This is a tb_b_20060122 with one sidebar and a fluid (flexible) content.
Advertisement
Saturday, April 29, 2006
தினமலரில் வந்த திருகோணமலைச் செய்தி
இன்று சனிக்கிழமை தினமலர் பத்திரிகையில் 'சென்னையிலுள்ள இலங்கைக்கான துணைத்தூதர் சுமித் நகுந்தலா' தெரிவித்ததாகச் சொல்லி ஒரு செய்தி வெளியாகியுள்ளது.
'சுமித் நகுந்தலா' சொன்னதை அப்படியே தினமலர் வெளியிட்டுள்ளது என்று கருதிக்கொள்வோம். எப்படியாயினும் இது சிறுபிள்ளைத்தனமான செவ்வி. இலங்கை பற்றியே ஒரு மண்ணாங்கட்டியும் தெரியாத ஒரு கோமாளி துணைத்தூதராக இருப்பதாகக் கருதவேண்டியுள்ளது. அல்லது விசமத்தனமான பொய்யை அவிழ்த்துவிடும் கபடதாரியென்று கருதத் தோன்றுகிறது. எதிர்த்து ஒரு கேள்விகூட கேட்காமல் அதைப்பிரசுரித்த தினமலரை என்ன சொல்வது?
இனி அந்தச் செய்தியிலுள்ள விசயங்களுக்கு வருவோம். முதலாவது, "இராணுவத் தளபதி பொன்சேகா மீது நடத்தப்பட்ட தாக்குதல், திருகோணமலையின் சம்பூரில் நடத்தப்பட்டதாகத்" தெரிவித்த கருத்து. இதைச் சொன்னவருக்கு உலகப்படத்தில் இலங்கையின் உருவவடிவமாவது தெரியுமா? என்ற ஐயம் வருகிறது. இராணுவத் தலைமையகம் எங்குள்ளது?, இராணுவத் தளபதி மீது எங்குத் தாக்குதல் நடத்தப்பட்டது?, திருகோணமலை எங்குள்ளது? சம்பூர் எங்குள்ளது?, அது யாரின் கட்டுப்பாட்டிலுள்ளது? என்ற விவரங்கள் கூடத் தெரியாமல் என்ன துணைத்தூதர் பொறுப்பு வேண்டிக்கிடக்கிறது?
இதைக் கேள்வி கேட்காமல் பிரசுரித்த தினமலரின் நோக்கம் என்ன என்பதும் அடுத்த கேள்வி. அவர்களுக்குத் தெரிந்தும், அச்செவ்வியை அப்படியே போட்டுள்ளார்கள் என்றே நினைக்கிறேன். தூதுவரிடமே இக்குழப்பம் குறித்து கேட்டுத் தெளிவுபடுத்தியிருக்கலாமே?
இங்கே இலங்கையின் அமைவிடங்கள் தொடர்பில் தினமலருக்குத் தெரியாது என்று கதைவிட முடியாது. அதுவும் செய்திப்பத்திரிகை நடத்துபவர்களுக்கு. கடந்த சிலநாட்களில் உலகச் செய்தித் தளங்களிலெல்லாம் இவை பற்றிய செய்திகள் வந்துவிட்டன. அவற்றில் ஒன்றையாவது வாசித்திருந்தால் தினமலருக்கு துணைத்தூதரின் கருத்தை அப்பிடியே போட மனம் வந்திருக்குமா? குறைந்தபட்சம் அவரிடம் திருப்பியாவது கேட்டிருக்கலாமே? (தினமலரின் ஏனைய சில செய்திகளில் திருகோணமலையில் விமானத்தாக்குதல் நடத்தப்பட்டதும், கொழும்பில் இராணுவத் தளபதி மீதான தாக்குதல் நடத்தப்பட்டதும் வந்துள்ளன.) ****************************** அடுத்தது, "சம்பூரில் வசிப்பது 16500 தமிழர்களே. ஆனால் அங்கு வசிக்கும் விடுதலைப்புலிகளோ நாற்பதாயிரம்" என்ற கருத்து. (எழுத்தில் தொகையுள்ளதால் சுழியம் தவறுதாலகப் போடப்படவில்லையென்று கொள்ளலாம்.) இதென்ன கோதாரி? சம்பூரில மட்டுமென்ன, ஒட்டுமொத்தமாகவே புலிகளில நாற்பதாயிரம் பேர் இருந்தா எங்களுக்கு ஏன் இந்தச் சிக்கல்? அங்கிருக்கிற நாய், பூனை, ஆடு, மாடு, கோழி, சுவர், மரம் எல்லாம் புலிகள் என்று கணிக்கிறாரோ? அப்பிடியானால் நடத்தப்பட்ட தாக்குதலில் ஏராளமான புலிகளின் கதை முடிந்திருக்கிறதென்பது உண்மைதான் போலும்.
****************************** அதைவிட ஒன்று சொல்லியுள்ளார். ஆச்சரியமாகத்தான் இருக்கிறது. 'புலிகள் மக்களைக் குறிவைத்துத் தாக்கவில்லை. அவர்கள் இராணுவத்தையே குறிவைத்துத் தாக்குகிறார்கள்' என்று அத்துணைத்தூதர் சொன்னதாக அதிலுள்ளது.
103 தமிழர்களைப் படுகொலை செய்து ஜெனீவாப் பேச்சுக்களை சீர்குலைத்தது சிறிலங்கா: புலிகள் விளக்க அறிக்கை
விடுதலைப்புலிகள் இன்று (28.04.2006) அன்று விவரமான அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளார்கள். பெப்ரவரி இறுதியில் நடந்த ஜெனிவாப் பேச்சின் பின்னர் இன்றுவரையான இரண்டு மாதங்களாக சிறிலங்கா அரசபடைத்தரப்பாலும் அவர்களது துணை இராணுவக் குழுவாலும் 103 பொதுமக்கள் பல்வேறு வழிகளில் படுகொலை செய்யப்பட்டுள்ளார்களென்று அவ்வறிக்கை தெரிவிக்கிறது. மேலும் கொல்லப்பட்டவர்களது விவரங்களுடன் இவ்வறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
அவ்வறிக்கையின் தொகுப்பு: (பெயர் விவரங்களுக்குரிய இணைப்பு இறுதியாக இணைக்கப்பட்டுள்ளது)
ஜெனீவாவில் பெப்ரவரி 24 ஆம் நாள் முதல் சுற்றுப் பேச்சுக்கள் நிறைவடைந்த பின்னர் சிறிலங்கா இராணுவத்தினராலும் சிறிலங்கா இராணுவத்தினரது முன்னிலையிலும் தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ள விவரம் அட்டவணைப்படுத்தப்பட்டுள்ளது.
சிறிலங்காப் படையினரால் தமிழ் மக்கள் எப்படிப் படுகொலை செய்யப்பட்டுள்ளனர் என்ற விவரமும் அதில் இடம்பெற்றுள்ளது. வடக்கு கிழக்கில் சிறிலங்காப் படையினர் கட்டுப்பாட்டுப் பகுதியில் வாழும் தமிழர்கள் எத்தகைய பயங்கரமான சூழ்நிலைக்கு முகம் கொடுத்து வருகின்றனர் என்பதை இந்த அட்டவணை வெளிப்படுத்தும்.
இப்படுகொலைகள் இரண்டு முறைகளில் நடத்தப்பட்டுள்ளன.
சிறிலங்கா இராணுவத்தினரின் நேரடித் துப்பாக்கிச் சூடு மற்றும்
சிறிலங்கா இராணுவத்தினரது பாதுகாப்புடன் துணை இராணுவக் குழுவினர் நேரடியாக துப்பாக்கிச் சூடு
ஆகிய முறைகளில் தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.
சிறிலங்கா இராணுவத்தினர் நடத்தும் நேரடிப் படுகொலையின் போது பொய்யான குற்றச்சாட்டின் அடிப்படையில் முதலில் மக்கள் கைது செய்யப்படுகின்றனர். அதன் பின்னர் படுகொலை செய்து பொது இடங்களில் சடலங்களை வீசிவிட்டு மக்களால் அது கண்டெடுக்கப்பட்டதாக கூறுகின்றனர். இதே முறையில்தான் ஏப்ரல் 18 ஆம் நாளன்று யாழ். புத்தூரில் 5 தமிழ் இளைஞர்களை சிறிலங்கா இராணுவம் சுட்டுப் படுகொலை செய்தது.
துணை இராணுவக் குழுவினரைப் பயன்படுத்தி படுகொலை செய்வது மற்றொரு சிறிலங்கா இராணுவத்தினரது முறையாகும்.
துணை இராணுவக் குழுவினருக்கான அடிப்படை பாதுகாப்புகள் மற்றும் கொலையை நடத்திவிட்டு அவர்கள் தப்பிச் செல்வதற்கான ஏற்பாடுகளை சிறிலங்கா இராணுவத்தினர் செய்து கொடுக்கின்றனர். சில நேரங்களில் படுகொலை நடத்தப்படுகிற வீதிகளில் வாகனங்கள் அப்புறபடுத்தப்பட்டுவிடும். இதனால் அக்கொலையை ஒரு சிலரே நேரடியாக பார்க்க நேரிடும். மேலும் அருகாமை வீடுகளில் நின்று கொண்டு பாதிக்கப்பட்ட நபருக்கு எதுவித உதவியும் செய்யவிடாமல் படையினர் தடுத்து வருகின்றனர். சிறிலங்கா இராணுவத்தினர் அருகாமையில் நின்று கொண்டிருக்கும்போதே இத்தகைய அனைத்துப் படுகொலைகளும் நடத்தப்படுகின்றன.
