Saturday, October 28, 2006

இலக்கிய உலகில் மு.த.வின் சிந்தனை ஒரு திருப்புமுனையா?

பனுவல் -தீவிரன்-
-------------------------------------
தினக்குரல் வாரப்பத்திரிகையில் வெளிவந்த கட்டுரையிது.
பயன்கருதி வெளியிடப்படுகிறது.
-------------------------------------
ஈழத்து தமிழ் இலக்கிய உலகு பற்றிப் பேசும்போது, ஈழகேசரிக்காலம், மறுமலர்ச்சிக்காலம், `முற்போக்கு' காலம் என்று ஒவ்வொரு காலகட்டங்கள் பிரிக்கப்பட்டு பேசப்படுவது வழமை. கலை இலக்கிய மாற்றங்கள் பற்றிப் பேசப்படுவதற்கு இப்பகுப்புகள் வசதியானதும் கூட. ஒவ்வொரு காலகட்டத்திற்கும் ஒரு தேவை இருக்கிறது. அந்தத்தேவை அக்காலகட்டத்திற்கு தலைமைதாங்கும் ஆளுமைகளால் வெளிக்கொணரப்படுகின்றன.

ஈழகேசரி காலகட்டத்து எழுத்தாளர்களின் (சம்பந்தன், வைத்தியலிங்கம், இலங்கையர்கோன்) ஆளுமை என்பது இந்தியச் செல்வாக்கிலிருந்து ஈழத்தமிழ் ஆக்க இலக்கியத்தை ஓரளவு விடுவிக்க முயன்ற பங்களிப்பைத் தந்ததெனலாம். இவர்கள் காலத்தில் இலக்கிய விமர்சனம் என்பது பின்தள்ளப்பட்டே இருந்தது. அடுத்து வந்த மறுமலர்ச்சி எழுத்தாளர்களின் ஆக்கங்கள் (அ.செ.மு., சு.வே, வரதர், கனகசெந்திநாதன்) பெயருக்கேற்ப முன்னவர்களுடையதைவிட முற்போக்கான விடயங்களை அணுகுபவையாகவும் ஒருவகை விமர்சன நோக்கைக் கொண்டவையாகவும் இருந்தனவெனக் கொள்ளலாம்.

இவர்களுக்கு அடுத்துவந்த முற்போக்கு எழுத்தாளர்கள் இன்னுமொருபடி மேலே சென்றனர். மறுமலர்ச்சிக்காலத்தில் ஏற்பட்ட கருத்தியல் ரீதியான அருட்டல் இவர்களிடம் முழுமையடைகிறது எனலாம். மண்வாசனை, பிரதேச வாசனை என்று வந்த புனைவுகளுக்கு சமூக உணர்வு பாய்ச்சப்பட்டு அவற்றை ஏற்றத்தாழ்வு, சுரண்டல் ஆகியவற்றை பிரதிபலிக்கும் இடதுசாரி (மார்க்சியக்) கருத்தியல் படைப்புகளாக மாற்றிய பெருமை முற்போக்கு எழுத்தாளர்களைச் சாரும். இவ்வாறு முற்போக்கு எழுத்தாளர்களை ஆற்றுப்படுத்திய காலகட்டத்தின் (1956 - 70) ஆளுமைகளாக க.கைலாசபதியும் கா.சிவத்தம்பியும் நிற்கின்றனர்.

முற்போக்கு காலகட்டத்தைத் தொடர்ந்து அடுத்தகட்ட பாய்ச்சலும் நேர்கிறது.

முற்போக்கு எழுத்தாளர் சங்கமும் அதன் இயக்கமும் அதன் உச்ச நிலையில் இருந்தபோது (1960-70) அதற்கு எதிரான குரல் எழத் தொடங்கிற்று. முற்போக்கு அணியினரின் கருத்தியல் பற்றியோ, அவர்கள் வாயிலிருந்து உதிர்க்கப்பட்ட `இயக்கவியல்', `கருத்துமுதல் வாதம்', `பொருள் முதல்வாதம்' `சோஷலிஸ்ற் றியலிஸம்', `வர்க்கபேதம்' என்பவற்றின் அர்த்தம் ஒன்றும் புரியாது ஏனைய `வட்டங்களை'ச் சேர்ந்த `எழுத்தாளர்கள் 'தலையைச் சொறிந்து கொண்டிருந்தபோது யாரும் எதிர்பார்க்காத இடத்திலிருந்து அதற்கெதிரான குரல் எழத்தொடங்கிற்று.

ஒன்று எஸ்.பொ.வுடையகுரல், அதேகாலத்தில் எழுந்த அடுத்த குரல் மு.த.வுடையது. எஸ்.பொ.வைப் பொறுத்தவரை தான் மு.போ.எ.சங்கத்தி லிருந்து வெளியேற்றப்பட்ட ஆத்திரத்தின் விளைவாய், அதற்குக் காரணமாய் இருந்த க.கை., சிவத்தம்பி ஆகியோர் மேல் அவர் ஆரம்பத்தில், வியாசிகதேசிகர் என்ற பேரில் அள்ளிக் கொட்டிய வசைபாடும் விமர்சனங்களையோ அல்லது அதற்குப்பின் `நற்போக்கு' என்ற பேரில் எவ்.எக்ஸி. நடராசா, சதாசிவம் ஆகிய பண்டிதர்க ளையும் கனகசெந்திநாதன் போன்ற எழுத்தாளர்களையும் கூட்டுச் சேர்த்து முன்வைத்த வாதங்களையோ, விமர்சனங்களையோ ஈழத்து இலக்கிய உலகில் முற்போக்கு எழுத்தாளர்களுக்கு எதிராக வைத்த எதிர்வினை என்றோ ஒரு புதுக்கருத்தியல் என்றோ சொன்னால் அது நகைப்பிற்கிடமான ஒன்றே. எஸ்.பொ. ஒரு சிறுகதை ஆசிரியராகவோ, நாவலாசிரியரா கவோ இருக்கலாம். ஆனால், அவர் ஒரு சிந்தனையாளரோ அல்லது தரிசனம் மிக்க எழுத்தாளரோ அல்லர். இதுவே அவரது அத்தனை சீரழிவுகளுக்கும் காரணமாய் இருந்துள்ளது. அத்தனைகாலம் முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தில் இருந்தும் அவரைவிடக் கல்வியறிவில் குறைவான சக முற்போக்கு எழுத்தாளர்களிடம் டானியல் ஜீவா இருந்த கருத்தியல் ரீதியான ஒழுங்கமைவு கூட இவரிடம் இல்லாமல் போனதற்கும் காரணம் இதுவே. ஆரம்பத்தில் க.கை.யின் தூண்டுதலின் பேரில் இவர் தினகரனில் `நாவலாசிரியர் வரிசையில்' என்ற தொடரில் அல்பட்டோ மொறாவியாவை பற்றி எழுதியது கூட இவரின் சொந்த அறிதலால் வந்த ஒன்றல்ல. (பார்க்கவும் விமர்சக விக்கிரகங்கள் -மு.த.)

ஆகவே, இக்காலகட்டத்தில் முற்போக்கு எமுத்தாளர்களுக்கு எதிராக எழுந்த நியாயமான ஒரே குரல் மு.த.வுடையதே. அத்தோடு, அவர்கள் போக்கை அவர் எதிர்கொண்டவிதமும் தனியானது. 1962 இல் `முற்போக்கு இலக்கியம்' என்ற தலைப்பில் (இது நூலாக 1984 `கிரியா' வால் வெளியிடப்பட்டது) மு.த .கலைச் செவ்வி யில் மூன்று தொடராக எழுதிய கட்டுரை பெரும்பரபரப்பையும் அதிர்வலைகளையும் ஏற்படுத்திற்று. அந்த விவாதத்தில் பங்குபற்றுவதாக இருந்த க.கைலாசபதி, அதைப்படித்த பின்னர் ஏதோ நொண்டிச் சாட்டுக் கூறிக்கொண்டு அதிலிருந்து விலகிக் கொள்கிறார். ஆனால், மு.த.அத்துடன் நிறுத்தாது, `ஏழாண்டு இலக்கிய வளர்ச்சி' என்னும் தொடர் கட்டுரையை (இது கிரியாவினால் 1984 இல் நூலாக வெளியிடப்பட்டது) எழுதுகிறார். அதில் முற்போக்கு இயக்கத்தின் பிதாமகரான க.கை.ஈழத்து இலக்கியத்தின் தரத்தை மேன்மைப்படுத்த ஆற்றிய பங்களிப்பை பாராட்டிய அதேவேளை, அவரின் போதாமைகளையும் அதன்மூலம் ஈழத்து எதிர்கால இலக்கியப் போக்கு ஒரு திருகப்பட்ட நிலைக்குத் தள்ளப்பட்ட குண்டுச் சட்டிக்குள் குதிரை ஓட்டும் விவகாரமாக மாறியமையும் சுட்டியதோடு முற்போக்குச் சம்பந்தப்பட்ட மாயையையும் தகர்க்கிறார். இதுமட்டுமல்லாமல் இதுகால வரை முற்போக்கு எழுத்தாளர்களால் மறைக்கப்பட்டும் பிற்போக்கானதாகவும் பார்க்கப்பட்டுவந்த ஈழத்தமிழர்களின் உரிமைப் போராட்டத்தின் அவசியத்தையும் தமிழ்த் தேசியத்தின் நியாயப்பாட்டையும் மு.த.முன்வைக்கிறார். இதற்கிடையில் மு.த.`விடுதலையும் புதிய எல்லைகளும்' என்ற கட்டுரைத் தொடரை அறுபதுகளின் இறுதியில் `மல்லிகை'யில் எழுதுகிறார். இது அவரால் விரைவாக வெளியிடப்படவிருந்த `போர்ப்பறை'என்ற நூலின் அறிமுகமாகவும் அதன் கருத்தியலின் எளிமை விளக்க மாகவும் வந்துகொண்டிருந்தது. இதுகால வரை முற்போக்கு எழுத்தாளர்களால் ஒதுக்கப்பட்டும் உதாசீனப்படுத்தப்பட்டும் கிடந்த பல இலக்கிய வட்டங்களைச் சேர்ந்த ஏனைய எழுத்தாளர்கள் பலர் அதைப்படித் ததும் புதுவிதத்தெம்பும் தமக்கும் ஒரு கருத்தியல் இருக்கென்ற பார்வை பெற்றவர்க ளாகவும் நிமிர்கின்றனர். இதை அவர்கள் மு.த.வை நேரில் சந்தித்த போதும் அவருக்கு கடிதம் எழுதியதன் மூலமும் தெரிவித்தனர் என்பது பழைய கதை. இதைத் தொடர்ந்து மு.த.வின் `போர்ப்பறை' நூல் வெளியீடு வருகிறது. இதைப் படித்த போது பேராசிரியர் சிவத்தம்பி, ஏனைய எழுத்தாளர்கள் போலல்லாது, காழ்ப்புணர்வற்று, தனக்கேயுரிய நேர்மையோடு, "60களில் ஈழத்தமிழ் இலக்கியத்தில் ஏற்பட்ட தேக்கத்தை உடைத்தநூல் இது" என்று மல்லிகையில் எழுதினார்.

