Friday, February 23, 2007

பின்னவீனத்துவம்: அறிவியல்பூர்வக் கலந்துரையாடல் - ஒலிப்பதிவு

தற்போது வலைப்பதிவுலகில் காரசாரமாக பின்னவீனத்துவம் பற்றிய கட்டுடைப்புக்கள், விவாதங்கள் நடைபெற்றுவருகின்றன.
இதன் அடுத்தகட்ட வடிவமாக ஒரு கலந்துரையாடலை ஒழுங்குபண்ணி இங்கு ஒலிப்பதிவாகத் தருகிறோம்.

இக்கலந்துரையாடல் ஆகலும் அடிப்படையாக இல்லாமலிருப்பதால் ஏற்கனவே கொஞ்சமாவது இதுபற்றி அறிவிருப்பவர்களுக்குப் பயனுள்ளதாக அமையும்.
எதற்கும் இப்பதிவைக் கேட்க முன்னர் கீழ்க்கண்ட இணைப்புக்களில் இருக்கும் கட்டுரைகளை வாசித்திருந்தால் நன்று.

அப்படி வாசிக்காத பட்சத்தில், வாசிக்க விருப்பமில்லாத பட்சத்தில் பேசாமல் போய்விடாதீர்கள். ஒலிப்பதிவைக் கேளுங்கள்.
ஆனால் அதன்பின் கட்டுரைகளை நீங்கள் வாசிக்கப்போவதில்லையென்பதே நீங்கள் செலுத்தப்போகும் விலை.

பின் நவீனத்துவம் என்னும் பேக்காட்டல். -அற்புதன்
பின்நவீனத்துவம் ➽ சில குறிப்புகள் -பாலபாரதி
ஒரு நேர்காணல்: சில பின் நவீனத்துவப் புரிதல்கள் -டி.சே
பின்நவீனத்துவம் - ஓர் அறிமுகம் -பெயரற்ற யாத்ரீகன்
என்னுடைய பின்-நவீனத்துவ புரிதல்கள் -டி.சே


கலந்துரையாடலில் பங்கேற்போர்:

ஆய்வாளர் கும்பரோ பூஜே,
சுசிந்தன்















postmodernsm.mp3


அவசரமாக ஒலிப்பதிய வேண்டி வந்ததால் கலந்துகொண்டவர்கள் சரியான ஆயத்தங்களின்றி பங்குபற்ற வேண்டி வந்துவிட்டது. இன்றுவிட்டால் பின் சனி ஞாயிறு என்பதால் அவசரமாக இன்றே அனைத்து வேலைகளையும் முடிக்கவேண்டி வந்தது. இதில் வரும் தொழிநுட்ப வழுக்களுக்கு முன்கூட்டியே மன்னிப்புக் கேட்டுக்கொள்கிறோம்.

இதைக் கேட்டு நீங்கள் சொல்லும் கருத்துத்தான் தொடர்ந்து இடம்பெறப்போகும் இவ்வாறான கலந்துரையாடல்களுக்கு ஊக்கமாக அமையுமென்பதைத் தெரிவித்துக்கொள்கிறோம்.

Labels: , , ,

எழுத்துருவைத் தெரிவுசெய்ய.
பாமினி ஆங்கில உச்சரிப்பில்

[மேலுள்ள பெட்டியில் தட்டச்சினால் கீழுள்ள பெட்டியில் ஒருங்குறிக்கு (Unicode) மாற்றப்பட்ட எழுத்துரு கிடைக்கும்]


சுரதா, கிருபாவுக்கு நன்றி


Tuesday, February 13, 2007

மறுக்கப்பட்ட உரிமையும் புதிய வலைப்பதிவும்

விக்ரோறிய மாநிலம் (அவுஸ்திரேலியா) தொடர்பான சில தகவல்களையும் படங்களையும் பகிர்ந்துகொள்ள "மெல்பேர்ண் எனும் மெல்லியமகள்" என்ற வலைப்பதிவு நிறுவப்பட்டுள்ளது.
அவ்வலைப்பதிவு நிறுவப்பட்ட பின்னணி, முன்னணி பற்றி விரிவாக அங்குச் சொல்லப்பட்டுள்ளது.

விக்ரோறிய மாநிலம் என்று இருந்தாலும் தொடக்கத்தில் மெல்பேர்ண் நகரை மையப்படுத்தியதாகவே பதிவுகள் இருக்கும்.

வலைப்பதிவை தமிழ்மணத்தில் இணைக்கும் வேலைகள் நடந்துகொண்டிருக்கின்றன.
அதற்குமுன் ஓர் அறிமுகத்தைக் கொடுக்கவே இப்பதிவு.

அங்கு பின்னூட்ட வசதி தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.
எனவே ஏதாவது சொல்ல வேண்டியிருந்தால் இப்பதிவிலேயே பின்னூட்டமிடவும்.


Labels: ,

எழுத்துருவைத் தெரிவுசெய்ய.
பாமினி ஆங்கில உச்சரிப்பில்

[மேலுள்ள பெட்டியில் தட்டச்சினால் கீழுள்ள பெட்டியில் ஒருங்குறிக்கு (Unicode) மாற்றப்பட்ட எழுத்துரு கிடைக்கும்]


சுரதா, கிருபாவுக்கு நன்றி


வன்னி ->முத்தையன்கட்டு - சில நினைவுகள் -2

முந்திய நினைவு:
வன்னி ->முத்தையன்கட்டு - சில நினைவுகள் -1


[படத்திலிருப்பது முத்தையன்கட்டு குளக்கட்டுப்பாதையிலுள்ள வீரை மரம். மலைநாடானின் பதிவில் வீரை பற்றிக் கதைக்கப்பட்டது.]