படுகொலைகள் நடத்தப்படும்போது அங்கிருந்து நகர்ந்துவிட்டு படுகொலை செய்த பின்னர் துணை இராணுவக் குழுவினர் தப்பிய பின்னர் மீண்டும் அந்த இடத்துக்கு படையினர் திரும்பிவிடுவதை மக்கள் அவதானித்துள்ளனர்.
இத்தகைய செயற்பாடுகள் மூலம் இருதரப்பினரும் எப்படி இணைந்து படுகொலைகளை அரங்கேற்றுகின்றனர் என்பது தௌ்ளத் தெளிவாக தெரிகிறது. வெள்ளை வானில் இரவு நேரங்களில் முகமூடி அணிந்து வீடுகளுக்குச் சென்று இப்படுகொலைகளை துணை இராணுவத்தினர் நடத்துகின்றனர். பகல் நேரங்களில் தலைக்கவசம் அணிந்து கொண்டு இத்துப்பாக்கிச் சூடுகளை நடத்திவிட்டு தப்பி விடுகின்றனர்.
திருகோணமலையில் தமிழர்களைப் படுகொலை செய்ய சிங்களக் காடையர்களை சிறிலங்கா இராணுவத்தினர் பயன்படுத்தினர். சிங்களக் காடையர்களால் தமிழ் மக்கள் படுகொலை செய்யப்பட்ட போது சிறிலங்கா இராணுவத்தினர் வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்த செயல் இப்போது சர்வதேச ஊடகங்களில் அம்பலமாகியுள்ளது.
இத்தகைய நேருக்கு நேரான படுகொலைகளுக்குப் பின்னர் சிறிலங்கா காவல்துறையினர் சம்பவ இடத்தது வந்து உடல்கள் அகற்றுவது, வழமைபோல் நீதிபதி சம்பவ இடத்துக்குச் சென்று உடல்களை பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்புவது அதன் பின்னர் உறவினர்களை ஒப்படைப்பது என்பதுதான் நடக்கிறது. நீதிமன்றுக்கு இந்த வழக்கு கொண்டு செல்லப்படும். இப்போது சிறிலங்காவின் நீதித்துறை இங்கே நிறுத்தப்பட்டுவிட்டது.
இந்த இரு வகையான படுகொலைகளுடன்
பொதுமக்களை இலக்கு வைத்து கிளைமோர் கண்ணிவெடிகளை இயக்குவது மற்றும்
பொதுமக்கள் குடியிருப்புக்கள் மீது விமானக் குண்டு வீச்சு, பீரங்கித் தாக்குதல்களை நடத்துவது
என்ற மேலதிகமான இரு முறைகளையும் இராணுவத்தினர் இணைத்துக் கொண்டுள்ளனர்.
தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னரங்க காவல்நிலைப் பகுதிகளில் ஊருவி நேரடித் தாக்குதலையும் இக்கிளைமோர்த் தாக்குதலையும் சிறிலங்கா இராணுவத்தினர் நடத்துகின்றனர்.
- பொதுமக்கள் குடியிருப்புக்கள் மீது விமானக் குண்டு வீச்சு மற்றும் பீரங்கித் தாக்குதல் நடத்துவது
- விடுதலைப் புலிகளின் பகுதிக்குள் ஊடுருவி படுகொலை செய்வது
ஆகியவற்றால் நிகழ்ந்த படுகொலைகளின் விவரங்கள் இணைக்கப்பட்டுள்ளன.
மேலும் இந்த அட்டவணையில் இடம்பெற்றுள்ள பாரிய தாக்குதல் விவரங்கள்:
ஜெனீவாப் பேச்சுகளுக்குப் பின்னர் பெருமளவிலான பெண்களும் குழந்தைகளும் சிறிலங்கா இராணுவத்தினரால் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். இதை விளக்கும் வகையில் அவர்களது வயதும் பாலினமும் குறிப்பிடப்பட்டுள்ளது.
18 வயதுக்குக் குறைவான 6 சிறார்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.
சிறிலங்காவின் முப்படையினர் ஏப்ரல் 25 ஆம் நாள் திருகோணமலையில் நடத்திய "மட்டுப்படுத்தப்பட்ட இராணுவ நடவடிக்கை" மூலம் 3 குழந்தைகள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். இதில் 4 வயது குழந்தையும் படுகொலை செய்யப்பட்டுள்ளது. பக்கம் 8-இல் படுகொலை செய்யப்பட்ட குழந்தையின் சடலம் இடம்பெற்றுள்ளது.
சிறிலங்கா இராணுவத்தினரால் 15 பெண்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.
தமிழ்ச் சமூகத்தின் 3 முக்கிய பிரமுகர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.
ஏப்ரல் 7 ஆம் நாளன்று விக்னேஸ்வரன்
ஏப்ரல் 20 ஆம் நாளன்று வில்வராசா
ஏப்ரல் 26 ஆம் நாளன்று செந்தில்நாதன்
ஆகியோர் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.
படுகொலை செய்யப்பட்ட இம் மூவரும் வடக்கு கிழக்கின் பிரதிநிதிகளாக நாடாளுமன்ற உறுப்பினராக தெரிவாகக் கூடியவர்கள். தமிழர் மக்கள் மத்தியில் ஜனநாயக ரீதியாக தலைவர்கள் உருவாவதை அழித்தொழிக்கும் நோக்கத்துடன் இப்படுகொலைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
பெப்ரவரி 27, மார்ச் 5, 6, 9, 20, 22, 24, 25 மற்றும் 29 ஆகிய நாட்களில் மொத்தம் 12 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டனர். இது சர்வதேச பார்வையாளர்களால் கவனிக்கப்படாததாகி உள்ளது.
இந்தப் படுகொலைப் பட்டியலைப் படித்துப் பார்த்த பின்னர் ஜெனீவாப் பேச்சுக்களின் சீர்குலைவுக்கு யார் காரணம் என்பதை நீங்கள் அறிந்து கொள்ளலாம் என்று விடுதலைப் புலிகளின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
19.04.2006 அன்று இரவு ஒன்பது மணிக்கு SBS தொலைக்காட்சி அலைவரிசையில் "DateLine" எனப்படும் நிகழ்ச்சியில் இலங்கை பற்றிய கண்ணோட்டம் இடம்பெற்றது. சிரமமெடுத்துப் பலவிசயங்களை அத்தொகுப்பிற் கொண்டுவந்திருந்தார் தொகுப்பாளர். இப்போது என்ன நடந்துகொண்டிருக்கிறது என்பதே அதன் சாராம்சம்.
அரசதரப்பில் பாதுகாப்புச் செயலர் 'கொட்டாபாய ராஜபக்ஷ' அவர்களிடமும், விடுதலைப்புலிகளின் அரசியற்றுறைப் பொறுப்பாளர் சு.ப. தமிழ்ச்செல்வன் அவர்களிடமும் விளக்கங்கள் கேட்கப்பட்டன. முக்கிய பிரச்சினையான 'ஒட்டுப்படைகள்' என்று புலிகளாற் 'செல்லமாக' அழைக்கப்படும் paramilitaries பற்றியதாகவே இருந்தது.
கருணா குழுவென்று கருதப்படுவோரால் கொல்லப்பட்ட முன்னாட் போராளியொருவரின் மனைவியிடமிருந்து நிகழ்ச்சி தொடங்குகிறது. அரச பாதுகாப்புச் செயலர், அப்படியேதும் குழுக்கள் இல்லையென்று தொடக்கத்திலேயே மறுத்துவிட்டார். ஆனால் தொகுப்பாளர் கருணா குழு என்று தங்களை அழைத்துக்கொள்ளபவர்களின் முகாமுக்கே சென்று தகவல்களை ஆவணப்படுத்திக்கொண்டு வந்திருந்தார்.
"கருணா குழு முகாமைக் கண்டடைவது அப்படியொன்றும் கடினமான காரியமில்லை" என்று அத்தொகுப்பாளர் சொல்கிறார். கருணா குழுவினரின் முகாமுக்கு அவர் அழைத்துச் செல்லப்படுகிறார். அங்கு பலரைக் காணுகிறார். அக்குழுவின் அரசியற்றுறைப் பொறுப்பாளர் என்று தன்னை அறிமுகப்படுத்திக்கொள்ளும் பிரதீப் என்பவர் கருத்துத் தெரிவிக்கிறார். தங்களுக்குச் சிறிலங்கா அரசோ இந்திய அரசோ எந்த வெளிநாட்டுச் சக்திகளோ ஆதரவளிப்பதில்லை என்று மறுக்கிறார். புலிகளிடமிருந்து சரணடைந்தவர்களென்று இருவரை முன்னிறுத்துகிறார்கள். இரண்டு நாட்களின் முன்பே இது நடந்திருந்தாலும் தனக்கு முன்னால் ஆயுதங்களை ஒப்படைப்பது போன்று செய்துகாட்டியதை தான் காட்சிப்படுத்தியதாகவும் தொகுப்பாளர் தெரிவிக்கிறார். அவ்விருவரின் கருத்துக்களையும் தொகுத்துள்ளார்.
