Thursday, March 31, 2005

படம் காட்டுறன்

வணக்கம்!

ஒஸ்ரேலியாவில் நடந்த வலைப்பதிவர் சந்திப்பில் எடுக்கப்பட்ட படம் சயந்தனின் வலைப்பதிவல் போடப்படும் என்று அறிவிப்புத் தந்து நாட்கள் சில கடந்து விட்டன. ஆனால் இன்னும் படம் வரவில்லை என்ற ஏக்கம் உங்களுக்கு இருந்திருக்கும். உங்களுக்கு மட்டுமல்ல எனக்கும்தான். சயந்தன் 'மசுந்திறதப்' பாக்க எனக்குச் சந்தேகம் வந்திட்டுது. அடிச்சுப்பிடிச்சு ஆளிட்ட அந்தப் படத்த வேண்டீட்டன். படத்தப் பாக்கத்தான் விளங்கீச்சு ஏன் அவர் மசுந்தினவர் எண்டு. எண்டாலும் வாசகப் பெருமக்களின்ர ஆவலப் பூர்த்தி செய்யுறதுக்காக அந்தப் படத்த இப்ப இதில வெளியிடுறன்.


Image hosted by Photobucket.com


படத்தில ஆர் எங்க நிக்கிறதெண்டு கேக்க வேண்டாம். நீங்களே கண்டு பிடியுங்கோ. சயந்தனின்ர படம் ஏற்கெனவே வெளிவந்திட்டதால ரெண்டு பேரயும் இனங்காணுறது சுகம். (மூஞ்சயளின்ர விறுத்தத்தில கண்டு பிடிக்கிறதோ?)

Labels:

எழுத்துருவைத் தெரிவுசெய்ய.
பாமினி ஆங்கில உச்சரிப்பில்

[மேலுள்ள பெட்டியில் தட்டச்சினால் கீழுள்ள பெட்டியில் ஒருங்குறிக்கு (Unicode) மாற்றப்பட்ட எழுத்துரு கிடைக்கும்]


சுரதா, கிருபாவுக்கு நன்றி


Monday, March 28, 2005

தேங்காயும் ஒரு தமிழனும்…

வணக்கம்!

ரெண்டு நாளுக்கு முதல் லண்டனிலயிருக்கிற என்ர நண்பனொருவனோட கதச்சுக்கொண்டு இருக்கேக்க அவன் கேட்டான்,
இண்டைக்கு இரவு என்ன சாப்பிட்டனி?
வேறயென்ன?...இடியப்பமும் சம்பலும், அதோட தக்காளிச் சொதியும்.’
உங்களுக்கடாப்பா சொல்லிச் சொல்லிப் பழகிப்போச்சு. பகிடி விடாம சொல்லு.
இதிலயென்ன பகிடிவிடக்கிடக்கு? உண்மையா அதத்தான் சாப்பிட்டனான்.’

இதக்கேட்ட அவனுக்கு ஆச்சரியமா இருந்தீச்சாம்.
டேய்! நீ குடுத்து வச்ச ஆள்தான். நானெல்லாம் சொதியும் சம்பலும் சாப்பிட்டு 6 மாதமாச்சு.’
எனக்கு விளங்கேல. எங்கட ஆக்கள் சொதியில்லாம இருக்க மாட்டினமே? அவனிட்ட தீர விசாரிச்சதில, வெளிநாடுகளில எங்கட சனம் தேங்காய்ப்பால் பாவிக்கிறது குறைவாம். சிலர் தொடுறதுகூட இல்லையாம். எல்லாம் கொலஸ்றோல் வந்திடுமெண்ட பயம்தானாம். என்னையும் பாவிக்கிறதக் குறைக்கச் சொன்னான்.

இதென்ன கோதாரி? தேங்காயில்லாம மனுசன் எப்பிடியாம் சாப்பிடுறது? இவன் வேற நல்லாப் பயப்பிடுத்திறான். கொலஸ்றோல் வாறதெண்டது ஒருபக்கம் இருக்க, இனி தேங்காய் பாவிக்காமல்தான் சாப்பிடவேணுமெண்டது பெரிய சங்கடமா இருந்தீச்சு. இஞ்ச வந்தப்பிறகு ஊரில சாப்பிட்டமாதிரித்தான் சாப்பிடுறன். எந்த மாற்றமுமில்ல. அதே சாப்பாடு வகையள்தான். ஒவ்வொருநாளும் சொதி, அடிக்கடி சம்பல். எல்லாக்கறியுமே தேங்காப்பால் விட்டுத்தான். என்ன... விறகடுப்புக்குப் பதிலா வாயு அடுப்பு. பயந்தென்ன செய்யிறது? இதுபற்றிக் கேக்க தெரிஞ்ச டாக்குத்தரிட்டப் (வைத்தியர்) போனன். ஆள் யாழ்ப்பாணத்தான் தான். அவரிட்ட என்ர பிரச்சினயச் சொன்னன். தேங்காப்பால் பாவிச்சா கொலஸ்றோல் வருமெண்டது உண்மையே எண்டு என்ர சந்தேகத்தக் கேட்டன். ஆனா மனுசன் சொல்லிச்சு,
ச்சா… ஆர் சொன்னது அப்பிடி. அப்பிடியொண்டுமில்ல. நீ தாராளமாச் சாப்பிடலாம். ஆனா குளிர்காலத்தில கொஞ்சம் குறைச்சுக் கொள். சும்மா இருக்காம உடம்புக்கு -ஏதாவது வேல குடு. அது காணும்.’

சரியெண்டு ஆளிட்டயிருந்து சந்தோசமா வெளிக்கிட்டன். ஆனா வெளிக்கிடேக்க,
ஒருநாள் உன்ர வீட்ட வாறன். நல்ல ஒரு சொதி வச்சுத்தா
எண்டு மனுசன் கேட்டபிறகு அந்தாளில எனக்கு ஒரு சந்தேகம் வந்திட்டுது. இவற்ற வீட்டில சொதி வைக்கிறேலயெண்டா ஏதோ பிசகு இருக்கத்தான் வேணும் எண்டு மனம் கொஞ்சம் குழம்பீற்றுது. இஞ்ச வலைப்பிதியிற ஆக்கள் ஆருக்காவது சரியான விளக்கமும் தீர்வும் தெரிஞ்சாச் சொல்லுங்கோவன்.

இந்த இடறுப்பாடுகளுக்குள்ள உயிர்த்த ஞாயிறுக்குப் பால்புட்டு அவிக்கிறதெண்ட திட்டம் தவிடுபொடியாப் போச்சு. நானறிய பால்புட்டுச் சாப்பிடாம விட்ட உயிர்த்த ஞாயிறு இதுவாத்தான் இருக்கும். தேங்காய் எண்டது எங்கட சனத்தின்ர சாப்பாட்டில தவிர்க்கவே ஏலாத சாமான். இந்தியாவில கொஞ்ச நாள் இருக்கேக்க தேங்காய்க்கு இருந்த ‘மவுசு’ தெரியும். சின்னச் சின்னச் சொட்டுக்களா வாங்கியந்து அத அரைச்சுக் கறி வக்கிறதைப் பாத்திருக்கிறன். ஆனா ஊரில இந்தத் தேவையே இல்ல. வளவுக்க கிடைக்கிற தேங்காயே தாராளமாக் காணும். இடம்பெயர்ந்தப்பிறகு தேங்காய்க்குக் கஸ்டம்தான். அந்த நேரத்தில தேங்காயும் சரியான வில. ஒரு தேங்காய் 40 ரூவா கூட வித்தது. ஆனா ஒருநாளும் தேங்காயக் குறச்சதில்ல.

