Tuesday, March 13, 2007

வன்னிக்குட் புகுந்த நினைவு

நாள்: 01.03.1996
இடம்: கிளாலிக் கடனீரேரி
நேரம்: மாலை

படகுகள் மெதுவாக நகர்ந்துகொண்டிருக்கின்றன. அவை யாழ்ப்பாணக் குடாநாட்டிலிருந்து வன்னிப் பெருநிலப்பரப்பு நோக்கிப் போய்க்கொண்டிருக்கின்றன. இனிமேல் யாழ்ப்பாணம் திரும்புவோமா இல்லையா என்பதே தெளிவில்லாமல் எல்லோரும் பயணிக்கிறார்கள். நிறையப் பேருக்கு அது யாழ்ப்பாணத்தினின்று நிரந்தர இடப்பெயர்வு.

மிகுதிக் கதைக்கு முன் ஒரு சுருக்கம்:
1995 ஒக்ரோபர் 17ஆம்நாள் சூரியக்கதிர்-1 என்ற நடவடிக்கையை இலங்கை அரசபடைகள் தொடங்கியிருந்தன. யாழ்ப்பாணக் குடாநாட்டின் வலிகாமத்தைக் கைப்பற்றும் நோக்கில் இந்நடவடிக்கை நடந்தது. ஒக்ரோபரின் இறுதிப்பகுதியில் வலிகாமத்திலிருந்து அனைத்து மக்களும் இடம்பெயர்ந்து தென்மராட்சிக்கு வந்திருந்தனர். முன்னேறும் இராணுவத்தை எதிர்த்து கடும் சண்டை நடைபெற்றது. இறுதியில் நவம்பர் இறுதியில் - மாவீரர் நாளுக்குப் பின்பாக யாழ்ப்பாணக் கோட்டையை இராணுவம் கைப்பற்றியதோடு அந்நடவடிக்கை முடிவுக்கு வந்தது. பின்னர் சில மாதங்கள் எதுவுமில்லை. இந்நேரத்தில் பல குடும்பங்கள் வன்னிக்கு இடம்பெயர்ந்தனர். வன்னிக்கு வரும்படி புலிகள் மக்களை அறிவுறுத்தினர். சூரியக்கதிர் -2, 3 என்ற பெயர்களில் தொடர் நடவடிக்கைகள் செய்து ஏப்ரலில் யாழ். குடாநாடு முழுவதையும் சிறிலங்காப் படைகள் ஆக்கிரமித்தன.

எமது பயணம் யாழ்.குடாநாடு முழுமையாக ஆக்கிரமிக்கப்பட முதல் நிகழ்கிறது.

கிளாலிக் கடனீரேலியில் முன்பு பயணம் செய்வதிலுள்ள பேராபத்தையும் கோரத்தையும் பலர் கேள்விப்பட்டிருப்பீர்கள். இதுபற்றி முன்பொரு இடுகையும் இட்டிருந்தேன். ஆனால் இப்பயணம் அப்படியான பயமேதுமற்ற பயணம். முன்பெல்லாம் இரவில் மட்டுமே பயணம். ஆனால் இப்போது பகலிலேயே படகுப்பயணம். மாலை நேரத்தில் நல்ல வெளிச்சத்தில் கிளாலிக்கரையிலிருந்து படகுகள் புறப்படுகின்றன. இப்போது தொடுவையாகவே படகுகள் பயணிக்கின்றன. அதாவது பலபடகுகள் ஒன்றன்பின் ஒன்றாக கயிற்றால் பிணைக்கப்பட்டிருக்கும். முதலாவது படகில் மட்டும் இயந்திரம் தொழிற்படும். மிகுதிப்படகுகள் அதன்பின்னால் இழுபட்டுக்கொண்டு போகும்.

நான் இயந்திரம் பொருத்தப்பட்ட முதலாவது படகில் இருக்கிறேன். மொத்தமாக பன்னிரண்டு படகுகள் பிணைக்கப்பட்டுப் பயணப்பட்டதாக ஞாபகம். இடப்பெயர்வு என்பதைத் தாண்டி எனக்கு அதுவொரு இரசிப்புக்குரிய பயணமாகவே இருந்தது. சூரியன் மேற்கே விழுந்துகொண்டிருக்கும் நேரத்தில், எதிரிகளாற் கொல்லப்படுவோமென்ற பயமற்ற, அமைதியான கடற்பயணம்.

அப்போது எனக்கு நீச்சல் அறவே தெரியாது. கடற்கரைக் கிராமமொன்றையே சொந்த ஊராகக் கொண்டிருந்தாலும், கடற்கரையோடே வாழ்ந்திருந்தாலும் நீச்சல் தெரியாது. வருடத்துக்கொருமுறை கடற்கரையில் நடக்கும் மாதா திருநாளின்போது மட்டும் கடற்குளிக்க அனுமதி. அதுவும் இடுப்பளவு நீரில் முக்கிமுக்கி எழும்புவதுதான் குளிப்பு. அப்பர் கண்காணித்துக்கொண்டிருப்பார். இவ்வளவுக்கும் அப்பருக்கு நன்றாக நீச்சல் தெரியுமென்பதும் - அதுவும் சிறுவயதிலிருந்தே நீந்துவாரென்பதும் ஒரு முரண். கடற்கரையிலேயே வளர்ந்த எங்களுக்கே இப்படியென்றால் யாழ்ப்பாணத்தின் மற்றக் கிராமங்களையும் பட்டினங்களையும் யோசித்துப் பாருங்கள். பரம்பரையாகக் கடற்றொழில் செய்பவர்களை விட்டுப்பார்த்தால் மற்றவர்கள் யாராவது வீட்டில் முரண்டுபிடித்து, பெற்றோருக்குத் தெரியாமல் எங்காவது நண்பர்களோடு சேர்ந்து நீச்சல் பழகினால்தான் உண்டு. வன்னி - யாழ்ப்பாணச் சமூகங்கங்களை ஒப்பிடுகையில் இந்த நீச்சலும் வித்தியாசக் காரணியாக இருக்கும். நானும் வன்னிக்கு வந்துதான் நீந்தப் பழகிக்கொண்டேன்.