இச்சந்தர்ப்பத்தில் நாம் ஆரம்பத்தில் குறிப்பட்ட, ஒவ்வொருகால கட்டத்துக்கும் ஒரு தேவை இருக்கிறது. அந்தத்தேவை அக்காலகட்டத்திற்குத் தலைமை தாங்கிய ஆளுமைகளால் வெளிக்கொணரப்படு கின்றன என்பதை சிறிது விசாரணைக்குட் படுத்த வேண்டும். சமூக வரலாற்று ஓட்டமே ஆளுமைகளைத் தீர்மானிக்கிறது. அவர்களுக்கென்று ஒரு தனித்தன்மை மிக்க ஆளுமை என்ற ஒன்றில்லை என யாந்திரீக முறையில் ஆளுமைகளை விளக்கும் வைதீக மார்க்சிய வாதிகள் இன்றும் உள்ளனர். ஆனால், அவை சிரிப்புக்கிடமான வகையில் ஒதுக்கப்படுபவையாக உள்ளன என்பதற்கு ஈழத்து இலக்கிய உலகில் நிகழ்ந்த பின்வரும் நிகழ்ச்சிகளாய் சாட்சியாய் உள்ளன:

ஈழத்து இலக்கிய உலகில் அறுபதுகளில் க.கை.யின் தலைமையில் ஈழத்து முற்போக்கு எழுத்தாளர்களால் கட்டியெழுப்பப்பட்ட சர்வாதிகாரப் போக்கிற்கு எதிராக இரண்டு குரல்கள் எழுந்தன. ஒன்று எஸ்.பொ.வுடை யது. அடுத்தது மு.த.வுடையது. இந்த இருவரில் எஸ்.பொ.வின் ஆளுமையானது, அவரைப் பண்டிதர்களோடு கூட்டுச் சேரவைத்து, `நற்போக்கு' என்ற பேரில் படுபிற்போக்கு வாதத்திற்குத் தலைமை தாங்க வைக்க, மு.த.வுடையதோ க.கை ஆகியோர் காட்டிய முற்போக்குவாதத்தின் போதாமைகளைச் சுட்டிக் காட்டியதோடு அதற்குமப்பால் சென்று இனிவரப்போகும் உலக இலக்கியப் போக்கையும் சுட்டுவதாய் அமைந்தது என்பதிலிருந்து ஆளுமைகளும், அவற்றின் தனித்தன்மைகளும் எவ்வாறு சமூகவரலாற்று ஓட்டத்தைத் தீர்மானிக் கின்றன என்பதை அறியலாம் (இவ்விடத் தில் ரஷ்ஷியாவில் ஸ்ரலின் இருந்த இடத்திற் குப் பதிலாக புகாரினோ ட்றொஸ்கியோ இருந்திருந்தால் வரலாற்றோட்டம் எவ்வாறு மாறியிருக்கும் என்று சிந்தித்துப் பார்ப்பது சுவாரஸ்யமானது) ***

மு.த. இவ்வாறு தனது இலக்கிய விமர்சனங்கள், புனைவியல், தத்துவார்த்த எழுத்துகள் மூலம் பாரிய புரட்சியொன்றை முன்வைத்த போதும், ஈழத்துத்தமிழ் இலக்கிய உலகு அதனால் எந்தவித அதிர்வுகளையும் பெற்றதில்லை. ஆகக் கூடிப்போனால் முற்போக்கு அமைப்பையும் அதற்குத்த லைமை தாங்கிய க.கை.யையும் எதிர்த்து எழுதினார் என்பதற்குமேல் எதுவும் தெரியாத தட்டையான புரிதலுடைய வைதீக மார்க்சியவாதிகளும் `நற்போக்கு' `சற்போக்கு' படைப்பாளிகளுமே அன்றும் இன்றும் இங்கு பொதுவிதியான நிலையில் இவர்களிடம் மு.த.வின் எழுத்துகள் பற்றி எதுவும் எதிர்பார்க்க முடியாது. அதன் அதிர்வுகளை உள்வாங்கும் frequency இருந்தால்தானே அது பற்றிப் பேசவும் அது ஒரு திருப்புமுனையா என்று அறியவும் முடியும்?

ஆனால், வரலாற்று ஓட்டம், இவர்களிடம் போய் தீக்கோழிபோல் தலையோட்டிக் கொண்டு நிற்பதில்லை. அதன் அதிர்வுகள் இலங்கையைவிட்டு தமிழ் நாட்டில் பலரைத்தொட்டது. ஆரம்பத்தில் மு.த.வோடு தொடர்புகொண்டிருந்த வெங்கட் சாமிநாதன், மு.த. `முற்போக்கு இலக்கியம்'தொடரைக் கலைச் செவ்வியில் எழுதியபோது `எவ்வாறு இதை நீங்கள் தனியனாய் நின்று செய்யமுடியும்?' என்று வியந்தவர். பின்னர் அவரது `போர்ப்பறை' நூல் வெளிவந்தபோது இதை விமர்சிப் பதாகக் கூறிவிட்டு அப்படிச் செய்யாது, தருமு சிவராமின் `கைப்பிடியளவு கடல்' கவிதைநூலுக்கு போர்ப்பறையில் காணப்பட்ட கருத்துக்களை உள்வாங்கி முன்னுரையாக எழுதினார். இதை `வெ.சாமிநாதன் ஏடு பற்றி சரிநிகரில் மு.பொ. விமர்சித்தபோது சுட்டிக்காட்டினார் என்று நினைக்கிறேன். அடுத்து, தமிழ்நாடு `சமுதாயம் வெளியீடு' உரிமையாளர் கோவிந்தன் மு.தவின் எழுத்துகளால் கவரப்பட்டு - இதற்கு இராஜநாராயணனும் தூண்டுதலாய் இருந்தார்- அவரது முக்கியமான அனைத்து ஆக்கங்களையும் நூலுருவில் கொணர்ந்தார். இதற்கிடையில் அமரர் சு.ரா. மு.த.வின் எழுத்துகளை வாசித்து, தன்னைப் போன்ற சுயமான சிந்தனையாளனை வரவேற்கும் பாணியில் அவர் பற்றி பின்வருமாறு எழுதினார். (பார்க்கவும் `மு.த.வின் பிரபஞ்ச யதார்த்தம், சு.ரா.)

இருபதாம் நூற்றாண்டில் வாழ்வதற்கான சாயல் இவரைப் போல் முழுவீச்சோடு வெளிப்படுத்திய ஆளுமைகள் நம்மிடையே வேறு யாருளர்?... பாரதியின் கருத்துலகத்தை விடவும் தளையசிங்கத்தின் கருத்துலகம் முழுமையானது. மற்றொரு விதத்தில் சொன்னால், பாரதியின் சிந்தனையை இவர் நம்காலத்துக்கு கொண்டுவந்து இடைக்காலச் சரித்திரத்துக்கும் எதிர்வினை தந்து இடைவெளிகளை அடைத்து முழுமைப் படுத்த முயன்றார் என்று சொல்லாம்.

இவ்வாறு சு.ரா.சொன்னதற்குப் பிறகு, தமிழ்நாட்டில் தளையசிங்கம் பரவலாக அறிமுகப்படுத்தப்பட்டார். அண்மையில் ஜெயமோகன் கூட்டிய தளையசிங்கம் பற்றிய விமர்சனக்கூட்டம் பல தமிழ்நாட்டு முன்னணி எழுத்தாளர்களைப் பங்குகொள்ள வைத்தது. மு.த.தனது போர்ப்பறை நூலை வெளியிட்டு ஏறத்தாழ 50 ஆண்டுகள் முடியுந்தறுவாயில் அவர் பற்றி மீண்டு சூடுபிடிக்கத்தொடங்கியுள்ளது. அண்மையில் வெளிவந்த காலச்சுவட்டில் (செப்டெம்பர் 2006) ஆனந்த என்ற தமிழ்நாட்டுக்கவிஞர் பின்வருமாறு கூறுகிறார்.... ஆனால் அந்தப் பரிணாம வளர்ச்சி புதிய உயிரினங்கள் தோன்றிவளர்வதைப் பற்றிய பதிவுகளாகத் தான் இருக்கு. அதாவது, evolution of forms உருவங்கள் அல்லது வடிவங்களின் தோற்றமும் வளர்ச்சியுமாகத்தான் இருக்கு. பிரக்ஞையோட பரிணாமந்தான் உண்மையான பரிணாமம். பிரக்ஞை தன்னோட பரிணாமத்தின் அந்தக்காலகட்டத் தேவைக்கு ஏற்ப புதிய உயிரினங்களின் உருவங்களை உருவாக்கிக்குதுன்னு நான் நம்பறேன். இது மிகவும் அடிப்படையான விஷயமாத்தான் படுது' என்று கூறும் அவர் விண்வெளி சென்று திரும்பியவர் அனுபவம் பற்றியும் இனி வரப்போகும் பரிணாமம் பற்றி அரவிந்தர் கூறிய supermind நீட்சே கூறிய superman பற்றியும் அவர் கூறுபவை எல்லாம் அறுபதுகளி லேயே மு.த. போர்ப்பறைப், மெய்புள்' நூல்களில் கூறியவை இன்று மீட்டுருவாக்கம் செய்யப்பட்டு, மு.த.முன்வைத்த சிந்தனையை நோக்கி ஓடிக்கொண்டிருப்பது கண்கூடு.

சரி, மு.த.முன்வைக்கும் செய்தி என்ன?

அவர் இலக்கிய, தத்துவார்த்த சிந்தனை ஊடாகப் புதிய கருத்தியல் ஒன்றை முன்வைக்கிறார். இப்பொழுது மனிதன் அடிப்படைச் சிந்தனை மாற்றத்தின் காலகட்டத்தில் நிற்கிறான் என்று கூறும் அவர், மார்க்சியம் அடிப்படைச் சிந்தனை மாற்றத்தைக் கொண்டு வரவில்லை, மாறாக, 12,13 ஆம் நூற்றாண்டில் நிகழ்ந்த மறுமலர்ச்சிக் காலத்தால் கொண்டுவரப் பட்ட அடிப்படைச் சிந்தனை மாற்றத்தின் இறுதி வடிவமே மார்க்சியம் என்கிறார். அதனால்தான் அது இன்னும் மறுமலர்ச்சி காலத்திற்கு முன்னிருந்த இலக்கிய வகைக்கு (செய்யுள், காவியம்) எதிராக மறுமலர்ச்சிக் காலத்தில் தோற்றுவிக்கப்பட்ட சிறுகதை, நாவல் ஆகிய இலக்கிய வடிவங்களையே இன்றும் (சோஷலிஸப் புரட்சி ஏற்பட்ட) நாடுகளில் பின்பற்றுகிறது. இன்று அடிப்படைச் சிந்தனை மாற்றத்தின் வாயிலில் நிற்கும் நாம், அந்த அடிப்படைச் சிந்தனை மாற்றத்திற்கு தடையாக இருக்கின்ற, மறுமலர்ச்சிக்காலத்தில் ஏற்பட்டு இன்று வரை நீடிக்கின்ற சுரத்துக்கெட்ட சிறுகதை, நாவல் கவிதை என்கின்ற இந்தப்பழைய இலக்கிய வடிவங்களை உடைத்தெறிய வேண்டும் என்று கூறும் மு.த.இன்றைய அடிப்படைச் சிந்தனை மாற்றமென்பது, பரிணாமத்தோடு (evolution) தொடர்புடைய தென்றும் ஜடம், உயிர், மனம் என்று முன்னேறிவந்த பரிணாம வளர்ச்சி, மனதையும் தாண்டிச் செல்லும் - புதிய மனித இனத்தோற்றத்திற்கு வரவு கூறும் - காலகட்டத்தில் நிற்கிற தென்றும் (on the threshold of a New Life - psycho metabolism) ஜூலியன் ஹக்ஸ்லி, ரெஹார் டி சாடின் ஆகிய உயிரியல் விஞ்ஞானிகளையும் அரவிந்தர் நீட்சே. நீட்சே (supermind, superman) ஆகிய தத்துவஞானிகளையும் ஆதாரம் காட்டி விளக்கியுள்ளார். இந்தப் புதிய அடிப்படைச் சிந்தனை மாற்றம் எப்பொழு தும் போலவே கலை இலக்கியத்திலேயே தெரியவரும் என்றும் இதுகாலவரை இருந்துவந்த கலை இலக்கிய உருவங்கள் உடைபட புதிய உருவங்கள் தோன்றும் என்றும் அத்தகைய புதிய வரவுக்கு மு.த. `மெய்யுள்' என்றும் பெயரிட்டார். கூடவே கலைஞனின் தாகம் `அண்டை வீடுகள், புதுக்குரல்கள், `உள்ளும் வெளியும் மெய்' ஆகிய புதிய வடிவங்களையும் ஆக்கிக் காட்டினார்.

