Saturday, February 26, 2005

இரட்டை வேடம்...

வணக்கம்!

தமிழ்ச் சினிமாவில் இரட்டை வேடம் என்பது ஒன்றும் புதிதன்று. தற்போது பத்திலொரு படமாவது நடிகனோ நடிகையோ இரட்டைவேடம் ஏற்று நடிக்கும் படங்களாக வெளிவருகின்றன. இரட்டை வேடம் போடுதல் எனும் நிலைப்பாடு தேவைதானா என்பதே என்கேள்வி.

ஒரே மாதிரியுள்ள இரு நபர்களால் (அல்லது அதற்கு மேற்பட்ட எண்ணிக்கையுள்ள, உதாரணம் மைக்கேல் மதன காமராஜன்) ஏற்படும் குழப்பங்களை வைத்துச் சில படங்கள் வெளிவந்துள்ளன. (ஆளவந்தான், பங்காளி, அட்டகாசம், பார்த்தீபன் கனவு, வாலி) அவ்வாறான படங்களுக்கு இரட்டை வேடத்தில் நடித்தல் என்பது தவிர்க்க முடியாதது. ஏனெனில் கதையே அதுதானே.

ஆனால் உருவ ஒற்றுமையால் ஏற்படும் குழப்பங்கள் எந்த விதத்திலும் சம்பந்தப்படாமலும் இரட்டை வேடமேற்று நடித்துள்ள நிறையப்படங்கள் வந்துள்ளன. (ஒரு கைதியின் டயறி, அமைதிப்படை, அய்யா, நட்புக்காக) இவற்றிற் பெரும்பாலானவற்றில் ஒரே நடிகர் தந்தை மகனாக நடிப்பார். இந்த உறவுமுறை கூட இல்லாமலும் இரட்டை வேடமேற்ற சில படங்கள் வந்துள்ளன. உதாரணம் பார்த்தீபன் கனவு, ஜெய்சூரியா. பார்த்தீபன் கனவில் வரும் சினேகாக்கள் சகோதரிகளோ உறவினரோ கூட இல்லை. அதுபோலவே ஜெய்சூரியாவில் வரும் அர்ஜூன்களும். ஆனால் ஒருவரையே இரு பாத்திரத்துக்கும் நடிக்க வைத்து உருவ ஒற்றுமையால் ஏற்படும் குழப்பங்களைக் கலந்து படத்தை ஒப்பேற்றி விட்டார்கள். அப்படி உருவ ஒற்றுமை சாத்தியமா என்று சிந்திக்கக் கூடாது. சினிமாவில் சாத்தியங்களைப்பற்றி யோசிப்பது இப்போது பைத்தியக் காரத்தனமாய்ப் போய்விடும்.

உருவ ஒற்றுமையால் ஏற்படும் குழப்பங்களைச் சம்பந்தப்படுத்தாமல் வரும் படங்களில் இரட்டை வேடங்களை வைத்துப் படம் பண்ணுவது தேவைதானா? அது அக்குறிப்பிட்ட கதாநாயகனையோ கதாநாயகியையோ மிகைப்படுத்தும் ஒரு செயற்பாடு தானே. ஒருவரை ‘அதிகமாய்’ நடிக்க வைத்து தனிமனிதத் திறமையையும் புகழையும் ஈட்டும் ஒரு நடவடிக்கை தானே. உதாரணமாக கமல் இரட்டை வேடம் செய்கிறாரென்றால் அது அவரது நடிப்புக்குக் கிடைத்த ‘தீனி’ யாகப் பார்க்கப்படுவதும் புகழப்படுவதும் இங்கு சாதாரணம். உண்மையில் அவ்விரண்டு பாத்திரங்களையும் அவரே செய்ய வேண்டிய கதைச்சூழல் நிச்சயமாய் இருக்காது. தேவையே இல்லாமல் ஒருவரின் புகழ்ச்சிக்காக மட்டுமே பயன்படுத்தப்படும் ஒரு உத்தியாகவே இது இருக்கிறது. கதாநாயகர்களுக்காகவே கதைகள் உருவாக்கப்படும் இச்சூழ்நிலையில் இரட்டை வேடக் கதைகளும் அப்படியே உருவாகின்றன.

