Wednesday, January 25, 2006

எலியுஞ் சேவலும்

இதுவொரு சிறுவர்க்கான இசைநாடகம்.

எழுதியவர் 'தங்கத் தாத்தா' சோமசுந்தரப் புலவர்.

சின்ன வயதில் எங்கள் வகுப்பில் இந்த இசைநாடகத்தைப் பயின்றபோது நான் தான் பூனை. பூனைக்குரிய பாட்டு இப்போதும் மனத்தில் பசுமையாகவே இருக்கிறது. பிறகேதோ காரணத்தால் மேடையேறாமலே போனது இவ்விசைநாடகம்.

நடிகர்கள்: தாயெலி, சேயெலி, பூனை, சேவல்

முதலாங் காட்சி
சேயெலி:

வெய்யிற் கொடுமையம்மா! மேனி வேர்க்குதம்மா!
பைய உலாவிவரப் பரிந்துவிடை தாருமம்மா!
பொல்லாத வெப்பமம்மா! பழுங்கி யவியுதம்மா!
மெல்ல உலாவிவர விரும்பிவிடை ஈயுமம்மா!
தாயெலி:
ஆசைமிகுந்த மைந்தா! அன்பான கண்மணியே!
மோசம் வரும்மகனே! முற்றத்திலும் போக வேண்டாம்.
பொல்லாத துட்டர்மைந்தா! புறத்தே பதுங்கிநிற்பர்
அல்லா தனபுரிவார் ஐயாநீர் போகவேண்டாம்.

சேயெலி:
ஆண்பிள்ளை நானலனோ! அன்னாய் பயமுனக்கேன்
வீண்பிள்ளை யாக்காதே விடையருளிச் செய்யுமம்மா
கும்பிட்டேன் அன்னையுனைக் குறிக்கேநீ மறிக்காதே
வெம்பிப் புழுங்குமிங்கு வெளியேபோய் வருவெனம்மா

தாயெலி:
மகனே! பெற்றமனம் பித்து: பிள்ளைமனம் கல்லு என்பதுபோலப் பிடிவாதமாய் நிற்கிறாய். சரி, நீ நினைத்தபடி,
போய்வருவாய் என்மகனே!
புத்தியுடன் பத்திரமாய்
நீதிரும்பு மவ்வளவும்
நின்றுவழி பார்த்திடுவேன் - போய்வருவாய்.

இரண்டாங் காட்சி
('தீராத விளையாட்டுப் பிள்ளை' என்ற பாடலின் மெட்டில் இதைப் பாடலாம்.)

சேயெலி:
தொங்கிச் சுவரிற் குதிப்பேன் - மிகத்
துரிதமாக ஓடித் துள்ளி மிதிப்பேன்.
அங்கு மிங்குமாக நடிப்பேன் - சுவைத்
தருந்து முணவை மணந்து பிடிப்பேன்

ஆனந்த மான வெளிச்சம் - மகிழ்
வாக வுலாவுதற் கணுகுமோ வச்சம்
தேனுந்து மாமலர் வாசம் - வரும்
சில்லென்று தென்றலும் மிகுந்தவுல் லாசம்

அடுக்களைப் புறத்திலே ஓடி - அங்கே
அப்பமும் வெண்ணெயு மருந்துவென் தேடி
எடுத்துக் கடித்துண்டு கொண்டு - மிக
இன்புறுவே னோடி யன்னையைக் கண்டு.

மூன்றாங் காட்சி

(வலியில் துடிதுடிக்கும் பூனை, அடித்தவளுக்குச் சாபம் கொடுக்கிறது. நாங்கள் நாடகம் பழகும்போது இந்த இடத்தில் யாருக்கும் தெரியாமல் புதிதாக நாலைந்து வரிசேர்த்திருந்தோம். அன்று அடிதடியில் பின்னியெடுக்கும் இரு ஆசிரியைகளை வைத்து எழுதப்பட்டிருந்தன அவ்வரிகள். மேடையேறாததால் யாருக்கும் தெரியாமலே போய்விட்டது (பத்துவயதில்) எங்கள் கலகம்.)

பூனை:
மாஆயோ - மாஆயோ - மாஆயோ
மாஆயோ.......
முள்ளெலும்பு நோக முதுகு மிகவலிக்க
உள்ளம் நடுநடுங்க ஓங்கி யடித்தாளே -மாஆயோ

மெத்த வலிப்பெடுக்க மேனி நடுநடுங்க
மத்தா லடித்தாளே! மனமிரங்கா மாபாவி - மாஆயோ
மெய்யொடிய மத்தால் வெடுக்கென் றடித்தவள்தன்
கையொடிந்து மெத்தக் கலங்காளோ மாபாவி - மாஆயோ

சேவல்:
புனையாரே! பூனையாரே! பத்திமிகக் கலங்கிப்
பாதிவிழி மூடிப் பாடுகிறீர் காரணமென்?
காலைநக்கி நக்கியிரு கண்ணுமுக முந்துடைத்து
வாலைக் குழைத்தனுங்க வந்த வருத்தமென்ன?

பூனை:
(அந்த வேதனையிலும் எவ்வளவு சுவாரசியமாக சம்பவத்தை விவரிக்கிறது பாருங்கள். மெட்டு: தீராத விளையாட்டுப் பிள்ளை.)
சட்டியிற் காய்ச்சிய பாலைத் - தோய்த்துச்
சமையற்காரி வைத்தாள் உறியதன் மேலே
எட்டிப் பரண்மேலே தாவிக் - குதித்
தேறினேன் உறியினில் இனிதாக மேவி

பார்க்கப் பார்க்கப் பசிமீறும் - பசும்
பாலின் மணத்தினால் வாய்மிக வூறும்
ஆர்க்குங் காணாமலங் கிருந்தே - வெகு
ஆனந்தமா யுண்டேன் அமுதொத்த விருந்தே

காண்பார்க ளென்று நினைத்தே - இரு
கண்களை மூடியென் நாவை நனைத்தே
மாண்பாக யானுண்ணும் போது - அங்கே
வந்தாளே அந்த மடைக்குல மாது

சத்தப் படாமலே வந்து - மேலே
தங்கி யருந்துங் களவினைக் கண்டு
மத்தா லடித்தாளே பாவி - உடல்
வலிக்குதே ஐயையோ! மறுகுதே யாவி

சேவல்:
ஐயா! களவு பொல்லாதது - இதை
அறியாது செய்ததால் வந்ததே தீது
மெய்யா யடாதுசெய் தோரே - மிக
வெம்பிப் படாது படுவார்கள் நேரே

பூனை:
பொல்லாது சூதொடு வாதும் - என்று
புத்தி சொல்லவந்தீர் போமினிப் போதும்
நல்லாய்ப் பசிக்குது காணும் - இனி
நானங்குப் போயிரை தேடுதல் வேணும்.