ஆனால், வேடிக்கை என்னவென்றால் மு.த.வுக்குப் பின்னர் யாரும் `மெய்யுள்'எழுதிக்காட்டவில்லையே, ஆகவே, அவரது புதிய கலை இலக்கிய வடிவம் பற்றிய சிந்தனை தோற்றுப்போன ஒன்று எனச் சிலர் விமர்சித்தனர். இவ்வாறு ஸ்ரீ கணேசன் ஒருமுறை சரிநிகரில் (1998) எழுதிய போது அதற்கு மு.பொ. பின்வருமாறு பதில் அளித்ததாக எனக்கு ஞாபகம்: இன்று மு.த.வுக்கு பின் அவரது இலக்கி ஆர்வலர்கள் (மு.பொ. சு.வி) மெய்யுள் எழுதிக்காட்ட வில்லையே என்று கேட்பது அறியாமையே. இன்று நடைமுறையில் உள்ள கலை இலக்கிய வடிவங்களுக்கு எதிராக உலகெங்கும் எழுதப்படும் அனைத்து anti உருவங்களும் (அவற்றை எழுதுவோர் அவற்றை எழுதுவதற்கு பின்நவீனத்துவம், அமைப்பயல் வாதம், கட்டுடைப்பு என்று காரணம் காட்டினாலும்) மு.த.கூறிய இன்றைய பரிணாமத் தேவையின் கருத்தியல் பின்னணியில் வைத்துப் பார்க்கும்போது அத்தனை புதிய உருவங்களும் எழுந்து கொண்டிருக்கும் அடிப்படைச் சிந்தனை மாற்றத்தில் வசப்படும் புதிய பிரக்ஞையின் (consciousness) வெளிக் காட்டல்களே - மெய்யுள். சு.ரா.வின் ஜே.ஜே. குறிப்புகளிலிருந்து வில்லியம் பரோஸின் குலைத்துப் போடும் நாவல்கள் வரை இதன் டிப்புகளே என்று புரிந்து கொண்டால் சரி. சகோதரி நிவேதிதா `அன்னை காளி'என்ற நூலில் கூறியது இன்னும் விளக்கமானது: `ஒரு சிந்தனை மற்ற காலகட்டத்தில் இடம் பெறும் மிகக்காட்டுமிராண்டித்தனமான கொலைகள், சித்திரவதைகள் அராஜகங்கள் அநியாயங்கள் கூட எதிர்வரப்போகும் அடிப்படைச் சிந்தனை மாற்றத்தின் குருட்டுத்தனமான வெளிக்காட்டல்கள் (பார்க்கவும் `அன்னை காளி') என்றார். (இன்றைய இலங்கைக்கு இது மிகப் பொருத்தமானது)

கவிஞர் ஆனந்த கூறிய பரிணாமம் அடையும் பிரக்ஞை பற்றி இன்று நம் எழுத்தாளர்கள் பிரக்ஞை உடையவர்களாய் இருக்க வேண்டும். இது பற்றித் தெரியாது, மு.த சிந்தனையில் ஏற்படுத்திய திருப்பு முனை பற்றி எவரும் பேசமுடியாது. 50 ஆண்டுகளுக்குப் பின் அவரது எழுத்து கள் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டுக் கொண்டிருக்கும் இச்சந்தர்ப்பத்தில் இது பற்றி இன்னும் தீவிரமாகச் சிந்திப்போமாக.

_______________________________________________

நன்றி: ஞாயிறு தினக்குரல் October 15, 2006



Labels: , , ,

எழுத்துருவைத் தெரிவுசெய்ய.
பாமினி ஆங்கில உச்சரிப்பில்

[மேலுள்ள பெட்டியில் தட்டச்சினால் கீழுள்ள பெட்டியில் ஒருங்குறிக்கு (Unicode) மாற்றப்பட்ட எழுத்துரு கிடைக்கும்]


சுரதா, கிருபாவுக்கு நன்றி


Saturday, October 21, 2006

வன்னி ->முத்தையன்கட்டு - சில நினைவுகள் -1

வன்னியில் நான் வாழ்ந்த இடங்களில் ஒன்று. என்னை அதிகம் கவர்ந்த இடம். ஏற்கனவே சில இடங்களில் முத்தையன்கட்டைச் சிலாகித்துச் சொல்லியிருக்கிறேன். கிராமம் என்றும் சொல்ல முடியாது. பட்டினம் என்றும் சொல்ல முடியாது. ஆனால் மிகப்பரந்த நிலப்பரப்பைக் கொண்டது. முத்தையன்கட்டுக்குளம் என்ற வன்னியின் - ஏன் வட இலங்கையின் மிகப்பெரும் நீர்வளமொன்றை மையப்படுத்தியே அவ்விடம் பிரசித்தம்.

சில நாட்களுக்கு முன் (13.10.2006) அன்று இந்நிலபரப்பின்மீது சிறிலங்கா வான்படை மிகக்கோரமான வான்தாக்குதலைச் செய்துள்ளது. காலை ஏழு மணிதொடக்கம் ஒன்பது மணிவரையான இரண்டு மணித்தியால இடைவெளிக்குள் 48 குண்டுகளை வீசியுள்ளதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன. ஒவ்வொரு குண்டும் குறைந்தபட்சம் 250 கிலோகிராம் கொண்டவை.
முழுப்போர்க்காலத்திலும் ஈழத்தில் வாழ்ந்தவன் என்றவகையில் இப்படியான அகோர வான்தாக்குதல் நடத்தப்பட்டது இதுவே முதன்முறை என்று நினைக்கிறேன்.
ஒன்றுமட்டும் விளங்கிக்கொள்ள முடிந்தது, கடந்த பதினோராம் திகதி முகமாலை - கிளாலியில் சிங்களப் படைகளுக்கு நடந்தது எவ்வளவு தாக்கம் நிறைந்ததென்று.

முதற்கட்டத் தகவலின்படி இத்தாக்குதலில் பல மாடுகள் கொல்லப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. போராளிகளுக்கோ மக்களுக்கோ ஏதும் சேதங்களிருப்பதாகத் தெரியவில்லை. ஆனால் நிறைய வயல், தோட்ட நிலங்கள் தாக்குதலுக்குள்ளானதாகத் தெரிய வருகிறது.
செய்தி கேட்டதும் ஒருமாதிரித்தான் இருந்தது. உடனடியாக ஏதாவது எழுதத் தோன்றினாலும் சற்று ஆறப்போட்டு அவ்விடம் பற்றி சிலவற்றைப் பதியலாம் என்று நினைக்கிறேன்.

பொதுவாக வன்னி என்றாலே மாடுகள் அதிகமுள்ள இடம்தான். அதிலும் முத்தையன்கட்டு இன்னுமதிகம். பெரும்பாலும் வீடுகளிலோ பட்டிகளிலோ அவை இருப்பதில்லை. வீதிகளில் நூற்றுக்கணக்கில் திரியும், வீதிகளிலேயே படுத்தெழும்பும். வன்னி வந்த தொடக்கத்தில் அதிகாலையில் வீதியால் போவது பெரிய கரைச்சல். சிலவேளைகளில் சுவாரசியமாகவும் இருந்தது. சைக்கிளில் போபவர்கள் ஒருவாறு சமாளித்துப் போய்விடலாம். வாகனக்காரரின் பாடு பெரும்பாடு. காலை ஏழுமணிவரைக்கும் மாடுகள் வீதியை விட்டு நகரா. அந்தந்த நிலையிலேயே படுத்திருக்கும். வாகனத்தை எவ்வளவுதான் உறுமி, சத்தம் போட்டாலும் அவை நகரா. அதிலும் எருமைகள் இன்னும் சுத்தம். எழும்பக்கூட மாட்டா. யாராவது இறங்கிப்போய் எழுப்பிக் கலைத்தால்தான் உண்டு. பின்பு போகப்போக, சனத்தொகையும் அடர்த்தியாக மாடுகளும் கொஞ்சம் திருந்திவிட்டன.


ஓரிருவர் ஐநூறு, அறுநூறு மாடுகள் என்றுகூட வைத்திருந்தார்கள். அண்ணளவாகத்தான மாடுகளின் கணக்குச் சொல்வார்கள். நூறு மாடுகள்வரை வீட்டில் வைத்திருப்பார்கள், மிகுதியை முத்தையன்கட்டுக் குளத்தின் அக்கரைக்கு அனுப்பிவிடுவார்களாம். அவை பல்கிப்பெருகும், சிலதுகள் வேட்டைக்குச் சுடுபடும். சில மாதங்களின்பின் அந்தக் கூட்டத்தை வரவழைத்து புதிதான அங்கத்தவர்களுக்குக் குறிசுட்டுவிடுவார்கள். நாங்கள் 'குழுவன்' என்று சொல்லும் மாடுகள் இப்படியானவற்றிலிருந்து பிரிந்து காட்டிலேயே வளர்ந்துவிடுபவைதாம். காட்டெருமை என்றும் சொல்வார்கள், ஆனால் பேச்சுவழக்கில் குழுவன்தான்.

வேட்டையில் ஒரு நடைமுறை பின்பற்றப்படும். குறிசுடப்படாத மாடுகள் எல்லாம் குழுவன்கள்தாம். பிரச்சினை ஏதும் வராது. மிக ஆபத்தானவை என்று செவிவழியாகக் கேள்விப்பட்டாலும் இவற்றால் தாக்கப்பட்டு காயமடைந்ததாக நான் கேள்விப்படவில்லை. ஆனால் ஒருமுறை இப்படியான மாட்டுக்கூட்டத்தால் நாக்குத் தொங்கத் துரத்தப்பட்ட அனுபவமுண்டு.

யாழ்ப்பாண நடைமுறைகளுக்கும் வன்னி நடைமுறைகளுக்கும் பல விசயங்களில் நிறைய வித்தியாசங்களுண்டு. முதன்முதல் இவற்றை எதிர்கொள்ளும்போது ஆச்சரியப்பட்டதுண்டு. ஆடுமாடுகள் விசயத்திலும் அப்படித்தான்.
யாழ்ப்பாணத்தில் ஓர் ஆடு குட்டி போடுவதென்றாலோ அல்லது ஒரு மாடு கன்று போடுவதென்றாலோ பெரிய விசயம். அக்கம்பக்கத்துக்குச் சொல்வதுண்டு. மற்ற வீட்டாரும் ஒருமுறை வந்து எட்டிப்பார்த்துவிட்டுப் போவர்.
ஆனால் வன்னியில் அதை யாரும் கணக்கெடுப்பதில்லை. பெரும்பாலான ஆடுமாடுகள் தாஙகள் மேய்ச்சலுக்குப் போன இடங்களிலேயே குட்டியையோ கன்றையோ ஈன்றுவிட்டு அவற்றை பத்திரமாக வீட்டுக்கும் கூட்டிவந்துவிடுங்கள். உண்மையில் முதலில் இது பெரிய ஆச்சரியமாகத்தான் இருந்தது.
கற்சிலைமடுவில் எங்களுக்கு எதிர்வீட்டில் பத்துப்பதினைந்து ஆடுகள் இருந்தன. ஓர் அழகான செவியாடு நிறைமாசமா இருந்தது. இரணைக்குட்டி போடுமென்றார்கள். ஏற்கனவே அதேவீட்டில் இன்னோர் ஆடு ஒரேதடவையில் மூன்றுகுட்டி போட்டு, அதிலொன்றுக்குக் குறிப்பிட்ட காலம் 'போச்சி'யில் பால்பருக்கிய சுவாரசியமான சம்பவம் நடந்ததாலோ என்னவோ இந்த ஆட்டின் பிரசவத்திலும் எனக்கு ஆர்வம் இருந்தது. கடைசி இரண்டுமூன்று நாட்கள், ஆடு குட்டி போட்டிட்டுதா எண்டு விசாரித்திருந்தேன். ஒருமாதிரியாகப் பார்ததார்கள்.
அண்டைக்குப் பொழுதுபட பேப்பர் வாங்கப்போனபோது பார்த்தால் அந்த ஆட்டைக்காணேல. விசாரிச்சா அது வீட்டுக்கு வந்துசேரேலயாம். மற்றதுகள் எல்லாம் வந்திட்டுதுகள்.
'ஆரேன் தேடப்போனதோ?' எண்டு கேட்டால், இல்லயாம். 'அது ஈண்டிருக்கும்போல. விடிய வந்து சேர்ந்திடும்' எண்டு அலட்சியமான பதில்வேற. குழப்பமாகத்தான் இருந்தது எண்டாலும் கிட்டத்தட்ட பெரும்பாலான ஆக்கள் இப்பிடித்தான் எண்டதால பேசாமல் இருந்திட்டன்..
அடுத்தநாள் காலம ஒரு பத்துமணிபோல ரெண்டுகுட்டிகளோட செவியாடு வீட்டுக்கு வந்திட்டுது.

