Wednesday, November 28, 2007

தமிழீழச் சிக்கலைத் தீர்ப்பதற்கான திறவுகோல் தமிழகத்திலேயே உள்ளது

தமிழீழ பிரச்சினையின் தீர்வுக்கான சர்வதேசப் பாதை திறப்பு என்பது "தமிழக"த்தில்தான் உள்ளது என்று தமிழீழ அரசியல் ஆய்வாளர் மு.திருநாவுக்கரசு தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணத்திலிருந்து வெளிவரும் "உதயன்" நாளிதழில் கடந்த 18.11.07 அன்று மு.திருநாவுக்கரசு எழுதிய கட்டுரையில் இது தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே 'ஜெயலலிதாவுடன் கூட்டணி வைத்த வை.கோ உலகத்தமிழர்களுக்குப் பதில் சொல்ல வேண்டும்' என உதயன் ஆசிரியர் தலையங்கம் எழுதியிருந்தது. அதற்கு மாற்றுக்கருத்துக்கள் வலைப்பதிவுகளில் முன்வைக்கப்பட்டிருந்தன. இப்போது அதே உதயன் நாளிதழில் மு.திருநாவுக்கரசுவின் கட்டுரை வெளிவந்துள்ளது. ஈழநாதத்தில் வராமல் உதயனில் இக்கட்டுரை வெளியிடப்பட்டது சில சேதிகளைச் சொல்கிறது.
அவரின் கட்டுரையில் வலைப்பதிவுகளில் வைக்கப்பட்ட முக்கிய விடயமொன்று மீளச் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

தமிழகத்தில் உள்ள பல்வேறு கட்சிகளினதும் கட்சி அரசியலுக்குள் தமிழீழ மக்கள் விழத்தேவையில்லை.
அவர்கள் தங்களின் கட்சி அரசியலை தாங்களே பார்த்துக் கொள்வார்கள். தமிழக மக்கள் எந்தக் கட்சியை பதவிக்கு கொண்டு வர விரும்புகிறார்களோ அது அவர்களின் தெரிவு.


எனவே இக்கட்டுரையையும் இங்குப் பதிகிறேன்.
இதையும் புதினம் மூலமாகவே அறிந்தேன்.
அவ்வகையில் புதினத்துக்கு நன்றி.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

"சாமானியர்களின் சகாப்தம்" என்ற கூற்றை தமிழக மக்களிடம் எடுத்துக்காட்டிய அறிஞர் அண்ணா அதன் மூலம் தமிழக மக்களை ஓர் அரசியற் சக்தியாய் 1960களில் திரட்டி எடுத்தார். மக்கள் திரள் அரசியற் சக்தியான போது எதிரிகளின் கொடி, குடை, ஆலவட்டங்கள் சரிந்து விழுந்தன. இதன் வழியே தமிழகமானது மக்கள் திரள் அரசியலுக்கு பழக்கப்பட்ட களமாகியது.

அப்படி மக்கள் திரளாக்கப்பட்ட தமிழக அரசியலின் பலம் தான் தமிழீழ மக்களின் பலமும் கூட. இதனை உலகலாவிய அரசியல் யதார்த்தத்தில் வைத்துப் புரிந்து கொள்ள வேண்டியது அவசியம்.

தமிழக மக்களை ஜனநாயக அலைக்குள் இழுத்து விட்டதில் அண்ணாவிற்கு மிகப்பெரும் பங்கு உண்டு. அந்நியர்களிடமும், மன்னர்களிடமும், பிரபுக்களிடமும் சிக்குண்டு இருந்த அரசியல் அதிகாரத்தை மக்களின் கைகளுக்கு மாற்றுவதற்கான பெயர் தான் தேசியம்.

மன்னர்களிடமோ, வம்சங்களிடமோ, எதேச்சதிகாரிகளிடமோ, இனவாதிகளிடமோ அரசியல் அதிகாரம் சிறைப்பட்டிருக்காது. அதை மக்களின் கைகளுக்கு உரியதாவதைத்தான் ஜனநாயகம் என்கின்றோம். அத்தகைய ஜனநாயகத்தை வாழ வைப்பதற்கான ஒரு வடிவமே தேசியம் என்பதாகும். ஆதலால் தேசியம் என்பது ஜனநாயகம் ஆகும்.

எங்கு ஜனநாயகம் இல்லையோ அங்கு தேசியம் இல்லை. அரசியல் அதிகாரம் சாமானியர்களுக்கு உரியது. மக்களே நாயகர்கள். இது தான் தேசியத்தின் அறைகூவல். இத்தகைய அறைகூவல் 1960களில் தமிழகத்தில் துடிப்புடன் எழுந்தது.

திராவிட இயக்கத்தின் எழுச்சி என்பதும் இத்தகைய தேவையின் வெளிப்பாடுதான் "சாமானியர்களின் தசாப்தம்" என்ற இந்த ஜனநாயக உள்ளடக்கத்தைத்தான் "திராவிட இயக்கம்" என்றதன் பெயரில் மக்கள் ஆதரித்தார்கள்.

இலங்கைத்தீவின் அரசியலும் அரசியல் தீர்மானங்களிலும்

தமிழ் பேசும் மக்களுக்கு பங்கில்லை என்ற போது,

தமது வாழ்நிலையை அவர்கள் தீர்மானிக்க முடியாது என்ற நிலை ஏற்பட்ட போது

சிங்கள இனவாதம் தனது இரும்புக்கரங்களை விரித்தபோது

ஜனநாயகத்தின் தேவையாய் தமிழ்பேசும் மக்கள் தேசிய வழியில் போராடப் புறப்பட்டது தவிர்க்கமுடியாத ஒரு வரலாற்று நிர்ப்பந்தமாகும்.

அதுவே ஜனநாயகத்திற்கான ஒரே ஒரு மூலமும் ஆகும்.

அரசு இனவாத ஒடுக்குமுறையை கட்டவிழ்த்து விட்ட போது உலகிலுள்ள அரசுகள் அரசு என்ற ரீதியில் சிங்கள இனவான அரசுடன் சமரசம் செய்யும் ஒரு நடைமுறையே உலக அரசியலின் பொதுப் போக்காய் அமைந்தது.

பனிப்போரின் பின் பின்னான உலக யதார்த்தம் மேலும் இந்நிலையைப் பலப்படுத்தி உள்ளன. உலகலாவிய பொருளாதார நலன்களுக்காக உலகிலுள்ள அரசுகள் எல்லாம் தம்மிடையே சமரசம் செய்து இலங்கை அரசுடனும் சமரசப்போக்கை நடைமுறையிற் பின்பற்றுகின்றன.

இந்நிலையில் தமிழீழ மக்களுக்கான பலம் உலக அரசுகள் என்ற கட்டமைப்புக்குள் இருக்க முடியாது. அரசுகளிடம் நீதி, நியாயம் என்பது இல்லை. மாறாக பொருளாதார, இராணுவ, அரசியல் நலன்களே உள்ளன. இத்தகைய நலன்களுக்காக எத்தகைய அநீதியுடனும் அரசுகள் ஒத்துழைக்கும்.

இந்த அடிப்டையில் இலங்கை அரசுடன் உலகிலுள்ள அரசுகள் ஒத்துழைக்கும் நிலையில் உள்ளன. மனித உரிமை என்ற ஒரு கவசத்தை போர்த்துக்கொண்டு உலகிலுள்ள அரசுகள் ராஜபக்ச அரசாங்கத்தை குறை கூறினாலும் பொருளாதார, இராணுவப் பரிமாணங்களில் உலகில் உள்ள அரசுகள் ராஜபக்சவுக்கு செயல்பூர்வ அர்த்தத்தில் துணை நிற்பதன் அடிப்படையும் இதுவே ஆகும்.

இதில் "அரசு", "அரசாங்கம்" என்ற பதங்களை அரசியல் விஞ்ஞான அர்த்தத்தில் பொருள் பிரித்து எடை போட வேண்டும்.

அதாவது உலகில் உள்ள அரசுகளுக்கு இலங்கை அரசு அவசியமானது. ஆனால் ராஜபக்ச அரசாங்கம் பற்றி சில வசதியீனங்கள் உலகில் உள்ள சில அரசுகளுக்கு இருந்தாலும் அவைக்கு இலங்கை அரசு அவசியம் என்றதன் அடிப்படையில் தான் அத்தகைய அரசுகளும் ராஜபக்ச அரசாங்கத்திற்கு உதவும் நிலையில் உள்ளன.

