Friday, September 29, 2006

தாயகப் பயணம் - ஒரு வலைப்பதிவு அறிமுகம்

மெழுகல் பற்றி ஒரு குரற் பதிவு.Journey to my Motherland என்ற தலைப்போடு வலையில் பதிந்து வருகிறார் Shivi Bala.

ஈழம், விடுதலைப்புலிகள் இயக்கம் என்பன மட்டில் சுவாரசியமற்ற மூன்றாம் நிலையில் ஐரோப்பாவில் வாழ்ந்தவரின் தாயகம் நோக்கிய பயணம் என்று சொல்லலாம்.
கொழும்பு வாழ்க்கை, அங்குள்ள தமிழர்கள், யாழ்ப்பாணத்துக்கான விமானப்பயணம், யாழ்ப்பாண மக்கள், தமிழகத் தொலைக்காட்சிகளின் செல்வாக்கு, வன்னிப் பயணம், வன்னி மக்கள் என்பவை தொடர்பான பார்வை இவராற் பதியப்படுகின்றன.

அதில் வன்னியில் தான் ஒன்றாகத் தங்க நேரிட்ட குடும்பமொன்றைப் பற்றிய பதிவு வருகிறது. கண்ணம்மா என்ற பெண் பற்றி விவரிக்கிறார்.
வலைப்பதிவாளர் மாட்டுச் சாணத்தால் நிலம் மெழுக வேண்டி வந்த சம்பவம் உட்பட பல சுவாரசியங்களைக் கொண்டு செல்கிறது அப்பதிவு.
______________________________________________________________

பதிவை வாசித்தபோது, பதிவாளர் மாட்டுச் சாணத்தால் மெழுகப்பட்ட தரை தொடர்பில் இவ்வளவு தூரம் அரியண்டப்பட வேண்டுமா? என்று என்னுள் ஆச்சரியம் வந்தது. பிறகு யோசித்தபோது புரிந்தது. வெளிநாடொன்றில் வாழ்ந்த, மாட்டுச்சாணத்தால் மெழுகப்பட்ட எந்த இடத்தையும் எதிர்கொள்ளாத ஒருவருக்கு முதல் அனுபவம் எப்படியிருக்கும் என்பது புரிந்தது.
இந்த விசயத்தில் என் அனுபவம் எப்படி இருந்தது என்று யோசித்துப்பார்க்கிறேன்.

யாழ்ப்பாணத்தில், மாட்டுச் சாணத்தால் மெழுகப்பட்ட இடங்களில் வாழ்ந்த ஞாபகம் எனக்கில்லை. எங்கள் ஊர் கிராமம்தான் என்றாலும் எங்கள் பகுதியில் பெரும்பாலும் கல்வீடுகள்தாம். பெரும்பாலும் எல்லாமே காறை பூசப்பட்டவை. காறை பூசப்படாதவைகூட புத்துமண்ணால் மெழுகப்பட்டவை, மாட்டுச்சாணத்தால் அன்று.

ஆனால் அப்படி புத்துமண்ணால் மெழுகப்பட்ட தரை அழுத்தமாக, சீராக இருக்காது. நிறைய வெடிப்புக்கள் வரும். புழுதி கிளம்பும். சொந்த ஊரிலிருந்து இடம்பெயர்ந்து யாழ்ப்பாணத்துக்குள்ளயே தங்கியிருந்த காலத்திலயும் நான் கல்வீட்டிலதான் இருந்திருக்கிறேன்.