யாழ்ப்பாணத்தில குட்டியோ கண்டோ ஈண்ட பிறகு சீம்பால் ('கடும்பு' எண்டுதான் எங்கட வீட்டுப்பக்கம் சொல்லிறதா ஞாபகம். சரிதானே?)எடுத்துக்காய்ச்சிறது முக்கியமான விசயம். 'எள்ளெண்டாலும் ஏழாப்பகிர்' எண்டமாதிரி சொட்டுச் சொட்டா எண்டாலும் சண்டைபோட்டு பங்கிடுவம். வன்னியில பெரும்பாலும் அந்தக் கதையே இல்லை. இருந்தாலும் விடுவமே? அக்கம்பக்கத்தில குட்டியோ கண்டோ போட்டால் சொல்லிவைச்சு கடும்பு காய்ச்சிப்போடுவம். அவையள் என்ன நினைச்சிருப்பினம எண்டு தெரியேல.
குட்டிகளுக்கோ கண்டுகளுக்கோ அந்தப்பாலை விட்டா அதுகளுக்கு வருததம் வந்திடும் எண்டு சின்ன வயசில எனக்கு (எனக்கென்ன - மற்றவர்களுக்கும் இப்பிடித்தான் கிடைச்சிருக்கும்) விளக்கம் தரப்பட்டதாக நினைவு.

யாழ்ப்பாணத்தில் குழைகட்டியே ஆடு வளத்துப்போடுவம். பொழுதுபட்டா குழைமுறிக்கிறது ஒரு கடமை. ஊரான்வீட்டு வேலியில குழைமுறிச்சு பேச்சு வாங்கிறதும் கலைபடுறதும் இடைக்கிடை நடக்கும். எங்கட வீட்டு ஆட்டுக்கு வாதனாராணிக்குழை குடுத்துப் பழக்கினப்பிறகு அதுக்குப் பூவரசங்குழை பிடிக்காமல் போட்டுது. யாழ்ப்பாணததில பூவரசை விட்டா வேற நாதி? கொஞ்சநாள் பட்டினி கிடந்திட்டு பூவரசுக்கே வந்திட்டுது எங்கட ஆடு.
வன்னியில குழைகட்டி வளக்கிறது எண்ட கதைக்கே இடமில்லை.
_______________________________________________

முத்தையன்கட்டு என்று எடுத்துக்கொண்டால் சிறிய இடத்தைத் தவிர மக்கள் நெருக்கமென்பது குறைவு. ஒரு வீதியை மையமாக வைத்து இரண்டொரு கோவில்கள், சில கடைகள், அத்தோடு இணைந்த சில வீடுகள் என்று சனம் நெருக்கமாயுள்ள சிறிய பகுதியுண்டு. மற்றும்படி வயல்களையும் தோட்டங்களையும் வாய்க்கால்களையும் மையமாக வைத்து மிகமிக ஐதான சனப்பரம்பலுடைய இடம் அது. யுத்தநிறுத்த ஒப்பந்தம் வந்தபின் கணிசமான யாழ்ப்பாணத்தவர்கள் ஊர் திரும்பியதால் இன்னுமின்னும் ஐதாகிக்கொண்டு வந்தது அவ்விடம்.

முத்தையன்கட்டுக் குளத்தின் துலுசுக் கதவுகள் பழுதடைந்து பெருமளவு நீர் ஆண்டுமுழுவதும் வீணாக வெளியேறிக்கொண்டிருந்தாலும் சிறுபோக நெல்விளைச்சலுக்கோ தோட்டப் பயிர்ச்செய்கைக்கோ வஞ்சகம் இல்லாமல் நீர் வழங்கிக்கொண்டிருந்தது முத்தையன்கட்டுக்குளம். அக்குளத்தின் கீழான நூறுவீத விவசாய நிலங்களும் பயிச்செய்கைக்குப் பயன்படுத்தப்படவில்லையென்பதும் ஒரு காரணம்.

[முத்தையன்கட்டுக் குளத்தின் ஒருபகுதியின் பின்னேரத் தோற்றம்.]

மாரிகாலத்தில் குளம்நிரம்புவதால் நீர் வெளியேற்றப்படும்போதும் சிறுபோகத்தின்போது நீர் வெளியேற்றப்படும்போதும் முத்தையன்கட்டுக்குளத்தின் வாய்க்கால்களில்தான் பெருமளவு மக்களின் குளிப்பு. சிறுவர் சிறுமிகளுக்கு அது பெரும் கொண்டாட்டம். பெரியவர்கள்கூட அவ்வாய்க்காலில் குளிப்பதே வழக்கம். முத்தையன்கட்டுக்குளத்திற்கு இரு பெரும் வாய்க்கால்கள். இடதுகரை, வலதுகரை என்று பெயர்கள்.

[முத்தையன்கட்டு வாய்க்கால்]

அவ்வாய்க்கால்கள் பல கிலோமீற்றர்களுக்கு நீரைக்கொண்டுபோய்ச் சேர்க்கின்றன. இடையிடையே பல சிறுகுளங்களை நிரப்பியபடியே போகின்றன. இக்குளங்களைவிட வாய்க்கால்களின் இடையில் நீர் தேங்கி நிற்கும் அகண்ட பரப்புக்கள் வரும். அவற்றை "மோட்டை" என்றுதான் சொல்வார்கள். யாரும் 'குளம்' என்று சொல்வதில்லை. யாழ்ப்பாணத்திலென்றால் அவையெல்லாம் குளங்கள்தாம். ஆரியகுளம் அளவுக்கு நீர் தேங்கிநின்றாற்கூட அவை மோட்டை என்றுதான் அழைக்கப்படுகின்றன.

பெருமளவு நெற்பயிர்ச்செய்கை நிலங்கள் 'சேறடித்து' விதைக்கப்படுவன. 'சேறடிப்பு' என்றுதான் அச்செயற்பாடு மக்களாற் குறிப்பிடப்படுகிறது. அதாவது வயலில் பலநாட்கள் நீரைத் தேக்கிவைத்து, புற்களை அழுகவிட்டு, பின் உழுது சேறாக்குவார்கள். கறுத்த நிறத்தில் குழாம்பாணியாக இருக்கும். குறைந்தபட்சம் முக்கால் அடி ஆழத்துக்குப் புதையும்வகையில் வயல்நிலம் கறுப்பு நிறத்தில் கூழாக்கப்பட்டிருக்கும். பின் விதைநெல்லைத் தூவிவிடுவார்கள்.

இதற்கு எருமை மாடுகள் மட்டுமே பயன்படுத்தப்படுகின்றன. சிலர் உழவு இயந்திரத்தைப் பாவிப்பார்கள். எருமையால் உழுவதெல்லாம் எங்களுக்குப் புதிது. (எருமையே எங்களுக்குப் புதுசுதானே?) எருமைகளை நினைத்து ஆச்சரியப்பட்டுவதுண்டு. அந்தச் சேற்றுக்குள் எங்களால் நடக்க முடியாது. உழுபவர் சேறடிக்கும் கலைப்பைக்கு மேல் ஏறிநின்றுகொள்வார். சாதாரண கலப்பையிலிருந்து இது வேறுபட்டது. நல்ல அகலமானது. உழுபவர் கையில் ஒரு வானொலிப்பெட்டியோடு அவர் சங்கமமாகிவிடுவார். எருமைகள் அவைபாட்டுக்குச் சுத்திச்சுத்தி இழுத்துக்கொண்டிருப்பினம்.

புதுக்குடியிருப்பு - ஒட்டுசுட்டான் வீதியில மன்னாகண்டல் சந்தி எண்டு ஒரு சந்தி இருக்கு. அதிலயிருந்து ஒருபாதைமுத்தையன்கட்டுக்கு வருது. அந்தச் சந்தியில இருந்து குளத்துக்கு வரேக்க பாதையின்ர வலப்பக்கம் குளத்தின்ர இடதுகரை வாய்க்கால் வந்துகொண்டிருக்கும். வாய்க்காலை அடுத்து பெருங்காடு. இடைக்கிடை நாலைஞ்சு மோட்டைகளும் இருக்கு. இடப்பக்கம் வயல்வெளிகள். வாற பாதையில பாத்துக்கொண்டுவந்தா பகல் நேரத்தில வலப்பக்கம் இருக்கிற வாய்க்காலுக்க மூக்கை மட்டும் வெளிய நீட்டிக்கொண்டு எருமைகள் கூட்டம்கூட்டமாப் படுத்திருக்கும். இரவில அப்பிடியே ஏறி பாதையில படுத்திருக்கும். எங்க மேயுது, எப்ப மேயுது எண்டு தெரியாது.

முத்தையன்கட்டுக் குளத்தின் கீழான பயிர்ச்செய்கையில் நெல்தான் முதன்மையானது. பெரும்போகம் சிறுபோகம் என இருபோகங்களும் விதைப்பவர்கள் இருக்கிறார்கள். இதைவிட தோட்டப்பயிர்ச்செய்கையுமுண்டு. சில மேட்டுநிலங்களில் நீரிறைப்பு இயந்திரத்தின் உதவியுடன் வாய்க்காலில் இருந்து நீரிறைத்துத் தோட்டம் செய்வார்கள். பெரும்பாலான மரக்கறி வகைகள் செய்கை பண்ணப்படும்.
நெல்லுக்கு அடுத்தபடியாக என்றுபார்த்தால் கச்சான் (வேர்க்கடலை) செய்கையைச் சொல்லலாம். சிறுபோகத்திலேயே பெருமளவு கச்சான் செய்கை பண்ணப்படுகிறது. அடுத்த நிலையில் சோளம், மரவள்ளிக்கிழங்கு பயிரிடப்படுகிறது எனலாம்.

ஏற்கனவே சொன்னதுபோல வீதியின் ஒருபுறம் பிரதான வாய்க்காலும் மற்றப்பக்கம் பயிர்ச்செய்கை நிலங்களும் இருக்கின்றன. வீதியின் இடையிடையே குழாய்கள், மதகுகள் மூலம் நீர் வீதியைக்கடந்து பயிரிச்செய்கை நிலப்பக்கம் போகிறது. ஆனால் சில இடங்கிளில் அந்த வசதி சரியான முறையில் இல்லை. அந்த நிலக்காரர்கள் நேரடியா வீதியைக்கடந்து நீரை எடுக்க வேண்டும். வீதியோ வாய்க்காலின் நீர்மட்டத்திலிருந்து சுமார் பத்து அடிக்கும் அதிகமான உயரம் கொண்ட்து. குழாயும் வீதியின் மேலாகத்தான் செல்ல வேண்டும்.
ஆனால் வாய்க்காலின் நீர்மட்டம் வயற்பகுதியைவிட உயரமாகவே இருக்கும்.இந்த இடங்களில் இயந்திரமில்லாமல் நீர்ப்பாசனம் செய்வதைப் பார்ப்பது சுவாரசியமானது.

வளையக்கூடிய குழாய்முழுவதும் நீரை நிறைத்துவிட்டு இரு முனைகளையும் பொத்தியபடி ஒருவர் வாய்க்காலிலும் மற்றவர் வீதியின் மறுபக்கம் வயற்பகுதியிலும் நிற்பார்கள். வாய்க்காற்பக்கமுள்ளவர் நீருக்குள் குழாய் முனையை அமிழ்த்தியபின் ஒன்று, இரண்டு, மூன்று என்று கத்தி கையை எடுப்பார். அதேநேரம் மறுபக்கத்தில் இருப்பவரும் கையை எடுக்க வேண்டும். வாய்க்கால் நீர் தொடர்ச்சியாக குழாய்வழியாக வந்துகொண்டிருக்கும். கொஞ்சம் முந்திப்பிந்தினாலும் நீர் தொடர்ச்சியாக வெளியேறாது.
சிலர் இதில் தேர்ச்சியானவர்கள். முதல்முறையிலேயே சரியாகச் செய்துவிடுவர். சிலருக்கு நாலைந்து தடவைகள் எடுக்கும்.

