Monday, May 29, 2006

தமிழர்களை ஆதரித்தலால் கொலை அச்சுறுத்தல்

ஒஸ்ரேலியப் பாராளுமன்ற உறுப்பினர்.

இன்று (29.05.06) கன்பராவில் நாடாளுமன்றத்தின் முன் நடந்த ஈழத்தமிழரின் உரிமைக்குரல் நிகழ்வில், கலந்து கொண்டு உரையாற்றிய ஒஸ்ரேலிய நடுவண் அரசின் பாராளுமன்ற உறுப்பினரான Murphy MP உரையாற்றிய போது,

"ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாகப் பேசியதற்காக இலத்திரனியல் ஊடகமூடாக எனக்குக் கொலை அச்சுறுத்தல்கள் வந்தன. வெளிநாட்டின் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவருக்கே இப்படி அச்சுறுத்தல் என்றால் அந்த நாட்டில் இருப்பவர்களுக்குரிய பிரச்சினையைப் புறம்தள்ள முடியாதென்பது நன்கு புலப்படுகிறது"
என்றார்.

இவர் மேலும் பேசுகையில்,

"01.06.1999 அன்று ஒஸ்ரேலிய நாடாளுமன்றத்தில் நான் நான்கு தீர்மானங்களை முன்வைத்துப் பேசினேன்.
*வடக்கு - கிழக்கிலிருந்து சிறிலங்கா அரசபடை வெளியேற வேண்டும்.
** தமிழர் பகுதிகள் மீதான பொருளாதாரத் தடை உடனடியாக நீக்கப்பட வேண்டும்.
***தமிழருக்குரிய அரசியல் உரிமைகள் அங்கீகரிக்கப்பட வேண்டும்.
****ஐ.நா சபையின் சாசனத்தின் கீழ், தமிழர்களுக்குரிய சுயநிர்ணய உரிமை உறுதிப்படுத்தப்படவும், அவர்களுக்கான பிரிந்து தனித்துச் செல்லும் உரிமை அங்கீகரிக்கப்படவும் வேண்டும்.


இன்று ஏழு ஆண்டுகளின் பின்னும் அந்த நிலையில் மாற்றமில்லை. இன்றும் உங்களுக்காக அதே கொள்கைகளை வைத்தே நான் பேசுகிறேன்.

நீங்கள் நடக்கும் நிகழ்வுகளையிட்டு அதிகம் கவலைப்படத் தேவையில்லை. ஏனென்றால் நீங்கள் உங்களுக்காக குரல்தரவல்ல வலுவான சக்தியொன்றைப் பின்னணியிற் கொண்டிருக்கிறீர்கள். ஆகவே நீங்கள் கலைப்படத் தேவையில்லை.
என்றார்.

மேர்சி அவர்கள் நீண்டகாலமாக ஈழத்தமிழர் பிரச்சினையில் வெளிப்படையாகப் பேசி வருபவர். பாராளுமன்றத்திலும் இவை தொடர்பாக பேசி வருபவர். அதனால் பாராளுமன்றத்திலும் எதிர்ப்புக்குள்ளானவர்.

இந்நிகழ்வு பற்றி கொஞ்சம் விரிவான பதிவொன்றை முன்னிட்டுள்ளேன்.

_____________________________________________

எழுத்துருவைத் தெரிவுசெய்ய.
பாமினி ஆங்கில உச்சரிப்பில்

[மேலுள்ள பெட்டியில் தட்டச்சினால் கீழுள்ள பெட்டியில் ஒருங்குறிக்கு (Unicode) மாற்றப்பட்ட எழுத்துரு கிடைக்கும்]


சுரதா, கிருபாவுக்கு நன்றி


பெரு வெற்றியில் முடிந்த கவன ஈர்ப்புப் போராட்டம்.

உலகின் பல நாடுகளிலும் இன்று (29.05.2006) திங்கட்கிழமை ஈழத்தமிழர்களால் கவன ஈர்ப்புப் பேராட்டம் நடைபெறுகிறதென்பது யாவரும் அறிந்ததே. (அறியாட்டி இப்பவாவது அறிஞ்சு கொள்ளுங்கோ.)

அவ்வகையில் ஒஸ்ரேலியாவின் தலைநகர் கன்பராவில் நாடாளுமன்றத்தின் முன் இன்று ஈழத்தமிழர்களால் நடத்தப்பட்ட போராட்டம் வெற்றிகரமாக நடந்து முடிந்துள்ளது. சுமார் இரண்டாயிரம் வரையான மக்கள் ஆர்வத்தோடு கலந்துகொண்ட இப்போராட்டம் மிகச்சிறப்பாக ஒழுங்கமைக்கப்பட்டு நிறைவு பெற்றது.

இதில் பல முக்கிய உரைகள் இடம்பெற்றன. குறிப்பிட்டுச் சொல்ல வேண்டிய ஓர் உரை, மருத்துவக் கலாநிதி பிறயன் செனிவிரட்ன அவர்களுடையது.
முன்னாள் சிறிலங்கா அரசதலைவர் சந்திரிக்கா குமாரதுங்கவின் உறவினரும் நீண்டகாலமான ஈழத்தமிழரின் உரிமைக்காக உரத்துக் குரல் கொடுப்பவருமான இவரின் உரை மிகத் தீவிரமாகவும் நேர்த்தியாகவும் இருந்தது.
அவரது உரையின் சில பகுதிகள்:

"தனிநாடொன்றைப் பிரிக்க முடியாத நிலையில்தானா இலங்கை இருக்கிறது? அப்படிச் சொல்லுவதற்கு வலுவான காரணமேதாவது இருக்கிறதா? இன்று ஐக்கிய நாடுகள் சபையால் ஏற்றுக்கொள்ளப்பட்ட நாடுகளில் ஈழத்தை விடவும் நிலப்பரப்பாற் குறுகிய நாடுகள் நிறைய. தனிநாடாவதற்கு ஈழத்தைவிடவும் காரணகாரியங்கள் குறைவுடைய முப்பது நாடுகள் வரை தனிநாடாகிவிட்டன.

"புலிகள் தனிநாடு உருவாக்கப் போராடுகிறார்கள், அவர்களை விடக்கூடாது என்று புலம்புவதில் எந்தப் பயனுமில்லை. ஏனென்றால் ஏற்கனவே வலுவான, திறமையான அரசாட்சியொன்றைப் புலிகள் நடத்துகிறார்கள். பல ஆண்டுகளாக நடத்துகிறார்கள். மக்களும் ஏற்றுக்கொண்டுள்ளார்கள். இனித்தான் அவர்கள் தனிநாடு அமைக்கப்போகிறார்கள் என்றும் அதை நடத்த விடக்கூடாதென்றும் புலம்புவது வீண்.

"இன்றைய நிலையில் இலங்கைத் தீவில் நடக்கும் பிரச்சினைக்கு என்ன தீர்வு? ஒரே தீர்வுதான் இருக்க முடியும். அது தமிழர்கள் தனிநாடாகப் பிரிந்து செல்வதுதான்.
அப்படிப் பிரிந்து போகாமல் பேச்சு மூலம் தீர்வொன்றை எட்டுவது சாத்தியம் என்று சிலர் கருதலாம். ஆனால் அந்த நிலையைக் கடந்து நீண்டகாலமாகிவிட்டது. இனி ஒருபோதும் சாத்தியப்படாத தீர்வொன்றைப் பற்றிப் பேசிக்கொண்டிருப்பதோ அதை நோக்கிச் செயற்படுவதாக நாடகமாடுவதோ ஏமாற்று வேலை.


"இலங்கைத் தீவில் புழுத்துப் போயிருக்கும் சிங்கள - பெளத்த பேரினவாதத்தைப் பற்றி உலகம் தெரியாதது போல் மெளனம் காக்கிறது. என் மாமனாரான S.W.R.D பண்டாரநாயக்காவைக் கொன்றவர் யார்? புலியா? தமிழனா? ஒரு சிங்களவன். ஒரு பெளத்தன். ஒரு பெளத்த பிக்கு.

"சிறுவர் படை சேர்ப்புப் பற்றி அரசாங்கம் ஒருதலைப்பட்டசமாக மிகைப்படுத்திப் பிரச்சாரம் செய்கிறது. அதைத் தவறென்று சொல்லி ஒரு தரப்பைக் குற்றம் சாட்ட யாருக்கு அருகதை இருக்கிறது? யாழ்ப்பாணத்தில் மட்டும் முப்பது பாடசாலைகள் இராணுவ ஆக்கிரமிப்பால் செயலிழந்துள்ளன. ஏராளமான பகுதி நிலப்பரப்பு இராணுவத்தால் பறிக்கப்பட்டுள்ளது. அதைவிட வறுமை. நாளாந்தம் கொத்துக்கொத்தாக தமிழர்கள் கொல்லப்படுகிறார்கள். இந்த நிலையில் அங்குள்ளவர்களுக்கு ஒரே தெரிவுதான். அது ஆயுதம் தூக்குவது. இதைப் பிழையென்று சொல்ல யாரால் முடியும்?

"நான் புலிகளின் ஆதரவாளன் அல்லன். சிங்களவரின் ஆதரவாளனும் அல்லன். ஆனால் தமிழீழம் என்ற தனியரசைத் தமிழர்கள் அமைப்பதற்கு எப்போதும் ஆதரவானவன். அதுதான் இலங்கைத் தீவுக்குரிய ஓரே தீர்வு என்பதில் அசையாத நம்பிக்கையும் வேட்கையும் கொண்டவன்.
சிங்களத் தரப்பில் யாருக்கும் கருத்தால் எதிர்கொள்ளும் வல்லமையில்லை. என்னோடு வாதிட முடிந்தால் வாருங்கள் வாதிடுவோம்.
"


இன்னொருவரின் உரையும் குறிப்பிடத்தக்கது. ஒஸ்ரேலியப் பாராளுமன்ற உறுப்பினரான Murphy MP உரையாற்றிய போது,

தமிழர்களுக்கு ஆதரவாகப் பேசியதற்காக இலத்திரனியல் ஊடகமூடாக எனக்குக் கொலை அச்சுறுத்தல்கள் வந்தன. வெளிநாட்டின் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவருக்கே இப்படி அச்சுறுத்தல் என்றால் அந்த நாட்டில் இருப்பவர்களுக்குரிய பிரச்சினையைப் புறம்தள்ள முடியாதென்பது நன்கு புலப்படுகிறது
என்றார்.

நிகழ்வில் பெருமளவு இளையவர்கள் உணர்வோடு பங்குபற்றினர். ஈழத்து நிகழ்வுகளில் அக்கறையுடன் செயற்படும், புலிகளை விமர்சிப்பதன் மூலம் தன்னை நடுநிலைமையாகக் காட்டிக்கொள்ளும் ஒருவரிடம் இன்றைய உரிமைக்குரல் நிகழ்வு பற்றிக் கேட்டபோது அவர் சொன்னது:

"பொதுவாக இளைய தலைமுறை பற்றிய பயம் எல்லோரிடமும் இருக்கிறது. போராட்டச் சூழலிலிருந்து மிகவும் விலத்திப் போவதாகவும், குறிப்பிட்ட காலத்தில் போராட்ட ஆதரவுத்தளம் மிகவும் பலவீனப்படும் என்றும் நானுட்பட அனேகம் பேர் கருதினர், கருதுகின்றனர். அதற்கான ஏதுநிலைகள் தான் அதிகம். ஒப்பீட்டளவில் கனடா, இங்கிலந்து என்பவற்றைவிட ஒஸ்ரேலியாவில் இந்த ஆபத்து அதிகமே. ஆனால் இந்தத் தலைமுறை இடைவெளி பற்றிய பயத்தை அசைத்திருக்கிறது இன்றைய நிகழ்வு. அவ்வளவு இலகுவில் தலைமுறை இடைவெளி மூலம் ஒரு பெரும் ஆபத்தை எதிர்நோக்கிவிட மாட்டோம் என்ற நம்பிக்கை வந்திருக்கிறது. தொடர்நது கொண்டு செல்வதில்தான் வெற்றியிருக்கிறது" என்றார்.

ஆம். இன்றைய செய்தியும் அதுதான். தமிழ், ஆங்கிலம் இரண்டிலும் சரளமான புலமையுடைய, தடக்கியென்றாலும் தமிழ் பேசுவதூடாக அடையாளப்படுத்த முனைப்புடைய என்று பலதரப்பட்டதாயிருந்தாலும் ஈழத்து இளந்தலைமுறை பயப்பட்டது போல் விலத்திப் போய்விடவில்லை.

