Monday, December 31, 2007

என்னத்தைச் செய்தோம் இவ்வாண்டில்?

இவ்வாண்டில் நானெழுதிய மொத்த இடுகைகள்: 33.
சயந்தனால் எழுதப்பட்டது: ஒன்று.
கிடைத்த மொத்தப் பின்னூட்டங்கள்: 353.
அதிக பின்னூட்டங்கள் கிடைத்த இடுகை (37 பின்னூட்டங்கள்):
பின்னவீனத்துவம்: அறிவியல்பூர்வக் கலந்துரையாடல் - ஒலிப்பதிவு

இவ்வாண்டில் நானெழுதிய முதலாவது இடுகை:

கிளாலிக் கடனீரேரி - சில நினைவுகள்

இறுதியிடுகை: இவ்விடுகை.


இவ்வாண்டில் நானிட்ட ஒலிப்பதிவுகள் ஆறு:

உச்சரிப்பு மயக்கம் - ஒலிப்பதிவு


கலந்துரையாடல் ஒலிப்பதிவு -தைப்பொங்கல் சிறப்புப் பதிவு


நான் பெரிய ஆள் -1 : நானெழுதிய கவிதைகள்


பின்னவீனத்துவம்: அறிவியல்பூர்வக் கலந்துரையாடல் - ஒலிப்பதிவு


நினைவுப்பயணம்-1 (பண்டத்தரிப்பு) - ஒலிப்பதிவு

இவற்றைவிட மற்றவர்களின் குரல்களை ஒலிப்பதிவாக்கி இட்ட இடுகைகள் மூன்று.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
இவ்விடுகை எழுதுவதற்கான ஆராய்ச்சியிலீடுபட்டிருந்தபோது இடுகைகளுக்கிடையிலான கால இடைவெளி தொடர்ந்து அதிகரித்து வந்துள்ளதைக் கண்டுபிடித்துள்ளேன்.
2005 இல் எழுதிய இடுகைகள்: 111.
2006 இல் எழுதிய இடுகைகள்: 83
2007 இல் எழுதிய இடுகைகள்: 32. [இவற்றுள் மீளிடுகை, படியிடுகை என்பவற்றைக் கழித்தால் 25 தாம் வரும்.(2005 மேயில் நட்சத்திரக் கிழமையில் எழுதிய இடுகைகள் மட்டுமே 26)].
இருந்தாலும் நான் வலைப்பதிவு தொடங்கிய காலத்தில் எழுதத்தொடங்கியவர்கள் பலரைவிட அதிகமான இடுகைகள் எழுதியிருக்கிறேன்.

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

*** இதுதான் இவ்வாண்டின் கடைசியிடுகை.

Labels: ,

எழுத்துருவைத் தெரிவுசெய்ய.
பாமினி ஆங்கில உச்சரிப்பில்

[மேலுள்ள பெட்டியில் தட்டச்சினால் கீழுள்ள பெட்டியில் ஒருங்குறிக்கு (Unicode) மாற்றப்பட்ட எழுத்துரு கிடைக்கும்]


சுரதா, கிருபாவுக்கு நன்றி


Saturday, December 29, 2007

ஓரம்போ !!! - திரைப்படம்

அண்மையில் இப்படத்தைப் பார்த்தேன். ஏனோ தெரியவில்லை, பிடித்திருந்தது.

பொதுவாக தமிழ்ச்சினிமாவில் கடுப்பேற்றும் விடயங்கள்,
1. பாடற்காட்சிகள்
2. நகைச்சுவைக் காட்சிகள்
3. சண்டைக்காட்சிகள்.

இவற்றில் இரண்டாவதும் மூன்றாவதும் இப்படத்தில் இல்லையென்பதால் எனக்குப் பிடித்திருந்தது.
அதற்காக படத்தில் நகைச்சுவையே இல்லையென முடிவுகட்டிவிடாதீர்கள். நான் சொல்வது, தனியே நகைச்சுவைக்கென ஒருவரையோ ஒரு கும்பலையோ நடிக்கவிட்டு வரும் காட்சிகளை.
வடிவேலுவோ விவேக்கோ இன்னபிற நகைச்சுவைக்கென இருக்கும் நடிகர்களோ அவர்களின் பரிவாரங்களோ இப்படத்தில் இல்லை. கதைக்கான தேவையைவிட்டு நகைச்சுவைக்கென தனியான ஒழுக்கெதுவும் இப்படத்திலில்லை. எனவே இப்படம் பிடித்திருக்கிறது.

