Thursday, December 30, 2004

ஆத்திரமும் அஞ்சலியும்

அனைவருக்கும் வணக்கம்!
கடற் பெருக்கின் அழிவு தொடங்கிய பின் எதுவும் எழுதவில்லை. உண்மையில் எழுத முடியவில்லை. எதையும் எழுதும் மனநிலையில்லை. தனியே வாசிப்பதுடன் மட்டும் நின்று விட்டேன். (ஜாபர் அலி போல கிறுக்குவதை விட இது எவ்வளவோ மேல். உண்மையில் கடவுள் (அவரது பாசையில் அல்லா) ஒரு காட்டுமிராண்டி என்று சொல்வதற்கு ஜாபர் அலிக்கு இருக்கும் துணிவு எவருக்கும் வராது.) இலங்கை வன்னியின் கரையோரங்களின் மக்களையும் அங்குள்ள நிலைமைகளையும் நன்கறிந்தவன் எனும் வகையில் (குறிப்பாக முல்லைத்தீவு) மிகவும் கலவரத்துடனேயே காலம் கழிந்தது. அரசினதும் உலக ஊடகங்களினதும் பாராமுகம் அதிர்ச்சியளிக்கவில்லை. வழமை போல ஆத்திரம் தான் வந்தது. எல்லா இடமும் அழிவுதானென்றாலும் உலகின் கண்களிலிருந்து மறைக்கப்படும் புலிகளின் பகுதிகளுக்குச் சென்று காட்சிகளைப் பதிவுசெய்து ஒளிபரப்ப, முன்னனி நிறுவனங்களுக்கு முடியாமற் போனது வேதனைக்குரியது. பிரான்சிஸ் ஹரிசன் மற்றும் மற்றவர்கள் எங்கு போனார்களோ தெரியவில்லை. (கருணாவிடம் என்றால் உயிரையும் பொருட்படுத்தாமல் போய்வரத் துணிவுண்டு, இந்து உட்பட)

பி.பி.சி. தமிழோசையில், சர்வதேச தொண்டு நிறுவனங்கள் புலிகளின் பகுதிக்கு வரத் தயங்குகிறார்கள், அவர்களுக்கான அனுமதி கிடைக்கவில்லை போன்ற காரணங்களைச் சுட்டிக்காட்டி “தமிழ்ச் செல்வனிடம்” கேட்டபோது ஆத்திரம் தான் வந்தது. புலிகள் பகிரங்கமாகவே சர்வதேசத்திடம் ஆதரவு கோரி அவசர அழைப்பு விடுத்த பின்பும் (இது கூட பெரும்பாலும் ஊடகங்களில் வந்தது தான்) இது என்ன பம்மாத்து? பிரதமர் வேறு, இந்நிறுவனங்கள் அவர்களின் பகுதிக்குச் செல்வதில் சில சிக்கல்கள் இருக்கலாம் எனக்கூறுகிறார். எதைச் சமாளிப்பதற்கு இந்தப் பசப்பு வார்த்தைகள்?

ஏதோ, இப்போது ஒருவழியாக வன்னிக்கும் இதரப் பகுதிகளுக்கும் நிவாரண உதவிகள் போகத் தொடங்கயுள்ளன. அந்த நிம்மதியுடனேயே இதை எழுதுகிறேன். அது எவ்வளவு போகிறது என்பதை விட ஏதோ கிள்ளியாவது கொடுக்கிறார்களே என்று ஆறுதலடைய வேண்டியதுதான். ஆனால் கடந்த மூன்று நாட்களாக நடந்த கூத்துக்கள், தனித் தேசத்திற்கான அல்லது தனி நிர்வாகத்திற்கான தேவையை ஓங்கிப் பறைசாற்றுவதாகவே இருக்கின்றன.

இந்நிலையில் தனியார் வானொலிகள் மற்றும் தொலைக்காட்சிகளுக்கு நன்றி சொல்ல வேண்டும். சக்தி வானொலி மற்றும் தொலைக்காட்சிச் சேவை ஏறத்தாள 40 பாரவூர்தி (லொறி) பொருட்களைச் சேகரித்து வன்னிக்கு அனுப்பியதாக அறிகிறேன். மிக்க நன்றி. விரைவில் இவ்வவலம் எல்லா இடத்திலும் முடிவுக்கு வர ஆசிக்கிறேன். மட்டு அம்பாறை திருமலை என பாதிப்படைந்த அனைத்துப் பிரதேசங்களுமே சராசரிக்கும் கீழே வாழ்க்கைத்தரமுடைய மக்களைப் பெரும்பான்மையாகக் கொண்டவை. போரினால் மிகமோசமாகப் பாதிப்படைந்தவர்கள். முல்லையில் நானறிந்த சில குடும்பங்கள் ஆறு ஏழு முறை இடம்பெயர்ந்தவர்கள். சிலர் பத்துத் தடவைகூட.

இறுதியாக, இவ் அவலத்தில் அழிந்து போன இவ்வுலக மானுடர்கள் அனைவருக்கும் என் அஞ்சலிகள். குறிப்பாக முல்லைத்தீவில் மாண்டு போன என் உறவுகளான அன்ரன் அண்ணா, என் விஜிதாக் குட்டி மற்றும் ஜீவதாஸ் குட்டிக்கும், நண்பர்கள் தெரிந்தவர்கள், அயலவர்களுக்கும் என் இதய அஞ்சலிகள்.

Labels: ,

எழுத்துருவைத் தெரிவுசெய்ய.
பாமினி ஆங்கில உச்சரிப்பில்

[மேலுள்ள பெட்டியில் தட்டச்சினால் கீழுள்ள பெட்டியில் ஒருங்குறிக்கு (Unicode) மாற்றப்பட்ட எழுத்துரு கிடைக்கும்]


சுரதா, கிருபாவுக்கு நன்றி


Saturday, December 25, 2004

வெற்றித் திரைப்படம் எடுப்பது எப்படி?