நாலாங்காட்சி
பூனை:

ஆகா! அங்கேயோர் எலி வருகிறது. அதை மெல்லப் பதுங்கியிருந்து பிடித்து உண்ண வேண்டும்.
(தனக்குட் பாடுகிறது)

எலியே நீ வருவாய் - எனக்
கிரையாகவே வருவாய்
நலியா தென்பசி நானுனைத் தின்னுவேன்
எலியே நீ வருவாய்

(பூனை எலியைப்பிடிக்கப் பாயப்போகும் நேரத்தில் சேவல் கூவுகிறது)

சேவல்:
கொக்கறொக்கோஓ கொக்க றொக்கோ கூஉ
மிக்கவெயில் இக்கணமே போஓஒ
விண்ணும் மண்ணும் மூடியிருள் வாஆஅ
கொக்க றொக்கோஒ கொக்கறொக்கோ கூஉ

(எலி பயந்து தாயைக் கூப்பிட்டுக்கொண்டு ஓடுகிறது)
-------------------------------------
அதன்பின் என்ன நடந்ததென்று அடுத்த பதிவிற் பார்ப்போம். உங்கள் கருத்துக்களை எழுதுங்கள்.
-----------------------------------------


எழுத்துருவைத் தெரிவுசெய்ய.
பாமினி ஆங்கில உச்சரிப்பில்

[மேலுள்ள பெட்டியில் தட்டச்சினால் கீழுள்ள பெட்டியில் ஒருங்குறிக்கு (Unicode) மாற்றப்பட்ட எழுத்துரு கிடைக்கும்]


சுரதா, கிருபாவுக்கு நன்றி


Tuesday, January 17, 2006

போஜன் மாஸ்டரின் குடும்பத்தினர் சுட்டுக்கொலை.

நேற்றிரவு யாழ்ப்பாணம் மானிப்பாயில் நடைபெற்ற படுகொலைச் சம்பவமொன்றில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பெண்கள் கொல்லப்பட்டனர், இருவர் காயமடைந்தனர். 15.01.2006 -ஞாயிற்றுக்கிழமை இரவு 11.45 மணியளவில் வீட்டுக்குட் புகுந்த ஆயுததாரிகள் அவர்கள்மீது சரமாரியாகத் துப்பாக்கிச் சூட்டை நடத்தினார்கள்.

யாழ்ப்பாணத்தில் - குறிப்பாக வலிகாமத்தில் தொன்னூறுகளில் மாணவராயிருந்தவர்களுக்கு போஜன் மாஸ்டரைத் தெரியாமலிருக்க முடியாது.
சகவலைப்பதிவாள் டி.சே. தமிழனுக்கு நன்றாகத் தெரியுமென்று நினைக்கிறேன். கொல்லங்கலட்டியைப் பிறப்பிடமாக் கொண்டவர். நாங்களெல்லாம் சாரணராகத்தான் அவரை அறிமுகப்படுத்திக்கொண்டோம். தன்னார்வத் தொண்டுக்களில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டவர். தற்போது யாழ்ப்பாண சென்.ஜோன்ஸ் அம்புலன்ஸ் பிரிவின் யாழ்மாவட்ட முதன்மை ஒருங்கிணைப்பாளர் ஆவார்.
யுத்த காலத்தில் மாணவர்களுக்கும் இளைஞர்களுக்கும் முதலுதவிப் பயிற்சிகளை வழங்கிவந்தார். வலிகாம இடப்பெயர்வின் பின் மானிப்பாயிலேயே அவரது குடும்பம் தங்கியிருந்ததாக அறிகிறேன்.
சுட்டுக்கொல்லப்பட்டவர்கள்,
அவரது மனைவியான போஜன் அர்த்தநாகேஸ்வரி (வயது 51),
மகள்களான போஜன் ரேணுகா (வயது 30), போஜன் சானுகா(வயது 23).
இவர்களின் ரேணுகா என்பவர் விடுதலைப் புலிகளின் நிதர்சனம் நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட "அம்மா நலமா?" (சிறிரங்ன் முன்பொரு முறை பின்னூட்டத்தில் எழுதிய படம்) என்ற திரைப்படத்தில் முதன்மைக் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
காயமடைந்தவர்கள் போஜன் மாஸ்டரும் அவரது மகனுமாவர்.
இவரின் இன்னொரு மகன் போராளியாயிருந்தது தெரியும்.

இப்படுகொலைகளின் பின்னணியில் இராணுவப்புலனாய்வுத் துறையும் ஈ.பி.டி.பியும் இருப்பதாக நம்பப்படுகிறது.
---------------------------------------
யாழ்ப்பாணத்தில் சாரணர்களின் வளர்ச்சிக்கும் அவர்களின் செயற்பாட்டுக்கும் அடித்தளமாகவும் முக்கிய புள்ளியாகவுமிருந்து செயற்பட்டவர் போஜன் மாஸ்டர். போர்க்காலத்தில் சாரணர்களினதும் முதலுதவிப் பயிற்சி முகாம்களினதும் இரத்ததான முகாம்களினதும் முக்கியத்துவம் யாவரும் அறிந்ததே. 1991 இல் ஆகாயக் கடல்வெளிச் சமரின்போது காயப்பட்டவர்களை யாழ்.மருத்துவனைக்கு எடுத்து வரும் வழிநெடுக மைல்கணக்கில் சாரணர்களே வீதியொழுங்கைப் பேணினார்களென்பது குறிப்பிடத்தக்கது.
-------------------------------------
கொல்லப்பட்ட போஜன் மாஸ்டரின் குடும்பத்தினருக்கு என் ஆழ்ந்த அஞ்சலி.
-------------------------------------
மூலச் செய்தி: புதினம்.

எழுத்துருவைத் தெரிவுசெய்ய.
பாமினி ஆங்கில உச்சரிப்பில்

[மேலுள்ள பெட்டியில் தட்டச்சினால் கீழுள்ள பெட்டியில் ஒருங்குறிக்கு (Unicode) மாற்றப்பட்ட எழுத்துரு கிடைக்கும்]


சுரதா, கிருபாவுக்கு நன்றி


Monday, January 16, 2006

மெல்பேணில் தைத்திருநாள் விழா.

"விக்ரோறிய தமிழ் கலாச்சார கழகம்" (இப்படித்தான் எழுதுகிறார்கள்) என்ற அமைப்பு நடத்திய தைப்பொங்கல் விழா 14.01.2006 அன்று மாலை மெல்பேணில் நடைபெற்றது. இது இக்கழகத்தால் நடத்தப்படும் பதின்மூன்றாவது தைப்பொங்கல் விழாவாகும்.

மாலை ஏழு மணியளவில் தொடங்கிய இந்நிகழ்வில் ஐநூறு வரையான தமிழர்கள் பங்குபற்றினர்.(இத்தொகை நான் எதிர்பாராதது) சிறப்பு விருந்தினர்களாக ஒஸ்ரேலியப் பாராளுமன்ற உறுப்பினரொருவர் உட்பட சில முக்கிய நிலைகளிலிருக்கும் ஒஸ்ரேலியரும் வந்திருந்தனர்.
அண்மையில் மட்டக்களப்பிற் சுட்டுக்கொல்லப்பட் மாமனிதர் ஜோசப் பரராசசிங்கம் அவர்களுக்கு அகவணக்கத்தோடு நிகழ்வு தொடங்கியது. தொடர்ந்து கலைநிகழ்வுகள் நடைபெற்றன.