ஒரேயொரு சண்டைக்காட்சி வருகிறது, அதுகூட நாயகன் பத்துப்பேரைப் பந்தாடுவதாக காட்சிப்படுத்தப்படவில்லை. தனது ஆட்டோவைக் களவெடுத்துச் செல்வதைத் தடுத்துச் சண்டைபோடுகிறார் நாயகன். நாலைந்து பேருக்கு நாலைந்து அடியோடு சரி.

ஆ.. ஊ.. வென்று வாய்கிழிய வசனம்பேசும் நாயகனில்லை.
பார்வையாளனுக்கான உபதேசங்கள் இல்லை.

இப்படி சில 'இல்லாமை'களுக்காக இப்படம் எனக்குப் பிடித்திருக்கிறது.

வழமையாக படங்களில் எரிச்சலேற்படுத்தும் பாடற்காட்சிகள் கூட இப்படத்தில் எனக்கு எரிச்சலேற்படுத்தவில்லை. அந்த ஒரேயொரு காதற்பாட்டைத் தவிர்த்திருக்கலாம். மற்றவை படத்தோடும் கதையோடும் இயல்பாகப் பொருந்துவதாகத் தோன்றுகின்றன.

படத்தில் ஆட்டோ ஓட்டப்போட்டி நடத்துகிறார்கள். படத்தின் மையக் கருவே அதுதான். படத்தில் வரும் முதலாவது போட்டியில் நாயகன் வெல்கிறார்.
அதன்பிறகு தோற்கிறார், தோற்கிறார், தோற்றுக்கொண்டேயிருக்கிறார்.
வழமையாக முதலில் நாயகன் தோற்பார், பிறகு வெல்வார். இங்கு தலைகீழாக நடக்கிறது.

நாயகனும் அவரது நண்பனும் அனைத்தையும் இழந்துவிட்டார்கள். கையிலிருப்பது, யாருக்கும் தெரியாமல் பொத்திவைத்திருந்த 'சீத்தா' எனுமொரு ஆட்டோ. யாரையும் தொடக்கூட விடுவதில்லை.
அதைப் பந்தயமாக வைத்து இறுதிப் போட்டி நடக்கவிருக்கிறது. ரஜனி ஒத்தை ரூபாயை வைத்து எல்லாக் கோடிகளையும் மீட்பது போல நாயகனும் அவனது நண்பனும் இதைவைத்தே இழந்த எல்லாவற்றையும் மீட்டுவிடுவார்களோ என்று நினைத்துப் பயந்துகொண்டிருந்தேன். அதற்குரியமாதிரி பந்தயத்தில் நாயகன் வென்றால் இவர்கள் இழந்த அனைத்தையும் மீளத்தரவேண்டுமென்பதே பந்தயமாகவும் இருந்தது.

அட! அந்த இறுதிப்போட்டியிற்கூட நாயகனும் தோழனும் தோற்றுப்போகிறார்கள். இப்பிடியொரு அதிர்ச்சியைத் தமிழ்ச்சினிமாவில் - அதுவும் முழுக்க முழுக்க வர்த்தக நோக்கத்தில் எடுக்கப்பட்ட படத்தில் - 'ஆக்ஷன் ஹீரோ' க்களில் ஒருவராகத் தன்னை நிலைநிறுத்திக்கொண்ட ஆர்யா நடிக்கும் படத்தில் - எதிர்ப்பார்க்கவில்லை.

அதிஷ்டவசமாகக் கிடைத்த இரண்டு கறுப்பு முத்துக்கள் மூலம் நிறையப் பணம் கிடைத்து ஆர்யாவும் நண்பனும் வாழ்க்கையில் நிலைபெறுகிறார்கள் என்று காட்டி படத்தை முடிக்கிறார்கள். திருப்பவும் ஓட்டப்போட்டிக்கு வருவதாகக் காட்டவில்லை.

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
படத்தில் பிடித்த பாத்திரம்: Sun Of Gun.
மனிதர் நன்றாக நடித்திருக்கிறார்.