இவ்வலைத்தளத்தில் அன்பே சிவம் பற்றி நானெழுதியதைப் பார்த்த நண்பனொருவன் என்னுடன் கதைக்கும்போது, இது சிறந்த படமாக இருந்தால் தோல்வியடைந்தது ஏன்? (அவன் அதைச் சிறந்த படமாக ஏற்கவில்லை.) என்று வினவினான். “உன்னைப் போல் நிறையப்பேர் நல்ல படமில்லை என்று நினைப்பதால்தான்” என்று கூறி அத்தோடு பேச்சை முடித்து விட்டேன். ஏன் இக்கேள்வியை வலைத்தளத்திற் பதியவில்லை எனக்கேட்டதற்கு, தனக்குத் தமிழில் எழுதும் வழிமுறை தெரியவில்லை எனச் சடையத் தொடங்கினான். உண்மையில் அதற்குக் கிடைக்கும் பின்னூட்டங்களையிட்டுக் கவலைப்படுகிறானென்பதைப் புரிந்து கொண்டேன். என் எழுத்துக்குக் கிடைத்த பின்னூட்டங்கள் என் பார்வையையொட்டியே இருந்தன. சரி, இது அவனது இரசனை. எனக்குப் பிடித்ததற்காக இன்னொருவனுக்கும் இது பிடித்திருக்க வேண்டுமென்று எதிர்பார்க்க் கூடாது தானே? ஆனால் இக்கேள்வி பற்றிப் பின்பு யோசித்தேன். இப்படம் வர்த்தக ரீதியில் வெற்றி பெற என்னென்ன செய்திருக்க வேண்டும் என்ற என் யோசனைகளை எழுதுகிறேன். தவறேதும் இருந்தாலோ மேலதிகமாக இருந்தாலோ தயவு செய்து எழுதவும்.

கதாநாயகன் அறிமுகமாகும் முதற் காட்சியில் ஒரு குத்தாலங்கடிப் பாட்டுக்கு நூறு பேரோடு சேர்ந்து குதியன் போட்டிருக்க வேண்டும். அப்பாடல் கதாநாயகனைப் புகழ்ந்து தள்ளுவதாயிருந்தால் நன்று.
“அன்பும் நாந்தாண்டா…ஆண்டவனும் நாந்தாண்டா
சிவனும் நாந்தாண்டா…சிங்கமும் நாந்தாண்டா
எமனும் நாந்தாண்டா….
இப்படியே தொடரலாம். வார்த்தைகள் புரியாவிட்டாற்கூடப் பரவாயில்லை. கமலால் அப்படி ஆடமுடியாதென்றால் மாதவனுக்காவது சந்தப்பம் வழங்கியிருக்கலாம்.

ஐந்தாறு சண்டைக் காட்சிகள் வைத்திருக்க வேண்டும். (படத்தில் ஒரு சண்டைக்காட்சி இருந்தாலும் இது போதாது.) குறிப்பாக, காய்கறிச் சந்தையிலும் பாத்திரக்கடையிலும் சண்டை போட வேண்டும். (குறிப்பிட்டளவு மக்களிடம் வரவேற்பைப் பெறாததற்கு இதுவே காரணமாக இருக்கலாம்) அடிவாங்குவதற்கு ஆட்கள் இல்லாவிட்டால் மாதவனையும் கமலையுமாவது மோத வைத்திருக்கலாம்.

ஆடிக்கடி பஞ்ச் டயலாக் ஏதாவது சொல்லியிருக்க வேண்டும். ஆகக்குறைந்தது “அன்பே சிவம்…அன்பே சிவம்…அன்வே சிவம்...” என்றாவது எக்கோ (echo) தொனியில் அடிக்கடி சொல்லியிருக்கலாம்.

50 ஆண் பெண்கள் அரைகுறை ஆடையிற் புடைசுழ நாலு பாட்டு இருந்திருக்க வேண்டும். வெளிநாட்டுத் தெருக்களில் காட்சிப்படுத்துவது முக்கியம். கமலுக்கும் கிரணுக்குமான பாடற் காட்சியை இப்படிப் படமாக்கியிருக்கக் கூடாது. கிரணின் தொப்பையையாவது காட்டியிருக்கலாம் (திருமலை மாதிரி). பாடல் வரிகளிலும் “சரக்கு” இல்லை.

இரசிகர்களைக் கிளுகிளுப்பூட்ட எதுவுமில்லை. சகிலா வகையறாக் காட்சிகள் எதையாவது வைத்திருக்கலாம். ஆகக்குறைந்தது கமலுக்குரிய சர்ச்சையான முத்தக் காட்சியையாவது வைத்திருக்கலாம்.

நகைச் சுவைக்கென யாரையாவது தனியா வைத்துப் புலம்பச் சொல்லியிருக்க வேண்டும். கதையோடு சம்பந்தப்படாமலிருந்தாலும் பரவாயில்லை.

தமிழ்ச் சினிமாவின் தற்போதைய போக்கான இரண்டு கதாநாயகி முறையைக் கைவிட்டது பெரிய தவறு. அதுவும் இரண்டு கதாநாயகர்கள் இருக்கும்போது “முறைப்படி” நான்கு நாயகிகள் இருந்திருக்க வேண்டும். இரண்டு பேரையாவது உரித்துக் காட்டியிருக்கலாம். மாதவனுடன் வெளிநாட்டில் ஒருத்தி லவ்வினதாகக் காட்டினால் உரித்துக் காட்ட இன்னும் வசதி.