ராஜபக்ஷ துணை இராணுவக்குழுக்கள் செயற்படுவதை மறுத்தபோது, தான் அவர்களைச் சந்தித்ததாக தொகுப்பாளர் சொன்னார். மேலும் 'தாங்கள் 1500 பேர் இருப்பதாக' அவர்களின் அரசியற்பொறுப்பாளர் பிரதீப் தெரிவித்ததையும் சொன்னார். அப்போது ராஜபக்ஷ,
"நீங்கள் அவர்களைப் பார்த்தீர்களா?" "ஆம். நான் பார்த்தேன்" "எத்தனை பேரைப் பார்த்தீர்கள்?" "கிட்டத்தட்ட 30 வரையானவர்களைப் பார்த்தேன். ஆயுதங்களுடன் பார்த்தேன்." (என்றுவிட்டு சில ஆயுதங்களையும் சொல்கிறார்) "அப்ப நீங்கள் புலிகளைத்தான் பார்த்திருக்கிறீர்கள் போல. இதுவொரு சிக்கலான விசயம். அவர்கள் தங்களைக் கருணா குழுவென்று சொல்லிக்கொள்கிறார்கள். புலிகளே தங்கள் முகாமுக்கு அழைத்துச் சென்று, 'இந்தா பார். கருணா குழு' என்று உங்ளுக்குக் காட்டியிருக்கலாம்" என்றார் ராஜபக்ஷ.
கருணா குழுவைச் சந்தித்த முகாம், சூனியப் பிரதேசத்துள் இருப்பதாக தொகுப்பாளர் சொல்கிறார். முகாமிலிருந்து வரும்போது பதையைக் காட்சிப்படுத்திக்கொண்டு வருகிறார். அப்பாதை நேரே பிரதான வீதியில் வந்து சேர்கிறது. (வெலிக்கந்தை வழியாகச் செல்லும் பொலநறுவைப்பாதை?) அந்தச் சந்தியில் இராணுவக் காவலரண் காணப்படுவதோடு வீதியில் இராணுவத்தினரும் நிற்கிறார்கள். அப்பதையிலிருந்து 100 மீற்றர்வரை கருணாகுழுப் பொறுப்பாளரொருவர் கொண்டுவந்து விட்டுவிட்டுப் போகிறார்.
கருணா குழு முகாமிருப்பது சூனியப்பிரதேசமாகத் தெரியவில்லை. காரணம், அம்முகாமிலிருந்து பிரதான் வீதிக்கு வரும்வரையிலும் இராணுவத்தினரின் முன்னணிக் காவலரணைக் கடக்கவில்லை. வீதியிலிருப்பதோ இராணுவ முன்னணிக் காவலரணில்லை. மேலும் வீதியில் நிற்கும் இராணுவத்தினர் தெளிவாகப்பார்க்குமளவுக்கு வெட்டையான பாதையில் நூறுமீற்றர்கள் வரை கருணாகுழுவினர் வந்து செய்தியாளரை வழியனுப்பிவிட்டுப் போகிறார்கள். கருணா குழுவினரின் முகாமில் அக்குழுவினரையும் ஆயுதங்களையும் காட்சிப்படுத்தியுள்ளார் தொகுப்பாளர். அதில் நவீன சிறுரக ஆயுதங்களை விட 120 mm எறிகணை செலுத்தியொன்றையும் காட்டுகிறார்கள். (இது இப்போதைய குழுவின் காட்சியென்றே நான் புரிந்துகொண்டேன். அது பழைய காட்சியென்றால் இப்பந்தி தவறென்று கொள்க)ஆக, இவர்கள் மறைந்துவாழும் குழுவன்று. மறைந்துவாழும் குழு இப்படியான பீரங்கியை வைத்திருக்க முடியாது. வீதிகளையும் வாகனத்தையும் பாவிக்காமல் அதை நகர்த்தித் திரிய முடியாது. புலிகளிடமிருந்து ஓடும்போது அதைக்கொண்டு வந்திருந்தார்கள் என்று ஒருபேச்சுக்கு எடுத்துக்கொண்டாலும், வெலிக்கந்தை வரை எப்படி அந்த உருப்படியைக் கொண்டுவந்தார்கள்?
பின் இளங்கோவன் என்ற தன்னார்வலரையும் அவர் நடத்தும் ஆதரவற்ற பெண்கள் அமைப்பையும் பற்றிய சிறுதொகுப்பொன்று வந்தது. புலிகளால் வயதுகுறைந்தோர் என்று விடுவிக்கப்பட்டோருக்கான புனர்வாழ்வுக்கு உதவிகள் கிடைக்காததையும், வெளிநாட்டு நிறுவனங்கள்கூட அசட்டையாக உள்ளதையும் சுட்டிக்காட்டினார் அவர்.
புலிகளின் படைப்பலப் பெருக்கத்தைப் பற்றியும் தொகுப்பு இருந்தது. ராஜபக்ஷ புலிகளின் படைப்பெருக்கத்தைக் குறித்த விசனத்தைத் தெரிவித்தபோது, "அரசதரப்பும் படைப்பலத்தைப் பெருக்குகிறதே?" என்று தொகுப்பாளர் ராஜபக்ஷவைக் கேட்டார்.
மேலும், துணைஇராணுவக் குழுக்களின் ஆயுதங்களைக் களைவதைப்பற்றிக் கதை வந்தபோது, ராஜபக்ஷ "நாங்கள் ஆயுதுங்களைக் களைய முற்படும்போது அப்படியான குழுக்கள் அதற்கு ஒத்துக்கொள்வார்களா? களைய முற்பட்டால் சண்டை வருமல்லவா? நாங்கள் சமாதானத்தையல்லாவ பேண முயல்கிறோம்?" என்று பதிலளித்தார்.
ஆனால் தொகுப்பாளர், "சந்தேகமேயில்லாமல் இக்குழுக்கள் சமாதானத்தைச் சீர்குலைக்கின்றன" என்று தன் தொகுப்பிற் குறிப்பிடுகிறார்.
"அப்போ ஏன் ஆயுதங்களைக் களைவதாக ஜெனீவாவில் ஒத்துக்கொண்டீர்கள்?" என்று தொகுப்பாளர் திருப்பிக் கேட்டிருந்தால் நன்றாயிருந்திருக்கும்.
அதையும்விட, "ஏன் புலிகள் தேவையில்லாத விசயங்களைப்பற்றிக் கதைக்கிறார்கள்? முக்கியத்துவமற்ற விவாதங்களை முக்கியத்துவப்படுத்துகிறார்கள்?" என்று ராஜபக்ஷ கேட்கிறார். துணைக்குழுக்களின் நடவடிக்கையும், கொலைகளும் முக்கியத்துவமற்றவையாகக் கருதப்படுகிறது. ********************************
கருணா குழுவின் அரசியற்பொறுப்பாளர் என்று கூறிக்கொண்ட பிரதீப், புலிகள் மீதான சில தாக்குதல்களைத் தாம்தான் செய்ததாகச் சொன்னார். அவையனைத்தும் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியில் நடந்தவை. அரசகட்டுப்பாட்டுப் பகுதித் தாக்குதல்களைப் பற்றி அவரிடம் கேட்டிருக்கலாம். குறிப்பாக பரராசசிங்கம், விக்னேஸ்வரன் உட்பட்ட படுகொலைகளை. தமிழர் புனர்வாழ்வுக் கழக அங்கத்தினரின் கடத்தல் பற்றிக் கேட்டிருக்கலாம். உண்மையான பதில்கள் வராவிட்டாலும்கூட அக்கேள்விகள் முக்கியமானவை. ********************************
இப்படியான ஊடகக் கவனங்கள் இடையிடையே வருவது திருப்தியளிக்கிறது. எழுந்தமானத்துக்கு அறிக்கை விட்டுக்கொண்டிருக்கும் வெளிநாட்டுச் சக்திகளுக்கிடையில், நேரே களத்திலிறங்கி பிரச்சினையை அதன் உண்மையான வடிவத்தோடு அம்பலப்படுத்தும் இதுபோன்ற நிகழ்ச்சிகள் ஓரளவு திருப்தி தருகின்றன.
ஏற்கனவே கருணாகுழு முகாம் கொழும்புப் பத்திரிகையொன்றின் மூலமாக முதன்முதலில் அம்பலத்துக்கு வந்தது. அவர்கள் படங்களுடன், செய்தி வெளியிட்டதுடன், அது இராணுவக்கட்டுப்பாட்டு்ப் பகுதிக்குள் இருப்பதையும் வெளிப்படுத்தினர். அதன்பின் பல சம்பவங்கள் நடந்தாலும் வெளிநாட்டுச் செய்திநிறுவனமொன்று அவர்களின் முகாமுக்கே சென்று காட்சிப்படுத்தலோடு அவர்களைச் செவ்வி கண்டது இதுவே முதல்முறையென்று நினைக்கிறேன்.