இத்தகைய உலகலாவிய அரசுகளின் வியூகத்தை உடைப்பத்கான ஒரே ஒரு மூலோபாயம் தமிழகம் மட்டும் தான்.

முழு இந்தியாவிலுமே அதிகமாக ஜனத்திரள் அரசியலுக்கு பெரிதும் பழக்கப்பட்டிருக்கும் மக்களாய் தமிழக மக்கள் உள்ளனர்.

இது அரசியலில் சிறப்பானதும் முற்போக்கானதுமான அம்சமாகும்.

இத்தமிழக மக்களிடம் தமிழீழ மக்கள் பற்றிய நீதியின் பாலான இனமான உணர்வு பெரிதும் உண்டு.

சிங்கள உயர் குழாத்தின் இன ஒடுக்கு முறைக்கும் இனப் படுகொலைக்கும் எதிரான நீதியின் பாலான ஒரே ஒரு செயல்பூர்வக் குரலாய் அவர்கள் உள்ளனர்.

அத்தகைய ஜனத்திரளின் ஒருமித்த ஆதரவுதான் சர்வதேச அரங்கில் தமிழீழ மக்கள் பிரவேசிப்பதற்கான ஒரே ஒரு பாதையாகும்.

சென்னை திரண்டெழும் போது புதுடில்லி சென்னைக்குப் பணியும்.

புதுடில்லி பணியும் போது உலகம் புதுடில்லிக்கு தலைசாயும்.

இது தான் எளிமையான சூத்திரம்..

முதலில் இதனை முற்றிலும் விஞ்ஞான பூர்வமாக ஒரு கணம் விளக்குவோம்.

இராணுவ அர்த்தத்தில் இலங்கைத்தீவு ஓர் அரசாக இருப்பது இலாபம் என புதுடில்லி நினைக்கின்றது. ஆனால் அது ஒரு தவறான நினைப்பு என்பதை சிங்கள உயர் குழாத்தின் அரசியலை விளங்கிக் கொண்டோருக்குத் தெரியும்.

அது ஒரு புறமாக இருக்கட்டும்.

புதுடில்லி மேற்படி தவறாக புரிந்து கொண்டு இலங்கையின் "ஒருமைப்பாட்டை" ஆதரித்து உதவுகின்ற போதிலும் புதுடில்லியின் 40 நாடாளுமன்ற ஆசனங்களைக் கொண்ட சென்னை கிளர்ந்து எழும் போது அரசியல் நலனுக்காக புதுடில்லி சென்னைக்கு பணிய வேண்டிய நிர்ப்பந்தம் உண்டு.

முதலாவதாக ஆறரைக்கோடி மக்கள் தொகையைக் கொண்ட தமிழகம் எழுச்சி பெறும் போது, அதுவும் ஜனத்திரள் அரசியலுக்கு பழக்கப்பட்ட தமிழகம் எழும்போது புதுடில்லியால் பணிவதை தவிர வேறு வழி இருக்க முடியாது.

இத்தகைய ஜனத்திரள் என்னும் பலத்தை தமிழகத்திற்கு திரட்டிக்கொடுத்தது தமிழகத்திற்கான அறிஞர் அண்ணாவின் பெருங்கொடையாகும்.

இரண்டாவது அம்சம் மத்தியில் 40 நாடாளுமன்ற ஆசனங்கள் இந்தியாவில் தனிக்கட்சி ஆட்சியின் காலம் ஏறக்குறைய முடிவடைந்து விட்டது. மாநிலக் கட்சிகளை அரவணைக்கின்ற கூட்டரசாங்கங்களே இனிமேல் பதவிக்கு வரலாம்.

இந்த வகையில் கூட்டரசாங்கத்தை அமைக்கக்கூடிய எந்த ஒரு முக்கிய கட்சியும் தமிழகத்தை பகைக்க மாட்டாது.

ஆதலால் தமிழக மக்கள் தான் தமிழீழ மக்களுக்கான இருதய சக்தி அதேவேளை தமிழக மக்களுக்கும் தமிழீழப் பிரதேசமே முதற்தர பாதுகாப்பு அரணாகும் என்பதையும் கருத்திற் கொள்ள வேண்டும்.

வாய்ப்பு ஏற்படும் போதெல்லாம் சிங்கள உயர்குழாத்து இலங்கை அரசு இந்திய அரசுக்கு எதிரான அரசுகளுடன் சோரம் போகும் இயல்பைக் கொண்டுள்ளது.

இலங்கையின் முதலாவது பிரதமர் டி.எஸ்.சேனநாயக்கா காலத்தில் இருந்து இற்றை வரை இதனைத்தெளிவாகக் காணலாம்.

இலங்கையின் மூலோபாய முக்கியத்துவம் வாய்ந்த வடக்கு கிழக்கு என்ற தமிழீழப் பிரதேசம் தமிழ் மக்களின் கையில் இல்லை என்றாலும் சிங்கள உயர்குழாத்து இலகுவாகவே அந்நிய சக்திகளுக்கு அடிபணிந்து இந்தியாவுக்கு எதிரான சக்திகளுடன் தெளிவாக கூட்டுச் சேரும்.

இதன் படி தமிழீழ மக்களின் பலம் குன்றினால் தமிழக மக்களின் பாதுகாப்பு முதலில் கெடுவதுடன் அதன் வழி முழு இந்திய தேசத்தின் பாதுகாப்பும் கெட்டுவிடும் ஆதலால் தமிழீழ மக்களின் இப் பிராந்தியத்தின் அமைதிக்கும் பாதுகாப்புக்கும் ஒரு முக்கியமான கேந்திர மக்கள் என்பதை தமிழகமும் இந்திய தேசமும் கருத்தில் எடுக்க வேண்டியது அவசியம்.

பரந்த இந்தியாவோடு உலகிலுள்ள ஏனைய அரசுகளுக்கு பாரிய நலன்கள் உண்டு. ஆதலால் இந்திய அரசிற்குள்ளாகத்தான் அவை இலங்கைத் தீவை பார்க்க வேண்டிய நிர்ப்பந்தமும் உண்டு.

தற்போது இந்தியா உட்பட உலகில் உள்ள எந்த ஒரு அரசும் தமிழீழ மக்களுற்கு ஆதரவு இல்லை என்பது வெளிப்படையானது.

ஆனால் தமிழகத்தின் ஆறரைக்கோடி மக்களைக் கொண்ட ஜனத்திரளின் முன் புதுடில்லி பணியும் போது முதலில் புதுடில்லியின் கூட்டணி அரசுடனும் தலைசாய்க்க தொடங்கும். அதனைத் தொடர்ந்து உலகில் ஏனைய அரசுகளும் தலைசாய்க்க முற்படும் இறுதியில் எஞ்சியிருக்கும் சில அரசுகளும் காலகதியில் தலைசாய்க்கும். இதுதான் யதார்த்தம்.

ஆதலால் தமிழீழ மக்களின் அனைத்து நலன்களுக்குமான திறவுகோல் சென்னையில்தான் உள்ளது.

அந்த தமிழக ஜனத்திரளின் ஆதரவே

உலகளாவிய அர்த்தத்தில் தமிழீழ ஜனநாயக நலனுக்கான திறவுகோலும் கூட..

தமிழீழ ஜனநாயக மீட்பிலிருந்தே சிங்கள மக்களுக்கான ஜனநாயக மீட்பும் உருவாகும்.

சிங்கள உயர்குழாத்தின் இனவாத அரசியலுக்கு முடிவு கட்டுவதன் மூலம்தான் பரந்துபட்ட சிங்கள மக்களின் ஜனநாயகமும் உருப்பெற முடியும்.

தமிழகத்தில் உள்ள பல்வேறு கட்சிகளினதும் கட்சி அரசியலுக்குள் தமிழீழ மக்கள் விழத்தேவையில்லை.

அவர்கள் தங்களின் கட்சி அரசியலை தாங்களே பார்த்துக் கொள்வார்கள். தமிழக மக்கள் எந்தக் கட்சியை பதவிக்கு கொண்டு வர விரும்புகிறார்களோ அது அவர்களின் தெரிவு. பதவிக்கு வருவோரை எம்மை ஆதரிக்குமாறு கோருவதும் அதற்காக அனைத்துக் கட்சிகளையும் கோரி நிற்பதையுமே தமிழீழ மக்கள் பின்பற்ற வேண்டிய வழிமுறையாகும்.

மக்கள் அலை எழும் போது கட்சிகள் மக்கள் அலைக்கு செவிசாய்க்கும்.

