This is a tb_b_20060122 with one sidebar and a fluid (flexible) content.
Advertisement
Wednesday, January 26, 2005
பலியாடுகள்?...
வணக்கம்!.. வெங்கட் அவர்களின் பி.பி.சி. செவ்வி கேட்டேன். அருமை. அதில் பல விடயங்களைக் குறிப்பிட்டிருந்தார். அதுவும் இறுதியில் பெற்றோரின் கல்வி சம்பந்தமான தலையீடு பற்றிக்கூறியிருப்பது முற்றிலும் உண்மை. இது முற்றிலும் தவறா என்று என்னால் கூற முடியாவிட்டாலும் பிள்ளைகள் தமது எதிர்காலம் குறித்த முடிவெடுப்பதில் மிகவும் அழுத்தத்திற்கு உள்ளாகிறார்கள் என்று கூற முடியும். தனியே கல்வி விடயங்களில் மட்டுமல்ல, மதவிடயங்களில் கூட.
இங்கு இப்படிப்பட்ட ஒரு சம்பவத்தைக் கூறுகிறேன். இச்சம்பவத்தில் நானும் ஒரு பங்காளி என்பதால் சில சுயபுராணங்கள் வெளிவரலாம்.
என் நண்பனொருவன் சிறுவயதிலிருந்தே அவனது பெற்றோரால் நீ ஒரு மதகுருவாக (கத்தோலிக்க) வரவேண்டுமென்று கூறி வளர்த்து வந்தனர். ஐந்தாம் வகுப்பில் நீங்களெல்லாம் எதிர்காலத்தில் எப்படி வரஆசைப்படுகிறீர்கள் என (வழமையான) கேள்வியைக் கேட்டபோதும் அவன் ஒரு சிறந்த குருவானவராக வரவே ஆசைப்படுவதாகக் கூறினான். நண்பர்கள் நாங்களும் அவனை அடிக்கடி “அறுப்பதன்” மூலம் அவனுக்கு நினைவூட்டிக் கொண்டிருப்போம். அவனின் பெற்றோர் பகிரங்கமாகவே இதுபற்றி தம் அயலவரிடம் ஏன் கிராமம் முழுவதுமே சொல்லி விட்டார்கள். 14, 15 வயதுப்பருவத்தில் இயல்பாகத் தோன்றும் குறும்புகளைக் கூட மேற்சொன்ன காரணத்தைக் காட்டி அவனை நக்கலடித்திருக்கிறோம். பாதையில் போகும் பெண்களைப்பற்றி எமக்குள் (எமக்குள் மட்டும்தான்) ஏதாவது கதைக்கும் போது கூட அவன் நின்றால் “டேய் நீ சுவாமிக்குப் போகப் போறனி. அங்கால போ” என்று அவனை விரட்டுவோம். சினிமாப்பாடல்களைக் கேட்கையில் கூட. ஏதாவது விசயத்தில் அவன் சொல்வது பற்றி யாரும் சந்தேகம் வெளியிட்டால் “அவன் சுவாமியெல்லே பொய் சொல்ல மாட்டான்”. இப்படி நிறைய.(எல்லாம் பம்பலாகத்தான். அவனும் அதை அப்படித்தான் எடுத்துக்கொண்டான்.)
எங்களுரில் முதற்பூசையொன்று நடந்தது. அதாவது எமது கிராமத்தைச் சேர்ந்த ஒருவர் குருவானவராகி எமது கிராமத்தில் தனது முதல் திருப்பலியை ஒப்புக் கொடுப்பார். அத்திருநாளின் போது, பல பெரியவர்கள் மற்றும் சில மதகுருமார்களிடையே நாங்களும் நின்றிருந்தோம். நாங்கள் பரிபாலன சபையைச் (பூசைக்கு உதவுபவர்கள்) சேர்ந்தவர்கள். அவனது பெற்றோரும் அங்கு வந்து சேர்ந்தனர். அப்போது ஒரு பெரியவர் (சங்கிலித்தாம் என்று அவர்களைச் சொல்லுவோம்) தொடங்கினார். “இப்ப இன்னும் ரெண்டு பேர் செமினறியில படிச்சுக்கொண்டு இருக்கினம். அவயளுக்குப் பிறகு நீ தாண்டா மூண்டாவதா எங்கட இடத்தில இடத்தில இருந்து வாறவனாயிருப்பாய்” என்று என் நண்பனைப் பார்த்துச் சொன்னபோது அவனது பெற்றோரின் முகத்தில் வந்த பரவசத்தைப் பார்க்க வேண்டும். அப்போது ஒரு அசட்டுச்சிரிப்பு சிரித்தானே என் நண்பன். அதை மறக்க முடியாது. ஏனையவர்களும் அது பற்றியே கதைக்கத்தொடங்கினர். “எங்கட இடத்திலயிருந்து ஆக்கள் காணாது. அங்க சில்லாலையில கன பேர் போயிருக்கிறாங்கள்” என்ற ரீதியில் பேச்சுக்கள் வளரத்தொடங்கிய போது அவனுடன் நாம் அங்கிருந்து வெளியேறி விட்டோம்.