இது பல நடிகர்களையும் தாண்டி இன்று சரத்குமார் இதில் கொடிகட்டிப் பறக்கும் நிலைக்கு வந்துவிட்டது. அவர் இரட்டை வேடமேற்று (தந்தை-மகன்) நடித்த படங்களெல்லாம் வெற்றிப் படங்கள் என்று செய்திகளும் விளம்பரங்களும் கூறுகின்றன. இது இன்னும் முற்றிப்போய் சத்தியராஜ் வில்லனாகவும் கதாநாயகனாகவும் வந்து ‘கலக்கிய’ சமீபத்துப் படமான ‘ஐயர் ஐ.பி.எஸ்’ வரை வந்துவிட்டன.

எதற்கு இரண்டு நடிகர்களுக்குச் சம்பளம் கொடுத்து நடிக்க வைக்க வேண்டும்? ஒருவரின் சம்பளத்தோடே இரண்டு பாத்திரங்களையும் முடித்து விடலாம் என்ற வியாபார நோக்கோடு கூட இம்முறை பயன்படுத்தப் படலாம். ஆனாலும் இம்மாதிரி முயற்சிகளும் இந்தப்போக்கும் சினிமாவுக்கு நல்லதா என்று எனக்கு விளங்கவில்லை. இப்போதெல்லாம் இரட்டை வேடமேற்று நடிக்கும் படங்களைப் பார்த்தால் ரசிக்க முடிவதில்லை. எனக்கு மட்டுமே இப்படிப் பிரச்சினை இருக்கலாம். தமிழ்ச் சினிமாவின் தேக்கத்துக்கு அல்லது பின்னடைவுக்கு இந்த இரட்டை வேடக் காதாபாத்திரங்களும் குறிப்பிட்ட அளவாவது காரணமாக இருக்கலாம் என்றே கருதுகிறேன். என் மனத்துக்குத் தோன்றியவற்றை இங்கே எழுதினேன், அவ்வளவே.

தமிழ்ச் சினிமாவை விட்டு அமெரிக்க மற்றும் ஏனைய படவுலகுகளிலும் இப்படி இரட்டை வேட நடைமுறை இருக்கலாம். அப்படி இருந்தால் அதைத்தெரிந்தவர்கள் அதுபற்றி சின்னக் குறிப்பை எழுதிவிட்டுப் போங்கள்.

சொல்ல வந்ததைச் சரியாகச் சொன்னேனா தெரியாது. கோர்வையாக வராதது போல் ஒரு தோற்றமேற்படுகிறது. புரிந்தால் ஏதாவது சொல்லுங்கள்.

நன்றி.

Labels: ,

எழுத்துருவைத் தெரிவுசெய்ய.
பாமினி ஆங்கில உச்சரிப்பில்

[மேலுள்ள பெட்டியில் தட்டச்சினால் கீழுள்ள பெட்டியில் ஒருங்குறிக்கு (Unicode) மாற்றப்பட்ட எழுத்துரு கிடைக்கும்]


சுரதா, கிருபாவுக்கு நன்றி


Sunday, February 20, 2005

ஐயாவும் அசட்டு விளையாட்டும்..

வணக்கம்!
சமீபத்தில் “ஐயா” படம் பார்த்தேன். சரத்குமார் இரட்டை வேடம் போட்டு நடித்த படம். (இரட்டை வேடம் போடுதல் பற்றி எனக்குப் பலத்த கேள்விகள் உள்ளன. அவற்றைப் பிறகு பதியலாம் என்றிருக்கிறேன்.) அதில் இளைய சரத்குமார் உதைபந்தாட்டம் (foot ball) ஆடும் காட்சியொன்று வருகிறது பாருங்கள். அதைப்பார்த்ததும் வயிற்றெரிச்சல் தான் வந்தது.

