This is a tb_b_20060122 with one sidebar and a fluid (flexible) content.
Advertisement
Wednesday, June 28, 2006
வருத்தங்கள்
வருத்தம் தெரிவிக்கிறார்களாம். மறைமுகமாக மன்னிப்புக் கேட்கிறார்களாம். இது ஏதோ ஒரு விதத்தில் சாதாரணமான என்னையும் பாதிக்கத்தான் செய்கிறது. எரிச்சல்தான் வருகிறது. இந்தமுறை 'துன்பியல் சம்பவம்' என்பதைவிட கொஞ்சம் கீழிறங்கியது போல் தோன்றியதால் எனது எரிச்சலும் சற்று அதிகம்தான்.
ஆனால் தலைமையில், பொறுப்பில் இருப்பவர்கள் எங்களைப்போல் உணர்ச்சிவசப்பட முடியாது. ரோசத்தையும் ஆத்திரத்தையும் வெளிப்படுத்த முடியாது. அவர்களைப் பொறுத்தவரை அதுசரி.
எண்டாலும் எனக்குக் கிழம்பின விசரைத் தணிக்க ஒரு பதிவு அவ்வளவுதான். 'துன்பியல் சம்பவத்துக்கு' நேரடியா ஒரு கண்டனம் என்றால் இப்போது செய்யமுடிந்தது இந்தப்பதிவு. அவ்வளவுதான். இனவரப்போகும் சிலரின் பதிவுகளிற் பின்னூட்டமிடுவதைத் தவிர்த்து தணிந்து போகவும் ஒரு பதிவு.
இங்கே 'துன்பியல் சம்பவத்தையே' நக்கலடித்துக் காயப்போட்ட கூட்டம் இப்போது தொடைதட்டி எழும்பும். புதியாய் நையாண்டிகள் வரும். புலி பயந்து பணிந்துவிட்டதாய்க்கூடப் புலம்பலாம்.
கருத்து வெளியிடப்பட்டது அன்ரன் பாலசிங்கம் அவர்களிடமிருந்து என்பதில் ஒரு திருப்தி.
மன்னார் பேசாலை தேவாலயம் மீதான சிறிலங்கா கடற்படையின் அட்டூழியத் தாக்குதல் குறித்து வத்திக்கானுக்கு மன்னார் ஆயர் இராயப்பு யோசப் அடிகளார் கடிதம் அனுப்பியுள்ளார்.
அக்கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது:
இலங்கையின் மிகப் பெரிய தேவாலயங்களில் ஒன்றான மன்னார் விக்டோரி தேவாலயத்தில் சிறிலங்கா கடற்படையினரது தாக்குதலில் அப்பாவி மக்கள் இரத்தம் சிந்தியுள்ளமையால் தேவாலயத்தின் புனிதம் பாதிக்கப்பட்டுள்ளது.
இத்தாக்குதலில் கொல்லப்பட்ட ஆறு பொதுமக்களின் சடலங்களை எரியூட்டிவிட்டு வந்திருகிறேன்.
உள்ளுர் மக்கள் சிறிலங்கா கடற்படையினரால் அச்சமடைந்த நிலையில் உள்ளனர்.
பேசாலையில் உள்ள 7 ஆயிரம் மக்கள் தங்களை இந்தியாவுக்கோ அல்லது விடுதலைப் புலிகளின் நிர்வாகப் பகுதிக்கோ அனுமதிக்குமாறு கெஞ்சுகின்றனர்.
தமிழீழ விடுதலைப் புலிகளால் இத்தேவாலயம் தாக்கப்பட்டதாக சிறிலங்கா அரசாங்கம் பொய்யான தகவலைப் பரப்பி வாருகிறது.
பேசாலையில் உள்ள சிறிலங்கா கடற்படையினரும் சிறிலங்கா காவல்துறையினருமே இத்தாக்குதலை நடத்தினர்.
இத்தாக்குதலில் படுகாயமடைந்தோரை காப்பாற்றவும் அவர்களை நோயாளர் காவு வண்டியில் கொண்டு செல்லவும் என்னை சிறிலங்கா இராணுவத்தினர் அனுமதிக்கவில்லை.
உள்ளுர் சிறிலங்கா இராணுவ தளபதியை அழைத்து பேசாலையில் உள்ள 7 ஆயிரம் மக்களை சந்திக்க செய்தோம். பேசாலையில் உள்ள கடற்படையினரது கொடுமைகள் குறித்து அந்த மக்கள் கதறியழுத நிலையில் தகவல்களைத் தெரிவித்தனர்.
தங்களை விடுதலைப் புலிகளின் பகுதிக்கோ அல்லது தமிழ்நாட்டுக்கோ செல்வதைத் தடுக்கக் கூடாது என்றும் கேட்டுக்கொண்டனர்.