படகுப்பயணத்துக்கு வருவோம். அந்தப்பயணத்தில் நீந்தத் தெரியாமை எனக்குப் பயத்தைத் தரவில்லை. தற்செயலாக விழுந்தாலும் பக்கத்திலிருக்கும் யாரோ காப்பாற்றுவார்கள்; ஓட்டியாவது காப்பாற்றிவிடுவார் என்ற நம்பிக்கையிருந்தது. கடற்பயணத்தில் நிறையப்பேர் சத்தி எடுப்பார்கள். அந்தப் பயணத்திலும் சிலர் எடுத்தார்கள். ஆனால் எனக்குச் சத்தி வரவில்லை. அது எனக்கு ஆச்சரியமாகவே இருந்தது. ஏனென்றால் வாகனப் பயணங்களில் கட்டாயம் சத்தி எடுத்தே தீருவேன். எங்கள் கிராமத்திலிருந்து யாழப்பாண நகருக்கு பேருந்தில் வந்தால் குறைந்தது இரண்டு தடவையாவது சத்தி எடுக்காமல் வந்து சேர்ந்ததில்லை. அதுகூட கையில்வைத்துக் கசக்கும் தேசிக்காயின் உபயத்தில்தான் மட்டுப்படுத்தபட்டிருக்கும். இதனாலேயே என் பன்னிரண்டாவது வயதின்பின் யாழ்ப்பாணத்துள் எங்குச் செல்வதென்றாலும் சைக்கிள் பயணம்தான். மானிப்பாயிலிருந்து பளைக்குச் செல்வதென்றால் 'ஐயோ சைக்கிளிலயோ?' என்று மற்றவர்கள் வாய்பிளக்கும் நேரத்தில் நான் சைக்கிளில் மட்டுமே பளைக்கு வந்து செல்வேன். கொம்படி - ஊரியான் பாதை நடைமுறையிலிருந்த போது (எனக்குப் பன்னிரண்டு வயதுகூட நிறைவடையவில்லை) புலோப்பளையில் சொந்தக்காரர் வீட்டுக்குச் சென்று ஒருகிழமை தங்கிவிட்டு வருவதாக வீட்டில் சொல்லிவிட்டு நானும் அம்மம்மாவும் மூன்றுவயது மூத்தவரான ஒன்றுவிட்ட அண்ணாவும் இரண்டு சைக்கிள்களில் வன்னி வந்து மூன்றுநாள் ஊர்சுற்றிவிட்டுத் திரும்பினோம். குஞ்சுப் பரந்தன் அடையும்வரை ஒரு குவளை பச்சைத்தண்ணீர்கூட குடிக்கமுடியாமல் இயங்கவேண்டியிருந்த - தண்ணீரின் அருமையை வாழ்க்கையில் முதன்முதல் உணர்ந்த அவ்வனுபவத்தை விட்டுப்பார்த்தால் அப்பயணம் மிகுந்த உல்லாசமாகவே எனக்கு இருந்தது. அந்தக் கள்ளப் பயணத்திலேயே வன்னி மீது எனக்கொரு அதீத பிடிப்பு வந்துவிட்டது. சைக்கிளில் வன்னி சென்று சுற்றி வந்ததை என் நெருங்கிய நண்பர்களிடம் சொன்னபோது யாருமே நம்பவில்லை. அப்பயணம் பற்றி பிறகொருக்கால் பேசலாம்.
வாகனப் பயணங்களில் தவறாமல் சத்தி எடுத்தே தீரும் நான், அனுபவமற்ற கடற்பயணத்தில் சத்தியெடுக்காமல் வந்தது ஆச்சரியம்தானே?

படகுகள் மெதுவாகப் பயணி்த்துக்கொண்டிருந்தன. நேவி வருவானோ? அடிவிழுமோ என்று முன்புபோல் உயிரைக் கையில் பிடித்துக்கொண்டு பயணம் செய்யவேண்டிய தேவையில்லை. இப்போதெல்லாம் நேவி இக்கடலில் வருவதேயில்லை.
படகுகள் ஆலங்கேணியை அண்மிக்கின்றபோது பொழுதுபட்டுக்கொண்டிருந்தது. இருள் சூழத்தொடங்கியது. கரையில் அரிக்கன் விளக்குகள் எரியத் தொடங்கிவிட்டன. படகுகள் கரையை அண்டின. தரையில் இறங்கினோம். வன்னிமண் நிரந்தரக் குடிமக்களாக எங்களை ஏற்றுக்கொண்டது. கரையிலிருந்து குறிப்பிட்ட தூரம் உழவு இயந்திரத்தில் மட்டும்தான் பயணிக்கலாம். பிறகுதான் ஏனைய வாகனங்களில் போகலாம்.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
வாகனம் ஓரிடத்தில் நின்றது. இது என்ன இடம் என்று கேட்டேன். 'விசுவமடு றெட்பானா' என்றார்கள். பின்னர் இன்னொரு சந்தியில் நின்றது. வாகனத்தில் ஏதோ பிரச்சினை என்று சொல்லி எங்களை இறக்கிவிட்டு ஒரு திருத்தகம் தேடிப்போனார்கள். அது என்ன சந்தி என்று கேட்டேன். 'புதுக்குடியிருப்புச் சந்தி' என்றார்கள். "இந்தப்பாதை எங்க போகுது, அது எங்க போகுது" என்று விவரம் கேட்டுக்கொண்டிருந்தேன். அதில் ஒருபாதை முல்லைத்தீவு போகிறது.
'உப்பிடியே போனா நேர முல்லைத்தீவுக் காம்புக்குப் போகலாம்'
'கனதூரமோ?'
'சீச்சி!. ஒரு பத்துமைல் வரும்'.
இவ்வுரையாடல் நடந்து மூன்றுமாதங்களில் முல்லைத்தீவுப் படைத்தளம் தமிழர்களின் வசமாகியது. வன்னிப்பெருநிலப் பரப்புக்குள் தனித்துத் துருத்திக்கொண்டிருந்த ஒரே இராணுவப் படைத்தளம் இதுதான்.