இந்த கவன ஈர்ப்பு, எதிர்ப்புப் போராட்டங்களால் உலகமோ, ஒஸ்ரேலியாவோ மாறப்போவதில்லை. ஆனால் எங்களின் ஒற்றுமையை, உணர்வைப் பேணவாவது இவை அவசியம். குறிப்பாக இளந்தலைமுறையைச் செயற்பாடுள்ளதாக வைத்திருக்க இவை அவசியம்.


அதேநேரம் இளையவர்களின் ஒற்றுமை, பங்களிப்பையிட்டு அதிகம் குதிக்க முடியாது. என்னைப் பொறுத்தவரை, அவர்களைத் திரட்ட, ஒன்றிக்க வைக்க என்று நாங்கள் செய்வதைவிட எதிரியே அதிகம் செய்கிறான். எதிரியே எமது ஒற்றுமையைப் பேண முனைப்புடன் நிற்கிறான்.

இறுதியாக,
உரிமைக்குரல் நிகழ்ச்சி சிறப்பாக நடந்தது. நல்ல ஒழுங்குபடுத்தல். மிகமிகக் குறுகிய காலத்துள் செய்யப்பட்டதென்றாலும் நிறைவானது.
இளையவர்களின் ஒருங்கமைப்பு, அரங்க நிகழ்வு, பதாகைகள் வடிவமைத்தல், முழக்கங்கள் என்று நன்றாக இருந்தது. ஒஸ்ரேலியாவுக்கு சிறிலங்காத் தூதுவராக ஜானக பெரேரா வருவதையிட்டு எதிர்ப்புத் தெரிவித்த நிகழ்வுக்கு அடுத்தபடியாக ஒஸ்ரேலியாவில் ஈழத்தமிழர்களால் நடத்தப்பட்ட பெரும் நிகழ்வு இதுவென்று சொல்லப்படுகிறது. வேலை நாள்; சிக்கலான காலநிலை. இவற்றையும்விட நூற்றுக்கணக்கான மைல்கள் பயணம் செய்து வரவேண்டிய நிலை. ஆனாலும் குழந்தைகள், சிறுவர்கள் என்று பாராமல் வந்து சேர்ந்தார்கள்.

முக்கியமான இன்னும் சில உரைகள் நடந்தன. ஒஸ்ரேலிய பாராளுமன்ற உறுப்பினர் சிலரும் ஆதரவாகவும் ஆக்ரோசமாகவும் பேசினார்கள். பின் இதே பதிவில் சேர்த்தோ தனியாகவோ சிலவேளை எழுதுவேன். மேலதிக படங்களைத் தனியாகத் தருகிறேன். ஒஸ்ரேலியாவில் தான் முதல் நடந்துள்ளது. ஏனைய நாடுகளில் நிகழ்வுகள் முடிந்தபின் அந்நாட்டுப் பதிவாளர்கள் யாராவது பதிவார்கள் என்று நினைக்கிறேன்.

இறுதியாக, சிட்னி வாழ் உறவுகளுக்கு - குறிப்பாக இளையவர்களுக்கு:
"நீங்கள் தானையா ஆக்கள்".











_____________________________________________

எழுத்துருவைத் தெரிவுசெய்ய.
பாமினி ஆங்கில உச்சரிப்பில்

[மேலுள்ள பெட்டியில் தட்டச்சினால் கீழுள்ள பெட்டியில் ஒருங்குறிக்கு (Unicode) மாற்றப்பட்ட எழுத்துரு கிடைக்கும்]


சுரதா, கிருபாவுக்கு நன்றி


Friday, May 26, 2006

பாடகி மாயாவுக்கு அமெரிக்கா தடை

புகழ்பெற்ற ராப் பாடகி மாயா அருட்பிரகாசத்தின் நிகழ்ச்சிக்கு அமெரிக்காவில் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
ஈழத்தைச் சேர்ந்த புலம்பெயர்ந்த பாடகி மாயா அருட்பிரகாசம் MIA என்ற பெயரில் பிரபலமானவர். இவரின் தந்தை அருளர் ஈரோஸ் இயக்கத்தின் மூத்த உறுப்பினராயிருந்தவர்.
ஏற்கனவே மாயா சில இசைநிகழ்ச்சிகளை அமெரிக்காவில் நடத்தியுள்ளார்.

இவரைப் பற்றி சகவலைப்பதிவாளர் டி.சே எழுதியுள்ளார்.
இவரின் நிகழ்ச்சியொன்றைப் பற்றி வாசன்பிள்ளை எழுதியுள்ளார்.

இந்த நிலையில் இப்போது அவர் அமெரிக்கா செல்வதற்கான விசா மறுக்கப்பட்டுள்ளது. இவரது ஈழ ஆதரவுக் கருத்துக்களாலேயே இத்தடை என்று தெரியவருகிறது.

மேலதிக செய்திகளுக்கு.

_____________________________________________

எழுத்துருவைத் தெரிவுசெய்ய.
பாமினி ஆங்கில உச்சரிப்பில்

[மேலுள்ள பெட்டியில் தட்டச்சினால் கீழுள்ள பெட்டியில் ஒருங்குறிக்கு (Unicode) மாற்றப்பட்ட எழுத்துரு கிடைக்கும்]


சுரதா, கிருபாவுக்கு நன்றி


Wednesday, May 24, 2006

புலிகளின் உயர்தளபதி படுகொலை.

கடந்த ஞாயிற்றுக்கிழமை (21.05.06) அன்று பிற்பகல் 5.30 மணியளவில் விடுதலைப்புலிகளின் உயர்மட்டத் தளபதியொருவர் படுகொலை செய்யப்பட்டிருக்கிறார்.
கேணல் ரமணன் எனப்படும் நாற்பது வயதான "கந்தையா உலகநாதன்" எனும் விடுதலைப்புலிகளின் உயர்மட்டத் தளபதியே கொல்லப்பட்டவர். யுத்தநிறுத்த ஒப்பந்த காலத்திற் கொல்லப்பட்ட உயர் தளபதி இவராவார்.

ஒட்டுமொத்தமாக புலிகள் இயக்கத்தில் "கேணல்" நிலையில் வீரச்சாவடைந்தவர்கள் இவரையும் சேர்த்து நான்கு பேர்.
கேணல் கிட்டு
கேணல் சங்கர்
கேணல் ராயு ஆகியோர் மற்றவர்கள்.



எண்ணிக்கை ஒன்றுதானென்றாலும் சம்பந்தப்பட்ட தரப்புக்குரிய இழப்பு கொல்லப்படுபவர்களின் தரத்தில் தங்கியுள்ளது. ஓர் இராணுவத் தளபதியின் மீதான கொலை முயற்சிக்கு அதிகம் முக்கியத்துவம் கொடுக்கப்படுவது இதனால்தான். அண்மையில் சரத் பொன்சேகா மீதான கொலை முயற்சிக்குக் கொடுக்கப்பட்ட முக்கியத்துவம் யாவரும் அறிந்ததே.



அவ்வகையில் கேணல் ரமணனின் கொலையும் முக்கியமானது. புலிகள் தரப்புக்குப் பெரிய இழப்பு.



கிழக்கில் கருணாவின் பிரச்சினை வரும்வரை அதிகம் வெளியே பேசப்படாத பெயர் தான் ரமணன். கருணாவை முறியடித்துப் புலிகள் கிழக்கில் காலூன்றியபோது ரமணன் அவர்களின் பெயர் பிரபலமாகத் தொடங்கியது.
இருபது வருடகாலம் புலிகள் இயக்கத்தில் சேவையாற்றியவர்.
1986 ஆம் ஆண்டு உயர்தரப் பரீட்சை தேர்வெழுதிய பின் அமைப்பில் இணைந்தவர்.
சிறிலங்கா, இந்தியப் படைகளுக்கெதிரான களத்திற் போராடியுள்ளார்.
பெரும்பாலான காலப்பகுதி புலனாய்வுப்பணியாக இருந்ததால் அதிகம் பிரபலமாகாத பெயர்.
மட்டக்களப்பில் இராணுவப்புலனாய்வுத் துறைப்பொறுப்பாளராயிருந்த லெப்.கேணல் நிசாம் அவர்களின் வீரச்சாவின்பின் அப்பொறுப்புக்கு நியமிக்கப்பட்டவர்தான் இந்த ரமணன். கருணா பிரச்சினையின் போதும் அதே பொறுப்பு வகித்தவர். குழப்பம் தீர்ந்தபின் மாமுனை-முன்மாரிக்கோட்ட இராணுவத் தளபதியாகவும் பின் மட்டு-அம்பாறை மாவட்டத் துணைத்தளபதியாகவும் நியமிக்கப்பட்டவர்.



கடந்த ஞாயிறன்று புலிகளின் காவலரண்வரிசையைக் கண்காணித்துக் கொண்டு சென்றவேளை பதுங்கிச்சுடப்பட்டுக் கொல்லப்பட்டார்.

சுட்டுக்கொல்லப்பட்ட காலமும் முக்கியமானது. புலிகளின் உயர்மட்டத் தளபதியைக் கொல்வது கிட்டத்தட்ட சரத் பொன்சேகா மீதான தாக்குதலுக்குச் சமன். இப்படியானதொரு தாக்குதலுக்கு புலிகளிடமிருந்து கட்டாயம் பதிலடி கிடைக்கும் என்பது தெரியும். அது 'மட்டுப்படுத்தப்பட்டது' என்ற பெயரில் நடத்தப்படலாம். ஆனால் புலிகளின் உடனடி எதிர்வினையைத் தடுக்கும் காலப்பகுதியைப் படையினர் தேர்ந்தெடுத்துள்ளார்கள்.

அதாவது உயர்தரப்பரீட்சை நடைபெறும் காலப்பகுதி. இதன்மூலம் புலிகள் உடனடியான எதிர்வினையைச் செய்யமுடியாததைப் படையினர் உறுதிப்படுத்திக்கொண்டார்கள். பரீட்சை முடிய ரமணின் கொலைக்கான பதிலடி என்ற பெயரில் புலிகள் தாக்குதல் நடத்துவதற்குக் காலம் கடந்துவிட்டிருக்கும்.

எது எப்படியோ, அந்தப் பெயரில் இல்லையென்றாலும் தாக்குதல் நடத்தப்படப்போவது உறுதி என்பதைக் கணிக்கலாம்.
அதைவிடவும் முக்கியமான சேதியொன்றைச் சொல்கிறது இக்கொலை. அதாவது சண்டை முழு அளவில் தொடங்கிவிட்டது. சண்டை நடந்த காலப்பகுதி போலவே இனி முன்னணிக் காவலரண் வரிசை இருக்கும். நூறு வீதமும் தாக்குதலை எதிர்பார்த்தே இருதரப்புக்களும் இயங்கப்போகின்றன.

*************************************
கருணா குழப்பத்தின் போது போராளிகளையும் மக்களையும் குழப்பமடைய விடாமற் செய்தவர்களில் ரமணனும் பவாவும் முக்கியமானவர்கள் என்று சொல்லப்படுவதுண்டு.
இவர்களில் லெப்.கேணல். பவா, ஒப்பந்தப்படி அரசியல் வேலை செய்தபோது அரசபடையினரின் கட்டுப்பாட்டுப் பகுதியில் வைத்துச் சுட்டுக்கொல்லப்பட்டார்.
*************************************
கேணல் ரமணனுக்கு நான்கு ஆண் சகோதரர்கள். இவர்களில் ஒருவர் ஏற்கனவே போராட்டத்தில் வீரச்சாவடைந்துவிட்டார்.
மிகுதியரில், சகோதரர்கள் இருவரும் தங்கையொருத்தியும் இன்னும் போராட்டத்திற் பங்குகொண்டுள்ளார்கள்.
இவரது குடும்பத்தில்,
ஆண்கள் இருவர் களப்பலியாகிவிட்டனர்.
இன்னும் மூவர் களத்திலே நிற்கின்றனர்
.

*************************************

தளபதிக்கு என் அஞ்சலி.
*************************************

படங்களுக்கு நன்றி: தமிழ்நெற்.

_____________________________________________

எழுத்துருவைத் தெரிவுசெய்ய.
பாமினி ஆங்கில உச்சரிப்பில்

[மேலுள்ள பெட்டியில் தட்டச்சினால் கீழுள்ள பெட்டியில் ஒருங்குறிக்கு (Unicode) மாற்றப்பட்ட எழுத்துரு கிடைக்கும்]


சுரதா, கிருபாவுக்கு நன்றி


Sunday, May 21, 2006

வயிறு குலுங்கச் சிரித்தேன்.

இன்று மெல்பேணில் நிகழ்வொன்று நடந்தது. முடிந்து வந்த வேகத்திலேயே இப்பதிவு வருகிறது.