இல்லையெனில் சிறிலங்கா கடற்படையினரால் நாங்கள் அனைவரும் ஒருநாள் கொல்லப்பட்டு விடுவோம் என்றும் அவர்கள் தெரிவித்தனர்.
புனித வழிபாட்டு இடமான தேவாலயம் கூட எங்களுக்குப் பாதுகாப்பிலாமல் ஆகிவிட்டது. ஆகையால் அப்பாவி மக்களாகிய நாங்கள் எங்கே போவோம் என்றும் அவர்கள் கேள்வி எழுப்பினர்.
அப்பாவி மக்களுக்கு உள்ளுர் இராணுவத் தளபதி உத்தரவாதம் அளித்த போதும் இத்தகைய உத்திரவாதங்கள் தங்களுக்கு பலமுறை அளிக்கப்பட்டுவிட்டதகவும் இந்த வார்த்தைகள் எல்லாம் நீரின் மேல் எழுதியவை என்றும் மக்கள் குமுறினர்.
பேசாலை கடலில் தமிழீழ விடுதலைப் புலிகளுடனான மோதலின் போது வங்காலைபாடில் மீனவர்கள் குடியிருப்புக்களையும் மீன்பிடி உபகரணங்களையும் கடற்படையினர் எரித்து சாம்பலாக்கினர்.
மேலும் காட்டாஸ்பத்திரி கடற்கரையில் மீன்பிடித்துவிட்டு வந்து கொண்டிருந்த ஆறு மீனவர்களை மண்டியிடச் செய்து அவர்களின் வாயில் துப்பாக்கியை நுழைத்து சுட்டுள்ளனர். அவர்களில் 4 பேர் இறந்துள்ளனர். அவர்களின் கைகளில் அடையாள அட்டைகளை பிடித்தபடியே அவர்கள் இறந்துள்ளனர். கடற்படையினரிடமிருந்து தப்பி ஓட முயன்ற இருவர் பிடிக்கப்பட்டு தாக்கப்பட்டுள்ளனர்.
பேசாலை பகுதியில் சிறிலங்கா கடற்படையினர் கண்மூடித்தனமாக துப்பாக்கிச் சூடு நடத்தியதில் பல வீடுகள் சேதமடைந்தன. விக்டோரி தேவாலயத்தின் சுவர்களிலும் அந்த சுவடுகள் உள்ளன.
காற்சட்டை அணிந்து இரு உந்துருகளில் வந்த 4 பேர் தேவாலயத்தின் மீது கைக் குண்டுகளை வீசினர். 6 ஆயிரம் மக்கள் உள்ளே இருந்த நிலையில் துப்பாக்கிச் சூடுகளை நடத்தினர். உள்ளே இருந்த மக்கள் கதவுகளையும் சன்னல்களையும் மூடிக் கொண்டனர்.
இதில் பெரும் தொகையிலான பொதுமக்கள் படுகாயமடைந்தனர். தேவாலயத்தில் இருந்த புனித வளனார் விக்டோரி சிலையும் சேதமடைந்துவிட்டது.
கடற்படையினரில் ஒருவர் சன்னலைத் திறந்து உள்ளே கைக்குண்டை வீசினார். இதில் பெருந்தொகையான மக்கள் காயமடைந்துள்ளனர் என்று அந்தக் கடிதத்தில் இராயப்பு யோசப் அடிகளார் தெரிவித்துள்ளார். ___________________ நன்றி: புதினம். ****************************** முன்பு 1995 யூலையில் நவாலித் தேவாலயத்தில் நூற்றுக்குமதிகமானவர்கள் ஒரேயடியாகப் படுகொலை செய்யப்பட்டபோது சிலர் "இதோட எங்களுக்கு விடிவுகாலம் வந்திடும். வத்திக்கானும் உலகமும் தலையிட்டு பிரச்சினையைத் தீர்த்துவைக்கும்" என்று கதைத்துக் கொண்டதைக் கேட்ட ஞாபகம் வந்துதொலைக்கிறது.
ஆனாலும் இப்படி முறையிட வேண்டியது மிக அவசியம். நீதி கிடைக்குமென்றில்லை. ஆனால் குருநகர் யாகப்பர், நவாலி பேதுரு, வவுனிக்குளத் தேவாலயம், மடுத் தேவாலயம், இன்னபிற இந்துத் தலங்கள் என்பவற்றின்மேல் "மக்களைக் கொல்லும் நோக்குடன்" மட்டுமே குண்டுபோட்டு நூற்றுக்கணக்கிற் கொலை செய்யப்பட்ட சம்பவங்களைத் தெரியாதமாதிரியிருந்துகொண்டு, "சிறிலங்காவின் சுதந்திரதினக் கொண்டாட்டத்தை எதிர்க்கும் நோக்குடன் மட்டும்" நடத்தப்பட்ட தலதா மாளிகைக் குண்டுவெடிப்புக்கு ஒப்பாரி வைத்துப் புலம்பிய (கத்தோலிக்க) மதத்தலைமைகளுக்குத் தெரியப்படுத்தவாவது இப்படி எழுதிக்கொண்டிருப்பது அவசியம்.