ஆதலால் தமிழீழ தேசியப் பிரச்சினையில் தமிழகக் கட்சி நிலைப்பாடுகளுக்கு அகப்படாது தமிழீழ கொள்கை நிலைப்பாட்டின் பேரில் அனைத்துக் கட்சிகளின் ஆதரவை கோரி நிற்பதே அவசியமான மூலோபாயமாகும்.

தமிழகத்தில் இப்போது ஓர் அலை எழத்தொடங்கியுள்ளது. அதனைப்பற்றிப் பிடிக்க வேண்டியது தமிழீழ மக்களின் பொறுப்பாகும்.

முதலமைச்சர் தொடக்கம் இடதுசாரியக் கட்சிகள் உள்ளடக்கலாக சிறிய கட்சிகள் வரை இந்த ஆதரவு அலை எழுந்திருக்கின்றது. இது முழுத்தமிழக மக்கள் தழுவியதாக கட்சி பேதங்களுக்கும் அப்பால் பற்றிப் பரவக்கூடிய தொடக்கத்தை கொண்டுள்ளது.

இதனைத் தக்க வகையில் பயன்படுத்தவேண்டியது தமிழீழ மக்களின் பொறுப்பாகும்.

உலக அரசியல் ஒரே ஒரு அரசியல் பொருளாதார ஒழுங்குதான் இருக்கின்றது. அது உலகலாவிய ஏகாதிபத்தியத்தின் மையப்பொருளாதார ஒழுங்கு தான்.

உலகிலுள்ள அனைத்துப் பலம் வாய்ந்த பெரிய அரசுகளும் தமக்கிடையே இந்த முழு உலகத்தையும் வர்த்தக ஆதிக்க போட்டியின் நிமிர்த்தம் சந்தைகளாக பங்கு போட்டுள்ளன.

இரண்டாம் உலக மகா யுத்தத்திற்கு முன்பு ஏகாதிபத்திய நாடுகளுக்கிடைய உலகம் நாடுகளாகப் பங்கு போடப்பட்டது போல தற்போது ஏகாதிபத்திய அரசுகளுக்கடையே உலகம் நாடுகளாக அன்றி சந்தைகளாக பங்கு போடப்பட்டுள்ளது.

ஆதலால் இன்று உலகளாவிய ரீதியில் வர்த்தகப் போட்டியில் ஈடுபடும் எந்த ஒரு நாடும் ஏகாதிபத்திய நாடுதான்.

உலகளாவிய ரீதியில் ஒரு நாடு தனது பண்டங்களை சந்தையிற் போட்டு வர்த்தக ஆதிக்கப் போட்டியில் ஈடுபடுமானால் அந்த நாடு எந்த நிறக்கொடியை கட்டியிருந்தாலும் அது செயல்பூர்வ அர்த்தத்தில் ஏகாதிபத்திய கொடி தான்.

இந்த வகையில் விதிவிலக்கின்றி வர்த்தக ஆதிக்கத்தில் ஈடுபடும் அனைத்து நாடுகளும் ஓர் ஏகாதிபத்திய சந்தை மையக் கூட்டைக் கொண்டுள்ளன. ஆதலால் இத்தகைய அனைத்துப் பெரிய அரசுகளும் இலங்கை அரசுடன் அரசென்ற வகையில் சமரசத்தைக் கொண்டுள்ளன.

இந்தச் சமரசக்கூட்டில் சோசலிச நாடுகள் என்றும் முதலாளித்துவ நாடுகள் என்றும் வேறுபாடு இல்லை.

கொடியின் நிறம்தான் வேறு கொடித்துணிகளின் பண்பு ஒன்றுதான். ஆதலால் கற்பனாவாத அரசியலுக்கு வெளியே இரத்தமும் சதையுமாக அரசியலை யதார்த்த நிலையில் வைத்து மதிப்பிட்டு தமிழீழ மக்களின் தேவைக்குப் பொருத்தமான ஒரு யதார்த்த பூர்வ அணுகுமுறை அவசியம்.

மேற்படி பெரிய அரசுகளின் உலகலாவிய கூட்டுச் சமரசங்களுக்கு வெளியே தமிழக மக்களின் ஜனத்திரள் என்ற ஜனநாயகப் பலம் தான் அரசுகளின் சமரச ஒழுங்கிற்கு வெளியே தமிழீழ மக்களின் நலன்களை உலகப்பரப்பில் ஸ்தாபிக்க உதவும்.

உண்மையில் தமிழீழ மக்களின் போராட்டமானது தேசிய வடிவிலான ஜனநாயக மீட்புப் போராட்டமாகும்.

தமிழீழ மக்களின் நலன்கள் சென்னை - புதுடில்லி - உலகம் என்ற ஒரே ஒரு பாதையை மட்டுமே கொண்டிருக்கின்றது.

இலங்கை அரசு தமிழரை சர்வதேச அரசுகளால் சுற்றிவளைத்தே ஒடுக்குகின்றது.

அது இராணுவ பொருளாதார உதவிகளை ஒருபுறம் அமெரிக்காவிடம் இருந்தும் மறுபுறம் சீனாவிடம் இருந்தும் பெறுகின்றது. அப்படியே ஒருபுறம் இந்தியாவிடம் இருந்தும் மறுபுறம் பாகிஸ்தானிடம் இருந்தும் பெறுகிறது.

இப்படி கொள்கை, கொடி, குடை வேறுபாடின்றி தமிழருக்கு எதிராக அனைத்து நாடுகளின் உதவிகளையும் இலங்கை அரசு பெறுகிறது.

தேசிய இனப்பிரச்சனை என்பது ஓர் உள்நாட்டுப் பிரச்சனை அல்ல. அது எப்பொழுதும் ஒரு சர்வதேச பிரச்சனையாகும்.

ஆகையால் தமிழீழப் பிரச்சனையை சர்வதேசப் பரிமானத்தால் மட்டுமே தீர்க்க முடியும். தமிழீழ பிரச்சனையின் தீர்வுக்கான சர்வதேசப் பாதை சென்னை - புதுடில்லி- உலகம் என மட்டுமே அமைய முடியும்

Labels:

எழுத்துருவைத் தெரிவுசெய்ய.
பாமினி ஆங்கில உச்சரிப்பில்

[மேலுள்ள பெட்டியில் தட்டச்சினால் கீழுள்ள பெட்டியில் ஒருங்குறிக்கு (Unicode) மாற்றப்பட்ட எழுத்துரு கிடைக்கும்]


சுரதா, கிருபாவுக்கு நன்றி


Wednesday, November 21, 2007

பாமரன் பேட்டையும் இராஜராஜனும்

நான்கு மாதங்களின்முன்பு தொலைக்காட்சியில் ஒரு நிகழ்ச்சி பார்க்க நேரிட்டது. நிகழ்ச்சி தொடங்கி ஓரிரு நிமிடங்கள் தாமதமாகத்தான் பார்க்கத் தொடங்கினேன்.
நிகழ்ச்சியை நடத்திக்கொண்டிருந்த முகத்தை எங்கோ பார்த்திருக்கிறேனே என்று யோசித்து, பின் கண்டுபிடித்துவிட்டேன். அவர் எழுத்தாளர் பாமரன்.

நிகழ்ச்சியின் பெயர் 'பாமரன் பேட்டை'.

அன்றைய நிகழ்ச்சியில் பாமரனுடனான நேர்காணலுக்கு வந்திருந்தவர் 'பெயர் மாற்றல் நிபுணர்' இராஜராஜன். (அவர் சோழன் என்ற ஒட்டைச் சேர்த்துள்ளதாக நான் அறியவில்லை. பின் எப்படி சயந்தனின் இடுகையில் அவர் இராஜராஜ சோழன் ஆனார் என்பது விளங்கவில்லை. பெயர் மாற்ற நிபுணரின் பெயரையே மாற்றிய நிபுணர் சயந்தன்.)

முன்பு 'சிகரம்' தொலைக்காட்சி இங்கு ஒளிபரப்பாகியபோது, இராஜராஜனின் நிகழ்ச்சிகள் தொடர்ந்து ஒளிபரப்பப்பட்டன. தமிழகத் தொலைக்காட்சியொன்றில் அவர் செய்யும் பெயர்மாற்ற நிகழ்ச்சியே இங்கு மறுஒளிபரப்பாகிக் கொண்டிருந்தது. எங்காவது இந்நிகழ்ச்சி பார்க்க நேரிட்டால் பொழுதுபோக்காக அவ்வப்போது பார்த்திருக்கிறேன். ரி. ராஜேந்தருக்கு இவர்தான் பெயர்மாற்றினார் என்ற தகவல் அறிந்தபோது மனிதரில் ஒரு சுவாரசியமான ஈர்ப்பு ஏற்பட்டது. (கவனத்துக்குரிய கலைஞர் ஒருவரையே மடக்கிப்போட்டாரே என்ற ஆச்சரியத்தால் இருக்கலாம்). அதன்பின் சிகரம் நின்றுபோனது. தரிசனம் வந்தது. நல்லவேளையாக இந்தக் கோமாளி நிகழ்ச்சிகள் தரிசனத்தில் ஒளிபரப்பாகவில்லை.

