தங்கர் பச்சானின் நெறியாள்கையில் வெளிவந்த 'ஒன்பது ரூபாய் நோட்டு' திரைப்படத்தைப் பற்றிய விமர்சனங்கள் பல வெளிவந்துவிட்டன. தொலைக்காட்சிகளில், வெகுசன ஊடகங்களில், வலைப்பதிவுகளில் என பல்வேறு விமர்சனங்கள் வந்துவிட்டன. அனைத்திலும் குறிப்பிடப்பட்ட முக்கிய குறைபாடு (ஒரேயொரு குறைபாடு என்றுகூடச் சொல்லலாம்) அர்ச்சனா சத்தம் போட்டுக் கத்துவதைப் பற்றியது தான். வலைப்பதிவுகளில் காசி ஆறுமுகம் தொடக்கம் நா.கண்ணன் சுரேஷ் கண்ணன் வரை பெரிய தலைகளும் அதையே குறிப்பிட்டிருந்தார்கள். திகைப்பை ஏற்படுத்தும் விதமாக நா.கண்ணன் மட்டும் (நான் வாசித்த, கேட்ட அளவில்) அர்ச்சனாவின் அழுகையையும் நடிப்பையும் சரியென்று பாராட்டியிருக்கிறார். நா. கண்ணன் ஐயாவோடு நானும் இணைந்து கொள்கிறேன்.
இப்படம் தொடர்பாக தங்கர் பச்சானிடம் வைக்கப்பட்ட முதன்மை முறைப்பாடு இந்த அழுகைதான். இக்குற்றச்சாட்டைக் கேட்டவுடனேயே (சமயங்களில் கேள்வி தொடங்கும்போதே) தங்கருக்குக் கோபம் உச்சத்துக்கு ஏறுகிறது. மதன் திரைப்பார்வையில் தங்கர் கர்ஜித்த விதம் எனக்கு மிகப் பிடித்திருந்தது, கூடவே அவருடைய விளக்கமும்.
நகர்ப்புற மனிதர்களின் பார்வையில் கிராமத்துத் தாயின் கதறல் அப்படித்தான் தெரியும் என்பது தங்கரின் பதில்களிலொன்று. தாங்கள் கட்டமைத்து வைத்திருக்கும் நகர்ப்புறப் பெண்ணை எப்படி கிராமத்துப் பெண்ணுக்குப் பொருத்த முடியும்? சுகாசினியும் மதனும் இன்னும் பலரும் இந்த நகர்ப்புறப் பார்வையுடன்தான் பார்க்கிறார்களென்பது விளங்குகிறது.
தங்கர் சொல்லும் இன்னொரு முக்கிய விடயம், தமிழ்ச்சினிமா கட்டமைத்து வைத்திருக்கும் 'அம்மா' பாத்திரம். அந்தக் கட்டமைப்புக்குள் இல்லாமல் யதார்த்தமான தாயைக் காட்டியதும் பலரால் ஏற்றுக்கொள்ள முடியவில்லையென்பது அவரது கருத்து. உண்மைதான்.
தமிழ்ச்சினிமா கட்டமைத்து வைத்திருக்கும் தாய்ப் பாத்திரம் தமிழ்ச்சூழலின் பெரும்பான்மையைப் பிரதிபலிக்காத பாத்திரம்தான். விடிய வெள்ளன முழுகி, தலைதுவட்டி, சாமிபடத்துக்கு புகைகாட்டி மணியடித்தபடி வெள்ளை வெளேரென 'மங்களகரமாக' வரும் தாய்மார்கள் நிச்சயமாக எங்களைப் போன்றவர்கள் வாழ்ந்த சூழலில் தாய்மாரை நினைவுபடுத்துவதில்லை. மிகப் பெரும்பான்மையானவர்களின் தாய்மாரை அப்பாத்திரங்கள் பிரதிபலிக்கா. எத்தனை படத்தில்தான் இவர்களைப் பார்த்துச் சலிப்பது? கிட்டத்தட்ட அரைவாசிப் படங்களிலாவது தொடக்கக் காட்சியாக அமையும் கோயிற்காட்சி, தேங்காயுடைக்கும் காட்சி, அர்ச்சனை செய்யும் காட்சி, ஆரத்தியெடுக்கும் காட்சிகள் ஏற்படுத்தும் எரிச்சலை இந்த தமிழ்ச்சினிமா அம்மா மாரும் ஏற்படுத்திக்கொண்டுதான் இருக்கிறார்கள்.
அதைவிட, அவர்கள் அடக்கமே உருவாக இருப்பார்களாம். சத்தம் போட்டுப் பேசமாட்டார்களாம். சத்தம்போட்டு அழக்கூட மாட்டார்களாம். கணவனுக்கு முன்னால் வாய்பொத்தி இருப்பார்களாம். இவற்றைவிட, பொண்ணுன்னா இப்படித்தான் இருக்கணும் என்று சூப்பர் ஸ்டார் முதல் ஆளாளுக்கு உபதேசம் வேறு செய்துகொண்டேயிருப்பார்கள். இப்படியெல்லாம் கலந்துகட்டி தாய் என்ற (பொதுவாக பெண்) விம்பத்தை தமிழ்ச்சினிமாவில் ஏற்படுத்தி வைத்திருக்கிறார்கள்.