படத்தைச் சுபமாக முடித்திருக்க வேண்டும். சாத்தியப்படும் சில உச்சக் காட்சிகள் (climax) இதோ:

  1. எப்படியோ கிரண் கமலைக் கண்டுபிடித்து கட்டிப்பிடித்திருக்க வேண்டும்.
  2. கமல் வந்து போனதை எப்படியோ அறிந்து கமலைத் தேடி கிரண் ஒரு பாட்டுப் பாட கமல் ஓடி வந்து….
  3. தமிழ்ச் சினிமாவின் பெரும்பான்மை உச்சக் காட்சியான ரயில் நிலையத்தில் மாதவன் கமலைப் பிடித்து அழைத்து வந்து…..
  4. இறுதி நேரத்தில், கிரணுக்கு முன்னமே எல்லாம் தெரிந்திருந்து அவர்தான் மாதவன் மூலம் இப்படி ஒரு நாடகமாடி கமலை வரவழைத்தார் என்று படத்தை முடித்திருக்கலாம்.
  5. கமலின் நாய் தாலியைத் தூக்கிக் கொண்டு கமலைத் தேடி ஓட துரத்திக் கொண்டு வரும் மாதவனும் கிரணும் கமலைக் காண….
  6. கமலே நாசருடனும் அடியாட்களுடனும் பயங்கரச் சண்டை போட்டு கிரணை மீட்டிருக்கலாம். தேவையானால் மாதவனுடன் கூட சண்டை போட்டிருக்கலாம். அதிலும் பயங்கர அடிவாங்கி சாகுந்தருவாயில் கமல் இருக்கையில் காதலியின் கதறல் கேட்டு மீண்டும் சக்தி வந்து செயலற்றிருந்த கை காலெல்லாம் சரிவந்து ஒரே அடியில் அனைவரையும் தூக்கியெறிந்திருந்தால்... இன்னும் நன்று. அல்லது ஏதாவதொரு சாமியின் அருள் வந்து செய்வதாகக் கூட காட்டியிருக்கலாம். செத்துப் போனதாக மருத்துவரால் உறுதிப்படுத்தப்பட்ட பின்பு கூட இவ்வளவும் சாத்தியமே. (சொக்லேட் மாதிரி).


இன்னும் நிறைய வழிகள் இருக்கிறது. ஏதாவது செய்திருக்கலாம்.

சினிமாக் காரர்களின் உச்சக் காட்சித் தொல்லை (climax) சில படங்களில் தாங்கமுடியவில்லை. அண்மையில் ஒரு படம் பார்த்தேன். (காதல் சுகமானது என்று நினைக்கிறேன்). அதில் சினேகாவும் தருணும் மனசுக்குள் காதலித்தாலும், இறுதியில் சினேகாவுக்கும் இன்னொருவருக்கும் திருமணம். தருண்கூட திருமணத்திற்கு வந்துவிட்டு தாலிகட்டுவதைப் பார்க்கப் பொறுக்காமல் புறப்படுவார். தாலிகட்டும் போது வாசிக்கும் நாதஸ்வரமும் கெட்டிமேளச் சத்தமும் கூட கேட்டுவிட்டது. அடடா! புதுசா இருக்கே என்று திறந்த வாய் மூடவில்லை,.. வைத்தார்களே ஆப்பு. “ஓடிப் போகும்” தருண் முன் மணப்பெண் கோலத்தில் சினேகா. தொலைக்காட்சிப் பெட்டியில் மாப்பிள்ளையைத் திடீர் மணம் புரிந்த தங்கை சிறிதேவி பேசுகிறார். இருவரையும் சேர்த்து வைக்கிறார்.

Labels: , , ,

எழுத்துருவைத் தெரிவுசெய்ய.
பாமினி ஆங்கில உச்சரிப்பில்

[மேலுள்ள பெட்டியில் தட்டச்சினால் கீழுள்ள பெட்டியில் ஒருங்குறிக்கு (Unicode) மாற்றப்பட்ட எழுத்துரு கிடைக்கும்]


சுரதா, கிருபாவுக்கு நன்றி


Monday, December 20, 2004

உலக அழகியும் உலக அதிசயமும்

உலக அதிசயங்களைத் தெரிவு செய்வதற்காக நடந்துவரும் வாக்குப்பதிவு பற்றி இப்போது சூடாகச் செய்திகளும் விவாதங்களும் நடந்து வருகின்றன. மதுரை மீனாட்சி அம்மனுக்கு ஓட்டுப் போடுங்கள் என்று பிரச்சாரங்களும் சூடு பறக்கின்றன. இது பற்றி வரும் செய்திகளும் சுவாரஸ்யமானவையாகவே இருக்கின்றன.
ஆரம்பத்தில் இந்தியர்கள் இதில் ஆர்வமில்லையாம். உலக அழகி ஐஸ்வர்யா ராய் தாஜ்மகால் பற்றிச் சொன்ன பிறகு தான் விழுந்தடித்து ஓட்டுப் போட்டார்களாம். அழகியொருத்தி சொல்லி ஓட்டுப் போட்டு அதில் தாஜ்மகால் உலக அதிசயமாகத் தெரிவு செய்யப்படுவது, அக்கலைப் பொக்கிசத்தை இழிவு படுத்துவது மாதிரி இல்லையா? அழகி சொல்வதல்ல பிரச்சினை. (ஐஸ் இன் ரசிகர்களிடம் வாங்கிக் கட்ட முடியாது) பிரச்சாரம் செய்வதுதான் உறுத்தலாக உள்ளது. இது ஒரு தேர்தலையல்லவா நினைவுட்டுகிறது. ஒவ்வொரு கட்சியும் தங்களுக்கு ஓட்டுப் போடச்சொல்லிக் கேட்பது போல (ஒரு வித்தியாசம் மற்றவர்களுக்குப் போட வேண்டாமென்று சொல்லவில்லை.), போதாக்குறைக்கு நடிகையும் களத்திலிறங்கியிருப்பது அச்சொட்டாகப் பொருந்துகிறது.
ஐஸ்வர்யா தான் திருமணம் முடித்ததும் இங்கு தான் முதலிரவு நடத்துவேனென ஒரு சாதாரண கட்டடத்தைக் காட்டிச் சொன்னால் அதற்கு வாக்குப் போட்டிருப்பார்களோ என்னவோ. (ஏன் இதைச் சொல்கிறேனென்றால், தாஜ்மகால் அழகென்பதற்காக வாக்குப் போட்டதாகத் தெரியவில்லை. அப்படியென்றால் ஐஸ் சொல்ல முன்பே போட்டிருப்பார்கள். மேலும் குறிப்பிட்ட பத்திரிகைச் செய்தியும் அவ் அர்த்தத்தில் தான் உள்ளது.)
இதை விட முசுப்பாத்தி என்னெண்டா, வாக்கெடுப்பிற்கு விடப்படும் இடங்களைத் தெரிவு செய்து விடுவதுகூட சுலபமாம். எந்தவொரு அறிவியல் அடிப்படையுமில்லாமல் ஆராய்ச்சிகளில்லாமல் எழுந்தமானமாக நடக்கும் இக்கூத்து சரிதானா? தாஜ்மகாலுக்குக் கிடைக்காமல் திருவண்ணாமலைக் கோபுரத்திற்கு இப்புகழ் கிடைத்தால் சரியா?
சரி அதை விடுவோம். இப்போது நாம் செய்ய வேண்டியதென்ன? பிரபலமான சினிமா நட்சத்திரங்களை வைத்து மதுரை மீனாட்சியம்மன் ஆலயத்தைப் பற்றிப் புகழ்ந்து தள்ளி அதற்கு வாக்களிக்கச் சொல்லிக் கேட்கலாம். நேரில் அழைத்து வந்து செய்வித்தால் நன்று. குறிப்பாக ஐஸ்வர்யா ராயை அழைத்து வந்து ஒரு Statement விடச் செய்வது சிறந்தது.