மாட்டுச்சாணத்தால் மெழுகப்பட்ட குடிசைகள் எனக்கு அறிமுகமானது 1996 இல் வன்னியிலாகத்தான் இருக்க வேண்டும். பலதடைவைகள் நான் சாணியில் மெழுகியிருக்கிறேன். ஆனால் மாட்டுச்சாணத்தால் மெழுகுதல் பற்றிய எனது முதல் அனுபவம் என்று குறிப்பிட்டுச் சொல்லும்படி என் மனத்தில் ஏதுமில்லை. எனவே எந்த அதிர்ச்சியோ அருவருப்போ இன்றி இயல்பாகவே இசைவாக்கப்பட்டிருக்கிறேன். இப்படி மெழுகப்பட்ட வெறும் நிலத்தில் உருண்டு புரண்டிருக்கிறேன். அவற்றின் மணம்கூட என்னைத் தொந்தரவு செய்த ஞாபகமில்லை.மாட்டுச் சாணத்தால் மெழுகுவது மிக நேர்த்தியாக இருக்கும். நிலம் நல்ல அழுத்தமாக, சீராக இருக்கும். வெடிப்புக்கள் வந்து அழகைக் குலைக்காது. மெழுகியபின் தரையில் ஓர் அழகு தெரியும். விளக்குமாறால் முற்றம் கூட்டியபின், நாம் கூட்டிய ஒழுங்கில் ஈர்க்குக் கீறல்கள் நிலத்தில் கோலம் போட்டு ஓர் அழகு தெரியுமே, அதேபோல் நாம் மெழுகிய ஒழுங்கில் மெழுகப்பட்ட தரையில் கோலம் தெரியும்.

எனவே மெழுகும்போது ஒரு கலையுணர்ச்சி தேவை. அங்கிங்கென்று ஒழுங்கற்ற முறையில் கைகளை அலைத்து மெழுகலாம். நிலம் சீராக மெழுகப்பட்டிருக்கும். அனால் அழகாக இராது. ஒரே அகலத்தில், ஒரே பக்கமிருந்து (வலமிருந்து இடம் போல) ஒரே ஆரையில் இழுத்துக்கொண்டு வரவேண்டும். ஒவ்வொரு இழுவையும் ஒரே வளைவாக ஒரே அகலத்தில் இருக்கவேண்டும். இப்படி அழகாக மெழுகுவதென்பது உடனடியாக வராது என்றே நினைக்கிறேன்.
நான் பார்த்தளவில் சிலர், மாடு காலையில் போட்ட சாணம், மாலையில் போட்ட சாணம் என்று வேறுபடுத்திக்கூட மெழுகுவார்கள். நிறத்தில், தடிப்பில் மாற்றம் இருக்கும்.
__________________________________________--
அனுபவத்தின் அடிப்படையில் மாட்டுச்சாணம் பூசிய நிலங்கள் தொடர்பில் சொல்லக்கூடியது 'நித்திரை'.
அந்த மாதிரி நித்திரை வரும். நினைத்த நேரத்தில் அமைதியாக நித்திரை கொள்வது எப்போதும் கிடைப்பதில்லை. குறிப்பாக வெளிநாட்டில் என் அனுபவப்படி விருப்பமான நித்திரை இதுவரை கிடைக்கவில்லை. நித்திரை கொள்ள வேண்டுமென்று நினைத்த நேரத்தில் நித்திரை வராது. வரக்கூடாத நேரத்தில் வந்து தொந்தரவு செய்யும்.

மாட்டுச்சாணத்தில் மெழுகப்பட்ட வீட்டு நிலங்களில் நல்ல குளிச்சியை உணர்ந்திருக்கிறேன். நல்ல நித்திரையை அனுபவித்திருக்கிறேன். நல்ல அலாதியான பகல் நித்திரைக்கு நான் பரிந்துரைப்பவை: கடற்குளிப்பு முடிந்ததும் நிழலில் வந்து படுப்பது, மாட்டுச்சாணத்தால் மெழுகப்பட்ட தரையில் படுப்பது.

__________________________________


என்னுடைய பழைய குரற்பதிவுகளை கீழே இணைத்துள்ளேன்.
விரும்பினால் அப்பக்கங்களுக்குச் சென்று கேட்கலாம்.


"படலையும்" பால்ய நினைவும்.

கால் பிரேக்…- “ஒர் அலசலும் அனுபவமும்.”
___________________________________

Labels: , , ,

எழுத்துருவைத் தெரிவுசெய்ய.
பாமினி ஆங்கில உச்சரிப்பில்

[மேலுள்ள பெட்டியில் தட்டச்சினால் கீழுள்ள பெட்டியில் ஒருங்குறிக்கு (Unicode) மாற்றப்பட்ட எழுத்துரு கிடைக்கும்]


சுரதா, கிருபாவுக்கு நன்றி


"தாயகப் பயணம் - ஒரு வலைப்பதிவு அறிமுகம்" இற்குரிய பின்னூட்டங்கள்

 

said ... (29 September, 2006 23:28) : 

ப்ளாக் அறிமுகத்துக்கு நன்றி.