தங்கள் ஊர் அணி தோற்கிற கட்டத்திலிருக்கிறபோது களத்தில் (கவனிக்க மைதானத்திலில்லை) குதிக்கிறார் சரத். “அண்ணே வேணுமின்னே உதக்கிறாங்கண்ணே” என்று சொல்லும் ஒரு வீரனிடம் (?) யார்றா அது? என்று கேட்டு அறிந்துகொள்ளும் சரத், “சரி அவன நா பாத்துக்கிறேன்” என்றுவிட்டு விளையாடத் தொடங்குகிறார். சரத் களத்திலிறங்கி விட்டால் அவரை வைத்து எப்படி உதைபந்து விளையாடுவது? அருக்கேற்ற மாதிரியே குத்துச்சண்டை மாதிரி ஏதோ செய்கிறார். நடுவரென்று ஒருவர் அங்கே நிற்பது ஏனென்று தெரியவில்லை. (சில படங்களில் காவல்துறையே ஏன் நிற்கிறது என்று விளங்காதபோது இதுஎன்ன பெரிய குறை?) எதிரணி வீரர்களுக்கு ஒவ்வொரு குத்து, உதை விட்டபடியே முன்னேறிச்செல்லும் சரத் அனைவரையும் விலத்தி பந்தை உதைக்கிறார். பேற்றுக்காப்பாளனும் (Goal Keeper) சரத்துக்குச் சளைத்தவனா என்ன? அவன் பந்தைப் பிடிக்கிறான். அந்தோ பரிதாபம். பந்து அவனைப் பேற்றுக் கம்பங்களுக்கிடையால் தூக்கிக்கொண்டு (உண்மையாத்தான், ஆகாயத்தில பறந்துபோறார்) போய்விடுகிறது. சரத் அணிக்கு ஒரு கோல் கிடைத்துவிட்டது.

இவர்களுக்கு என்ன தெரிந்து படமெடுக்க வந்தார்கள் என்ற கேள்வி ஒருபுறமிருக்க, ஒரு விளையாட்டைக் கூடவா அதை எப்படி விளையாடுவதென்று தெரியாமல் படத்திற் புகுத்தினார்கள். இப்படிக்கூட ஒரு விளையாட்டைக் கொச்சைப்படுத்த முடியுமா? (இவ்வளவு வன்முறையான விளையாட்டாகவா அது இருக்கிறது? மைதானம் விதப்புக்கு சேறடிச்ச வயல்மாதிரி கிடக்கு) கதாநாயகனை பிரமிப்பாகவும் பிரமாண்டமாகவும் காட்டுவதற்காகப் பறந்து பறந்து சண்டைபோட்டார்கள்; ஒருவனே முப்பதுபேரை நொருக்குவதாகக் கதை விட்டார்கள்; பாத்திரக்கடைகளிலும் காய்கறிச் சந்தையிலும் சண்டைபோட்டார்கள்; இப்போது விளையாட்டிலும் கைவைக்கத் தொடங்கிவிட்டார்கள். இது உதை பந்தாட்டத்திற்கு மட்டும் நடக்கவில்லை. சமீபத்தில் கில்லிக்குக் கூட கபடி சம்பந்தப்பட்டவர்களிடமிருந்து எதிர்ப்பு வந்தது. இன்னும் என்னென்ன கூத்துக்கள் காட்டப்போகிறார்களோ தெரியவில்லை.

"இப்ப என்னத்துக்கு இதுக்கெல்லாம் துள்ளிறியள்? இது வழமையா சினிமாவில நடக்கிறதுதானே" என்று யாராவது கேட்கக் கூடும். ஆம் இப்படிப் பலவற்றைச் சகிக்கப் பழகியாகி விட்டது. ஆனால் உதைபந்தாட்டத்தின் தீவிர இரசிகன் என்ற வகையில் இதைப்பார்த்துப் பொறுக்க முடியாமல் தான் இங்கே வந்து கொட்டி விட்டேன். (கொட்டுவதற்குத் தானே இந்த வலைப்பகுதி) இன்னும் இதைப்பற்றி யாரும் பெரிதாகக் கதைக்க வில்லை. கதைக்கவும் மாட்டார்கள். (அவனவன் என்ன வேலயத்தா திரிஞ்சிகிட்டிருக்கான்?) சில வேளை கிறிக்கெற்றில் இப்படி ஏதாவது புருடா விட்டால் என்ன செய்வார்கள் என்று அறிய ஆவல்.