'ஈழமுரசு' பத்திரிகை நிதியத்துக்காக நடத்தப்பட்ட நகைச்சுவை நிகழ்ச்சியது. ஏற்கனவே சிலநாட்களாக "இவர்கள் புலிகளுக்குத்தான் காசு சேர்க்கிறார்கள். அரசாங்கமே! என்ன பார்த்துக் கொண்டு சும்மா இருக்கிறீர்கள்?" என்று மற்றவர்கள் தங்கள் கடமையைச் சரிவர செய்துகொண்டிருந்தார்கள்.

இன்று அந்நிகழ்வு நடந்தது. சுமார் நான்கு மணித்தியாலங்கள் நடந்த நிகழ்ச்சி. எனக்கு ஆச்சரியம். இப்படியொரு நிகழ்வை நான் எதிர்பார்த்திருக்கவில்லை. அங்கொன்றும் இங்கொன்றுமாகப் பொறுக்கி, எஸ்.வி சேகர், லியோனி பாணிகள் கலந்து ஒரு கசாயம் தருவார்கள் என்று நினைத்தேன். வழக்கமாக நகைச்சுவையென்றவுடன் எங்கட சனத்துக்கு எங்கட கதைவசனங்கள் ஞாபகம் வராது. இலங்கை வானனொலி முதல், எங்கட சனத்தின்ர பட்டிமன்றம், நாடகங்கள் என்று எடுத்துக்கொண்டால் எம்மவரின் இயல்பான கதை அவற்றில் தொலைந்துவிடும்.
என்ன கூத்து நடந்தாலும் இடைவேளை வரையாவது இருந்து பார்க்க வேண்டுமென்று நினைத்துக்கொண்டுதான் சென்றேன்.

ஆனால் முழு நிகழ்ச்சியும் முடியும் வரை என்னால் ஒன்றிக்க முடிந்தது. என் முழுப் புலனையும் மேடையிற் செலுத்த முடிந்தது. நிகழ்வின் முதல் அங்கமே அசத்தல்தான். அதுவே சொல்லிவிட்டது நான் முடியும்வரை இருக்கவேண்டுமென்பதை. அதுமட்டுமன்றி எதிர்பாராத மகிழ்ச்சி. நீண்ட நாட்களின் பின் மனத்துக்கு நிறைவான, இங்கிதமான மேடைநிகழ்வொன்றைப் பார்த்தேன். எங்கள் மக்களின் நிகழ்வுகள், இயல்புகள், குணங்கள், மொழிநடை, உச்சரிப்பு, சொற்பாவனை, என்று நான் எதிர்பார்த்தவை அப்படியே வந்திருந்தன. எந்தப் படியெடுப்புமில்லை, எந்தத் தழுவலுமில்லை, வேறு யாரினதும் தாக்கமுமில்லை. உலகம் முழுதும் தன் வலிய கரங்களை நீட்டும் தமிழ்த்தொலைக்காட்சிகளிலும் தமிழ்ச்சினிமாவிலும் அள்ளுண்டு போகாமலிருந்த படைப்பு இது. எனவே எனக்கு 'பேச்சந்தோசம்'.

சினிமாப்படங்கள் பார்க்கும்போது நண்பர்களுள் குறைவாகச் சிரிப்பவன் நானாகத்தான் இருப்பேன். தமிழ்ச்சினிமாவில் இயல்பான நகைச்சுவை- அதாவது நான் ரசிக்கும் நகைச்சுவையென்பது பெரும்பாலும் 'நகைச்சுவை நடிகர்கள்' என்ற பெயரில் குப்பை கொட்டுபவர்களிடமிருந்து வருபவையல்ல. அவர்களின் காட்சிகளில் பெரும்பாலும் அருவருப்படைந்த சம்பவங்களே அதிகமென்று நினைக்கிறேன். நான் சிரித்தவை கூட, 'இவர் நகைச்சுவை நடிகரென்ற படியால் இவர் வரும் காட்சிக்குச் சிரிக்க வேண்டும்' என்ற மறைமுகத் தூண்டலாற்கூட இருக்கலாம்.

ஆனால் இன்று நான் மனதாரச் சிரித்தேன். ஒரு நாடகம் என்ற தோற்றப்பாடில்லாமல் இயல்பாகவே அமைந்த சம்பவங்கள். துணுக்குத் தோரணங்களாகக் கோர்க்கப்பட்டவையல்ல.
இந்த நிகழ்வைப்பற்றி அதிகம் புகழ்வதாகத் தெரியலாம். ஆனால் என் நிலை இதுதான்.
எங்கள் இரசனை வலியவற்றால் தீர்மானிக்கப்பட்டது. இவ்வளவு கால அனுபவத்தில் நகைச்சுவையென்று எடுத்தால் பெரும்பாலும் எனக்கு அன்னியமான ஒரு வடிவத்தையே இரசிக்கவேண்டிய நிலை. அது தமிழ்ச்சினிமாவாகவோ,லியோனி பட்டிமன்றமாகவோ எஸ்.வி சேகரின் நாடகமாகவோ இருந்தன/இருக்கின்றன. இன்றுவரை ஓர் அன்னியத்தன்மையுடன்தான் அவற்றை இரசித்து வந்திருக்கிறேன். பதினொரு வயதில் செங்கை ஆழியானின் 'முற்றத்து ஒற்றைப்பனை' படித்தபோது ஏற்பட்ட பரவசம் இன்றுவரை வேறெந்தப் புத்தகத்திலும் வந்ததில்லை. வானொலியை எடுத்துக்கொண்டால் 'புலிகளின் குரல்' பெரும்பாலும் நான் நினைத்த தனித்தன்மையுடன் இயங்கியது. அதில் தமிழ்க்கவி, யோகேந்திர நாதன், அமரர் விஸ்வா போன்றவர்களின் உரையாடல்கள் முக்கியமானவை. இலங்கை வானொலியில் டவுட்டு கணேசன் போல சில நிகழ்ச்சிகளையும் குறிப்பிட வேண்டும். மற்றும்படி ஈழத்தவரின் முயற்சிகள்கூட வலியவற்றைப் படியெடுத்துத் தருவதாகவே இருந்தன. அதே துணுக்குகளைக் கோர்த்துத் தருவார்கள்.

இந்த நிலையில், நிர்ப்பந்திக்கப்பட்ட இரசனைக்குள்ளிருந்து விரும்பிய இரசனை கிடைக்கப்பெற்ற மகிழ்ச்சிதான் இப்பதிவு.

இனி நடந்த நகைச்சுவை நிகழ்ச்சிகளைப் பற்றிய சிறு அறிமுகம்.

மொத்தமாக ஐந்து நிகழ்வுகள் நடந்தன.

முதலாவது:
முதலாவது நிகழ்வே அமர்க்களமாக இருந்தது. இலவசமாக திருமண சேவை நடத்தும் தம்பதியரைச் செவ்வி காணுகிறது தொலைக்காட்சியொன்று. தொலைக்காட்சி அறிவிப்பாளராக வந்தவர் இன்னும் கொஞ்சம் நன்றாகச் செய்திருக்கலாமோ என்று தோன்றியது. ஆனால் அது ஏனைய மூவரையும் ஒப்பிட்டுப் பார்க்கும்போதே அவ்வாறு தெரிகிறது. மேலும் மற்றவர்கள் இயல்பான பேச்சுத்தமிழில் சரளமாகக் கதைக்கும்போது, அறிவிப்பாளரும் அந்த நிலைக்கு வந்துவிடவேண்டுமென்று நினைக்கிறேன். அப்போதும் அறிவிப்புச் செய்யும் பாணியிற் கதைத்துக்கொண்டிருப்பது ஒட்டவில்லை.

முதலில் தம்பதியர் இருவரும்தான் கதைக்கின்றனர். இன்று திருமணப்பேச்சில், திருமணங்களில், திருமணத்தின் பின் நடக்கும் சம்பவங்களை மிகமிகச் சுவையாகச் சொன்னார்கள். அவை வெறுமனே சம்பவங்களைத் தொகுத்து வழங்கியது போன்று தென்படவில்லை. வசனங்களை மனனம் செய்து ஒப்புவிக்கவில்லை. பெற்றோரின் கூத்துக்கள், எப்படி இளைஞர்களை திருமணப்பேச்சுக்கு ஒத்துக்கொள்ள வைக்கிறார்கள், இளைஞர்கள் ஏன் ஒத்துக்கொள்கிறார்கள், பெற்றோர் போடும் நிபந்தனைகள் என்ன? குறிப்புக்கள், சாதகங்களின் விளையாட்டுக்கள் என்று பலவிசயங்கள் வந்தன.
பெற்றோர், மாப்பிள்ளை, பெண் என்று எல்லோரும் தோல்நிறம் பற்றிப் போடும் நிபந்தனைகளைக் கையாள சாத்தியமான அனைத்து நிறங்களுமடங்கிய நிற அட்டவணையும் அவற்றுக்கான தொடர் எண்களும் கொடுக்கப்பட்ட ஓர் அட்டையை வடிவமைத்து வைத்திருக்கிறார்கள். மற்றத் தரகர்களுக்கும் அதை சிபாரிசு செய்கிறார்கள்.
இப்படி சுவாரசியமாகச் செல்கையில், இளைஞர் தரப்பிலிருந்து ஒருவரையும் செவ்விக்கு அழைக்கிறார்கள். வந்தவர் 42 வயதானவர். ஏறத்தாழ 15 வருடங்களாகப் பெண் பார்ககிறார். அவர் வந்தபின் நிகழ்வு இன்னும் களைகட்டியது. அவர் ஏற்கனவே வந்திருந்த தம்பதியரிடம்தான் 15 வருடங்களின் முன் திருமணப் பேச்சுக்கு வந்தவர்.
அவர் போட்ட முதல் நிபந்தனை தனக்கு உயரான பெண் வேண்டுமென்பது. அனால் அவர் சரியான கட்டை.
"டேய் உனக்கென்ன கோதாரிக்கு உயரமான பெட்டை? உன்ர உயரத்துக்கேற்ற மாதிரியிருந்தாச் சரிதானே?"
"என்னண்ணை விசர்க்கதை கதைக்கிறியள்?' உங்கட பரம்பரை மட்டும் ஒரேயளவா இருக்க, நாங்கள் மட்டும் குட்டை குட்டையாப் போறதோ? ஒரு பலன்ஸ் பண்ணி உயத்துவமெண்டா விழல்கதை கதைக்கிறியள்?"
எண்டுவார்.

பெயர் சுருக்கிறது, மாத்துறது எண்டது தொடக்கம் ஆயிரம் டொலர் குடுத்து குறிப்பையே மாத்துறது வரைக்கும் நிறைய விசயங்கள் கதைக்கப்பட்டன.

இந்நாடகத்திலிருந்து நான் சில விசயங்களை அறிந்தேன்.
**குஜராத்திப் பெண்கள் நன்றாகவே ஒஸ்ரேலியாவிலுள்ள ஈழ இளைஞர்களை அலைக்கழிககிறார்கள்;-)
இவற்றைவிட Coffee Shop நடைமுறை, மேலும் சில சிறப்புச் சொற்கள் என்பவற்றை அறிந்தேன்.

*********************************************
இரண்டாவது:

விபத்திற் கொல்லப்பட்டு பேயுலகம் வந்துவிட்ட ஒருவரும் அவரது நண்பரான இன்னொரு பேயும் பூமிக்குச் சென்று தங்கள் வீட்டைப் பார்க்கின்றனர். சொத்துக்கு நடக்கும் பிரச்சினைகள்தான் அடிப்படை. எப்படி சுத்திவளைச்சுக் கதைக்கிறது, எப்படி பொறுப்பையும் செலவையும இன்னொருவர் தலையில் சுமத்துவது என்று உரையாடல் நடக்கும். இறுதியில் தாய்க்கும் மகளுக்குமே சண்டை வந்துவிடும்.

நான் இரசித்தது அந்த மொழிநடைதான்.
பேயுலகத்தில் நடக்கும் கதையில் இயல்பாக பல கதைகள் வந்துபோகின்றன. வாயிற்காப்போன் முந்தி யாழ்ப்பாணக் கச்சேரியில் வேலை செய்த ஒருவரென்று சொல்லி ஒரு நக்கல். இடையில் எலும்பு முறிவுக்கு ஒட்டகப்புலத்தான் பற்றிய கதையொன்று. (நீண்ட நாட்களின்பின் ஒட்டகப்புலத்தையும் மூளாயையும் நினைத்துப்பார்த்தேன்.)
சொத்துச் சேர்த்து, கஞ்சத்தனமாக எதையும் அனுபவிக்காமல் இருப்பவர்களைப் பற்றியும் நல்ல நக்கல்.