நாங்கள் சிலர் பொழுதுபோக்காக இதைச் செய்து பார்ப்பதுண்டு. ஒருமுறை அரைமணித்தியாலம் முயன்றும் சரிவரவில்லை.
என்ன சிக்கலென்றால் ஒருமுறை பிசகினாலும் பிறகு குழாய் முழுவதும் (கிட்டத்தட்ட இருபத்தைந்துஅடி நீளம்) நீரை நிரப்பித்தான் அடுத்த தடவை முயலவேண்டும்.
___________________________________________
முத்தையன்கட்டில இருக்கிற இன்னொரு தொழில் மீன்பிடிக்கிறது. பலருக்கு அது முழுநேரத் தொழில். எங்களப்போல ஆக்களுக்கு அதுவொரு பொழுதுபோக்கு. அதுபற்றியும் இன்னும் சிலதுகள் பற்றியும் இன்னொருக்கா...
___________________________________________

படங்கள்: அருச்சுனா தளம்.

Labels: , ,

எழுத்துருவைத் தெரிவுசெய்ய.
பாமினி ஆங்கில உச்சரிப்பில்

[மேலுள்ள பெட்டியில் தட்டச்சினால் கீழுள்ள பெட்டியில் ஒருங்குறிக்கு (Unicode) மாற்றப்பட்ட எழுத்துரு கிடைக்கும்]


சுரதா, கிருபாவுக்கு நன்றி


Wednesday, October 18, 2006

மீண்டும் மிலேச்சத்தனமான தாக்குதல்

சிறிலங்கா வான்படை மீண்டும் மிலேச்சத்தனமான வான்தாக்குதலொன்றுக்கு முனைந்துள்ளது. கடந்த திங்கட்கிழமை மாலை வன்னியின் புதுக்குடியிருப்புப் பகுதி மீது நடத்தப்பட்ட வான்தாக்குதலில் 'காந்தரூபன் அறிவுச்சோலை'யும் சிக்கியுள்ளது.
ஆதரவற்ற குழந்தைகள் சிறுவர்களுக்காக விடுதலைப்புலிகளால் இரண்டு பராமரிப்பு நிலையங்கள் நடத்தப்பட்டுவருகின்றன.
இதில் பெண்களுக்காக நடத்தப்படுவது 'செஞ்சோலை'
ஆண்களுக்காக நடத்தப்படுவது காந்தரூபன் அறிவுச்சோலை.

ஏற்கனவே செஞ்சோலை வளாகம் மீது வான்தாக்குதல் நடத்தி அங்கிருந்த மாணவிகள் பலரைக் கொன்றுகுவித்தது அரசவான்படை. செஞ்சோலைச் சிறுமிகள் பாதுகாப்பான இடத்துக்கு மாற்றப்பட்ட நிலையில் அவர்கள் தாக்குதலில் இருந்து தப்பித்தபோதும் அப்பாவி பாடசாலை மாணவிகள் அத்தாக்குதலில் மாண்டனர்.
உலகம் முழுவதும் சிங்களப்படைக்கு எதிராகக் குரல்கள் எழுந்தன.

இப்போது மீண்டும் அப்படியொரு அவலத்தை விதைக்க வான்படை துணிந்துள்ளது.
கடந்த திங்கட்கிழமை (16.10.2006) மாலை புதுக்குடியிருப்பு வான்பரப்பிற் புகுந்த நான்கு தாக்குதல் விமானங்கள் கைவேலி எனும் கிராமத்தின்மீது தாக்குதலை நடத்தின. அப்போது அங்கிருந்த காந்தரூபன் அறிவுச்சோலை பாராமரிப்பு நிலையம் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் அப்பராமரிப்பு நிலையத்தில் இருந்த 216 சிறுவர்களில் இருவர் காயமடைந்தனர். ஏனையோர் அதிஸ்டவசமாக உயிர்தப்பினர்.
இப்பராமரிப்பு நிலையத்துக்கு அண்மையில் இருந்த மக்கள் குடியிருப்பும் தாக்குதலுக்குள்ளானதில் ஒருவயதுக்குழந்தையுட்பட இரு சிறுமிகள் கொல்லப்பட்டதுடன் மேலும் பதினைந்துபேர் காயமடைந்தனர்.


அறிவுச்சோலையில் யாரும் சாகாத காரணத்தாலோ என்னவோ இது பெரிதாகப் பேசப்படவில்லை.
ஆனால் சிறிலங்கா வான்படை மீண்டுமொருமுறை மிலேச்சத்தனமான வான்தாக்குதலொன்றைத் திட்டமிட்டு நடத்தியுள்ளது. உண்மையில் அதிஸ்டவசமாக மிகப்பெரும் அவலம் தவிர்க்கப்பட்டுள்ளது. அதற்காக இதைப்பேசாமல் விடவும் முடியாது.
தாக்குதல் நடந்தபின் காந்தரூபன் அறிவுச்சோலையைச் சென்று பார்வையிட்ட கண்காணிப்புக்குழுகூட இதுவரை அதைக்கண்டித்து ஏதும் சொல்லவில்லை.
அரச பயங்கரவாதம் இத்தோடு நிற்கப்போவதில்லை. களத்திலும் களத்திற்கு அப்பாலும் அரசுக்கு ஏற்பட்டுவரும் தொடர் இராணுவ இழப்புக்கள் அதை இன்னுமின்னும் வெறிகொள்ளச் செய்துள்ளது. இன்னும் தொடர்ந்து இப்படியான பயங்கரவாதச் செயல்களைச் செய்யத்தான் போகிறது.
_______________________________________

இதனிடையே இன்று காலித் துறைமுகத்தில் கடற்படையினர் மீதான தாக்குதலைத் தொடர்ந்து காலிப்பகுதி தமிழர்கள் மீது சிங்களக் காடையரின் தாக்குதல் தொடங்கியுள்ளது.
மீண்டுமொரு இனப்படுகொலையைச் செய்யத் துணிகிறார்களா?

_______________________________________

படம்: தமிழ்நெற்

Labels: , ,

எழுத்துருவைத் தெரிவுசெய்ய.
பாமினி ஆங்கில உச்சரிப்பில்

[மேலுள்ள பெட்டியில் தட்டச்சினால் கீழுள்ள பெட்டியில் ஒருங்குறிக்கு (Unicode) மாற்றப்பட்ட எழுத்துரு கிடைக்கும்]


சுரதா, கிருபாவுக்கு நன்றி


Friday, October 13, 2006

மொழிபெயர்ப்பு என்பது மீள் படைப்பா?

பனுவல்: தாவீது கிறிஸ்ரோ

______________________________________
தினக்குரல் வாரமலரில் வந்த கட்டுரை.
யாருக்காவது பயன்படும் என்ற நோக்கில் படியெடுத்துப் பதிவாக்கப்படுகிறது.
______________________________________

தமிழ் மொழி பெயர்ப்புத் துறையில் ஈடுபடுபவர்கள் இருமொழிப் புலமை மிக்கவர்களாகவும் அதே நேரம், மொழிபெயர்ப்பின் நுட்பங்களை அறிந்தவர்களாகவும் இருக்க வேண்டும். மூலமொழியை அறிந்திருப்பவர்களது மொழிபெயர்ப்புக்கும் ஆங்கிலம் வழி தமிழ் மொழி பெயர்ப்பாளர்களுக்கும் கூட இது பொருந்தும்.

மாப்பாசானுடைய சிறுகதைகளை மொழிபெயர்த்த புதுமைப்பித்தனின் சுயபடைப்புகளுக்கும் மொழிபெயர்ப்புகளுக்கும் இடையில் ஏற்பட்ட மயக்க நிலைக்கு புதுமைப்பித்தனின் மொழி ஆளுமையே முக்கிய காரணியமாக அமைந்தது. அவர் ஆங்கிலம் வழி மேரி செல்லியின் பிரேத மனிதனையும் மொழிபெயர்த்திருந்தார்.

வசனநடை கைவந்த வல்லாளர் எனப் போற்றப்படும் நல்லைநகர் ஆறுமுக நாவலர் கிறிஸ்தவ விவிலியத்தை மொழிபெயர்த்தவர்கள் குழுவில் இடம்பெற்றார். சைவத்தை நிலைநிறுத்தப் போராடிய நாவலர் ஒரு பிறமத நூலை மொழி பெயர்க்க விருப்பம் கொண்டமைக்கு உரிய காரண காரியங்களை ஆராய்வதற்கு முன்னர் விவிலியத்தின் இலகு தன்மையும் இதற்கொரு காரணமாகக் குறிப்பிடப்படுகிறது. ஒரு போதகநூல் தம்பக்கம் மக்கள் திரள்வதை இலக்கு வைத்து எழுதப்படுவதாக இருப்பின், அது வெகுமக்களின் புரிதலுக்கு உரியதாக இருக்க வேண்டும். இவ்வகையில்தான் பல்வேறு மொழிகளில் பெயர்க்கப்பட்ட விவிலியம் மூலம் மொழியிலேயே இலகுத்தன்மை பெற்றிருந்தது.

உலகப் பிரசித்திபெற்ற பல புனைவுகள் ஆங்கிலம் வழியே தமிழில் எமக்குக் கிடைத்திருந்தன. அலெக்சாண்டர் டுமா, விக்டர் கியூகோ போன்றவர்களின் நாவல்கள் அமுதநிலையம், இன்பநிலைய வெளியீடுகளாக முல்லை. முத்தையா, சுத்தானந்த பாரதி போன்றவர்களால் வெளியிடப்பட்டன. புகழ்பெற்ற பிரான்ஸ் நாவல்களான எமிலிஜோலாவின் `மனிதமிருகம்', `நாநா' போன்றவையும் டால்ஸ்டாயின் `அன்னாகரினினாவும்' மார்க்ஸிம் கார்க்கியின் `அன்னை' (தாய்)யும் இன்பநிலைய வெளியீடுகளாக வெளிவந்திருந்தன. இவற்றை முழுமையான மொழி பெயர்ப்புகளாகக் கருதமுடியாது. மார்க்ஸிம் கார்க்கியின் `தாய்' நாவல் பின்னர் சிதம்பர ரகுநாதனால் முழுமையாக மொழிபெயர்க்கப்பட்டு NCBH நிறுவனத்தால் வெளியிடப்பட்டது. இது பின்னர் மொஸ்கோ பதிப்பகத்தால் செழுமைப்படுத்தப்பட்டு வெளியிடப்பட்டபோதும் NCBH வெளியிட்ட முதல் `தாயின்' முழுமையைக் கொண்டிருக்கவில்லை.

மார்க்ஸிம் கார்க்கியின் கருத்தோடு உடன்பாடு கொண்டவரும் படைப்பாளுமை மிக்கவருமான சிதம்பர ரகுநாதனின் மொழிபெயர்ப்பில் கார்க்கியின் பல படைப்புகள் உயிர்ப்போடு வெளிவந்திருந்த போதும் `தாய்' நாவல் தந்த நிறைவை மற்றவை தரவில்லை.

ரஸ்யப்படைப்புகளை குறிப்பாக, டால்ஸ்டாய், அன்ரன் செகாவ், த்ஸ்தாவெஸ்கி போன்றோரை பூ.சோமசுந்தரம் , ரா.கிருஷ்ணையா போன்றோர் மொழி பெயர்த்துள்ளனர். போரும் அமைதியும் என்ற மிகப் பெரும் நாவலும் `டான்நதி அமைதியாக ஓடிக்கொண்டிருக்கிறது', `வீரம் விளைந்தது', `உண்மை மனிதனின் கதை' போன்ற பிற எழுத்தாளர்களின் சிறந்த புதினங்களும் தமிழில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளன.

ரஸ்ய ஆட்சியமைப்பை நிராகரித்த `விலங்குப் பண்ணை' போன்ற நாவல்களும் மார்க்சிய உடன்பாடில்லாதவர்களால் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன.