இடையில் சிறப்பு விருந்தினரான ஒஸ்ரேலிய பாராளுமன்ற உறுப்பினரின் உரை இடம்பெற்றது. ஜோசப் பரராசசிங்கததைப் பற்றிக் கதைத்தார். இரு மாதங்களின் முன் அவர் மெல்பேண் வந்தபோது தன்னை வந்து சந்தித்ததையும் சொல்லி அவரின் உழைப்பு, விருப்பம் என்பவற்றையும் சொன்னார்.

இந்நிகழ்வில் கலாநிதி முருகர் துரைசிங்கம் அவர்கள் எழுதிய "இலங்கைத் தமிழர் வரலாற்று மூலங்கள்" என்ற உலகந்தழுவிய ஆய்வு நூல் வெளியிட்டு வைக்கப்பட்டது. ஏற்கெனவே வன்னியுட்பட வேறுசில இடங்களில் வெளியிட்டப்பட்டிருந்தாலும் ஒஸ்ரேலியாவில் இது இப்போது தான் வெளியிடப்படுகிறது.

அந்நூலாசிரியரின் உரையும், இன்னொருவரின் மதிப்புரையும் இடம்பெற்றது. ஆனால் இவை மிகமிகக் குறுகிய நேரமே நடைபெற்றது. நாட்டியங்களைக் குறைத்து இதற்கு அதிக நேரம் ஒதுக்கியிருக்கலாமென்று பட்டது.

படத்தில் இடப்பக்கமிருப்பவர்தான் நூலின் ஆசிரியர்.
----------------------------------

அப்புத்தகம் ஆங்கிலத்திலும் தமிழிலும் வெளியிடப்பட்டது. அதுவும் ஒரே புத்தகமாக. புத்தகத்தின் முதற்பாகம் ஆங்கிலத்திலும் அதன் தமிழ்வடிவம் அடுத்த பாகமாகவும் அச்சாகியுள்ளது. மிகத்தரமான அட்டைவடிவமைப்புடன் மிகமிக நேர்த்தியாக அச்சிடப்பட்டுள்ளது இப்புத்தகம். தமிழ், ஆங்கிலம் இரண்டையும் சேர்த்து மொத்தம் 368 பக்கங்கள் மட்டுமே கொண்டது இப்புத்தகம்.

மேலோட்டமாகப் பார்த்ததில் அண்மைய சில நூற்றாண்டுகளை மாத்திரமே கருத்திற்கொண்டுள்ளதாகப் படுகிறது. அதாவது பழைய காலத்துக்குச் சென்று வரலாற்றைத் தோண்டாமல், மிகக்கிட்டவாக நிகழ்ந்தவற்றைத் தொகுத்துள்ளதாகப்படுகிறது. அவரே குறிப்பிடுவதைப்போல் "இலங்கைத் தமிழரின் நவீன அரசியல் வரலாறு" என்ற நிலையில்தான் இப்புத்தகம் ஆக்கப்பட்டுதாக நினைக்கிறேன். முழுதும் படித்தால்தான் புரியும்.

இப்புத்தகம் ஈராண்டுகால முயற்சியென்று சொன்னார்கள். இதற்காக பல்வேறு நாடுகளுக்கும் நூலகங்களுக்கும் சென்று ஆராய்ந்ததாகச் சொல்லப்படுகிறது. குறிப்பாக ஐரோப்பிய, அமெரிக்க நூலகங்களில் பெருமளவு நேரம் செலவழிக்கப்பட்டுள்ளது. யாழ் நூல்நிலைய எரித்தழிப்போடு ஈழத்தமிழரின் முக்கிய வரலாற்று அத்தாட்சிகளும் அழிந்தன என்பதைக் குறிப்பிடுகிறார்.

இடையில் பணப்பற்றாக்குறை வந்து திண்டாடியபோது, சிலர் உதவியுள்ளார்கள். வானொலியில் இத்திட்டம் பற்றிய நிகழ்ச்சிகள் நடைபெற்றுள்ளன. இதில் அவர் சொல்லும் க.பிரபா (இளங்கல்விமான், இன்பத்தமிழ் வானொலி அறிவிப்பாளர்) என்பவர் தற்போது சிட்னியிலிருந்து வலைப்பதியும் கானா.பிரபா தானா என்று தெரியவில்லை.

ஆசிரியரே சொன்னதுபோல, இது முழுமையற்ற முயற்சிதான். தனியொருவனால் எல்லாவற்றையும் ஆராய்ந்து முடிக்க முடியுமென்பது இயலாதது. இதுக்கொரு குழு அமைத்து மிகவிரிவான ஆராய்ச்சிகளோடு ஆக்கங்கள் வெளியிடப்படவேண்டும்.

இப்புத்தகம் பற்றி விடயமறிந்தவர்கள் யாராவது ஒரு விமர்சனம் செய்யலாமே?
---------------------------------
இறுதியில் விழா கொத்துரொட்டியோடு இனிதே நிறைவுற்றது.
---------------------------------
படங்கள்:
பெரிதாய்ப்பார்க்க படத்தின் மேலழுத்தவும்.

எழுத்துருவைத் தெரிவுசெய்ய.
பாமினி ஆங்கில உச்சரிப்பில்

[மேலுள்ள பெட்டியில் தட்டச்சினால் கீழுள்ள பெட்டியில் ஒருங்குறிக்கு (Unicode) மாற்றப்பட்ட எழுத்துரு கிடைக்கும்]


சுரதா, கிருபாவுக்கு நன்றி


Sunday, January 15, 2006

தமிழர் திருநாள் வாழ்த்துக்களும் சில நினைவுகளும்

வலைப்பதியும் அன்பர்கள் அனைவருக்கும் அவர்தம் குடும்பத்தினருக்கும் தமிழர் திருநாள் வாழ்'த்'துக்கள்.


இங்கே வந்தபின் கடந்த வருடமும் இவ்வருடமும் நான் பொங்கவில்லை. கடந்தவருடம் சுனாமிச் சூழலில் பொங்க வேண்டுமென்று தோன்றவில்லை. இவ்வருடமும் ஏனோ தோன்றவில்லை.

ஊரில் பொங்கல் வெகு விமரிசையாகவே கொண்டாடப்படும். எங்கள் குடும்பம் கிறிஸ்தவக் குடும்பமென்றாலும் எல்லோரையும் போலவேதான் எங்களுக்கும் இந்நாள். 1990 இல்தான் யாழ்ப்பாணத்தில் தேவாலயங்களில் பொங்கல் கொண்டாடப்படத் தொடங்கியதென்று நினைக்கிறேன். ஆலயத்துக்குச் சென்றுகொண்டிருந்த சிறுவயதில் இவற்றிற் பங்கெடுத்த ஞாபகங்கள் சுவாரசியமானவை. பொங்கற்றினத்தன்று சிறப்புத் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்படும். பெரிய கிடாரங்களில் 'புக்கை' பொங்கப்படும். பின் திருப்பலி முடிய அனைவருக்கும் வழங்கப்படும். அதைத் தின்றுகொண்டு வீட்டுக்கு வந்தால் அக்கம்பக்கத்திலிருந்தும் வீட்டுக்குப் பொங்கல் வரும். (அப்போதெல்லாம் எங்கள் வீட்டிற் பொங்குவதில்லை.)