அங்க 'சொதி'யெண்டு ஒரு திரவம் வைக்கிறனாங்கள். (எல்லாருக்கும் தெரியும்) அதில்லாம ஒருத்தருக்கும் சாப்பபாடு இறங்காது. சொதியில கனவகை இருக்கு, மீன்சொதியிலயிருந்து மாங்காய்ச் சொதிவரைக்கும். எங்கட ஊர் முரலுக்குப் பேர் போன இடம். (ஊரைக் கண்டுபிடிக்கிற ஆக்களுக்கு எப்பிடி முரல்சொதி வக்கிறதெண்ட விவரம் சொல்லித்தரப்படும்) யாழ்ப்பாண நகர்ப்பகுதியிலயிருந்து கூட இரவில 8 மைல் தாண்டி முரல் வேண்ட ஆக்கள் வாறது எனக்கு ஞாபகமிருக்கு. மாசி மாசத்திலதான் இந்த முரல் கூடதலாப் படும். அப்ப இரவு 10 மணி வரைக்கும் கூட காத்திருந்து உடன் முரலில சொதி வச்சுச் சாப்பிட்டிருக்கிறம். அம்மம்மா வக்கிற முரல்சொதிக்கு இணையா வேற சாப்பாடே இல்ல எண்டுதான் இண்டை வரைக்கும் நினைச்சுக் கொண்டிருக்கிறன். போன வருசம் மாசிமாதம் போகேக்க, ஒருத்தரும் வடிவாத் தொழில் துடங்கேல. அதோட நேவியின்ர கெடுபிடியளும் நிறைய இருந்தீச்சு. அதால முரல் சரியாப் பிடிபடேல. ஒரு முரல் 15 ரூவாக்கு வேண்டி சொதிவச்சுச் சாப்பிட வேண்டியிருந்தீச்சு.

சரி. எங்க விட்டனான்?... ஆ… சொதிபற்றிச் சொல்லிக்கொண்டு இருந்தனான். எத்தின வகையான கறியள் வச்சாலும் சொதி இல்லாம சாப்பிடவே ஏலாது எண்ட நிலைமைதான் இண்டை வரைக்கும். ஆனா யாழ்ப்பாணத்தார் எல்லாரும் அப்பியெண்டு இல்ல. மானிப்பாயில நாங்களிருந்த வீட்டுக்காரர் எப்பவாவது தான் சொதி வப்பினம். நகர்ப்புறத்திலயும் சில இடங்களில சொதிவக்கிறது குறைவு. சொதிக்குக் கட்டாயம் மீனோ மரக்கறியோ போட்டுத்தான் வைக்கோணுமெண்டில்ல. ஒண்டுமில்லாட்டிக்கூட வெங்காயமும் பச்சமிளகாயும் இருந்தாக்கூடப் போதும். எங்கட அம்மம்மா காயவச்ச றால் மூக்குகள (றாலின் தலைப்பகுதி) சேத்துவச்சிருந்து அப்பப்ப சொதிக்குள்ள போடுவா. அதின்ர மணமும் சுவையும் தனி. எந்தச்சாப்பாட்டுக்கு இல்லாட்டியும் இடியப்பத்துக்கு சொதி முக்கியம். சொதியில்லாம இடியப்பம் சாப்பிடலாமோ?... நானும் முடியாது எண்டுதான் நினைச்சுக் கொண்டு இருந்தனான், அண்டைக்கு வரைக்கும்.

மலேசியாவில நான் கொஞ்ச நாள் நிண்டனான். அங்க இந்தியச் சாப்பாடுதான். இட்லி, தோசை எண்டு இருக்கும். ஒருநாள் இடியப்பம் எங்கயோ இருக்கெண்டு சொல்ல நானும் அங்க போனன். தமிழ்க்கடைதான். முதலில 30 இடியப்பம் வாங்கினம். கடைக்காரர் சாம்பாறா கறியா எண்டு என்ர விருப்பத்தக் கேக்க, நானும்
எனக்குச் சாம்பாறு வேண்டாம். சொதி தாங்கோ’
எண்டு கேட்டன். அதில நிண்டவருக்கு விளங்கேல. வேற ஒராள் வந்து என்னெண்டு கேக்க, திருப்பவும்
சொதி தாங்கோ’
எண்டு சொன்னன். முனுசர் பெரிசா கெக்கட்டம் விட்டுச் சிரிச்சார். எனக்குக் குழம்பீட்டுது. சிரிச்சுப் போட்டுக் கேட்டார்,
நீங்க ஜப்னாவா?
ஓமோம்
எண்டன். எனக்கு முதலும் எங்கடஆள் ஆரோ சொதிக்கு அலைஞ்சிருக்கிறான் போல. இலங்கையிலயிருந்து தமிழ் பேசிற ஆர் வந்தாலும் இவைக்கு யாழ்ப்பாணத்தான் தானே. பிறகு, அவை சொதி வக்கிறேல அதுக்குப்பதிலா ரசம்தான் வைக்கிறவை எண்டதையும் தெரிஞ்சு கொண்டு சாம்பாரையே வேண்டிக்கொண்டு வந்திட்டன்.

ம்… இப்பிடி தேங்காயில்லாமச் சாப்பிடவே தெரியாத எங்கட சனம் என்னெண்டு இப்ப இருக்குதுகள் எண்டு எனக்கொரு வியப்புத்தான். கனடாக்காரரிட்ட கேட்ட இடத்தில 'சோயாப்பால்' பாவிக்கினமாம். சொல்லப் போனா வெள்ளக்காரனிண்ட சாப்பாட்டுக்கு என்னத்துக்குச் சொதி?
ஆர் கண்டது?...
நானும் இன்னும் ஒரு வருசத்தில சொதியெண்டா என்னெண்டதை மறந்து போயிருக்கலாம்.

சொட்டுக்கள்: சிறு துண்டுகளாய் வெட்டியெடுக்கப்பட்ட தேங்காய்த்துண்டுகள். சில்லு எண்டும் சொல்லிறனாங்கள்.

Labels: ,

எழுத்துருவைத் தெரிவுசெய்ய.
பாமினி ஆங்கில உச்சரிப்பில்

[மேலுள்ள பெட்டியில் தட்டச்சினால் கீழுள்ள பெட்டியில் ஒருங்குறிக்கு (Unicode) மாற்றப்பட்ட எழுத்துரு கிடைக்கும்]


சுரதா, கிருபாவுக்கு நன்றி


Saturday, March 26, 2005

அவுஸ்திரேலிய வலைப்பதிவர் மாநாடு.