***********************************************
மூன்றாவது:
இதைத் தவித்திருக்கலாம், அல்லது வேறு வழியில் முயற்சித்திருக்கலாமென்பது தான் என்னுடைய கருத்து.
நிகழ்வுகளுக்கு இடம்பிடிப்பதில் எங்கள் மக்களின் செயல்களை நக்கலடிப்பது இதன் முதற்பகுதி. அதற்குள் பக்கத்துணையாக நிறைய நக்கல்கள். உணவுப்பொருட்களோ குடிநீர் வகைகளோ எதுவுமே அனுமதிக்கப்படாத கூடத்துக்குள் பெண்கள் எப்படி அவற்றைக் கடத்தி வருகிறார்கள் என்று மேடையில் நிகழ்வு போகின்றது. உண்மையில் எனக்குப்பின் வரிசையில் பெண்ணொருத்தி இடைவேளையில் வாங்கிய ஏதோவொன்றைத் தின்றுகொண்டிருக்கிறார்.

சனிக்கிழமையில் இலவசமாகத் தமிழ் சொல்லிக்கொடுக்கும் தமிழ்ப்பள்ளிகளில் ஆசிரியர்களின் நிலை பற்றியும், எங்கள் பெற்றோரின் நிலை பற்றியும் அடுத்த பகுதி. அதில் பெற்றோரின் கூத்துக்கள் அப்படியே அச்சொட்டாகப் பொருந்திப் போகும். நாடகத்தில் தன்னுடைய பிள்ளையைச் சாமரம் வீச விட்டதுக்காக வாத்திக்கு அடி. தன்ர பிள்ளையை விடவும் கறுப்பான இன்னொரு பிள்ளைக்கு மயில் வேடம் கொடுத்துவிட்டு, தன் பிள்ளைக்குக் காக வேடம் கொடுத்ததுக்கு தமிழ்வாத்திக்கு போண்டா எறி. தமிழ் கதைக்கத் தெரிந்தவர்களைத்தான் அந்தந்தப் பாத்திரத்துக்கு விடலாம், கதைக்கத் தெரியாதவர்களை சாமரம் வீசத்தான் விடலாம் என்று வாத்தியார் விளக்கம் கொடுத்த உடனே, இராமனாக நடித்த பிள்ளை வாத்தியாரின் ஏதோவொரு உறவுக்காறன் என்று துப்பறிந்து அதைப் பெரிய பிரச்சினையாக்குவது. யாழ்ப்பாணத்தில் சிறுவயதில் இப்படி நிறையக் கூத்துக்கள் பார்த்திருக்கிறேன். தாய்தேப்பனுக்குப் பயந்தே தேவையில்லாமல் நாடகத்தில ஒரு துணைப்பாத்திரம் உருவாக்கி அதில் பிள்ளையை நடிக்கவைப்பார்கள்.

ஏனைய நிகழ்வுகளோடு ஒப்பிடும்போது இது அலுப்புத்தட்டும் நிகழ்வு. இதே பிரச்சினைகளை வேறொரு பாணியில் தர முயலலாம். மேலும் இதில் நீதிபதியாக வருபவர் தமிழகத்திலிருந்து சிறப்பாக வருகை தருபவர் என்று சொல்லிச் செய்தார்கள். இது ஏன் என்று தெரியவில்லை. அதைவிட முக்கியகுறை, நீதிபதியின் உரையாடல். ஈழத்தவர்களுக்குத் தமிழகத்தமிழ்நடையை ஒப்புவிப்பது அப்படியொன்றும் பெரிய பிரச்சினையாக நான் நினைக்கவில்லை. ஆனால் இந்நாடகத்தில் வந்த நீதிபதி சரியான முறையில் தமிழக உரையாடலைக் கொண்டுவரவில்லை. பல நேரங்களில் சிங்களவன் தமிழ்கதைப்பதைப் போன்றிருந்தது. (ஆனால் நிகழ்வின் மற்றைய நிகழ்ச்சிகளுடன் ஒப்பிட்டுத்தான் இதைத் தரமற்றது என்கிறேன். மற்றும்படி சராசரித் தமிழ் நிகழ்ச்சிகளைக் கருத்திற்கொண்டால் இது சிறப்பான நிகழ்ச்சிதான்.)
**********************************************
நான்காவது:
மிகச்சிறிய நிகழ்வு. ஆனால் தொடங்கியது முதல் முடியும்வரை ஒரே சிரிப்புத்தான். நடிப்பு அருமையோ அருமை.
தகப்பன் பிள்ளைக்கு ஆத்திச்சூடி சொல்லிக்கொடுப்பதுதான் நிகழ்வு. 'அறம் செய விரும்பு' என்று தொடங்கி ஒவ்வொன்றுக்கும் பொருள்
சொல்லிக்கொடுத்துக் கொண்டு வருவார். அதே நேரத்தில் இடையில் குறுக்கிடும் சிலவற்றால் தான் சொல்லிக்கொடுப்பதற்கு எதிர்மறையானவற்றைச் செய்து கொண்டிருக்கிறார். ஒருகட்டத்தில் 'ஆறுவது சினம்' என்பதைத் திருப்பச் திருப்பச் சொல்ல வைத்து பிள்ளையை இம்சைப்படுத்துகிறார் தகப்பன். இறுதியில் கடும் கோபத்துடன், அடியும் போடுகிறார்.
"ஓடு. போய் கொம்மாவிட்ட படி"
உரத்த குரலில் கத்திக் கலைக்கிறார். ஓடிப்போகும் சிறுமி
'ஊக்கமது கைவிடேல்' என்று அழுதழுது தகப்பனுக்குச் சொல்லிவிட்டுப் போவாள். சற்றுமுன்தான் அதற்கான விளக்கத்தைச் சிறுமிக்குச் சொல்லிக்கொடுத்திருந்தார் தகப்பன்.

காட்சி தொடங்கும்போது மிக அன்பாக, சிநேகமாக இருந்து சிறுமியை அணுகும் தகப்பன் இறுதியில் கடும் சினத்தோடும் ஆத்திரத்தோடும் கண்மண் தெரியாமல் கத்துவதுவரை இயல்பாகச் செல்கிறது காட்சி. எந்தச் செயற்கைத் தனமுமில்லை. தகப்பனின் இந்த மாற்றம் சொற்ப நேரத்துள் நடக்கிறது என்றாலும் எந்த முறிவுமில்லாமல் இறுதியான ஆத்திரக்கட்டத்தை அடைகிறார். அவரை அந்த நிலைக்கு இட்டுச் சென்ற சம்பவங்கள் எங்கள் வாழ்வில் நாளாந்தம் நடப்பவை.
இவற்றுக்கிடையில் மனைவிக்கும் இவருக்குமிடையில் நடக்கும் உரையாடல்கள் சுவாரசியமானவை.

*************************************************
ஐந்தாவது:
இறுதி நிகழ்ச்சி.
நிகழ்வின் உச்சக்கட்டமும் இதுதான்.
ஏற்கனவே போதுமடா சாமி என்ற அளவுக்குச் சிரித்துக்களித்திருந்த
எங்களுக்கு எல்லாவற்றையும் திரட்டி ஒரேயடியாக தீத்தி விட்டது போலிருந்தது இறுதி நிகழ்வு.

நோயாளியான ஒருவரைப் பார்ப்பதற்குச் செல்கிறார்கள் முதிய தம்பதியினர் இருவர். கூடவே அவர்களது பேரனும்.
அவர்கள் செல்லும் நேரம், நோயாளி மிகுந்த களைப்புக்குள்ளாகி ஓய்வெடுக்கவென ஆயத்தமாகும் நேரம். மனைவியும் கூடவே இருக்கிறார். அப்போது சலம் கழிக்கவென ஆயத்தமாகும்நேரம்தான் இத்தம்பதியினர் வருகின்றனர். நோயாளிக்கு ஏற்கனவே இத்தம்பதியைப்பற்றித் தெரியும். தப்புவதற்காக உடனே நித்திரை போல காட்டிக்கொண்டு படுத்திருக்கிறார். மனைவிதான் கதைக்கிறார். அவர்களை அனுப்ப எவ்வளவோ முயன்றும் கிழடுகள் நகர்வதாக இல்லை. ஒருகட்டத்தில், தான் இவர்களுடன் கதைத்து அனுப்பினால்தான் போவார்கள் என்ற நிலையில் நித்திரை விழித்துக் கதைக்கிறார் நோயாளி. பலனில்லை. கிழடுகள் போவதாக இல்லை. மாறாக விடுவதாகவும் இல்லை. ஊர்ப்புதினமெல்லாம் கதைக்கிறார்கள். அதற்குள் அவர்களுடன் வந்த பேரன் நிறையவே படுத்திவிட்டான் நோயாளியை. நோயாளியால் சலத்தையும் பொறுக்க முடியவில்லை, இவர்களின் இம்சையையும் பொறுக்க முடியவில்லை.
இறுதியில் கையெடுத்துக் கும்பிட்டு போய்த்தொலையுங்கள் என்று விரட்டிவிடும் நிலைக்குத் தள்ளப்படுகிறார்.

இறுதிவரை விழுந்துவிழுந்து சிரிக்கவைத்த நிகழ்வு. எங்கள் கிழடுகளைக் கண்முன்னே அப்படியே கொண்டுவந்திருந்தார்கள்.
"எடி புஸ்பம்! ஐயோ, என்ர குஞ்சு" என்றபடி வந்து கட்டிப்பிடித்துவிட்டு தொடங்குகிறது கிழடுகளின் கூத்து.
"உவள் சிவமலரின்ர பிள்ளைப் பெத்துக்கு வந்தனாங்கள். அஞ்சாம் பேறு மூண்டாம் வார்ட்டு" என்று கதை தொடக்குபவர்களிடம், தனக்குச் சிவமலரைத் தெரியாது என்கிறார் மனைவி.
"இதென்ன கோதாரி! டங்டினோ சிவத்தாரின்ர மோள் சிவமலரைத் தெரியாதாம். சிவமலர், நேசமலர், பாசமலர் எண்டு மூண்டு சகோதரிகள்" என்று புராணத்தைத் தொடங்குகிறார் கிழவி. எப்படி கலைத்துவிடலாம் என்று இருக்கும் மனைவிக்கு மேலும் மேலும் சிக்கல்தான்.
நெடுக ஆக்கள் வந்து பாக்கிறதால ஒரேகரைச்சல் என்று சொல்லும் நோயாளிக்கும் மனைவிக்கும்
"ஏன்? ஒருத்தரையும் விடவேண்டாமெண்டு நேர்சிட்ட சொல்லிறதுதானே?
அவையள் சொல்லாட்டியும் நீங்களாவது வாறவைக்குச் சொல்லிறதுதானே? எங்கட சனம் மூளையில்லாத சனம். நெத்தியில அடிச்ச மாதிரி சொல்ல வேணும்
" என்று கிழவி சொல்லுவா.
'அப்படிச் சொல்லியும் அதுகளுக்கு விளங்குதில்லையணை' என்றவுடன்
"உங்களுக்குச் சொல்லிற வல்லமையில்லை. என்னட்ட விடுங்கோ நான் நாக்கப்பிடுங்கிற மாதிரிச் சொல்லிறன்" என்று கிழவி சொல்லுவா.

ஒருகட்டத்தில் பெண்வைத்தியர் வந்து நோயாளியைப் பார்வையிடுவா. இளம்பெண் வைத்தியர். நல்ல நிறம்.
உடனே கிழவி, கிழவரைப் பக்கத்தில் அழைத்து,
"ஏனப்பா, உவள் கலியாணம் கட்டிப்போட்டாளோ எண்டு விசாரிச்சுச் சொல்லுங்கோ"
என்று இரகசியமாய்ச் சொல்ல கிழவரும் விசாரிச்சுச் சொல்லுவார்.