முதலாவது இடப்பெயர்வின் பின்தான் எங்கள் வீட்டிலும் பொங்கத் தொடங்கினோம். கோலம் போடுவதிலிருந்து எல்லாமிருக்கும். ஆனால் பிள்ளையார் பிடிப்பது, குறிப்பிட்ட திசையில் (கிழக்கென்று நினைக்கிறேன்) பொங்கிவழிய வேண்டுமென்று எதிர்பார்ப்பது (அதை உறுதிப்படுத்த அத்திசையில் பானையைச் சற்றுச் சரித்துவைப்பது:-)) மற்றும் தேவாரம் பாடுவது என்பவை மட்டும் கிடையா. (இந்தியாவைப் போற் குலவையிடுவது ஈழுத்தில் இல்லையென்று நினைக்கிறேன்)

அப்போது பட்டாசுக்கள் இல்லை. ஆனால் அந்தநேரத்தில் நாங்கள் பட்டாசு போல சத்தம் வரக்கூடிய மாதிரி ஒரு வெடி செய்து வெடிக்க வைப்போம். மெல்லிய அலுமினியக்குழாயுள் தீக்குச்சி மருந்தை நிறைத்து இருபக்கமும் அடைத்துவிட்டு நெருப்புத்தணல் மீது போட்டுவைத்துவிட்டால் அண்ணளவாக இருபது வினாடிகளில் வெடிக்கும். அதையே சிரட்டையோ சிறு பேணியோ கொண்டு மூடிவிட்டால் பெரிய சத்தம் வரும். அப்போது வானொலி திருத்தும் கடைகளிற் சென்று பழைய வானொலி அன்ரனாக்களை வாங்கிவந்து அவற்றைக் கொண்டே இந்த வெடிகளைச் செய்வோம்.
பொங்கலுக்கும் இப்படியான வெடிகளை வெடிக்க வைத்து மகிழ்வோம்.

வன்னி வந்தபின் எனது பொங்கற் கொண்டாட்டங்கள் பெரும்பாலும் நண்பர்களுடனேயே இருந்தன. ஒருமுறை பொங்கலின்போது அங்குநின்ற ஒருத்தனுக்கும் தேவாராம் தெரியாதென்று சொல்லிவிடவே, (அல்லது தெரிந்தும் பாடவிரும்பாமல் அப்படிச் சொல்லிவிட) என்ன செய்வதென்று யோசித்தோம். சரி, தேவாரமில்லாமலே பொங்கலைச் சாப்பிடுவோமென்று முடிவெடுத்தாலும் சிலர் விடுவதாயில்லை. ஏதாவது பாடித்தான் முடிக்க வேண்மென்று பிடிவாதமாய் நின்றனர். சரி, எல்லாருக்கும் பொதுவாக தான் ஒரு பாட்டுப்பாடுகிறேனென்று ஒருவன் தொடங்கினான்.

"ஆதியாய் அனாதியாய் அவதரித்த செந்தமிழ்
அன்புக்கு விளக்கேற்றி அறங்காத்த தெங்கள் தமிழ்
"

என்ற பாட்டைப் (காசி ஆனந்தன் எழுதி சாந்தன் பாடியதென்று நினைக்கிறேன்.) பாடி பொங்கலை உண்டோம். அன்றிலிருந்து அடுத்த இரு வருடங்கள் தேவாரத்தைவிட்டுவிட்டு அந்தப்பாட்டைப் பாடுவதை வழக்கமாகக் கொண்டோம்.

2004 இன் தைப்பொங்கல்தான் ஊரில் நான் கடைசியாகப் பொங்கிய பொங்கல். அன்று சுவாரசியமான சம்பவமொன்று நடந்தது. புக்கையைக் கிண்டிக் கொண்டிருந்த நண்பனொருவன் அகப்பையை அடுப்புக்கல்லின் மேல் சாய்த்து வைத்துவிட்டான். அடுத்ததடவை எடுத்து புக்கையுள் வைத்துக் கிண்டிவிட்டு அகப்பையை வெளியே எடுத்தபோது அகப்பைக்காம்பு மட்டுமே வந்தது. 'சிரட்டை கழன்றுவிட்டதாக்கும்' என்று நினைத்து (அகப்பை வாங்கிய கடைக்காரனையும் திட்டி) உடனே வோறோர் அகப்பையை வைத்துப் பொங்கலை ஒப்பேற்றினோம்.

"டேய் அவிஞ்ச சிரட்டை இன்னும் ருசியா இருக்கும்"
என்று பம்பலடித்துக்கொண்டோம்.
சாப்பிடுவதற்காகப் புக்கையை எடுக்கும்போதும் அச்சிரட்டை வரவேயில்லை. அதை யாரும் கண்டுகொண்டதாகவும் தெரியவில்லை.

சாப்பிடும்போதுதான் நடந்ததென்னவென்று புரிந்தது. ஆங்காங்கே சிறுசிறு கரித்துண்டுகள் கடிபடத் தொடங்கின. ஒரேயொரு விளிம்பு கருகிய சிரட்டைத் துண்டொன்று அகப்பட்டது. அகப்பையை அடுப்புக்கல்லின்மேல் வைக்கும்போது வெப்பத்துக்கு அச்சிரட்டை கருகிவிட்டது (எரியவில்லை). அடுத்தடவை புக்கையைக் கிண்டும்போது அது உடைந்துநொருங்கிவிட்டது.
-----------------------------------------------

வன்னியில் கோயில்களில் பொங்கல் கொண்டாடப்படுகிறதோ இல்லையோ போராளிகளின் முகாம்களில் அது கொண்டாடப்படும். முகாம் வாசலில் பெரிதாகக் கோலம்கூடப் போடுவார்கள். சண்டைக்காலத்தில் களமுனையிற்கூட பொங்குவார்களென்று கேள்விப்பட்டேன். கடந்தவருடம் பெண்போராளிகளின் முகாமொன்றில், பொங்கற்றிருநாளன்று எடுக்கப்பட்ட படங்களிவை.



படஉதவி: அருச்சுனா.

-------------------------------------------
இன்று கிளிநொச்சியில் மாபெரும் பொங்கல் விழா விடுதலைப்புலிகளால் நடத்தப்படுகிறது. விடுதலைப்புலிகளின் நிதித்துறை இவ்விழாவை ஒழுங்குசெய்துள்ளது.


கிளிநொச்சி மத்திய மைதானத்தில் இவ்விழாவுக்கான மேடையமைக்கப்பட்டுள்ளது. இன்று காலை இவ்விழா தொடங்குமென்று அறிவிக்கப்பட்டுள்ளது. இம்மைதானத்தைச் சூழவுள்ள பகுதிகளும் அலங்காரவளைவுகள் சகிதம் அலங்கரிக்கப்பட்டுள்ளன.
இந்நிகழ்வில் பேச்சுக்கள், கருத்தரங்கு என்பவற்றுடன், மாலையில் கலைநிகழ்வுகள் வானவேடிக்கைகள் என்பனவும் நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
--------------------------
தகவல், படங்கள்: சங்கதி.