Labels: ,

எழுத்துருவைத் தெரிவுசெய்ய.
பாமினி ஆங்கில உச்சரிப்பில்

[மேலுள்ள பெட்டியில் தட்டச்சினால் கீழுள்ள பெட்டியில் ஒருங்குறிக்கு (Unicode) மாற்றப்பட்ட எழுத்துரு கிடைக்கும்]


சுரதா, கிருபாவுக்கு நன்றி


பாலுமகேந்திராவின் செவ்வி

இன்று இயக்குநர் பாலு மகேந்திராவின் செவ்வியொன்றைத் தொலைக்காட்சியிற் பார்த்தேன். இடையிலிருந்து பார்க்கத் தொடங்கியதால் முழுவதும் பார்க்கமுடியவில்லை. ஏமாற்றம் தான். செவ்வியின் இறுதியில் இலங்கைத் தமிழரைப் பற்றிக் கேட்டபோது, “இலங்கையின் மட்டக்களப்பு மண்ணைப்பற்றியும் அம்மக்களைப்பற்றியும் நான் இறப்பதற்குள் ஒரு பதிவைச் செய்ய வேண்டும். இருப்பிடமிருந்து அகதிகளாய் அலையும் என் மக்களைப் பற்றிய படைப்பைச் செய்யவேண்டும். என்னுடைய அந்த மக்களுக்காக இதுவரை நான் எதுவுமே செய்யவில்லை. என் படைப்பாற்றலை உபயோகிக்கவில்லை......” என்று பாலுமகேந்திரா பதிலளிக்கையில் அவரால் இயல்பாகக் கதைக்க முடியவில்லை. உடைந்து போன நிலையில், குரல் கம்மி, விம்மி இடையிடையே நிறுத்தி நிறுத்திக் கதைத்தார். கலைஞனொருவனின் உண்மையான விம்மல் இது. (குற்ற உணர்ச்சியாகவும் இருக்கலாம்.)
எனக்கு பாலு பற்றி சிறிது ஏமாற்றம் இருந்தது. (நிச்சயமாய் வருத்தமில்லை.) என்னடா இந்தாள் இலங்கைத் தமிழர்பற்றி ஏனோ தானோ என்று இருக்கிறார்? என்ற ஏமாற்ற உணர்வே அது. ஆனால் இச்செவ்வியைப் பார்த்தபின் உள்ளத்தில் ஒரு குளிர்ச்சி. நான் நேசிக்கும் கலைஞனொருவனிடத்தில் எனக்கிருந்த வருத்தமொன்று நீங்கிய திருப்தி. பாலுவின் கனவு நிறைவேற வாழ்த்துக்கள்.
இதில் ஆச்சரியம் என்ன இருக்கிறது. தான் பிறந்து வளர்ந்த மண்ணைப் பற்றிய, அம்மக்களைப் பற்றிய ஏக்கம் அவ்வளவு இலகுவில் மறைந்து விடுமா என்ன? அதுவும் பாலு போன்ற மென்மையான, உணர்ச்சிமயமான கலைஞனுக்கு. இதைத்தான் தொப்புட்கொடி உறவு என்பாதா? (நிறையப் பேர் இச்சொல்லைப் பாவிக்கிறார்கள்...குறிப்பாக தமிழ்நாடு, ஈழம் பற்றிப் பேசுகையில்.)

Labels: , , , , ,

எழுத்துருவைத் தெரிவுசெய்ய.
பாமினி ஆங்கில உச்சரிப்பில்

[மேலுள்ள பெட்டியில் தட்டச்சினால் கீழுள்ள பெட்டியில் ஒருங்குறிக்கு (Unicode) மாற்றப்பட்ட எழுத்துரு கிடைக்கும்]


சுரதா, கிருபாவுக்கு நன்றி


Saturday, December 18, 2004

"அன்பே சிவம்" எனது பார்வையில்...

ஏறத்தாள ஒரு வருடத்தின் முன்பு பார்த்த படம். மீண்டும் பார்க்க நினைத்தாலும் முடியாத இடம். எனவே நினைவிலிருப்பவற்றை வைத்து இப்படத்தின் மீதான என் பார்வையைச் சொல்கிறேன். இதுவொரு திரைப்பட விமர்சனமன்று. அதற்கான முழுவடிவத்தை இது பெறவியல்லை. குறிப்பாக முழுத்தகவல்களும் தெரியவில்லை. மேலும் எனக்கந்த அருகதை இருப்பதாகவும் எண்ணவில்லை. ஒரு இரசிகனாக என்னை வசீகரித்த இப்படத்தைப் பற்றி ஏதாவது எழுத வேண்டும் போல் தோன்றியதன் விளைவிது.
படக் கதைக்கு வருவோம். (படம் வெளிவந்து நீண்ட காலமென்பதால் கதையைச் சொல்வதில் தப்பில்லை.)