மாயாகோவ்ஸ்க்கி எனும் கவிஞன் எழுதிய `லெனின் கவிதாஞ்சலி' சிதம்பர ரகுநாதனால் மொழிபெயர்க்கப்பட்டது. உண்மையில் உன்னதமான ஒரு கவிதையை யாப்பு இலக்கண ரீதியில் குறைப்பிரசவமாக ரகுநாதன் மொழிபெயர்த்திருந்தார். நவீன கவிதை எனும் வடிவத்திலுள்ள லெனின் கவிதாஞ்சலியின் உயிர்த்துடிப்பை அழித்த கைங்கரியம் ரகுநாதனைச் சாரும். ஏர்னஸ்ட் கேமிங்வேயின் `கடலும் கிழவனும்' சா.து.சு.யோகியாரால் மொழிபெயர்க்கப்பட்டு வெளிவந்திருந்தது. சமீபத்தில் இந்நாவல் `கிழவனும் கடலும்' என சு.ரா.வால் மொழிபெயர்க்கப்பட்டு காலச்சுவடு வெளியீடாக வெளிவந்துள்ளது.

தமிழுக்கு வந்த பிறமொழி நாவல்களில் சுந்தர ராமசாமியால் மொழிபெயர்க்கப்பட்ட தகழி சிவசங்கரப்பிள்ளையின் `செம்மீன்' ஒரு சிறந்த மொழிபெயர்ப்பு நாவலாகும். சுந்தர ராமசாமி மொழிபெயர்த்த தகழியின் `தோட்டியின் மகன்' நாவலைவிட செம்மீன் நிறைவான ஒரு நாவலாகும். இந்திய சாகித்திய அகடமிக்காக இந்நாவலை மொழிபெயர்த்த சுந்தர ராமசாமி `ஒரு கார்த்திகை தீப நாளன்று வீதியில் வலம் வந்து மனம் ரம்மியமான நிலையில் இருந்தபோது புது வேகத்தோடு இந்நாவலை மொழிபெயர்த்தேன்' எனக் கூறியிருந்தார். சுந்தர ராமசாமிக்கு மலையாள மொழியும் தெரிந்திருந்தது. எனவே, அவருக்கு மொழிபெயர்ப்பில் தடங்கல் எதுவும் நிகழவில்லை. அவர் ஒரு ஆளுமை நிறைந்த படைப்பாளியாகவும் இருந்தார். வைக்கம் முகம்மது பசீரின் `இளம்பருவத்துத் தோழி', `பாத்துமாவுடைய ஆடு', `எங்கள் தாத்தாவுக்கு ஒரு யானை இருந்தது' போன்ற படைப்புகளும் கேசவதேவின் `கண்ணாடி' போன்ற நாவல்களும் தமிழுக்கு வந்திருக்கின்றன. சாகித்ய அகடமி பல வங்க, கன்னட, தெலுங்கு நாவல்களை தமிழில் மொழி பெயர்த்துள்ளது.

ஆங்கிலம் மட்டும் தெரிந்த மூலநூல்களின் பரிச்சயமில்லாத பலரது மொழி பெயர்ப்பில் மார்க்சிய நூல்களை வாசித்த என் போன்றவர்கள் பட்ட சிரமங்கள் கொஞ்சநஞ்சமல்ல. `லெனின் படைப்புகள்', `மாஓவின் படைப்புகளை' மொஸ்கோ பதிப்பகமும் இலங்கையின் மக்கள் பிரசுராலயமும் வெளியிட்டிருந்தன. தொழில் முறை மொழி பெயர்ப்பாளர்களின் வறண்ட மொழி நடையில் மார்க்சியக் கருத்துகள் நம்மை வெருட்சியடையச் செய்தன. இதற்கு விதிவிலக்காக தமிழகத்தின் பாட்டாளி வெளியீடாக இலகுதமிழில் மாஓவின் படைப்புகளை பின்னர் நாம் வாசித்தோம்.

இலங்யைில் கே.கணேஸ் போன்றவர்கள் உலகபிரசித்தி பெற்ற படைப்புகளை ஆங்கிலம் வழி தமிழில் மொழிபெயர்த்திருந்தனர். ஆனால், சமீபத்தில் தமிழகத்தில் மூல நூல்களிலிருந்து அம்மொழியை அறிந்தவர்கள் மொழிபெயர்ப்பில் ஈடுபட்டிருப்பதை நாம் அறிகிறோம். `பிரெஞ்', பாஷையை அறிந்துள்ள ஷ்ரீராம் போன்றவர்கள் அல்பட் காம்யூவையும் பேர்ஹேவையும் காப்தாவையும் குறிப்பாக, `அந்நியன்' `விசாரணை' போன்றவற்றையும் மொழிபெயர்த்துள்ளனர்.

தமிழுக்கு நவமார்க்சியம் அறிமுகமாகிய ஆரம்ப காலங்களில் எஸ்.வி. ராஜதுரை, வ.கீதா போன்றவர்கள் பலவகையில் பிறமொழி ஆளுமைகளை எமக்கு அறிமுகப்படுத்தியிருந்தனர். `அந்நியமாதல்', `இருப்பியல்வாதம்' பற்றியும் அன்ரனியோ கிராம்சி', `அல்தூஸர்' போன்றோரைப் பற்றியும் இவர்கள் நல்ல முறையில் அறிமுகம் செய்திருந்தனர். தமிழவனின் `அமைப்பியல்வாத' (ஸ்ரக்சரலிச) அணுகுமுறையும் தமிழுக்குள் படிப்படியாக நுழைந்தன. இதேகாலத்தில் பிரக்ட் போன்றோரின் நாடகங்களும் சர்ரியலிச பாணி கவிதைகளும் தமிழுக்கு அறிமுகமாகின.

இன்று `பின்நவீனத்துவம்', `மெஜிக்கல் ரியலிசம்' (மாந்திரீக யதார்த்தம்) என தமிழ்ப்படைப்பாளிகள் பேசவும் எழுதவும் கூடிய விதத்தில் பூக்கோ, தெரிதா போன்றோரின் கருத்துகள் தமிழ்ப்படுத்தப்படுகின்றன. மார்க்கோஸ் போன்ற லத்தீன் அமெரிக்க படைப்பாளிகளின் படைப்புகள் தமிழுக்கு வந்துவிட்டன. `கல்குதுரை' இதழ் மொழிபெயர்ப்புத் தொகுப்புகளை வெளியிடத் தொடங்கியுள்ளது.

கூகிவாதியாங்கோ எழுதிய `சிலுவையில் தொங்கும் சாத்தான்' அமரந்தாவால் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. இந்திரன் போன்றவர்களால் `அறைக்குள் வந்த ஆபிரிக்க வானம்' போன்ற கவிதைத் தொகுதிகள் வெளியிடப்படுகின்றன.இலங்கையைப் பொறுத்தவரையில் தமிழில் எப்.ஏ. நுஃமான், மொழிபெயர்த்த `பலஸ்தீனக் கவிதை'களுடன் எம்.கே.எம். ஷகீப் மொழிபெயர்த்து `நிகரி' வெளியிட்ட கவிதைத் தொகுதியும் குறிப்பிடத்தக்கன.

சிங்கள கவிதைகளையும் சிறுகதைகளையும் நுஃமான், பண்ணாமத்துக்கவிராயர், தம்பி ஐயா தேவதாஸ், சிவா சுப்பிரமணியம் போன்றோர் மொழிபெயர்த்துள்ளார்கள். இப்னு அஸ்மத் அல் அஸ்மத், நீள்கரை நம்பி போன்றோரும் சிங்கள மொழிப்படைப்புகளை தமிழில் வழங்கியுள்ளார்கள். மல்லிகையில் எஸ்.எம்.ஜே.பைஸ்தீன் மொழிபெயர்த்த பல சிங்கள சிறுகதைகள் வெளிவந்துள்ளன. மல்லிகைப் பந்தல் வெளியீடாக `சிங்களச் சிறுகதைகள்' எனும் தலைப்பில் ஒரு தொகுதி வெளிவந்துள்ளது. சோ. பத்மநாதன் மொழிபெயர்ப்பில் `தென்னிலங்கைக் கவிதைகள்' என்றொரு தொகுப்பு வந்துள்ளது. சிவசேகரம் அவர்களின் மொழிபெயர்ப்பில் `பணிதல் மறந்தவர்', `மாஓ கவிதைகள்' என்பன தேசியகலை இலக்கியப்பேரவை வெளியீடாக வெளிவந்துள்ளன. கே.கணேஸின் மொழிபெயர்ப்பில் `கோசிமின் கவிதைகள், `லூசுன் கவிதைகள்' என்பன வெளிவந்துள்ளன. சி.கனகசபாபதி மொழிபெயர்த்த `லூசுன் கதைகளும்' தேசியகலை இலக்கியப்பேரவையால் வெளியிடப்பட்டுள்ளன. மகாகவி - முருகையன் மொழிபெயர்ப்பில் `ஒருவரம்' எனும் தொகுப்பு வெளிவந்துள்ளது. அழகு சுப்பிரமணியம் ஆங்கிலத்தில் எழுதிய பல கதைகளை ராஜ ஷ்ரீகாந்தன் மொழிபெயர்த்து நூலாக்கியுள்ளார்.

மொழிபெயர்ப்பின் காரணமாக மூலநூலையும் நூலாசிரியரையும் வாசகன் வெறுப்படையச் செய்த நூல்களில் முக்கிய நூலாக மார்ட்டின் விக்கிரமசிங்காவின் `கம்பரெலியா' எனும் நாவலின் தமிழாக்கத்தைக் குறிப்பிடலாம். இதனை `கிராமப்பிறழ்வு' எனும் பெயரில் ம.மு.உவைஸ் தமிழாக்கியிருந்தார்.

தமிழ், ஆங்கில மொழிப்புலமை நிறைந்த ஏ.ஜே.கனகரத்தினா தமிழில் வெளிவந்த பல சிறுகதைகளை ஆங்கிலத்தில் மொழிமாற்றம் செய்துள்ளார்.

கேதாரநாதன், திருவேணி சங்கமம் போன்றவர்கள் அவ்வப்பேது உதிரியாக சில மொழிபெயர்ப்புகளைச் செய்தபோது ஈழத்தைப் பொறுத்தவரை மொழிபெயர்ப்புத்துறை பின்தங்கியே உள்ளது.

காலஞ்சென்ற ஆனந்தன் பல மலையாளச் சிறுகதைகளை மொழிபெயர்த்திருக்கிறார். `காலம்' வெளியிட்ட என்.கே.மகாலிங்கம் மொழிபெயர்த்த சின்னுவா ஆச்பேயின் `சிதைவுகள்' நாவலும் ஒரு விதத்தில் முழுமைபெறா மொழிபெயர்ப்பே.மலையாளத்திலிருந்து ஜெயமோகன் மொழிபெயர்த்த கவிதைகளும் கன்னடத்திலிருந்து பாவண்ணன் மொழிபெயர்த்த படைப்புகளும் சுயசரிதை விபரணப்பாங்கிலமைந்த தலித்திய-மராட்டிய நாவல்களும் இப்போது தமிழில் கிடைக்கின்றன. இவற்றினை வெளியிட்ட பதிப்பகங்கள் போற்றுதலுக்குரியன.

ஒரு காலம் தமிழகத்தின் கிக்கிங்பாதம்ஸ், பேர்ள் பதிப்பகம், அல்லயன்ஸ் பதிப்பகம் என்பனவும் அரு.ராமநாதனின் பிரேமா பிரசுரம் போன்றவையும் பல நல்லறிஞர்களைத் தமிழுக்கு அறிமுகம் செய்துவைத்தன. இப்பிரேமா பிரசுரமே எமிலி ஜோலாவின் `சுரங்கத்தை'யும் வெளியிட்டிருந்தது. கிரியா பதிப்பகமும் பல பிறமொழி நாடகங்களை தமிழில் வெளியிட்டிருந்தது. இவற்றோடு மிகப்பெரிய மொழிபெயர்ப்புப் பங்களிப்பை கோவையின் `விடியல்' செய்துள்ளது. எஸ்.பாலச்சந்திரனின் மொழிபெயர்ப்பில் பல நூல்களை விடியல் வெளியிட்டுவருகிறது. அலைகள், சவுத்விஷன், கிழக்குப் பதிப்பகம், கீழைக்காற்று போன்றவை மொழிபெயர்ப்பு நூல்களை வெளியிட்டு வருகின்றன.