எழுத்துருவைத் தெரிவுசெய்ய.
பாமினி ஆங்கில உச்சரிப்பில்

[மேலுள்ள பெட்டியில் தட்டச்சினால் கீழுள்ள பெட்டியில் ஒருங்குறிக்கு (Unicode) மாற்றப்பட்ட எழுத்துரு கிடைக்கும்]


சுரதா, கிருபாவுக்கு நன்றி


Tuesday, January 10, 2006

பவளக் கொடி - சிறுவர் பாடல்

வறிய சிறுமியொருத்தியின் கனவும், அது சிதைந்த விதமும் பற்றி சோமசுந்தரப் புலவர் எழுதிய பாடல்.

இதை நாலாம் தரத்திற் படித்ததாக நினைவு.

யாழ்ப்பாணத்தின் வடபகுதியில் இருப்பது பருத்தித்துறை (இலங்கையின் வடமுனையும் இதுதான்). அங்கே 'பவளக்கொடி' எனும் சிறுமியொருத்தி இருந்தாள். அவள் சந்தையில் பால்விற்று வருபவள். அரியமலர், அம்புசம், பூமணி, பொற்கொடி முதிலியோர் அவள் வயதொத்தவர்கள்.

ஒருநாள் பவளக்கொடி சந்தைக்குப் பால்கொண்டு போனாள். வழக்கம்போல பாற்பானையைத் தலையில் வைத்துக்கொண்டு சென்றாள். வழியில் தனக்கேயுரியபடி மனக்கோட்டை கட்டிக்கொண்டு சென்றாள். அவளின் கற்பனைக்கோட்டை எப்படியிருந்ததென்றும் இறுதியில் அது எப்படி இடிந்தது என்றும் பாடலிற் சொல்கிறார் புலவர்.

பருத்தித்துறை யூராம்
பவளக்கொடி பேராம்
பாவைதனை யொப்பாள்
பாலெடுத்து விற்பாள்
அங்கவட்கோர் நாளில்
அடுத்ததுயர் கேளிர்!

பாற்குடஞ் சுமந்து
பையப்பைய நடந்து
சந்தைக்குப் போம்போது
தான்நினைந்தாள் மாது:
"பாலையின்று விற்பேன்
காசைப்பையில் வைப்பேன்"

முருகரப்பா வீட்டில்
முட்டைவிற்பாள் பாட்டி
கோழிமுட்டை வாங்கிக்
குஞ்சுக்குவைப் பேனே



புள்ளிக்கோழிக் குஞ்சு
பொரிக்குமிரண் டைஞ்சு
குஞ்சுகள் வளர்ந்து
கோழியாகும் விரைந்து
விரந்துவளர்ந் திடுமே
வெள்ளைமுட்டை யிடுமே

முட்டைவிற்ற காசை
முழுதுமெடுத் தாசை
வண்ணச்சேலை சட்டை
மாதுளம்பூத் தொப்பி
வாசனை செருப்பு
வாங்குவேன் விருப்பு

வெள்ளைப்பட் டுடுத்து
மினுங்குதொப்பி தொடுத்துக்
கையிரண்டும் வீசிக்
கதைகள்பல பேசிச்
சுந்தரிபோல் நானே
கடைக்குப்போ வேனே



அரியமலர் பார்ப்பாள்
அம்புசமும் பார்ப்பாள்
பூமணியும் பார்ப்பாள்
பொற்கொடியும் பார்ப்பாள்

சரிகைச்சேலை பாரீர்
தாவணியைப் பாரீர்
வண்ணச்சட்டை பாரீர்
வடிவழகு பாரீர்
என்றுயாரும் புகழ்வர்
என்னையாரோ இகழ்வர்?

'பாரும்பாரும்' என்று
பவளக்கொடி நின்று
சற்றுத்தலை நமிர்ந்தாள்
தையலென்ன செய்வாள்?

பாலுமெல்லாம் போச்சு
பாற்குடமும் போச்சு
மிக்கதுய ரோடு
வீடுசென்றாள் மாது
**கைக்குவரு முன்னே
நெய்க்குவிலை பேசேல்.**
---------------------------------
மேற்கூறிய பாடலில் கவிஞர் இறுதியாகக் கூறும் **அறிவுரை** மட்டில் எனக்கு உடன்பாடில்லை. அதுவும் சிறுவர்களுக்குச் சொல்லப்படும் அறிவுரையாக இது பொருந்தாது.
--------------------------------

நன்றி: சோமசுந்தரப் புலவரின் சிறுவர் பாடல்கள்


எழுத்துருவைத் தெரிவுசெய்ய.
பாமினி ஆங்கில உச்சரிப்பில்

[மேலுள்ள பெட்டியில் தட்டச்சினால் கீழுள்ள பெட்டியில் ஒருங்குறிக்கு (Unicode) மாற்றப்பட்ட எழுத்துரு கிடைக்கும்]


சுரதா, கிருபாவுக்கு நன்றி


Saturday, January 07, 2006

புளொக்கர் கணக்கின்றிப் பின்னூட்டமிடுவோருக்கு.

புளொக்கரிலுள்ள பின்னூட்ட முறையினைப் பயன்படுத்தாமல் எழுத்துரு மாற்றி மூலம் பின்னூட்டமளிக்கும் வசதி எனது வலைப்பக்கத்தில் உள்ளது. யுனிகோட்டில் எப்படி தட்டச்சுவதென்று தெரியாதவர்களுக்கு வசதியாக இது அமைக்கப்பட்டது. எழுத்துருமாற்றியாகவும் செயற்படும் இதைப் பலர் சரியாகப் பயன்படுத்துகின்றனர். இருந்தபோதும் சிலர், எப்படிப் பயன்படுத்துவதென்று தெரியாமல் தவறாகப் பின்னூட்டமிடுகின்றனர். ஆகவே தேவையற்ற வகையிற் சில பின்னூட்டங்கள் வருகின்றன. அவற்றிற் பலவற்றை அழித்தும், 'எங்கே வசந்தன் கருத்துச் சுதந்திரத்தைக் குழிதோண்டிப் புதைத்துவிட்டதாக' மற்றவர்கள் நினைத்து விடுவார்களோவென்று பயந்த தருணங்களில் அழிக்காமலும் இருந்துள்ளேன்.

சரியான முறையில் அவ்வசதியைப் பயன்படுத்தாவிட்டால் "undefined" என்ற சொல் மட்டுமே பின்னூட்டமாக வெளிப்படும். எப்போதாவது இருந்துவிட்டு இப்படியான பின்னூட்டங்கள் வந்துகொண்டிருக்கும். இன்று கொஞ்சம் அதிகமாகிவிட்டது. அதற்குக் காரணமும் இப்போதுதான் புரிந்தது.