முத்தையன்கட்டில் குறிப்பிடத்தக்க தொழில்களிலொன்று நன்னீர் மீன்பிடி. முத்தையன்கட்டுக்குளத்தில் வாடியமைத்து வள்ளம் வைத்து நன்னீர் மீன்பிடி நடக்கும். வலையில் 'ஜப்பான்' (பேச்சுவழக்கில் 'யப்பான்' என்பதால் இனி அப்படியே வரும்) எனப்படும் மீன்வகைதான் பிடிபடும். இது உருவத்தில் கிட்டத்தட்ட விளைமீன் போலிருக்கும். கறுப்பு நிறம் அதிகமாக இருக்கும். பொழுதுபடும் நேரத்தில் வலைபடுத்தால் விடியும்போது இழுத்துத் தெரிவார்கள். சிலர் பொழுதுபடும்போது தெரிவதுமுண்டு. பிற்காலத்தில் முத்தையன்கட்டுக்குளத்தில் பின்னேரச் சந்தை இருந்ததாக ஞாபகம்.


தூண்டில் போட்டு மீன்பிடிப்பவருமுண்டு. இதில் விரால், விலாங்கு என்பனவும் மாட்டுப்படும். தூண்டில் போடுவதைப் பலர் தொழிலாகச் செய்தாலும் சிலர் அதைப் பொழுதுபோக்காகச் செய்வதுண்டு. எங்கள் தரவளியள் அந்தவகைதான்.

யாழ்ப்பாணத்தாருக்கு குளத்துமீன் எண்டா அருவருப்புத்தான். வன்னியில வந்திருந்தவையும் தொடக்கத்தில அப்பிடித்தான். அதைப்பற்றிக் கதைச்சாலே சிலர் சத்தி வாறமாதிரி ஓங்காளிச்சுக் காட்டுவினம். பிறகு கொஞ்சப்பேருக்குப் பழகிப்போக, மிச்சாக்கள் இப்பவும் அப்பிடியேதான் இருக்கினம்.

வன்னி வந்த உடனயே நான் சூழலோட இயல்பாயிட்டன். எனக்குக் கிடைச்ச நண்பர்களும் சூழலும் அப்படி வாய்த்தது. குளத்துமீன் எனக்கொரு பிரச்சினையில்லை. கடல்மீனளவுக்கு உருசியில்லைத்தான் எண்டாலும் ஒதுக்கிற அளவுக்கு அதில எதுவுமில்லை.
கறிவைக்கும்போதுதான் சிக்கல் வரும். யப்பான்மீன் வெகுவேகமாகக் கரைந்துவிடும். வெட்டியமாதிரியே முறிகளுடன் சாப்பிடக்கூடியமாதிரி கறிவைச்சு முடிப்பது தனிக்கலை.


[இவர்கள் உண்மையில் வயிற்றுப்பாட்டுக்காகத் தூண்டில் போடுகிறார்கள்]
நாங்கள் அப்பப்ப குணங்கொள்ளேக்க தூண்டிலைத் தூக்கிக்கொண்டு மீன்பிடிக்கப் போவோம். வெளிநாட்டில தூண்டில் போடுறதை பெரிய பொழுதுபோக்கா செய்யிறதைப் பாக்கேக்க 'அட! இவங்களும் எங்கள மாதிரித்தான்' எண்டு நினைச்சுக் கொண்டேன்.
தூண்டில் கொண்டுபோறோமோ இல்லையோ றேடியோ கொண்டு போகவேணும். ஏனெண்டா அதுதான் பொழுதைப் போக்கும். நான் ஏதாவதொரு புத்தகத்தையும் கொண்டு போவன்.
துண்டிலுக்குரிய புழுப்பிடிக்கிறது பெரிய வேலை. மண்புழு தான் நாங்கள் பிடிக்கிறது. நினைச்சமாதிரி புழுப்பிடிக்கிறது சின்ன வேலையில்ல. அதைத் தேடிப்போனா எதுவும் கிடைக்காது. ஆளாளுக்கு சின்ன டப்பாவோட கல்லுப்பிரட்டிக் கொண்டிருப்பம் புழுக்களைத் தேடி. எனக்குக் கடைசிவரை புழுப்பிடிக்கிற கலை கைவரேல. அதுவழிய திரியிற சின்னப் பெடிபெட்டையள் பிடிச்சுத் தருவாங்கள். எனக்கு ரெண்டுமூண்டு வட்டனுகள் கிடைச்சாங்கள். பத்து போளைக்கு ஒரு டப்பா புழு எண்ட கணக்கில புழுக்கள் வரும்.