என்னை இவ்விளையாட்டுக்கு முதலில் அழைத்த மயூரனுக்கும் கடைசியாக அழைத்த கொழுவிக்கும் நன்றி. (இதைவிட வேறு யாராவது அழைத்தீர்களா தெரியாது. மயூரனின் பதிவைப்பார்த்த பின்தான் தமிழ்வலைப்பதிவுகளில் இப்படியொரு விசயம் நடந்துகொண்டிருப்பதே தெரியும்.) ஏற்கனவே வேறு விளையாட்டுக்கு அழைத்தவர்களின் அழைப்பை நிறைவேற்றாமைக்கு மன்னிக்கவும். ஆலோசித்துக்கொண்டிருக்கிறேன். *************************
பிடித்த உணவுகள்: 1.பிறந்த ஊர் (மாசி மாசத்து) முரற்சொதி 2.இறால், நண்டு, கணவாய் 3.உடும்பு 4.உக்கிளான் 5.பழஞ்சோறும் சுட்ட கருவாடும் 6.கரைவலை இழுத்தவுடன் வைக்கும் ஆணம்.
பிடித்த படைப்பாளிகள்: (ஈழத்துள் மட்டும் நின்றுகொள்கிறேன்) 1.கப்டன் மலரவன் 2.கப்டன் கஸ்தூரி 3. தமிழ்க்கவி 4.ஈரத்தீ / துளசிச் செல்வன் 5.நிலாந்தன், கருணாகரன் 6.மலைமகள்
பிடித்த பாடல்கள்: சினிமாவில் 1.ஈரமான ரோஜாவே 2.நூலுமில்லை வாலுமில்லை வானில் பட்டம் விடுவேனா 3.இசைத்தமிழ் நீ செய்த அருஞ்சாதனை 4.பாட்டுப் பாடவா பார்த்துப் பேசவா 5.கண்ணே கலைமானே 6.மலரே மெளனமா (கர்ணா)
ஈழப்போராட்டப் பாடல்கள் 1.இந்தமண் எங்களின் சொந்தமண் 2.சின்ன சின்ன கண்ணில் வந்து மின்னல் விளையாடிடும் 3.வாய்விட்டுப் பெயர் சொல்லி அழமுடியாது 4.பூவும் நடக்குது பிஞ்சும் நடக்குது 5.மாங்கிளியும் மரங்கொத்தியும் 6.வெளுத்தவானம் கறுக்கும்போதில் விழிகள் விரிந்திடும்
பிடித்த இடங்கள்: 1.வன்னி 2.யாழ்ப்பாணம் 3.மதுரை, கோடியாக்கரை 4.முல்லைத்தீவின் கள்ளப்பாட்டுக் கடற்கரை 5.ஊரில் அம்மம்மா வீடு 6.சிறுவயதிற் களவாடிய மகிழமரம், விளாத்தி, நாவல்.
போக விரும்பும் இடங்கள்: 1.வன்னி (ஏற்கனவே அளந்து முடித்திருந்தாலும் மீண்டும் மீண்டும் அலைய வேண்டும் வன்னியில்) 2.மட்டக்களப்பு, 3அம்பாறை 4.திருமலை 5.தீவகம் 6.எல்லாம் பார்த்தபின் நேரமிருந்தால் யாழ்ப்பாணத்தில் நான் பிறந்துவளர்ந்த ஊர்.
வலையில் அடிக்கடி போகுமிடங்கள்: 1.எப்போதும் முதலிடம் தமிழ்மணத்துக்கே 2.புதினம், தமிழ்நெட் 3.தமிழ்நாதம் 4.இப்போது விளையாட்டுப் பக்கங்கள் (உலகக்கோப்பைக்காக அடிக்கடி) 5.என் பள்ளிக்கூட வலைப்பக்கம் 6.youtube
பிடிக்கிற விசயங்கள்: 1.மாலை நேரம் கடற்கரையில் நடத்தல், காடுகளில் காலாற நடத்தல். 2.கடல்நீச்சலும் அதன்பின்னான் நல்ல "வெட்டலும்" 3.நண்பர்களுடன் மேசை, தகரங்களில் தட்டிப்பாடுதல் 4.நாட்டுக்கூத்துப் பார்ப்பது 5.கிளித்தட்டு (யாடு / தாச்சி) விளையாடுவது 6.தனிமையில் உரத்துப் பாடுதல், சமைத்தல்
பாதித்தவர்கள்/பாதிப்பவர்கள்: (நேரில் அறிந்தவர்கள் மட்டும்) 1.பாடகனும் போராளியுமாயிருந்து களப்பலியான மேஜர் சிட்டு 2.தமிழ்க்கவி 3.மாவீரர் பணிமனைப் பொறுப்பாளர் பொன்.தியாகம் 4.மறைந்த சிங்கராயர் அடிகள் 5.கருணரத்தினம் (கிளி) அடிகள் 6.அண்மையில் மறைந்த கவிஞர் நாவண்ணன்
மறக்க முடியாத சினிமா: (தமிழுக்குள் மட்டும் நின்று கொள்கிறேன்) 1.குட்டி 2.முகம் 3.ஹேராம் 4.அன்பே சிவம் 5.சிலநேரங்களில் சில மனிதர்கள் 6.சில விமர்சனங்கள் இருந்தாலும் புலிகளால் தயாரிக்கப்பட்ட அனைத்துப் படங்களும்.