சிவப்புச் சிந்தனை கொண்ட தொழிலாளியான நாயகன் கமல் (நல்லான் அல்லது சிவம்) வீதிநாடகக் கலைஞனாகவும் ஓவியனாகவும் இருக்கிறார். முதலாளியின் (நாசர்) மகளான பாலாவுடன் (கிரண்) எதிர்பாராவிதமாய் நட்புக் கொண்டு, பின் காதல் கொண்டு... இப்படியே போகிற போது (என்ன பாட்டி கதை சொன்ன மாதிரியிருக்கா?) அவளின் தந்தைக்குக் காதல் தெரியவந்து அவளை வீட்டில் அடைத்து வைக்க, இருவரும் தப்பிக் கேரளாவுக்குப் போக முடிவெடுக்கிறார்கள். கமல் தன் நண்பர்களுடன் பேருந்திற் பயணம் செய்யும்போது (நாயகி இல்லை) நடக்கும் விபத்தில் ஏனையோர் சாக அவர் படுகாயமடைந்த நிலையில் மீட்கப்படுகிறார்

வைத்தியசாலைக்கு வரும் முதலாளி நாசர் கமல் பிழைத்திருப்பதைப் பார்த்துவிட்டு தானாகவே சாகப்போகிறவனைக் கொல்வானேன் என்று (அல்லது தான் வணங்கும சிவனே கொன்று விடுவானென்று) எதுவும் செய்யாமல் விட்டுவிட்டுப் போகிறார். ஆனால் எவருமே எதிர்பாரா வண்ணம் கமல் குணமாகிறார். காதலியைத் தேடிவரும் அவரிடம், “அவளிடம் நீ இறந்து விட்டதாகச் சொல்லி வேறு திருமணம் செய்து வைத்து விட்டேன். தயவுசெய்து அவள் வாழ்கையில் குறுக்கிடாதே எனக்கேட்கும் நாசரிடமிருந்து விடை பெறுகிறார் கமல். இது ஒரு பாகம்.

எதிர்பாராத சந்தர்ப்பத்தில் புவனேஸ்வர் விமானநிலையத்திற் சந்தித்துவிட்ட கமலும் மாதவனும் தமிழ்நாடு வருகின்றனர். வெள்ளம், புயலால் பயணப் பாதைகள் பாதிக்கப்பட எப்படியோ பல்வேறு வழிகளில் முயற்சித்து வந்து சேர்கின்றனர். இடையே சமூகப் பிரக்ஞையற்ற சராசரி மேல்தட்டு வர்க்க மனப்பான்மையுடனிருக்கும் மாதவனைப் படிப்படியாக மாற்றுகிறார் கமல். மாதவனின் திருமன வீட்டில் தான் காதலித்த பாலா தான் மாதவனின் மனைவியாகப் போகிறவள் என்பதும் நாசர் தன்னிடம் சொன்னதெல்லாம் பொய்யென்பதும் தெரிய வருகிறது. கல்யாணத்தைக் குழப்பாமலிருக்க என்ன வேண்டுமானாலும் கேள் எனக் கேட்கும நாசரிடம், தொழிலாளிகளின் மாதாந்தச் சம்பளத்தைக் கூட்டிக் கொடுக்கும்படிக் கேட்டுப் பெற்றுக் கொடுத்துவிட்டுத் தன்பாட்டிற் போகிறார். இது இன்னொரு பாகம்.

விமான நிலையத்தில் கமலைத் தீவிரவாதியென்று (தப்பாக நினைத்து) காவல்துறையினரிடம் போட்டுக் கொடுத்துவிட்டுப் பதுங்கும் மாதவனைக் கமல் சந்திப்பதோடு தொடங்குகிறது படம். விபத்துக்கு முன் பின் என இரு பாகங்களும் சரியான இடத்தில் நினைவு மீட்டல்களாக (flash back) கலந்து வருகிறது காட்சிகள். கமலுடன் இணைந்து நடிப்பதில் சக நடிகனுக்குள்ள ஆபத்து அனைவரும் அறிந்ததே. (வசூல் ராஜாவில் பிரபுக்கு நேர்ந்தது தெரிந்ததே.) ஆனால் இப்படத்தில் மாதவன் தன்னை நிலைநிறுத்தியிருக்கிறார்: அதுவும் கமலுக்கு ஈடாகவே.


கமலின் நடிப்பைப் பற்றிச் சொல்லத் தேவையில்லை. முகம் முழுவதும் வடுக்களோடு அடிக்கடி தாடை இழுத்தபடி வரும் கமல் நெஞசில் நிறைகிறார். ஒப்பனைக் கலைஞனுக்கு ஒரு சபாஷ். (வெளிநாட்டிலிருந்து யாரோ வந்திருந்ததாக அறிந்தேன். விபரம் தெரிந்தாற் சொல்லவும்). காவல் நிலையத்தில், “நான்கூட நீ ஏதோ உண்மையான கம்யூனிஸ்டோன்னு நெனச்சிட்டேன். புடிச்சாலும் புளியங்கொம்பாத் தான்யா புடிச்சிருக்கே” என்று காவலாளியொருவன் கேட்கும்போது, குற்ற உணர்வில் தவிக்கும் கமல்; கிரணிடம் பணத்தைத் திருப்பிக் கொடுத்துவிட்டு தன்னை மறந்து விடும்படி கூறும் காட்சியில் “போராடலாம், ஆனா வாழ்நாள் பூரா போராடிக்கிட்டிருக்க முடியுமா?” என்று ஆற்றாமையை வெளிப்படுத்தும் கமல்; பலவீனமான நேரத்தில் கிரணைக் கட்டிக்கொண்டு திருமணதத்திற்குச் சம்மதிக்கும் கமல்; விபத்துக்குக் காரணமான நாயைத் தன்னுடன் அழைத்துச் சென்று வளர்க்கும் கமல்; என கமல் நிறைந்திருக்கிறார்.