புழுப்பிடிக்கிறது மாதிரித்தான் மீன்பிடிக்கிறதும். எனக்குத் தூண்டில் போட்டுப் பழக்கினவர் சொன்னார்:
"தக்கயப் பாத்துக்கொண்டிரு; அது அங்க இஞ்சயெண்டு சாதுவா ஓடத்தொடங்கினா சடாரெண்டு கம்பை ஒரு வெட்டு வெட்டு; மீன் மாட்டுப்பட்டிடும்" எண்டு.
முதல்நாள் அவரோடயே இருந்து ஒருமணித்தியால் தூண்டில்போட்டன். ரெண்டோ மூண்டுதரம் தக்கை ஆடிச்சு. ஆனா மீன் மாட்டுப்படேல. நான் தூண்டில வெட்டுறது சரியில்லையெண்டார். மூண்டுநாள் மினக்கெட்டன். ஒருமீனும் மாட்டுப்படேல. நல்ல தெளிவான தண்ணியில எல்லாம் வடிவாத் தெரியும். தூண்டிலுக்கு நேர மீன்கள் வரும். அதுவும் கூட்டமா வரும். தூண்டிலிலயிருந்து ரெண்டிஞ்சி தூரத்தில வந்து மணந்துபாக்கிற மாதிரிப் பாத்துக்கொண்டிருந்திட்டுப் போயிடும்.
நான் ஒருவிசயத்தை யோசிச்சன். நான் கரையில இருக்கிறது மீன்களுக்குத் தெரியுது; அதாலதான் அலேட் ஆகி ஓடுது எண்டு நினைச்சன். உடம்பை மறைக்க படுத்திருந்து தூண்டில்போட்டன். நானிருந்தது ஒரு பிட்டியெண்டபடியா அது இலகுவாக இருந்தது.
சொன்னா நம்ப மாட்டியள்! நான் பிடிச்ச முதலாவது மீன் படுத்திருந்து பிடிச்சதுதான்.

அதுக்குப்பிறகு மீன்பிடிக்கிறது கொஞ்சம் பழகீட்டுது. நண்பர்கள் எல்லாரும் கொஞ்ச கொஞ்ச இடைவெளி விட்டு ஒவ்வொரு மூலையிலயோ பிட்டியிலயோ நிண்டு தூண்டில் எறிவம். ஒருத்தனுக்கு மீன் பிடிபட்டா எல்லாரும் அங்கபோய் போடுவம். மீன்பிடிக்கிறமோ இல்லையோ நல்லாப் பொழுது போகும்.

தூண்டிலை நோக்கி மீன்களை வரவைக்க சாப்பாடு போடுவம். பாண்துண்டுகள், சோறு, தோசைத்துண்டுகள் எண்டு சிலதுகளை தூண்டில் முள்ளடியில எறிவம். மீன்கள் நிறைய வரும். ஆனா தூண்டிலில இருக்கிற புழுவைமட்டும் விட்டிட்டு நாங்கள் போட்ட சாப்பாட்டைத் திண்டிட்டு 'தண்ணி' காட்டீட்டுப் போயிடுங்கள்.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
கனநாளைக்குப்பிறகுதான் சுகமா மீன்பிடிக்கிற இன்னொரு வழிமுறை தெரியவந்தது. அது வாய்க்காலில மீன்பிடிக்கிறது. போகச்செய்கைக்கு தண்ணீர் திறந்துவிட்டா அதோட நிறைய மீன்களும் வரும். சிலர் என்ன செய்வினமெண்டா வாய்க்கால் ஒடுங்கிப்பாயிற இடத்தில சின்னதா ஒரு வலைவைச்சு அதால பிடிப்பினம். போக் ஒண்டுக்கால தண்ணி வந்து பாயிற இடத்தில நாங்களும் அப்பிடிப் பிடிக்க வெளிக்கிட்டு வலைகிடைக்காததால சாறத்தைப் பாவிச்சம். எங்களில ஒருத்தனின்ர சாறத்தை விரிச்சுவைச்சு ஒருக்கா கோலி எடுத்ததில நாலோ அஞ்சோ வந்துது.
'இஞ்ச தண்ணி அகண்டுபோகுது; போக்குக்குக் கிட்டவாப் போய் போடுவம்' எண்டு ஒருத்தன் சொல்ல ரெண்டாம்தரம் குழாய்க்குக்கிட்டவாய்ப் போய் சாறத்தை விரிச்சம். தண்ணி சாறத்தைக் கிழிச்சுக் கொண்டு போட்டுது.

[இது படத்தை வலப்பக்கம் தள்ள]


இரவு நேரத்தில தண்ணிபாயிற மதகில அரிக்கன் லாம்போட சிலர் இருப்பினம். தண்ணிவெளியேறிற பக்கத்தில லாம்பை தண்ணிக்குக் கிட்டவாப் பிடிக்க வேணும். மதகு தாண்டிவாற மீனெல்லாம் தண்ணியை எதிர்த்தபடி லாம்புவெளிச்சத்தில குமிஞ்சு நிப்பினம். இதைப்பற்றிக்கூட ஆராய்ச்சி செய்திருக்கிறம். மீன்கள் இயல்பாகவே மதகுதாண்டிவந்து தண்ணியை எதிர்த்து குமியுமா? அல்லது லாம்பு வெளிச்சத்துக்காகத்தான் அப்பிடிக் குமியுதா எண்டு வாதிச்சிருக்கிறம். மதகடியில லாம்பில்லாமல் ரோச்லைட் அடிச்சு, மதகில்லாத சாதாரண வாய்க்காலி்ல் லாம்பு வைச்சு, பகலில அதே இடங்களில மீன்கள் குமியுதா இல்லையா எண்டெல்லாம் சில பரிசோதனைகள் செய்திருக்கிறம். [நாயாத்தில வேற நண்பர்களோட இறால் பிடிக்கப்போகேக்கயும் இப்பிடி வாதம் வந்தபோது அவைக்கு விளங்கப்படுத்த எனது முந்திய பரிசோதனைகள் கைகுடுத்தன.]