மறக்கமுடியாத நூல்கள்: (ஈழத்துள் மட்டும் நின்று கொள்கிறேன்) 1.போர் உலா (கப்டன் மலரவன்) 2.இனி வானம வெளிச்சிடும் (தமிழ்க்கவி) 3.செம்மணி தொகுப்பு 4.நெருப்பாற்று நீச்சலிற் பத்தாண்டுகள் 5.உயிராயுதம் 6. முற்றத்து ஒற்றைப்பனை _________________________________________ ஆறு முற்றியது.
நான் யாரையும் அழைக்கப்போவதில்லை.
ஏற்கனவே அழைக்கப்படாதவர்களில் முந்திவந்து பின்னூட்டமிடும் ஆறுபேர் இதைத் தொடரலாம்.
வங்காலைக்கிராமத்தைச் சேர்ந்த மூர்த்தி மார்டீன்(35), அவரது மனைவி மேரி மதலேன் (27), மற்றும் அவர்களின் பிள்ளைகளான லக்சிகா(9), நிக்சன(7) ஆகியோரே இவ்வாறு கோரமாகப் படுகொலை செய்யப்பட்டனர்.
குடும்பத்தலைவர் மூர்த்தி தச்சுத்தொழிலாளி. அவரின் தச்சுத் தொழிலுக்கான உபகரணங்களும் கொலையாளிகளாற் பயன்படுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. நீண்டசித்திரவதைக்குப்பின்பே இவர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதாக அப்பகுதியிலிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன.
புலிகளாக இனங்கண்டு தேர்ந்தெடுக்கப்பட்டவர்களே கொல்லப்படுகிறார்கள் என்று புராணம் பாடும் புலியெதிர்ப்புக் கும்பல் இதற்கும் ஏதாவது காரணத்தைத் தேடி "மறைநூல்களில்" துலாவிக்கொண்டிருக்கும். பார்ப்போம் எதைக்கொண்டு வருகிறார்களென்று.
படுகொலை செய்ப்பட்டவர்களின் படங்கள் கோரமானவை. விரும்பாதவர்கள் பார்க்கவேண்டாம். செய்திகளும் படங்களும். சங்கதி தமிழ்நெட் ****************************** நேற்று முன்தினம் மட்டக்களப்பில் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியில் படையினர் நடத்திய கண்ணிவெடித்தாக்குதலில் 3 குழந்தைகள் உட்பட பத்து அப்பாவிப் பொதுமக்கள் கொல்லப்பட்டனர். மேலும் பலர் காயமடைந்தனர்.
செய்தி மற்றும் படங்கள் ******************************* மூதூரிலிருந்து தொடர்ந்தும் தமிழர்கள் இடம்பெயர்ந்துகொண்டிருக்கிறார்கள். நூற்றுக்கணக்கான குடும்பங்கள் ஏற்கனவே மன்னாருக்கு வந்துவிட்டன. ஆயிரக்கணக்கான குடும்பங்களைச் சேர்ந்த இருபத்தெட்டாயிரம் மக்கள் புலிகளின் கட்டுப்பாட்டுப்பகுதிக்கச் சென்றுவிட்டனர். இந்நிலையில் மேலும் பல குடும்பங்கள் நீர்கொழும்புநோக்கி இடம்பெயர்ந்துள்ளன. ****************************** யாழ்ப்பாணத்தில் கைதடி என்ற இடத்தில் மனிதப்புதைகுழியொன்று கண்டுபிடிக்கப்பட்டது. சில தினங்களின் முன் படையினராற் கைதாகி காணாமற்போன இந்து மதகுரு வெங்கட் சர்மா என்பவரின் சடலமே முதலில் தற்செயலாகக் கண்டுபிடிக்கப்பட்டது. அதன்பின் மேலும் தோண்டிய நிலையில் மூன்று சடலங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. ஒருவர் பரணிதரன் என்று அடையாளம் காணப்பட்டார். இந்நிலையில் மேலும் இவ்விசாரணைகள் தொடர்வதைத் தடுக்க படையினர் தீவிர முயற்சி செய்கின்றனர். இறந்தவர்களின் வீடுகளுக்குச் சென்று குடும்பத்தினரை அச்சுறுத்தியுள்ளதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன.