எனக்கு அவனை நினைக்கையிற் பாவமாக இருக்கும். நேரடியாக அதைப்பற்றி என்னிடம் எதுவுமே கதைப்பதில்லை என்றாலும், அவ்விசயத்தில் அவன் மிகுந்த சங்கடப்படுவது தெரிந்தது. சமயப்பாடத்தில் அவனும் நானுமே கூடுதலான கேள்விகள் கேட்போம். நிச்சயமாய் கூடுதல் மதிப்பெண் பெறுவதும் நாம் தான். “மாதா ஏன் செபமாலை வைத்திருக்கிறா? தன்னைத்தானே செபமாலை சொல்லி புகழ்ந்து கொண்டிருக்கிறாவா? என்பது போன்ற என் கேள்விகளுக்கு அவனது அபரித ஆதரவு எப்போதுமிருந்தது. சிலரிடம் (குறிப்பாக குருவானவரிடம்) அவனே அக்கேள்வியை என்சார்பில் கேட்பான். (நானறிந்த வரையில் இன்னும் எனக்கு திருப்தியான பதில் கிடைக்கவில்லை) இதுபோலவே பழைய ஏற்பாட்டில் ஆதாம் ஏவாள் படைப்புப் பற்றிய குறிப்புக்கள் ஒரு புனைகதையே என்று சமய பாடம் கற்பிக்கும் மறையாசிரியர் ஒத்துக்கொள்ளும் வரை அவரை அவன் விடவில்லை. இப்படி சமயம் சார்ந்து மட்டுமல்லாமல் பரந்து பட்ட அறிவையும் ஆவலையும் கொண்டிருந்தவன்.
இதற்கிடையே இடப்பெயர்வுகள் வந்து விட்டன. முதல் மூன்று இடப்பெயர்வுளிலும் அருகருகே வசிக்கும் பாக்கியம் எம் இருவருக்குமே கிடைத்தது. மானிப்பாய் பொது நூலகம் எமக்கான பொழுது போக்கிடமாக மாறியது. அவன் தான் எனக்கு ஜெயக்காந்தனை 13 வயதில் அறிமுகப்படுத்தியவன். சாண்டில்யனின் கடல்புறா வகையறாக்களை வேறு வித அனுபவங்களுக்காக பொத்திப்பொத்திப் படித்த போது “உதுகளையும் படி அதோட இந்தா இதுகளையும் படி” என்று யுகசந்தி சிறுகதைத் தொகுப்பையும் சில நேரங்களில் சில மனிதர்களையும் கொண்டு வந்து தந்தான். (இருபது வயதில் தான் நான் “சில நேரங்களில் சில மனிதர்கள்” முழுமையாக வாசித்து முடித்தேன்.)
நிற்க, விடயத்திலிருந்து வழுவி விட்டேனென்று நினைக்கிறேன். அவனைப்பற்றி ஏராளமாகக் கதைக்கலாம். கேட்ட நீங்கள் இருக்க வேண்டாமோ?பதினாறு வயதை நெருங்குகையில் அவன் நிறையவே மாறியிருந்தான். இந்நிலையில் தான் அவனை குருமடத்தில் (செமினறியில்) சேர்ப்பதற்கு முயற்சிகள் செய்யப்பட்டது. உண்மையில் அதிர்ந்து போனான். சாதாரண தரப்பரட்சையை எடுத்துவிட்டுப் போகிறேன் என்று கெஞ்சியும் யாரும் விடுவதாய் இல்லை. (பொடியன் இயக்கத்துக்குப் போய் விடுவான் என்று பெற்றோருக்குப் பயம் இருந்திருக்கலாம்.) இறுதியில் அவர்களே வென்றார்கள். கவலையோடே விடைபெற்றுப் போனான். போகும் போது என்னிடம் சிரித்தபடியே “டேய் இயேசுவுக்கும் எனக்கும் கன வித்தியாசம் இல்ல கண்டியோ” என்று விட்டுப் போனான். அவன் ஏதோ பம்பலுக்குச் சொல்கிறான் என்று விட்டு இருந்து விட்டேன். (இப்போது யோசிக்கையில் இருவருமே பலியாடு என்ற தொனியில் தான் சொன்னானோ என்று எண்ணுகிறேன்.)