50 களில் வெ.சாமிநாதன் சர்மா, க.நா.சு. போன்றவர்கள் தமிழுக்கு பிறமொழி படைப்புகளையும் அறிஞர்களையும் அறிமுகம் செய்தமையையும் இங்கு குறிப்பிட வேண்டும். தமிழக `அடையாளம் பதிப்பகம்' தேவையும் நோக்கமும் அறிந்து பல்வகையான அறிவுசார் நூல்வரிசையொன்றை வெளியிட்டு தமிழுக்கு செழுமை சேர்த்துள்ளது.

ஒரு விதத்தில் மொழிபெயர்ப்பு பற்றிக் குறிப்பிடும் போது, பின்நவீனத்துவம் கூறும் `பிரதியை பல்வகையில் வாசிக்கலாம்' எனும் கூற்றுப்பற்றி பார்க்கவேண்டும். வரிக்கு வரி மொழிபெயர்க்கும் அல்லது படைப்பாளியின் மனோநிலையில் இருந்து மொழிபெயர்க்கும் ஒரு பிரதி, மொழிபெயர்ப்பாளனை எவ்விதத்தில் பாதிக்கிறது. இப்பாதிப்பு வாசகனுக்கு ஏற்படுத்தும் தாக்கம் என்ன? என்ற பல்வகை கேள்விகள் இங்கே எழுப்பப்படலாம்.

உண்மையில் மொழிபெயர்ப்பு என்பதே ஒரு மீள்படைப்பு மீள் உருவாக்கம். இந்த மீள் ஆக்கம் வாசகனுக்கு ஏற்படுத்தும் பாதிப்பு அல்லது மாற்றம் மூல நூலை மொழிபெயர்த்தவருக்கு ஏற்படுத்திய பாதிப்டைவிட வித்தியாசமாக அமையலாம், அமையாதும் விடலாம். அமைய வேண்டுமென்ற கட்டாயம் கூட இல்லை, இதுவே பின் நவீனத்துவம் கூறும் செய்தி.
_______________________________________________________

நன்றி: ஞாயிறு தினக்குரல் October 01, 2006


Labels: ,

எழுத்துருவைத் தெரிவுசெய்ய.
பாமினி ஆங்கில உச்சரிப்பில்

[மேலுள்ள பெட்டியில் தட்டச்சினால் கீழுள்ள பெட்டியில் ஒருங்குறிக்கு (Unicode) மாற்றப்பட்ட எழுத்துரு கிடைக்கும்]


சுரதா, கிருபாவுக்கு நன்றி


Monday, October 09, 2006

தெகெல்காவில் ஒரு போராளியின் கதை.

இந்தியப் பத்திரிகையான தெகெல்காவில் விடுதலைப்புலிப் பெண் போராளியொருவரைப் பற்றிய தொகுப்பு வந்துள்ளது.
விடுதலைப்புலிகளின் புகைப்படப் பிரிவைச் சேர்ந்த கஜானி என்ற பெண் போராளியின் சுயசரிதையே THE TIGERS’ FIGHTER JOURNALIST என்ற தலைப்போடு வெளிவந்துள்ளது. தற்செயலாக வாசிக்கச் சிக்கிய அப்பக்கத்தை இங்குப் பகிரலாம் என நினைக்கிறேன்.

அதில்
கஜானியின் பிறப்பிடமான கிளிநொச்சியின் தொடக்க நிலைமை,
சிறுவயதில் ஏற்பட்ட அனுபவங்கள்,
பயிற்சி முகாமில் நடந்த சுவாரசியமான சம்பவங்கள்,
முதற்களம் - அதைத்தொடர்ந்த ஆனையிறவுக் களம்,
பின் புகைப்படப் பிரிவுக்குத் தெரிவாகியமை, அங்குப் பெற்ற பயிற்சிகள்,
சமர்முனையில் புகைப்படமெடுத்த மயிர்கூச்செறியும் அனுபவங்கள்
உட்பட பல சுவாரசியமான சம்பவங்களின் கோர்வையாக அப்பகுதி உள்ளது.

களமுனையை ஆவணப்படுத்துவதில் புலிகளுக்கிருக்கும் வேட்கை யாவரும் அறிந்ததே. இதற்கெனவே கணிசமான போராளிகள் ஒவ்வொரு சமரிலும் ஈடுபடுத்தப்படுவர். பலர் இப்பணியில் வீரச்சாவடைந்துள்ளனர்.

புகைப்படப் பிரிவுப் போராளிகளின் இணையத்தளமான அருச்சுனாவில் ஒரு தொகுதிப் புகைப்படங்களைப் பார்க்கலாம்.

கஜானி அவர்கள் முன்பு ஒரு வலைப்பதிவையும் தொடக்கியிருந்தார். அதன்பிறகு எதையும் காணவில்லை.

____________________________________

Labels: ,

எழுத்துருவைத் தெரிவுசெய்ய.
பாமினி ஆங்கில உச்சரிப்பில்

[மேலுள்ள பெட்டியில் தட்டச்சினால் கீழுள்ள பெட்டியில் ஒருங்குறிக்கு (Unicode) மாற்றப்பட்ட எழுத்துரு கிடைக்கும்]


