Tuesday, January 30, 2007
Monday, January 29, 2007
ஈழத்து முதற் புதுக்கவிதை
தை -2007 'ஞானம்' சஞ்சிகை அண்மையில் மறைந்த ஈழத்து எழுத்து முன்னோடி வரதரின் நினைவுச் சிறப்பிதழாக வந்துள்ளது. அதில் ஈழத்து முதற் புதுக்கவிதை என்ற தகவலோடு வரதரின் கவிதை வெளிவந்துள்ளது. 1943 இல் வரதர் எழுதி ஈழகேசரியில் வெளியான இக்கவிதை தான் ஈழத்தின் முதலாவது புதுக்கவிதையாகும் என்ற குறிப்பு காணப்படுகிறது. மாற்றுப்பார்வையேதுமிருந்தால் அறிய ஆவல். இனி கவிதை. ஓர் இரவிலே இருள்! இருள்! இருள்! இரவினிலே, நடு ஜாமத்திலே, என்கால்கள் தொடும் பூமிதொடங்கி, கண்பார்வைக் கெட்டாத மேகமண்டலம் வரை இருள் இருள்! பார்த்தேன். பேச்சுமூச்சற்று பிணம்போல் கிடந்தது பூமி இது பூமிதானா? மனித சந்தடியே யற்ற, பயங்கரமான பேய்களின் புதிய உலகமோ? 'ஓவ் ஓவ்' என்றிரைவது பேயா? காற்றா? பேய்க்காற்றா? ஹா! மனிதன் சக்தியற்றுக் கிடக்கும் இந்த வேளையில், அவனுடைய சி்ன்னமே அற்றுப் போகும்படி பூமியை ஹதம் செய்யவோ வந்தது இப்பேய்க்காற்று! ஹா, ஹா, ஹா! 'பளிச்! பளிச்!' அதன் ஒளியிலே இன்பம் வளைவிலே இன்பம். ஓ! ஒளியிலே பயங்கரம்! வளைவிலே பயங்கரம்! மேகத்தின் கோபம். அவன் கண்கள்.... கண்கள் ஏது? உடம்பிலிருந்து பீறிட்டுக் கிளம்பும் கோபாக்கினி! விளக்கில் விழுகின்ற விட்டிலைப்போல, மின்னலின் அழகிலே கண் கெட்டுப்போகாதே! பத்திரம்! கண்ணை மூடிக்கொள். 'பளிச்! பளிச்! பளிச்!' 'பட், பட்... படாஹ்........ பட், படப்.... ஓ!...... ஹோ!...' முழக்கம்! இடி! பேய்க்காற்றின் ஹூங்காரத்தோடு வேதாள முழக்கம்! முழக்கம்! காது வெடித்துவிடும்! உன் ஹிருதயத் துடிப்பு நின்றுவிடும்! காதைப்பொத்திக்கொள், வானம் வெடித்து விடுகிறது! "டபார்!" ~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~ மேற்படிக்கவிதையில் ஜாமம், ஹதம், ஹூங்காரம், ஹிருதயம் போன்ற சொற்கள் வருகின்றன. அறுபது வருடங்களின்முன் எங்களிடமிருந்த சொற்பயன்பாடு எப்படியிருந்ததென்று புலப்படுகிறது. அண்மையில் மீள் வெளியீடு செய்யப்பட்ட, நூற்றாண்டுக்கு முன் தொகுத்து வெளியிடப்பட்ட 'யாழ்ப்பாண அகராதி' யில் அதன் மூலத்தொகுப்பாளர் உரை படித்தேன். நூறாண்டுகளுக்கு முன் எங்கள் எழுத்துத்தமிழ் இப்படியா இருந்தது என்றுதான் தோன்றியது. ஒப்பீட்டளவில் இப்போது நன்கு தேறிவிட்டோமென்றுதான் படுகிறது. இதற்காகப் போராடியோருக்கு நன்றி. ~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~ இந்த 'ஞானம்' இதழில் வரதரின் இறுதி நேர்காணல் இடம்பெற்றுள்ளது. அவரின் 'கற்பு' சிறுகதை மீள வெளியிடப்பட்டுள்ளது. கவிஞர் வில்வரத்தினம் தொடர்பான நினைவுக்குறிப்புகள் சில இருவரால் எழுதப்பட்டுள்ளன. "கலை இலக்கியவாதிகள் சிலரும் உதைபந்தாட்டமும்" என்ற தலைப்பில் ஒரு கட்டுரை இருக்கிறது. இதில் யாழ்ப்பாணத்தின் உதைபந்தாட்ட வரலாறின் ஒருபகுதி, முக்கியமாக வடமராட்சியில் உதைபந்தாட்ட நினைவுக்குறிப்புக்கள் பதியப்பட்டுள்ளன. இக்கட்டுரையை எழுதிய வதிரி.