பிடித்த காட்சி:
பூஜாவை, தன்னுடன் படம்பார்க்க திரையரங்கு அழைத்துச் செல்வதற்காக ஆர்யா போடும் தூண்டில். பூஜாவின் பிரியாணியில் கதையைத் தொடங்கி எதிராளிக்குச் சந்தேகம் வராதமாதிரி சுவாரசியமாகப் பேசிக்கொண்டே திரையரங்குக்குப் போக சம்மதிக்கவைக்கும் அந்தக்காட்சியை மிகவும் இரசித்தேன்.

** இப்படத்தில் நாயகனின் நண்பனாக வரும் 'பிகிலு' பல படங்களில் ஆக்ரோசமான வில்லனாக நடித்திருக்கிறார். இதில் முற்றிலும் மாறுபட்ட வேடம். நன்றாகச் செய்திருக்கிறார். மும்பை எக்ஸ்பிரசில் பசுபதியைப் பார்த்த ஞாபகம் வந்தது.

*** படத்தில் கதையென்று எதுவுமில்லையென்று சிலர் சொன்னார்கள். உண்மைபோற்றான் தெரிகிறது. கதையென்று தனியே எழுதிவிட முடியாது. நாலைந்து சிறுகதைகளை ஒன்றாக்கி அவற்றுள் ஏதோவொரு தொடர்பை ஏற்படுத்தி ஒரு படமெடுத்ததுபோல் இருக்கிறது. ஆனால் இரசிக்கும்படியான திரைக்கதையமைப்பு.

அவனவன் ஒரேகதையை வைத்துப் பத்துப்படம் பண்ணும்போது, இதெல்லாம் ஒரு பிரச்சினையே இல்லை.

இப்படத்தின் இயக்குநர்களில் ஒருவர் பெண்ணென்று அறிகிறேன்.
வாழ்த்து.
ஜனரஞ்சகமான படங்களுள் பெண்களின் வருகை களிப்பூட்டுகிறது (கண்ணாமூச்சி ஏனடா இன்னோர் எடுத்துக்காட்டு).

Labels: , ,

எழுத்துருவைத் தெரிவுசெய்ய.
பாமினி ஆங்கில உச்சரிப்பில்

[மேலுள்ள பெட்டியில் தட்டச்சினால் கீழுள்ள பெட்டியில் ஒருங்குறிக்கு (Unicode) மாற்றப்பட்ட எழுத்துரு கிடைக்கும்]


சுரதா, கிருபாவுக்கு நன்றி


Sunday, December 23, 2007

மலேசியத் தமிழ் இளையோர் - தமிழ்நெற் சிறப்புக்கட்டுரை

அண்மையில் மலேசிய இந்தியர்கள் நடத்திய அறவழிப்போராட்டத்தை அடிப்படையாக வைத்து மலேசியத் தமிழர்கள் தொடர்பான சிறப்புக்கட்டுரையொன்றை தமிழ்நெற் வலைத்தளம் வெளியிட்டுள்ளது. பலரும் வாசிக்க வேண்டிய கட்டுரையென்பதால் பயன்கருதி இங்கு அது மீள்பதிவாக்கப்படுகிறது.

நன்றி: தமிழ்நெற்.

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

மலேசியத் தமிழ் இளையோர்

மலேசியத் தமிழ் இளையோர்: பண்பாட்டு-வலுவாக்கச் சிக்கல்
இன்றைய உலக விமானப் போக்குவரத்தின் தலைசிறந்த மையங்களுள் ஒன்று, கோலாலம்பூர் பன்னாட்டு விமான நிலையம். இதன் பயணிகள் அகலும்/இடைமாறும் கட்டிடத்தை ஒரு குறு நகரம் என்றே சொல்லலாம்.

இருப்பினும், மலேசியாவின் பன்மைப் பண்பாட்டுடன் பழக்கமுடைய எவரும் வினவக்கூடியது என்னவென்றால், இங்குள்ள கண்கவர் இன உணவு, விநோதப்பொருள், சர்வதேசச் சரக்கு அங்காடிகளில் இந்நாட்டின் மக்கட் தொகையில் ஏறத்தாழ 9 வீதம் கொண்ட தமிழ்ச்சமூகம் ஏன் முறையாக பிரதிபலிக்கவில்லை என்பதே.