அவுஸ்திரேலியாவில் நடந்து முடிந்த வலைப்பதிவர் மாநாடு.

வணக்கம்!

நேற்று வெள்ளிக்கிழமை, அவுஸ்திரேலிய வலைப்பதிவர் மாநாடு எதிர்பார்த்தபடி பெரு ஆரவாரமாக நடந்து முடிந்தது.

மெல்பேணில் சிறப்பாக ஒழுங்கமைக்கப் பட்ட இடத்தில் (அவ்விடத்தைத் துல்லியமாக வெளியிட முடியாதுள்ளது. தொடர்ந்தும் சந்திப்புக்கள் நடத்தப்படவுள்ளதால் பாதுகாப்புக் காரணங்களுக்காக வெளியிட முடியாது.) பின்னேரம் 4.00 மணியளவில நான் மண்டபத்துக்குப் போகேக்க ஏற்கெனவே அங்க எனக்காக காத்திருந்த சயந்தன் ஓடிவந்து கைகுடுத்து வரவேற்றார். பிறகு மாநாடு துவங்கேக்க சம்பிரதாயமா ஒரு பாட்டுப் பாடி துவங்குவம் எண்டு சயந்தன் சொல்ல, எவ்வளவு யோசிச்சும் ஒரு பாட்டும் ஞாபகம் வராமப் போக, கடசியா ஒரு பெட்டியக் குடஞ்சு தேடி பாட்டுக் கசட் ஒண்டக் கண்டெடுத்து அதப் பாடவிட்டு மாநாட்டத் துவக்கி வச்சார் சயந்தன்.
பாரதிதாசனிண்ட ‘தமிழுக்கும் அமுதென்று பேர்’ எண்ட அருமையான பாட்ட முழுக்கக் கேக்கப் பொறுமையில்லாமலே மாநாடு துவங்கீச்சு.

ஆரம்பத்தில ஊர்ப்புதினம் பிறகு வலைப்புதினம் எண்டு போய் கடசியில பொடிச்சியின்ர கவித எதிர்ப்பு இயக்கம் பற்றி வந்தீச்சு. நான் அதுக்கு ஆதரவாயும் சயந்தன் எதிராயும் வாதிச்சு, கடசியில பிரயோசினமெதுவுமில்லாம இடையிலயே அந்தக் கத நிண்டுபோச்சு. (ஆரேன் பக்கத்திலயிருந்து ஏத்தி விட வேணுமெல்லோ). இடையில, ‘எழுதுவது என்றால் என்ன’ எண்டு அதிமுக்கியமான ஒரு கேள்வியக் கேட்டு அருமையான விவாதமொண்ட துவக்கினார் சயந்தன். ‘எழுதிறதெண்டால் எழுதிறது தான்’ எண்டு சுருக்கமா நான் சொன்ன பதிலோட ஆள் கதைய திசை திருப்பினார். நான் சொன்னது விளங்கீற்றுது எண்டுதான் நினைக்கிறன். எண்டாலும் இது சம்பந்தமா சந்தேகமிருக்கிற ஆக்களுக்காக அடுத்து இதப்பற்றி ஒரு சிறுகதை எழுதலாமெண்டு யோசிக்கிறன்.

கதைச்சுக்கொண்டு இருக்கேக்கயே நான் கொண்டு போயிருந்த முக்கியமான தின்பண்டப் பாசலைப் பிரிச்சேன். ஒரு வித்தியாசமா இருக்கட்டுமேன் எண்டு நான் கொண்டு போன அதப் பாத்த உடன சயந்தன் திகைச்சுப் போனார். அது பினாட்டு. எழுதேக்குள்ள பனாட்டு எண்டு எழுதிறவை. பனம் பினாட்டு எப்பிடிச் செய்யிறதெண்டு ஒரு பதிவு எழுதிற எண்ணமிருக்கு. அந்தப் பாசலைத் திறந்த உடன எனக்கு முகம் சுளிச்சுப்போச்சு. இவ்வளவு நாள் பொத்திப்பொத்தி வச்சிருந்ததில சாதுவா பூஞ்சணம் பிடிச்சிருந்தீச்சு. பின்னயென்ன? எங்கட ஊரிலயெண்டா அடுப்புப் 'போறணை'க்க கட்டித் தூக்கிவிட்டா ஒரு கிருமி அணுகாது. இஞ்ச 'போறணை'க்கு எங்க போறது. இருந்தாலும் பினாட்ட விடேல. மேல்ப்பக்கத்த மெதுவாத் துடச்சு எடுத்திட்டு சாப்பிட்டம். கனநாளுக்குப் பிறகு சாப்பிடிறபடியா நல்லா இருந்திச்சு. தேங்காச் சொட்டும் புளுக்கொடியலும் இல்லாத குறதான் பெரிசாத் தெரிஞ்சுது.

அடுத்த முறைச் சந்திப்புக்கு எப்பிடியெண்டாலும் புளுக்கொடியலும் பாணிப்பினாட்டும் எடுப்பிக்கிறதெண்டு சயந்தன் சொன்னவர். நல்ல யோசின தான். எனக்கு இன்னொரு ஆச இருக்கு. கள்ளும் பிளாவும் எடுப்பிச்சுக் குடிக்கோணுமெண்டு. ஆனா இதெல்லாம் நடக்கிற காரியமே? பத்தாததுக்கு வாற முற மற்ற வலைப்பதிவாளரும் வந்தீச்சினமெண்டா எங்கள் ரெண்டு பேரயும் விட மற்றதுகளெல்லாம் பெண்டுகள். அவயள வச்சுக்கொண்டு என்னெண்டு குடிக்கிறது. ஆனா 'மொடர்ன் கேரள்' குடிப்பா எண்டு நினைக்கிறன். 'நெப்போலிய'னுக்கு வக்காலத்து வாங்கினவவெல்லே.

மற்ற வலைப்பதிவாளர்மாரைக் கூப்பிட முடியாமப்போனது கவலையாத்தான் இருந்தீச்சு. நாங்களென்ன செய்ய? ஒருத்திரிண்ட மின்னஞ்சல் முகவரியோ தொலைபேசி இலக்கமோ எங்களிட்ட இல்ல. அடுத்த முறைக்கு எப்பிடியும் எல்லாரையும் கூப்பிடிறது எண்டு ஏகமனதா முடிவெடுத்தம். ஷ்ரேயா, சந்திரலேகா, மார்டன் கேர்ள் ஆக்கள் தானே அவுஸ்திரேலியாவிலயிருந்து எழுதிகினம். நட்சத்திரன் செவ்விந்தியனும் இஞ்சதான் இருக்கிறாரெண்டு சயந்தன் சொன்னார்.