வெளிச்சத்தில குமிஞ்சிருக்கிற மீன்களை அடிச்சுப்பிடிப்பினம். ஒரேயடியில நாலைஞ்சு மீன்கள் கிடைச்சாலும் கிடைக்கும். அடிபட்ட மீன் தண்ணியோட போகாமல் அங்கால ஒருத்தர் நிண்டு பிடிக்கவேணும். அனேகமா தடியாலதான் அடிப்பினம். ஓரிடத்தில தென்னம்பாளை பாவிக்கிறதைப் பார்த்திருக்கிறன். கற்சிலைமடுவில சிலர் வாளால வெட்டிறதைப் பாத்திருக்கிறன். கொஞ்சம் பெரிய மீனா வந்திட்டா வாளால ஒரே வெட்டுத்தான். அது சிலநேரம் ரெண்டுதுண்டாக்கூடப் போகும். 'உதென்ன விசர்வேலை பாக்கிறாங்கள்?' எண்டு நினைச்சதுண்டு.

[முத்தையன்கட்டுக்குளத்தின் கிளைவாய்க்காலொன்று]
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
எல்லாத்தையும்விட சுகமான மீன்பிடிக்கிற முறையொண்டிருக்கு. அதுதான் வத்தின குளத்தில மீன்பிடிக்கிறது. 'குழம்பிய குட்டையில் மீன்பிடித்தல்' எண்டு இதைத்தான் சொல்லிறவை போல.
தண்ணி வத்திக்கொண்டுபோற நேரத்தில குளத்திலயோ மோட்டையிலயோ மீன்பிடிக்கிறது லேசான வேலை. அதுவும் எருமைகள் இறங்கி சேறடிச்சு வைச்சா அந்தமாதிரியிருக்கும். வெயில் நேரத்தில சேத்துக்கு மேல்மடத்தில விரால், விலாங்கு எல்லாம் மினுங்கிக்கொண்டிருக்கும். தண்ணியில ஓடுறமாதிரி அவையால தப்பியோடவும் முடியாது.
அப்பிடி வத்தின குளத்தில மீன்பிடிச்ச ஒரு சுவாரசியமான சம்பவம் இனி வருகிறது.

முத்தையன்கட்டுக்குப் பக்கத்தில புளியங்குளம் எண்டு ஓரிடம் இருக்கு. இது 'ஜெயசிக்குறு' புகழ் புளியங்குளமில்லை. அது கண்டிவீதியில இருக்கு. இது ஒட்டுசுட்டானிலயிருந்து முள்ளியவளை வாற றோட்டில கொஞ்சத் தூரத்தில வரும். புளியங்குளம் எண்ட குளத்தை மையமாக வைச்சுத்தான் அந்தக் கிராமத்துக்கு இந்தப்பேர். இதுவும் முத்தையன்கட்டுக் குளத்துக்குரிய நீர்ப்பாசனப் பகுதிதான்.
அந்தக்குளத்தில நிறைய மீன்கள் இருக்கும். 1997 இல தண்ணிவத்தின கோடையில அந்தக் குளத்துமேல ஒரு தாக்குதல் நடத்தினோம். வேறென்ன? மீன்பிடிக்கிற தாக்குதல்தான்.

வழமையாகவே அந்தக்குளம் எருமைகளின் குளம். அந்தச் சுற்றுவட்டார எருமைகளெல்லாம் அந்தக்குளத்திலதான் பிரண்டெழும்புங்கள். தண்ணிவத்திக்கொண்டு போற காலத்தில சொல்லத் தேவையில்லை. தண்ணிதேங்கி நிண்ட சிறுபகுதி முழுவதையும் சேறடிச்சு வைச்சிருந்துதுகள். வெயில்நேரத்தில சேத்துக்கு மேல மினுமினுத்துக்கொண்டிருக்கிற விலாங்குகள் வேற ஆசையை இன்னும் தூண்டிவிட்டுதுகள். அந்தக்குளத்தில முதலை இல்லை எண்டதை ஏற்கனவே கனபேரிட்ட கேட்டு உறுதிப்படுத்தியிருந்தம். இனி இறங்கவேண்டியதுதான் மிச்சம்.