இக்கைதடிப் பகுதி ஏற்கனவே உலகை உலுக்கிய செம்மணிப் புதைகுழிக்கு அண்மையில் இருக்கும் பகுதி. *************************
நிலைமை இப்படியிருக்க இன்னும் பேச்சுவார்த்தையென்று இழுத்துக்கொண்டிருப்பதில் அர்த்தமிருப்பதாகத் தெரியவில்லை. புலிகள் என்ன செய்யப்போகிறார்கள்?
ஐரோப்பிய ஒன்றியத்தில் அங்கம் வகிக்கும் நாடுகளைச் சேர்ந்த யுத்தநிறுத்த கண்காணிப்புக் குழுவினரை வெளியேறச் சொல்லிப் புலிகள் கேட்டது சரியான நடவடிக்கை. அதில் விடாப்பிடியாக நிற்பதில்தான் வெற்றி இருக்கிறது. அதேநேரம் கண்காணிப்புக்குழுவைச் சீரமைக்க ஆறுமாதகாலம் ஆகும் என்று நோர்வே சொல்லியிருப்பதும் அதுவரை இருதரப்பும் பொறுமை காக்க முடியுமா என்று கேட்டிருப்பதும் சிக்கலுக்குரிய விசயங்கள். கண்காணிப்புக்குழு இருந்தும் ஒன்றுதான் இல்லாவிட்டாலும் ஒன்றுதான் என்ற நிலைமைக்கு இலங்கைத்தீவு வந்து நாட்கள் பல கடந்துவிட்டன. இவ்வளவுநாட்களாக அறுபதுபேரை வைத்துக்கொண்டு கண்காணிப்புக்குழு செய்ததற்கும் இருபதுபேரை வைத்துக்கொண்டு செய்வதற்கும் பெரிய வித்தியாசம் இருக்கப்போவதில்லை.
யுத்தம் நடக்கும்போது இப்படுகொலைகளை எப்படி எதிர்கொள்வது, எப்படிக் கட்டுப்படுத்துவதென்று புலிகளுக்கும் மக்களுக்கும் தெரியும். புலிகள் அவர்களுக்கேயுரிய முறையில் இவற்றைக் கட்டுப்படுத்த முடியும். கடந்த காலத்தில் அப்படிக் கட்டுப்படுத்தப்பட்டிருக்கிறது. சும்மா உலகத்துக்காகப் பொறுமை காக்கிறோம் என்ற பேரில் கையைக் கட்டிக்கொண்டு இருப்பது இனியும் சரிவராது.
கொழும்பு வாசஸ்தலங்களின் வாசல்களுக்குக் குண்டுகள் வரும்வரை அவர்கள் யாருக்கும் உறைக்கப்போவதில்லை.
இரத்தம் தோய்ந்த தமிழர் படுகொலை நாளொன்றின் நினைவுகள்.
கடந்த சிங்கள, இந்துப் புத்தாண்டன்று திரு(க்)கோணமலையில் தமிழர் படுகொலையொன்று நடந்தது நினைவிருக்கலாம். அந்நாளில் பாதிக்கப்பட்ட நேரடி சாட்சியங்கள் சிலவற்றைக் கொண்டு எழுதப்பட்டது இக்கட்டுரை. _____________________________
"ஜயா தம்பி இதை எரிக்காதியுங்கோ" என்று மன்றாடிய 60வயது வயோதிபத் தாயார் ஒருவரை வெட்டிக் கொன்றுவிட்டே இக்கோயிலை எரித்திருக்கின்றனர் காடையர்கள்.
1983 யூலை இன அழித்தொழிப்பில் இத்தீவு தமிழ் மக்களின் இரத்தத்தில் தோய்ந்த வரலாற்றை எவரும் மறந்திருக்கமாட்டார்கள். ஓவ்வொரு தமிழனின் மனங்களிலும் ஆழப்புதைந்துகிடக்கும் ரணமது. இதிலுள்ள துரதிஸ்டம் என்னவென்றால் அந்தக் கொடூரத்திற்கு மீண்டும் மீண்டும் தமிழ் மக்கள் பலியாகிவருவதுதான். புரிந்துணர்வு ஒப்பந்தம், நல்லிணக்கப் பேச்சுவார்த்தை, சர்வதேசத்தலையீடு எவையுமே சிங்களத்தின் கொடூரமனோபாவத்தில் மாற்றத்தை ஏற்படுத்தவில்லை. எஞ்சிக்கிடந்த கொஞ்ச நம்பிக்கைகளும் பொய்த்துப் போனதன் சாட்சியாக இருக்கிறது அந்தநாள்.