மாநாடு முடிஞ்சதும் மண்டபத்துக்குப் பக்கத்திலயிருக்கிற புல்வெளியில போயிருந்து பம்பலடிச்சம். அங்க நிறைய காதல் ஜோடியள் சுத்திக்கொண்டு திரிஞ்சினம். எதிர்காலத்தில் இலக்கியத்த தலைகீழாப் பிரட்டப்போற எங்கள் ரெண்டு பேரையும்பற்றி அவயள் ஒருத்தரும் கவனமெடுக்கேல. அந்த புல்வெளியில இருக்கேக்க எனக்கொரு ஆச வந்திச்சு. இப்பிடி மாநாடுகள் நடத்தேக்க இதில 'கிட்டிப்புள்ளு' இல்லாட்டி 'கிளித்தட்டு' (இத 'தாச்சி' எண்டும் 'யாடு' எண்டும் சொல்லிறது. தமிழீழத்தின் தேசிய விளையாட்டாக இதைப் பரகடனப்படுத்தியிருக்கினம்.) விளையாட வேணுமெண்டு எனக்கொரு ஆச. ஆனா வாற பெண்டுகளுக்கு அதுகள் விளையாடத்தெரியுமோ, தெரிஞ்சாலும் விளையாட ஏலுமோ தெரியேல. இருந்தாலும் ஆக்கள் காணாது தானே.

இப்பிடியாயிருக்கேக்க, நல்ல மம்மல் நேரத்தில புகைப்படம் எடுத்தனாங்கள். ஒரு வெள்ளைச் சோடியொண்டு தான் எங்களப் படமெடுத்தது. அருமையா வந்திருக்கு. இந்தப் படத்த சயந்தன் வெளியிடுவார் எண்டு நினைக்கிறன்.

அட! நானே எல்லாத்தையும் கதச்சுக் கொண்டிருந்தா எப்பிடி? மாநாட்டில கதச்ச விசயங்கள் மற்றும் தவறுப்பட்ட விசயங்களப் பற்றி சயந்தன் எழுதுவார். அடுத்த மாநாடு கூழோடையோ கள்ளோடையோ எண்டு தீர்மானிக்கேல.

Labels:

எழுத்துருவைத் தெரிவுசெய்ய.
பாமினி ஆங்கில உச்சரிப்பில்

[மேலுள்ள பெட்டியில் தட்டச்சினால் கீழுள்ள பெட்டியில் ஒருங்குறிக்கு (Unicode) மாற்றப்பட்ட எழுத்துரு கிடைக்கும்]


சுரதா, கிருபாவுக்கு நன்றி


Tuesday, March 22, 2005

அடிமட்டம்….அடிமனத்திலிருந்துஅடிமட்டம்… (Scale)
என் நினைவுகளின் அடிமட்டத்தில் தேங்கியிருக்கும் ஒரு சொல்.
ஆரம்பப் பள்ளியில் நான் அடியெடுத்து வைத்தபோது
எனக்கு அறிமுகமானது அடிமட்டம்.
இரும்பில், நெகிழத்தில் (பிளாஸ்ரிக்) என விதவிதமாய் வந்தாலும், முதலில் எனக்கு அறிமுகமானது மர அடிமட்டம் தான்.
அடிமட்டம் என பெயர் வந்தது ஏன் என்ற என் கேள்விக்கு,
ஓர் அடி நீளமாயிருப்பதால் என்றொரு பதில்;
foot ruler என்று ஆங்கிலத்திற் சொல்வதால் என்று இன்னொரு பதில்.

ஆனால், காய்த்துப்போன என் கைகளின் மொளிகள் சொல்கின்றன,
"அடிக்கப் பயன்படுவதாலேயே அது அடிமட்டம்".

மொளியில் அடிமட்டத்தின் விளிம்பால் அடிவாங்கியவர்களுக்குத் தெரிந்திருக்கும் அதன் வலி.
‘கைய நீட்டு’ என்று கட்டளை வரும்போது மூளையே தீர்மானித்து விடும்;
தடி வைத்திருந்தால் உள்ளங்கை;
அடிமட்டம் வைத்திருந்தால் புறங்கை.

கணக்குப் பாடத்துக்கு மட்டும் நாள்தவறாமல் அடிமட்டம் என் மொளிகளில் நர்த்தனமாடும்;
வகுப்பில் அதிகப்புள்ளிகள் எடுப்பவன் நான்தானென்றாலும் கூட.

எதற்குமே சீக்கிரத்தில் அழுதுவிடும் நான்,
மொளிகளில் அடிவாங்கும்போது மட்டும் ஏனோ அழுவதில்லை.
அதற்காகவே அதிகமாய் அடி விழும்.
விறைத்து நிற்குமென்னை "புட்றூலரால்" அடித்துக்கொண்டே,
‘பார் புட்றூல் விழுங்கினவன் மாதிரி நிக்கிறான்’
என்று சொல்லி அடித்ததை நினைத்தால் இன்று ரசிக்க முடிகிறது.
(வளர்ந்த பின் இது அலவாங்கு விழுங்கியாக மாறியது).

ஆண்டு - 5 புலமைப் பரிசில் தேர்வில் சித்தியடைந்தபோது, அதுவும் கணக்கில் 88 புள்ளிகள் பெற்றபோது (என் ஊரில் 5 வருடங்களின் பின் சித்தியெய்திய ஒருவன் நான் தானாம்) மொளிகளின் நோவு தெரியவில்லை.

ஆனால் அதன் பின் வந்த,
என் மொளிகள் எப்போதும் காயப்படாத காலங்களில்,
நான் கணக்குப் பாடத்தில் 50 க்கு மேல் புள்ளிகள் பெற்றதில்லை.
(பிருஸ்டம் பிய்ய அடி வாங்கினாலும்).

இப்போது நினைக்கிறேன்,
யாராவது மொளியில் அடிமட்டத்தால் அடித்துப் படிப்பித்திருக்கக் கூடாதாவென்று.

சே!
மொளியில் அடிச்சுப் படிப்பிக்காத வாத்தியளும் ஒரு வாத்திமாரோ?

ஆனாலும்,
மரத்துப் போன என் மொளிகள் எனக்குப் பயன்பட்டன,
‘ஆத்திரம் வரேக்க ஆற்றயேன் மூஞ்சேல குத்த’


குறிப்பு:
மொளி
என்பது புறங்கையில் காணப்படும், விரல்கள் கையோடு பொருந்தும் பகுதி. இச்சொல்லில் ‘’கர ‘’கர பிரச்சினை எதிர்கொண்டபோது தேடியதில் இச்சொல் அகராதியிலும் இல்லை. எனவே பலருக்குத் தெரியுமா என்ற சந்தேகம் வந்துவிட்டது. மேலும் இன்னும் நான் பாவித்த ‘ள’கரம் சரியா என்ற சந்தேகமுண்டு.

Labels:

எழுத்துருவைத் தெரிவுசெய்ய.
பாமினி ஆங்கில உச்சரிப்பில்

[மேலுள்ள பெட்டியில் தட்டச்சினால் கீழுள்ள பெட்டியில் ஒருங்குறிக்கு (Unicode) மாற்றப்பட்ட எழுத்துரு கிடைக்கும்]


சுரதா, கிருபாவுக்கு நன்றி


Saturday, March 19, 2005

"படலையும்" பால்ய நினைவும்.