'விலாங்கு லேசில கையில அம்பிடாது. வழுக்கிக்கொண்டு போகும்; அதைப்பிடிக்கேக்க பாம்பைப் பிடிக்கிறமாதிரியொரு உணர்வு வரும்; பயப்பிடக்கூடாது; அரியண்டப்படக்கூடாது; பிடிச்சுப்பிடிச்சு கரைக்கு எறியவேண்டியதுதான்'
எண்டு திட்டங்கள் விளங்கப்படுத்தி அணி தயாராயிட்டுது. அந்த அணியில நான்தான் இளையவன். எண்டாலும் வளத்தி எண்டபடியா கூட்டத்தில சேத்திருந்தாங்கள். கரையில நாலுபேர் நிக்க நாங்கள் நாலுபேர் சேத்துக்க இறங்கிறதெண்டு முடிவாயிட்டுது. தூரத்திலயிருந்து பாக்க எதுவும் தெரியேல. ஆனா கிட்டவரேக்கதான் குளத்தின்ர நாத்தம் மூக்கை அடிச்சுது. ஏற்கனவே மீ்னகள் செத்துக்கிடந்தது தெரிஞ்சுது. குளத்தில தண்ணியே இல்லை, வெறும் சேறுதான். சேறடிச்ச வயல்மாதிரி கறுத்த நிறத்தில கிடந்தது.
நடுவில கொஞ்ச இடத்தைவிட்டு சுத்திவர எருமைகள் படுத்துக்கிடந்தன. ஒருபக்கத்தில கிடந்த எருமைகளை கஸ்டப்பட்டு எழுப்பிக் கலைச்சம். எழுப்பிக்கலைச்சதில ஏற்கனவே சேறாக்கிடந்த இடம் இன்னும் நல்லாப் பதப்பட்டிருந்திச்சு;-).
அந்தப்பாதையாலதான் உள்ள இறங்கவேணும்.

சேறையும் நாத்தத்தையும் நினைச்சா ஒருமாதிரியிருந்திச்சு. உதைப்பாத்தா முடியுமோ? நாலுபேரும் சேந்து இறங்கினம். முழங்காலளவு சேத்திலயே கையால துலாவி ரெண்டு மூண்டு விலாங்கு பிடிச்சாச்சு. எண்டாலும் நடுவிலதான் நிறைய விலாங்குகள் மினுங்கிக் கொண்டிருந்தன. இன்னும் முன்னேறினோம். ஆனா நினைச்சமாதிரியில்லை. ஒரு காலடி எடுத்துவைக்கவே நிறைய கஸ்டப்பட வேண்டியிருந்தது. அடியில் அப்படியான சதுப்பு. புதைந்த காலை மேலே இழுக்க உன்னினால் மற்றக்கால் இன்னும் அதிகம் புதையும்.
இப்போது இடுப்பளவு சேத்தில் நிக்கிறோம். மீன்கள் மாட்டுப்பட்டன. ஆனால் ஓரடிதானும் எடுத்துவைக்க முடியாது. பிடித்தமீனை கரைக்கு எறியிறதுக்குக்கூட முடியாத நிலை. ஒருகாலை எடுத்துவைச்சு பின்பக்கம் திரும்ப முடியாது. ஏற்கனவே அப்பிடி திரும்பின நிலையில நிக்கிற ஒருத்தனிட்ட குடுக்க அவன் கரைக்கு எறிவான். ஆனா அவனின்ர எறி கரைக்குப் போகாது. ரெண்டுகாலும் வேர் விட்டமாதிரி நிண்டுகொண்டு என்னெண்டு கனதூரம் எறியிறது? எறியிறதெல்லாம் கரையிலயிருந்து பத்தடி பதினைஞ்சடி தூரத்தில விழுந்துது. சின்னமீன்கள் மட்டும்தான் கரைக்குப் போயின.

கரையில நிண்டவங்கள் நாலுபேரும் நல்ல நோனாக்கள். எறிஞ்சமீனுகளை சேத்துக்க இறங்கி எடுக்கமாட்டாங்களாம்.
'இன்னும் கொஞ்சம் வீச்சா எறி' எண்டு கொமாண்ட் வேற. நாங்கள் படுற பாட்டைப்பாத்துச் சிரிச்சுக்கொண்டும் நிக்கிறாங்கள். நடுவில நிண்ட நாலுபேருக்கும் ஆத்திரம் ஒருபக்கம்; எப்பிடித் திரும்பிப் போறதெண்ட யோசினை ஒருபக்கம். கால்கள் சோர்ந்து போச்சு. நாரி கடுத்தது. நாலுபேரும் ஒண்டாச் சேந்து திரும்பினம். ஒருவரையொருவர் மாறிமாறி இழுத்தெடுத்து கரைக்கு வந்து சேர்ந்தாச்சு. நோனாக்கள் நாலுபேரையும் பிடிச்சு சேத்துக்குள்ள உருட்டிப்பிரட்டிப் போட்டுத்தான் கூட்டியந்தம். இப்ப நாத்தமொண்டும் அடிக்கேல. கிட்டத்தட்ட ஒரு உரைப்பை விலாங்கு பிடிச்சிருந்தம். தடியில கொழுவிக் காவிக்கொண்டு வந்தம்.

மீன்கறியில சேத்துநாத்தம் வருதெண்டீச்சினம். முழுமீனும் குப்பைக்குத்தான் போனது. எங்களிலயும் நாறுது எண்டினம். நல்லவேளை குப்பையில போடேல. ஆனா அதைவிட கொடுமை நடந்தது. மூண்டுநாளா யாருமே எங்களை அண்டேல. அந்தளவுக்கு நாறினோமாம். ஆனா எங்களுக்கு எந்த நாத்தமும் தெரியேல.
சவுக்காரம் நெருப்பு விலை விக்கேக்க டெற்றோல் போட்டுக் குளிச்சம். பிரியோசினமில்லை.
ஒரு மனுசன்ர கதையக்கேட்டு சாம்பல் போட்டு பொச்சுமட்டையால உரஞ்சிக் குளிச்சம். ஓரளவு பயனிருந்தது.
நானெண்டாலும் பரவாயில்லை. எங்களில ஒருத்தனை வீட்டுக்குள்ளயே விடேல. அவன்ர வீட்டுப் பின்பத்தியிலயே உடுப்பெல்லாம் தூக்கிப்போட்டு அங்கயே சிங்கனுக்குச் சாப்பாடெல்லாம் வச்சுவிட்ட கொடுமை நடந்தது.