இனி பாமரன் பேட்டைக்கு வருவோம்.
தொடக்கத்தில் தனது துறையைப் பற்றிச் சிறு அறிமுகத்தை அளித்தார் இராஜராஜன். பெயர்தான் உலகத்தில் எல்லாவற்றையும் தீர்மானிக்கிறதென்பது அவரின் அடிப்படை வாதம். பின்னர் நடந்தது சுவாரசியமான உரையாடல்.

** இந்தியச் சிறைகளிலிருக்கும் அனைத்துக் கைதிகளையும் தன்பொறுப்பில் விடுமாறும், அவர்களை தான் பொறுப்பெடுத்து அவர்களின் பெயர்களை மாற்றி, அவர்களை நல்லவர்களாக, வல்லவர்களாக மாற்றிக் காட்டுவதாகச் சொன்னார்.
சிறையிலிருந்து விடுதலை செய்து கையளிப்பதா அல்லது சிறையிலிருக்கும் நிலையிலேயே கையளிப்பதா என பாமரன் கேட்க, விடுதலை தேவையில்லை; சிறையில் வைத்தே பொறுப்பளிக்கும்படி இராஜராஜன் கேட்டுக்கொண்டார்.

** தற்போதைய அமெரிக்க அதிபர் ஜோர்ஜ் புஷ் பற்றி பாமரன் கேட்க, அவர்தான் உலகப்பயங்கரவாதத்தின் தலைவர் என்பதை இராஜராஜன் தெளிவாகச் சொன்னார். அவரின் பெயரை மாற்றிவிட்டால் அவர் நல்லவராகிவிடுவார், அமெரிக்காவும் உலகமும் நிம்மதியாக இருக்கலாமென்பதையும் இராஜராஜன் சுட்டிக்காட்டினார். அவரின் தந்தைக்கும் புஷ் என்ற பெயர் இருப்பதையும், அவரும் பயங்கரவாதத் தலைவராக இருந்ததையும் சுட்டிக்காட்டி, பெயர்தான் இந்த மனப்பான்மைக்குக் காரணமென்ற தனது வாதத்தை இன்னும் வலுவாக்கினார்.

*சிறிலங்காவின் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பற்றி பாமரன் கேட்க, அவருக்கும் அந்தப் பெயர்தான் பிரச்சினையாக இருந்ததென்றும் பெயரை மாற்றினால் அவர்கள் நல்லவர்களாக மாறி நாட்டுப்பிரச்சினை தீர்ந்துவிடுமென்றும் இராஜராஜன் கூறினார்.

** இடங்களுக்கு, நாடுகளுக்குப் பெயர்மாற்றுவது தொடர்பாக நேர்காணல் திரும்பியது.
'பம்பாய்' என்பதை 'மும்பை' என்று மாற்றியது தவறு என்றார் இராஜராஜன். அப்படி மும்பாயாக மாறியபின்புதான் அங்குக் குண்டுவெடிப்புக்கள் வன்முறைகள் என்பன தலைதூக்கின; அதற்குமுன்பு அது அமைதியான நகரமாக இருந்தது என்றார்.
இடையில் குறுக்கிட்ட பாமரன், பெயர் மாற்றத்துக்கு முன்பு நடந்த பல குண்டுவெடிப்புக்கள், அசம்பாவிதங்களைச் சொல்லிக் காட்டினார். அதற்கு, முன்பு குறைவாக இருந்தன, பெயர்மாற்றத்தின் பின்னர்தான் அவை அதிகரித்தன என்றார் இராஜராஜன். பாமரன் மேலும் சில விவரங்களைச் சொல்லப் புறப்பட்டபோது, 'நான் இதுபற்றி நீண்ட ஆராய்ச்சிகள் செய்துள்ளேன். தகவல்களைச் சேகரித்து வைத்துள்ளேன். இதுதொடர்பாக நான் உங்களுக்கு அவற்றைத் தரமுடியும்' என்று கூறினார். பாமரன் அத்தோடு மும்பாய் விடயத்தைக் கைவிட்டார்.

டில்லியை 'நியு டில்லி' என மாற்றியபின்பு அங்கு அமைதி நிலவுவதாகவும் அதற்குமுன் அங்கும் குண்டுவெடிப்புக்கள், வன்முறைகள் தலைவிரித்தாடின என அடுத்த விடயத்தைத் தொடங்கினார் இராஜராஜன். பாமரன் அதற்கும் சில விவரங்களைக் கொடுத்து, நியுடில்லி எனப் பெயர்மாற்றிய பின்னர்தான் அதிக வன்முறைகள் நடந்தன எனச் சொன்னார். பாராளுமன்றக் கட்டடத் தொடர் மீதான தாக்குதல் உட்பட சிலவற்றைச் சொன்னார் பாமரன். வழமைபோல 'நான் இதுபற்றி நீண்ட ஆராய்ச்சி செய்துள்ளேன்' என்ற பஞ்சாங்கத்தைப்பாடி அதிலிருந்தும் நழுவினார் இராஜராஜன்.

இலங்கைச் சிக்கல் பற்றியும் பேச்சு வந்தது. அது சிலோன் எனப் பெயர் இருந்தவரைக்கும் ஆசியாவின் பூந்தோட்டமாகத் திகழ்ந்ததாகவும், சிறிலங்கா எனப்பெயர் மாற்றியபின்புதான் அங்குப் பிரச்சினை தோன்றியதாகவும் இராஜராஜன் குறிப்பிட்டார்.
பா.: எப்போ இந்தப் பெயர் மாற்றம் நிகழ்ந்தது?
இரா: கொஞ்ச வருசத்துக்கு முன்னாடிதான்.
பா. அது சிலோனாக இந்தப்பவே 56 ஆம் ஆண்டுக் கலவரம் உட்பட பல பிரச்சினைகள் நடந்தன, தமிழர்கள் கொல்லப்பட்டார்கள்...
இரா: ஆமா, ஆனா பெயர் மாத்துறதுக்கு முன்னாடி பெரிசா பிரச்சினை இல்ல. அதுக்குப்பின்னாடிதான் ஒருத்தனை ஒருத்தன் அடிச்சிக்கிட்டு சண்டை போட ஆரம்பிச்சாங்க...

** இந்தியாவில் சில முக்கிய புள்ளிகளின் பெயர்களை மாற்றியது இந்த இராஜராஜன் தான். அதுபற்றியும், அப்படிப் பெயர்மாற்றப்பட்டவர்களில் இருவரின் தற்போதைய நிலைபற்றியும் பாமரன் கேள்வியெழுப்பினார்.
ஒருவர், தற்போது விஜய ரி. ராஜேந்தர் எனப் பெயர்மாற்றிக்கொண்டிருப்பவர்.
பெயர் மாற்றத்தின்பின்னான அவரின் தோல்வி குறித்துக் கேட்கப்பட்டபோது,
அவர் தன்னிடம் பெயர்மாற்ற வந்தபோது அரசியல் அனாதையாகத்தான் இருந்தாரென்பதைக் குறிப்பிட்டார் இராஜராஜன். இன்னும் சிலவற்றைச் சொல்லியவர், 2011 இல் ரி.ராஜேந்தர் தமிழகத்தின் மிகமுக்கிய அரசியற்புள்ளியாக வருவார் என்பதை தான் எதிர்வுகூறியதாகவும், அது கட்டாயம் நடக்குமென்றும் உறுதியளித்தார்.

இவரால் பெயர் மாற்றப்பட்ட இன்னொருவர் பா.ஜ.க. திருநாவுக்கரசு.
"அரசராக இருந்தவரை அரசுவாக பெயர் மாற்றினீர்களே, (நான் சொல்வது சரிதானே? அல்லது மறுவளமாகவா?) அந்தப் பெயர் மாற்றத்தின்பின்னர்தான் அவரின் அரசியலில் மிகப்பெரும் வீழ்ச்சியேற்பட்டது. மத்திய அரசில் முக்கியமான அரசியற்புள்ளியாக (அமைச்சராக?) இருந்தவர், பெயர் மாற்றத்தின்பின்னர் சொந்த மண்ணிலேயே போட்டிபோட முடியாத நிலைக்கு ஆளாகவிட்டாரே" என்று பாமரன் கேட்டார்.
அதற்கு இராஜராஜன் அளித்த பதில்தான் சிறப்பானது.