வணக்கம்!
இந்த முறையும் நான் எனக்கு ஏற்பட்ட அனுபவம் ஒண்டச் சொல்லப்போறன். போன முற நான் என்ர குரலில கதைச்சு உங்களக் கேக்க வச்சன். ஆனா ஒருத்தரும் அந்த ஒலிப்பதிவு முயற்சியப் பற்றி ஒண்டும் சொல்லேல. அது வேல செய்யுதோ இல்லையோ எண்டு கூட சொல்லேல. இந்த முற அந்த ஒலிப்பதிவு இல்லாமல்தான் போடுறன்.

மதியக்கா சொன்னதுக்காக ஒலி வடிவத்தப் போட்டிருக்கிறன். கீழ இருக்கிற செயலியளில ஒவ்வொண்டையும் முயற்சித்துப் பாருங்கோ.

Padalai.mp3

இல்லாட்டி கீழயிருக்கிற இணைப்புக்கள அழுத்திப் பாருங்கோ.
இணைப்பு ஒன்று
இணைப்பு இரண்டு
இணைப்பு மூன்று.

ஊரிலயிருந்து இடம்பேந்து (இடம்பெயர்ந்து) மானிப்பாயில தங்கியிருந்த காலம். அப்ப பின்னேரப் பள்ளிக்கூடம்தான் எங்களுக்கு. பின்னேரம் பள்ளிக்கூடத்தில இருக்கிறதும் பகலில வீட்டில இருக்கிறதும் உடனடியா ஒத்து வரேல. அதோட மானிப்பாய்ப் பெடியளுக்குக் காலமயும், எங்களுக்குப் பின்னேரமும் எண்டு பள்ளிக்கூடம் இருந்ததால அவங்களோட பழகி சினேகிதம் பிடிக்கிறதுக்குக் கொஞ்ச நாளெடுத்திச்சு. இதுக்கு உதவியா இருந்தது தனியார் நடத்திற ரியூசன் தான். சனி ஞாயிறில எல்லாருக்கும் ஒண்டாத்தான் வகுப்புகள் நடக்கிறதால எல்லாரும் பழகி சினேகிதம் பிடிச்சம்.

இப்பிடியா இருக்கேக்க, ஒருநாள் விஞ்ஞான வாத்தி வராதபடியா சும்மா வகுப்பிலயிருந்து எங்களுக்குள்ள கதச்சுச் கொண்டிருந்தம். அப்ப ஊரிலயிருந்து ஓடி வரேக்க நடந்த அனுபவத்த அவயளுக்குச் சொல்ல வேண்டி வந்துது. என்னச் சுத்தி அஞ்சாறு பேர் கத கேட்டுக்கொண்டு இருந்தீச்சினம். (அங்காலயிருந்த கொஞ்சம் “பாரடா உவன. நல்லா செல் குத்துறான்” எண்டு பொருமிக்கொண்டு இருந்தது கடைக்கண்ணால பாக்கத் தெரிஞ்சது). என்ர கதயச்சொல்லிக்கொண்டு வரேக்க
எதிர் வீட்டு லீலியாச்சியின்ர படலேக்க ஒரு செல் விழுந்தீச்சு
எண்டு ஒரு இடத்தில சொன்னன்.

என்னது.. படலையோ… அப்பிடியெண்டா?”
எண்டு கத கேட்டுக்கொண்டிருந்த ஒருத்தன் சந்தேகமாக் கேட்டான்.
என்ன?... படலையெண்டா உனக்கு என்னெண்டு தெரியாதோ? எனக்கு வண்டில் விடுறியோ?”
எண்டு அவனக் கேட்டன். பிறகுதான் பாத்தா கத கேட்டுக்கொண்டிருந்த மற்ற நாலு பேருக்கும் தெரியாது. சுதுமலைக்காரன் ஒருத்தன் மட்டும்
நான் கேள்விப்பட்டிருக்கிறன். ஆனா நாங்கள் பாவிக்கிறேல.” எண்டு சொன்னான். இதென்ன கோதாரி? படலையெண்டா என்னெண்டு தெரியாமலும் மனுசர் இருக்கினமோ (அது தெரியாட்டி தமிழே தெரியாது எண்டது மாதிரி அப்ப நினச்சனான்) எண்டு திகச்சுப்போனன். நேரா வீட்டுக்கு வந்து நாங்கள் தங்கியிருந்த வீட்டுக்காரரிட்ட (அவயளுக்கு மானிப்பாய் தான் சொந்த இடம்) கேட்டன். அவயளுக்கும் தெரியேல. கிழிஞ்சுது போ… எண்டு போட்டு அம்மாவிட்ட போய்
அம்மா அவேக்கு படலையெண்டா என்னெண்டு தெரியாதாமெல்லே...”
எண்டு ஒரு இளப்பாரமா சொன்னன். அம்மா என்ன வேலயில அல்லது கொதியில நிண்டாவோ தெரியேல (அவ பள்ளிக்கூடத்தில ரீச்சர், அதுவும் கணக்குப்பாடம்) என்ர கதய காதிலயே வேண்டேல. அதுக்குப் பிறகு படலயெண்டா என்னெண்டு தெரியுமோ எண்டு காணுகிற சிலரிட்ட கேட்டுப்பாத்தன். சிலருக்கு அதின்ர பொறிமுறை செயல்முறையெல்லாம் கீறி விளங்கப்படுத்தினனான்.

ஒரு விசயம் சொல்ல வேணும். மானிப்பாயில நாங்கள் இருந்த பகுதியில பெரும்பாலும் எல்லாம் கல் வீடுகள் தான். சுத்துமதிலெல்லாம் கட்டி வசதியாத்தான் இருந்தீச்சு. எல்லா வீட்டுகளுக்கும் தகர கேற் போட்டிருந்தவை. ஆத கேற் எண்டு தான் சொல்லிறவை. (வேற என்னெண்டு சொல்லிறது?) அதாலதான் எங்கட படல பற்றி இவைக்குத் தெரியேல. “சரி இதுக்குள்ளயே எங்கயெண்டாலும் படலை இல்லாத வீடொண்டு காணக்கிடைக்காமலே போகப்போகுது. அப்ப தெரியும் தானே” எண்டு விட்டுவிட்டேன். இதுக்குள்ள வேறயும் சில சொல்லுகள் இப்பிடி அவயளுக்குத் தெரியாமல் இருக்கிற பட்டியலில சேந்திட்டுது. இதுபற்றிப் பிறகொருக்கா எழுதிறன்.