எங்களுக்கு இண்டைவரைக்கும் விளங்காத விசயமென்னெண்டா, அதே குளத்துச்சேத்தில நாள்முழுக்கக் கிடக்கிற எருமைகளை அண்டிற சனம், அதுகளிலயிருந்தே பாலெடுத்துப் பாவிக்கிற சனம், எங்களுக்கு மட்டும் ஏன் இப்பிடி கொடுமை செய்தது எண்டதுதான். அந்த மூண்டுநாளா கவட்டுக்கயும் காலிலயும் சொறிசொறியெண்டு சொறிஞ்சு வந்த வேதனையை விட இதுதான் அதிக வேதனை.


[பதிவுக்கும் இந்தப்படத்துக்கும் நேரடியாத் தொடர்பில்லை. ஆனா முத்தையன்கட்டுப் பற்றிச் சொல்ல வந்திட்டதால இப்படம் பொருத்தம்தான். இது முத்தையன்கட்டுத் தவறணைகளில ஒண்டு.]
(பிளா பற்றித் தெரியாத அம்மணியள் பாத்துத் தெரிஞ்சு கொள்ளுங்கோ)
_______________________________
படங்களுக்கு நன்றி: அருச்சுனா

Labels: , ,

எழுத்துருவைத் தெரிவுசெய்ய.
பாமினி ஆங்கில உச்சரிப்பில்

[மேலுள்ள பெட்டியில் தட்டச்சினால் கீழுள்ள பெட்டியில் ஒருங்குறிக்கு (Unicode) மாற்றப்பட்ட எழுத்துரு கிடைக்கும்]


சுரதா, கிருபாவுக்கு நன்றி


Wednesday, February 07, 2007

நான் பெரிய ஆள் -1 : நானெழுதிய கவிதைகள்

குரற்பதிவும் இடப்பட்டுள்ளது.
கேட்டுக்கொண்டே வாசியுங்கள்.

EnKavithaihal.mp3


கவிதை ஒன்று - விலகுகிறது இருள்

நதி,
விளிம்புநிலை மனிதர்களைப் பற்றி
அவர்களின் மொழியிலேயே
அருமையாக எழுதியிருக்கின்றீர்கள்.
சுகுணா திவாகர்
கூறிய வியப்புத்தான் -
எழுத்து நடையைப்பார்த்து-
எனக்கும் வந்தது.
....
புதிய மொழிநடைகள்,
பரந்த வாசிப்பு,
பன்முகப்பட்ட்ட முயற்சிகள்
இல்லாமற்தான்
புலம்பெயர் இலக்கியம்
தேங்கிக்கிடக்கின்றது.
தேக்கமுடைக்கும் புள்ளிகள் -முக்கியமாய்
உங்களைப் போன்ற
பெண்படைப்பாளிகளிடமிருந்து
புலத்தில்(?) ஆரம்பிப்பது
உண்மையிலேயே
மகிழ்ச்சி தருகின்றது.

ஈழத்துக் கவிதைகளுக்கு
ஒருகாலத்தில்
தமிழ்ச்சூழலில் மதிப்பிருந்ததுபோல
இனி மீண்டும் வருவதாயிருந்தால்
அது புலத்தில்/ஈழத்தில்
எழுதும்
பெண்படைப்பாளிகளால்தான்
வரமுடியும் என்று
யோசித்துக்கொண்டிருந்தேன்.