நாங்கள் வன்னி வந்தபோது புதுக்குடியிருப்புச் சந்தியில் நாலோ ஐந்து கடைகள் மட்டுமே இருந்தன. இரவு எட்டு, ஒன்பது மணியோடு அவை பூட்டப்பட்டுவிடும். சந்தியில் மாடுகள் படுத்திருந்தன. சிலநாட்களிலேயே அச்சந்தி மாறத்தொடங்கி, பின் வன்னியின் மிகமுக்கியமான பட்டினமாகவே மாறிவிட்டது.

அன்றைய பயணம் புதுக்குடியிருப்பிலிருந்து முத்தையன்கட்டு நோக்கி உழவியந்திரமொன்றில் தொடங்கியது. விடிகின்ற நேரமாகிவிட்டது என்றாலும் பாதையை மூடி வளர்ந்திருந்த அடர்ந்தகாடு இன்னும் முழுமையான வெளிச்சத்தை விடவில்லை. மன்னாகண்டல் சந்திக்கு வருமுன்பே இருமுறை யானைகளைச் சந்தித்துவிட்டோம். எனது ஐந்தாவது வயதில் மடுவுக்கு நடந்துவந்தபோது காட்டுயானைகளைப் பார்த்தபின் இப்போதுதான் பார்க்கிறேன். அவை எதுவுமே செய்யவில்லை. தம்பாட்டுக்கு வீதியைக்கடந்து காட்டுக்குள் இறங்கின. முத்தையன்கட்டுக்கு வரும்வழியில் நீர்த்தேக்கங்கள் சில வந்தன. யாழ்ப்பாணத்து ஆரியகுளம் அளவுக்கு - சில அவற்றைவிடப் பெரிதாகவும் இருந்தன. அந்தக் குளங்களுக்கு என்ன பேர் என்று கேட்டபோது அவை குளங்களல்ல; மோட்டைகள் என்று விளக்கம் தரப்பட்டது.

முத்தையன்கட்டுக்கு வந்தாயிற்று. ஆனால் முத்தையன்கட்டுக் குளத்தைப் பார்க்கவில்லை. அடுத்தநாளே இரணைமடுவுக்குப் போகவேண்டி வந்தது. அந்த அதிகாலையில்தான் நான் முதன்முதல் இரணைமடுவைப் பார்க்கிறேன். எதிர்ப்பக்கத்துக் கரை தெரியவில்லை. முதலில் நான் இதை ஏதோ ஒரு கடனீரேரி என்றுதான் நினைத்திருந்தேன். பிறகுதான் சொன்னார்கள் இதுதான் இரணைமடுக்குளமென்று. பெரியகுளமென்று கேள்விப்பட்டிருக்கிறேன், ஆனால் இவ்வளவு பெரிதாயிருக்குமென்று நினைக்கவேயில்லை. அந்த ஆச்சரியத்தோடே முத்தையன்கட்டு வந்தேன். அந்தக்குளமும் அப்படியேதான்.

பங்குனி மாசம் மிகக்கடுமையான பனி. அதுவும் முத்தையன்கட்டுக் குளத்தின் சுற்றுப்புறங்கள் மிகக்கடுமையான பனியாக இருக்கும். பல நேரங்களில் இருபதடியில் ஒருவர் நிற்கிறார் என்பதே தெரியாதளவுக்குப் பனிப்புகார் மூடியிருக்கும். மிக மகிழ்ச்சியாகவும் புதுமையாகவும் அந்த அனுபவம் இருந்தது.

நாங்கள் வன்னி வந்தபோது வன்னி வன்னியாகவே அதன் இயல்போடு இருந்தது. யாழ்ப்பாணத்தில் விடுதலைப்புலிகள் 'முகம்' என்று ஒரு திரைப்படம் வெளியிட்டிருந்தார்கள். அதில் வன்னியை வளங்கொழிக்கும் பூமியாகவும் அங்குக் குடிபெயர்வது நன்மை பயக்குமென்றும் ஒரு கருத்து இடம்பெறும். புதுவை இரத்தினதுரை வன்னிப் பெருநிலம் பற்றி எழுதிய "வன்னி அள்ளியள்ளி வழங்குகிறார் கொள்ளை வளம்" என்ற வரிவரும் அருமையான பாட்டொன்றும் அப்படத்தில் இடம்பெற்றது. பாடலிற்சொல்லப்பட்டது போல்தான் அப்போது வன்னியிருந்தது. பொதுவாக எல்லாப் பொருட்களும் யாழ்ப்பாணத்தோடு ஒப்பீட்டளவில் மிகமிக மலிவாக இருந்தன. பழவகைகளோ மீன், இறைச்சி வகைகளோ மிகமிக மலிவு. அப்போது வன்னியில் கிலோ மாட்டிறைச்சி வெறும் இருபது ரூபாய்கள் மாத்திரமே. யாழ்ப்பாணத்தில் இது எண்பது ரூபாவாக இருந்தது. நல்ல தேங்காய்கள் நாலு, ஐந்து ரூபாயாக இருந்தன. கொஞ்சநாட்களில் வன்னியிலும் எல்லாம் மாறத்தொடங்கியது. புதிய குடியிருப்புக்கள் வந்தன. நிறையக் கடைகள் முளைத்தன. விலைகள் அதிகரித்தன.