நான் இங்கே உதைபந்தாட்டம் என்பது Foot Ball என்று ஆங்கிலத்திற் சொல்லும் விளையாட்டு. அதுவும் பெரிதளவு ஆசிய நாடுகளிலும் இங்கிலாந்திலும் சொல்லப்படும் வார்த்தை. இவ்விளையாட்டை Soccer என்று அமெரிக்க சார்ந்த நாடுகளிலும் ஊடகங்களிலும் சொல்வதுண்டு. (இதைப்பற்றின குழப்பங்கள் சுவாரசியமானவை.) Football என்பதற்கு அமெரிக்காவில் வேறு அர்த்தம். (இந்த அர்த்தத்தில் இப்படம் எடுக்கப்பட்டிருந்தால் ஓரளவு சரியாயிருந்திருக்கும். எண்டாலும் பந்தக் கையிலயெல்லோ தூக்கிக்கொண்டு ஓடியிருக்கோணும்)

சரி தமிழில் இந்த விளையாட்டை எப்படிச்சொல்வது பொருத்தம்? கால்பந்து? உதைபந்து? இரண்டுமே பாவிக்கப்படுவதை அறிவேன். தெரிந்தவர்கள் சொல்லவும்.

Labels: ,

எழுத்துருவைத் தெரிவுசெய்ய.
பாமினி ஆங்கில உச்சரிப்பில்

[மேலுள்ள பெட்டியில் தட்டச்சினால் கீழுள்ள பெட்டியில் ஒருங்குறிக்கு (Unicode) மாற்றப்பட்ட எழுத்துரு கிடைக்கும்]


சுரதா, கிருபாவுக்கு நன்றி


Thursday, February 17, 2005

சில நேரங்களில் சில மனிதர்கள்…

ஜெயகாந்தனின் நாவல் படமாக்கப்பட்டுள்ளது. கறுப்பு வெள்ளையில் வந்த இப்படத்தைப் பார்க்க வேண்டுமென்று நீண்ட நாட்களாய் அலையோ அலையென்று அலைந்திருக்கிறேன். மலேசியாவின் கோலாலம்பூரில் கண்ணில் தெரியும் வீடியோக் கடைகளில் எல்லாம் ஏறி இறங்கியும் பலனில்லை. பலருக்கு அப்படி ஒரு படம் வந்ததே தெரிந்திருக்கவில்லை. கொழும்பிலும் நிறையக் கடைகள் ஏறிஇறங்கியும் பலனில்லை. இறுதியில் யாழ்ப்பாணம் குருநகரில் ஒரு பழைய கடையில் கண்டுபிடித்தேன். (பிரபலமான வேறுகடைகளில் கிடைக்கவில்லை). படக்கொப்பி பரவாயில்லை. பார்க்கக் கூடியவாறு இருந்தது. படமும் அப்படித்தான்.

எழுத்தாளராக வரும் நாகேஷ் அசத்தியிருந்தார். மற்ற நடிகர் நடிகைகளின் பெயர்கள் தெரியாது. ஏறத்தாள எல்லோரும் நன்றாகவே நடித்திருந்தனர்.அதில் கங்காவாக வருபவரின் நடிப்புத்தான் அசத்தல். யாரது நடிகை இலட்சுமியா? என்னைப்பொறுத்தவரைஇ கங்காவை அப்படியே கண்முன் நிறுத்தியிருந்தார். அவர் தான் படத்தின் அத்திவாரமே. ம்…இப்படி நடிப்பையும் நடிகைகளையும் இனி எங்கே பார்க்கப்போகிறோம். இதேபோல் பெண்ணை (மட்டுமே?) மையப்படுத்தி தமிழ்த் திரைப்படங்கள் வருமா? பாசிலின் “பூவே பூச்சூடவா” வை ஓரளவு சொல்லலாம்.

படத்தின் முடிவு நாவலிலிருந்து மாறுபாடாகக் காட்டப்பட்டிருந்தாலும் ஏனைய பகுதிகள் சிறப்பாக வெளிப்படுத்தப்பட்டிருந்தன. நாவலில் ஏற்பட்ட உணர்வு சிதையாமல் கொடுக்கப்பட்டிருந்தது. எனினும் நாவலை வாசித்து ஊறியபின் படத்தைப்பார்த்ததால் முழுமையான உணர்வைப் பெற்றேன். நாவலைப் படிக்காத யாராவது இப்படத்தைப் பார்த்துவிட்டு பின் நாவலைப்படிக்கும் போது ஏற்படும் அல்லது ஏற்பட்ட உணர்வை அறிய ஆவலாயிருக்கிறேன். இப்படம் வழமையிலிருந்து மாறுபட்ட ஒரு மாற்றுச் சினிமா முயற்சி என்பதில் சந்தேகமில்லை. ஜெயக்காந்தனின் இந்நாவல் உருவாக்கிய சர்ச்சையளவுக்கு இப்படம் பேசப்படவில்லையென்றே நினைக்கிறேன். (பெண்ணொருத்தி பிற ஆடவன் ஒருவனுடன் கலந்த பாவத்தைப் போக்க தலையில் தண்ணீர் ஊற்றிப் பாவத்தைக் (?) கழுவிக்கொள்வது)
ஏன் இயக்குநரால் நாவலின் முடிவு மாற்றப்பட்டது? நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?