ஒருநாள் பெடியளோட நாவாலிப்பக்கம் போக வேண்டி வந்திட்டுது. அப்ப தான் நான் தேடிக்கொண்டிருந்த படலையைக் காணிற சந்தர்ப்பம் கிடைச்சுது. சடாரெண்டு பாதையிலயே சைக்கிள நிப்பாட்டிப்போட்டன். சின்னதா மண்ணெண்ணை பரல் தகரத்தில சட்டமடிச்சு ஒரு யார் அகலத்தில ஒரு படலை. அதுக்கு தானாக மூடக்கூடியமாதிரி பாரம் கட்டிவிட்டிருந்தீச்சினம். படலையில ஒரு சிலுவையும் “அறையப்பட்டிருந்தீச்சு”. படலைக்க ரியூசனுக்குப் போறதுக்காக்கும் புத்தகங்களோட ஒரு அக்கா நிண்டு கொண்டிருந்தா. (அப்ப எனக்கு ஆக 13 வயதுதான்). நான் நிண்டோடன கொஞ்சம் தாண்டிப் போய் பெடியளும் நிண்டிட்டாங்கள். நான் கொஞ்சமும் வெக்கப் படாமல் நேரா அவவிட்டப் போய்
அக்கா இத என்னெண்டு சொல்லிறனியள்?”
எண்டு அந்தப் படலையக் காட்டிக் கேட்டன். அக்கா கொஞ்சம் குழம்பித்தான் போனா. பின்னயென்ன?.. முன்னபின்ன தெரியாத ஒருத்தன் இப்பிடி அதிமுக்கியமான ஒரு கேள்வி கேட்டா? கொஞ்சம் யோசிச்சவ (நிச்சயமா அதின்ர பேர யோசிக்கேல. இவன் ஏதாவது குறளி வேல பாக்கிறானோ? இல்லாட்டி இரட்டை அர்த்தத்தில ஏதாவது கேக்கிறானோ எண்டு தான் யோசிச்சிருப்பா) பிறகு பதில் சொன்னா.

கேற்”.
எண்டு அவ பதில் சொன்னோடன கொடுப்புக்க வந்த சிரிப்ப அடக்கிறதுக்குச் சரியாக் கஸ்டப்பட்டனான். திருப்பவும் கேக்கிறன்
இத கேற் எண்டே சொல்லிறனியள்?”
“ஓமோம். கேற் எண்டு தான் சொல்லிறனாங்கள்
."

சரியாப் போச்சு. அக்கா படலை எண்டு சொல்லுவா எண்ட எதிர்பார்ப்போட போய் அசடு வழிஞ்சு கொண்டு திரும்பின என்னப் பாத்ததும் பெடியளுக்குக் குழப்பம்.
என்னடா கதச்சனி?”
“ஒண்டுமில்லடா. அத என்னெண்டு சொல்லிறனியள் எண்டு கேட்டனான்
.”
அவங்கள் ஒருத்தருமே நம்பேல நான் இதத்தான் போய்க்கேட்டனான் எண்டு. பின்ன? ஆராவது ஒருத்தன் இப்படி விவஸ்தை இல்லாமல் போய் “படலை” தேடிக்கொண்டு திரிஞ்சிருப்பானா?

அண்மையில் தொலைக்காட்சியொண்டில “படல படல” எண்டு ஒரு நிகழ்ச்சியின்ர விளம்பரம் பாத்தன். ஆதில வாற விளம்பரப் பாட்டக் கேக்கேக்க வழமையா இந்திய நகைச்சுவைத் தொடர்களுக்கு வாறமாதிரியே தான் இருந்தீச்சு. அட அங்கயும் படல எண்ட சொல்லப் பாவிக்கினம் போல கிடக்கே எண்டிட்டு விட்டிட்டன். (நகைச்சுவை உட்பட எந்தத் தொலைக்காட்சி நிகழ்ச்சியளையும் பாக்கிறதில்ல. தவிர்க்க ஏலாமல் எங்கயாவது மாட்டுப்பட்டுப் பாத்தாச் சரி.) ஒருநாள் தற்செயலா அந்த படல படல தொடரப் பாக்க வேண்டி வந்தீச்சு. அட… எங்கட தமிழ். பத்து வருசத்துக்கு முந்தி வரைக்கும் நான் கேட்ட, பேசின தமிழ். அதே உச்சரிப்பு, அதே லயம். குறிப்பாக அதே வேகம். நெஞ்சு ஒருக்கா குளிந்திது பாருங்கோ. அதுக்குப் பிறகு என்ன கஸ்டப்பட்டெண்டாலும் "படல படல" பாக்கிறதெண்டு வெளிக்கிட்டிட்டன். அதில எங்கட சனத்தின்ர குசுகுசுப்புக்களும் விடுப்புக் கேக்கிற தன்மையும் வியாக்கியானம் செய்யிற லாவகம் எண்டு அத்தனையும் அப்பிடியே வரும். எழுதி வச்சு வாசிக்காமல், பாடமாக்கி ஒப்பாமல் இயல்பா வாற அந்தக் கததான் பிடிச்சிருக்கு. நான் மொழி நடைக்காக ரசிக்கிற இன்னொரு தொடர் "நையாண்டி மேளம்". தமிழ் சினிமாவில யாழ்ப்பாணத்தமிழ் பயன்படுத்த நினைக்கிற ஆக்களுக்கு கேட்டுப்பழகிறதுக்கு நான் சிபாரிசு செய்யக் கூடிய ரெண்டு நிகழ்ச்சிகள் இதுகள்தான். (ஆராவது கமல், மணிரத்தினத்துக்குச் சொல்லுங்கோ)

Labels: , , , , , ,

எழுத்துருவைத் தெரிவுசெய்ய.
பாமினி ஆங்கில உச்சரிப்பில்

[மேலுள்ள பெட்டியில் தட்டச்சினால் கீழுள்ள பெட்டியில் ஒருங்குறிக்கு (Unicode) மாற்றப்பட்ட எழுத்துரு கிடைக்கும்]


சுரதா, கிருபாவுக்கு நன்றி


Sunday, March 13, 2005

கால் பிரேக்…- “ஒர் அலசலும் அனுபவமும்.”

வணக்கம்!

இங்கே எனது பதிவின் ஒலி வடிவத்தையும் இணைத்துள்ளேன். அதை என் பேச்சுத் தமிழிலேயே பதிவு செய்துள்ளேன். தரம் குறைவென்றாலும் விளங்கக் கூடியமுறையில் உள்ளது. செயலி தொழிற்படாவிட்டால் கீழுள்ள உரலை கிளிக்கி கேட்டுக்கொள்ளுங்கள். ஒலி வடிவ முயற்சி பற்றிய உங்கள் கருத்துக்களைத் தவறாது எழுதுங்கள்.
http://www.geocities.com/maathahal/Voice/Aboutcylebreak.rm
இல்லாவிட்டால் இங்கே முயற்சியுங்கள்.
இல்லாவிட்டால் இங்கே முயற்சியுங்கள்.
இதுவுமில்லையென்றால் உங்கள் அதிஸ்டம் அவ்வளவுதான். (என் அமுதக் குரலைக் கேட்க முடியாமற்போகும்)

சைக்கிள் ஓட்டத் தெரிஞ்ச உங்களுக்கு கால்பிரேக் அடிக்கிறதப் பற்றித் தெரியும். சரியான முறையில பிரேக் இல்லாத சைக்கிளுகளுக்கு பிரேக் அடிக்க காலைப் பாவிக்கிறது தான் அந்த முறை. சிலர் ரெண்டு காலையும் பாவிப்பினம், சிலர் ஒத்தக் காலப் பாவிப்பினம். செயின் கவர் இருந்தாத் தான் ரெண்டு காலும் பாவிக்கலாம். கால் பிரேக் அடிக்கேக்க வால்வ்கட்டை களண்டு காத்துப் போன சம்பவங்களும் இருக்கு. கூடுதலா றிம்மில பிரேக் அடிக்கிற ஆக்களுக்குத்தான் அப்படி. (யாழ்ப்பாணமெண்டாலும் பரவாயில்ல. வன்னியில இப்படி கால்பிரேக் அடிக்கேக்க காத்துப்போய் மைல்கணக்கில சைக்கிள் உருட்டியிருக்கிறம்.) சிலர் டயரில குதிக்காலத் தேச்சு அடிப்பினம். சிலர் றிம்மில குதிக்காலத் தேச்சு அடிப்பினம். இப்பிடி கால்பிரேக் பற்றிக் கதைச்சுக் கொண்டே போகலாம்.