புதுவருடக் கொண்டாட்டங்களுக்கான முனைப்பில் கிடந்தனர் திருமலைவாழ் தமிழ் மக்கள். அப்பொழுதுதான் அந்தக்கொடூரங்கள் அரங்கேறின. 2006 ஏப்பிரல் 12ஆம் திகதி அன்று , மாலை 3.45 மணியளவில் திருமலை நகரின் மத்தியசந்தையின் பின்வாயில் பகுதியில் ஒரு குண்டு வடிக்கிறது. அதில் 8 தமிழ்மக்கள் உட்பட 10பேர் காயமடைகின்றனர். அதனைத் தொடர்ந்து அங்கு விரைந்த சிங்களக் காடையர்கள் கூட்டம் சிலமணி நேரம் வெறித்தாண்டவமாடினர். அந்த வெறித்தாண்டவம் பற்றிய சிலரது நினைவுகள்தாம் இங்குப் பதிவாகின்றன.
இத்தாக்குதல்களில் சிங்களவர் காட்டிய வேகத்தைப் பார்த்தால் முன்கூட்டியே எல்லாம் தயார்நிலையில் இருந்திருக்கிறது போல்தான் தெரிகிறது. சரியாக 4.20 மணியளவில் சிங்களக்காடையர்கள் கடையில் பொருட்கள் வாங்கிக்கொண்டிருந்த தமிழ்மக்கள் மீது குண்டு வீச்சை நடாத்தினர். அதில் 4 தமிழர்கள் கொல்லப்பட்டும் 12பேர் காயமடைந்தனர். தொடர்ந்து மத்திய வீதியில்புகுந்த காடையர்கள் கூட்டம் கத்திகள், இரும்புக்கம்பிகள், பொல்லுகள் சகிதம் தமிழ்மக்கள் மீது தாக்குதல் தொடுத்தனர். அதேவேளை நகரின் பல பகுதிகளிலும் தமிழ் மக்கள் தாக்கப்படுகின்றனர். லிங்கநகர் பகுதியிலுள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு அருகில் நின்றுகொண்டிருந்த ஒருவர் வெட்டிக்கொல்லப்பட்டு எரிக்கப்படுகின்றார். அனுராதபுரச்சந்தியில் மோட்டார்சைக்கிளில் சென்று கொண்டிருந்த தமிழர்கள் இருவர் வெட்டிக்கொல்லப்பட்டு எரிக்கப்படுகின்றனர். இதனை அப்பகுதி மக்கள் பலர் பார்த்திருக்கின்றனர்.
இவையனைத்தும் சிறிலங்காவின் முப்படையினரின் பார்வையிலும் ஆசியிலுமே நடந்தேறின. முதல்நாள் வெறித்தாக்குதல்களில் திருப்தியடையாத சிங்களக் காடையர் கூட்டம் மறுநாள் புதுவருடதினத்தன்று தமிழ்மக்கள் வாழும் கிராமங்கள் மீது தமது தாக்குதல்களை நடாத்தியது. தமிழ் மக்களின் வீடுகளை எரித்து சொத்துக்களையும் கொள்ளையடித்தனர். இதுவும் பாதுகாப்புப் படையினரின் பாதுகாப்புடனேயே நடந்துமுடிந்தது. இதன்போது கன்னியா சிவயோகபுரம் நடேசர்கோயில் சிங்களக் காடையர்களால் எரிக்கப்பட்டிருக்கிறது. "ஜயா தம்பி இதை எரிக்காதியுங்கோ" என்று மன்றாடிய 60வயது வயோதிபத் தாயார் ஒருவரை வெட்டிக்கொன்றுவிட்டே இக்கோயிலை எரித்திருக்கின்றனர் காடையர்கள். சிங்களக்காடையர்களின் கோரத்தாண்டவத்தின்போது தமிழ்பெண்கள் சித்திரவதைக்கு உள்ளாகியிருக்கின்றனர். சிங்களக்காடையர்கள் இறந்தவர்களின் நகைகளையும் ஒன்று விடாமல் எடுத்திருக்கின்றனர். இதன்போது தோடுகளை எடுப்பதற்காகக் காதுகளை வெட்டியிருக்கின்றனர். இவைகள் பற்றி ஆதங்கப்பட்ட திருகோணமலையின் கல்விமான் ஒருவர் "இந்த நூற்றாண்டில் இப்படிக் கொடுமைசெய்தவர்கள் சிங்களவர்களாகவும் இப்படியொரு கொடுமைக்கு ஆளாகியவர்கள் தமிழ்மக்களாகவும்தான் இருக்கமுடியும்" என்றார்.