பிறகு கிழவரிட்ட தன்ரை திட்டத்தை விளங்கப்படுத்துவா.
"உவன் சின்ராசன்ரை பெடியனுக்கு உவளைப் பேசிப்பாத்தா என்ன? நல்ல எடுப்பாவும் உயரமாவும் நிறமாவும இருக்கிறார். பெடியனும் உப்பிடியொருத்தியத்தானே தேடிக்கொண்டு திரிஞ்சவன்?"
இந்த இடம்தான் நான் அதிகமாக இரசித்த இடம்.
எங்கள் பெண்கள் எல்லோரிடமும் இருக்கும் பொதுவான குணமிது.
கிழவர் தொடர்கிறார்.
"அது சரிதான். ஆனா அவள் வெள்ளைக்காரி மாதிரியும் தெரியேல. எங்கட ஆக்கள் மாதிரியும தெரியேலயே?"
"உவள் குசராத்திக்காரி தான். அதுக்கென்ன? உவளவையள் தானே இப்ப எங்கட பெடியளுக்குக் கனவுக்கன்னியள்?"
பிறகு அவளின் பெயரட்டையில் இருக்கும் அவளது பெயரைப் பார்த்துச் சொல்லும்படி கிழவருக்கு கட்டளை வருகிறது. அந்தப் பெயரை அறிய கிழவரின் ஆடும் விளையாட்டும், அதுசரிவராமல் கிழவியிடம் கிழி வாங்குவதும் சுவாரசியம். ஒருகடத்தில், தனக்குத் தமிழ் புரிந்துகொள்ள முடியுமென்று அப்பெண் சொல்லிவிடுவாள்.
அதன்பிறகு நிலைமை தலைகீழ். அவளது குடும்பம் இலங்கையைச் சேர்ந்தது என்று தெரிந்தபிறகு வழமையான புத்தி வந்துவிட கிழடுகள் தொடர்கின்றன.
"அப்ப நீங்கள் யாழ்ப்பாணமோ? யாழ்ப்பாணத்தில எந்த இடம்?" என்று தொடங்குகிறார்கள். வழமையான "இடம் கேட்டலின்" அரசியல் தொடங்குகிறது.

கிழவனும் கிழவியும் சபையோரைப் பிரட்டியெடுத்தார்கள். அறளை பெயர்ந்த கிழடுகளின் சாகசங்கள் அருமை.
கிழவனாக வந்தவர் மருத்துவர் ஜெயமோகன். நல்ல உன்னிப்பாக் கவனிச்சிருக்கிறார். கதை ஒரு கட்டத்துக்குப் போக திரும்பவும் முதலிலிருந்து,
'அப்ப உமக்கு சிவமலரைத் தெரியாதோ?' என்று தொடங்கும். தள்ளாடும் நடை, இருக்கும்போது, எழும்பும்போது என்று அத்தனையும் அப்படியே முதியவர்களைப் பிரதிபலித்தது. ஒரு கட்டத்தில் சலம்கழிக்க நோயாளி சென்றவுடன் அவரின் இருக்கையில் இருந்துவிட்ட கிழவரை திரும்பி வந்த நோயாளி எழும்பச் சொல்லுவார். கிழவர் கேட்காத மாதிரி இருப்பார். பின்பும் கட்டாயப்படுத்த, நீர் கொஞ்சம் காலாற நடவும், நெடுக இருந்து என்ன கண்டீர் என்பார். அதற்கும் மறுத்து எழும்பச் சொன்னபோது,
'இஞ்ச பிள்ளை, என்னை எழும்பட்டுமாம்' என்று மனைவியிடம் செர்ல்வார். பின் எழும்பும்போது, அதுவரை உசாராகவே இருந்தவருக்குத் திடீரென்று புது வியாதிகள் வந்துவிடும். பல்லெல்லாம் கிட்டியடிக்கும். கதிரையிலிருந்து எழும்ப முடியாமல் தள்ளாடியபடியிருப்பார். பிறகு மற்றவர்களின் கைத்தாங்கலோடு எழுந்துநின்று நாரியைப்பிடிப்பார்.
இக்காட்சியும் பாத்திரமும் நான் நிறையத்தரம் நேரில் அனுபவித்தவை. அப்படியே மனக்கண்முன் வந்தன.
*****************************************
ஒட்டுமொத்தமாகப் பார்த்தால், மிகமிக அருமையான, இனிமையான நிகழ்வாக இருந்தது. நடிகர்கள் அனைவரும் மிகச்சிறப்பாகச் செய்தனர். குறிப்பிட்டுச் சொல்லவேண்டியவர்கள் மூன்று பேர்.
சாமினி (இவர் ஜெயமோகனின் தங்கையென்று கானாபிரபா சொல்கிறார்.)
மருத்துவர் ஜெயமோகன்
பெயர் தெரியாத மற்றொருவர் (இறுதியில் நோயாளியாக வந்தவர், முதலாவதில் தரகராக வந்தவர்)

நிகழ்வுகளின் இடையில் எத்தடங்கலுமில்லை. யாரும் வசனங்கள் பாடமாக்கி மறந்ததாகவுமில்லை. இவர்கள் அடுத்தமுறை இதே நாடகம்போடும்போது இதே வசனங்களை அப்படியே ஒப்புவிக்கப்போவதில்லை. அதாவது மனனம் பண்ணி இவர்கள் நாடகம் போடவில்லையென்பது தெளிவு. அதுதான் இப்படியான நாடகங்களின் பலம். எனக்குப் பிடித்ததும் இதுதான். கதைப்பவர்கள் அந்த இடத்தில் இயல்பாகக் கதைக்க வேண்டும். நகைச்சுவையென்பது சொல்லப்படும் விசயத்தில் மட்டும் தங்கியில்லை. அதைவிடவும் சொல்லப்படும் முறையில்தான் பெருமளவு தங்கியுள்ளது. மொழிப்பாவனைதான் முக்கியம்.


வந்தவுடன் பதிகிறேன். பதிவைத் திருப்பிப் பார்க்கவில்லை. அதிகம் அலட்டினோனோ என்று தோன்றுகிறது.


இந்நிகழ்வைக் குறுவட்டாக வெளியிடவிருப்பதாகச் சொல்கிறார்கள். எதிர்பார்க்கிறேன்.


_____________________________________________

எழுத்துருவைத் தெரிவுசெய்ய.
பாமினி ஆங்கில உச்சரிப்பில்

[மேலுள்ள பெட்டியில் தட்டச்சினால் கீழுள்ள பெட்டியில் ஒருங்குறிக்கு (Unicode) மாற்றப்பட்ட எழுத்துரு கிடைக்கும்]


சுரதா, கிருபாவுக்கு நன்றி


Sunday, May 14, 2006

தமிழர்கள் பலர் படுகொலை

இன்றும் நேற்றும் (சனி, ஞாயிறு) தமிழர்கள் பலர் சிறிலங்கா அரசபடையினராலும் துணைக்குழுக்களாலும் யாழ்ப்பாணத்தில் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.

"யாழ். தீவகம் மண்டைதீவு அல்லைப்பிட்டிப் பகுதியில் சிறிலங்கா கடற்படையினர் நடத்திய கொடூரத் தாக்குதலில் 2 குழந்தைகள் உட்பட 9 அப்பாவி பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.
யாழிலிருந்து தீவகத்துக்கு செல்லும் மார்க்கத்தில் மண்டைதீவுக்கு அடுத்துள்ள வேலணையின் அல்லைப்பிட்டி கிராமத்தில் 2 ஆம் வட்டாரத்தில் உள்ள மாடி வீடு ஒன்றில் இந்த கொலை வெறியாட்டம் நடத்தப்பட்டது.
கறுப்புத்துணியால் முகத்தை மூடியபடி துப்பாக்கிகள் சகிதம் நேற்று சனிக்கிழமை இரவு 8.30 மணியளவில் சென்ற சிறிலங்கா கடற்படையினரும் துணை இராணுவக்குழுவினரும் வீட்டிற்குள் அதிரடியாக நுழைந்தனர்.
வீட்டின் அறைகள் ஒவ்வொன்றையும் தேடி அங்கு இருந்த ஒவ்வொருவரையும் துப்பாக்கியால் சுட்டனர். நான்கு மாதக்குழந்தையும் இந்த கொலை வெறியாட்டத்தில் சுட்டுப்படுகொலை செய்யப்பட்டது.
வீடு முழுவதும் படையினரின் கொலை வெறியாட்டத்தில் இரத்த வெள்ளமானது.
சம்பவம் நடந்த வீட்டிலிருந்து 100 மீற்றர் தொலைவில் சிறிலங்கா கடற்படையின் பாரிய முகாம் உள்ளது.
கொலை நடைபெற்ற பகுதி படையினரின் உயர்பாதுகாப்பு வலயமாகவுள்ளது.
கொல்லப்பட்டோர் விவரம்:
மூன்று பிள்ளைகளின் தந்தையான ஏபிரகாம் றொபின்சன் (வயது 28)
ஒரு பிள்ளையின் தந்தையான செல்லத்துரை அமுதாஸ் (வயது 28)
பாலச்சாமி கேதீஸ்வரன் (வயது 25)
பாலச்சாமி கேதீஸ்வரனின் மனைவி அனஸ்எஸ்த்தர் (வயது 25)
பாலச்சாமி அனஸ்எஸ்த்தர் தம்பதிகளின் மகன் தனுஸ்காந் (வயது 04), மகள் யதுசா ( 04 மாதம்)
நான்கு பிள்ளைகளின் தந்தையான கணேஸ் நவரத்தினம் (வயது 50)
ஐந்து பிள்ளைகளின் தந்தையான யோசப் அந்தோனிமுத்து (வயது 64)
வர்த்தகர் சிவநேசன் (வயது 56)
காயமடைந்தோர் விவரம்:
எஸ்.மோகனாம்பிகை (வயது 46)
கொல்லப்பட்ட வர்த்தகர் சிவநேசனின் மனைவியான அம்பிகாபதி (வயது 38)
ரி.செல்லத்துரை (வயது 61)"

******************************
"யாழ். ஊர்காவற்றுறை புளியங்கூடலில் சிறிலங்கா இராணுவம் மற்றும் அதனுடன் சேர்ந்தியங்கும் துணை இராணுவக் குழுவினரால் மேலும் 4 பேர் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.
ஊர்காவற்றுறை புளியங்கூடலில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் சனிக்கிழமை இரவு 10.30 மணியளவில் படுகொலை செய்யப்பட்டனர்.
சிங்கள கடற்படையின் இந்த கொடூர கொலை வெறியாட்டத்தில
முருகேசு சண்முகலிங்கம் (வயது 72), அவரது மகன் சண்முகலிங்கம் காந்தரூபன் (வயது 29) மற்றும் அவரது மனைவி சண்முகலிங்கம் பரமேஸ்வரி ஆகியோர் படுகொலை செய்யப்பட்டவர்கள் என தெரியவந்துள்ளது.
சண்முகலிங்கத்தின் வீட்டுக்குள் நுழைந்த ஆயுதக் கும்பல் கண்மூடித்தனமாக வீட்டில் இருந்தவர்களை நோக்கிச் சுட்டதில் அனைவரும் சம்பவ இடத்திலேயே பலியாயினர்.
நடராசா வித்தியாலயம் அருகே சண்முகலிங்கம் நடத்தி வந்த தொலைத் தொடர்பு நிலையத்தையும் ஆயுதக் கும்பல் குண்டு வீசி அழித்துள்ளது.
மேலும் வங்களாவடிச் சந்தி அருகே தேநீர் கடை உரிமையாளரான இரட்ணம் செந்தூரன் (வயது 22) என்பவரும் படுகொலை செய்யப்பட்டுள்ளார். அப்பகுதியில் எரிபொருள் நிரப்பு நிலையம் ஒன்றும் தாக்குதலுக்குள்ளானது.
மேலும் ஊர்க்காவற்றுறையில் புளியங்கூடல் சந்திப் பகுதியில் நேற்று சனிக்கிழமை இரவு ஆயுத கும்பல் ஒன்று பல கடைகளைத் தீக்கிரையாக்கி அப்பகுதி மின்மாற்றி ஒன்றையும் தகர்த்துள்ளனர். "
******************************
இவற்றைவிட நாட்டின் ஏனைய பகுதிகளிலும் தமிழர்கள் கோரமாகப் படுகொலை செய்யப்படுகிறார்கள். கொழும்பில் அண்மையில் 5 தமிழர்களின் உடல்கள் தலையில்லாமற் கண்டுபிடிக்கப்பட்டன. அவ்வுடல்கள் பின்னர் அடையாளங்காணப்பட்டு உறுதிப்படுத்தப்பட்டன. ஆனாலும் அது பெரிய பிரச்சினையாக வெளிவரவேயில்லை. ஒருநாட்டின் தலைநகரில் நடந்த இப்படுகொலைகள்கூட யாரையும் சலனப்படுத்தவில்லை.
கிழக்கில் நாளாந்தம் படுகொலைகள் நடத்தப்படுகின்றன. இதில் ஜிகாத் குழுவும் சம்பந்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இதைவிட சிலநாட்களின் முன் தென்மராட்சிப் பகுதியில் பாடசாலை ஆசிரியர் ஒருவர் உட்பட 7 பேரை இராணுவத்தினர் கைது செய்திருந்ததும், இன்றுவரை அவர்களுக்கு என்ன நடந்ததென்று தெரியாமலுள்ளதும் குறிப்பிடத்தக்கது. அப்பகுதி மக்கள் அவர்களைப் படையினர் சுட்டுக்கொன்றதாகச் சொல்கின்றனர். கைது செய்ததை ஒத்துக்கொண்ட படையினர் இதுவரை அவர்களுக்கான முடிவை அறிவிக்கவில்லை. உடலங்கள் கிடப்பதாகச் சொல்லப்பட்ட பகுதிக்குள்ள மக்களைப் புகவிடாமல் இராணுவம் காவல்காத்ததும் 30 மணித்தியாலங்களின்பின்பே கண்காணிப்புக்குழு இடத்துக்கு வந்து பார்த்துவிட்டு எந்தச் சடலங்களுமில்லையென்று சொல்லவிட்டுச் சென்றதும் குறிப்பிடத்தக்ககது. முன்பு இராணுவத்தால் கைதுசெய்யப்பட்டு காணாமற்போன எழுநூறுபேர்வரையானோரின் நிலை ஆண்டுக்கணக்காகத் தெரியவரவில்லை.