இருள்
விலகுகிறது போலும் :-)..

~~~~~~~~~~~~~~~~~
கவிதை இரண்டு -ஏன் வரவில்லை பாராட்டு?

இந்த மாதிரியான
நல்ல கதைகளைத் தேடி
ஏன் அதிகமும்
பாராட்டுகள்
வருவதில்லை?
சிந்தாநதி
பங்காளி
போன்ற
உங்கள் ரசிகப்பரிவாரங்கள்
எங்கே?
ஒருவேளை
நான் பாராட்டினால்
அதிகமாய்
பாராட்டுக் கொமொண்ட்கள்
குவியுமோ என்னவோ?

_________________________________
மேலே இடப்பட்டவை கவிதையா என்று சந்தேகம் கொள்பவர்கள் தயவு செய்து என் குரற்பதிவைக் கேட்டுவிட்டு முடிவெடுக்கவும்.
_________________________________
"வசந்தன், சுகுனாதிவாகர், டிசே போன்ற பெரிய ஆட்களெல்லாம் நிறையச் சொல்லிவிட்டபடியால்"
என்று என்னையும் மற்றவர்களுடன் சேர்த்துப் பெரிய ஆளாக்கிவிட்ட அம்மணி செல்வநாயகியின் வாக்குப் பொய்க்கக் கூடாதென்பதற்காக சிரமப்பட்டு நானெடுத்த முயற்சியிது.
ஆம்! நானும் பெரிய அள்தான்.

இதன் முதற்கட்டமாக நானெழுதிய இரு கவிதைகளை இங்குத் தந்துள்ளேன்.
கவிதை எழுதியது நானென்றாலும் அதன் பாடுபொருள், என்னோடு 'பெரிய மனிதர்கள்' பட்டியலில் சேர்த்துக்கொள்ளப்பட்ட மற்ற இருவருக்குமுரியது.
தமிழ்நதியின் "அந்த எசமாடன் கேக்கட்டும்" என்ற பதிவில் அவர்கள் இருவரும் இட்ட பின்னூட்டங்களை அடிப்படையாக வைத்து நானெழுதிய கவிதைகளே மேலே தரப்பட்டவை.

பெரிய ஆளென்று உறுதிப்படுத்தும் அடுத்த கட்டம் கதையெழுதுவதுதான்.
யாருடைய கருத்தாவது மாட்டாமலா போய்விடும்?

எதிர்பார்த்திருங்கள் "நான் பெரிய ஆள்-2".
அதுவரை வணக்கம் கூறிவிடைபெறுவது

அ.ஆ.இ. வசந்தன்.........

Labels: , , , ,

எழுத்துருவைத் தெரிவுசெய்ய.
பாமினி ஆங்கில உச்சரிப்பில்

[மேலுள்ள பெட்டியில் தட்டச்சினால் கீழுள்ள பெட்டியில் ஒருங்குறிக்கு (Unicode) மாற்றப்பட்ட எழுத்துரு கிடைக்கும்]


சுரதா, கிருபாவுக்கு நன்றி


எஸ்.பொன்னுத்துரை கதைக்கிறார்...-2

கடந்த கிழமை மெல்பேணில் நடந்த தமிழ் எழுத்தாளர் விழாவில் மூத்த எழுத்தளார் எஸ்.பொ. அவர்கள் ஆற்றிய உரையை முன்னர் ஒலிவடிவில் பதிவாக்கியிருந்தேன்.
இப்போது எஸ்.பொ. அவர்களின் மிகுதி ஒலிப்பதிவுகளைப் பதிகிறேன். மூன்று ஒலிப்பதிவுகளும் mp3, rm ஆகிய வடிவங்களில் தரப்பட்டுள்ளன.

அவ்விழாவில் வழங்கப்பட்ட கேள்விபதில் நேரத்தில் எஸ்.பொ.விடம் கேட்கப்பட்ட கேள்விகளைம் அவற்றுக்கான பதில்களையும் முதலிரு பகுதிகளும் கொண்டுள்ளன.
இரண்டாவது ஒலிக்கோப்பில், 'பின்னவீனத்துவம், நவீனத்துவம்' போன்ற சொல்லாடல்கள் குறித்துக் கேட்கப்பட்ட கேள்விக்கு, "அச்சொற்கள் வாசகனை வெருட்டி பேப்பட்டம் கட்டவே சிலரால் பாவிக்கப்படுகின்றன" என்று எஸ்.பொ. பதிலளிக்கிறார்.



எஸ்.பொ. கேள்விபதில் - கோப்பு ஒன்று
S.PO-Q&A1.mp3





எஸ்.பொ. கேள்விபதில் - கோப்பு இரண்டு.

S.PO-Q&A2.mp3




அவ்விழாவில் எஸ்.பொ. அவர்களுக்கு வழங்கப்பட்ட பவளவிழா விருதைப் பெற்றுக்கொண்ட பின் அவர் ஆற்றிய உரை மூன்றாவது கோப்பாக வருகிறது.
உரையின் தொடக்கத்தில் இரண்டு நிமிடங்கள் பதிவாகவில்லை.
தனக்கு இதுவரை சாகித்திய மண்டலப் பரிசு கிடைக்காதது குறித்துக் கதைத்தவை அந்த விடுபட்ட பகுதிக்குள் போய்விட்டன.
S.PO-pathilurai.mp...


Labels: , , , ,

எழுத்துருவைத் தெரிவுசெய்ய.
பாமினி ஆங்கில உச்சரிப்பில்

[மேலுள்ள பெட்டியில் தட்டச்சினால் கீழுள்ள பெட்டியில் ஒருங்குறிக்கு (Unicode) மாற்றப்பட்ட எழுத்துரு கிடைக்கும்]


சுரதா, கிருபாவுக்கு நன்றி


Monday, February 05, 2007

பிரிவுகள்

இது ஒரு சோதனை முயற்சி.
புதிய புளொக்கருக்கு மாறிய பின் பதிவுகளை வகைப்படுத்தல் தொடர்பில் செய்யப்பட்ட ஒரு சோதனை.