தனது பெயர்மாற்றத்தின்படி அவர் மிகவுயர்ந்த இடத்துக்கு வந்திருக்க வேண்டியவர். ஆனால் அவரின் தவறான அணுகுமுறையால்தான் இப்படியாகப் போனார். தவறான அணுகுமுறையென்ன என்பதை அவர் விளங்கப்படுத்தினார். அதாவது கட்சியைவிட்டு காங்கிரஸ் பக்கம் தாவியிருக்க வேண்டுமாம். சரியான நேரத்தில் தாவாதபடியால் அவரால் முக்கியமான புள்ளியாக வரமுடியவில்லையாம். அவர் சொந்தக் கட்சிக்கு விசுவாசமாக இருக்க நினைத்தார்; அதனால்தான் இப்படி ஆனார். திருநாவுக்கரசுவுக்கு அரசியல் சாணக்கியத்தனம் இல்லை. அதுதான் பிரச்சினையே ஒழிய தனது பெயர்மாற்றத்தில் எந்தப் பிரச்சினையுமில்லை என்றார்.
[இவ்விடத்தில் பாமரன் முகத்தில் தெரிந்தது நையாண்டித்தனமான சிரிப்பா அல்லது அதிர்ச்சியா என்பது தெரியவில்லை. ஆனால் மனிதர் ஆடிப்போய்விட்டார்.]

'அப்போ, அவர் வெல்லும் கட்சிக்குத் தாவியிருக்க வேண்டுமென்பதையா சொல்கிறீர்கள்?' என பாமரன் ஒரு தெளிவுக்காகக் கேட்டார்.
இராஜராஜன் அதைத்தான் தெளிவாகத் திருப்பச் சொன்னார். (அதைத்தானையா எல்லா அரசியல்வாதியும் செய்யிறான், இதுக்கெதுக்குப் பெயர் மாற்றம்?)

** தந்தை பெரியாரைப் பற்றியும் பேச்சு வந்தது. அவருக்குப் பெரியார் என்ற பெயர் வந்தபிறகுதான் அவர் பிலபலமானார் என்று இராஜராஜன் கூறினார். பெரியார் என்ற பெயர்பற்றி பாமரன் ஏதோ குறுக்கிட, 'மக்கள்தான் அந்தப் பெயரை அவருக்குக் கொடுத்தார்கள், அதன்பின்னர்தான் அவர் பிரபலமானார்' என்று இராஜராஜன் கூறினார்.
பாமரன்: அப்போ நீங்களும் பெரியார் என்ற பெயரை வைத்திருக்கலாமே? பிரபலமாவதோடு சமூகத்துக்கும் நல்லது செய்திருக்கலாம். ஏன் இராஜராஜன் என்ற பெயரைத் தேர்ந்தெடுத்தீர்கள்?
அதற்கு இராஜராஜன் பெரிதாகச் சிரித்தபடி பாமரனுக்கு நக்கல் தொனியில் பதிலளிக்கிறார்,
"அட என்னங்க நீங்க?... இந்த ஒட்டுமொத்த உலகத்தையே ஒரு புரட்டுப் புரட்டப் போகிறேன் என்கிறேன், என்னைப்போய் பெரியார் என்று பெயர் வைக்கச் சொல்கிறீர்கள்? ராஜராஜன் என்ற பெயர்தான் இதற்குச் சரி."

அத்தோடு பாமரன் அடுத்த விடயத்துக்குத் தாவிவிட்டார்.;-).

** நிகழ்ச்சியின் இறுதிக்கட்டத்தில் இராஜராஜனைப் பார்த்து,
'முன்பு கூட்டங்களில்தான் பேசிக்கொண்டிருந்தீர்கள், இப்போது தொலைக்காட்சியிலும் இடையறாது வருகிறீர்களே?' என்று கேட்டதற்கு அதைப் பெருமைபொங்க ஒப்புக்கொண்டார் இராஜராஜன். தனது நிகழ்ச்சி ஒளிபரப்பாகும் நேர அட்டவணையைச் சொன்னார்.

பாமரன்: முன்பெல்லாம் சின்னக்குழந்தைகளுக்கு உணவூட்ட உம்மாண்டி வருது என்று பயங்காட்டிச் சோறூட்டுவார்கள் தாய்மார், இப்போது இராஜராஜன் ரீவியில் வரப்போறார் என்று சொல்லித்தான் உணவூட்டுகிறார்களாம், உண்மையா?
[பாமரனின் இந்தக் கேள்வி எனக்கு பண்பற்றதாகவே தோன்றியது. என்னதான் ஒரு கோமாளியை முன்னிருத்திவைத்து நேர்காணல் செய்தாலும் இப்படி அவமதிக்கக்கூடாது. அதுவும் நாமே நேர்காணலுக்கு அழைத்துவிட்டு இப்படிச் செய்யக்கூடாதென்பது என் கருத்து.]

ஆனால் எந்தச் சலனமுமில்லாமல் சிரித்துக்கொண்டே, ஆஆ... அப்படியா? என்று கேட்டார் இராஜராஜன்.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

சுமார் நான்கு மாதங்களுக்கு முன்னர் பார்த்த நிகழ்ச்சி. இன்னும் சில சுவாரசியமான சம்பவங்கள் விடுபட்டிருக்கின்றன என நினைக்கிறேன்.

இவ்விடுகையெழுதத்தூண்டிய சயந்தனுக்கு நன்றி.

Labels: , , , , ,

எழுத்துருவைத் தெரிவுசெய்ய.
பாமினி ஆங்கில உச்சரிப்பில்

[மேலுள்ள பெட்டியில் தட்டச்சினால் கீழுள்ள பெட்டியில் ஒருங்குறிக்கு (Unicode) மாற்றப்பட்ட எழுத்துரு கிடைக்கும்]


சுரதா, கிருபாவுக்கு நன்றி


Friday, November 09, 2007

வை.கோ உலகத்தமிழர்களுக்குப் பதில் சொல்ல வேண்டுமா?

யாழ்ப்பாணத்திலிருந்து வெளிவரும் 'உதயன்' செய்தியேடு, வை.கோ இன்னமும் ஜெயலிதாவுடனான அரசியற்கூட்டணியில் தொடர்வது பற்றி உலகத்தமிழர்களுக்கு விளக்கம் தரவேண்டுமென ஆசிரியர் தலையங்கம் எழுதியுள்ளது.

வை.கோ ஜெயலலிதாவுடன் அரசியற்கூட்டணி வைத்திருப்பது தவறாம்; அதன் காரணத்தால் உலகத் தமிழர்களுக்கு அவர் பதில் தரவேண்டுமாம். ஜெயலிதாவுடன் கூட்டணி வைத்தது ஏன் தவறென்றால் அவர் (ஜெயலலிதா) ஈழத்தமிழர்களுக்கு எதிரானவராம். உதயனின் ஆசிரியர் தலையங்கத்தின் இறுதிப் பந்தி இங்குத் தரப்படுகிறது.

ஈழத் தமிழர்களுக்கும், அவர்தம் நியாயம் மிக்க போராட்டத்துக்கும் முழு ஆதரவாளர் என உலகுக்குத் தம்மை அடையாளப்படுத்தி, வெளிப்படுத்தி நிற்கும் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர் வைகோ போன்றோர், இத்தகைய ஈழத் தமிழர் விரோதப் போக்குடைய ஜெயலலிதாவுடன் அணி சேர்ந்து அவருக்கு வால் பிடிப்பதாகக் காட்டிக் கொள்வது என்ன நியாயம்? உலகத் தமிழர் சமூகத்துக்கு அவர் உரிய பதில் தருவது இன்றைய நிலையில் தவிர்க்க முடியாத கட்டாயமாகும்.