தினமலரில் இன்று "இலவு காத்த கிளி" பதிவைப்போட்டு, என் வலைப்பக்கத்தின் இணைப்பு வந்துள்ளது. (அதுவும் ஒரு பின்னூட்டத்தின்மூலம் தான் தற்போது தெரியவந்தது).அதன்வழி வந்த புதியவர்கள் பலர் பின்னூட்டமிட முயற்சித்ததன் விளைவுதான் இதுவென்று நினைக்கிறேன். எனவே இவ்வசதியைப் பயன்படுத்திப் பின்னூட்டமிடல் குறித்த சிறுவிளக்கம்.

பின்னூட்டப்பெட்டியின் மேல் இரு தெரிவுகள் வழங்கப்பட்டுள்ளன. "பாமினி", "ஆங்கில உச்சரிப்பில்" என்பனவே அவை. இவற்றில் ஏதாவதொன்றை நீங்கள் நிச்சயம் தெரிவுசெய்துகொள்ள வேண்டும். அல்லாத பட்சத்தில் தான் "undefined" என்ற சொல் பின்னூட்டமாக வரும்.

தெரிவுசெய்தபின் மேலுள்ள பெட்டியில் உங்கள் பின்னூட்டத்தைத் தட்டினால் கீழுள்ள பெட்டியில் அது யுனிகோட் எழுத்துருவாக மாறிவரும். பின் 'பெயர்' என்ற இடத்தில் உங்கள் பெயரையிட்டு "கருத்தைப் பதிவு செய்" என்பதை அழுத்தவும்.

நீங்கள் தெரிவுசெய்யும் முறைக்கேற்பவே பின்னூட்டமும் இடவேண்டும். தமிழில் இல்லாமல் ஆங்கிலத்தில் பின்னூட்டமிட வேண்டுமானால் எதையும் தெரிவுசெய்யாது, நேரடியாகவே இராண்டாவது பெட்டியில் அங்கிலத்தில் எழுதவும்.

எவ்வளவு பேருக்குப் புரிகிறதோ இல்லையோ சொல்லவேண்டிய கடமைக்குச் சொல்லியாச்சு:-)


எழுத்துருவைத் தெரிவுசெய்ய.
பாமினி ஆங்கில உச்சரிப்பில்

[மேலுள்ள பெட்டியில் தட்டச்சினால் கீழுள்ள பெட்டியில் ஒருங்குறிக்கு (Unicode) மாற்றப்பட்ட எழுத்துரு கிடைக்கும்]


சுரதா, கிருபாவுக்கு நன்றி


Thursday, January 05, 2006

இலவு காத்த கிளி - பாடல்

ஒன்றுக்காகக் காத்திருந்து ஏமாந்துபோகும் சந்தர்ப்பத்தைக் குறிக்க இச்சொற்றொடர் பயன்படுத்தப்படுவதுண்டு. சிலர் 'இழவு காத்த கிளி' என்றும் எழுதுவர். ஆனாற் பெரும்பான்மையானோர் இச்சொற்றொடர் உச்சரிப்பில் 'இளவு' என்றே உச்சரிக்கின்றனர். இச்சொற்றொடர் உணர்த்தும் கதையைப் பார்ப்போம்.

கிளியொன்று இலவமரத்திற் குடியிருந்தது. ஒருநாள் அம்மரத்தில் அரும்பு கட்டியது. அதைப்பார்த்த கிளி, 'இது பூவாகி, பிஞ்சாகி, காயாகி, பின் கனியாகும்போது இதை உண்பேன்' என்று தனக்குட் சொல்லிக் கொண்டது. தனக்குள்ளேயே அதை உண்பது தொடர்பான ஆசையை நாளுக்குநாள் அதிகரித்துக்கொண்டது. ஒருநாள் அந்த இலவங்காய் நிறம்மாறிப் பழுக்கத் தொடங்கியது. உடனே கிளி, தன் இனசனத்துக்கெல்லாம் சொல்லி வரவழைத்து பெரிய விருந்து கொண்டாட நினைத்தது. அதன்படி அழைப்பும் அனுப்பிவிட்டுக் காத்திருந்தது. இனசனமும் வந்தது. பழத்தை உண்ணும் கனவிலிருந்த கிளிக்கு பேரிடி விழுந்தது. இலவம் பழம் வெடித்து, பஞ்சு பறந்தது. கிளி மட்டுமன்றி அதன் இனசனமும் ஏமாற்றமடைந்தது.

இந்தக் கதை வெவ்வேறு வடிவங்களில் இருக்கலாம். தெரிந்தவர்கள் மாற்றுக்கதைகளைச் சொல்லலாம்.

தங்கத் தாத்தா சோமசுந்தரப் புலவர், இலவு காத்த கிளியைப் பாட்டிற் சொல்லியிருக்கிறார். அதை இங்கே பதிவாக இடுகிறேன்.

*பொதுளி - நிறைந்து
---------------------------------

செந்தீயின் நாப்போலச் செழுந்தளிர்க ளீன்று
திருமாலின் நிறம்போலப் பசியதழை *பொதுளி
நந்தாத நெடுந்தெருப்போற் கிளைகள்பல வோச்சி
நடுக்கட்டி லோரிலவ மரம்வளர்ந்த தன்றே


மஞ்சுதொட வளர்ந்துவந்த விலவமர மதனில்
மரகதமா மணிபோலப் பசுமைநிறம் வாய்ந்த
கொஞ்சுமொழிக் கிஞ்சுகவா யஞ்சுகமொன் றினதே
குடியிருந்து நெடுநாளாய் வாழ்ந்துவந்த தன்றே


அங்கொருநா ளிலவமர மரும்புகட்டக் கண்டே
அலராகிப் பிஞ்சாகிக் காயாகிக் கனியும்
இங்கிதனைக் கவ்வியெடுத் தென்காலே கரமாய்
ஏந்திமகிழ்ந் தேபுசிப்பே னெனநினைந்த தன்றே


காலையிலே யெழுந்துசெயுங் கடமைகளை முடித்தே
கடவுளடி கைதொழுது கதிரெடுக்கப் போகும்
மாலையிலே திரும்பிவந்து மற்றதனைப் பார்த்து
வாயூறிக் கனியாக வரட்டுமென மகிழும்


எண்ணுமலர் பிஞ்சாகிக் காயாகித் தூங்க
இனியென்ன பழுத்துவிடு மெடுத்துண்பே னென்றே
கண்ணையிமை காப்பதுபோல் நாடோறும் நம்பிக்
காத்துவந்த திரவுபகல் காதலித்துக் கிளியே


வறியதொரு மகன் குதிரைப் பந்தயத்திற் காசு
வந்துவிழும் வந்துவிழு மென்று மகிழ்வாக
பிறிதுநினை வொன்றுமின்றி யாசைமிகு கிள்ளைப்
பிள்ளைமகிழ்ந் திருந்ததங்கே பேணியதைப் பார்த்தே


நன்றுவரும் பழமெடுத்து நானுமின சனமும்
நயந்துவிருந் தருந்துகின்ற நல்லபெருந் திருநாள்
என்றுவரு மின்றுவரும் நாளைவரு மென்றே
எண்ணியிருந் ததுமலடு கறக்கவெண்ணு வார்போல்