நான் முத்தையன்கட்டு வந்த முதல்அதிகாலை மறக்கமுடியாதது. விடிந்தபோது எங்கும் வண்ணத்துப்பூச்சிகள். அருகிலிருந்த தோட்டமொன்றிலிருந்து காட்டுப் புதர்நோக்கி போவதும் வருவதுமாக மஞ்சள் நிறத்தில் ஆயிரக்கணக்கான வண்ணத்துப்பூச்சிகள். அதற்குப்பின்னான வருடங்களில் அப்படியொரு வண்ணத்துப்பூச்சிப் பவனியை நான் பார்க்கவில்லை.
வந்த முதற்சில நாட்களில் மரங்கள், தாவரங்களை அறிவதில் சுவாரசியமாகப் போனது. வன்னி மரங்களில் பாலை மட்டுமே உடனடியாகக் கண்டுபிடிக்கக்கூடியவாறு முன்பே அறிமுகமாக இருந்தது. மற்றும்படி பெயரளவில் மட்டுமே கேள்விப்பட்டிருந்த முதிரை, கருங்காலி போன்ற வைர மரங்களுட்பட அதுவரை கேள்விப்படாத பலவற்றையும் அறிந்தேன். எல்லாப் பாலைமரங்களும் காய்ப்பன என்று அதுவரை நினைத்திருந்த நான் பெருமளவான பாலைமரங்கள் தம் வாழ்நாளில் காய்ப்பதேயில்லை என்பதை அறிந்துகொண்டேன்.
"தேவாங்கு" என்று மனிதரைத் திட்டப் பயன்படும் அந்த விலங்கு பலஇரவுகள் உரத்து அழுதுகொண்டிருக்கும். எங்களுக்கு அழுவதுபோல் இருந்தாலும் அதுதான் அவ்விலங்கின் உண்மையான ஒலி. அதைப்பார்க்க வேண்டுமென்ற என் விருப்பம் ஒருவருடம் தாண்டியபின்தான் நிறைவேறியது. யானைகள், மயில்கள், குரங்குகள் என்று மிகச்சாதாரணமாகப் பார்க்க முடிந்த விலங்குகள் நிறைய.

மேலும் சில விசயங்கள் சொல்லப் போனால் இடுகை நீள்வது மட்டுமன்றி முதன்மைத் தொனியிலிருந்து மாறுபட்டுவிடுமென்பதால் அவற்றை வேறோர் இடுகையில் வைத்துக் கொள்ளலாம்.

பிறகு எல்லாம் தலைகீழ். யானை பார்ப்பதென்றால் தவமிருக்கவேண்டிய நிலை. மயில்களும் வெகுவாகக் குறைந்து போயின. குரங்குகள் மட்டும் எப்போதும்போல இருந்தன.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
யாழ்ப்பாணத்திலிருந்து வெளியேறிய அந்தப் படகுப்பணயத்தை மீள நினைக்கிறேன். யாழ்.குடாநாடு முழுமையாக அரசபடையால் ஆக்கிரமிக்கப்படப் போகிறதென்பதிலோ, ஆக்கிரமித்த இராணுவம் அடித்துவிரட்டப்படும்வரை மீளவும் யாழ்ப்பாணம் திரும்புவதில்லையென்பதிலோ எந்தச் சந்தேகமுமின்றி தெளிவாக இருந்தேன். நிறைய மக்கள் அப்படித்தான் இருந்தார்கள். கிட்டத்தட்ட எல்லோருக்கும் அப்பயணம் யாழ்ப்பாணத்துக்கான 'பிரியாவிடை' நிகழ்வு. சிலருக்கு நிரந்தரமான பிரிவு. கண்ணீரும் கம்பலையுமாகத்தான் பலர் பிரிந்தார்கள், இடப்பெயர்வில் எதிர்கொள்ளப் போகும் அவலங்களை நினைத்துமட்டுமன்று, யாழ்ப்பாணம் என்ற நிலப்பகுதியை விட்டுப் பிரிவதாலும்தான்.
அன்றைய நாளில் நான் இப்படியான உணர்ச்சிகளுக்கு ஆட்படாமலிருந்தேன் என்றுதான் நினைக்கிறேன். இனிமேல் வன்னிதான் நிரந்தரம் என்று அன்றே முடிவாகியிருந்தேன் என்றுதான் உணர்கிறேன். வன்னிமீது எனக்கிருந்த மயக்கமும் அந்தநேரத்தில் பொறுப்புணர்ச்சியற்றவனாய் இருந்த சூழ்நிலையும் புதிய அனுபவங்களையும் வாழ்க்கைச் சூழலையும் எதிர்கொள்ளும் ஆர்வமும் சேர, அப்பயணம் ஓர் உல்லாசப்பயணம் போன்றிருந்ததைச் சொல்லித்தான் ஆகவேண்டும்.