வை.கோ மீது ஏராளமான குற்றச்சாட்டுக்கள், விமர்சனங்கள், நையாண்டிகள் வைக்கப்படுகின்றன. யாரும் என்னவும் செய்துவிட்டுப் போகட்டும். வை.கோ தொடர்பில் அவரவருக்குப் பல பிரச்சினைகள். ஆனால் நான் கொண்டிருக்கும் அரசியல் நிலைப்பாடுடைய, தன்னைத் தமிழ்த்தேசிய ஊடகமாகக் காட்டிக்கொள்ளுமோர் ஊடகம் இதை எழுதியபோது என்னுணர்வையும் பதிந்து வைக்கும் தேவையுள்ளதாக நினைக்கிறேன். உதயன் எழுதியதாலேயே அது ஈழத்தவர்களின் நிலைப்பாடாகக் கருதப்படக்கூடிய ஏதுநிலைகள் தென்படுவது ஒரு காரணமாகிறது.
போதாததற்கு, அங்கிங்குப் பொறுக்கி ஒட்டுவதையே முழுநேரத் தொழிலாகக் கொண்ட - 'டமில்' தேசிய ஊடகங்களாகத் தம்மைக் கட்டமைத்துக்கொண்டவை, உதயனின் இவ்வாசிரியர் தலையங்கத்தைத் தமது இணையத்தளங்களில் ஒட்டிக்கொண்டிருப்பதாலும், அவ்வூடகங்களில் வரும் அனைத்தையும் ஒட்டிக்கொண்டிருக்கும் வலைப்பதிவுகள் சிலவற்றிலும் அத்தலையங்கம் வெளியிடப்பட்டதாலும் தனிப்பட்ட என்னுணர்வைப் பதிவாக்குவது அவசியமாகிறது; அது எவனுக்குமே தேவைப்படாதென்றபோதும்கூட.

உதயன் இப்படியொரு தலையங்கம் எழுதவேண்டிய வந்ததன் முதற்காரணம், அண்மையில் தமிழக முதல்வர் மு.கருணாநிதி எழுதிய "இரங்கற் பதிவொன்றுக்கு" ஜெயலலிதா எதிர்ப்புத் தெரிவித்த சம்பவம்தானெனக் கருதமுடிகிறது. அதை முதன்மைப்படுத்தி ஜெயலலிதா, சோ, சுப்பிரமணிய சுவாமி உள்ளிட்ட கும்பலுக்குத் திட்டு விழுகிறது. முதல்வருக்குப் பாராட்டுத் தெரிவிக்கப்படுகிறது. இறுதியில் ஜெயலலிதாவோடு அரசியற்கூட்டணி வைத்துக்கொண்டு அவருக்கு 'வால்பிடித்து'க்கொண்டிருக்கம் வை.கோ.வுக்குக் கண்டனம் தெரிவிப்பதோடு அவர் "உலகத்தமிழர்களுக்கு" விளக்கம் கொடுக்க வேண்டுமென முடிகிறது.

[முதலில், உதயன் உலகத்தமிழர்கள் சார்பாகக் கதைக்கிறதா ஈழத்தமிழர்கள் சார்பாகக் கதைக்கிறதா எனக் குழப்பம் வந்தது. 'உலகத் தமிழர்கள்' அனைவருமே வை.கோ பதில்சொல்ல வேண்டுமென எதிர்பார்க்கிறார்களா என்ற கேள்வியும் வந்தது. "ஈழம் என் வீடு, தெற்காசியா என் முற்றம், உலகம் என் கிராமம்" என்றெழுதிய கவிஞர் ஜெயபாலன் உதயனுக்குள் ஊடுருவிவிட்டாரா, அல்லது கனியன் பூங்குன்றன் சொன்ன 'யாதும் ஊரே யாவரும் கேளிர்' எண்டநோக்கிலதான் உதயன் சொல்ல வருதோ - அப்பிடிச் சொன்னாலும் ஏன் தமிழரைமட்டும் சொல்லுறாங்கள் எண்டெல்லாம் நிறைய வழிகளில் இதைக் 'கட்டுடைக்க'ப் புறப்பட்டு, அதற்கெல்லாம் நேரமில்லாத காரணத்தால், தட்டச்சும்போது போகிறபோக்கில் உலகத்தமிழர்களென்று தட்டிவிட்டார்களென நினைத்துக்கொண்டேன். ஈழத்தமிழர்களை - குறிப்பாக புலிகளை அரசியற்றலைமையாக ஏற்றுக்கொண்டவர்களையே உதயன் குறிப்பிடுகிறது எனக் கருதிக்கொண்டு எனது கருத்தைத் தெரிவிக்கிறேன்.]

இங்கு எனக்கொரு குழப்பம் வந்துவிட்டது.
வை.கோ எந்தக் கட்சியோடு கூட்டணி வைக்கவேண்டும், எப்படி அரசியல் நடத்த வேண்டுமெனச் சொல்வதற்கு ஈழத்தவர்கள் யார்? உதயன் யார்? அது முழுவதும் தமிழக அரசியலோடு தொடர்புடையது. நீங்களா போய் வை.கோ. வின் கட்சிக்கு வாக்களிக்கப்போகிறீர்கள்? தமிழக அரசியலில் ஒருவரோ ஒரு கட்சியோ எடுக்கும் முடிவுக்கும் செயன்முறைக்குக்கும் கட்டளையிட நீங்கள் யார்? உங்களுக்கு என்ன அருகதையிருக்கிறது? தமது 'தமிழக அரசியல்' செயற்பாடுகளுக்கெல்லாம் ஈழத்தவர்களுக்கு விளக்கமளிக்க வேண்டிய தேவை அவர்களுக்கெங்கே இருக்கிறது?

சரி, இவ்வளவு கதைக்கும் நீங்கள் வை.கோ. வுக்கு இருந்த - இருக்கும் தெரிவுகளை யோசித்தீர்களா? கூட்டணி தொடர்பில் வை.கோ என்ன செய்திருக்க வேண்டுமேனக் கருதுகிறீர்கள்?
தனித்துப் போட்டியிடுவதையா? அல்லது சுந்தரமூர்த்தி போன்ற பதிவர்கள் சொன்ன இன்னொரு தெரிவான கட்சியைக் கலைத்துவிட்டு வாக்கு அரசியலில் இருந்து விலகிக் கொள்வதையா? ஈழத்தவர்களுக்கு வை.கோ மூலம் கிடைக்கும் நன்மையே அவர் வாக்கரசியலில் முக்கிய புள்ளியாக இருப்பது மட்டும்தான். வாக்கரசியலை விட்டு வெளியிலே ஈழத்துக்காக உயிரையும் கொடுக்கத் துணிந்த ஏராளம் திராவிட, பெரியாரிய, இவற்றிலே சேராத தொண்டர்கள் இருக்கிறார்கள்.

தமிழக அரசியலில் ஒருவரின் செயற்பாட்டையும் அவரின் ஈழம் தொடர்பான நிலைப்பாட்டையும் ஒன்றாகக் குழப்பக்கூடாதென்பதே எனது கருத்து. இதை வலுப்படுத்த, நாங்களெல்லாம் தலையில் தூக்கிவைத்தாடும் ஒருவரைக் கொண்டே விபரிக்கலாம்.
மறைந்த முன்னாள் தமிழக முதலமைச்சர் எம்.ஜி.ஆரை, புலிகளும் சரி, புலிகளின் ஆதரவாளர்களும் சரி, எப்படிக் கொண்டாடிக்கொண்டிருக்கிறார்களென்பது அனைவருக்கும் தெரியும். மிக முக்கிய காலகட்டத்தில் செயற்கரிய உதவிகளைச் செய்து புலிகளை வளர்த்ததற்காகவும் அதன்மூலம் ஈழப்போராட்டத்திற்கு உதவியளித்ததற்காகவும் "மட்டுமே" - ஆம் அதற்காக மட்டுமே - நாம் எம்.ஜி.ஆரை நன்றியோடு நினைவுகூர்கிறோம்.
யாராவது அவரின் தமிழக அரசியல் நிலைப்பாடு, செயற்பாடுகளைக் கருத்திற்கொண்டுள்ளோமா? அவரின் ஊழல்கள், மோசடிகள், அடாவடிகள், தனிப்பட்ட வாழ்க்கை என எதையாவது இதற்குள் கலந்தோமா? அப்படிக் கருதப்புறப்பட்டால் அவர் மீதான எமது நிலைப்பாடு மாறக்கூடுமல்லவா? அவையெல்லாவற்றையும் புறந்தள்ளி தனியே எம்மோடு தொடர்புடைய விடயத்தை மட்டும் கருத்திற்கொண்டுதான் இன்றுவரை எம்.ஜி.ஆரை அணுகிவருகிறோம்.

ஆனால் எம்.ஜி.ஆர் அளவுக்குக்கூட எந்தவொரு குற்றச்சாட்டையும் சுமத்தமுடியாத, தனிப்பட்ட வாழ்விலும்சரி, அரசியல்வாழ்விலும் சரி அப்பழுக்கற்ற வை.கோ. மீது, அவரின் அரசியற்கூட்டணி நிலைப்பாடு தொடர்பாக விமர்சனம் வைத்து அதற்குரிய விளக்கத்தைச் சொல்ல வேண்டுமெனக் கேட்குமளவுக்கு நீங்கள் வந்துவிட்டது எவ்வாறு?