குருமடம் போய் ஆறு மாதத்தில் விடுமுறையில் வந்தபோது சந்தித்தேன். வீட்டுக்குக் கூடப் போகாமல் என்னிடம் தான் நேரே வந்திருந்தான் (அவனை அழைத்து வந்த மாமன்காரனை ஏமாற்றிவிட்டு). அப்போது அவன் மிகக்குழப்பமடைந்திருந்தான். அவன் தன் எதிர்காலம்பற்றி தன் சொந்த விருப்பு வெறுப்புக்களைக் கணக்கிலெடுக்க முடியாதவனாயிருந்தான். குருமடத்தில் எல்லாமே நன்றாக இருப்பதாகவும் படிப்பதற்குரிய சுழல் நன்றாயுள்ளதாகவும் கூறியவன் தன் கனவு குருவானவர் ஆவதில் இல்லையென்று கூறினான். தான் போராடப் போவது ஏற்கெனவே எடுத்த முடிவென்றும் சில வேளை அது தெரிந்து தான் தன்னை இப்படி குருமடத்தில் சேர்த்து இருக்கலாம் என்றும் சொன்னான். அவனது போராட்ட விருப்புப் பற்றி எனக்குக் கொஞசமும் வியப்பில்லை. அவன் அப்படிச் சொல்லியிராவிட்டால்தான் வியந்திருப்பேன்.
அவனது அப்போதைய நிலை மிகவும் தர்மசங்கடமானது. ஊர் முழுவதும் தான் சுவாமியாகப் போகிறவன் என்று பறைஞ்சு கொண்டு திரிந்த பெற்றோருக்கு எவ்வளவு அவமானமாக இருக்கும் என்பதைப்பற்றிக் கவலைப்பட்டான். சிறுவயதிலிருந்தே தன்மீது சுமத்தப்பட்ட அப்பழுவை சுமந்துதான் ஆகவேண்டுமென்ற கட்டாயத்தில்; தானிருப்பதை எண்ணிப் புழுங்கினான். நான் எதுவுமே கதைக்கவில்லை. அவன் என்னிடம் அபிப்பிராயம் கூட கேட்கவில்லை. அவனுக்குச் சொல்ல என்னிடம் எதுவுமில்லை என்பது அவனுக்கு நன்றாகவே தெரியும்.
ஆறு நாள் விடுமுறையில் ஏறத்தாள தெரிந்தவர்கள் அயலவர்கள் நண்பர்கள் என அனைவரையும் சந்தித்தான். பிறகு போய்விட்டான். சாதாரண் தர முன்னோடிப் பரீட்சைக்கு ஆயத்தப்படுத்திக்கொண்டிருந்த போது தான் முன்னேறிப்பாய்தலும் புலிப்பாய்ச்சலும் (இவையிரண்டும் யாழ்ப்பாணத்தைப்பிடிக்க இராணுவமும் அதை முறியடிக்க புலிகளும் மேற்கொண்ட நடவடிக்கைகளின் பெயர்கள்) நடந்தன. சாமான் சக்கட்டுக்களைத் தூக்கிக்கொண்டு ஓடி பின் மீண்டும் வீடு வந்து சேர்ந்த பின் என் நண்பனின் தாயார் அழுதபடியே ஓடிவந்து சொன்னா “டேய் அவனெல்லே நேற்று இயக்கத்துக்குப் போயிட்டானாம்.” அத்தோடு செமினறிச் சுவாமி மாருக்கும் விழுந்துதே பேச்சு. கேட்க ஏலாது.
சிறு வயதிலிருந்தே தன்மீது சுமத்தப்பட்ட நுகத்தடியிலிருந்து விலகுவதா வேண்டாமா என்று நீண்டகாலம் மனப்போராட்டம் நடத்திவந்தனின் மனம் தன் சொந்த வழியைத் தேர்ந்தெடுத்து விட்டது. நானோ எதுவுமே தெரியாத மாதிரி நின்றுகொண்டேன். உண்மையில் அப்போது ஒரு பிரச்சினையிலிருந்து விடுபட்ட ஓர் உணர்வு (ரிலாக்ஸ்?) ஏற்பட்டது. இதை எப்படி வேண்டுமானாலும் நீங்கள் எடுத்துக்கொள்ளலாம்.
இது என் நண்பன் ஒருவனுக்கு ஏற்பட்ட அனுபவம். வெங்கட் அவர்களின் செவ்வியைப்பார்த்த போது ஏற்பட்ட பொறி. இவ்விடயத்தில் பெற்றோரை ஒற்றைப்படையாகக் குறைகூற நான் விரும்பவில்லை. அதற்கான துணிவும் எனக்கில்லை. தொழில் முறை சார்ந்த அழுத்தங்கள் என்றாலும் எதிர்கால வருமானம் பற்றிய ஏக்கம் என்று சொல்லலாம். இது அதுவுமில்லை. வெறும் புகழ்ச்சிக்காகத் தானோ.
பின்குறிப்பு: சுவாமி ஞானப்பிரகாசியார் பற்றி (இவர் யாரெனக் கேட்க மாட்டீர்கள் என நினைக்கிறேன்) இளவாலை அமுது எழுதிய புத்தகம் வாசித்துள்ளீர்களா? அப்புத்தகத்தில் இதே மாதிரி நிலைமை ஒன்று வருகிறது. சுவாமி சின்னஞ்சிறுசாய் இருக்கும் போது அவன் கடவுளுக்கு என தாய் அர்ப்பணித்து விடுவாள். (என் பன்னிரண்டு வயதில் வாசித்தது. முழு விபரம் தரமுடியாததற்கு மன்னிக்கவும்.)