தமிழர்கள் நடத்துவது என்று ஒரு புத்தகசாலையைத் தவிர வேறு விற்பனை நிலையங்கள் எதுவும் இங்கு இருப்பதாகவும் தெரியவில்லை. உலகத்தின் மொழிகளில் நூல்கள் அடுக்கப்பட்ட இக் கடையிலும் ஒரு தமிழ் நூலைக் காணக் கிடைக்கவில்லை. இவ்வாறிருக்க, விமான நிலையத்தின் பெருந்தொகையான கழிப்பிடங்கள் அனைத்தையும் கவனித்துக்கொள்பவர்கள் மட்டும் தமிழர்களாகவே காணப்படுகிறார்கள் என்பது ஒருவருக்கு ஆச்சரியம் தரக்கூடியது.

நவீன மலேசியாவின் சமூகங்களுக்கிடையிலான அபிவிருத்தி பேதங்களை பிரதிபலிக்கும் உதாரணக் காட்சி இது; பிறர் எவரும் வெளிப்படையாகவே விளங்கிக் கொள்ளக்கூடியது.

***********

வளர்ச்சியின் ஏற்றத்தாழ்வுகளுக்கு எதிராக அணிதிரண்ட ஆயிரக்கணக்கான தமிழ் இளைஞர்கள், மகாத்மா காந்தியின் படத்தையும் பிரபாகரனின் படத்தையும் தாங்கிச்சென்றார்கள் என்று எமக்குச் சொல்லப்படுகிறது. இதைக் கேட்டு, இந்தியாவிலும் இலங்கையிலும் மலேசியாவிலும் பயப்பிராந்தியடைந்த பிறழ்வு சக்திகள் அவசர முடிவுகளுக்குத் தாவினர். இலங்கைக்கு அப்பாலும் தமிழ் அடையாளத்துக்கு பயங்கரவாத முலாம் கொடுக்கும் முயற்சிகள் இப்பொழுது ஆரம்பமாகிவிட்டன.

முழுக்கட்டுரையையும் வாசிக்க...

Labels: ,

எழுத்துருவைத் தெரிவுசெய்ய.
பாமினி ஆங்கில உச்சரிப்பில்

[மேலுள்ள பெட்டியில் தட்டச்சினால் கீழுள்ள பெட்டியில் ஒருங்குறிக்கு (Unicode) மாற்றப்பட்ட எழுத்துரு கிடைக்கும்]


சுரதா, கிருபாவுக்கு நன்றி


Wednesday, December 19, 2007

விருது வழங்குவது சரியா?

தமிழ் வலைப்பதிவுச்சூழலில் அவ்வப்போது ஏதாவது குளறுபடி நடந்துகொண்டேயிருக்கும். இப்போது விருது என்றொரு பிரச்சினை வந்துள்ளது. என்ன நடக்கிறது என்பது தெரியாமலே பலரைப்போல நானும் விருது பற்றியோர் இடுகை எழுதவேண்டிய கட்டாயத்துக்கு ஆளாகிவிட்டேன்.
ஒன்றைப்பற்றி எழுதியே ஆகவேண்டிய நிலைக்கு பதிவர்கள் ஆளாவது அவ்வப்போது நடப்பதுதான். சந்திரமுகி, சிவாஜி பற்றி கட்டாயம் ஓரிடுகையாவது எழுதியாக வேண்டிய நிலையிருந்தது. அதனாலேயே படம் பார்க்காமலேயே விமர்சனம் எழுத வேண்டிய நிலை எனக்கும் வந்தது. அதுபோல் விருது பற்றியும் ஏதாவது உளறி வைத்தாக வேண்டும். இல்லாவிட்டால் தமிழ் வலைப்பதிவராக இருக்க முடியாது. எனவே இவ்விடுகை எழுதப்படுகிறது.
அதைவிட, வருடம் முடிகிறது; நீண்டகாலமாக ஏதும் எழுதவில்லை; இவ்விடுகை மூலம் நானும் இருக்கிறன் என்று காட்டிக்கொள்வதும் ஒரு காரணம்.


தற்போது வலைப்பதிவுகளோடு அதிக நேரம் செலவிடுவதில்லையென்பதால் இந்த விருதுக்கூத்து எப்போது தொடங்கியது, அதில் என்ன சிக்கல் என்பவை தொடர்பில் முழுமையான அறிவில்லை. மோகன்தாசின் எழுத்தைப்பார்த்தால் இது தமிழ்மண நிர்வாகத்துக்குப் போட்டியாக யாரோ செய்யும் நரிவேலை என்பதாகப் புலப்படுகிறது. விருது கொடுத்து அப்படி என்னதான் கிழித்துவிட முடியுமென்றும் தெரியவில்லை. அவர் சொல்வது உண்மையாயின் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். ஆனால் வலைப்பதிவுகளில் வரும் பெரும்பாலான எதிர்ப்புப் பதிவுகள் மேலெழுந்தவாரியான எதிர்ப்பையே வெளிப்படுத்துகின்றன.