இந்தப்பிரச்சினையில் வை.கோ. கேட்கும் எதிர்க்கேள்விகள் மிகமிக நியாயமானவை. பலசந்தர்ப்பங்களில் கேள்விகளுக்குப் பதில் சொல்லமுடியாது; ஆனால் எதிர்க்கேள்விகள் மூலம் எதிராளிக்கான பதிலைக் கொடுக்கலாம். இப்போது வை.கோ செய்வதும் ஒருவகையில் அப்படித்தான் தெரிகிறது. வை.கோ. வால் நிச்சயமாக தகுந்த விளக்கத்தைக் கொடுக்க முடியாத சூழ்நிலைதான் இப்போதுள்ளதாகப் படுகிறது. ஆனால் அவரின் எதிர்க்கேள்விகள் பல நியாயமானவை.

வை.கோ பாணியிலேயே நானும் உதயனைப் பார்த்துச் சில எதிர்க்கேள்விகள் கேட்க முடியும்.
ஓர் இரங்கற்பதிவெழுதியதற்காக தற்போது திடீரென தலையில் தூக்கிவைத்தாடும் தமிழக முதல்வர் இப்போதும் காங்கிரஸ் கட்சியோடுதான் கூட்டணி வைத்துள்ளார். அது பிரச்சினையில்லை. ஆனால் தமிழ்ச்செல்வனின் படுகொலைக்கு இனிப்பு வழங்கிக் கொண்டாடிய காங்கிரஸ் கட்சியோடு கூட்டணி வைத்துள்ளார். (கவனிக்க: காங்கிரஸ் தலைவர் ஒருவர் இனிப்பு வழங்கிக் கொண்டாடியது புகைப்படத்துடன் தினக்குரலில் செய்தியாக வந்துள்ளது. இச்செய்தி பிழையானதென சரியான முறையில் மறுத்தால் நான் இப்பத்தியை நீக்கிவிடுவேன்). அதைவிட, முதல்வரின் இரங்கற்பதிவுக்கு ஜெயந்தி உட்பட வேறும் சில காங்கிரஸ் பிரமுகர்கள் கண்டனம் வெளியிட்டுள்ளனர். இவர்களோடுதான் கருணாநிதி இன்னமும் கூட்டணி வைத்துள்ளார். முதல்வரின் இரங்கற் பதிவு பற்றி ஜெயலலிதா சொன்னதற்கும் காங்கிரஸ் பிரமுகர்கள் சொன்னதற்குமுள்ள வித்தியாசத்தை உதயன் விளக்குமா? ஜெயலலிதாவாவது இனிப்பு வழங்கிக் கொண்டாடாமல் விட்டார்.
இப்போது என் கேள்வியென்னவென்றால், இரங்கற்பதிவைப் பழித்த காங்கிரஸ் கட்சியோடு கூட்டணி வைத்திருக்கும் முதல்வர், உலகத்தமிழரெல்லாம் வேண்டாம், ஈழத்தமிழர்களுக்கு ( வேண்டாம் யாழ்ப்பாணத்தமிழர் - அதுவும் வேண்டாம், சங்கானை, சித்தங்கேணி, சண்டிலிப்பாய் எண்டு ஏதாவது ஓர் ஊர்த்தமிழர்களுக்கு) விளக்கமளிக்கக் கடமைப்பட்டுள்ளாரென அடுத்த ஆசிரியர் தலையங்கம் எழுதுவீர்களா?

** கவனிக்க: முதல்வர் காங்கிரசோடு கூட்டணி வைத்திருப்பது தவறென்றோ, அவர் அதற்கான விளக்கத்தை ஈழத்தவர்களுக்கு அளிக்க வேண்டுமென்றோ நான் கேட்கவில்லை. உதயன் நாளிதழுக்கான ஓர் எதிர்க்கேள்வியே அது. இது தொடர்பில் எனது நிலைப்பாட்டை இறுதியில் ஓரிரு வரியில் எழுதுகிறேன்.

ஜெயலலிதாவோடு கூட்டணி வைத்ததற்கோ வால்பிடிப்பதற்கோ ஈழத்தவர்கள் கவலை கொள்ளவும் உணர்ச்சிவசப்படவும் எதுவுமில்லையென்பதே என்கருத்து. அது அந்த மாநில அரசியல் சார்ந்தது. அந்தக் கூட்டணிக்குப் போனதாலேயே வை.கோ. ஈழத்தமிழரின் போராட்டம் தொடர்பாக ஏதாவது சமரசம் செய்துகொண்டாரா, மாறுபாடான நிலைப்பாட்டைக் கொண்டுள்ளாரா என்பதே நாம் கனிக்க வேண்டியது. வை.கோ மாறவேயில்லை. முன்பு போலவே அதே தீவிரத்துடன்தான் இயங்குகிறார். இந்நிலையில் அவரின் அரசியற்கூட்டணி தொடர்பாக நாம் கவலைகொள்ளவோ கரிசனை கொள்ளவோ தேவையில்லை. அதையும்விட அதற்கான உரிமை எமக்கில்லை.
இதை இன்னும் உறைக்கும்படி வேறொரு முறையில் சொல்கிறேன்.

வை.கோ. வோ அல்லது தமிழகத்தைச் சேர்ந்த தீவிர ஈழவிடுதலை ஆதரவாளர்களோ புலிகளைப் பார்த்து,
'நீங்கள் ஏன் சமாதானப் பேச்சுக்குப் போனீர்கள்? நீங்கள் ஏன் சண்டையைத் தொடக்கினீர்கள்? நீங்கள் ஏன் யுத்தநிறுத்தம் அறிவித்தீர்கள்? நீங்கள் ஏன் ரணிலை வெல்லவைப்பதை விட்டுவிட்டு ராஜபக்ஷவை வெல்ல வைத்தீர்கள்? நீங்கள் ஏன் நோர்வேயோடு பேசுகிறீர்கள்?'
இதற்குரிய விளக்கத்தை எமக்குச் சொல்லக் கடமைப்பட்டுள்ளீர்கள்"
என உளறிக்கொண்டிருந்தால் நாம் என்ன நிலையிலிருப்போம்?
அப்படித்தான் இருக்கிறது, தமிழகத்தில் எடுக்கும் அரசியற்கூட்டணி நிலைப்பாட்டுக்காக எமக்கு விளக்கம் சொல்லவேண்டுமென வை.கோ.வைப் பார்த்துக் கேட்பது.

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
முதல்வரின் இரங்கற்பதிவு தொடர்பானது:
அவரின் இரங்கற்பதிவு பெரியளவில் என்னைப் பாதிக்கவில்லை. அவர் எழுதியதால் மகிழ்ந்து துள்ளவில்லை; அவர் எழுதியிராவிட்டால் அதைக்குறித்துக் கவலைப்பட்டிருக்கப் போவதுமில்லை. பிறகு நடப்பவைகளைப் பார்த்தால் அவர் அதை எழுதியிருக்காமலே விட்டிருக்கலாம் எனப்படுகிறது.

இயக்குநர் சீமான் சொன்னதைப்போல, ஈழஆதரவென்பது தமிழக வாக்கரசியலைப் பாதிக்கும் நிலைவரும்வரை இவை வெறும் சலசலப்புக்களாகவே இருக்குமென்பது எனது தனிப்பட்ட கருத்து.

சங்கரபாண்டி சொல்வதைப்போல தமிழகத்தில் ஒரு நியாயமான கருத்துக்கணிப்பை நடத்தினால் நல்லதென்று படுகிறது. பூவா தலையா போல ஒரு முடிபு வெளிப்படையாகத் தெரிந்துவிடும். நாங்களும் மேற்கொண்டு செல்லலாம். இது மெல்லவும் முடியாமல் விழுங்கவும் முடியாமலிருக்கும் நிலைதான்.

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

வை.கோ, ஈழம் தொடர்பாக வலைப்பதிவுச்சூழலில் பொதுவாகச் சில விடயங்களைப் பார்க்கலாம். வை.கோ என்றதுமே ஏதோவொரு விதத்தில் ஈழப்போராட்டத்தையும், புலிகளையும் முடிச்சுப்போட்டுத்தான் அணுகப்படுகிறது. இந்திய அரசியலில் இருக்கும் வேறெவருக்கும் இந்நிலையில்லை. அந்தளவுக்கு ஈழம் பற்றியும் புலிகள் பற்றியும் வை.கோ பேசியவை, பாடுபட்டவை ஏராளம் என்பதே உண்மை. மிக வெளிப்படையாகவும், ஆணித்தரமாகவும் என்றைக்கும் ஒன்றையே சொல்லிக்கொண்டிருப்பவர் அவர்.