அவ்வப்போது சில திரைப்படங்களில் வரும் தாய்மார்கள் ஒரு நெருக்கத்தை உணர வைப்பார்கள். அவ்வகையில் பாலு மகேந்திராவின் 'அதுவொரு கனாக்காலத்தில்' தனுசின் தாயாக வருபவரைச் சொல்லாம். பருத்திவீரனில் நாயகியின் தாயாக வருபவரின் பாத்திரம் என்னைக் கவர்ந்தது. அதுபோல் 'பொல்லாதவனில்' டானியல் பாலாஜியின் அண்ணியாக வரும் பாத்திரமும் கவர்ந்தது.
முன்பு சொன்னபடி அடக்கமே உருவாகச் சித்தரிக்கப்பட்ட பாத்திரங்களிலிருந்து முற்றிலும் விலகி தங்கர் பச்சானின் வேலாயி இருப்பது பலருக்கு அதிர்ச்சி.
ஒரு பெண் இப்படியெல்லாம் ஓலமிடுவது யதார்த்தத்துக்குப் புறம்பானதென்று இணைய இதழொன்றில் பார்த்தேன். என்ன முட்டாள்தனமான வாதம்? பெண்களால் மட்டும்தான் அப்படிக் கதற முடியும். அவர்கள் மட்டும்தான் அப்படிப் கதறியழுகிறார்கள்.
எங்காவது ஆண்கள் அப்படிக் கதறிப் பார்த்திருக்கிறீர்களா? இழவு வீடுகளில் ஒப்பாரி வைப்பது யார்? நூறு வீதமும் பெண்கள்தாம். சில புறநடைகளை விட்டால் ஆண்களுக்கு குரலெடுத்து அழத்தெரியாது, அல்லது அப்படி அழ விரும்புவதில்லை. தனது ஆண்மைக்கு இழுக்கு என்ற மனோபாவமும் ஒரு காரணம். ஆனால் பெண்கள் அதைப்பற்றி யோசிப்பதில்லை. குறிப்பாகக் கிராமத்துப் பெண்கள் அவற்றுக்கு வெட்கப்படுவதில்லை. அழுகை வருகிறதோ இல்லையோ செத்த வீடொன்றில் குரலெடுத்து அழுதே ஆக வேண்டிய தேவைகூட அவர்களுக்கு இருக்கிறது.
கிராமங்களில் பெண்களிடையே நடக்கும் வாய்ச்சண்டையைப் பார்த்தவர்களுக்குத் தெரியும், அவர்களின் சத்தத்தின் வலிமை. ஆண்களிடையே நடக்கும் சண்டை சிலவேளை அடுத்த வீட்டுக்கே கேட்காது. அதிக நேரம் நீடிக்கவும் மாட்டாது. சில நொடிகளிலேயே கைகலப்பு வரை வந்து முடிந்துவிடும். அனால் இரண்டு பெண்களிடையில் சண்டை மூண்டால் இடைவேளைகள் விட்டுக்கூட நாள் முழுவதும் சண்டை பிடிப்பார்கள். அக்கம் பக்கத்திலிருக்கும் நாலைந்து வீடுகளுக்கு அன்று பெரும் சமாதான். (அந்நேரத்தில் அவ்வீடுகளில் இருக்கும் அண்களின் நிலை பரிதாபமாக இருக்கும். குடிக்க தேத்தண்ணி கூடக் கிடைக்காது. நான் பார்த்தளவில் அவர்கள் செய்யும் வேலை, சண்டை தொடங்கி கொஞ்ச நேரத்திலேயே சைக்கிளை எடுத்துக்கொண்டு எங்காவது மதவடியில் போய் கடுதாசி விளையாடிவிட்டு பொழுதுபட வீட்டுக்கு வருவதுதான்)
என்ன சொல்ல வருகிறேன் என்றால், பெருத்த சத்தத்தில் கத்துவது, கதறுவது, சண்டை பிடிப்பதெல்லாம் பெண்களுக்கு மிக யதார்த்தமான, இயல்பான விடயங்கள். ஆண்களுக்குத்தான் அவை மிகையான விடயங்கள்.
இந்நிலையில் ஒன்பது ரூபாய் நோட்டில் அர்ச்சனா கத்துவது, புலம்புவது, அழுவது எல்லாமே படு யதார்த்தமாகத்தான் எனக்குத் தெரிகிறது. அர்ச்சனா போன்ற ஏராளம் ஏராளம் தாய்களைப் பார்த்திருக்கிறேன், அவர்களோடு வாழ்ந்திருக்கிறேன். எடுத்ததுக்கெல்லாம் 'மாதாவே, யேசுவே, தொம்மையப்பரே, இதுகளைப் பாத்துக்கொண்டு சும்மா இருக்கிறீரோ?' என்று ஓலமிடத் தொடங்கிவிடும் பல தாய்மார் எனது சுற்றமாக இருந்திருக்கிறார்கள். அதுவும், என்ன விசயத்துக்கு யார் யாரிடம் எப்படிப் புலம்ப வேண்டுமென்றுகூட ஓர் ஒழுங்குமுறை வைத்திருப்பார்கள். ஆருக்காவது சாபம் விட வேணுமெண்டால் மிக்கேல் சம்மனசானவரைக் கூப்பிடுறது தொடக்கம் மிக நுணுக்கமாக அவர்களது புலம்பல் இருக்கும்.