பிரதேசங்களைக் கொண்டு அடையாளப்படுத்துவது என்வரையில் தவறேயன்று. பிரதேச அடையாளங்களைத் தொலைத்துவிட்டோ மறைத்துவிட்டோ வாழ்வது அத்தனை சுலபமில்லையென்பதோடு அவசியமுமற்றது. என்னதான் இருந்தாலும் சொந்தக் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் என்று அறிமுகமாகும் நபர்களில் இயல்பாக ஏதோவோர் ஈர்ப்பு வந்துவிடுகிறது. [ஆனால் சொந்த மாவட்டக்காரன் (யாழ்ப்பாணம்) என்று வரும்போது எனக்கு எள்ளளவும் இந்த ஈர்ப்பு வருவதேயில்லை.] புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்தாகி ஒருவருடத்தின் பின்புதான் நான் யாழ்ப்பாணம் போனேன். அங்குச் செல்ல வைத்தது சொந்தக் கிராமத்தில் நடந்த ஒரு கோயில் திருநாள்தான். ஊரைப் பார்க்கும் ஆவலோடு, இலங்கைக்குள் மட்டுமன்றி உலகத்தில் சிதறி வாழ்ந்த ஊர்க்காரரையும் உறவினரையும் ஒன்றிணைத்த அத்திருநாளில் எல்லோரையும் காணலாம் என்ற அவாவுமே என்னை அங்குப் போகவைத்தது. கிராமத்தின் எல்லா இடமும் திரிய முடியாதபடி தடையிருந்தாலும் சில இடங்களிலாவது காலாற நடந்து சிறுவயது ஞாபகங்களின் நினைவை மீட்டி இன்புற முடிந்தது. நிறையப் பேரை நீண்டகாலத்தின் பின் கண்டு அளவளாவ முடிந்த திருப்தியோடும், ஆயிரக்கணக்கான பனைகள் தறிக்கப்பட்டு ஓ வென்று வெட்டையாத் தெரிந்த இடங்களைப் பார்த்த பொருமலோடும், இன்னமும் கோயில் திருவிழாக்கள் முன்புபோலவே சண்டை சச்சரவுகளோடுதான் நடக்கின்றன என்ற புரிதலோடும், எங்கள் சொந்த வீட்டிலும் காணியிலும் முகாம் அமைத்து இருந்துகொண்டு அந்தச் சுற்றாடலையே உயர்பாதுகாப்பு வலயமாக்கி, கிட்டப் போயல்ல - எட்டத்திலிருந்தே வீட்டைப் பார்க்கும் விருப்பத்தையும் அனுமதிக்காமல் விரட்டிவிட்ட இராணுவத்தைச் சபித்துக்கொண்டும் "மூன்றுநாள் சூராவளிச் சுற்றுப்பயணத்தை" முடித்துக்கொண்டு யாழ்ப்பணத்தை விட்டு வெளியேறினேன்.

பிரதேச அடையாளத்தைப் பொறுத்தவரை, இன்னொரு பிரதேசத்தையோ அதன் குடிமக்களையோ தாழ்வாகக் கருதுவதும் ஒடுக்குதலுக்குள்ளாக்குவதும், தான்மட்டுமே உயர்ந்தவனென்ற இறுமாப்பும்தான் பிரச்சினைக்குரியது. அவ்வகையில் பிரதேசப்பெருமை கூடக் கவனமாகக் கையாளப்பட வேண்டியது. பலநேரங்களில் பிரதேசப்பெருமையையும் அடையாளத்தையும் ஓர் எதிர்வன்முறையாகவே பயன்படுத்த வேண்டியிருக்கிறது.

புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்தாகியபின் குறிப்பிட்ட படிப்பொன்றுக்காக யாழ்ப்பாணம் போன தங்கைகூட ராஜபக்ச பதவிக்கு வந்ததும் ஓடிவந்துவிட்டாள். யாழ்ப்பாணத்தில் வீடும் காணியும் பதிவில் மட்டுமே சொந்தமாக இருக்கிறது. வன்னியில் காணியும் வீடும் சொந்தமாச் சம்பாதித்தாயிற்று.

நினைவு தெரிந்தபின் என் வாழ்க்கையில் யாழ்ப்பாணத்தில் நான் வாழ்ந்த காலமும் வன்னியில் வாழ்ந்த காலமும் ஒரேயளவானவை. யாழ்ப்பாணத்தில் சிறுபராயம், வன்னியில் வளர்பராயம்.
இடத்தைக் கொண்டு அடையாளப்படுத்தவோ பெருமைப்படவோ வேண்டுமென்றால் நான் எந்த இடத்துக்குரியவனாக வெளிப்படுவேன் என்பது என்னைப்போலவே உங்களுக்கும் தெளிவாகத் தெரியும் (என்று நினைக்கிறேன் ;-)).
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

தொடர்புடைய பழைய இடுகைகள்:
1. முத்தையன்கட்டு-சில நினைவுகள்-1
2. முத்தையன்கட்டு-சில நினைவுகள்-2

Labels: ,

எழுத்துருவைத் தெரிவுசெய்ய.
பாமினி ஆங்கில உச்சரிப்பில்

[மேலுள்ள பெட்டியில் தட்டச்சினால் கீழுள்ள பெட்டியில் ஒருங்குறிக்கு (Unicode) மாற்றப்பட்ட எழுத்துரு கிடைக்கும்]


சுரதா, கிருபாவுக்கு நன்றி


Tuesday, March 06, 2007

நாங்கள் பொம்பிளை பார்க்கும் முறை

சயந்தனின் பதிவுக்குரிய பின்னூட்டம் நீண்டதால் அலட்டலைச் சொந்த வலைப்பதிவிலேயே வைக்கலாமென்று நினைத்ததால் இவ்விடுகை.

நானறியவும் உப்பிடி பெண்பார்க்கும் படலம், பஜ்ஜி இன்னபிற, என்பன நடக்கவில்லை. (டி.சே சொன்னமாதிரி பஜ்ஜி செய்யத் தெரியாததும் காரணமா இருக்கலாம்). புகைப்படத்தோடே தொடங்கி ஓரளவு சரிவரும் நிலையில் எங்காவது பொது இடத்தில் இருவரையும் பார்க்க வைப்பது தான் பெரும்பாலும் நடக்கிறது. அப்படிப் பார்ப்பதில்கூட நிறைய நுட்பங்கள் கடைப்பிடிக்க வேண்டும். பொதுவாக கோயில்களில்தான் இச்சந்திப்பு நடைபெறுவதால் - அதுவும் ஏதாவது திருநாள் பெருநாளுக்கு நடைபெறுவதால் இருக்கக்கூடிய நனநெரிசலுக்குள், பார்க்க வேண்டியவர்கள் சரியாகப் பார்த்துக்கொள்வதற்கு ஏற்றாற்போல் இயலுமானவைகளைச் செய்ய வேணும்.