தலைப்பு, கொஞ்சம் கவர்ச்சியாய் இருக்கட்டுமே என் வைததது.
வணக்கம். யாரோ ஒரு புண்ணியவான் (தீர்க்க தரிசி?) வலைத்தளத்தில் எழுதியிருந்தார் இப்படி. “இந்து பத்திரிகையின் அடுத்த செய்தி பிரபாகரனும் பொட்டு அம்மானும் சுனாமியில் இறந்து விட்டதாகத் தான் இருக்கும்.” எப்படி ஐயா கணித்தீர்? உம் வாயில் வெல்லத்தப் போட. ஆனால் இது இந்துவிடமிருந்து உற்பத்தியாகவில்லை. இச்செய்தியின் மூலம் தயாசந்தகிரியாம். இது இந்து மீதான் விமர்சனம் அன்று. பாவம் அவர்கள் என்ன செய்வார்கள்? ஆவலாய் எதிர்பார்த்திருக்கும் செய்தியொன்று வந்தவுடன் ஆசையாய் பிரசுரித்துள்ளார்கள்- எல்லாப் பத்திரிகைகளையும் போல. சிறிலங்கா அசர வானொலியும் தொலைக்காட்சியும் தமிழ் மக்களிடம் நம்பிக்கையிழந்து பல வருடங்களாகி விட்டன. ஆனால் இப்படியான ஒரு சூழலில் தமிழ்மக்கள் என்ன மாதிரி இதை எடுத்துக் கொள்வார்கள் என்று தெரியவில்லை. ஒன்று மட்டும் விளங்குகிறது.அதாவது அரசுக்கு இச் சுனாமியால் ஏற்பட்ட இழப்பு மிகமிக அதிகமாக இருக்கும்போலுள்ளது. அவர்கள் ஆடும் கூத்தைப் பார்க்க அப்படித்தான் தோன்றுகிறது. இல்லாவிட்டால் இப்படியொரு இக்கட்டான நிலையில் இப்படி கீழ்த்தரமான செய்திகளை வெளியிடுவார்களா? ஏதோ சொல்வார்களே “மருண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய்”. அது சரி, இப்பிடியான வேலையளுக்கு வழக்குக் கிழக்கு ஏதும் தொடுக்க ஏலாதே?
வணக்கம்! திருகோணமலையில் தமிழ்மக்கள் தங்கியிருந்த அகதிமுகாமொன்றில் இந்திய மருத்துவக்குழுவொன்று தங்கியிருந்து பணிசெய்து வந்தது. நேற்று அம்முகாமிலிருந்த ஆயுதம் தாங்கிய இராணுவத்தினரை வெளியேறுமாறு மக்கள் போராட்டம் நடத்தி அவர்களை வெளியேற்றினார்கள். ஆனால் உடனடியாகவே இந்திய மருத்துவக்குழுவும் தமது பணியை விட்டுவிட்டு வெளியேறிச் சென்று விட்டதாக அறிகிறேன். எழிலனும் இச்செய்தியை உறுதி செய்திருந்தார். இதுபற்றி மேலதிக செய்திகள் அறிந்தவர்கள் அதுபற்றி அறியத்தரவும். அதுசரி, மக்களுக்குச் சேவை செய்யத்தானே அம்மருத்துவக்குழு சென்றது?
இலங்கையின் வடபகுதியில் நடைபெறும் மீட்புப்பணி மற்றும் புனர்வாழ்வுப்பணி பற்றிய பன்னாட்டுச் செய்தி நிறுவனமொன்றின் கணிப்பு இது. வெளிநாட்டுப் பத்திரிகையாளர் ஒருவரின் பார்வையில் வன்னியின் நிலைமையை அறிய இங்கே செல்லவும்.
உங்கள் சாவு எப்போது என்று தெரிந்து கொள்ள வேண்டுமா? போங்கள் இங்கே. போய் வந்த பின் "மவனே என் கையால தாண்டா உனக்குச் சாவு" என்று என்னை அடிக்க வராதீர்கள். இது யாழ் இணையத்திலிருந்து சுட்டது.
அது சரி, அந்த செக்கன்கள் குறைந்துகொண்டிருக்கும் போது உங்களுக்கு எப்படி இருந்தது? (எனக்கு எதுவுமே தோன்றவில்லை). "புகைப்பவர்" (smoker) எண்டு குடுக்கேக்க 7 வருசமெல்லே குறைக்கிறானுகள் பாவியள்.
வணக்கம்! தமிழர் தாயகப்பகுதியில் நடைபெற்ற, நடைபெறும் சுனாமி மீட்பு நடவடிக்கை பற்றி "வோஷிங்டன் ரைம்ஸ்" இல் செய்தித் தொகுப்பொன்று வந்துள்ளது.