வை.கோ, தி.மு.க தலைமையிலான கூட்டணியை விட்டு ஜெயலலிதாவுடன் கூட்டணி சேர்ந்தபோது வலைப்பதிவுலகில் பெரும் சர்ச்சை எழுந்தது. அந்நேரத்தில் வை.கோ.வுக்கு ஆதரவாக வந்தவை மிகமிகச் சில குரல்கள் மட்டுமே (டோண்டுவுடையதைச் சேர்த்தும்கூட;-)) அதுபோல் நடுநிலையாக விமர்சித்து வந்தவையும் மிகச்சில (சுந்தரமூர்த்தி போன்றவர்களது, அது பிரிவுக்கு முன்பே எழுதியிருந்தாலும்கூட)
ஆனால் வை.கோ.வைத் திட்டி வந்த குரல்களே அதிகம். அவற்றின் பின்னணி நோக்கங்கள் வேறுபட்ட தளங்களைக் கொண்டவை.

தீவிர கருணாநிதி ஆதரவாளர்களாக இருந்தவர்களிடமிருந்து (சிலருக்கு வை.கோ மீது பழைய கறளொன்று இருந்தது எனக்கருதுமளவுக்கு மிகத்தீவிரமாக இருந்தது;-)) வை.கோ. மீது வைக்கப்பட்ட கடுமையான தாக்குதல்கள் ஒருவகை.

கருணாநிதிக்கு எதிரான அரசியற்பார்வை கொண்டவர்களாகக் கருதப்பட்டவர்கள், - ஏன் வை.கோ வுக்கும் எதிரான அரசியற்பார்வை கொண்டவர்கள்கூட இவ்விடத்தில் வை.கோ.வின் வெளியேற்றத்தை நையாண்டி பண்ணிக்கொண்டிருந்தார்கள் (முகமூடி, பி.கே.சிவகுமார் போன்றோரின் எழுத்துக்கள்). இது இன்னொரு வகை. இவர்களைப் பொறுத்தவரை, வை.கோ மீது தமது தாக்குதலை நடத்த இதையொரு சந்தர்ப்பமாகப் பயன்படுத்திக்கொண்டார்களேயன்றி மற்றும்படி நியாயமான எந்த அரசியற்பார்வைகளும் இருந்ததாகத் தெரியவில்லை.

தனிப்பட்டளவில் வை.கோவின் ஜெயலலிதாவுடனான இணைவானது எனக்கு வருத்தத்தையளித்தாலும், இது தவிர்க்க முடியாததே என்பதோடு வை.கோ எடுத்தது சரியான முடிபே என்ற நிலையிலேயே நானிருந்தேன். (பேசியளவில் வேறும்சில ஈழத்துப்பதிவர்கள் இதேநிலைப்பாடோடு இருந்ததை அறிந்தேன்). ஆனால் நாங்கள் எல்லோரும் இந்தப்பிரச்சினையில் ஒதுங்கியிருந்தோம். கொழுவி மாத்திரம் கற்பகம் அம்மையாரோடு சண்டைபிடித்ததாக ஞாபகம்;-)

எனக்கு வருத்தமளித்த நிகழ்வு என்னவென்றால், இவர்கள் வை.கோ.வை வசைபாட ஈழத்தமிழர்களைப் பயன்படுத்திக்கொண்டமைதான். நான் மேற்குறிப்பிட்ட இருதரப்புமே வை.கோ. மீது தமது வசைமாரியைப் பொழிய பயன்படுத்திய முதல் ஆயுதம் ஈழத்தமிழர்கள்தான்.
அட! பி.கே. சிவகுமார், முகமூடி போன்றோர்கூட, ஈழத்தமிழர்கள் பிரச்சினையில் கரிசனை கொண்டவர்கள்போல, வை.கோ. ஈழத்தமிழர்களுக்குத் துரோகமிழைத்துவிட்டார் எனப் புலம்பினார்கள். வை.கோ ஈழத்தவர்களின் தலையில் மிளகாய் அரைத்தவிட்டாரென ஒப்பாரி வைத்தார்கள்.

ஆனால் சம்பந்தப்பட்ட ஈழத்தவர்களோ வை.கோ செய்தது தவறென்று எங்குமே ஒப்பாரி வைக்கவில்லை. மாறாக அம்முடிவை ஏற்றுக்கொண்டார்கள் என்றுதான் சொல்லவேண்டும். வை.கோ.வை உயிராய் நினைத்த அவரின் சீடர்கள் மாறியபோதுகூட ஈழத்தவர் மனங்களில் வை.கோ.வின் இடம் தளம்பலடையவில்லை. உதயனின் பாணியிற்சொன்னால், ஜெயலலிதாவுக்கு வால்பிடித்துக்கொண்டிருக்கும் இந்நேரத்திற்கூட அது தளம்பலடையவில்லை. அந்நேரத்தில் வை.கோ.வைச் சரியாகப் புரிந்தவர்கள் ஈழத்தவர்கள் தானோ? ;-)

இப்படி மற்றவர்கள் ஈழத்தவரை வைத்து வை.கோ மீது விளையாடிக்கொண்டிருந்தது ஒருபுறமென்றால் இப்போது ஈழத்துச் செய்தியேடு ஒன்று விளையாட்டில் குதித்திருப்பது வருத்தமளிக்கிறது.

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

எழுதி முடித்தபோது மிகமிக நீண்டிருந்தது இடுகை. இடையிடையே வெட்டிக்கொத்திச் சுருக்கி (ஆம். இதுவே சுருக்கம்தான். வலைப்பதிவுச்சூழல் தொடர்பான நிறைய விடயங்கள் அலட்டல்களாக விளங்கியதால் வெட்டியாயிற்று.) இது வெளியிடப்படுகிறது.
மேலும் ஏதாவது சொல்ல வேண்டி வந்தால் பின்னூட்டங்களில் சொல்லலாமென நினைக்கிறேன்.

** இது உதயன் செய்தியேட்டுக்கு அனுப்பப்படவில்லை. அது எனது நோக்கமுமன்று.

** இதுவெனது தனிப்பட்ட கருத்து. இதற்குரிய எதிர்ப்புக்கள் ஈழத்தவர்களிடமிருந்தால் தெரிவிக்கவும்.

** இன்னொரு குறிப்பு:
இவ்விடுகையின் நோக்கம் உதயன் செய்தியேட்டின் நற்பெயரையோ அதன் சேவையையோ களங்கப்படுத்துவதன்று. எச்சந்தர்ப்பத்திலும் நாம் உதயனை புலம்பெயர் ஊடகங்களோடு வைத்துக் கருதுவதில்லை. அப்படி ஒப்பிடவும் முடியாது. தனக்குரிய வரலாற்றுப் பணியை உதயன் மிகுந்த தியாகங்களினூடு தொடர்ந்து செய்து வருகிறது. சிங்கள இராணுவ ஆக்கிரமிப்புக்குள் இயங்கும் இச்செய்தியேடு, இராணுவத்தினதும் ஒட்டுக்குழுக்களினதும் தொடர் அச்சுறுத்தலுக்கு மத்தியில்தான் இயங்கிவருகிறது. தனது பணியாளர்களை ஆக்கிரமிப்பாளரின் துப்பாக்கிக் குண்டுக்குக் காவு கொடுத்துள்ளது. அதன்பின்னும் அது வீச்சோடு இயங்கிவருகிறது. விடுதலைப்போராட்டப் பயணத்தில் உதயன் செய்தியேட்டுக்கான பங்களிப்பை நாம் அறிவோம்.
ஆனால் இக்குறிப்பிட்ட சிக்கல் தொடர்பில் நாம் கடுமையான முறையில் உதயனோடு முரண்படுகிறோம்.

Labels: , , ,

எழுத்துருவைத் தெரிவுசெய்ய.
பாமினி ஆங்கில உச்சரிப்பில்

[மேலுள்ள பெட்டியில் தட்டச்சினால் கீழுள்ள பெட்டியில் ஒருங்குறிக்கு (Unicode) மாற்றப்பட்ட எழுத்துரு கிடைக்கும்]


சுரதா, கிருபாவுக்கு நன்றி


© 2006  Thur Broeders

________________