இந்தக்கொடுமைகளில் அகப்பட்டு தப்பிப்பிழைத்தவர்கள் சிலர் தங்களது வேதனைகளையும் ஆதங்கத்தினையும் இப்படிக் கொட்டித்தீர்த்தனர். மேற்படி நடேசர் கோயிலில் வெட்டிக்கொல்லப்பட்ட தாயாரின் மருமகனான திரு.ரவீந்திரன் தனது அனுபவங்களை இவ்வாறு விபரித்தார்:
"புதுவருசத்தண்டு சொந்தக்காரர் எல்லோருமாகச்சேர்ந்து எங்கடவீட்டில் சந்தோசமாகச் சமைத்துச் சாப்பிட்டுக் கொண்டிருந்தோம். நாலு நாலரை மணியிருக்கும், சிங்கள இளைஞன் ஒருவன் காணாமல்போய்விட்டதாகச் செய்திகள் வந்தது. அந்தச்செய்தி வந்து 10 நிமிடங்களிருக்கும் எங்கடவீட்டுக்கு முன் பக்கத்தில் இருந்த வீடுகள் எரியுது. கூடவே ஐயோ அம்மா என்ற அவலக்குரல்களும் கேட்குது. உயிரைக்காப்பாற்றிக் கொண்டால் போதுமென்டு பொருட்கள் எல்லாத்தையும்விட்டிட்டு வளவுக்குப் பின்னாலிருந்த வயலுக்கால ஓடினம். என்ர மாமி வயதானவர்.அண்டைக்கு கோயில்ல பஜனை இருக்குதெண்டு உயிர் போனாலும் வரமாட்டன் எண்டு சொல்லிட்டார். என்ர கண்ணால பார்த்தனான். சிங்களக்காடையர்கள் கத்திகள், பொல்லுகளோட ஓடி வந்தாங்கள். பொலிஸ் அல்லது ஆமி நினைச்சிருந்தால் இதையெல்லாம்தடுத்திருக்கலாம். காலுக்கு கீழ் சுட்டிருந்தால் ஓடியிருப்பாங்கள். ஆனால் அவங்கள் காடையர்களின் காடைத்தனங்கள் எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டிருந்தாங்கள். இதேநேரம் தமிழனெண்டால் சுட்டுவிட்டு கலவரத்தை அடக்கச் சுட்டம் எண்டிருப்பாங்கள். இனி ஒரே வழி ஆயுதத்தை எடுத்துக் கொண்டு தலைவரோட போறது தான்".
மூன்று பிள்ளைகளின்தாயான கிருபாகரன்- யோகராணி கோரமான தனது அனுபவங்கள்குறித்து இவ்வாறு குறிப்பிட்டார். "வீட்டில் நாங்கள் நித்திரை. திடீரென்டு எங்கட வீட்டைச் சுற்றியிருந்த வீடுகள் எல்லாம் எரியுது. ஒரே புகைமண்டலம் எங்கட நடேசர் கோயிலைப் பார்த்தால் அங்கேயும் புகைமண்டலம். எல்லாத்தையும் பொலிஸ் பாத்துக்கொண்டு தானிருந்தது. அவங்கள விட்டுப்போட்டு பயத்தில ஓடிவந்த எங்கள வீட்ட போகச் சொல்லியது பொலிஸ். இப்ப எங்களிட்ட ஒன்றுமில்ல எல்லாத்தையும் இழந்து நிக்கிறம்" என்றார் அவர்.