"விடுதலைப் புலிகளினது மீட்புப் பணி நடவடிக்கைகள், அவர்களது கட்டுக்கோப்பான நிர்வாகத் திறமையை எடுத்துக் காட்டுவதோடு இவ்வாறான சிரமமிக்க ஒரு பணியினை மிகவும் நேர்த்தியாகவும் நிதானமாகவும் கையாண்ட முறைகள் அவர்களது தனிநாட்டுக் கோரிக்கைக்கு முன்னோடியாக ஒரு நிர்வாகக் கட்டமைப்பு இருப்பதனை உலகிற்கு நிருபித்துள்ளது" என்பதுடன் கடற்புலிகளின் பங்கைப் பற்றியும் இச் செய்தியாளர் குறிப்பிட்டுள்ளார்.
அக் கட்டுரையைப் படிப்பதற்கு இங்கே செல்லவும். ஆச்சரியமாய்த் தான் இருக்கிறது. மெல்ல மெல்ல பன்னாட்டு ஊடகங்கள் சிலவாவது கண்ணைத் திருப்புகின்றன.
சுனாமி அவலங்கள் முழுவதும், ஏன் முதற்கட்டம் கூடத் தீர்க்கப்படாத நிலையில் எதிர்காலத்தில் எழப்போகும் மிகமுக்கிய பிரச்சினையைப் பற்றிப் பேசப் போகிறேன். இச்சுனாமி ஒப்பீட்டளவயில் மிகஅதிகமான தமிழர்களைக் காவு கொண்டுள்ளது. இலங்கையிற் பாதிக்குட்பட்டதிற் பெரும்பகுதி தமிழர் தாயகப் பகுதியேயாகும். (இலங்கைக் கடற்கரையில் மூன்றில் இரண்டு பகுதி தமிழர் தாயகப் பகுதியிலேயே உள்ளது) இது போலவே தமிழகத்திலும் ஏராளமான தமிழர்கள் இறந்துள்ளார்கள். இந்நிலையில் நான் இனி கதைக்கப்போவது ஈழத்தமிழர் பற்றியே. ஏனெனில் சனத்தொகை விடயத்தில் தமிழகத் தமிழர்கள் இந்திய நிலைப்பாட்டிலிருந்து மாறப் போவதில்லை. அதற்கான தேவையும் அவர்களுக்கு இல்லை. (அதாவது சனத்தொகை அடிப்படையில் தமது இருப்பை நிச்சயப்படுத்தல்)
ஆனால் ஈழத்தமிழரின் நிலை முற்றிலும் வேறானது. அவர்களின் இருப்பு அவர்களின் எண்ணிக்கையிற் பெருமளவு தங்கியுள்ளது, முக்கியமாக அவர்களின் சொந்த நகரங்களில். இப்போது நடக்கும் பாராளுமன்ற அரசியலில் இதனைத் தெளிவாகப் புரிந்து கொள்ளலாம். கடந்த தேர்தலில் ஏறத்தாள தமிழ் மக்கள் அனைவரும் ஒற்றுமையாக ஒரே கட்சிக்கு வாக்களித்தும் கூட வெறும் 22 பாராளுமன்ற ஆசனங்களே தமிழர் தேசியக்கூட்டமைப்புக்குக் கிடைத்தன. 100 சதவிகித வாக்குகள் இக்கட்சிக்குக் கிடைத்திருந்தாற் கூட மேலும் ஒன்றோ இரண்டோ ஆசனங்கள் மட்டுமே கிடைத்திருக்கும். 225 ஆசனங்களைக்கொண்ட சிறிலங்காப் பாராளுமன்றத்தில் இத்தொகை 10 வீதம் கூட இல்லை. உண்மையில் பாராளுமன்றத்தில் காத்திரமான தாக்கம் எதையுமே ஏற்படுத்த முடியாத எண்ணிக்கைதான் இது. இதுதான் இன்றைய தமிழரின் பாராளுமன்ற அரசியல் நிலை. திட்டமிட்ட சிங்களக் குடியேற்றங்கள் மூலம் ஆட்சியாளர்கள் தாம் நினைத்தவற்றிற் பெருமளவு சாதித்துவிட்டார்கள். எனவே தமிழர் தாயகத்தில் தமிழரின் சனத்தொகை வீழ்ச்சியென்பது அவர்களுக்கு மிகப்பெரும் பின்னடைவு என்பது வெள்ளிடை மலை.