பிள்ளைகள் எதிர்த்துக் கதைத்தவுடன் சாமி படத்தின்முன் போயிருந்து அர்ச்சனா புலம்புவாரே, அப்படி அவர் புலம்பாவிட்டால்தான் எனக்கு ஆச்சரியமாக இருந்திருக்கும்.
~~~~~~~~~~~~~~~~~~~~ அர்ச்சனா கதறும் இடங்களின் எண்ணிக்கையைக் குறைத்திருக்கலாம் என்பதும் ஒரு விமர்சனம். அது பார்ப்பவர்களின் பிரச்சினையே ஒழிய அழும் தாய்க்கு எண்ணிக்கை பிரச்சினையில்லை என்பது தங்கரின் வாதம். நேற்று அதிகம் அழுதுவிட்டேன், இன்று குறைத்து அழவேண்டும் என்று திட்டம்போட்டு எந்தத் தாயும் அழ மாட்டாள் என்று தொடர்ந்து சொல்கிறார் தங்கர்.
முடிவாக, ஒன்பது ரூபாய் நோட்டு படத்தில் அர்ச்சனாவின் அழுகை எவ்விதத்திலும் எனக்கு உறுத்தவில்லை. மிகமிகக் கச்சிதமாக அவரின் பாத்திரம் படத்தோடு பொருந்துகிறது என்பதே என் கணிப்பு.
சுரேஸ் கண்ணன் சொல்லும் "டெக்னிகல்" விசயமும் எனக்கு விளங்கவில்லை. கதறியழுவதை, சத்தம் வெளியில் வராமல் காட்சியாக மட்டும் காட்டுவதைப் பற்றி ஏதேனும் சொல்கிறாரோ தெரியவில்லை.
மற்றும்படி அர்ச்சனாவின் அழுகையை நிறுத்துவதென்பது பாத்திரச் சிதைப்பு என்பதோடு யதார்த்தமாகவும் இராது என்பதே என் கருத்து. அந்தந்தக் காட்சிகளில், அர்ச்சனா வாயைத் திறக்காமல் கண்ணீர் மட்டும் விடுவதுபோன்று படத்தை எடுத்திருந்தால், என் பார்வையில் நிச்சயமாக அதுவொரு பாத்திரச் சிதைவை ஏற்படுத்தியிருக்கும்.
ஒன்பது ரூபாய் நோட்டில் தவிர்க்கப்பட்டிருக்க வேண்டியவையாகவும் உறுத்தலாகவும் எனக்குப்பட்டவை பாடல்கள் தாம். 'மார்கழியில் குளித்துப்பார்' என்ற, கதை நகர்வுக்கு உறுதுணையான பாடலைத் தவிர்த்து மற்றக் காதல்பாடலெல்லாம் படத்துக்குத் தேவையற்றவை.
விஜய் தொலைக்காட்சியின் அனுகாசனின் 'கோப்பி வித் அனு' நிகழ்வில், தங்கர் பச்சான் கலந்து கொண்டார். 'எதைச் செய்தால் தமிழ்ச்சினிமா முன்னேறும்?' என்ற அனுவின் கேள்விக்கு தங்கர் சடுதியாகப் பதிலளிக்கிறார், 'பாடல்களை நிறுத்திவிட்டாலே போதும்' என்று.
மிக அண்மையில் புதிய இயக்குநர் ஒருவரும் (மிஷ்கின்?) படங்களில் பாடல்களைச் சேர்ப்பது தனக்குப்பிடிப்பதில்லையென்றும், வியாபார ரீதியில் வேறுபலரைத் திருப்திப்படுத்த அவற்றைச் செய்ய வேண்டியிருக்கிறதென்றும் படவிழாவில் பேசினார். இயக்குநர் சேரனும் பாடல்கள் இல்லாமல் படமெடுக்க வேண்டும் என்ற விவாதத்தை முன்பு முன்வைத்திருந்தார். கமலகாசன் இருபது வருடங்களின் முன்பிருந்தே இதைத் தீவிரமாகச் பேசியிருக்கிறார். தன்னளவில் முயற்சித்தும் இருக்கிறார்.
ஆனாலும் எமது சாபக்கேடு, எல்லாம் பேச்சளவோடு நின்றுவிடுகிறது. பாடல்கள் இல்லாமல் தமிழ்ப்படங்கள் (அட வருடத்துக்கு ஒன்றிரண்டாவது?) வரும் காலமொன்றையும், அதனூடு தமிழ்ச்சினிமா ஓரிருபடிகள் முன்னேறுமென்பதையும் கனவு கண்டுகொண்டேயிருக்கிறேன்.Labels: திரைப்படம், படைப்பாளி, பதிவர் வட்டம், விமர்சனம், விவாதம் |