பக்கத்தில் பதிவு வகைகள் என்ற தலைப்பின் கீழ் இருக்கும் தலைப்புக்களைச் சொடுக்கினால் அவ்வகைப்படுத்தலின் கீழான பதிவுகள் இப்பக்கத்தில் திரட்டப்படும்.





Labels:

எழுத்துருவைத் தெரிவுசெய்ய.
பாமினி ஆங்கில உச்சரிப்பில்

[மேலுள்ள பெட்டியில் தட்டச்சினால் கீழுள்ள பெட்டியில் ஒருங்குறிக்கு (Unicode) மாற்றப்பட்ட எழுத்துரு கிடைக்கும்]


சுரதா, கிருபாவுக்கு நன்றி


எஸ்.பொன்னுத்துரை கதைக்கிறார்...

அண்மையில் மெல்பேணில் நடந்த எழுத்தாளர் விழாவில் எஸ்.பொ. அவர்கள் கதைத்தவற்றின் முதற்பகுதியை ஒலிப்பதிவாக இங்கு இணைக்கிறேன்.

அன்றைய விழாவில் தமிழ்ச் சிறுகதைகள் பற்றி கருத்தரங்கில் எஸ்.பொ. அரைமணித்தியாலம் கதைத்தவற்றையே மூன்று பாகங்களாக இங்கு இணைத்துள்ளேன். mp3, rm ஆகிய வடிவங்களில் ஒவ்வொரு கோப்பும் இணைக்கப்பட்டுள்ளன. தேவையான ஒலிப்பதிவைக் கேட்கலாம்.



யாருக்காவது ஒலிக்கோப்பைத் தரவிறக்க வேண்டுமானால் கேட்கவும், இணைப்பைத் தருகிறேன்.

ஈழத்துச் சிறுகதைகள் பற்றிய வரலாற்றுக்குறிப்புகள் சிலவற்றைச் சொல்கிறார். கிழக்கு மாகாண எழுத்தாளர்கள் பற்றிச் சொல்வதில் சில பெயர்கள் தெளிவில்லை. தகவல் தெரிந்தவர்கள் பின்னூட்டமாக இடலாம்.

எஸ்.பொ. அவர்களின் அன்றைய முத்துக்கள் சில:

**ஆறுமுகநாவலரை விடவும் தமிழுக்கு அதிகம் சேவை செய்தது விபுலானந்தர் தான்.

**வடக்கோடு ஒப்பிடும்போது கிழக்கு மாகாணத்தில் கதை இலக்கியம் தேக்கமடைந்துள்ளது.
கிழக்கில் போய் உங்கள் ஆதர்ச எழுத்தாளர் யாரென்று கேட்டால் நா.பார்த்தசாரதி, சாண்டில்யன், கல்கி என்றுதான் பதில்வரும். இவர்களை ஆதர்சமாக வைத்துக்கொண்டிருந்தால் எப்படி உருப்படியான படைப்பை உருவாக்குவது?
(குறிப்பிட்ட எழுத்தாளர்கள் மேலான மயக்கம் யாழ்ப்பாணத்தாரை விடவும் கிழக்கில் அதிகமா???)

**யாழ்ப்பாண மண்வாசனையைச் சரியாக கதைகளில் கொண்டுவந்த முன்னோடி இலங்கையர்கோன்.
(இவரின் வெள்ளிப் பாதரசம் கதையைச் சிலாகித்தார்)

**எட்டாண்டுகளாக நைஜீரியாவில் எழுத்துலக அஞ்ஞாதவாசம் இருந்த தன்னை மீண்டும் எழுத வைத்தது லெ.முருகபூபதி தான்.

**சிறுகதை இலக்கியம் மீள உயிர்ப்புடன் எழுவது புலம்பெயர்ந்தவரால்தான்.

இன்னும் பல சுவாரசியமான தகவல்களுக்கு ஒலிப்பதிவை முழுமையாகக் கேளுங்கள்.
தரமற்ற ஒலிப்பதிவுக்கு மன்னிக்க.

எஸ்.பொ. பேச்சு - பகுதி ஒன்று










எஸ்.பொ. பேச்சு - பகுதி இரண்டு








S.PO.Speech2.mp3





எஸ்.பொ. பேச்சு - பகுதி மூன்று








S.PO.Speech3.mp3




________________________________________________

அன்றைய விழாவில், கருத்தரங்கு முடிந்ததும் கேள்வி - பதில் நேரத்தில் எஸ்.பொ. அவர்கள் கதைத்தவை, பின்னர் விமர்சன அரங்கு முடிந்ததும் அவர் நிகழ்த்திய பதிலுரை, இறுதியில் பவளவிழாப் பாராட்டு நிகழ்வு முடிந்ததும் அவர் நிகழ்த்திய ஏற்புரை என்பவற்றை அடுத்த பதிவில் ஒலிப்பதிவாக இணைக்கிறேன்.

இவற்றில்,
நவீனத்துவம், பின்னவீனத்துவம் போன்ற சொல்லாடல்கள் வாசகனை பேப்பட்டம் கட்ட எழுத்தாளராலும் விமர்சகர்களாலும் பயன்படுத்தபடும் ஓர் உத்தியேயன்றி வேறில்லை என்ற கருத்தைச் சொன்னதோடு இடையில் எழுத்தாளர் சாருவையும் இழுத்தது;
சாகித்திய மண்டலப் பரிசு தனக்கு இதுவரை கிடைக்காததை வருத்தமாகவோ நையாண்டியாகவோ வெளிப்படுத்தியது;

போன்றவை வருகின்றன.

Labels: , , , , ,

எழுத்துருவைத் தெரிவுசெய்ய.
பாமினி ஆங்கில உச்சரிப்பில்

[மேலுள்ள பெட்டியில் தட்டச்சினால் கீழுள்ள பெட்டியில் ஒருங்குறிக்கு (Unicode) மாற்றப்பட்ட எழுத்துரு கிடைக்கும்]


சுரதா, கிருபாவுக்கு நன்றி


© 2006  Thur Broeders

________________