுமுண்டு. இக்காடுகளில் இருபது யார் தூரத்துக்கப்பால் எதையும் அவதானிக்க முடியாதிருக்கும். இவற்றில் மனித நகர்திறன் மிக மோசமாக இருக்கும். அவ்வாறன்றி, நிலமட்டத்தில் பற்றைகளின்றி வெளியாக இருக்கும் அடர்ந்த காடுகளுமுள்ளன. நூறு யார் தூரத்துக்கும் அப்பாற்கூட நன்றாக அவதானிக்கலாம். தெருவில் நடப்பதைப் போல கைவீசிக் கொண்டு நடந்து போகலாம். அதேவேளையில் வெயில் நிலத்தில் விழாதபடி மிக அடர்ந்த காடாகவும் அது இருக்கும். இப்படியான காடுகளையே 'வெட்டைக் காடு' என்ற சொல்லால் அழைப்பதுண்டு. தேன் தூக்கி பற்றிக் கதைக்க வந்து வெட்டைக்காடு பற்றி கதைக்கத் தேவையென்ன? தேன்தூக்கி மரங்கள் அதிகமுள்ள காடுகள் அனேகமாக வெட்டைக் காடுகளாக இருக்கும். ஏனென்றால் தேன்தூக்கியின் கீழ் பற்றைகளோ வேறு தாவரங்களோ வளரா. வன்னியில் முத்தையன்கட்டுப் பகுதிக் காடுகள் - குறிப்பாக முத்தையன்கட்டுக் குளத்தைச் சுற்றியுள்ள காடுகள் அடர்ந்த வெட்டைக் காடுகள். தமக்குக் கீழுள்ளவர்களின் வளர்ச்சியைப் பாழாக்கும் அதிகாரிகளை 'தேன்தூக்கி' என்று அழைக்கலாம். ;-) தேன்தூக்கி தொடர்பில் இன்னொரு குறிப்புண்டு. இம்மரத்தில் ஒருவகை உண்ணி இருக்கும். (அல்லது இவ்வகை உண்ணி இம்மரத்தில்தான் அதிகமாக இருக்கும்). தனியொரு உண்ணியை வெற்றுக்கண்ணால் உடனடியாகப் பார்த்துக் கண்டுபிடிக்க முடியாதபடி மிகமிகச் சிறிய உண்ணி. கூட்டமாக ஊர்ந்தால்தான் உடனடியாகக் கண்ணுக்குத் தட்டுப்படும். தேன்தூக்கி இலைகளில் கும்பலாகக் குடியிருக்கும் இக்கூட்டம் அவ்வழியே நகரும் மனிதர் மீது ஒட்டிக்கொள்ளும். பின் உரோமங்கள் அதிகமுள்ள இடங்கள் தேடி அமர்ந்துகொள்ளும். தேவையான நேரத்தில் அவ்வப்போது கடித்துக்கொள்ளும். ஒருவர் முழுமையாக உண்ணி பொறுக்கி முடிய இரண்டு மூன்று நாட்கள் கூட ஆகலாம். ஆனால் தேன்தூக்கி உண்ணியின் தாக்குதலுக்கு உள்ளாவது மிக அருந்தலாகவே நடைபெறும். ஆயிரத்தில் ஒருவருக்குத்தான் அந்த அதிஷ்டம் கிடைக்கும். |