Labels: ,

எழுத்துருவைத் தெரிவுசெய்ய.
பாமினி ஆங்கில உச்சரிப்பில்

[மேலுள்ள பெட்டியில் தட்டச்சினால் கீழுள்ள பெட்டியில் ஒருங்குறிக்கு (Unicode) மாற்றப்பட்ட எழுத்துரு கிடைக்கும்]


சுரதா, கிருபாவுக்கு நன்றி


Tuesday, February 15, 2005

நிலாவரை...

டோண்டு மெரினா கடற்கரை பற்றி ஒரு பதிவு எழுதியிருக்கிறார். அத மாதிரி கதயொண்டு (ஆனால் மெரினா விசயம் உண்மையாக இருக்க நிறையவே சந்தர்ப்பம் இருக்கு) எங்கட இடத்திலயும் இருக்கு.

யாழ்ப்பாணத்தில நிலாவரை எண்டு ஒரு கிணறு இருக்குது. கிணறு பெரிய கிணறுதான். எக்கச்சக்கமான வயல்களுக்கு பெரிய பெரிய பம்ப் வச்சு அதிலயிருந்து தண்ணி பாச்சிறவை. ஒருநாளும் அந்தக்கிணறு வத்திறதேயில்ல. அந்தக் கிணறப்பற்றி சில கதையள் எங்கட சனத்திட்ட இருக்கு. அந்தக்கிணத்திண்ட ஆழத்த இதுவரைக்கும் ஆருமே கண்டு பிடிக்கேலயாம். ஆனானப்பட்ட வெள்ளக்காறங்கள் கூட வந்து ஏலாமத்தான் போனவையாம். அப்பிடி ஆஆஆஆஆஆழமான கிணறாம் அது. அத விட முசுப்பாத்தி என்னெண்டா, அந்தக்கிணத்துக்கும் கீரிமலைக்கேணிக்கும் (இது எங்கட சனத்துக்கு ஏறக்குறைய ஒரு புண்ணிய தீர்த்தம்) நிலத்தடியால தொடர்பு இருக்காம். குறுக்கால பாத்தாலும் என்ன ஒரு இருபத்தஞ்சு மைல் வருமே? இல்ல கூடவோ? சரியாத் தெரியேல. ஆனா நிலாவரையில தேசிக்காய் போட்டா (அதுதான் எலுமிச்சை) அது கீரிமலையில மிதக்குமாம். இண்டைக்கும் உந்தக்கத பலமா இருக்கு. இந்தக் கதையப்பற்றி மேலதிகமா ஏதும் தெரிஞ்ச ஆக்கள் சொல்லுங்கோவன். பம்பலா இருந்து கேப்பம்.

Labels:

எழுத்துருவைத் தெரிவுசெய்ய.
பாமினி ஆங்கில உச்சரிப்பில்

[மேலுள்ள பெட்டியில் தட்டச்சினால் கீழுள்ள பெட்டியில் ஒருங்குறிக்கு (Unicode) மாற்றப்பட்ட எழுத்துரு கிடைக்கும்]


சுரதா, கிருபாவுக்கு நன்றி


படியெடுத்தலும் பகிடி விடுதலும்...