கிரண் தான் கதாநாயகி. உடம்பைக் காட்டவோ ஆபாச நடனத்திற்கோ சந்தர்ப்பம் கொடுக்கப்படவில்லை. கொடுத்த பங்கை நிறைவாகச் செய்திருக்கிறார். நாசர் ஆர்ப்பாட்டமில்லாத பாத்திரம். (வில்லன் என்று சொல்ல முடியாது, ஏனெனில் வில்லன் பற்றிய ஒரு விம்பம் எனக்குத் தமிழ் சினிமாவால் ஏற்படுத்தப்பட்டுள்ளது). “தென்னாடுடைய சிவனே போற்றி” என்று அடிக்கடி சொல்லிக்கொண்டு திரிவது; “இன்னைக்கு விரதம். பச்சத்தண்ணி தொட மாட்டம்ல” என்றுவிட்டு பின்புறம் போய்த் தண்ணியடிப்பது; சந்தர்ப்பம் கிடைத்தும் கமலைக் கொல்லாமல் விடுவது, பின் இறுதி நேரதிதில் கொல்ல ஆள் ஏவி விடுவது; என்று மனிதர் இயல்பாக அசத்தியிருக்கிறார்.

மதன் வசனமெழுதி நடித்துமிருக்கிறார். அவ்வப்போது கதைக்கருவைச் சார்ந்து வசனங்கள் வரும்போது மின்னுகிறார். எ.டு:- “ரஸ்யா தான் ஒடஞ்சிடுச்சே அப்புறமேன் கம்யூனிசத்தத் தூக்கிப் பிடிக்கிறீங்க?” என்று மாதவன் கேட்க, “தாஜ்மகால் இடிஞ்சிட்டா காதலிக்கிறதயே விட்டிடுவீங்களா?” என்று கமல் திருப்பிக் கேட்பார். “காதல் ஒரு feeling என்றால் கம்யூனிசமும் ஒரு feeling தான்”; என்பார் கமல். நீச்சற்குளத்தில் “I can't swim” என மாதவன் அலறுகையில். “சாகப் போறப்பவாவது தமிழ் பேசுங்க” என்று கமல் சொல்வது. இப்படி அடுக்கிக் கொண்டே போகலாம். நானும் கடவும், நீயும் கடவுள் என்பதாகட்டும், கிரடிட் கார்ட் சம்பந்தமான காட்சிகளாகட்டும் மிக நன்று.

வித்தியாசாகரின் இசையில் பாடல்கள் அருமை. வைரமுத்துவின் “யார் யார் சிவன்” எனும் பாட்டு வசீகரிக்கிறது. காட்சிகள் சிறப்பாக உள்ளன. வெள்ளப் பெருக்குக் காட்சியும், தொடருந்து (ரயில்) விபத்துக்காட்சியும் பிரமிப்பூட்டுகிறது. மிகுந்த சிரத்தையெடுத்துச் செதுக்கியிருக்கிறார்கள். கலை இயக்குநர் பிரபாகருக்கு ஒரு சலாம். தெருக்கூத்துக் (வீதி நாடம்) காட்சிகள் மெய்சிலிர்க்க வைக்கிறது. பிரளயனின் கலையைப் படத்தில் அருமையாகவே பயன்படுத்தியிருக்கிறார்கள்.

இப்படத்திற் பிடிக்காத விசயங்களேயில்லையா? எனக் கேட்கலாம். ஆம், எனக்குக் கமல் மேல் (அது விரிவடைந்து இறுதியில் தமிழ்ச் சினிமாச் சூழல் மீதே திரும்புகிறது) கோபம் வந்த இடமொன்றுண்டு. (சுந்தர். சி. தானே இயக்குநர் என்றுவிட்டு கமல் தப்ப முடியாது). கமலை அடிக்க நாசரால் ஏவிவிடப்பட்டவர்களை, தன்னுடனிருப்பவர்களை ஒதுங்கியிருக்கச் சொல்லிவிட்டு கமல் ஒத்தை ஆளாக ஒரு குடையை வைத்து அடித்துத் துவம்சம் செய்கிறார். அதுவும் அவருடைய வீதிநாடகக் கலைஞர்களும் தொழிலாளர்களும் வாழும் இடத்தில். என்னவொரு கோமாளித்தனம்? (நான் மற்றைய படங்களைப்பற்றிக் கதைக்கவில்லை.) அழகிய ஒரு கோலத்தில் மலம் கழித்த மாதிரி. இப்படியொரு படத்தில் (சாத்தியமேயற்ற) தனிமனித பராக்கிரமம் தேவையா? (அதற்குள் ஜேம்ஸ் பாண்ட் பாணிச் சண்டை வேறு) கம்யூனிசத்தின் அடிப்படையே தோழமை, ஒற்றுமை, சேர்ந்து முகங்கொடுக்கும் தன்மை. அக்கோட்பாடு சார்ந்த படத்தில் அக் கோட்பாட்டைப் பிரதிநிதித்துவப் படுத்தும் கலைஞன் இப்படிச் செய்யலாமா? மாறாக எல்லாத் தொழிலாளர்கயையும் (பார்வையாளராய் மேளமடித்து நாயகனுக்கு உசுப்பேற்றிக் கொண்டிருந்த) இணைத்து அவர்களை அடித்து விரட்டியிருந்தால் கதைக்கருவிற்கு இன்னும் வலுச்சேர்த்திருக்கும். (இதைப்பற்றி என் நண்பனொருவனுடன் கதைத்துக் கொண்டிருந்தபோது அவன் சொன்னான் “படம் பார்க்கும் எங்களுக்கு “அட! நாம் பார்த்துக் கொண்டிருப்பது தமிழ்ப்படம் தான்” என்பதை நினைவூட்டத்தான் அப்படியொரு காட்சியை கமல் வைத்தாராம்.” அவனுக்குக் குசும்பு அதிகம்தான்.)