நான்கூட இதைச் செய்திருக்கிறேன். அப்போது எனக்குப் பதினொரு வயது இருக்கும். எங்கள் ஊர் தேவாலயத்திருநாள் ஒன்றில் இது நடந்தது. திருநாள் திருப்பலி முடிந்ததும் ஒருவர் என்னிடம் ஒரு திட்டம் விளக்கினார். கோயில் முற்றத்தில் நிற்கும் மலைவேம்பின் கீழே நான் இடம்பிடித்து வைத்திருக்க வேண்டும். என்னோடு சேர்ந்த சிறுவர்கள் சிலரைக் கூட்டிக்கொண்டு போய் அம்மரத்தின்கீழ் நின்றுகொண்டு குறிப்பிட்ட பெரியவர் வரும்வரை நேரத்தைப் போக்காட்ட வேண்டும். இதுமட்டும்தான் எனக்குச் சொல்லப்பட்டது. சொன்னவர் ஊரில் நல்லது கெட்டது எதற்கும் முன்னின்று நடத்தும் பெரியவர். எல்லா இடத்திலும் திறப்பை இவர்தான் வைத்திருப்பார். (திறப்பு என்ற சொற்பயன்பாடு யாருக்காவது ஞாபகம் வருகிறதா?). அதனால் மறுபேச்சில்லாமல் ஒத்துக்கொண்டாயிற்று. அப்போது, ஏன் என்று கேட்காமல் வரக்கூடிய கூட்டமும் என்னோடு இருந்தது.

திட்டப்படி பூசை முடிந்தவுடன் நாலைந்து பேரைக்கூட்டிக்கொண்டு குறிப்பிட்ட இடத்துக்குச் சென்றுவிட்டேன். ஒருவனை விட்டு நாலு கச்சான் சரைகளையும் வாங்கியாச்சு. ஏராளமான சனம். பூசை முடிந்ததும் கோயில்வளவில் நின்று கதைத்துக்கொண்டிருந்தார்கள். அனேகம்பேர் மரத்தைநோக்கித்தான் வருகிறார்கள். ஆனால் இருக்கும் கூட்டத்தை வைத்து அந்த இடத்தைத் தக்க வைக்க வேணும். என்னைத்தவிர வேறெவருக்கும் கட்டளை தெரியாது. அங்கிருந்து வெளிக்கிட்ட என் கூட்டத்தவரைத் தக்கவைக்க புதுப்புது முயற்சிகள் செய்தேன். வள்ளக்காச்சி அடித்து விளையாட்டு விளையாடினோம். குறிப்பிட்டவர் வந்தபாடில்லை. பிறகு நின்ற இடத்தில் இருந்து ரெண்டு காலையும் சேத்துவைச்சு ஆர் கனதூரம் பாயிறது எண்டு எங்களுக்குள்ள ஒரு போட்டி வைச்சன். அது கொஞ்சம் புழுதியும் கிளப்ப, பக்கத்தில நிண்டவை விலத்தினதால இன்னும் கொஞ்சம் பெரிய இடம் பிடிச்சம்.

இப்ப குறிப்பிட்ட பெரியவர் வந்து சேர்ந்தார்.

'சரிசரி தம்பியவை, புழுதியைக் கிழப்பாமல் அங்கால போய் விளையாடுங்கோ'
எண்டு சொல்லி அனுப்பினார். அவரோட இன்னொரு குழு வந்திருந்தது. தெரியாத முகங்கள்; வேற ஊர்க்காரர் எண்டது விளங்கிச்சு. சொன்னதைச் செய்துகாட்டின வெற்றிக்களிப்போட இஞ்சாலவந்து எங்கட பிராக்கைப் பாத்துக்கொண்டிருந்தம். அப்பதான் ஒருவிசயத்தைக் கவனிச்சன். நாங்கள் இடம்பிடிச்சு வைச்சிருந்த இடத்தில நிண்ட கூட்டத்திலயிருந்து ஒவ்வொருத்தரும் பக்கத்திலயிருக்கிற ஆக்கள் பாத்திடக்கூடாதெண்ட எச்சரிக்கையோட நைசா கடைக்கண்ணால அங்கால ஓரிடத்தை இடைக்கிடை பாத்துக்கொண்டிருந்திச்சினம். அதுக்குள்ள நல்லா வெளிக்கிட்டு நிண்ட அக்காவும் ரெண்டொருதரம் நைசா கண்ணைத் திருப்பிறதும் பிறகு ஒளிக்கிறதும் எண்டு விளையாட்டு நடக்குது. அவையள் பாக்கிற இடத்தில இன்னொரு கூட்டம். அது ஒரு பிட்டி. முந்தி என்னத்துக்கோ மண்கொட்டி பிறகு பாவிக்காமல் இறுகி பிட்டியா வந்திட்டுது. இவையள் நிக்கிற மரத்திலயிருந்து இருபது, இருபந்தைஞ்சு யார் தூரத்தில அந்தப்பிட்டி இருக்கு. என்ன நடக்குதெண்டு எனக்கு இன்னமும் விளங்கேல.