ஏற்கெனவே தமிழரின் இனப்பரம்பல் போரினால் மிகப்பெரும் பாதிப்புக்குள்ளாகியுள்ளது. ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளார்கள். இதிற் பெரும்பங்கு இளைய சமுதாயமேயாகும். யுத்த வன்முறையிற் கொல்லப்பட்டவர்களும் போராட்டத்தில் ஈடுபட்டு மடிந்தோரும் பெருமளவில் இளையோரே. இக்காரணத்தாற் சனத்தொகைப் பெருக்கத்தில் ஏற்பட்ட பெரும் வீழ்ச்சி, தற்போது ஏற்பட்ட இச்சுனாமி அனர்த்தத்தால் மேலும் வீழ்ச்சியடைந்துள்ளது. இறந்த மக்களின் தொகை ஒருபுறமிருக்க இறந்த இளந்தலைமுறையைப் பற்றி யோசிக்கையில் மிகப்பெரும் சவாலொன்று எம்முன் எழுந்து நிற்கிறது. ஏராளமான குழந்தைகளும் சிறுவர்களும் இறந்துள்ளார்கள். சிலவருடங்களின் பின் ஏற்படப்போகும் வெற்றிடமொன்று பயமுறுத்துகிறது. இப்போதுள்ள பிறப்புவீதம் சில வருடங்களில் இன்னும் சடுதியாக வீழும் என்றே தோன்றுகிறது.
இந்நிலையில் ஈழத்தமிழினம் என்ன செய்யப் போகின்றது? அவர்களுக்கு நாம் என்ன செய்யப்போகின்றோம்? இந்நேரத்தில் வெறும் பொருளுதவியால் மட்டும் அங்குள்ளவர்களுக்கு உதவிசெய்தாற் போதாது. (இனி நான் சொல்லப்போவது முட்டாள்தனமாகவும் நகைப்புக்கிடமாகவும் சிலருக்குத் தோன்றலாம்) இயன்றவரை சனத்தொகைப் பெருக்கத்தை ஊக்குவிக்க வேண்டும். ஈழத்தில் எவ்வளவு தூரம் இது சாத்தியமென்று தெரியவில்லை. வசதி படைத்தவர்கள் இதிற் கவனமெடுக்க வேண்டும். குறிப்பாகப் புலம் பெயர்ந்த குடும்பங்கள், ஆழிப்பேரலையாற் கொல்லப்பட்ட மக்களின் பேரால் ஒரு குழந்தையாவது பெற்றுக்கொள்ள முன்வர வேண்டும். (ஏற்கெனவே நீங்கள் திட்டமிட்டிருந்ததை விட). இன்றைய நிலையில் ஈழம் வெறும் பொருளை மட்டுமன்று, ஒரு நேரத்தில் திரும்பிவரும் பெரும் மக்கட்கூட்டத்தையும் புலம் பெயர்ந்தவர்களிடம் எதிர்பார்த்திருக்கிறது. இக்கருத்து பல மட்டங்களிலும் முன்னெடுக்கப்பட வேண்டும்.
பலருக்கு இதில் உடன்பாடின்மை இருக்கலாம். எப்படியாயினும் உங்கள் கருத்தை இதிற் பதியவும். அல்லது உங்கள் வலைப்பக்கத்திலாவது பதியவும். தமிழகத்தைப் பற்றிக் கூறாமைக்கு ஏற்கெனவே காரணம் கூறி விட்டேன். ஆறு கோடிப் பேரில் இறந்தவர்களின் வீதம் மிகச்சொற்பமே. ஆனால் சில இலட்சங்களே உள்ள ஈழத்தவர்களில் இத்தொகை பெரும் விழுக்காடாகும். முல்லைத்தீவில் இறந்தவர்களின் தொகை அம்மாவட்ட சனத்தொகையில் 3.5 வீதம் எனக்கூறப்படுகிறது.
என்னடா இவன் இந்தச் சோகத்தில் வெறும் எண்ணிக்கையையும் வீதத்தையும் பற்றிக் கதைத்துக்கொண்டிருக்கிறானென்று யாரும் சண்டைக்கு வராதீர்கள். நான் சொல்ல எடுத்துக்கொண்ட விடயம் அப்படி.
வணக்கம். சுனாமி அலையிற் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிவாரணப்பணிகள் தொடர்ந்த வண்ணமுள்ளன. புலம் பெயர் நாடுகளில் ஈழத்தவர்களுக்காக மக்களிடம் நிதி சேகரிக்கப்படுகிறது. பிரதானமாக தமிழர் புனர்வாழ்வுக் கழகமே இவற்றை ஒழுங்குபடுத்துவதாக அறிகிறேன். தமிழர்கள் சேகரிக்கும் பணத்திற் பெரும்பகுதி T.R.O ஊடாகவே அனுப்பப் படுகிறது என்றும் அறிகிறேன்.
T.R.O என்பது இன்று மட்டுமன்று, யுத்த காலத்திலிருந்தே மக்களுக்குச் சேவை செய்து வரும் ஓர் அமைப்பு. இன்னும் சொல்லப்போனால் ஏனைய பன்னாட்டுத் தொண்டு நிறுவனங்களைவிட மக்களோடு மக்களாக நின்று முழுநேரப் பணி புரிந்த அமைப்பு. தனக்கென சீரான மனிதவள மற்றும் நிர்வாகக் கட்டமைப்புடன் (சில சர்வ தேச நாடுகள் உட்பட) இயங்கி வரும் அமைப்பு. தமிழ் மக்களின் நம்பிக்கையைப் பெற்றது.