நகைச்சுவைக்கென தனியான சுவடோ (track) தனிநடிகரோ (விவேக், வடிவேலு) இப்படத்தில் இல்லை. (அந்தளவில் நிம்மதி). கதையுடன் இயல்பாகவே வருகிறது நகைச்சுவைக் காட்சிகள். இவ்வளவு இறுக்கமான (serious) கதைக்களத்தை இயல்பாக யதார்த்தமாகச் சொல்லியிருக்கிறார்கள். கடவுள் இல்லையென்று எடுத்த எடுப்பில் அடித்துக்கூறும் பிரச்சாரப் பாணியில் இல்லாமல் அழகாகவே கதை சொல்லப்பட்டுள்ளது. கமல் தனது அரசியலைத் தெளிவாகச் சொல்லியுள்ளார்.

நான் இப்படத்தைப்பற்றி அதிகம் கதைத்து (எழுதி?) விட்டேன் போலுள்ளது. ஏனெனில் அவ்வளவுக்கு என்னைக் கவர்ந்த படமிது. படவெளியீட்டின் போதே இப்படத்தின் வர்த்தக வெற்றிபற்றி கமல் சரியாகவே கணித்திருந்தாரென நினைக்கிறேன். படவெளியீடன்று பி.பி.சி. திமிழோசையில் வெளிவந்த அவரது செவ்வியில் அது விளங்குகிறது. இப்படத்தை வெற்றியடைய விடாமற் செய்ததற்குப் பிராயச்சித்தமாக இன்னும் எவ்வளவு காலம் ஒரு நல்ல படத்திற்காகக் காத்திருக்க வேண்டும்?

Labels: , ,

எழுத்துருவைத் தெரிவுசெய்ய.
பாமினி ஆங்கில உச்சரிப்பில்

[மேலுள்ள பெட்டியில் தட்டச்சினால் கீழுள்ள பெட்டியில் ஒருங்குறிக்கு (Unicode) மாற்றப்பட்ட எழுத்துரு கிடைக்கும்]


சுரதா, கிருபாவுக்கு நன்றி


Thursday, December 16, 2004

“முகம்” எனது பார்வையில்.....(திரைநோக்கு).

“டிசூம் டிசூம்..” என்று ஒருவனே 20 பேரை அடிக்கும் சண்டைகளேதுமற்று, நினைத்த மாத்திரத்திற் பல நாடுகளுக்குச் சென்று கட்டிப் புரண்டு பாடும் டூயட் எதுவுமில்லாமல், வாய்ச்சவடாலடிக்கும் வசனங்களோ நடிகர்களோ இல்லாமல், நகைச்சுவை (காமடி) என்ற பேரில் அலட்டல்களோ கோமாளிக்கூத்துக்களோ இல்லாமல்;;.... இப்படி தமிழ்ச்சினிமாவுக்கே உரித்தான “அடிப்படைத் தகுதிகள்” இல்லாமல் வெளிவந்த படம் “முகம்”.கோரமான முகம் கொண்ட ஒருவன், அம்முகத்துக்காகவே சமூகத்தாற் புறக்கணிக்கப்படுகிறான். வேலை கூட எடுக்க முடியவில்லை@ தன்னைக் காதலிக்கிறாள் என நினைப்பவளின் நிராகரிப்பு. இப்படி தன் முகத்துக்காகவே எல்லாவற்றிலும் நிராகரிக்கப்படும் ஒருவன், தற்செயலாய் முகமூடியொன்றால் அழகான முகத்தோற்றத்தைப் பெறுகிறான். முன்பு தன்னை நிராகரித்துக் கேவலப்படுத்திய சினிமாவில் நட்சத்திரமாகிறான். யாரும் நெருங்க முடியாத உயரம். நாடே அவனை வணங்குகிறது. திருமணம் கூட நடந்து விடுகிறது. இருந்தாலும், தன் முகம் போலவே தன்னைச் சுற்றியிருக்கும் கும்பலும் புகழும் ஏன் பாசமும் கூட போலியானதென்பதை நன்றாக உணர்கிறான். தன் பழைய முகத்துக்காக ஏங்குகிறான். இறுதியிற் பழைய முகத்தை அடைகிறான். ஆனால் தான் இன்னார் தானென்று கதறிச் சொன்னபோதும் அதைக் கேட்காமல் அடித்துத் துரத்துகிறது சமூகம், மனைவி உட்பட. அப்போதுதான், உயிர்வாழ்வதற்கென்றாலும் தனக்கு ஒரு போலி முகம் கட்டாயம் தேவை என்பதை உணர்கிறான். பழையபடி முகமூடி அணிந்து வருபவனை தங்கள் தலைவனாய் வணங்கி ஆர்ப்பரிக்கிறது சமூகம். போலியே நிரந்தரமாக, போலியாகவே வாழ்ந்து விடுவதென்று தயாராகிறான் அம் மனிதன்.
இது தான் கதை. கதாநாயகனாக நாசர். நாசர் தான் படமே. அவரைவிட படத்தில் ஓரளவு தெரிவது மணிவண்ணன் தான். படத்தின் முதன்மைப் பாத்திரங்கள் நாசரும் அந்த முகமூடியும் தான். நாசர் தனக்குக் கிடைத்த வாய்ப்பை நழுவவிடவில்லை. அசத்தியிருக்கிறார் மனிதர். பருக்களும் வடுக்களும் நிறைந்த அந்தக் கோரமுகத்தோடு;ம் சரி, சினிமா சூப்பர் ஸ்டாராகவும் சரி, குற்ற உணர்வோடு குமுறுபவராகவும் சரி, தன் பழைய முகத்தையும் சுதந்திரத்தையும் யாசித்து ஏங்குவதிலும் சரி, கொடி நாட்டியிருக்கிறார். அந்த முகத்தோடேயே சினிமாவில் நடிக்க சந்தர்ப்பம் கிடைத்ததும் (வேலைக்காரன் வேடம்) அவர் அடிக்கும் பந்தா, அதே படத்தைத் திரையிற் பார்த்துக்கெண்டிருக்கும் போது அவர் நடித்த காட்சி வந்ததும் திரையைக் கிழித்து நாசமாக்கி கீழத்தரமான வார்த்தைகளால் திட்டி அவரைத்தேடி அடித்த மக்களிடம் உதை வாங்கும் காட்சி என்று படம் முழுவதும் நிறைந்திருக்கிறார் நாசர். நாசரின் நீண்ட சினிமா வரலாற்றில் “முகம்” ஒரு ‘மகுடம்’.