இதேவேளை நேற்று முன்தினம் யாழ்ப்பாணத்தில் சர்வதேச தமிழ்மாணவர் பேரவையினரின் அலுவலகமும் சொத்துக்களும் படையினரால் எரியூட்டி அழிக்கப்பட்டன. நாற்பது வரையான கணிணிகள், பல்கலைக்கழக நூலகத்துக்கான இரண்டாயிரம் புத்தகங்கள் என்பவற்றுடன் அவ்வீடும் எரிக்கப்பட்டுள்ளது. இது நடந்தது இலங்கைப் பாராளுமன்ற உறுப்பினரான கஜேந்திரனின் அலுவலகத்திலும் அதனுடனிணைந்த கட்டடத்திலும். நாட்டின் பாராளுமன்ற உறுப்பினரின் அலுவலகத்துக்கே இந்த நிலைமை.
********************************
வெறிபிடித்தது போன்ற மனநிலையில் சிங்களப்படைகள் செயற்படுகின்றன. இந்நிலையில் புலிகள் என்ன செய்யப்போகிறார்கள்? மக்களின் பிரதிநிதிகள் என்றவகையில் அவர்கள் நிச்சயம் ஒரு முடிவு எடுக்க வேண்டும்.
இந்தநிலையில் 1999 செப்ரெம்பர் நடத்தப்பட்ட மந்துவில் -கோணாகல படுகொலைகளும் அதைத்தொடந்து சில ஆண்டுகள் (அண்மையில் நடத்தப்பட்ட திருகோணமலை வான்வழித்தாக்குதல் வரை) தமிழ்மக்கள் மேல் வான்வழிப்படுகொலைகள் நடத்தப்படாமலிருந்ததும் ஞாபகம் வந்து தொலைக்கிறது.

*********************************
படுகொலை செய்யப்பட்டோரின் படங்களைப் பார்க்கலாம். இளகிய மனம் படைத்தோர் பார்க்க வேண்டாம்.
குறிப்பாக குழந்தைகள், சிறுவர்கள் பார்க்க வேண்டாம்.
படங்கள்.

நன்றி: புதினம், தமிழ்நெற், நிதர்சனம்.

எழுத்துருவைத் தெரிவுசெய்ய.
பாமினி ஆங்கில உச்சரிப்பில்

[மேலுள்ள பெட்டியில் தட்டச்சினால் கீழுள்ள பெட்டியில் ஒருங்குறிக்கு (Unicode) மாற்றப்பட்ட எழுத்துரு கிடைக்கும்]


சுரதா, கிருபாவுக்கு நன்றி


பிரபாகரன் பெயரை மாற்றவேண்டும்.

சோதிடம் பற்றி, அதன் புரட்டுக்கள் பற்றி பலர் எழுதிவிட்டார்கள். தருமி ஒரு வேள்வியாகவே செய்து வருகிறார்.

எனக்கு அண்மையில் சோதிடக்கட்டுரையொன்று வாசிக்கக் கிடைத்தது. நல்ல சுவாரசியமான கட்டுரை. அதைப்பார்த்த பிறகு ஒரு பதிவு போடாட்டி எப்படி?

சோதிடர் சொல்வதையும் அதற்கு என்கருத்தையும் தருகிறேன்.
கட்டுரையாளரே 'தலைவர் பிரபாகரன்' என்றுதான் முழுவதும் சொல்லிக் கொண்டு வருகிறார். ஆகவே எனக்கும் 'தலைவர் பிரபாகரன்' என்று பாவிப்பதில் எந்தச் சிக்கலுமில்லை.


"தமிழ் நெட் இணையத்தளத்தில் புலிகளின் தலைவர் பிரபாகரனின் பெயரை Pirapakaran அல்லது. Pirahbakaran என்று ஆங்கிலத்தில் போடுகிறார்கள். அவரின் பெயரை Pirabaharan என்று உச்சரிப்புடன் எழுதுவதாயிருந்தால் அது அவருக்குத் துரதிர்ஷ்டத்தைக் கொண்டுவரும் என்று பயப்படுகிறார்களாம். V.Pirapakaran -35>3+5=8 என்று முடிவதால் அவருடய பிறந்த நாளான 8ம் திகதியுடன் சேர்ந்து 8 இலக்கத்திற்குரிய இரட்டைப் பலங்கள் தொடரும். V.Pirapakaran என்பதால் 37, 3+7=10=1 என்று மாற்றிவைத்துச் சிறந்த பலனடைய நினக்கிறார்கள் அவரின் விசுவாசிகள்."

முதலில் எண்சாத்திரம் பார்த்துப் பெயர் எழுதுகிறார்கள் என்ற கதை முட்டாள் தனமானது.
தலைவர் பிரபாகரனின் பெயரை Pirabaharan அல்லது Pirabaaharan என்றுதான் எழுத வேண்டுமென்பது என் கருத்து. இந்த விசயத்தில் சோதிடருடன் ஒத்துப்போகிறேன்.(இது சோதிடத்தால் வந்ததில்லை. சரியான உச்சரிப்புப்படி அப்படித்தான் வருமென்று நான் கருதுகிறேன்) ஆனால் பெரும்பாலானோர் விடும் தவறுதான் இதுவும். சொல்லினிடையில் வரும் 'க' கரம் 'ஹ' உச்சரிப்பில் வந்தாலும் 'K' என்ற எழுத்தைத்தான் பெரும்பாலானோர் பாவிக்கிறார்கள். (த - Dh, ழ-Zh or Z, மொழித்தொடக்கத்தில் வரும் ப -Ba என்பவை எனக்கு ஒத்துவராத விசயங்கள். அவைபற்றி பிறகு தனியே கதைக்கலாம்.)

பிரபாகரன் என்ற பெயரை ஆங்கிலத்தில் பலர் பலவிதங்களில் எழுதுகிறார்கள். வித்தியாசமான முறையில் கூகிளில் தேடினால் எல்லாவற்றுக்கும் 'தலைவர்' வருவார். புலிகள் தரப்பு வெளியீடுகளே ஒரேமுறையில் இப்பெயரை எழுதி வெளியாவதில்லை. தமிழ்நெற்றில் தேடினாற்கூட சோதிடர் சொல்வதைவிடவும் வேறு வடிவங்கள் கிடைக்கக்கூடும். Pirabaharan (சரியான வடிவமாக நானும் சோதிடரும் சொல்லுவது) கூகிளில் என்று தேடினாற்கூட புலிகளின், புலியாதரவுத் தளங்களின் இணைப்புக்கள் நிறையக் கிடைக்கின்றன.

விடுதலைப்புலிகளின் சமாதானச் செயலகத்துக்கான அதிகாரபூர்வ வலைத்தளத்தில் எப்படி எழுதப்பட்டுள்ளது?
Pirabaharan என்று தலைப்பில் எழுதப்பட்டுள்ளது. அதே தொகுப்பில் கீழே Prabaharan என்றும் எழுதப்பட்டுள்ளது. தமிழ்நெற்றை விடவும் இத்தளம் புலிகளிடமிருந்து தூரத்திலுள்ளதோ என்னவோ?

"Prabhakaran A Leader For All Seasons" என்பது 'தலைவர் பிரபாகரனின்' படத்தொகுப்புக்களடங்கிய ஒரு வெளியீடு. புலிகளின் வெளியீடுகளை இணையத்தில் விற்பனை செய்யும் 'ஈழம் ஸ்ரோர்' Pirabaharan என்று எழுதுகிறது.

ஆக, சோதிடர் தமிழ்நெற்றில் சில செய்திகளை மட்டும் பார்த்துவிட்டு பிரபாகரனின் பெயரை வைத்து சோதிடமும், தமிழ்மக்களின் போராட்டம் வெற்றிபெற வழியையும் ஆராய்கிறார். இவங்களுக்குப் பிழைப்பு இல்லாவிட்டால் எங்கயும் கருத்துச் சொல்லுவாங்கள்.
எட தமிழ்நெற் தம்பிமாரே, உந்தப் பேரை சோதிடர் சொல்லிற மாதிரி மாத்தி எழுதுங்கோவன். எங்களுக்குக் கெரியில விடிவுகாலம் பிறக்கும்.
*******************************

தலைவரின் பிறந்தநாளை வைத்துக்கொண்டு இச்சோதிடர் நிறைய விசயங்கள் சொல்கிறார்.

"சிறுவயதில பெற்றோரை விட்டுப் பிரிந்திருப்பார், பெற்றோரைப் பகைத்துக்கொண்டு செயற்பட்டிருப்பார், அதிகம் நேசித்தவர்களைச் சிறுவயதில் பிரிந்திருப்பார், எந்தநேரமும் அயராது திட்டம் தீட்டிக்கொண்டிருந்திருப்பார், திட்டங்களை இரகசியமாக வைத்திருந்திருப்பார், அவற்றை அறிந்துகொள்ள எதிரிகள் கடும் முயற்சி செய்திருப்பார்கள்"

இவ்வளவையும் தலைவரின் பிறந்த எண்ணைக்கொண்டு அந்த சோதிடர் கணித்த கணிப்புக்களாகச் சொல்கிறார்.
அடப்பாவி! இதைத்தானே உலகம் முழுக்கச் சொல்கிறார்கள். எத்தனை பேர் எழுதிக்கிழித்துவிட்டார்கள். ஏதோ பிரபாகரன் பிறக்கக முதலே அல்லது அவரின்ர சின்ன வயசிலயே தீர்க்கதரிசியாகச் சொன்னமாதிரி இப்பவந்து இவ்வளவு கதையும் விடப்படுது.
தலைவரின் பிறந்த எண், கூட்டெண்ணை வைத்துக்கொண்டு மேலும் பலவிசயங்களைச் சொல்கிறார்.
*********************************
"தலைவர் மிகவும் கடவுள் நம்பிக்கையுள்ளவர். அவர் இந்தியாவிலிருந்து இலங்கைக்கு கடத்தும் ஆயுதங்கள் இராணுவத்திடம் சிக்காமற் வல்வெட்டித்துறைக்குப் போய்ச்சேர்ந்தால் திருப்பதி போய் மொட்டையடிப்பது தலைவரின் கொள்கையாயிருந்தது என்பது பலரறிந்த விடயம்."

தலைவரின் கடவுள் நம்பிக்கை எனக்குத் தெரியாது. ஆனால் தன் வாதத்துக்கு ஒரு புரட்டைச் சொல்லி வலுச் சேர்க்கிறார் சோதிடர். தலைவர் மொட்டையடித்துத் திரிந்தது உண்மை. ஆனால் எப்போது? எதற்காக?
போராட்டம் தொடங்கிய காலத்தில் தலைமறைவாகத் திரிந்தபோது தன் அடையாளத்தை மறைத்துக்கொள்ள மொட்டையடித்தபடி திரிந்தார். அப்போது மாடுவித்து, மோதிரம்வித்து ஆயுதம் வாங்க ஏங்கிய காலம். சொந்தமாக றிவோல்வர்கூட இல்லாத தொடக்க காலம். இந்தியாவிலிருந்து ஆயுதம் கடத்தும் நிலைவருவதற்கு முற்பட்ட காலம். இந்தியாவிலிருந்து ஆயுதம் கடத்தும் காலத்தில தலைவர் எப்போது மொட்டையடித்திருந்தார் என்று தெரியவில்லை. திருப்பதி மொட்டைகூட வேண்டாம். சும்மா மொட்டை. (அப்படியிருந்தால் விசயம் தெரிந்தவர்கள் சொல்லுங்கள். தெரிந்துகொள்ளும் ஆவல்தான்)
*********************************
தலைவருக்கு உடும்பு இறைச்சி பிடிக்குமென்பதால் அந்தக் குணங்கள் அவருக்கு வரும் வாய்ப்புக்களிருப்பதாக சோதிடர் சொல்கிறார். அதே பத்தியில்,
'ஆனால் நாயைத் தின்னும் சீனர்கள் நாய் போற் குரைப்பதில்லை, பாம்பு தின்னும் சீனர்கள் பாம்பு போல் ஊர்வதில்லை'
என்றும் சொல்கிறார். ஆக பிரபாகரனுக்கு மட்டும் உடும்புக்குணம் வந்துவிடுமென்கிறார். சொன்னவர்தான் சொன்னார், உடும்புக்குணம் என்னவென்று சொல்லியிருந்தாலாவது பரவாயில்லை.