 

said ... (30 September, 2006 00:38) : 

ஒலிப்பதிவு இடையில நிண்டுட்டுது, திருப்பிப் பரிசோதிக்கவும்

 

said ... (30 September, 2006 01:00) : 

இப்ப வேலை செய்யிது,நல்லா செய்திருகிறீர், முழுமையாகக் கேட்கிறேன்.
ஒரு ஒலிபரப்பாளர் உருவாகிறார்....

 

said ... (30 September, 2006 01:10) : 

/Journey to my Motherland என்ற தலைப்போடு வலையில் பதிந்து வருகிறார் Shivi Bala./
Thank you for Shivi's blog intro.

 

said ... (30 September, 2006 13:26) : 

அனானி, கானாபிரபா,
வருகைக்கு நன்றி.

கானாபிரபா,
ஏதாவது கோப்பு யாருக்காவது வேலை செய்யாமற் போகும் எண்டதாலதான் மூண்டு இணைப்புத் தந்திருக்கிறன். மூண்டும் ஒரே கோப்புத்தான். கட்டாயம் ஏதாவது ஒண்டு வேலை செய்யும்.

 

said ... (30 September, 2006 17:23) : 

டி.சே,

வருகைக்கு நன்றி.
எனக்கு இன்னொரு நண்பர் அறிமுகப்படுத்தினார்.
நான் இங்கு அறிமுகப்படுத்தினேன்.

 

said ... (01 October, 2006 08:01) : 

எழுதிக்கொள்வது: சாதாரணன்

வசந்தன் நல்ல பதிவு. விசயமில்லாத அலட்டல் - 1 2 3 என தொடருமன் நல்லா இருக்கும்.

அன்புடன்
சாதாரணன்

8.2 1.10.2006

 

said ... (01 October, 2006 16:33) : 

சாதாரணன்,
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

அப்ப தொடர்ந்து பயமுறுத்தச் சொல்லிறியள்.
நீங்கள் ஆரெண்டு சொன்னா நல்லது. வேற ஒண்டுமில்லை, என்ர ஒலிப்பதிவைப் பார்த்து ஆருக்கேன் விசர் வந்தா உம்மை மொத்தச் சொல்லிறதுக்குத்தான்.;-)

 

said ... (02 October, 2006 05:52) : 

அடடடடடடேஏஏஏஏ...

குரல் பதிவு போட்டிருக்கிறியளே!

கனகாலத்துக்குப் பிறகு போட்டிருக்கிறியள். கேக்க நல்ல சந்தோசமா இருந்துது. அப்பப்ப இப்பிடி அலட்டும் எண்டு நான் சொல்லத் தேவையில்லைத்தானே.

நல்லதொரு பதிவை அறிமுகப்படுத்தியிருக்கிறீர்கள். நன்றி வசந்தன்.

மாட்டுச்சாணம் + மொழுகிறது.

எங்கட வீட்டுக்குப்பக்கத்திலை இருந்த பண்டாரப்பெத்தாச்சிதான் நினைவுக்கு வாறா. அவட வீடு கொட்டில் வீடுதான். நேரங்கிடைக்கேக்க - முக்கியமா வீட்டிலை சனமெல்லாம் நித்திரை கொள்ளுற பின்மதிய வேளைகளில் அவடை வீட்டிலைதான் நாங்கள் நிக்கிறனாங்கள். அவவுக்கு நியாயமான வயசிருக்கும். ஆனா, செய்யிற ஒவ்வொரு விசயமும் அவ்வளவு வடிவாச் செய்வா. அவ, மாட்டுச்சாணத்தாலை மொழுகிறதைப் பாக்க, நல்ல வடிவா இருக்கும். நீங்கள் சொல்லுறமாதிரி ஒரு சீராத்தான் மொழுகுவா. அவவிட்டைக் கெஞ்சிக் கூத்தாடி வெளியிலை சில இடங்களுக்கு மொழுகியிருக்கிறம்.

நிறைய நினைவுகளைக் கிளப்பிவிட்டுட்டீர். பாப்பம், ஒரு தனிப்பதிவு வருகுதோ எண்டு. இல்லையெண்டா, இங்கையே எழுதிறன்.