பிட்டிக்குப் பக்கத்தில போனன். நம்மட ஊர்க்காரர்தான். ஒருநாளும் வேட்டி கட்டிப் பாத்திராதவர் ஒருத்தர் அதுக்குள்ள பட்டுவேட்டி கட்டிக்கொண்டு கலாதியா நிக்கிறார். மரத்தடியில நடக்கிற கூத்துத்தான் இஞ்சயும் நடந்துகொண்டிருக்கு. அண்ணருக்குப் பொம்பிளை பாக்கினமாம் எண்டதை அரசல்புரசலா வீட்டில கதைக்கிறதை ஏற்கனவே கேள்விப்பட்டிருந்தன். எல்லாத்தையும் கூட்டிக்கழிச்சுப் பாத்துக் கண்டுபிடிச்சிட்டன். இவர் பொம்பிளை பாக்கக் கோயிலுக்கு வந்திருக்கிறார்; அவ மாப்பிள்ளை பாக்கக் கோயிலுக்கு வந்திருக்கிறா.
அந்தக் கலியாணத்துக்கு என்ர உதவியா பொம்பிளை வீட்டாருக்கு இடம்பிடிச்சுக் குடுத்த திருப்தியோட கலியாண வீட்டுச்சாப்பாடும் சாப்பிட்டன்.

இதில என்ன சொல்ல வாறன் எண்டா, பொம்பிளை பாக்கிற, மாப்பிள்ளை பாக்கிற சடங்கை நடத்திறவர் எவ்வளவு நுட்பமாச் செய்தார் எண்டதை. இருதரப்புமே மற்றத்தரப்பை வடிவாகப் பார்க்கக்கூடியமாதிரி இடங்களைத் தெரிவு செய்யிறதும், அந்த இடங்கள் சனநெரிசலில் பறிபோயிடக் கூடாதெண்டதுக்காக முற்கூட்டியே அணிகள் ஒழுங்கமைத்து அவ்விடங்களைக் கைப்பற்றிக் கொள்வதும் ஒரு தேர்ந்த செயற்பாடு. அந்தப் பிட்டியைக் கைப்பற்ற அவர் என்ன செய்தார் என்று தெரியாது. மரத்தடியைவிட அதற்குத்தான் போட்டி அதிகம். சுழட்டலுக்கு வந்துநிற்கும் மைனர் மச்சான்களுக்கென்றே ஒதுக்கப்பட்ட இடம் அது. அதில நிண்டு கூட்டத்தை ஒரு சுழட்டுச் சுழட்டலாம்.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
பொம்பிளை பாக்கக் கோயிலுக்குப் போறது தொடர்பா இன்னொரு சுவாரசியமான சம்பவம் இடம்பெயர்ந்து இருக்கேக்க எங்கட ஊர்க்காரருக்கு நடந்தது.

எங்கள் ஊராள் ஒருத்தருக்குக் கலியாணம் பேசி, சீதனம் உட்பட்ட பிறவிசயங்கள் ஓரளவு சரிவந்து, பொம்பிளையை பார்க்க வைக்க ஏற்பாடாகியது. பக்கத்து ஊர் மாதாகோயில் திருநாளுக்குப் பொம்பிளை வீட்டாரை வரச்சொல்லியாச்சு. மாப்பிள்ளை வீட்டார் திருநாளுக்குக் கார்பிடிச்சுப் போக ஏற்பாடாகிவிட்டது. காரில போறவங்கள வேற்றுக்கிரகத்து ஆக்களாப் பாக்கிற நிலையிலதான் அப்ப யாழ்ப்பாணம் இருந்தது. திருநாளுக்கு முதல்நாள்தான் பொடிப்பிள்ளைக்குச் சொல்லப்பட்டது. அந்தநேரத்தில யாழ்ப்பாணத்தில பகல்-இரவு உதைபந்தாட்டச் சுற்றுப்போட்டி நடந்துகொண்டிருந்தது. 3 நாட்களில முழுச்சுற்றுப்போட்டியும் முடிஞ்சிடும். மாப்பிள்ளை கழக விளையாட்டு வீரன். திருநாள் அண்டைக்கு பகல் அவர் விளையாடவேண்டியிருந்தது.
இந்தநிலையில மாப்பிள்ளை திருநாளைக்கு வர ஏலாது எண்டிட்டார். வீட்டில குழப்பம்.

'டேய்! என்ன சொல்லிறாய்? உன்னை நம்பி பெட்டைய வரச்சொல்லிப் போட்டம். இந்தநேரம்போய் இப்பிடி சொல்லிக்கொண்டிருக்கிறாய்? வேற ஒருத்தனை விளையாட விட்டிட்டு மரியாதையா பூசைக்கு வா. பிறகு விளையாடப் போ'
எண்டு அர்ச்சனை நடக்குது. மாப்பிள்ளை மசியிற பாடில்லை. ஆள் ஒரு விறுமன்தான். இரவுவரைக்கும் ஆள் முடிவு சொல்லேல. விடிய வெளிக்கிட்டுப் போறதுக்காக கார்க்காரனை இரவே வரச்சொன்னதால காரும் வந்திட்டுது.

'பொடிப்பிள்ளை கொஞ்சம் முறுக்கிக்கொண்டு நிக்கிறார். விடிய எல்லாம் சரிவந்திடும். பெட்டையப் பாக்க வராமல் உவரெங்க விளையாடப் போறது?' எண்டு பெரிசுகள் தங்களுக்குள் சமாதானம் சொல்லிக்கொண்டு பிரச்சினையை முடிச்சுக்கொண்டு படுத்தாலும் அதையெல்லாம் பொய்யாக்கி, சொன்னமாதிரி விடியவெள்ளன மாப்பிள்ளை விளையாடப் போட்டார்.

குடும்பம் அல்லோலகல்லோலப்பட்டது. ஆளாளுக்குச் சத்தம்போட்டார்கள். 'எளிய நாய், நாய்ப்புத்தியக் காட்டிப்போட்டான்' எண்டது தொடக்கம் வரையறையின்றி மாப்பிள்ளைக்கு வசவுகள் விழுந்தன. சும்மாநிண்டு பிரியோசினமில்லை எண்டு விளக்கி வெளிக்கிட்டவயளோட காரில ஏறி கோயிலுக்குப் புறப்பட்டார் எல்லாத்தையும் ஒழுங்கு செய்தவர்.