நிற்க, T.R.O ஐ மட்டந்தட்டி முடக்கும் நடவடிக்கையிற் சிலர் ஈடுபட்டுள்ளார்கள். இது தொடர்ந்துவருவது தானென்றாலும் தற்போது சிலர் முழுமூச்சாக ஈடுபட்டு வருகின்றனர். சுனாமிக்கு முந்தின வெள்ள அனர்த்த நிவாரணப்பணியில், கிழக்குப் பகுதியில் T.R.O இன் பங்கு எத்தகையது என்பது அங்குள்ள மக்களுக்குத் தெரியும். வெள்ள நிவாரணப் பணிக்கென அங்கு நின்ற T.R.O உறுப்பினர்கள் ஏழு பேரளவில் சுனாமியின் தாக்குதலிற் பலியானதாக அறிகிறேன்.வெள்ளப் பாதிப்பிற்குட்பட்ட மக்களுக்கான நிவாரணப்பணியிலும் சுனாமியின் தாக்குதலுக்கான நிவாரணப்பணியிலும், வடக்குக் கிழக்கில் (குறிப்பாக இராணுவக் கட்டுப்பாடற்ற பகுதியில்) T.R.O இல்லையென்றால் முதல் மூன்று நாட்களுக்கான நிலைமையை உங்களால் கற்பனை செய்ய முடிகிறதா? இன்னும் எத்தனை அவலங்களை எதிர்கொள்ள வேண்டியிருந்திருக்கும்? T.R.O ஐ அழிக்க நினைப்பவர்கள் எதை விரும்புகிறார்கள்? அவர்களின் குரூர புத்தி எதைக் கணக்கிடுகிறது? வெறும் புலியெதிப்பு வாதம் எனும் போர்வைக்குள்ளால் அவர்கள் செய்ய நினைப்பது எதை?
ஏன் T.R.O ஊடாக பணம் கொடுப்பது சிறந்தது என்பதற்குப் பல நியாயங்கள் கூறப்பட்டு விட்டன.ஒப்பீட்டளவில் எந்தவொரு பன்னாட்டுத் தொண்டு நிறுவனங்களுக்கும் தமிழர் தாயகப்பகுதியிற் பரவலான செயற்றிறனுள்ள ஆளணிவளமோ நிர்வாகக் கட்டமைப்போ இல்லை. இதைவிட அத்தொண்டு நிறுவனங்களின் நிர்வாகச் செலவென்பது மிக உயர்ந்தது. உதவித்தொகையிற் குறிப்பட்ட பகுதிப்பணம் நிர்வாகச்செலவுக்கே போய்விடும். இத்தொகை ஒப்பீட்டளவிற் பன்னாட்டு நிறுவனங்களுக்கு மிக உயர்வாக உள்ளது.(I.C.R.C இற்கு வழங்கப்படும் பணத்தில் 15 வீதம் அந்நிறுவனத்தின் நிர்வாகச் செலவுக்காக எடுக்கப்படுமென அதிகாரபூர்வமாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.)இதைவிட பிரதேச அறிவு, தொடர்பாடல் (மொழிச் சிக்கல்) யாவும் T.R.O இற்கே சாதகமாக உள்ளது.
சரி அதை விடுவோம். சிங்கள அரசு நியாயமாக நடந்து கொள்ளும் என எத்தனை வீதத் தமிழர்கள் (ஈழத்தமிழர்) நம்புகிறார்கள்? தாம் வழங்கும் நிவாரணம் சரியாய்ப் போய்ச் சேர்கிறதா என்பதை பன்னாட்டு நிறுவனங்களால் எவ்வளவு தூரம் கண்காணிக்க முடியும்? (இதற்குப் பிரதேச மற்றும் மொழியறிவு என்பன மிகமிக அவசியம்.)