உடும்பு, யாழ்ப்பாணம் வன்னியென்று எல்லாப்பாகத்திலும் பிரபல்யமான உணவு. யாழ்ப்பாணத்தில் ஒரு கிலோ நிறையுடைய உடும்பு நூறு ரூபாய்வரைகூட விற்பனையாகும். ஒரு நாய் மட்டுமே போதுமென்பதால் (சமயத்தில் அதுகூடத் தேவையில்லை) இலகுவான வேட்டைப்பொருள். வன்னியில் அதிகளவில் உடும்புகள் பிடிக்கப்பட்டு அவ்வினம் குறைந்து வரும் ஆபத்தை எதிர்நோக்கியதால் (ஏற்கனவே மான், மரை போன்றவற்றினை வேட்டையாடுவது தடைசெய்யப்பட்டிருந்த நிலையில் உடும்பு வேட்டை சடுதியாக அதிகரித்திருந்தது) உடும்பு வேட்டைமீது புலிகள் தடைபோட்டனர். நல்லவேளை வன்னித் தமிழர்கள் உடும்புப் புத்திவருவதிலிருந்து தப்பித்தனர்.
(உடும்புப்புத்தி பற்றி சோதிடர் ஏதாவது சொன்னால், என்னைப் பற்றி மற்றவர்கள் சரியாகஅறிந்துகொள்ள ஏதுவாக இருக்கும்.)
**********************************
தலைவர் பிரபாகரனின் பிறந்த நாளை மட்டுமன்றி அவரது குடுத்தினரின் எண்சோதிடத்தையே புரட்டி மேய்ந்திருக்கிறார். மனைவி பிள்ளைகளின் சோதிடங்கள், குணங்கள் பற்றி நிறையக் கதைக்கிறார். தலைவரினதும் மனைவியினதும் எண்கள் ஒத்துவராது, நேர்மாறானவையென்று தொடங்குகிறார். பிறகு தந்தைக்கும் மகனுக்கும் ஒத்துவராது என்று தொடர்கிறார். ஆனால் தலைவரைத் தவிர மற்றவர்களின் பிறந்த திகதியை அவரகள் மேலுள்ள மரியாதையால் தான் வெளியிடவில்லையென்றும் கூட்டெண்ணை மட்டும் வெளியிடுவதாகவும் சொல்லிவிட்டு அக்கூட்டெண்ணை வைத்தே எல்லா விவரமும் சொல்கிறார். (அடேயப்பா! என்ன மரியாதை?)

ஆனால் தலைவருக்கு எத்தனை பிள்ளைகள் என்ற விவரங்கூட அந்தச் சோதிடருக்குத் தெரியவில்லை என்பது வேதனைதான்.

தலைவரின் திகதியில் பிறந்தவர்களுக்குக் காதல் தலைகீழாகிவிடும் என்று ஒரு குண்டைத்தூக்கிப் போடுகிறார். (வலைப்பதிவர்களே கவனிக்க)
**************************************
பொட்டம்மான், அன்ரன் பாலசிங்கம், தமிழ்ச்செல்வன், நடேசன், புலித்தேவன் என்று சில பலபிரபலங்களும் (அவர்களின் மனைவியரும்) சோதிடச் சோதனையில் அகப்பட்டுள்ளார்கள். இந்தப்பகுதியில் இதிகாசங்களிலிருந்து பல எடுத்துக்காட்டுக்கள் வருகின்றன. இவர்களிற் பலர் அவர்களின் மனைவியரின் தாலிப்பாக்கியத்தால்தான் காப்பாற்றப்பட்டார்கள் என்பதுமுதல் பல விசயங்களை அவர்களின் எண்களை வைத்துச் சொல்கிறார்.

மகிந்த ராஜபக்ஷ பற்றியும் எண்சோதிடத்தை வைத்து ஆராயப்படுகிறது.
***************************************
இறுதியாக,
"தலைவருடனிருக்கும் வேறு ஒரு சிலரின் குறிப்புக்களை இங்கு குறிப்பிடத் தயாரில்லை. தலைவருக்கு இப்போது ஆண்டவன் அருள் இருக்கிறது. யாரை நம்பவேண்டும் என்று உள்ளுணர்வின் மூலம் தெரிந்து கொள்ளும் வல்லமையை தலைவருக்கு ஆண்டவன் கொடுத்திருக்கிறான். இந்த வரப்பிரசாதத்திற்குக் காரணம் இவர் மகள் துவாரகா (காக்கும் கடவுள் கண்ணனின் பெயரைக்கொண்டவள்) பிறந்த பலனாகும். அடுத்த வருடம் 53 (8) வயதாகும் தலைவர் வணங்கும் முருகனிடம் பிரார்த்தனைகளைச்செய்வது நல்லது. உயிருக்கு பத்துண்டு. அடுத்த வருடம் மிகவும் பயங்கரமானது (53 (8). அப்போது பொட்டுவின் வயதும் 44, நல்ல சகுனமல்ல. தலைவர் பிறந்த மாதத்திற் பிறந்த கருணாவின் வயது 40 (4). நம்பமுடியாத வாழ்க்கை மாற்றங்களைக் கருணாவுக்குக் கொண்டுவரும். அடுத்த 13 வருடங்களுக்கு இவருக்கு ஏறு பலன். தலைவருக்கு அடுத்த 3வருடங்களுக்கு இறங்கு பலன். "
என்று கட்டுரை முடிகிறது.
***************************************
சோதிடக் கட்டுரையில் பல விசயங்கள் சொல்லப்பட்டாலும் சாராம்சம் இதுதான்.
"பிரபாகரன் யாரையும் நம்பக்கூடாது. அவருடன் இருப்பவர்கள் பொல்லாதவர்கள். (இதன்மூலம் பிரபாகரன் நல்லவர்என்று கட்டுரையாளர் சொல்லவருகிறாரா என்று தெரியவில்லை) பாலசிங்கம், பொட்டு போன்றவர்கள் ஆபத்தானவர்கள், ராஜபக்ஷவுக்கு நல்லகாலமுண்டு. அவரை வெல்ல முடியாது. பிரபாகரன் தோற்கப்போகிறார். தன்னுடனிருப்பவர்களைக் கலைத்துவிட்டு சரியான சொல்கேட்க வேண்டும்."

இப்போதுள்ள யாரையும் நம்பக்கூடாது என்றுவிட்டு, யாரை நம்பவேண்டுமென்று அக்கட்டுரையாசிரியர் சொல்கிறார். அதுதான் இச்சோதிடக்கட்டுரையின் உயிர்நாடி.

"தலைவரின் நெருங்கிய மனிதர்களை எடுத்துக்கொண்டால், தலைவரை மிகவும் உணர்ந்து கொண்ட ஒரேஒரு பிறவி கருணாவாகும். கருணாவின் கூட்டுத்தொகை 7-4 கும். தலைவரின் 8-2 இலக்கங்களுடன் இணையும் காந்த சக்தியுள்ள இலக்கங்கள் ( 8,4---2,7 இவற்றைக் காதல் இலக்கங்கள் என்று கூறுவதுமுண்டு). தலைவர் தளபதி என்ற உறவுக்கப்பால் ஒரு ஆத்மீக இணைப்பு இவர்களைச் சேர்த்திருக்கும். கருணாவும் தலைவர் பிறந்த மாதத்திற் பிறந்தவர். 7ம் இலக்குக்குரிய சினேகித இலட்சணம்"
என்று தொடங்கி கருணாவைப்பற்றி புகழ்ந்து அக்கட்டுரைதொடர்கிறது.
கருணா தான் அந்த மனிதன். அதையும் எண்சோதிடத்துக்குள்ளால் சொல்கிறார். பிரபாகரனுக்கும் கருணாவுக்கும் பூர்வ ஜென்மத்திலேயே நல்ல உறவு இருந்ததாம். பிரபாகரனுக்கு உறுதுணையான, அவர் மேல் பாசம் வைத்த, அவருக்காக எதையும் செய்யவல்ல ஒரேயொருவர் கருணாதானாம். ஒருவர் நினைப்பதை மற்றவர் சரியாப் புரிந்துகொள்ளும் அனுக்கிரகத்தை இந்த இருவருமே பெற்றுள்ளார்களாம். (இந்த விசயத்தை நான் பூரணமாக ஒப்புக்கொள்கிறேன். கடந்தகாலச் சம்பவங்களே சாட்சி;-))
அதைவிட கருணா நிறைய அனுக்கிரகம் பெற்றுள்ளாராம். கருணாவைப் பகைப்பது பிரபாகரனுக்குக் கேடு விளைவிக்குமாம். கருணா இனிவரும் காலத்தில் தொடர்ச்சியாக வெற்றிகளைப் பெறுவாராம்.

இந்தக் கட்டுரை மிக அண்மையில்தான் எழுதப்பட்டுள்ளது. அதுவும் சரத் பொன்சேகா மீதான தாக்குதலின்பின்னர்.
ஆனால் கருணா குழு என்ற பெயரில் இயங்கியவர்களின் மூன்று முகாம்கள் புலிகளால் நிர்மூலமாக்கப்பட்டபின் எழுதப்பட்டதா என்பது தெரியவில்லை.

சோதிடரின் பெயர் மதியளி என்றும் முகவரி சென்னையென்றும் உள்ளது. ஆனால் உந்தச் சோதிடப் பாம்பு எந்தப் புத்துக்குள்ளயிருந்து வருதெண்டு தெரியாதோ?
***************************
சிலபகுதிகள் மட்டுமே நான் காட்டியுள்ளேன். விரும்புபவர்கள் முழுமையான சோதிடக்கட்டுரையைப் படியுங்கள். பயன்பெறுங்கள்.


நன்றி: தேனி
***************************

தலைப்பு கொஞ்சம் அதீதமாத் தெரியுதோ?

எழுத்துருவைத் தெரிவுசெய்ய.
பாமினி ஆங்கில உச்சரிப்பில்

[மேலுள்ள பெட்டியில் தட்டச்சினால் கீழுள்ள பெட்டியில் ஒருங்குறிக்கு (Unicode) மாற்றப்பட்ட எழுத்துரு கிடைக்கும்]


சுரதா, கிருபாவுக்கு நன்றி


Saturday, May 06, 2006

தேவனின் ராஜ்யம்

மதம் பற்றி இக்கிழமை நட்சத்திரமான முத்துவின் பதிவில் ஏதோ போய்க்கொண்டிருக்கிறது. இறுதியாக கிறித்தவம் பற்றியும் போய்க்கொண்டிருக்கிறது. நல்ல விதயம். வரவேற்கத்தக்கது. (ஆனால் பின்னூட்டங்களின் எண்ணிக்கை ஓரளவுக்கு மேலே போய்விட்டால் பிறகு சரிப்பட்டு வராது. எங்கே தொடங்கியது, எங்கே போகிறது, யார் என்ன சொன்னார், என்றெல்லாம் இடையிலேயே மறந்துவிடும்.)

மதம் பற்றி எனக்குக் காட்டமான விமர்சனமுண்டு. குறிப்பாக ஈழப்போராட்டத்தில் மதங்களின் செல்வாக்கு மட்டுப்படுத்தப்படாவிட்டால் ஏற்படும் ஆபத்து மிகப்பெரியது. இன்றைக்கு போராட்டம் எதிர்நோக்கும் சவால்களில் முக்கியமான ஒன்று மதங்கள் பக்கமிருந்து வருவது. புலிகளின் கட்டுப்பாடற்ற பகுதிகளில் இன்றைக்கு நாளொரு புதுச் சபைகள் முளைத்துக்கொண்டிருப்பதும், அவைகளின் முழுக்கட்டுப்பாடும் வெளிச்சக்திகளிடமிருப்பதும் கவலையோடு பார்க்கப்பட வேண்டியவை. இதுபற்றி அதிகம் சொல்லாமல், குறிப்பிட்ட அனுபவமொன்றை மட்டும் சொல்வதே இப்பதிவு.