ஏற்கனவே போர்நிறுத்தக் கண்காணிப்புக்குழு அவர்களைச் சந்தித்துள்ளதைப் பகிரங்கப்படுத்தியிருந்தது. இந்த நிகழ்ச்சித் தொகுப்பிலும் "அவர்கள் யார் தயவில் இயங்குகிறார்கள் என்று எம்மால் உறுதிப்படுத்த முடியாவிட்டாலும், அவர்கள் இயங்குவது மறுக்க முடியாத உண்மை" என்று கண்காணிப்புக்குழு சொல்கிறது.
நிகழ்ச்சித் தொகுப்பாளரும், "அவர்கள் அரச தயவில் இயங்குகிறார்களென்று உறுதிப்படுத்த முடியாவிட்டாலும், அரசுக்கும் அவர்களுக்கும் புலிகள் பொது எதிரியென்பதை யாரும் மறுக்க முடியாது" என்று சொல்கிறார். ********************************
தொகுப்பாளரின் சில தகவல்கள் மிகைப்படுத்தப்பட்டுள்ளன. 2500 கரும்புலிகள் உள்ளார்கள் என்ற தகவல் அப்படிப்பட்டதொன்று. '2500 வரையானவர்கள் கரும்புலிகளாகச் செல்வதற்குரிய மனநிலையோடு உள்ளார்கள்' என்று வேண்டுமானால் சொல்லலாம்.
அதைவிட 'அம்மான்' என்ற சொல்லுக்கு அவர் கொடுக்கும் விளக்கமும் அப்படிப்பட்டதே. ஒருநேரத்தில் இயக்கத்தில் பலரையும் 'அம்மான்' என்று சொல்லும் வழக்கம் இருந்திருக்கிறது. இன்றும் மூத்த தளபதிகளல்லாதவர்கள்கூட அவர்களின் பெயர்களுடன் அம்மான் என்று சொல்லப்படும் தன்மையைக் காணலாம். மூத்த உறுப்பினர்களின் பெயர்களே அதிகளவில் வெளிவந்ததால் அவர்களுக்கு மட்டும் அம்மான் என்ற அடைமொழி இருப்பதான தோற்றப்பாடுண்டு. இதையும்தாண்டி சிலர், 'அம்மான்' என்பது புலிகள் இயக்கத்தில் வழங்கப்படும் பட்டம் என்ற விதத்தில் கதையளந்துகொண்டு திரிவதையும் பார்க்க முடிகிறது.
இது மக்களின் சாதாரண பேச்சுவழக்கிலிருந்து தோன்றியது. இன்றும் மக்களிடத்தில் ஒருவரை அழைக்கப் பாவிக்கப்படும் சொல்தான் அம்மான். எங்கள் ஊரில் என் குறிச்சியில் மட்டுமே நாலைந்து அம்மான்கள் இருந்தார்கள், இப்போதும் இருக்கிறார்கள். இன்றும்கூட இளைஞரிடத்தில் சகதோழனை அம்மான் என்றழைக்கும் வழக்கம் இருந்துகொண்டேயிருக்கிறது.
நான்கூட ஓர் அம்மான் தான் தெரியுமோ? என்ர முந்தின பதிவொண்டில என்னை ஒருத்தர் "அம்மான், ஒரு மின்னஞ்சல் போடுங்கோ" எண்டு சொல்லியிருந்தார் ஞாபகமிருக்கோ? இவ்வளவு சாதாரணமான அம்மானை, இராணுவப்பதவியென்ற அளவுக்குச் சிலாகிப்பவர்களையும், 'which can mean priest, or god' என்று சொல்பவர்களையும் பற்றி என்ன சொல்வது? முன்னவர்கள் அறிந்திருந்தும் வண்டில்விடும் மண்ணின் மைந்தர்கள். பின்னவர் அறியாமல் ஊடகங்களின் தாக்கத்தாற் சொல்பவர். (கருணா அம்மானின் போர்த்திறத்தையோ சாதனையையோ குறைப்பதன்று என்நோக்கம். அம்மான் என்ற சொல்லுக்கும் அதற்கும் சம்பந்தமில்லையென்பதே நான்சொல்ல வந்தது.)
இந்நிகழ்ச்சித் தொகுப்பின் எழுத்துவடிவத்தையும் 23 நிமிட தொலைக்காட்சி ஒளித்தொகுப்பையும் அத்தொலைக்காட்சி வலைத்தளத்தில் பார்க்கலாம். வீடியோவை மட்டும் பார்க்க இங்கே சொடுக்குங்கள்.
"வன்னி இலக்கியத்தின்" முக்கிய படைப்பாளி, பங்காளி கவிஞர் நாவண்ணன் அவர்கள் காலமானார்.
பிற்காலத்தில் புலிகளின் குரல் வானொலி மூலம் அவர் ஆற்றிய பணிகள் ஏராளம். இது தகவலைச் சொல்லும் சுருக்கமான பதிவே. கீழே இதுபற்றி வந்த தகவல். **********************************
தமிழன் சிந்திய இரத்தம், கரும்புலி காவியம், இனிமைத் தமிழ் எமது, ஈரமுது உள்ளிட்ட சிறப்பு நிகழ்ச்சிகளைத் தயாரித்து வழங்கினார். அரங்காற்றுகையிலும் தனக்கென தனியிடத்தை பிடித்து கொண்டவர். நாவண்ணனால் தயாரிக்கப்பட்ட "வலியும் பழியும்" என்ற நாடகம் முக்கியமானதாக கருதப்படுகின்றது. புலிகளின் குரலில் தயாரித்த கரும்புலிகள் காவியத்தை நூலாக வெளியிட்ட அதே வேளை பல்வேறு நூல்களையும் வெளியிட்டார். அதே போல் ஓவியம், சிற்பம் ஆகியவற்றை வெளிப்படுத்திய அவர் இறுதிக்காலத்தில் ஒளிக்கலையிலும் செலவிட்டார். தமிழீழத் தேசியத்தலைவர் அவர்களால் இரண்டு தடவைகள் தங்கப்பதக்கம் வழங்கி மதிப்பளிக்கப்பட்டார். 1998 ஆம் ஆண்டு புலிகளின் குரலில் சிறப்பாகச் செயற்ப்பட்டமைக்காகவும், அதன் பின்னர் கரும்புலி காவியம் நூல் உருவாக்கம், கலை இலக்கியம் போன்ற செயற்பாடுகளுக்காக இரண்டாவது தடவையும் கெளரவிக்கப்பட்டார்.
செய்தி: புலிகளின் குரல் ***************************** நாவண்ணன் என்ற மறக்க முடியாத ஆளுமைக்கு என் அஞ்சலி. **************************** பட உதவி: புதினம்.
கலைஞர் தலைமையில் சித்திரைத் திருநாட் கவியரங்கமொன்று சன்-ரீவியில் ஒளிபரப்பானதைப் பார்க்கும் பாக்கியம் பெற்றேன்.
ஏனைய நான்கு கவிஞர்கள், பா.விஜய், அப்துல் ரகுமான், வைரமுத்து, வாலி. இவர்களில் வாலியிருந்தது எனக்கு முதலில் ஆச்சரியம். வாலியைத் தவிர மீதி மூவரும் கலைஞர் பக்தர்கள். வாலியோ மேடையில் எல்லார்க்கும் பக்தர்.
82 ஐ நெருங்கிக்கொண்டிருக்கும் கலைஞர். திடகாத்திரமாக இருப்பதாகவே பட்டது. கலைஞரின் தலைமைத் தொகுதி முடிந்ததும் முதலில் வந்தவர் பா.விஜய். கலைஞர் கையால் பட்டம் வாங்கியவர். அவர் வாய்திறந்து சரியாக பன்னிரண்டு நிமிடங்களின்பின் 'தலைப்புக்கு வருகிறேன்' என்று அறிவித்தார். அதுவரை அந்தப்பன்னிரண்டு நிமிடங்களும் கூட்டம் கைதட்டிக்கொண்டேயிருந்தது. "சிறுவயதில், பிரம்மாஸ்திரத்தைத் தொலைத்ததுக்கே கலங்காதவர் நீங்கள். பம்பரத்தைத் தொலைத்ததுக்கா கலங்கப் போகிறீர்கள்?" என்பது போன்றுதான் அந்தப்பன்னிரண்டு நிமிடங்களும் கழிந்தன. ஆனாலும் தலைப்புக்குள் வந்தபின் அவர் மரபிலே பாடிய சிலவரிகள் பிடித்திருந்தன.