T.R.O ஐ கேள்வி கேட்க உரிமையுண்டு, குறிப்பாக பணம்வழங்கும் மக்களுக்கு. அதை விமர்சனம் செய்யவும் தகுதியுண்டு. ஆனால் சரியான தகவல்களையும் காரணங்களையும் வெளியிட்டு நடுநிலைமையுடன் செய்ய வேண்டும். இவ்வளவு பெரிய அழிவு நடந்துள்ள வேளையில் எடுத்தேன் கவிழ்த்தேன் என்று சொல்வதிற் பயனில்லை. "எங்கள் முதற்பணி T.R.O ஐ முடக்குவதே" எனும் கோசத்தோடு இதை முன்னெடுப்பவர்கள் மிகக் கீழ்த்தரமான வேலைகளைச் செய்கிறார்கள்.வெள்ள நிவாரணத்தின் போது T.R.O மக்களுக்கு உதவி செய்யாமல் அரசாங்கத்தின் மீது கோபம் ஏற்படுத்துவதற்காகப் பொருட்களைப் பதுக்கி வைத்திருந்தார்களாம். இப்படிப் போகிறது இவர்கள் கதை. இதை எழுதுபவர்கள் உண்மையில் தமிழர் தாயகத்தைப்பற்றி பூகோள அறிவு இல்லாமலும் எழுதுகிறார்கள். இதற்கிடையில் 2000இற்கும் மேற்பட்ட புலிகள் பலியாகி விட்டதாகவும் ஏராளமான ஆயுதத் தளபாடங்கள் அழிக்கப்பட்டு விட்டதாகவும் திருப்பித் திருப்பிச் சொல்லி கனவிலேயே இன்பம் காணுகிறார்கள். இதைவிட முசுப்பாத்தி என்னெண்டா, புலிகள் எல்லாம் இழந்து நொடித்துப் போயுள்ள இந்த வேளையைப் பயன்படுத்தி தமிழர்களுக்கான தீர்வைப் பெற்று விட வேண்டுமாம். இதைவிட்டால் சந்தர்ப்பமில்லை என்கிற ரீதியிற் செல்கிறது இவர்களின் அரசியல் ஞானம். உண்மையில் இவர்கள் யாராவது முன்னாள் போராளியாயிருந்து அடித்துத் துரத்தப்பட்டிருந்தால் இந்த ஒரு காரணத்துக்காகவேனும் நான் “சகோதரப் படுகொலை” எனச் சொல்லப்படுபவற்றை நியாயமென்று ஏற்றுக்கொள்ளத் தயார்.
ஈழத்தமிழருக்கு இழைக்கப்படும் அநீதியையும் அவர்களின் முறைப்பாடுகளையும் சர்வதேச ஊடகங்கள் (சிலவாவது) ஓரளவாவது புரியத் தொடங்கியுள்ளன போல் தோன்றுகிறது. இது புலம்பெயர்ந்த தமிழர்களின் அயராத கடும் உழைப்புக்குக் கிடைத்த வெற்றியாகும். என் கண்ணிற் பட்ட ஓர் இணைப்பு இங்கே...
வணக்கம். புதுவருடத்திற் காலடியெடுத்து வைத்துள்ளோம். வழமைபோல் வாழ்த்துச் சொல்ல முடியவில்லை. இருண்ட ஓர் ஆண்டாகவே நமக்குத் தொடங்கியுள்ளது. புறக்கணிக்கப்பட்ட பிரதேசங்கள் பற்றிய தகவல்கள் படிப்படியாக ஊடகங்களில் இடம்பெறத் தொடங்கியுள்ளன. சுனாமியின் அலைகள் கரையைத் தாக்கும் காட்சிகளைப் பார்க்கும்போது “The day after tomorrow” எனும் படத்தின் காட்சிகள் நினைவுக்கு வருகின்றன. அப்படத்தில் அலைகள் ஆர்ப்பரித்து ஊருக்குட் புகும்போது மக்கள் பதறியடித்து ஓடுவது கண்ணுக்குள் நிற்கிறது. அக்காட்சியைப் போலவே நிஜமாக நடந்துள்ளது. படப்பிடிப்பின்போது அப்படத்தின் இயக்குநர் சொன்னதாக அறிந்தேன், “இவையெல்லாம் நிஜமாக நடப்பதற்குள் படத்தை முடித்து விடவேண்டும்.”
நிற்க, இவ்வனர்த்தம் மக்களை எங்குக் கொண்டு வந்து நிறுத்தியுள்ளது? இலங்கையின் வடக்குக் கிழக்கைப் பொறுத்தவரை அவர்கள் யுத்த அனர்த்தங்களின் போதுகூட இப்படி இடிந்து போய்விடவில்லை. சொந்தங்களையும் சொத்துக்களையும் இழந்து ஓடியபோதுகூட வாழ்க்கை அவர்களுக்குச் சூனியமாய்த் தெரியவில்லை. குண்டுவீச்சு விமானங்கள் பேரிரைச்சலோடு வானில் வட்டமடிக்கும் போதுகூட அதை வேடிக்கை பார்த்திருக்கும் சிறுவர்களையும் குழந்தைகளையும் பார்த்திருக்கிறேன். “இப்பிடிச் சுத்தினால் எப்பிடி அடிப்பான், இப்பிடிக் குத்தினால் எங்க போடுவான்” என்றெல்லாம் அவர்களுக்குத் தெரிந்திருந்தன. ஆனால் சுனாமியின் தாக்கம்?...
இன்று நீரைக்கண்டாலே அலறியடித்தோடும் தன்மை; இயற்கையின் முன் மிரண்டு பயந்து ஒடுங்கிப் போகும் மனோநிலை; கிட்டத்தட்ட ஆதிமனித இனம் போல் ஆகிவிட்டோம். எனக்கென்னவோ சரிபோலவும் தோன்றுகிறது. பேசாமல் எல்லா சாமிகளையும் ஒருபுறம் வைத்துவிட்டு, வான் நெருப்பு கடல் காற்று என நாம் பயப்படுவற்றையே கடவுளாக்கி வழிபடவேண்டியது தான், அந்த ஆதிமனிதர்கள் போல.