மாப்பிள்ளை இல்லாமல் கார் போனது. காருக்குள்ளயே சண்டை. தங்கட குடும்ப மானம் கப்பலேறியதாய் மாப்பிள்ளை குடும்பம் அலட்டிக்கொண்டிருக்க, 'என்ர மானத்தை வாங்கிப்போட்டியள், பிள்ளையச் சமாளிச்சு வரவைக்கத் தெரியேல உங்களுக்கு. இனி என்னை எவன் மதிப்பான்? அதுகளின்ர முகத்தில நான் எப்பிடி முழிக்கிறது?' எண்டு ஒழுங்கு செய்தவர் தாய்தேப்பனோட ஏறிப்பாய கார் கோயிலுக்குப் போய்ச்சேர்ந்தது. அங்கபோய் சடையப்பாத்து, ஏலாமல் ஒழுங்கு செய்தவரே நடந்ததைச் சொல்லி, 'பிள்ளை! உனக்கு அவன் சரிப்பட்டு வரான். காவாலிப் புத்தியக் காட்டிப்போட்டான். நல்லவேளை நீ தப்பிச்சாய்' எண்டு உண்மையைச் சொல்லி முற்றுப்புள்ளி வைத்தார். மாப்பிள்ளைத்தரப்பு, பொம்பிளை தரப்பு, இடைத்தரப்பு எண்டு மூண்டு தரப்புக்கும் மனஸ்தாபத்தோட அந்தப் பேச்சும் திருவிழாவும் முடிந்தது.

கொழுத்த சீதனச் சம்பந்தம் தொலைந்ததோடு மூவாயிரம் ரூபா கொடுத்து அயலூர்க்கோயில் திருவிழாவுக்குச் சவாரி போய்வந்த எரிச்சலும் சேர மாப்பிள்ளை வீட்டில் பிரளயமே நடந்த்து. அதுமட்டுமில்லை, விளையாட்டுக் கழகத்தோடயும் சண்டை. அவங்கள் தங்களுக்கு உப்பிடி ஒருவிசயமும் தெரியாது; தெரிஞ்சிருந்தா நாங்களே அவனை இழுத்துக்கொண்டு வந்து கோயிலில விட்டிருப்பம் எண்டிட்டாங்கள்.

ஆனாலும் அதிசயம் நடந்தது. குடும்பங்களுக்குள்ளதான் பிரச்சினை வந்ததேயொழிய, தொடர்புடைய ரெண்டு பேருக்கும் ஏதோ எங்கயோ பத்தி, சந்திப்பை டெவலப்பாக்கி, இன்னும் அட்வான்சாப் போய், திரும்பவும் ரெண்டு குடும்பத்துக்கயும் சண்டை சச்சரவுகளோட ஒருவாறு கலியாணம் முடிந்தது.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
தனிய புகைப்படத்தில மட்டும் பார்த்தே கலியாணம் முற்றாகின நிறையக் கலியாணங்களைக் கண்டிருக்கிறம். வெளிநாட்டுக்கான கலியாணம் எண்டா அப்பிடித்தான். ரெண்டுபேருமே தனிய புகைப்படத்தை மட்டும் பார்த்தே கலியாணத்துக்குச் சம்மதிக்க வேண்டிய நிலை. சில இடங்களில் மாப்பிள்ளை இல்லாமலே கலியாணம் மாதிரி ஒரு கொண்டாட்டம் கொண்டாடுவார்கள். பொம்பிளையை கொழும்புக்கு அனுப்ப முதல், வழமையான கலியாணக் கொண்டாட்டம் மாதிரி தடல்புடலாக் கொண்டாடித்தான் அனுப்பி வைப்பினம்.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
தன்னார்வத் தொண்டாக கலியாணம் பேசுபவர்கள் எங்கள் தமிழ்ச்சமுதாயத்தில் நிறையப்பேர் இருக்கிறார்கள். சிலர் இதையொரு தவமாகவே செய்வார்கள். பெரும்பாலும் முதியவர்கள் (என்புரிதலின்படி குறிப்பாகப் பெண்கள்) இதில் மிகஈடுபாட்டுடன் இருப்பார்கள். கண்ணிலே தென்படும் பெடி பெட்டைகளை எல்லாம் கலியாணக் கண்கொண்டுதான் பார்ப்பார்கள். யாரை யாரோட கொழுவி விடலாம் (இது வேற கொழுவி;-) எண்டுதான் யோசித்துக்கொள்வார்கள். யாரும் கேட்காமலே வலியப்போய் சேவையில் இறங்கிவிடுவார்கள்.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
முள்முருக்கு நடுவது பற்றி சயந்தனின் பதிவில்தான் முதன்முதல் கேள்விப்படுகிறேன். இதுபற்றி எனக்கு எதுவும் தெரியாது. நான் அறிய விரும்புவது, நட்ட கதியால் முளைக்காவிட்டாலோ ஆடு காந்தியதால் பட்டாலோ ஏதாவது அபசகுணமாக நினைக்கும் வழக்கமுண்டா?

Labels: ,

எழுத்துருவைத் தெரிவுசெய்ய.
பாமினி ஆங்கில உச்சரிப்பில்

[மேலுள்ள பெட்டியில் தட்டச்சினால் கீழுள்ள பெட்டியில் ஒருங்குறிக்கு (Unicode) மாற்றப்பட்ட எழுத்துரு கிடைக்கும்]


சுரதா, கிருபாவுக்கு நன்றி


© 2006  Thur Broeders

________________