அடுத்து வந்தவர் கவிக்கோ. கலைஞர் ஆலாபனை முடித்தபின் அவர் சொன்ன வரிகளில் தொன்னூறு வீதமானவை ஏற்கனவே கவியரங்கங்களில் அவராற் சொல்லப்பட்ட அதே வரிகள். நான் பார்த்தவரையில் உலகத்தமிழர் பேரமைப்புக் கவியரங்கத்துக்காக அவர் பாவித்த அதே கவிதையட்டைகளைத் தூக்கிக்கொண்டுவந்திருந்தார் போலிருந்தது. மிகுதி பத்துவீதம்கூட வை.கோவையும் ஜெயலலிதாவையும் பற்றித்தான் இருந்தன. எனக்கு மிகிமிக ஏமாற்றமளித்தவர் கவிக்கோதான். அவருக்கு வந்த தலைப்பு "தமிழர் விழிப்பு". தமிழ் அல்லது தமிழர் என்று ஒரு சொல் வந்துவிட்டால் கவிக்கோ கவியரங்கத்துக்கென்று எதுவுமே ஆயத்தப்படுத்தத் தேவையில்லை. ஏற்கனவே கிடக்கும் அட்டைகளில் சிலவற்றைத் தூக்கியந்தாற் போதும். (ஆனாலும் உலகத்தமிழர் பேரமைப்புக் கவியரங்கத்தில் இருந்த கைநடுக்கம் இப்போது இல்லைப்போலத் தெரிகிறது)
அடுத்து வந்தவர் கவிப்பேரரசு. ஆச்சரியமாக, கலைஞரைத் வாழ்த்த மற்றவர்களை விடக் குறைவான நேரமெடுத்துக் கொண்டார். அதுமட்டுமன்றி தலைப்புக்குள் கவிதை வடித்த ஒரேயொருவர் அவர்மட்டும்தான். கிடைத்த தலைப்பு, "இளைஞர் விழிப்பு". கவியரசருக்குக் கேட்க வேண்டுமா? மனிதர் பொழிந்து தள்ளிவிட்டார்.
கடைசியாக வந்தவர், வாலி. அறிமுகப்படுத்தும் போது கலைஞர், "மூட நம்பிக்கைகளை ஒழித்து, பகுத்தறிவைப் பரப்பிக் கவிதை பொழிக" என்று வாலியை அழைத்தார். வாலியின் கவியரங்கக் கவிதைகளின் எதுகை, மோனை, சிலேடைகளுக்கு நான் எப்போதும் இரசிகன். வாலிக்குக் கிடைத்தது "கலையின் விழிப்பு" கலைஞர் வாழ்த்து எது, கலைவிழிப்பு எது என்று பிரித்தறிய முடியாவண்ணம் தொடக்கம் முதல் முடிவுவரை வாலியின் கவிதையிருந்தது. சிக்கிச் சிதறிய சினிமாவைக் கலைஞர்தான் வந்து காத்தார், நடுத்தெருவில் முக்கி முனகிய (இவை வாலியின் சொற்கள்) மூன்று தமிழையும் கலைஞர் வந்துதான் கரையேற்றினார், இன்னும் என்னென்னவெல்லாமோ செய்தார் என்று வாலியின் கவிதை விரிந்தது.
"சேது சமுத்திரத்துக்கு நீ கண்ட தீர்வைக்கோ... உன் தீர்க்க தரிசனப் பார்வைக்கோ...." இன்னும் சில 'வைக்கோ' என்று முடியும்படியான சில வரிகளின்பின் "ஈடாகுமா ஓர் வைக்கோ?" என்றார். கூட்டம் துள்ளிக் குதித்தது. மீண்டும் படிக்கும்படி வந்த கூச்சல்களுக்குள் வாலி மீண்டும் அவ்வரிகளைப் படித்தார். "பம்பரம் விட்ட பயல்களையெல்லாம்" என்று தொடங்கி ஏதோ சொன்னார். "மேயில் உனக்குச் சிம்மாசனம்" என்றார். தொடர்ந்து, "அம்மாசனத்தை வெல்லுமோ அம்மா சனம்?" என்றார். கூட்டம் அதிகம் இரசித்ததும் வாலியின் வரிகளைத்தான் என்று நினைக்கிறேன்.
முடிவில் கலைஞரின் வசனங்கள். "எனது எழுபது வருட அரசியலுக்கு மதிப்புத்தர வேண்டாம். தமிழுக்காகத் தண்டவாளத்தில் தலைவைத்ததுக்கு மதிப்புத்தர வேண்டாம். என் இலக்கியப் பணிகளுக்கு மதிப்புத்தர வேண்டாம்." என்று தொடர்ந்து பலசாதனைகளைச் சொல்லி அவற்றுக்கு மதிப்புத்தர வேண்டாம்" என்றுவி்ட்டு இறுதியில் "இந்த வயதில் என் உழைப்புக்கு மதிப்புத்தரக் கூடாதா? என் வயதுக்கு மதிப்புத் தரக்கூடதா?" என்று கேட்டு முடித்தார். மக்களை உருக்கும் பச்சாத்தாப வசனங்களோடு கவியரங்கம் இனிதே நிறைவுற்றது. ********************** வைரமுத்துவின் கவிதையைவிடுத்து மற்றவர்களின் கவிதைகளைக் கேட்கும்போது எனக்கு வந்த கேள்வி இதுதான். "பேசாமல் 'கலைஞர் புகழ்மாலை' என்றே நிகழ்ச்சியை வைத்திருக்கலாம். எதற்கு 'தமிழர் விழிப்பு', 'தமிழ் விழிப்பு', 'கலை விழிப்பு' என்று வைப்பான்?" ********************* இதற்கு அடுத்ததாக நான் பார்த்த, மாணிக்க விநாயம் தலைமையில் கானா உலகநாதன், புஸ்பவனம் குப்புசாமித் தம்பதிகள் உட்பட இன்னும் சிலர் கலந்து கலக்கிய பாட்டுக் கச்சேரியை மிகவும் இரசித்தேன்.
நேற்று (தமிழோடு பரிச்சயம் குறைந்த, நீண்டகாலம் வெளிநாட்டில் வாழும்) ஈழத்து நண்பரொருவரோடு கதைத்துக்கொண்டிருந்தபோது "பேப் பம்பல்" என்று ஒருரிடத்திற் பாவித்துவிட்டேன்.
அவர் பேயைக் கண்டது போல் முழித்ததுதான் மிச்சம்.
அவருக்கு "பேய்" என்ற சொல் வரும் முறையும் தெரியவில்லை; பம்பல் என்ற சொல்லும் தெரியவில்லை.
அவருக்கு அதை விளக்கியபின் யோசித்துப் பார்த்தேன். 'பேய்' என்பதை நாங்கள் சில இடங்களில் வேறு பொருளில் பாவிக்கிறோம். 'பம்பல்' பற்றிச் சொல்ல வேண்டிய தேவையில்லையென்பதால் 'பேய்' பற்றி மட்டும் சிறிது கதைக்கலாம்.
ஈழத்தில் (ஆம் யாழ்ப்பாணத்தில் மட்டுன்று) பேச்சு வழக்கில் 'பேய்' என்ற சொல்லை வேறுவேறு பொருள்தரும் வண்ணம் நாலைந்து சந்தர்ப்பங்களில் பாவிக்கிறோம்.
முதலில் 'பெரிய', 'சிறந்த' என்ற பொருள்களில். "பே(ய்)ப் பம்பல்" -> சிறந்த / பெரிய நகைச்சுவை "பே(ய்)ச் சந்தோசம்" -> மிகுந்த மகிழ்ச்சி. "பே(ய்)க் காய்" -> ஒன்றில் சிறந்தவர், நிபுணத்துவமானவர் என்பதைக் குறிக்கும். இங்கே 'காய்' என்பது நபரையே குறிக்கும். ஆனால் தனித்துப் பொருள் தராது. விடலைப்பருவத்தில் ஒவ்வொருவருக்கு ஒவ்வொரு துணையை கற்பனையாக ஒழுங்கு பண்ணி வைத்துக்கொள்வோம் (பெண்களும் இதைச் செய்தார்களா தெரியாது). அப்போது அத்துணையை 'காய்' கொண்டே குறிப்பிடுவது வழக்கம். 'சுரேசின்ர காய் இண்டைக்கு வரேல, உன்ர காயோட மாறன் சேட்டை விட்டவன், அவனின்ர காய் மூஞ்சைய நீட்டிக்கொண்டு போகுது, அவன் காய மாத்திப்போட்டானாம்" என்பது போன்ற கதைகள் நிறைய வரும். (காய் பற்றியே தனிப்பதிவு போடலாம் போல கிடக்கு;-)).
ஒருவரைச் சுட்டி "ஆள் உதில பே(ய்)க்காய்" என்றால், அவர் குறிப்பிட்ட ஒன்றில் விண்ணனாக, வல்லவனாக இருப்பார். சின்னவயசில ஒருத்தன் ஆரையாவது "பேக்காய்" எண்டு சொன்னா, 'உனக்குத் தெரியுமோ? அவனொரு சீக்காய்" எண்டு எதிர்த்து நக்கலடிப்போம். (சீக்காய் - பனங்காயின் முற்றியவடிவம்)
மேற்கண்டவற்றில் 'பேய்' என்பது பெரிய, சிறந்த என்ற பொருளில் பாவிக்கப்படுகிறது. பேய் என்பது கதைக்கும்போது தனியே "பே" என்பது மட்டுமே ஒலிப்பதால் அடைப்புக்குறிக்குள் (ய்) கொடுத்துள்ளேன். பேச்சந்தோசம், பேப்பம்பல், பேக்காய்... போல.