தற்போது பார்த்தளவில் அனேகம்பேர் இந்த விருது வழங்கலை எதிர்த்து எழுதிக்கொண்டிருப்பது தெரிகிறது.
அவற்றில் பெரும்பாலானவை கும்பலில் கோவிந்தாவாக வெளிப்படும் கருத்துக்களென்பதே எனது எண்ணம். விருதை ஆதரித்து ஒரு போக்கு இருந்திருந்தால் இவற்றில் பெரும்பாலானவர்கள் அதையாதரித்து இடுகை எழுதியிருப்பார்கள். யாரோ காரசாரமாக எதர்த்தெழுதத் தொடங்கியதன் பின்னணியில் அதைத்தொடர்ந்து தாங்களும் ஏதாவது எழுதியாகவேண்டுமென எழுதுபவர்கள் பலர். (இது தமிழ்வலைப்பதிவுலகில் காலகாலமாக நிலவிவரும் ஒரு நடைமுறைதான். வேண்டுமானால் கடந்த சிலநாட்களில் விருது வழங்குவதை எதிர்த்து வெளிவந்த இடுகைகளை வாசித்துப் பாருங்கள். அடிப்படைத் தர்க்கமேதுமற்ற இடுகைகள் பல.)

சிலர் மட்டும் (சங்கமம் குழுவை மட்டுமன்றி) விருது வழங்கும் நடைமுறையை பொதுவாகவே கேள்விக்குட்படுத்தியிருக்கிறார்கள். பலர் இதைமட்டும் குறிவைத்துத் தாக்குகிறார்கள்.
வலைப்பதிவுகளுக்கு விருது வழங்குவது இதுதான் முதுன்முறையன்று. இதற்குமுன் வலைப்பதிவு விருதுகளை எதிர்த்து காரசாரமாக யாரும் பிரச்சினை பண்ணியதாக நினைவில்லை. அப்படி வந்தவைகூட, போட்டியில் அதிக தமிழர்கள் கலந்துகொள்ளவில்லையென்ற குறையைத்தான் (முக்கியமானவர் தருமி) சொன்னதாக ஞாபகம். மற்றும்படி அனைவரும் விருது வழங்குவதை ஏற்றுக்கொண்டனர். விருதில் வெற்றிபெற்றவர்களை வாழ்த்தி ஒரு கிழமை வாழ்த்துப் பதிவுகளெழுதிக் கொண்டாடினர்.

சரி, அவை குறிப்பிட்ட நடுவர்களன்றி, வாசகர்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவை என்ற வாதத்தை வைக்கலாம். ஆனால் வாக்குப்போட்டவர்களின் எண்ணிக்கை அண்ணளவாக இருநூறு என்றுதான் ஞாபகம். (போட்டி நடைபெறப்போவது தங்களுக்குத் தெரியாது, சரியான முறையில் விளம்பரப்படுத்தப்படவில்லையென்ற குறைகள் பலரால் வைக்கப்பட்டன). அங்கே இருநூறு பேரால் தெரிவு செய்யப்பட்டது போன்று, இங்கே பதினேழு பேரால் தெரிவுசெய்யப்படப் போகிறார்கள்.