முல்லைத்தீவு மாவட்டத்துக்கான முதன்மை வைத்தியசாலை புதுக்குடியிருப்பில்தான் அப்போது இயங்கிவந்தது. (தரைமட்டமான முல்லைத்தீவு வைத்தியசாலை நீண்டகாலத்தின்பின் திருத்தப்பட்டு இப்போது இயங்கி வருகிறது. யுத்த நேரத்தில் புதுக்குடியிருப்புத்தான் முதன்மையாக இருந்தது). நிரந்தர மின்சார வசதிகளோ இரத்த சேமிப்பு வசதிகளோ முழுமையான வைத்திய வசதிகளோ இன்றித்தான் அவ்வைத்தியசாலை இயங்கிவந்தது. ஆனாலும் மருத்துவத்துக்கான மக்களின் ஒரே நம்பிக்கை அதுதான்.

ஒருநாள், பேறுகாலம் நெருங்கிய நிறைமாதக் கர்ப்பிணிப் பெண்ணொருத்தி அனுமதிக்கப்படுகிறாள். முதற்பிரசவம். குழந்தைப்பேற்றின் போது, நிலைமை கடுமையாகி, தாய் ஆபத்தான நிலையை அடைகிறாள். அப்போது தாய்க்கு இரத்தம் ஏற்றவென்று ஆயத்தம் செய்கின்றனர். அங்கிருந்தவர்களிடம் இரத்தம் தரும்படி தாதியர் கேட்டபோது சிலர் முன்வந்தனர். (வன்னியில் இரத்தம் வழங்குவது பெரிய விசயமில்லை. சாதாரணமானதுதான். இதுபற்றி பிறகு எழுத எண்ணம்) அந்தநேரம்தான் வந்தது வில்லங்கம். அதுவும் கணவன் வடிவில்.

அங்குக் காத்திருந்த கணவன், உடனே குறுக்கிட்டு, அவளுக்கு இரத்தம் ஏற்றக்கூடாதென்று தடுக்கிறான். அனைவருக்கும் திகைப்பு. ஆனாலும் கணவன் உறுதியாக மறுக்கிறான். என்ன காரணம் என்று அறிய முற்பட்டவர்களுக்கு அவன் சொன்ன பதில்,
"ஒருவனின் இரத்தத்தை அவளுக்கு ஏற்றினால், அவனோடு அவள் விபச்சாரம் செய்தவளாகக் கருதப்படுவாளாம்".
யார் சொன்னது? என்று கேட்டால் 'கர்த்தர் சொல்லியிருக்கிறாராம்'.

அங்கு நின்றவர்கள் எடுத்துச் சொல்லியும் அவன் விடுவதாயில்லை. இதற்கிடையில் அங்கு நின்ற தாதியொருத்தி, தானே இரத்தம் கொடுப்பதாகச் சொல்லிவிட்டு 'இப்ப பிரச்சினையில்லைத்தானே?' என்று கேட்கிறார். இப்போது அவனால் பதில் சொல்ல முடியவில்லை. ஆனால் உடனே தன்னுடன் நின்ற சின்னப்பெடியன் ஒருவனை எங்கோ கலைத்துவிடுகிறான்.

போனபெடியன் ஐந்து நிமிடத்துக்குள் சிலரை அழைத்துவந்தான். வந்தவரில் ஒருவர் போதகராம். வந்த வேகத்திலேயே குய்யோ முறையோ என்று கத்துகிறார். பெண்ணொருத்தி இரத்தம் கொடுப்பதும்கூட தடை செய்யப்பட்டது என்று சொல்கிறார். 'ராஜாதி ராஜன், தேவாதி தேவன்' என்றெல்லாம் ஏதோ சொல்லிக் கூவுகிறார்.அதற்குப்பிறகு கணவன் இன்னும் ஆக்ரோசமாக எதிர்க்கிறான்.

அவர்களைப் பொருட்படுத்தாது பெண்ணைக் காப்பாற்றுவதென்று முடிவெடுத்துச் செயற்படப் புறப்பட்டபோது கைகலப்பு வரை வந்துவிட்டது. போதகர் ஒரு கும்பலோடு வந்தது இன்னும் நிலைமையை மோசமாக்கியது.

அதற்குள் வந்துவிட்ட காவல்துறையும் அங்கிருந்தவர்களும் அடிபோட்டு அடக்கி முடித்துச் சிகிச்சையளித்தாலும் பயனற்றுப்போய்விட்டது. ஏறத்தாழ இருபது நிமிட அமளிதுமளிக்குள் அப்பெண் இறந்துவிட்டாள்.

கணவன், போதகர் ஆகியோரின் மதப்பிரிவையும் சொல்லிவிடுகிறேன். "அப்போஸ்தலிக்க சபை".

**************************************
சரியான நேரத்தில் இரத்தம் வழங்கப்பட்டிருந்தால் அப்பெண் தப்பியிருப்பாளா இல்லையா என்பது இங்கு முக்கியமில்லை. அந்த நேரத்தில் வன்னியில் மருத்துவ வசதியில்லாமல் சாவென்பது பெரிய விசயமேயில்லை. 'பத்தோடு பதினொண்டு, அத்தோடு இதுவுமொண்டு' என்று கணக்கைச் சேர்த்திருக்க வேண்டியதுதான்.
ஆனால் இரத்தம் ஏற்றவிடாமல் தடுப்பதற்கு இப்படியொரு காரணம் சொல்லி ஒரு கூட்டமே-குறிப்பாக கணவனே வரிந்து கட்டி நின்றதை எவ்வகையில் எடுத்துக்கொள்வது?

இப்படி வேறு இடங்களில் அடிக்கடி நடக்கக்கூடும். அது அவ்வளவு ஆச்சரியத்துக்குரியதுமன்று. ஆனால் வன்னியில் இப்படியொரு சம்பவம் நடந்தது உண்மையில் ஆச்சரியம்தான். இந்தக்கதை வாய்வழி பரவியபோதுகூட அக்கம்பக்கத்து ஊர்க்காரர் நம்பவேயில்லை. பின் புலிகளின்குரல் வானொலியில் விவரமாய்ச் சொல்லப்பட்டபின்தான் நம்பத்தலைப்பட்டார்கள். அங்கு தனிப்பட்ட மதநம்பிக்கை, கணவன் மனைவி பிரச்சினை என்றெல்லாம் சொல்லி இப்படி கூத்தாடும் சூழ்நிலை இருக்கவில்லை. காவல்துறை வந்துதான் சட்டநடவடிக்கை எடுக்க வேண்டுமென்ற நிலைகூட இல்லை. ஏனைய இடங்களில் இருப்பது போன்று, அது மற்றவன் பிரச்சினை; ஏன் தலையிடுவான்? என்ற மனப்பான்மை ஒப்பீட்டளவில் குறைவாகவே இருந்தது. (மற்றவனின் பிரச்சினையில் மூக்கை நுழைத்து விடுப்புப் பார்க்கும் குணமும் இதற்கு முக்கிய காரணம்). அவன் யாரோ நான் யாரோ என்ற நகர்ப்புறச் சிந்தனை அறவேயில்லை.
ஆனாலும் இப்படியொரு சம்பவம் நடந்தேவிட்டது.

கைது செய்யப்பட்ட போதகருக்கும் கணவனுக்கும் என்ன தண்டனை கிடைத்தது என்று தெரியவில்லை.
***************************************
புரிந்துணர்வு ஒப்பந்தத்தின்பின் யாழ்ப்பாணம் போனேன். நாங்கள் 95 இல் வெளிக்கிடும்போது விரல்விட்டு எண்ணக்கூடிய எண்ணிக்கையில் மட்டுமேயிருந்த சபைகள், இன்று வகைதொகையின்றிப் பெருகிவிட்டன. (யாருக்காவது கிறிஸ்தவத்தில் எத்தனை பிரிவுகள் இருக்கின்றனவென்று எண்ணிக்கை தெரியுமா?) வாயிலே நுழையாத பல பெயர்கள்.

***************************************
எங்கட நண்பர் கும்பலில கரன் எண்டு ஒருத்தர் இருந்தவர். என்னைவிட ரெண்டு வயசு அதிகம். கராத்தே பழகப்போறது, மிருதங்கம் பழகப்போறது எண்டு துடியாட்டமானவர். நண்பர்கள் வட்டத்தில நல்ல முசுப்பாத்தியான ஆள். ஒருகட்டத்தில அவருக்குப் புது வசனங்கள் சொல்லிற பழக்கம் வந்துது. ஆராவது எரிச்சலில இருந்தா,
'நீ பூமியிலே கஸ்டப்பட்டாலும் தேவனின் ராஜ்ஜியத்திலே சந்தோசமாயிருப்பாய். ராஜாதி ராஜன் உன்னைப் போஜிப்பார்.' என்றவாறான வசனங்கள் வரும்.

கொஞ்ச நாளில் இவை அதிகமாக பலருக்கு எரிச்சல் அதிகரித்தது தான் மிச்சம். ஆள் எங்கேயும் செபக்கூட்டங்களுக்குப் போறாராரோ எண்டு ஐமிச்சம் வந்திட்டுது.

ஒருநாள் பின்னேரம் நேர கேட்டினம்.
"நீ உவங்கள் அல்லேலுயாக் காரரின்ர கூட்டங்களுக்குப் போறனியோ?'
'சீச்சி. எனக்கென்ன வேற வேலையில்லையே?'
'அப்ப உந்த வசனங்கள எங்க பொறுக்கினனீ?'
'உது அண்டைக்குப் பரிஸ்டர் ஆஸ்பத்திரியில சொன்னதுகள்'
எல்லாரும் சுதாரிச்சு விசயத்தைக் கேட்டபோது, நான் மேற்சொன்ன, வைத்திசாலையில் பெண்ணிறந்த சம்பவம்தான் அது எண்டு விளங்கீச்சு. அந்த நேரத்தில, போதகர் அப்பெண் பற்றியும் அவளின்ர சாவு பற்றியும் மற்றாக்களுக்கு விளங்கப்படுத்தேக்க சொன்ன வசனங்களில சிலதைத்தான் உவர் பொறுக்கிவைச்சிருந்திருககிறார்.

'அப்ப நீ அங்க நிண்டனியோ?'
'பின்ன?'
அந்த நேரம் இவர் என்னெண்டு அங்க இருந்தவர் எண்டு விசாரிச்சதில, சுகமில்லாமல் இருந்த பெரியம்மாவையோ ஆரையோ பாக்கப்போன இடத்தில அவசரமா இரத்தம் தேவையெண்டு கேள்விப்பட்டுப் போயிருக்கிறார். இவரின்ர குறூப் சரிவராது எண்டுபோட்டு, சரிவந்த இன்னொருத்தரிலயிருந்து இரத்தம் எடுக்க வெளிக்கிடேக்கதான் புருசன் காரனிண்ட தாண்டவம் தொடங்கியிருக்கு. இவரும் முழுப்பிரச்சினையும் முடியுமட்டும் அங்க நிண்டு, எல்லாம் முடியத்தான் வெளிக்கிட்டு வந்திருக்கிறார்.

அதை இவ்வளவுநாளும் தெரியப்படுத்தாமலிருந்தது போலவே தொடர்ந்தும் இருந்திருக்கலாம். அண்டைக்கு அவரின்ர நாக்கில சனி.
அவர் கதை சொல்லி முடிய, நாங்கள் ஓர் ஒதுக்குப்புறமான இடத்துக்கு வந்திட்டம்.
"மண்ணாங்கட்டி!
உவ்வளவையும் பாத்துக்கொண்டு நிண்டிட்டு இஞ்ச வந்து கதை சொல்லிறியோ?
பிறகென்ன கோதாரிக்கு கராட்டி கிராட்டி எண்டு ஊர் மேயிறாய்?

கும்பலில் மூத்த ஒருவர் கரனைப் பிடிச்சு மணலுக்க அமத்தி மொத்தத் தொடங்கிறார். கூடவே மற்றவர்களும் சேர்ந்து கொள்கிறார்கள். ஏதோ என்னாலான பங்களிப்பாக ரெண்டு குத்து விட்டேன். எல்லாம் முடிந்தபோது மறக்காமல் "தேவனின் ராஜ்ய' வசனத்தை கரனுக்குச் சொன்னேன்.
அண்டைக்குப்பிறகு அவர் அப்பிடி வசனங்கள் கதைச்சு நான் கேட்டதில்லை.
****************************

எழுத்துருவைத் தெரிவுசெய்ய.
பாமினி ஆங்கில உச்சரிப்பில்

[மேலுள்ள பெட்டியில் தட்டச்சினால் கீழுள்ள பெட்டியில் ஒருங்குறிக்கு (Unicode) மாற்றப்பட்ட எழுத்துரு கிடைக்கும்]


சுரதா, கிருபாவுக்கு நன்றி


© 2006  Thur Broeders

________________