பச்சைநிறம் மாறியந்தப் பழம்பழுத்த போது
பைந்தார்ச்செம் பவளவிதழ்ப் பசுங்கிளியும் பார்த்தே
இச்சையுடன் தன்னுடைய வினசனத்துக் கெல்லாம்
என்வீட்டிற் பழவிருந்து நாளையென வியம்பி


துஞ்சாது விழித்திருந்தே யதிகாலை யெழுந்து
சொல்லிவைத் தோரையுங் கூட்டிவரும் போது
பஞ்சாகிக் காற்றுடனே பறந்ததுவே வெடித்துப்
பைங்கிளியார் போற்றிவந்த முள்ளிலவம் பழமே

அந்தோவக் கிளியடைந்த மனவருத்தமெல்லாம்
அளவிட்டுச் சொல்லமுடி யாதுவிருந்த தாக
வந்தகிளை மிகநாணி வெறுவயிற்றி னோடு
வந்தவழி மீண்டதுவே சிந்தைபிறி தாகி


உள்ளீடு சிறிதுமில்லாப் பதர்க்குவையை நெல்லென்
றுரலிட்டுக் குத்தவெறு முமியான வாபோல்
இல்லாத பயன்விரும்பி ஏமாந்த பேரை
இலவுகாத் திட்டகிளி யென்பருல கோரே.

----------------------------------
நன்றி: சோமசுந்தரப் புலவர் - சிறுவர் பாடல்கள்.

எழுத்துருவைத் தெரிவுசெய்ய.
பாமினி ஆங்கில உச்சரிப்பில்

[மேலுள்ள பெட்டியில் தட்டச்சினால் கீழுள்ள பெட்டியில் ஒருங்குறிக்கு (Unicode) மாற்றப்பட்ட எழுத்துரு கிடைக்கும்]


சுரதா, கிருபாவுக்கு நன்றி


Tuesday, January 03, 2006

குளியல்.

என்னடா இவன் குளியல் பற்றி எழுதிறான் எண்டு ஆச்சரியப்படாதேங்கோ. அதைப்பற்றி எழுத ஒவ்வொருத்தருக்குமே நிறைய விசயங்கள் இருக்கும். இஞ்ச இப்ப சரியான வெக்கையா இருக்கிறதால பதிவிலயும் ஒரு குளியல் போட்டா நல்லாயிருக்குமெண்டு நினைச்சு போடுற பதிவிது. இஞ்ச வந்த புதுசில குளியல் தொடர்பில் எனக்கு நடந்த சுவாரசியமான நினைவுகளுக்காக ஒரு பதிவு. (வெளிநாட்டுக்கு வந்த புதுசில பெரும்பாலானவர்களுக்கு இப்படி ஏதாவது நடந்திருக்கலாம்).

யாழ்ப்பாணத்தில அனேகமா வீட்டுக்கொரு கிணறு இருக்கும். சில இடங்களில ரெண்டு வீட்டுக்கொரு கிணறு இருக்கும். சீதனமாக் காணி பிரிக்கேக்க இப்படி கிணறும் பிரிபட்டிருக்கலாம். கிணத்துக்கு நடுவால மதில் கட்டி, இந்தப்பக்கம் பாதிக்கிணறு அந்தப்பக்கம் பாதிக்கிணறு எண்டு இருக்கும். சண்டை சச்சரவில்லாத குடும்பங்களெண்டா ரெண்டு குடும்பப்பொம்பிளையளுக்கும் கிணத்தடியில நல்லாப் பொழுது போகும்.

யாழ்ப்பாணத்தில எங்கட ஊர்ப்பக்கத்தில வீட்டுக்கிணறுகளில துலா பாவிக்கிறது குறைவு. கப்பியும் பாவனை குறைவுதான். எல்லாம் கையால இழுவைதான். தண்ணி மட்டமும் பெரிய ஆளமெண்டில்ல, ஒரு இருவது, இருவத்தஞ்சு அடிக்குள்ளதான் வரும். தொன்னூறில சண்டை தொடங்க முதல் (இரண்டாம் கட்ட ஈழப்போர்) யாழ்ப்பாணத்தில மின்சாரம் இருந்தது. எங்கட வீட்டில பெரிய தொட்டியுமிருந்திச்சு. அக்கம்பக்கத்தில இருக்கிற வயசுபோன நாலைஞ்சு பேர் உட்பட நாங்களெல்லாம் மோட்டர் போட்டு அதில தண்ணியிறைச்சு அள்ளிக்குளிக்கிறனாங்கள். சண்டை தொடங்கி கொஞ்ச நாட்களில மின்சாரம் நிப்பாட்டுப்பட்டிட்டுது. பிறகென்ன? கிணத்தில அள்ளித்தான் குளியல். அண்டைக்குப்பிறகு ஈழத்தை விட்டு வெளிக்கிடும்வரை பெரும்பாலும் கிணத்தில அள்ளித்தான் குளிச்சனான்.



பத்திக்குள்ள நிண்டு குளிச்சாச்சரி. நல்ல சுதந்திரமா கைகால ஆட்டி, ஊத்தை உருட்டி சாகவாசமாக் குளிக்கலாம். கிழமைக்கு ஒருக்காவெண்டாலும் பக்கத்தில இருக்கிற கப்பில போய் முதுகைத் தேய்ச்சு ஊத்தை உருட்டுறது வழக்கம். நண்பர்களோட சேர்ந்து குளிக்கேக்க ஆளாளுக்கு முதுகில ஊத்தை உருட்டி விடுவம். சிலர் பீர்க்கங்காய்த் தும்புக்குச் சீலத்துணி தைச்சு வைச்சிருப்பினம் ஊத்தை உருட்ட. தண்ணியள்ளேக்க ஒரே இழுவையில வாளியைப் பிடிக்கிறது எண்டும், ஆர் ஆகக்குறைஞ்ச இழுவைகளில வாளியைப் பிடிக்கிறதெண்டும் நண்பர்களுக்குள் போட்டிகூட நடப்பதுண்டு. பத்தியில் பாசி பிடித்திருந்தால் அடிக்கடி வழுக்கி விழுந்தெழும்புவதும் சுவாரசியம்தான்.

யாழ்ப்பாணத்துக்குள்ளயே முதலாவது இடப்பெயர்வுக்குப்பிறகுதான் துலாவிலயும் கப்பியிலயும் தண்ணியள்ளிக் குளிக்கத் தொடங்கினன். எங்கட ஊரில பெரும்பாலும் கப்பியோ துலாவோ பாவிக்கிறேல எண்டது அந்த ஊர்க்காரருக்குப் பெரிய ஆச்சரியம்தான். இப்ப யோசிச்சுப்பாத்தா என்ர ஊர் பற்றி எனக்கே ஆச்சரியமாத்தான் கிடக்கு. துலாவில அள்ளுறது ஆழக்கிணறுகளுக்கு ஒப்பீட்டளவில் இலுகுவாயிருந்தது. ஆனாலும் துலா அங்க இஞ்சயெண்டு உலாஞ்சிக்கொண்டும் கிறிச் கிறிச் எண்டும் சத்தம் போட்டுக்கொண்டிருந்தா எரிச்சல்தான் வரும். கப்பி சத்தம் போடாம, கயிறு இறுகாம, ஒழுங்காச் சுத்திக்கொண்டிருந்தாச் சரிதான்.