யாழ்ப்பாணத்தில சைக்கிளுக்கு கால்பிரேக் அடிக்கிறது சர்வசாதாரணம். பொம்பிளயள் பெரிசா அடிக்கிறேல. ஆனா கவுரவம் அதுஇது எண்டு பாக்காத ஆக்களெல்லாம் கால்பிரேக் அடிக்கிறதப் பற்றி யோசிக்கிறேல. பெட்டையள் பாக்கிறாளவ எண்டுகூட கவலப்படிறேல. அவ்வளவுக்கு கால்பிரேக் அடிக்கிறதெண்டது சர்வசாதாரணம். சைக்கிள் பிரேக் பிசகினாலும் பிசகும் கால்பிரேக் ஒருக்காலும் பிசகாது. கால் பிரேக் அடிச்சுப் பழகினவனுக்கு சைக்கிளில புது பிரேக் பூட்டிக் குடுத்துப் பாருங்கோ, அவன் கால்பிரேக் தான் அடிப்பான். கால் தன்னிச்சையா பொசிசனுக்கு வந்திடும். அதிலயிருந்து மீளிறதுக்குக் கொஞ்ச நாளெடுக்கும்.

இப்ப கால்பிரேக் அடிக்கிறதப் பற்றி நான் பாத்த சுவாரசியமான சம்பவமொண்டச் சொல்லப்போறன்.

போன வருசம் யாழ்ப்பாணத்திக்குப் போனனான். கிட்டத்தட்ட பன்ரெண்டு வருசத்துக்குப் பிறகு சொந்த ஊருக்குப் போறன். அங்க எனக்குத் தெரிஞ்ச ஒருத்தரிண்ட வீட்டுக்குப் போனன். ஆள் எங்களுக்குத் தூரத்துச் சொந்தம் தான். நானறிய அந்தாள் எந்த நேரமும் தண்ணியில மிதக்கிறவர். தண்ணியெண்டு நான் சொல்லிறது பனங்கள்ளத்தான். ஒரு பறணச் சைக்கிளில (அதுக்கு செயின்கவர், மட்காட், பெல் எண்டு எதுவுமிருந்ததா ஞாபகமில்ல.) தான் மனுசன் திரியும். கூத்து நடிக்கிறதிலயும் பாடுறதிலயும் ஆள் விண்ணன். கிட்டத்தட்ட ஒரு அண்ணாவி மாதிரி. செயின்கவர் இல்லாட்டியும் மனுசன் ரெண்டு காலாலையுந்தான் பிரேக் அடிப்பார். எனக்கு அது ஆச்சரியமாத்தான் இருந்திச்சு. இருக்கிற சீற்றிலயிருந்து கீழ வாற பாரில ரெண்டு பாதத்தின்ர முன்பக்கத்தையும் சேத்து வச்சுக் கொண்டு ரெண்டு குதியாலயும் பிரேக் அடிக்கிறது சாதாரணமா செய்யக்கூடியதில்ல.

சரி. இனி என்ன நடந்ததெண்டு சொல்லிறன். நான் அவரிண்ட வீட்ட போகேக்க மனுசன் எங்கயோ வெளிக்கிட்டுக் கொண்டு இருந்தார். சைக்கிள உருட்டிக் கொண்டு படலைக்க வரவும் நானும் அங்க போய் இறங்கவும் சரியா இருந்தீச்சு. ஆள் நல்ல நிதானமாத்தான் இருந்தார். ஆனா ரெண்டு குதிக்காலிலயும் பெரிய கட்டு. ரெண்டு நுனிக்காலாலயுந்தான் உன்னி உன்னி நடந்து வாறார். என்னக் கண்டதும் ஆள் உடன மட்டுக்கட்டாட்டியும் பிறகு பிடிச்சிட்டார். ‘இரடாப்பா ஒருக்காப் போட்டு வாறன்’ எண்டிட்டு வெளிக்கிட்டார். எனக்குத் தெரியும் மனுசன் எங்க போகுதெண்டு. வேறயெங்க தவறணைக்குத்தான். அவற்ற காண்டிலில கொழுவியிருக்கிற பைக்குள்ள இருக்கிற பிளா சொல்லிப் போட்டுது. அவர் ஒரு பொலிசி வச்சிருக்கிறார். அதென்னெண்டா தவறணையில எல்லாரும் பாவிக்கிற பிளாவில குடிக்க மாட்டார். அவங்கள் புதுசாத்தந்தாலும் குடிக்கமாட்டார். தானே தனக்கெண்டு பிளா செய்து கொண்டுபோய்க் குடிப்பார். தவறணையால ஆள் திரும்பி வரேக்க கதைக்கக் கூடிய நிலையில ஆளிருக்காது எண்டது விளங்கீற்றுது.

‘என்னண்ண நடந்தது காலில?’ இது நான்.
‘அதொண்டுமில்ல’ எண்டு சடைஞ்சவர்
‘பிறகு வந்து சொல்லிறன்’ எண்டிட்டு வெளிக்கிட்டிட்டார்.

நானும் சரியெண்டு வீட்டுக்க போனன். வழமையான புதினங்களெல்லாம் கதைச்சு முடிஞ்சப் பிறகு அவருக்கு காலில என்ன நடந்ததெண்டு அங்கயிருந்தவேற்ற கேட்டன். பெடிபெட்டயளெல்லாம் விழுந்துவிழுந்து சிரிக்குதுகள். பிறகு வெளிநாட்டிலயிருந்து கலியாணத்துக்கெண்டு வந்து நிண்ட அவரிண்ட மச்சான்காரன்தான் சொன்னார் என்ன நடந்ததெண்டு.