சுரதா, கிருபாவுக்கு நன்றி


Tuesday, October 03, 2006

அழியா வரம் பெற்ற இலக்கியங்கள்

த.சிவசுப்பிரமணியம்-
~~~~~~~~~~~~~~~~~~

தினக்குரல் வாரப் பத்திரிகையில் வந்தது இக்கட்டுரை.
தகழி சிவசங்கரப்பிள்ளை பற்றிய குறிப்புக்கள் இக்கட்டுரையில் வருகின்றன. பயன்கருதி படியெடுக்கப்பட்டு இங்கே பதிவாக்கப்படுகிறது.

_____________________________________________________________
மக்களால் மதிக்கப்படுகின்ற எழுத்தாளர்களுடைய நூல்கள் எந்தமொழியில் வெளிவந்தாலும் அவற்றைத் தேடி வாங்கிப் படிப்பதும், புரியாத மொழியாயின் அவற்றின் மொழிபெயர்ப்புகளை தேடிக் கண்டுபிடித்து வாசிப்பதும் அரங்கேறிய நிகழ்ச்சிகள். இவை இலக்கிய ஆர்வலர்களின் அறிவுப் பசிக்குத் தீனியாக மட்டுமன்றி, அவர்களைச் சிந்திக்கவும் செயற்படவும் தூண்டுபனவாக நெறிப்படுத்தியுள்ளன. ரஷ்ய, சீன, ஆங்கில எழுத்தாளர்களுடன் இந்தியாவின் வங்காளம், மலையாளம், இந்தி, தமிழ் எழுத்தாளர்களும் உலகின் தலைசிறந்த எழுத்தாளர்களாக இனங்காணப்பட்டுள்ளார்கள். வங்கக் கவிஞர் ரவீந்திரநாத் தாகூர் இலக்கியத்திற்காக நோபல் பரிசு பெற்றவர். ரஷ்ய எழுத்தாளரான மார்க்சிம் கார்க்கி அடிமட்டத்து மக்களின் வாழ்க்கையைச் சித்தரிக்கின்ற எழுத்துகளால் போராட்ட உணர்வுகளை ஏற்படுத்தி ரஷ்யப் புரட்சிக்குத் தூண்டுகோலாக இருந்தார்.

`செம்மீன்' என்றால் தகழி சிவசங்கரப்பிள்ளை இலக்கிய உலகில் பேசப்படும் ஒரு எழுத்தாளராக மிளிர்கின்றார். அவருடைய செம்மீன் நாவலும் அக்கதையை வைத்து எடுக்கப்பட்ட திரைப்படமும் அவருடைய பெருமைக்குச் சான்று. மலையாள இலக்கியப் பரப்பில் கொடிகட்டிப் பறந்தவர். அத்தகைய எழுத்தாளரின் சில பதிவுகளைத் தருவதற்காக இக்கட்டுரையை எழுத முனைகின்றேன்.

கேரளத்தின் சிறந்த நாட்டிய நாடகமான கதக்களிக் கலையில் நிபுணத்துவம் பெற்ற குடும்பத்தில் தகழி என்ற சிறிய கிராமத்தில் 1914 ஆம் ஆண்டு பிறந்தார். இளமையில் வீட்டிலேயே கல்வியைத் தொடங்கிய சிவசங்கரப்பிள்ளை அம்பலப்புழை நடுத்தரப்பள்ளியிலும், கருவட்டாவில் உள்ள உயர்நிலைப் பள்ளியிலும் பயின்றார். பள்ளிக் கல்வி முடிந்ததும் திருவனந்தபுரம் சென்று சட்டக்கல்லூரியில் சேர்ந்தார். வக்கீலாக வெளிவந்த அவர் தனது தொழிலை ஆலம்புழையில் இருந்து நடத்தினார்.

கமலாட்சி அம்மாவைத் திருமணம் செய்து ஐந்து குழந்தைகளுக்குத் தந்தையானார். தனது பெயருடன் தனது ஊரின் பெயரையும் சேர்த்து தகழி சிவசங்கரப்பிள்ளை என்று நாமம் பெற்றார். ஒடுக்கப்பட்ட மக்களுக்குத் தன்படைப்புகளில் தகழி அளித்த இடம் மலையாள இலக்கியத்தின் போக்கையே மாற்றியமைத்தது.

தகழி சிறுவயதில் இருந்து கவிதை எழுதிவந்தார். பெரும்புலவரும் விமர்சகரும் நாடகாசிரியருமான குமாரப்பிள்ளையிடம் தகழிக்குத் தொடர்பு ஏற்பட்டது. தகழியின் திறமை வசனத்தில் அதிகமாகச் சுடர் விடுகிறது என்பதை உணர்ந்து குமாரப்பிள்ளை அவரை வசனத்துறைக்குத் திருப்பி விட்டார். சட்டக்கல்லூரியில் கல்வி கற்றுக் கொண்டிருந்த காலத்தில் ஏ.பாலகிருஷ்ணபிள்ளை என்பவர் வீட்டில் அடிக்கடி கூடும் ஒரு அறிஞர் குழுவில் சேர்ந்து கொண்டார். `கேஸரி' இலக்கியப் பத்திரிகையின் ஆசிரியரான பாலகிருஷ்ணபிள்ளை இலக்கியம், அரசியல் சம்பந்தப்பட்ட ஒன்று கூடல்களை ஏற்பாடு செய்து கருத்துகளைப் பரிமாறச்செய்து அறிவுத் தளத்தை விசாலமாக்கினார். இந்தச் சூழ்நிலையில் தான் தகழியின் இலக்கியக் கல்வியும் ஆர்வமும் விரிவடைந்தன. மார்க்கஸ் புரூட் உட்பட ஆங்கில ஐரோப்பிய இலக்கியங்களை விரிவாகப் படிக்கலானார். `வெள்ளத்தினிடையே', `அழகுப் பாப்பா' ஆகிய அவரது கதைகள், அவர் ஒரு புனைக்கதை ஆசிரியர் என்ற அந்தஸ்த்தை கொடுத்தன.

தகழியின் முதல் சிறுகதைத் தொகுப்பான `புதுமலர்' 1934 இல் வெளிவந்தது. அது உடனேயே பிரபல்யம் பெற்றுவிட்டது. அதைத் தொடர்ந்து அவரது முதல்நாவல் `பிரதிபலம்'(கைம்மாறு) வெளிவந்தது. வெளியான சில வாரங்களிலே பிரதிகள் முற்றும் விற்றுப் போய்விட்டன. அதே ஆண்டு `பதிதபங்கஜம்' எனும் மற்றொரு நாவல் உருப்பெற்றது. தொடர்ந்தும் அவரது எழுதுகோல் பல கதைகளைத் தீட்டியது. `அடியொழுகல்', `நித்திய கன்னிகை', `ஸங்கதிகள்' என்பவை குறிப்பிடத்தக்கன. இக்கதைகள் சமுதாய அமைப்பு வேகம் கொண்டவையாகவும் இடதுசாரி அரசியல் சார்பு கொண்டவையாகவும் இருந்தன. மலையாள இலக்கியம் வசதியுள்ள நடுத்தரக் குடும்ப வாழ்க்கையோடு பின்னப்பட்டிருந்த காலத்தில், துணிவுடனும் தன்னம்பிக்கையுடனும் தகழியும் அவர் சாந்தவர்களும் வாழ்க்கையின் சகல துறைகளிலுமுள்ள மக்களைப் பற்றியும் அவர்களின் சுக துக்கங்களைப் பற்றியும் குறிப்பாகக் கீழ்மட்டத்தில் இருப்பவர்களின் அவலங்களைப் பற்றியும் தம் படைப்புகளில் எடுத்துக் கூறினார்.

பெரும் காட்டுத்தீபோல நாடுமுழுவதும் பரவிய விடுதலை இயக்கத்தில் தகழியும் இணைந்து கொண்டார். இதன் காரணமாக சில சந்தர்ப்பங்களில் தலைமறைவாக இருக்க வேண்டிய நிலையும் ஏற்பட்டது. திருச்சூர் அருகேயுள்ள தடக்கன்சேரியில் தலைமறைவாக வாழ்ந்த காலத்தில் 1947 இல் `தோட்டியுட மகன்' நாவல் வெளிவந்தது. ஒரு தோட்டியின் வாழ்க்கையை தத்ரூபமாகச் சித்தரிக்கும் இக்கதை படிப்பவர் மனம் நொந்து போகும் அளவுக்கு வாழ்க்கையின் உண்மை நிலையை எடுத்துக் காட்டியுள்ளார். இக்கதை மலையாளத்தில் பலமான விவாதத்தை எழுப்பியது. அந்தளவுக்கு அந்த நாவல் பேசப்பட்டது என்று `செம்மீன்' நூலுக்கு முன்னுரை எழுதிய டாக்டர் நாராயனமேனன் `தோட்டியுட மகன்' குறிப்பிடும் அதேவேளை, இக்கதையை மொழி பெயர்த்த சுந்தர ராமசாமி இக்கதை தொடர்கதையாக `சரஸ்வதி' சஞ்சிகையில் வெளிவந்ததாகக் கூறியுள்ளார். தகழி சிவசங்கரப்பிள்ளையின் `தோட்டியுட மகன்' என்னும் மலையாள நாவல் தமிழில் `தோட்டியின் மகன்' என்று முதற்பதிப்பு ஆகஸ்ட் 2000த்தில் காலச்சுவடு பதிப்பகம் வெளியிட்டு வைத்தது.

தகழி சிறந்த நாவல் ஆசிரியர். சமுதாயத்தில் தான் கண்ட மக்களின் அவலங்களை அவர்களின் போராட்டங்களை கஷ்ட துன்பங்களை தமது நாவல்கள், சிறுகதைகள் மூலம் வெளிக்கொணர்ந்தார். `இரண்டிடங்கழி' (இரண்டுபடி) என்ற நாவல் 1948 இல் வெளியாயிற்று. "ஒரு குடியானவன் என்ற நிலையில் நான் நன்கு அறிந்த அனுபவித்த கஷ்டங்களை அதில் வெளியிடுகிறேன்' என்று தகழியே கூறியுள்ளார். இந்த நாவல் பல இந்திய மொழிகளிலும், அயல்நாட்டு மொழிகளிலும் வெளிவந்திருப்பதோடு, சினிமாப் படமாகவும் உருப்பெற்றது. இந்நாவல் `இரண்டுபடி' என்ற பெயரிலும் தமிழிலும் வெளிவந்துள்ளது. `இரண்டிடங்கழி' என்னும நாவல் பண்ணையில் தொழில் புரியும் புலையர் என்னும் தீண்டாதார் சமூகத்தைப் பற்றியும், கடினமான கீழ்த்தரமான கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டு அவர்கள் நிலச்சொந்தக்காரர்களுக்கு உழைப்பதையும் எடுத்துக்காட்டி நிற்கின்றது. எழுத்தாளரின் மனிதநேயம் தெரிகிறது.

`இரண்டிடங்கழி' நாவலைத் தொடர்ந்து பல சிறுகதைகளும் குறுநாவல்களும் வெளிவந்தன. சுமார் நாற்பது நாவல்களும் இருநூறுக்கு மேற்பட்ட சிறுகதைகளையும் எழுதியுள்ளார். இவரின் அநேகமான படைப்புகள் இந்திய மொழிகளிலும், ஐரோப்பிய மொழிகளிலும் மொழி பெயர்க்கப்பட்டுள்ளன. 1956 இல் வெளிவந்த `செம்மீன்' இந்தியாவின் சிறந்த இலக்கியப் படைப்புக்கான சாகித்திய அக்கடமிப் பரிசைப் பெற்றது. இந்தக் கதை திரைப்படமாக எடுக்கப்பட்டமையால் இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் உள்ள மக்களால் புகழ்ந்து பாராட்டப்பட்டது. சினிமா சாதாரண மக்களையும் சென்றடையக் கூடிய சாதனமாக இருந்தமையால் செம்மீன் பற்றி பட்டிதொட்டிகளெல்லாம் பேசப்பட்டன. தகழி கடலோர மக்களின் வாழ்க்கையை அனுபவ ரீதியாக அறிந்து அவர்களின் மொழிநடை, பழக்க வழக்கங்கள் நம்பிக்கைகள், செயற்பாடுகள், பந்தபாசங்கள் என்ற இன்னோரன்ன விடயங்கள் உள்ளடக்கிய நாவலை வெளிக்கொணர்ந்துள்ளார். இந்த நாவலில் யதார்த்தப் பண்புகள் மேலோங்கி நிற்பதை அவதானிக்க முடிகின்றது.

இற்றைக்கு ஐம்பது வருடங்களுக்கு முன் எழுதப்பட்ட கதை. இது ஒரு காதல் கதையாக இருந்தபோதிலும் ஒரு மீன்பிடிக் கிராமத்தினுடைய கொடிய வறுமை, அயரா உழைப்பு, எளிமை வாழ்வு என்பவற்றை நேரில் சென்று தரிசித்த ஒரு படைப்பாளியால் தான் இத்தகைய மனதை நெருடும் ஆக்கத்தை உருவாக்க முடியும். அந்த வகையில் தகழி வெற்றி கண்டுள்ளார் என்றே சொல்ல வேண்டும். கடின உழைப்பு மிக்க நற்குன்னம், திரிகுன்னம் புழைகிராமத்து மீனவர் குடிகள் எவ்வளவுதான் எளிமையாக இருந்தாலும், மனித சமூகத்தின் அம்சமாகவே விளங்கினார் என்பது ஆசிரியரின் மனத்தை ஈர்த்த விடயம்.

காதல் வயத்தால் அதிக ஆசை பிடித்து அதன் காரணமாகச் சீலம் குறைந்த ஒரு மீனவனின் பெண் கறுத்தம்மா, பரீக்குட்டி என்னும் முஸ்லிம் வியாபாரியை நேசிக்கிறாள். ஆனால், அவர்களது தூய காதல் இனிது நிறைவேறவில்லை. தான் பரீக்குட்டியை மணக்க முடியாது என்று கறுத்தம்மாவுக்குத் தெரியும். அன்றைய சமுதாய அமைப்பு அப்படித்தான் இருந்தது. சமூகக் கட்டுப்பாடுகள் அவ்வளவு வலுவானவையாக இருந்த காலம். பரீக்குட்டியிடமிருந்த தன் நினைவை கறுத்தம்மாவால் அகற்ற முடியவில்லை. வசந்த நாளில் தானே மலரும் ரோஜாவைப்போல தவிர்க்க முடியாத வண்ணம் அவர்கள் காதல் மலர்கிறது. இருந்தும் கறுத்தம்மா தனது சமுதாய வழக்கப்படி மௌனமான சோகத்துடன் ஒரு இளம் மீனவனைக் கணவனாக ஏற்கிறாள். தனது மனப்போராட்டங்களுக்கு மத்தியிலும் கறுத்தம்மா கணவனுக்கு உண்மையான மனைவியாக வாழ எவ்வளவோ முனைகின்றாள். இந்த மனப்போராட்டங்களை விவரிக்கும் பகுதிகள் உள்ளத்தை உருக்கும் வண்ணம் அமைந்துள்ளன. கறுத்தம்மாவின் வாழ்வில் பரீக்குட்டியின் நிழல் படர்ந்து கொண்டே வருகின்றது. கடைசியில் கறுத்தும்மாவினதும் பரீக்குட்டியினதும் சோக முடிவு தத்துரூபமாகச் சொல்லப்பட்டுள்ளது. இதுதான் செம்மீனின் கதையின் களம்.

இருபது நாட்களுக்குள் இந்த நாவலை எழுதி முடித்தார் தகழி. எளிய கதாபாத்திரங்களையும், சாதாரண சம்பவங்களையும் கொண்டு வரைந்த அழியா வண்ணச் சொற்சித்திரம் செம்மீன் யூனஸ்கோ ஆதரவில் உலக மொழிகள் பலவற்றில் மொழி பெயர்க்கப்பட்டு எழுத்தாளர் தகழி சிவசங்கரப்பிள்ளைக்குப் பெருமையைத் தேடிக் கொடுத்துள்ளது. இதன் தமிழ் மொழி பெயர்ப்பை சுந்தரராமசாமி செய்துள்ளார்.

கேரள சமூகத்தில் தோட்டி, குடியானவன், மீனவன் என்று தாழ்த்து ஒதுக்கிய சிறு சிறு இனங்களின் வாழ்க்கைக் கருவூலங்களை வெளிக்கொணர்ந்த தகழி 1959 இல் எழுதிய "ஒஸப்பின் மக்கள்" என்னும் நாவலை வெளியிட்டார். இந்நாவலில் கேரள நாட்டுக் கிறிஸ்துவக் குடிமக்களின் வாழ்வை விளக்குகிறார். தெளிந்த ஓட்டமும், வேகமும், சிருஷ்டித் திறனும் கொண்ட தகழி மக்கள் எழுத்தாளராகவே இனங்காணப்படுகின்றார்.

1965 ஆம் ஆண்டு தகழியின் `ஏணிப்படிகள்' கேரள சாகித்திய அக்கடமி பரிசையும், 1980 இல் `கயிறு' என்னும் நூல் வயலார் நினைவுப் பரிசும் பெற்றது. 1984 ஆம் ஆண்டு ஞானபீடப் பரிசும், 1985 இல் பத்மபூஷன் விருதும் கிடைத்தது. கேரளப் பல்கலைக்கழகமும் மகாத்மா காந்தி பல்கலைக்கழகமும் டி.லிட் பட்டம் அளித்துள்ளன.

மக்களின் ஏற்றத் தாழ்வுகளில் இருக்கக் கூடிய அடக்குமுறைகளைத் தகர்த்தெறிய பல வழிகளிலும் போராட வேண்டிய நிலைப்பாட்டை மனதில் நிறுத்தி கேரள இலக்கிய வளர்ச்சிக்கும் உலக இலக்கிய முன்னேற்றத்துக்கும் தன் எழுத்தால் முத்திரை பதித்த ஒரு மக்கள் எழுத்தாளன் 1999 ஆம் ஆண்டு தனது 85 ஆவது வயதில் உயிர் நீத்தார். அவருடைய இலக்கியங்கள் அழியாவரம் பெற்று இன்றும் மக்களால் மதிக்கப்படுகின்றன.

_________________________________
நன்றி: ஞாயிறு தினக்குரல் September 24, 2006

_____________________________________________________________

Labels: , ,

எழுத்துருவைத் தெரிவுசெய்ய.
பாமினி ஆங்கில உச்சரிப்பில்

[மேலுள்ள பெட்டியில் தட்டச்சினால் கீழுள்ள பெட்டியில் ஒருங்குறிக்கு (Unicode) மாற்றப்பட்ட எழுத்துரு கிடைக்கும்]


சுரதா, கிருபாவுக்கு நன்றி


© 2006  Thur Broeders

________________