கதாநாயகியாக வருபவர் ரோஜா. உண்மையில் அதிக வேலையில்லை. புடத்தில் கதை தான் முதன்மையென்பதால் மனிதர்களுக்கு அதிக முக்கியத்துவம் இல்லை. நாசரின் அழகான (போலியான) முகத்தைக் காதலிக்கும் ரோஜா தர்ணா (வீட்டின் முன் இருந்து போராட்டம்) இருந்து அவரைக் கல்யாணம் செய்கிறார். காதலிக்கும்(?) போதும் சரி, கல்யாணத்தின் பின்பும் சரி, இயல்பாகவே இருக்கிறார். (வழமையானபடி இரண்டு இடத்திலும் இரண்டிரண்டு பாடல்கள் வரவேண்டும், அதுவும் இரண்டு பாடல்களாவது வெளிநாட்டில் இருக்க வேண்டும். விதியை மீறியதால் இயக்குநருக்கு தடா போட வேண்டும்.)
படம் பின்பகுதியில் வேகமாகவே நகர்கிறது. ரோஜாவின் ஆசை, தர்ணா, கல்யாணம் எல்லாமே படுவேகம். (அவ்வளவுக்கு “மசாலாக்களை” தவிர்ப்பதில் இயக்குநர் குறியாகவேஇருந்துள்ளார்). வில்லனென்று சொல்ல ஒருவர் கூட படத்திலில்லை. பின்னணி இசையின் முக்கியத்துவத்தை உணர இப்படத்தைப் பார்க்க வேண்டும். இசைஞானி பின்னியெடுத்திருக்கிறார். பாடல்கள் இல்லாததும் ஒரு காரணமோ? ஓளிப்பதிவு நன்றாக உள்ளது. அதுவும் நாசர் நடிகனான பின்வரும் காட்சிகள் கண்ணுக்குக் குளிர்மை. பட ஆரம்பத்திற் கொஞ்சம் கவனமெடுத்திருக்கலாம். ஒளிப்பதிவாளரின் பெயர் தெரியவில்லை. மன்னிக்கவும்.
சினிமாவைச் சாடை மாடையாய் நக்கலடிப்பதையும் விடவில்லை. எடுத்துக்காட்டுக்கள்: மணிவண்ணின் மேக்கப் கொமன்ட்ஸ்; நாசரிடம் படக்கதை விபரிக்கையில் அவர் கதை பிடிக்காமல் நல்ல சினிமா எடுக்க ஆலோசனை கூறுவது.
இருந்தாலும் இப்படத்திற் சில குறைகள்: நாசருக்கு முகமூடி மூலம் முகம் மாறுவதும் அதை அவர் நீக்கமுடியாமலிருப்பதும் தர்க்க ரீதியிற் சரியாக இல்லை. அம்புலிமாமா கதை போலுள்ளது. கொஞ்சம் ஹொலிவூட் பாணியில் யோசித்து காட்சியை அமைத்திருக்கலாம். இருந்தாலும் இப்படியான நல்ல படங்களுக்குரிய பட்ஜெட்டுக்குள் இவ்வளவுதான் முடியும் என்ற நிலையுள்ளது.
வழமையான சினிமா வட்டத்திற்குள்ளருந்து வெளிவந்து ஓர் அழகான, வலிமையான படத்தைத் தந்த இயக்குநர் ஞான ராஜசேகரன் அவர்களுக்கு நன்றி. (பாரதி, காமராஜ் போன்ற அருமையான படங்களைத் தந்தவர் இவரே.) இப்படத்துக்கு மக்களிடமிருந்து பணம் கிடைத்திருக்காது என்பது தெரியும். ஏதாவது விருது கிடைத்திருக்க வேண்டும். கிடைத்ததா தெரியவில்லை.

Labels: , ,

எழுத்துருவைத் தெரிவுசெய்ய.
பாமினி ஆங்கில உச்சரிப்பில்

[மேலுள்ள பெட்டியில் தட்டச்சினால் கீழுள்ள பெட்டியில் ஒருங்குறிக்கு (Unicode) மாற்றப்பட்ட எழுத்துரு கிடைக்கும்]


சுரதா, கிருபாவுக்கு நன்றி


Friday, December 10, 2004

உங்களோடு ஒரு நிமிடம்...

வணக்கம்!
இது வசந்தனின் பக்கம்.
தனியே பார்வையிடுவதோடு நின்று விடாது உங்கள் கருத்துக்களையும் எழுதிச் செல்லுங்கள்.
உங்கள் கருத்துக்களே என்னையும் இத்தளத்தையும் வளர்க்கும்.

Labels: ,

எழுத்துருவைத் தெரிவுசெய்ய.
பாமினி ஆங்கில உச்சரிப்பில்

[மேலுள்ள பெட்டியில் தட்டச்சினால் கீழுள்ள பெட்டியில் ஒருங்குறிக்கு (Unicode) மாற்றப்பட்ட எழுத்துரு கிடைக்கும்]


சுரதா, கிருபாவுக்கு நன்றி


© 2006  Thur Broeders

________________