உண்மையில் 'பேய்' என்பதற்கு வேறேதாவது பொருளிருக்கா? பிசாசு என்ற பொருள்தரும் பேயைத்தான் இதற்குப் பாவிக்கிறோமா? அல்லது சிறந்த, பெரிய, அருமையான என்ற பொருள் தரும் வேறேதாவது சொல்லிலிருந்துதான் இந்த 'பே' என்ற ஒலி வந்திருக்குமா? என்று யாராவது சொல்லுங்கள். *******************************
இன்னொரு பொருளிலும் இந்தப் 'பேய்' வருகிறது. "பே(ய்)ப் பட்டம் கட்டாதே" "பே(ய்)க் காட்டாதே" மேற்கண்டவற்றில் பேய் என்பது 'ஏமாற்றுதல், குழப்புதல் என்ற பொருளில் வருகிறது. பேக்காட்டுதல் என்றால் ஏமாற்றுதல்.
இதற்கு ஏதாவது கதையுண்டா தெரியவில்லை. 'புலி வருது புலி வருது' கதைபோல யாராவது பேயைக் காட்டுவதாகச் சொல்லிச்சொல்லி ஏமாற்றிய மாதிரி ஏதாவது கதைகள் மக்களிடம் இருந்து, அதிலிருந்து இந்தப் 'பேய்' வந்திருக்குமா? ********************************* "உதுவொரு பேய்வேலை" என்றால் முட்டாள்தனமான, புத்தியற்ற, நன்மை பயக்காத வேலை என்ற பொருளில் வரும். "நானொரு பேவேலை பாத்திட்டன்' என்றாலும் முட்டாள்தனமான செயலொன்றைச் செய்துவிட்டேன் என்ற கருத்தே. (மலைநாடனின் பின்னூட்டத்தையடுத்துச் சேர்க்கப்பட்டது) ******************************** அடுத்து பேய்க்கதை. இதுவொன்றும் திகில் கதையன்று.
"பேக்கதை பறையாத" 'நான் இவ்வளவு சொல்லிறன், நீ பேக்கதை கதைச்சுக்கொண்டிருக்கிறாய்' என்பன போன்ற, எதிராளியின் மீதான சினத்தைக் கொட்டும் வசனங்களில் பேய்க்கதை வருகிறது.
இங்கே 'பே(ய்)க்கதை' என்பது ஆத்திரமூட்டும், எரிச்சலைத்தரும், சினந்தரும் பேச்சு என்ற பொருளில வருகிறது. **இரண்டு வெவ்வேறான மனநிலையில் இந்தப் பேய் வருகிறது. முதலாவதில் மகிழ்ச்சி (பேச்சந்தோசம்). மற்றதில் ஆத்திரம் (பேக்கதை) ********************************
இதைவிட ஒருவனை/ஒருத்தியை 'பே(ய்)க்கிளாத்தி' (அவளொரு பேக்கிளாத்தி) என்று திட்டும் வழக்கமுண்டு. "அப்பக்கோப்பை" போல இதற்கும் ஏதாவது விளக்கமிருந்தால் தெரிந்தவர்கள் சொல்லவும்.
நான் சொன்னவற்றைவிடவும் மேலதிக 'பேய்'த்தனமான மொழியாளுகைள் இருந்தால் பின்னூட்டத்தில் அறியத்தரவும்.
ஈழத்தைவிட, தமிழகத்தில் இப்படி 'பேய்'த்தனமான உரையாடலுண்டா என அறிய விருப்பம். *******************************
நான் வலைப்பதிவுகளில் பின்னூட்டமிடும்போது நாலைந்து முறை 'பேய்' என்றதைப் பாவித்து எழுதிவிட்டு பின் அழித்திருக்கிறேன். ஏனென்று சரியான காரணம் தெரியவில்லை. மற்றவர்கள் இந்த மொழிபற்றி என்ன நினைப்பார்கள் என்ற நினைப்போ, அன்றி எனக்கே அது பொருந்தாத வடிவமாகத் தோன்றியதோ என்னவோ தெரியவில்லை. மற்ற ஈழத்தவரும் இப்படி "பேய்"த்தனமாக எழுதியதில்லை. நானறிய பொடிச்சி ஒருமுறை 'பேச்சந்தோசம்' என்று என் பதிவொன்றில் (நாங்கள் கவிதை எதிர்ப்பு இயக்கம் தொடங்கிய காலத்தில், அதுபற்றிய பதிலொன்றுக்கு. வழக்கம் போலவே இயக்கம் சிதறிப்போச்சு;-)) குறிப்பிட்டிருந்தா.
ஆனாலும் 'சூப்பர் காமடி' என்பதற்கிணையாக 'பேப்பம்பல்' பாவிப்பதில் என்ன பிரச்சினையிருக்க முடியும்? ***************************
திரைப்படம் சார்ந்த முக்கியமானதொரு முயற்சி. "நமக்கென்றோர் நலியாக் கலையுடையோம்" என்ற மகுட வாக்கியத்தோடு வரும் இத்தளம் ஈழத்துத் திரைக்கலையை முதன்மைப்படுத்துகிறது.
அதில் அழுத்தம் என்றொரு படம். இப்பதிவு இப்படம் பற்றிய கருத்தன்று. படத்தைப்பார்த்து நீங்களே அனுமானித்துக்கொள்ளுங்கள்.
இப்படத்தில் வரும் டைனமோ சம்பந்தப்பட்ட காட்சிகள் என் விடலைப்பருவத்தை நினைக்க வைத்தன. அப்போது யாழ்ப்பாணத்தில் மின்சாரமேயில்லை. மின்கலங்களுமில்லை. ஆனாலும் தவறாது வெரித்தாஸ், பி.பி.சி போன்ற பன்னாட்டுச் செய்திகளையும் இலங்கை ஒலிபரப்புக்கூட்டுத்தானச் செய்தியையும் (பெரும்பாலும் நகைச்சுவைக்காகத்தான்) இந்திய வானொலிச் செய்திகளையும் கேட்போம். முக்கியமாக 'புலிகளின் குரல்' முழு நிகழ்ச்சியையும் கேட்போம்.
எல்லாத்துக்கும் எமக்குள்ள வசதி சைக்கிள் டைனமோதான். (அப்போது சைக்கிள் களவைவிட டைனமோக்கள் மட்டும் களவு போவது அதிகம்) பெரும்பாலான வீடுகளில் டைனமோ இருந்தது. டைனமோ இருக்கும் வீடுகளில் மட்டும்தான் வானொலி வேலை செய்யும் என்ற நிலைதான் அப்போது. நானறிய எங்கள் ஊரிலேயே டைனமோவைத் தனித்து வாங்க முடியாது என்பதால் சைக்கிள் வாங்கியவருண்டு.
சைக்கிளைக் கவிழ்த்து வைத்துக் கையாற் சுற்றியோ அதன்மீது ஏறி இருந்து மிதித்தோ வானொலி கேட்போம். சிலர் பாதையிற் செல்லும்போதுகூட டைனமோவிலிருந்து வானொலி கேட்டுக்கொண்டே செல்வார்கள்.
இக்குறும்படத்தில் வரும் பெடியன் போலத்தான் நானும் வானொலியைக் காதில் வைத்துக்கொண்டு சைக்கிளை மிதித்துக்கொண்டிருப்பேன். (உண்மையில் அப்போது திரைப்பாடல்கள் மீதிருந்த வெறி இப்போதில்லை.) ஒலிநாடாக்களைப் போட்டுக் கேட்கும்போது, மிதிப்பது அல்லது சுற்றுவது வேகம் குறைந்தால் ஒலி இழுபட்டுத் தேய்ந்து கேட்கும். சில நேரம் எரிச்சல் வரும். சிலநேரம் பிறரை எரிச்சற்படுத்துவதில் மகிழ்ச்சி வரும்.
95 வரை யாழ்ப்பாணத்தில் இருந்தவர்க்கும் அதன்பின் வன்னியிலிருந்தவர்க்கும் சைக்கிள் டைனமோ மிகப்பெரிய வரப்பிரசாதம். என் வாழ்க்கையில் பல ஆண்டுகள் இந்த சைக்கிள் டைனமோவின் ஆதிக்கத்துள்தான் கழிந்திருக்கிறது. இன்றைய மேற்குலக வாழ்வில் தொலைக்காட்சியோ இணையமோ என் மீது செலுத்தும் செல்வாக்கைவிட சைக்கிள் டைனமோ என்மெல் செலுத்திய செல்வாக்கு பல மடங்கு அதிகம். அன்றைய பொழுதில் "டைனமோ கண்டுபிடிச்சவன் கடவுள் மாதிரி' என்று சிலர் சொல்லிக் கொள்வார்கள். எனக்கு இன்றும் கடவுள்களில் ஒருவர்தான்.
Response to the HRW Report and HRW's Reply by Nimal
The most glaring omission is that there is no indication whatsoever as to how alternative explanations for the observations, or in this case interview data, were looked for or ruled out or even if the researcher/author (Jo Becker) is in any way aware that this is extremely important. If someone with a beard dressed in a police uniform commits a robbery, while it is possible that a bearded policeman did it, nevertheless highly plausible and probable alternative explanations also exist.