விருது வழங்குவது பதிவர்களிடையே சண்டையை மூட்டிவிடுமென்ற வாதம் ஏன் வந்ததென்று தெரியவில்லை. இதே கோணத்தில் ஆழப்போனால் தமிழ்மணத்திரட்டியில் நட்சத்திரக் குத்துக்கள் வந்தது, பின்னூட்டங்கள் திரட்டப்பட்டது என 'பதிவர்களிடையே சண்டையை மூட்டும்' சமாச்சாரங்கள் பலவற்றைக் கேள்விக்குட்படுத்த வேண்டும். அப்படி பல சண்டைகள் வலைப்பதிவுலகில் நடந்துள்ளன. ஒரு கட்டத்தில் பின்னூட்டத் திரட்டிச் சேவையை நிறுத்திவிடுவதென்று தமிழ்மணம் முடிவெடுத்து, அதற்கான அறிவிப்பும் வெளியாகியது. அண்மையிற்கூட நாற்பதுக்கும் மேற்பட்ட பின்னூட்டங்களைப் பெறும் இடுகைகள் திரட்டப்படா என திரட்டி அறிவித்து பெரிய கலவரமே நடந்து முடிந்தது. அதற்கு முன்பு பின்னூட்ட மட்டுறுத்தலை திரட்டி கட்டாயப்படுத்தியபோது, சில பதிவர்களை திரட்டியை விட்டு நீக்கியபோது என வலைப்பதிவுலகம் கொந்தளித்த பல சம்பவங்களுள்ளன.
ஓரிடுகைக்கு யார் அதிகபட்சப் பின்னூட்டங்கள் வாங்குவதென்ற போட்டி சுவாரசியமான முறையில் நடந்தது. [டோண்டு தனது பின்னூட்டங்களை ஒரேயிடுகையில் திரட்டி 500 வரை போய் முதலிடத்தில் இருக்கிறார். அவருக்கு முன்பு இருநூறு என்ற இலக்கை முதன்முதல் எட்டியவர் இட்லிவடையென்பதும், அந்தப் பின்னூட்டவிழாவை வெற்றிகரமாகத் தொடக்கிவைத்தவன் நானென்பதும் ஒரு துணைத்தகவல்.;-)]
எல்லாம் கடந்துதான் தமிழ்வலைப்பதிவர்கள் இருக்கிறார்கள். இவ்வளவு கடந்து வந்தவர்கள் கேவலம் ஒரு விருதுக்காக தங்களுக்குள் சண்டை போடுவார்களென்பதோ, அப்படிச் சண்டைபோடுவது எப்போதும் நடக்காதது என்பதோ அபத்தமென்றே படுகிறது. சண்டை போட்டால் போட்டுவிட்டுப் போகிறார்கள். அதற்காக விருது கொடுக்காமலிக்க முடியுமா? சண்டை போடுகிறார்கள், தனது பதிவு தொடர்ந்தும் திரட்டியில் தெரியவேண்டுமென்பதற்காக தமக்குத்தாமே பின்னூட்டமிடுகிறார்கள், பின்னூட்டங்களில் சாராம்சமில்லை என்ற காரணங்களால் பின்னூட்டத் திரட்டி நிறுத்தப்பட்டுவிட்டதா என்ன?

தமிழ் வலைப்பதிவுலகம் என்பது எல்லோரையும் சேர்த்தது. சில்லறை விசயத்துக்கு வருடக்கணக்கில் சண்டை பிடிப்பவர்களும் இருக்கிறார்கள். மிகப்பெரிய விசயத்தைக்கூட அன்றோடே முடித்துவிட்டுப் போய்விடும் பதிவர்களும் இருக்கிறார்கள். மொக்கை, கும்மியுட்பட ஒருவகைப்பதிவுகளும் மிகவும் காத்திரமான படைப்புக்களும் ஒரேநேரத்தில் தமிழ்மணத்தில் வருகின்றன. ஒருவரிடமிருந்தேகூட அவை வருகின்றன. இந்த விருதைப் பிரச்சினையாக்குபவர்கள் இருப்பார்கள் என்பதைப்போல அதை முழுமனதோடு ஏற்றுக்கொள்பவர்களும், ஏன் அதையொரு பொருட்டாகக்கூட கவனிக்காதவர்களும் இருக்கிறார்கள்.