இதன்போது பாதிக்கப்பட்ட சந்திரன் ஜெகநாதன் என்பவர் கூறும் போது, "நான் என்ர கண்ணால பாத்தனான். ஊர்க்காவல்படையும் மகிந்தபுரம் சிங்களவரும் டயரைக் கொளுத்திக்கொண்டு வந்தாங்கள். நான் தனியாளாத்தான் இங்க இருக்கிறன். வாய்க்கால் கரையோட நிண்டு பார்த்தனான் எனக்கு நல்லாத் தெரியும். மகிந்தபுரத்தைச் சேர்ந்த ஆட்டோக்காரங்கள், அந்தப் பகுதியைச் சேர்ந்த ஊர்காவல் படையைச் சேர்ந்தவங்கள் முகத்தைக் கறுப்புத்துணியால் கட்டிக்கொண்டு வந்த வங்கள், சிலர் ஆமியின்ர சேட் போட்டிருந்தாங்கள். கத்திகள் பொல்லுகளோட வந்தாங்கள். எங்கட பகுதியிலிருந்த 42 வீடுகளை எரிச்சும், எங்கட சாமாங்களையெல்லாம் கொள்ளையடிச்சிட்டுப் போனாங்கள் இவங்களுக்குப் பாதுகாப்பாக மோட்டார் சைக்கிள் குறுப் முன்னால் சென்றது"
இது பற்றி ஓர் ஆசிரியை இவ்வாறு கூறினார். திருகோணமலை மத்தியசந்தை குண்டு வெடிப்புச் சம்பவம் நடைபெற்ற வீதியைச்சேர்ந்த அந்த ஆசிரியை, "நாங்கள் வாயில்கதவை மூடிக்கொண்டு இருந்தம். பெரும் சத்தத்தோட சிங்களக் காடையர் கூட்டம் எங்கட வீட்டுக் கதவைத் தட்டி உதைத்தனர். எங்கள் வளவிற்கு மதில் இல்லாததால் நாங்கள் தப்பினம். எங்கட வீட்டிற்கு முன்னால் இருந்த வீடொன்றையும் எரித்தனர். வெளியிலிருந்துதான் பல காடையர்கள் கொண்டுவரப்பட்டிருகின்றனர். யாரோ ஒருவர் இது தமிழருடையது என அடையாளம் காட்ட ஒவ்வொரு கடையாக எரிக்கப்பட்டிருக்கிறது. இதில எல்லாச் சிங்களவரும் பங்கு கொண்டார்கள் எண்டுதான் நான் சொல்லுவன். இங்கயிருக்கிற சிங்களவர்கள் நினைச்சிருந்தால் நாங்கள் இஞ்ச ஒண்டா இருக்கிறம் இஞ்ச நீங்கள் இப்படியெல்லாம் செய்ய நாங்கள் அனுமதிக்கமாட்டம் எண்டு சொல்லித் தடுத்திருக்கலாம். சிங்களவர்கள் எப்போதும் எங்கள அழிக்கத்தான் காத்துக் கொண்டிருக்கிறாங்கள். அவங்கள் திருந்தப்போறதில்ல" என்று ஆதங்கப்பட்டார்.
சிங்களக் காடையர்களுக்குப் பயந்துபாடசாலைகளில் தஞ்சமடைந்த மக்களையும் சோதனை என்ற பெயரில் பாதுகாப்புப்படையினர் கொடுமைப்படுத்தியிருக்கின்றனர். இது பற்றி கருத்துத் தெரிவித்த ஒரு தன்னார்வ நிறுவனப் பிரதிநிதி தங்கட வேலையெல்லாம் விழலுக்கு இறைத்த நீர் போலத்தான் என ஆதங்கப்பட்டார். ‘இந்த நாலுவருட காலமாக நாங்கள் நல்லிணக்கம், ஜக்கியம், மனிதப்பாதுகாப்பு என்றெல்லாம் காசச்செலவளித்ததுதான் மிச்சம். ஜ.நா அகதி மக்களின் உரிமையெல்லாம் பேசிச்சு. நாங்களும் பேசினம். ஆனால் அகதி முகாமிலிருக்கும் மக்களையே சந்தேகத்தின்பேரில் ராணுவம் கைது செய்கிறது. விசாரணைக்கு என அழைத்துக்கொண்டு செல்கிறது. அவர்களது அகதி உரிமைவாதங்களின் அர்த்தம் என்ன?"
இவ்வாறு இந்தக் கொடூர இன அழித்தொழிப்பு தொடர்பில் பாதிக்கப்பட்ட ஒவ்வொருவரிடமும் ஒவ்வொருவிதமான கதையிருக்கிறது. திருமலை இன்று அச்சம் கலந்த அமைதியுடன் தன் மண்ணின் கீழே கொதித்துக்கொண்டிருக்கும் சிங்கள இனவாத எரிமலைக்குழம்பின் மேல் உள்ளது. ***********************
தொகுப்பு: கதிரவன்.
நன்றி விடுதலைப்புலிகள்:சித்திரை-வைகாசி-2006.
(எழுத்துரு மாற்றியபோது வந்த எழுத்துப்பிழைகளை இயன்றவரை திருத்தியுள்ளேன்.)
நண்ப, இன்னும் 34 நாட்கள் தாம். இப்போதே மணித்தியாலங்கள் கணிக்கிட்டு ஒவ்வொன்றாகக் குறைக்கத் தொடங்கி விட்டீராம். கொஞ்சம் பொறும். அதற்குள் என்ன அவசரம்? மூத்தோர்கள் சிலர் உது பற்றி மூச்சே விடாமல் சும்மா கிடக்க, குறுக்கால பாயும் உமக்கு ஏனிந்தப் பரபரப்பு? முப்பத்து நான்கு நாட்கள், சும்மா முக்கி விட ஓடிப்போகும். தினமொரு பின்னூட்டம் என் பதிவிற் போடும். நாள் போறதே தெரியாது.
வேறு என்ன? இப்போதும் சந்தனம் மெத்துகிறதா? மூஞ்சையில் தடவப்படுகிறதா?