Not long ago it was alleged that Iraq possessed huge stockpiles of Weapons of Mass Destruction (WMD) that posed a real and imminent threat to the world; the accusation was based on hearsay, deliberate misinformation and a good dose of wishful thinking all put together and called ‘intelligence.’ Similarly now, the LTTE and its members are being accused of practising Mass Intimidation and Extortion (MEI) that threatens the Tamil Diaspora (and by implication the Western Countries where they live), by a HRW Report that claims to have researched the matter. But what is this ‘research’ worth? (See http://hrw.org/reports/2006/ltte0306/ for the HRW Report, henceforth referred to as the Report.).
Rather strangely one of the informants, Inspector Philip Perry, Metropolitan Police, London, is quoted as saying “...what we end up with is intelligence without solid evidence.” It would seem that, in a way, this matches the tone of the Report: ‘allegations without proper research.’
தாய்மார்கள் தினம், தந்தையர் தினம், காதலர் தினம், மகளிர் தினம், உழைப்பாளிகள் தினம் - என்று இந்த உலகின் மனிதர்களுக்குப் பலவிதமான தினங்கள் இருப்பது போலவே முட்டாள்களுக்கும் என்று ஒரு தினம் ஒதுக்கப்பட்டுள்ளது. இதில் பிரச்சனை என்னவென்றால் மற்றைய 'விசேட' தினங்களில் தமக்குப் பங்கிருப்பதாகக் காட்டிக் கொள்கின்ற மனிதர்களில் எத்தனை பேர் இந்த 'முட்டாள்கள் தினத்தில்' தமக்கும் பங்கிருப்பதாக சொல்லிக் கொள்ள முன்வருவார்கள் என்பதுதான்! அதனால்தானோ என்னவோ தம்மை அடையாளப்படுத்திக் காட்டாமல் பிறரை மட்டும் முட்டாளாக அடையாளப்படுத்திக் காட்டும் தினமாகவும் இந்த முட்டாள்கள் தினம் அமைந்துள்ளது. அதுதான் இந்த ஏப்பிரல் முதல் திகதியாகும்.! விடயங்களை அறிந்து கொள்பவன் 'அறிஞன்' ஆகின்றான். அதேபோல் ஒரு முட்டாள் 'தான் ஒரு முட்டாள்' - என்பதை அறிந்து கொள்ளும்போது அவனும் ஒரு 'அறிஞனாக' ஆகிவிடுகின்றான் - என்று எமக்கும் முட்டாள்தனமாக சிந்திக்க தோன்றுகின்றது.
நாங்கள் ஓர் ஆண்டின் மற்றைய 364 நாட்களில் எப்படிப்பட்டவர்களாக இருந்திருக்கின்றோம் என்பதை ஞாபகப்பத்துவதுதான் இந்த முட்டாள்கள் தினமான ஏப்பிரல் முதலாம் திகதியாகும் என்று பிரபல எழுத்தாளரான Mark Twin கூறியுள்ளார். கற்றாரைக் கற்றாரே காமுறவதுபோல் ஒரு முட்டாளை அவனை விடப் பெரிய முட்டாள் மெச்சுவான் - என்று 'யாரோ' ஒருவரும் (சத்தியமாக நாங்கள் இல்லை) கூறியுள்ளதாக அறிகின்றோம்.
ஏப்பிரல் மாதம் முதலாம் திகதியை முட்டாள்கள் தினமாக-April Fool's Day ஆகச்சொல்லி வருவதற்கு காரணம் என்ன? ஏப்பிரல் மாதம் முதலாம் திகதி உலக முட்டாள்கள் தினமாக அழைக்கப்பட்டு வருவதற்கு பல காரணங்களை ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளார்கள். அவற்றில் ஏற்புடையதாக விளங்குகின்ற காரணத்தை முதலில் கவனிப்போம்.
16 ஆம் நூற்றாண்டுவரை ஐரோப்பியாவின் பல தேசங்களில் ஏப்பிரல் முதலாம் திகதியைத்தான் தமது புத்தாண்டுத் தினமாகக் கொண்டாடி வந்தன. பின்னர் 1562 ஆம் ஆண்டளவில் அப்போதைய போப்பாண்டவரான 13 ஆவது கிரகரி அவர்கள் பழைய ஜீலியன் ஆண்டுக் கணிப்பு முறையைப் புறம் தள்ளி புதிய கிரேகோரியன் ஆண்டுக் கணிப்பு முறையை நடைமுறைப்படுத்தினார். இதன்படி ஜனவரி மாதம் முதலாம் திகதியன்றுதான் புத்தாண்டு ஆரம்பமாகின்றது.
எனினும் இந்தப் 'புதிய' புத்தாண்டு தினத்தை ஐரோப்பிய தேசங்களும், அவற்றின் மக்களும் உடனேயே ஏற்றுக் கொள்ளவில்லை. அதற்குச் சில காலம் எடுத்தது. பிரான்ஸ் தேசம் 1852 ஆம் ஆண்டிலும், ஸ்கொட்லாந்து 1660 ஆம் ஆண்டிலும், ஜேர்மனி, டென்மார்க், நோர்வே, போன்ற நாடுகள் 1700 ஆம் ஆண்டிலும், இங்கிலாந்து 1752 ஆம் ஆண்டிலும், இந்தப் புதிய புத்தாண்டு தினத்தை உத்தியோகபூர்வமாக ஏற்றுக் கொண்டன. கிறிஸ்தவர் உலகிற்குப் புதிய புத்தாண்டுத் தினமும், புதிய நாட்காட்டி கணிப்பும் அறிமுகமாகியது. ஆயினும் சராசரிப் பொதுமக்கள் இந்தப் புதிய வழக்கத்தை உடனடியாக ஏற்றுக் கொள்ளவில்லை. அவர்கள் தொடர்ந்தும் ஏப்பிரல் முதலாம் திகதியைத்தான் தமது புத்தாண்டுத் தினமாகத் தொடர்ந்தும் கொண்டாடி வந்தார்கள். அதற்குக் காரணங்கள் பல உண்டு.
அன்றைய கால கட்டத்தில் இது போன்ற செய்திகள் அல்லது மாற்றங்கள் சகலரையும் சென்றடைவதற்குரிய தகுந்த சாதனங்கள் இருக்கவில்லை. அத்தோடு பழைய வழக்கத்தைப் புறம் தள்ளி புதிய வழக்கத்தை ஏற்றுக் கொள்ளவதையும் அம் மக்கள் மறுத்திருக்கலாம். ஆகவே இம் மக்கள் தொடர்ந்தும் ஏப்பிரல் மாதம் முதலாம் திகதியையே தமது புத்தாண்டுத் தினமாகக் கொண்டாடி வந்தார்கள்.
ஆனால் புதிய வழக்கத்தை ஏற்றுக் கொண்டு ஜனவரி முதலாம் திகதியை புத்தாண்டாகக் கொண்டாடத் தொடங்கிய மக்கள் இந்த பழைய வழக்கத்தைப் பேணி ஏப்ரல் மாதம் முதல் தேதியில் புத்தாண்டைக் கொண்டாடுபவர்களை ஏப்ரல் முட்டாள்கள் என்று இவர்கள் அழைத்தார்கள். இதிலிருந்து ஏப்ரல் முட்டாள்கள் தினம் ஆரம்பமாயிற்று- என்று பலராலும் ஏற்றுக் கொள்ளப்பட்ட ஆய்வு ஒன்று தெரிவிக்கின்றது.
என்றாலும் 1582 ஆம் ஆண்டுக்கு முன்னரேயே 1508 ஆம் ஆண்டில் பிரான்ஸ் தேசத்தில் முட்டாள்கள் தினம் கொண்டாடப்பட்டு வந்துள்ளது என்பதற்கு சான்றுகள் உண்டு. அதேபோல் டச்சு மொழியிலும் 1539 ஆம் ஆண்டுக் காலப்பகுதியில் முட்டாள்கள் தினம் பற்றி சொல்லப்பட்டிருப்பதை அறியக் கூடியதாக உள்ளது.
1466 ஆம் ஆண்டு மன்னன் பிலிப்பை அவரது அரச சபை விகடகவி, பந்தயம் ஒன்றில் வென்று மன்னனையே முட்டாளாக்கிய தினம்தான் ஏப்பிரல் முதலாம் தினம் என்று சொல்பவர்களும் இருக்கின்றார்கள். ஏப்பிரல் முதலாம் திகதியன்று தனி மனிதர்களை மட்டும் முட்டாளாக்காமல் பெரிய கூட்டத்தையே முட்டாளாக்கக் கூடிய சம்பவங்களும் நடைபெற்று வருகின்றன. ஊடகங்கள் தொடர்பாக உதாரணத்திற்கு இரண்டு சம்பவங்களைச் சொல்ல விழைக்pன்றோம்.
1965 ஆம் ஆண்டு ஏப்பிரல் மாதம் முதலாம் திகதியன்று BBC சேவை ஓர் அறிக்கையை வெளியிட்டது. புதிய தொழில் நுட்பத்தினை உபயோகித்து தம்முடைய வானலைகள் ஊடாக நறுமணத்தைப் பரப்புவதாக BBC அறிவித்தது. இதில் வேடிக்கை என்னவென்றால் பல நேயர்கள் BBC ஐத் தொடர்பு கொண்டு 'நறுமண முயற்சி' வெற்றி பெற்றுள்ளதாக பாராட்டுகள் வழங்கியதுதான்.!