வன்னியிலயும் அனேகமாக் கிணத்துக்குளிப்புத்தான். ஆனா, கிணறுகள் கொஞ்சம் அழம். அறுபதடிக் கிணற்றில் சிலமாதங்கள் கப்பியில் அள்ளிக் குளித்திருக்கிறேன். அவ்வப்போது குளத்துக்குளியல், கடற்குளியல் என்றும் பொழுதுபோகும். (யாழ்ப்பாணத்தில் கடற்கரையோடே வாழ்ந்திருந்தாலும் நானறிய ஐந்தோ ஆறுமுறைதான் கடற்குளித்திருக்கிறேன்.)

ஒஸ்ரேலியாவுக்கு வந்துதான் குளியலறைக் குளிப்பு. முதல்நாளே அதிர்ச்சி. ஒரு கண்ணாடிக்கூண்டைக் காட்டி அதுக்குள்ளதான் குளிக்க வேணுமெண்டாங்கள். இரண்டரை அடி நீள அகலம் கொண்ட சதுரக்கூண்டு. அப்பப்ப ஏதாவது ஆங்கிலப்படத்தில இப்பிடியொரு கூண்டைப் பாத்திருந்தாலும் அப்பவெல்லாம் சந்தேகம் வந்ததேயில்லை. இதென்னெண்டு இதுக்குள்ள நிண்டு குளிக்கிறதெண்டு யோசிச்சாலும், எல்லாரும் இதைத்தானே பாவிக்கிறாங்களெண்டு துணிஞ்சு இறங்கினன். அண்டையில இருந்து கொஞ்சநாட்களுக்கு நான் குளிக்கேக்க படார் படார் எண்டு சத்தம் கேட்டுக்கொண்டிருந்திச்சு. ஊர்ப்பழக்கத்தில கையக்கால கொஞ்சம் சுதந்திரமா அசைச்சதுதான் பிரச்சினை. முதுகில தேய்க்கக் கையத்தூக்கினா 'படார்', குனிஞ்சு காலத்தேச்சா 'படார்' எண்டு கொஞ்சநாளா ஒரே சத்தம்.

அதுமட்டுமில்லை, சவர்க்காரக்கட்டி வைக்கிறதுக்கிருக்கிற தட்டு என்ர முழங்கையை முதல்நாளே பதம் பார்த்து ரத்தம் சிந்த வைத்தது. அடுத்தடுத்த நாட்களிலும் தொடர்தாக்குதலால் ஒரு புண்ணே வந்துவிட்டது. முதல்நாள் என்னைக் குளிக்க விட்டிட்டு வெளியில காத்திருந்து சிரிச்சாங்கள். இவ்வளவுக்கும் எனக்கு சராசரி உடம்புதான். கொஞ்சம் மொத்தமா இருக்கிற ஆக்கள் என்ன செய்வினம் எண்டு ஆச்சரியப்பட்டிருக்கிறன்.
சரி, இந்தவீட்டதான் குளியற்கூண்டை இப்பிடிச் சின்னனாக் கட்டிப்போட்டாங்களாக்குமெண்டு வேற நாலைஞ்சு வீடுகளுக்கும் போய்ப்பாத்தன். எல்லா இடத்திலயும் இதுதான் அளவு. இதுதான் நியம அளவாம்.

அதவிட குளிர்நீரையும் சுடுநீரையும் சரியான அளவில் திறந்துவிடுவதில் கொஞ்சநாள் சுவாரசியமாகப் போனது. திடீர்திடீரெண்டு ஏதோவொரு நீர் கூடிக்குறையும். சரியானபடி பழக்கத்துக்குவர கொஞ்சநாள் எடுத்தது. திருப்தியாக ஊத்தை உருட்டிக் குளித்ததில்லை. ஒருத்தன் மட்டுமே குளிக்கலாமெண்டதால முதுகு தேய்க்கவும் ஆளில்லை. முதுகு உரஞ்ச மாற்றுவழியான மரக்குத்தியும் இல்லை. (கண்ணாடிக்குப் பதில் சொரசொரப்பா ஒரு சுவர் வச்சிருந்தாலும் உபயோகமாயிருந்திருக்கும்)

ஊரில கால் தேய்க்கிறதுக்கெண்டு ஒரு கல் வைச்சிருப்பம். அது அனேகமா சொரசொரப்பான கொங்கிறீட் கல்லா இருக்கும். ஒரு சாய்வா வைச்சிருக்கிற அந்தக்கல்லில பாதத்தை நல்லாத் தேய்ச்சு ஒரு மாதிரி மஞ்சளாக்கிப்போடுவம். இஞ்ச வந்தப்பிறகு கால்தேய்க்க ஆசை வந்திச்சு. பாதத்தின்ர நிறமும் கொஞ்சம் மாறியிருந்ததால அடிக்கடி கால்தேய்க்க வேணுமெண்டு முடிவெடுத்தன். ஆனா எங்க தேய்க்கிறது? அதுசம்பந்தமா விசாரிச்சதில, கால்தேய்க்கவெண்டே சவர்க்காரக்கட்டிபோல கல் விக்கிதெண்டு சொல்லிச்சினம். சரியெண்டு அந்தக் கல்லும் வாங்கியந்தாச்சு. காலில ஊத்தை போச்சுதோ இல்லையோ கல்மட்டும் தேஞ்சுது. அதுவும் ஒருக்கா கால்தேய்ச்சா ஒரு கல் கரையுது. ஆக ஒரு குளியலுக்கு ஒரு கல் தேவையெண்ட நிலைமை விளங்கினதால அந்தத் திட்டத்தைக் கைவிட்டன். பிறகு வேற ஓரிடத்தில எடுத்த கூளாங்கல்தான் இண்டை வரைக்கும் எனக்குக் கால் தேய்க்குது.

இப்ப இஞ்ச கடும் வெக்கை. 2005 இன்ர கடசி ரெண்டு நாளும் தாங்க ஏலாத வெக்கை. 45 பாகை செல்சியஸ் இல வெக்கை. அந்த நாட்களில வெளிய போன என்ர தவம் கலைஞ்சு போடுமெண்டதால வெளியிலயும் வெளிக்கிடேல:-) இந்த வெக்கைக்கு குளியல் பற்றி ஒரு பதிவுபோடலாமெண்டு போட்டிருக்கு.
------------------------------------

எழுத்துருவைத் தெரிவுசெய்ய.
பாமினி ஆங்கில உச்சரிப்பில்

[மேலுள்ள பெட்டியில் தட்டச்சினால் கீழுள்ள பெட்டியில் ஒருங்குறிக்கு (Unicode) மாற்றப்பட்ட எழுத்துரு கிடைக்கும்]


சுரதா, கிருபாவுக்கு நன்றி


© 2006  Thur Broeders

________________