ஒருநாள் இரவு எட்டுமணிபோல மச்சான்காரன் ஹீரோ ஹொண்டா மோட்டச்சைக்கிளொண்டில றோட்டால வந்துகொண்டிருக்கேக்க எங்கட கதாநாயகன் நல்ல மப்பில சைக்கிளயும் விழுத்திப்போட்டு நிக்கிறார். ஆளுக்கு இடம்வலமொண்டும் தெரியாமக்கிடந்திருக்கு. உடன மச்சான்காரன் பக்கத்து வீடொண்டில சைக்கிள விட்டுட்டு கதாநாயகன மோட்டச்சைக்கிளில ஏத்திக்கொண்டு வீட்ட விட வந்திருக்கிறார். மனுசன் மோட்டச் சைக்கிளில பின்னாலயிருந்து கொண்டு பெலத்த சத்தமா சங்கிலியன் கூத்துப்பாட்டு பாடிக்கொண்டு வந்திருக்கிறார். (மனுசனுக்கு முட் வந்திட்டா சங்கிலியன், ஞானசவுந்தரி, செபஸ்தியார் எண்டு எல்லாக்கூத்தும் நடக்கும். நான் கூத்தில பைத்தியமானதே மனுசனிண்ட பாட்டக்கேட்டுத்தான்),

ஒரு ஒழுங்கைக்க திரும்பேக்க எதிர லைற் போட்டுக்கொண்டு ஒரு மோட்டச்சைக்கிள் வந்திருக்கு. எங்கட கதாநாயகனுக்கு ஏதோ தான் சைக்கிள் ஓடுறதெண்ட நினைப்பு. தன்ன இடிக்க வாறமாதிரி தெரிஞ்ச உடன மனுசன் ரெண்டு காலயும் தூக்கி அடிச்சாரே ஒரு கால்பிரேக். ஓடிக்கொண்டிருக்கிற மோட்டச் சைக்கிளிலயிருந்து கால்பிரேக் அடிச்சா எப்பிடியிருக்கும்? அப்பிடியே அள்ளீற்றுது. இவ்வளவும் கலியாண வேலப்பரபரப்புக்க நடந்திச்சு. சனத்துக்கு வியாக்கியானம் செய்ய நல்ல ஒரு கத கிடச்சிட்டுது.

நான் நினக்கிறன் மனுசன் அண்டையோட கால்பிரேக் அடிக்கிறத மறந்திருக்குமெண்டு.

குறிப்பு:
சிலருக்கு நான் பாவிச்ச சில சொல்லுகளின்ர பொருள் தெரியாமலிருக்கலாம். அதுக்காக நான் அப்பிடி நினைக்கிற சொல்லுகளின்ர கருத்துக்கள கீழ தாறன்.

படலை: இது கேற் மாதிரித்தான். வளவுக்க இருந்து வெளிய போற பாதை. ஆனா சின்ன ஒரு இடைவெளி (கிட்டத்தட்ட ஒண்டரை யார்) மட்டுந்தான் இருக்கும். ஆக்களும் சைக்கிள் மற்றது மோட்டச்சைக்கிளுகளும்தான் இதுக்கால போய் வரலாம். கிராமங்களில கூடுதலா இதுதான் இருக்கும்.
ஒழுங்கை: சின்னப் பாதை. பிரதான பாதையளிலயிருந்து பிரிஞ்சுவாற கிளைப் பாதையள். பெரும்பாலும் தார் போடப்பட்டிருக்காது. (அந்த நேரத்தில பிரதான வீதிகள் கூட தாரில இருக்காது.)
தவறணை: கள்ளு விக்கிற இடம். அங்கேயே வாங்கி அங்கேயே குடிப்பது.
பிளா: கள்ளுக்குடிக்க பாவிக்கிற பாத்திரம். பனையோலையாலேயே செய்யப்பட்டது. தோணி மாதிரி இருக்கும்.

Labels: , , , ,

எழுத்துருவைத் தெரிவுசெய்ய.
பாமினி ஆங்கில உச்சரிப்பில்

[மேலுள்ள பெட்டியில் தட்டச்சினால் கீழுள்ள பெட்டியில் ஒருங்குறிக்கு (Unicode) மாற்றப்பட்ட எழுத்துரு கிடைக்கும்]


சுரதா, கிருபாவுக்கு நன்றி


Tuesday, March 08, 2005

பெண்கள் தினம்...

வணக்கம்!
இன்று அனைத்துலகப் பெண்கள் தினம்.(இதற்கெல்லாம் வாழ்த்துச் சொல்லலாமா?)
வருடா வருடம் வந்து போகும் ஒரு நாள்.
பெண்களுக்கு இருப்பதைப் போன்று எங்களுக்கும் ஒரு நாள் வேண்டும் என்று ஆண்கள் ‘ஜோக்’ அடிக்கக் காரணமான நாள்.
பெண் விடுதலையைப் பற்றி ஏதாவது கதைப்பது வழக்கம்.
பெண் விடுதலையென்பது ஆணிலிருந்து விடுபடல் அல்லது ஆண்மையிலிருந்து விடுபடல் என்பது போன்ற தோற்றப்பாடுடைய விவாதங்களிலிருந்து, பெண்ணுக்குப் பெண்ணே எதிரி என்பது வரை பலதரப்பட்ட தளங்களில் பலதரப்பட்ட கோணங்களில் விவாதங்கள் நடந்து விட்டன; நடந்து கொண்டிருக்கின்றன.
ஒவ்வொரு முறையும் கதைத்ததையே திருப்பித்திருப்பிக் கதைக்க வேண்டிய நிலை.
இன்னும் எவ்வளவு காலமானாலும் பெண் விடுதலையைப் பற்றிக் கதைப்பதற்கு நிறைய விசயங்கள் இருந்து கொண்டேயிருக்கும் என்பதில் ஐயமில்லை.

வலைப்பதியும் நபர்களில் குறிப்பிட்டளவு பெண்கள் இருந்தாலும் இத்தொகை போதாது என்றே நினைக்கிறேன். ஆனாலும் இவர்களிற் பலர் மிகக் காத்திரமான பதிவுகளைத் தருகிறார்கள். இன்னும் நிறையப் பெண்கள் எழுத வரவேண்டும் என்பது என் அவா. இனிவரும் காலங்களில் நிறைவேறும் என்று நம்புகிறேன்.

இந்நிலையில் விசயம் தெரிந்தவர்கள் மறைக்கப்பட்ட, மறக்கடிக்கப்பட்ட பெண்களைப் பற்றிய பதிவுகளை எழுதலாம். மாலன் செய்துள்ளார்.

ஈழத்தில் (குறிப்பாக விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசத்தில்) மார்ச்-08 ஐ விட, ஒக்டோபர்-10 இல் வரும் ‘தமிழீழப் பெண்கள் எழுச்சி நாள்’ இற்குத்தான் அதிக முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. அன்றைய தினமே பெண்களுக்கான சிறப்புத் தினமாகத் திகழ்கிறது.

பெண்ணானவள் அனைத்துத் தளங்களிலும் விடுதலை பெற்று, தான் தானாகவே வாழ ஆசித்து முடிக்கிறேன்.

Labels: , ,

எழுத்துருவைத் தெரிவுசெய்ய.
பாமினி ஆங்கில உச்சரிப்பில்

[மேலுள்ள பெட்டியில் தட்டச்சினால் கீழுள்ள பெட்டியில் ஒருங்குறிக்கு (Unicode) மாற்றப்பட்ட எழுத்துரு கிடைக்கும்]


சுரதா, கிருபாவுக்கு நன்றி


© 2006  Thur Broeders

________________