1976 ஆம் ஆண்டு ஏப்பிரல் மாதம் முதலாம் திகதியன்று பட்ரிக் மூர் என்கின்ற பிரிட்டிஷ் விண்வெளி வீரர் BBC வானொலிச் சேவையினூடாக ஒரு தகவலை வெளியிட்டார். விண்வெளியில் இரண்டு கிரகங்கள் ஒரு வித்தியாசமான கோண நேர்கோட்டில் வரவிருப்பதாகவும,; அந்த நேரத்தில் புவியீர்ப்புச் சக்தியின் வலு குறைந்து விடும் என்றும் பட்ரிக் வானொலி ஊடாக அறிவித்தார்.
இந்த இரண்டு கிரகங்களும் இந்த நேர் கோட்டில் வரவிருக்கும் நேரம் காலை 9-47 மணி என்றும் அந்த நேரத்தில் துள்ளிக் குதிப்பவர்கள் அதிக உயரத்திற்கு துள்ளிக் குதிக்க முடியும் என்றும் பட்ரிக் கூறினார். ஆகவே 1976 ஆம் ஆண்டு ஏப்பிரல் மாதம் முதலாம் திகதியன்று காலை 9.47 மணிக்கு எவ்வளவோ பேர் துள்ளிக் குதித்து இன்புற்றார்கள். துள்ளிக் குதித்தவர்களில் பலர் வானொலி நிலையத்திற்கு தொலைபேசி தங்களுடைய புதிய அனுபவத்தையும் பகிர்ந்து கொண்டார்கள்.
ஏப்பிரல் முதல் திகதி இப்படியான வேடிக்கைகளை மட்டுமல்லாது பல வினைகளையும் கொண்டு வந்துள்ளது. அத்தோடு பல மூட நம்பிக்கைகளையும் இந்த ஏப்பிரல் முதல் திகதி மக்களுக்கு வழங்கியிருக்கின்றது. (அல்லது மக்களே தங்களுக்கு வழங்கி இருக்கின்றார்கள் என்றும் சொல்லலாம்.) ஏப்பிரல் முதலாம் திகதியன்று திருமணம் செய்கின்றவன் தனது மனைவிக்கு வாழ்நாள் முழுவதும் அடங்கியிருப்பான் அவனது மனைவி அவனை நிரந்தரமாகவே ஆட்சி செய்து வருவாள் என்று ஏப்பிரல் முதல் திகதி குறித்து ஒரு மூடநம்பிக்கை உண்டு (மற்றைய நாட்கள் மட்டும் விதிவிலக்கா? என்ற கேள்விக்கு யார் பதில் சொல்லக் கூடும்?) அதேபோல் எப்பிரல் முதலாம் திகதியன்று பிறப்பவர்களுக்கு அநேகமான அதிர்ஷ்டங்கள் காத்திருக்கின்றன என்றும் ஆனால் இவர்களுக்கு சூதாட்டம் கைகெடுக்காது என்றும் இன்னுமொரு மூடநம்பிக்கையும் உண்டு. அட மூட நம்பிக்கைகள் என்பது முட்டாள்கள் தினக் கொண்டாட்டங்களில் மட்டும்தானா, மற்றைய கொண்டாட்டங்களில் இல்லையா என்று நேயர்கள் கேட்கக் கூடும். அத்தோடு மற்றைய தினங்கள் மட்டும் புத்திசாலித்தனமான தினங்களா? என்றும் சிலர் எண்ணக் கூடும்!
இந்த வேளையில் ஒரு விடயத்தைச் சற்று வித்தியாசமாக மறுவழமாகச் சிந்தித்துத் தர்க்கிக்க விழைகின்றோம்.!
இந்த ஏப்பிரல் முதல் திகதியான முட்டாள்கள் தினத்தின் அடிப்படையே புத்தாண்டுக் கால மாற்றம் என்பதுதான். ஜனவரி முதலாம் திகதியை புத்தாண்டு தினமாகக் கொண்டு வந்ததற்கு நவீனக் காலக்கணிப்பு முறையும் பொருந்தி வந்தது. ஆனால் தமிழர்களின் புத்தாண்டு ஏப்பிரல் மாத்தில் கொண்டாடப்படுவதற்கு என்ன காரணத்தை சொல்வது? முன்னர் தமிழர் கொண்டாடிய புத்தாண்டுத் தினம்தான் என்ன?
இப்போது தமிழர்கள் சித்திரை மாதத்தில் கொண்டாடுகின்ற புத்தாண்டுப் பிறப்பு ஆரியர்களால் பின்னாளில் அறிமுகப் படுத்தப்பட்டதாகும். இந்த சித்திரை ஆண்டுப் பிறப்பு முறை பற்சக்கர முறையில் உள்ளது. அறுபது ஆண்டுகள் பற்சக்கர முறையில் திரும்பி திரும்பி வருவதை நாம் அவதானித்திருக்கலாம். இந்த அறுபது ஆண்டுகளுக்கும் பிரபல முதல் அட்சய என்ற அறுபது பெயர்கள் உள்ளன.
இந்த அறுபது ஆண்டுகளின் பெயரில் ஒரு பெயர் கூட தமிழ்ப்பெயர் இல்லை. இந்தப் பற்சக்கர முறை வட நாட்டு மன்னனான சாலி வாகனன் என்பவனால் கிறிஸ்துவுக்கு பின் 78 ஆம் ஆண்டில் வடநாட்டில் ஏற்படுத்தப் பட்டது என்று வரலாற்று ஆசிரியர்கள் கூறுவார்கள். 'கனிஷ்கன்' என்ற வடநாட்டு அரசனாலும் இது உருவாக்கப்பட்டது என்று கூறுவோரும் உள்ளார்கள். பின்னர் தென்னாட்டில் ஆரியர்களின் ஊடுருவலால்- ஆட்சியால்- இந்தப் பற்சக்கர முறை படிப்படியாகப் பரப்பப்பட்டு நிலை நிறுத்தப்பட்டது. எந்த ஓர் இனத்தவரின் ஆட்சி ஒரு நாட்டில் நிலைநிறுத்தப் படுகின்றதோ அந்த இனத்தவரின் பழக்க வழக்கங்கள் பண்பாடுகள், கலைகள் போன்றவை அந்த நாட்டினரின் பழக்க வழக்கங்களோடு கலந்து விடுவது இயல்பு. அந்த வகையில் இந்த சாலி வாகன முறை பின்னர் மெல்ல மெல்ல நடைமுறைப்படுத்தப்பட்டு பழக்கத்திற்கு வந்து விட்டது. அறுபது ஆண்டுப் பற்சக்கர முறை காரணமாக ஆரியரிடையே அறுபது வயது நிரம்பியவர்கள் 'சஷ்டி பூர்த்தி' என்ற அறுபதாண்டு விழாவைக் கொண்டாடும் வழமையும் இருக்கின்றது.
பண்டைத் தமிழரின் காலக் கணக்கு முறை பற்றி முன்னரும் நாம் கூறியுள்ளோம். தமிழன் ஓர் ஆண்டுக்குரிய வாழ்வை ஆறு பருவங்களாக வகுத்து தனது புத்தாண்டை இளவேனிற் காலத்தில் அதாவது தை மாதத்தில் ஆரம்பித்தான்.
தமிழனைப் போலவே மற்றைய பழங்குடி இன மக்களான சீனர்களும், ஜப்பானியர்களும், கொரியர்களும், மஞ்சூரியர்களும் என்று பல கோடி இன மக்களும் இளவேனில் காலத்தையே புத்தாண்டின் ஆரம்பமாக கொண்டாடி வருகின்றார்கள்.
தைத்திங்கள் முதலாம் நாளான தைப்பொங்கல் தினத்தையே தனது புத்தாண்டாக கொண்டாடி வந்த தமிழன் இடையில் தன் பெருமையை மறந்தான். அதனால் மாறினான். இன்று ஆரியர்களின் புத்தாண்டை தன்னுடைய புத்தாண்டாகத் தமிழன் கொண்டாடி வருகின்றான். ஐரோப்பியர்கள் பிழையான காலக்கணக்கு முறையில் இருந்து சரியான காலக்கணக்கு முறைக்கு மாறினார்கள். மாறாமல் இருந்தவர்களை 'முட்டாள்கள்' என்றார்கள்.
தமிழனோ தன்னுடைய சரியான காலக்கணக்கு முறையில் இருந்து பின்னாளில் பிழையான கணக்கு முறைக்கு மாறினான்!. இங்கு யார் முட்டாள்? தமிழனைப் பொறுத்த வரையில் முட்டாள்கள் தினம் ஏப்பிரல் நடுப்பகுதியில் வருகின்றதோ என்னவோ? எது எப்படி இருப்பினும், முட்டாள்கள் வாழ்க! ************************************* இதுவொரு படியெடுப்புப் பதிவு. நன்றி: மெல்பேணிலிருந்து சபேசன். நன்றி: தமிழ்நாதம் இணையத்தளம்.