-மதி

 

said ... (02 October, 2006 21:39) : 

வாங்கோ மதி,

அதுக்கென்ன, அடிக்கடி அலட்டினாப் போச்சு. (பினாத்தல் காரரும் ஒலிப்பதிவுக்கு ஊஸ் ஏத்தி விடுறார்)
நீங்கள் பதிவு போட்டிருக்கிறது இப்பதான் பாத்தன்.
அங்க வந்து கருத்துச் சொல்லிறன்.

 

said ... (03 October, 2006 20:14) : 

வசந்தன்!
பதிவை ஏற்கனவே வாசித்திருந்தாலும், இன்றுதான் குரற்பதிவைக் கேட்க முடிந்நது. வீட்டுக்கு வந்தோன்ன முதல் வேலை அதுதான். அசந்துபோனேன். இப்படியொரு குரல்வளமுள்ளவரா வசந்தன். உண்மையில் நான் உங்களுடைய குரற்பதிவொன்றையும் கேட்கவேயில்லை. மகிழ்ச்சியாக இருக்கிறது. அனானி, மதி, சொன்னதுபோலவே எனது வேண்டுகோளும். அடிக்கடி ஏதாவது அலட்டும். கேட்கச் சுகமா இருக்கு. உம்மட குரல்கேட்டு வெருளுறதோ? என்ன பேக்கதை கதைக்கிறீர். சும்மா தாலாட்டு மாதிரி இருக்கு....:))

 

said ... (03 October, 2006 23:35) : 

மலைநாடான்,
பப்பாவில ஏத்தாதையுங்கோ.

என்னுடைய பழைய குரற்பதிவுகளை கேக்கேலயோ?
வசந்தனாக நான் பதிஞ்ச ரெண்டு குரற்பதிவுகளையும் இப்ப இந்தப் பதிவோட இணைச்சிருக்கிறன்.
வேண்டியவர்கள் கேட்கலாம்.

"படலையும்" பால்ய நினைவும்.

கால் பிரேக்…- “ஒர் அலசலும் அனுபவமும்.”

 

said ... (06 October, 2006 14:25) : 

பழைய ஒலிப்பதிவுகளையும் இணைத்ததற்கு நன்றி. சில பைல்கள் வேலை செய்யவில்லை.

 

said ... (06 October, 2006 14:38) : 

சொல்ல நினைச்சதை முன்னுக்கு வந்தவை சொல்லீட்டினம். வீட்ட போய்த்தான் உம்மட குரலைக் கேட்கோணும். என்ட பங்குக்கு '+' போட்டிட்டன்.

பிரபா - //ஒரு ஒலிபரப்பாளர் உருவாகிறார்....//
இப்பிடித்தான் மெல்பேணிலயிருந்து ஒருதர் வந்து சமையல் குறிப்பொண்டைச் சொல்லி அறிவிப்பாளரானது ஞாபகம் வருது!! :O)

 

said ... (06 October, 2006 20:01) : 

அனானி,
வருகைக்கு நன்றி.
அதில் இணைத்தவற்றில் ஓர் இணைப்பாவது கட்டாயம் தொழிற்படும்.

ஷ்ரேயா,
வாங்கோ.
நீங்கள் எப்பவும் எங்கட பந்திக்குப் பிந்தித்தான் வருவியள்.

மெல்பேணுக்கு வந்து கத்தரிக்காய்ப் பச்சடி பற்றி அறிவிப்புச் செய்த அறிவிப்பாளரை வசந்தன் பக்கம்: வானொலியில் சயந்தனின் செவ்வி எண்டு நக்கலடிக்கக்கூடாது. ஏதோ விசயம் இருந்ததாலதானே நூற்றுக்கணக்கான மைல்கள் தள்ளியிருந்தவரை மினக்கெட்டு கூப்பிடிட்டவை?
பாவம் அவர். விட்டுவிடுவம்.

 

said ... (03 January, 2008 22:01) : 

தாயகப் பயணம் என்ற தலைப்பே என்னை வாசிக்க, கேட்கத் தூண்டியது.
நன்றாக இருக்கிறது.. கிராமத்து வாசனையுடன்........

 

said ... (21 January, 2008 18:46) : 

இறக்குவானை நிர்ஷன்,

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

 

post a comment

© 2006  Thur Broeders

________________