வணக்கம்.
அண்மைய நாட்களின் தினக்குரல் பத்திரிகையைப் படிக்கையில், சில விசயங்கள் கண்ணுக்குள் குத்துகின்றன. அப் பத்திரிகையின் சில செய்திகள் எழுதப்படும் முறை ஏனோ அன்னியமாய்ப் படுகிறது. அக்குறிப்பிட்ட செய்திகள் இந்தியப் பத்திரிகைகளிலிருந்து அப்படியே படியெடுத்துப் போடுகிறார்கள் என்றே நினைக்கிறேன். இல்லாவிட்டால் எப்படி எம்மிடையே இல்லாத சொற்களைப்பாவித்து செய்திகள் எழுத முடியும். செய்திகளைப் பிரசுரிக்கையிற்கூட வசனங்களை மாற்றித் திருப்பி எழுதிப் போடலாமே (ஜால்ரா அடிப்பது, ஷாக் ஆவது, இன்னபிற). அச்சுப்பதிப்பு எப்படி வருகிறது என்று தெரியவில்லை. இங்கு அது பெற முடியாது. (அதேநேரம் வீரகேசரி என்ன பாடோ தெரியேல.)

இலங்கையில் ஒரு போக்கு இருந்து வருகிறது. அதாவது இந்தியச் சொல்லாடலை அப்படியே பிரதிபண்ணுவது. எங்கேனும் நகைச்சுவை நிகழ்ச்சியென்றால் அதில் வரும் வசனங்களெல்லாம் தமிழகத் தமிழ் உச்சரிப்பாகவேயிருக்கும். பாடசாலை நிகழ்ச்சிகளில் நான் இதை ஏராளமான தடைவ பார்த்திருக்கிறேன். பட்டி மண்டபங்கள் என்றால் நன்றாகக் கதைத்துக்கொண்டிருப்பார்கள், திடீரென யாரையாவது சிரிக்க வைக்கிறேன் பேர்வழியென்று இந்தியத் தமிழில் நகைச்சுவைத்துணுக்குச் சொல்வார்கள். அது பெரும்பாலும் லியோனி பாணியில் அல்லது அதே துணுக்காகக் கூட இருக்கும்.

இவர்கள் தான் இப்படியென்றால், பேர்போன இலங்கை வானொலியும் அதன் அறிவிப்பாளர்களும் அடிக்கும் கூத்து மாளாது. நகைச்சுவை நேரம் என்று வந்துவிட்டாலே முழு நிகழ்ச்சியும் இந்தியத் தமிழாக மாறிப்போகும். நான் சர்வதேச ஒலிபரப்பைச் சொல்லவில்லை. அது இந்தியத் தமிழரை மையப்படுத்தி அவர்களின் விளம்பரத்தைக்கொண்டு அவர்களுக்காகவே செய்யப்படும் ஒலிபரப்பு. ஆனால் பண்பலை வர்த்தக சேவைக்கு என்ன நடந்தது. அவர்களுமா இப்படிச் செய்ய வேண்டும். அப்படி ஒலி பரப்பும்போது ஓர் அன்னியத்தன்மை தெரியவில்லையா?

இப்படிச்செய்வதால் மொழி அழிகிறது என்றோ வட்டாரவழக்கு சிதைகிறது என்றோ ஈழத்தமிழ் தேய்கிறது என்றோ சொல்ல வரவில்லை. ஏதோ எழுத வேணும்போல கிடந்தது. அதுதான் எழுதினனான்.

Labels: , ,

எழுத்துருவைத் தெரிவுசெய்ய.
பாமினி ஆங்கில உச்சரிப்பில்

[மேலுள்ள பெட்டியில் தட்டச்சினால் கீழுள்ள பெட்டியில் ஒருங்குறிக்கு (Unicode) மாற்றப்பட்ட எழுத்துரு கிடைக்கும்]


சுரதா, கிருபாவுக்கு நன்றி


Monday, February 14, 2005

வாழ்த்துக்கள்

வணக்கம்!
அனைவருக்கும் காதலர் தின வாழ்த்துக்கள். (அன்பர் தின என்றும் எடுத்துக்கொள்ளலாம்)
-வசந்தன்-

Labels:

எழுத்துருவைத் தெரிவுசெய்ய.
பாமினி ஆங்கில உச்சரிப்பில்

[மேலுள்ள பெட்டியில் தட்டச்சினால் கீழுள்ள பெட்டியில் ஒருங்குறிக்கு (Unicode) மாற்றப்பட்ட எழுத்துரு கிடைக்கும்]


சுரதா, கிருபாவுக்கு நன்றி


© 2006  Thur Broeders

________________