எனவே விருது கொடுப்பவர்கள் கொடுக்கட்டும், பங்குபற்றுபவர்கள் பங்குபற்றட்டும், வெல்பவர்கள் வெல்லட்டும். இவற்றில் நொட்டை பிடித்துக்கொண்டிருப்பது தேவையற்றது.
நான் கலந்துகொள்ளவில்லையென்பதைப் போலவே நிறையப்பேர் கலந்துகொள்ளப்போவதில்லை. நானும்தான். இதுவரை எந்தப்போட்டியிலும் கலந்துகொண்டதில்லை. போட்டியென்ன? ஆறு போட, எட்டுப்போட, நாலுபோட என வந்த அழைப்புக்களைக்கூட ஏற்றுக்கொண்டதில்லை. (ஒரேயொரு தடவைமட்டும் - அதுவும் வேறோர் பிரச்சினையைத் திசைதிருப்ப எழுதினேன்). அந்த அழைப்புக்கள்கூட வலைப்பதிவர்களிடையே சண்டையை, பிரச்சினையை மூட்டும் வல்லமை வாய்ந்தவை. பதிவர்களின் வாசிப்பு, அவர்கள் வைத்திருக்கும் புத்தகங்கள் பற்றிய (புத்தக மீம் என்று நினைக்கிறேன். பிரகாஷரால் தொடக்கப்பட்டது) அழைப்பு பதிவர்களிடையே தாழ்வுமன்பபான்மை ஏற்படுத்துகிறது, அது தவிர்க்கப்பட வேண்டியது என சுந்தரமூர்த்தி இடுகையெழுதினார், பலர் அக்கருத்தை ஆமோதித்தனர். பலர் புழுகிக்கொள்ள வேண்டி நேர்ந்த அந்த அவல நிலையை இந்த விருது ஒருபோதும் ஏற்படுத்திவிடாது என நினைக்கிறேன்.

விருது, பதிவர்களிடையே சண்டையை மூட்டிவிடுமென்ற குற்றச்சாட்டை அடிப்படையாக வைத்து ஒரு கேள்வி.
இரண்டு நடுவர்களை மட்டும்கொண்ட புகைப்படப் போட்டி எந்தவிதத்தில் சரியென்று நினைக்கிறீர்கள்?
பதினேழு நடுவர்களைக் கொண்ட (ஒப்பீட்டளவில் சரியான முடிவு வருவதற்கு அதிக சாத்தியமுள்ள) சங்கமம் விருது எப்படி தவறென்று கருதுகிறீர்கள்?
புகைப்படப் போட்டி முடிவால் பதிவர்களிடையே சண்டை மூண்டதா?

*** கவனிக்க: புகைப்படப் போட்டி தவறென்று நான் சொல்லவில்லை. விருதை எதிர்க்கும் சிலரின் குற்றச்சாட்டுக்குரிய விளக்கத்தைக் கோரியே இது சொல்லப்பட்டது. அவர்கள் சொல்லிய கருத்துக்கள் எவ்விதத்தில் புகைப்படப் போட்டிக்குப் பொருந்தாமற்போகுமென்ற கேள்வி எனக்குள் எழுகிறது. பொருந்தினால் அப்போட்டியை எதித்து ஏன் பிரச்சினைகள் எழவில்லையென்ற கேள்வியும் வருகிறது. உண்மையிலேயே விளக்கத்தை எதிர்பார்க்கிறேன்.

*** சங்கமம் விருதின் பின்னாலிருக்கும் அரசியல், இராஜதந்திரம், மந்திரம், சூனியம், நயவஞ்சகம் என்றெல்லாம் கருத்துச் சொல்லிப் பின்னூட்டமிட வேண்டாம். அவற்றைப் புறந்தள்ளியே எனதிடுகையுள்ளது.

*** ஒரு விருது யாரால் கொடுக்கப்படுகிறதென்பதை வைத்தே அதற்குரிய மதிப்பைக் கொடுக்க நாங்களெல்லாம் பழகிவிட்டோம். சகட்டு மேனிக்கு முளைக்கும் டாக்டர்கள், கலைமாமணிகள் தொடக்கம் நிறையப் பேரைப் பார்க்கிறோம். திரைத்துறைக்கு தமிழ்நாட்டு அரசாங்கம் அளிக்கும் விருதுக்கும் தேசிய விருதுக்குமுள்ள வித்தியாசத்தை மிகத் தெளிவாக அறிந்தே அணுகுகிறோம். அதுபோற்றான் எல்லா விருதுகளும்.

*** இது இவ்வருடத்தின் கடைசி இடுகையன்று.

Labels: , ,

எழுத்துருவைத் தெரிவுசெய்ய.
பாமினி ஆங்கில உச்சரிப்பில்

[மேலுள்ள பெட்டியில் தட்டச்சினால் கீழுள்ள பெட்டியில் ஒருங்குறிக்கு (Unicode) மாற்றப்பட்ட எழுத்துரு கிடைக்கும்]


சுரதா, கிருபாவுக்கு நன்றி


© 2006  Thur Broeders

________________