சி.ரவீந்திரன், தான் பார்த்த, அறிந்த தகவல்களோடு ஒரு விளையாட்டு வீரனாக தனது அனுபவங்களையும் பதிந்துள்ளார். இன்னும் இக்கட்டுரை படித்துமுடிக்கவில்லை. காலம் பெரும்பாலும் எழுபதுகள் என்பதால் எமக்கு இவை புதுத்தகவல்களாகவே இருக்கும். ~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~ முந்தநாள் (27.01.2007) மெல்பேணில் எழுத்தாளர் விழா நடந்தது. ஈழத்தின் மூத்தவர்கள் மூவர் சிறப்பிக்கப்பட்டனர். எஸ்.பொன்னுத்துரை, காவலூர் ராசதுரை, கலைவளன் சிசு.நாகேந்திரன் ஆகியோரே அம்மூவர். இவ்விழா பற்றிய குறிப்புக்களைப் பின்னர் தருகிறேன். எஸ்.பொ. வின் உரையை ஒலிப்பதிவு செய்தேன். தெளிவாக இருந்தால் அதையும் தரமுயல்கிறேன். Labels: இலக்கியம், ஈழ இலக்கியம், கவிதை |
Tuesday, January 23, 2007
கதைத்தல் - பேசுதல்
'கதைத்தல்' தொடர்பில் எனக்கு அண்மையில் ஒரு குழப்பம் வந்தது. இச்சொல்லை 'பேசுதல்' என்ற பொருளில் ஈழத்தில் பயன்படுத்துகிறோம். பேசுதல் என்பதற்கு எம்மிடையே 'திட்டுதல்' என்ற ஒரு பொருளுமுண்டு. இந்த 'கதைத்தல்' என்பதை 'பேசுதல்' என்ற பொருளில் ஈழத்தில் மட்டும்தான் பயன்படுத்துகிறோம் என்று நினைத்திருந்தேன். ஆனால் அண்மையில் கேட்ட ஒருபாடல் அக்கருத்தைக் குழப்பிவிட்டது. வேட்டையாடு விளையாடு என்ற திரைப்படத்தில் ஒரு பாடல்வருகிறது. 'பார்த்த முதல்நாளே' என்று தொடங்கும் அப்பாடலில் இரண்டாவது சரணத்தில் ஒருவரி வருகிறது இப்படி: கண்பார்த்துக் கதைக்க முடியாமல் நானும் இதில், 'கண்பார்த்துக் கதைக்க முடியாமல் நானும்' என்று வரும் வரியில் நாங்கள் பயன்படுத்தும் பொருளில் 'கதைத்தல்' வருகிறது. இது தமிழகத்திலும் இருக்கும் வழக்கா? குறைந்தபட்சம் சில ஊர்களிலாவது பயன்பாட்டிலிருக்கும் சாத்தியமுண்டா? அல்லது ஈழத்தமிழ் வழக்குத்தான் பாடலிற் புகுந்ததா? பாடலை எழுதியவர் தாமரை என்று நான் கருதுவதால் இரண்டாவது சாத்தியமென்று நம்ப இடமுண்டு. தெரிந்தவர்கள் சொல்லுங்கள். Labels: அலட்டல், ஈழத்தமிழ், பேச்சுத்தமிழ், விவாதம் |
Thursday, January 18, 2007
நவீன இலக்கிய வரலாற்றின் ஜீவநாடி வல்லிக்கண்ணன்
பனுவல் -பத்மா சோமகாந்தன்- தினக்குரல் வாரவெளியீட்டில் வெளிவந்த கட்டுரை பயன்கருதி இங்குப் பதிவாக்கப்படுகிறது. "கோயில்களை மூடுங்கள்" என்ற புரட்சிகரமான தலைப்பில் வெளிவந்த நூலின் ஆசிரியர் பெயர் "கோரநாதன். விஷயத்தின் ஆழத்துக்கேற்ற முறையில் அமைந்த நடையிலான இந்நூல் பெரியார் ஈ.வே.ரா. விடம் கொடுக்கப்பட்டது. அதனை ஆர்வத்தோடு வாசித்து முடித்த ஈ.வே.ரா. பெரியார் இந்நூலின்" சொற்கள் வாணலியில் வறுத்து எடுத்தன போல இருக்கின்றன" என்று சுடச்சுட எழுதப்பட்ட முறையைப் பெரிதும் வரவேற்று மகிழ்ந்து பாராட்டினார். பெரியாருடைய பாராட்டைப் பெறக் கூடிய வகையில் புதுமையாகச் சிந்தித்து புரட்சிகரமாக எழுத்து நடையைக் கையாண்டும், கண்டிக்க வேண்டியவற்றை கடுமையாகவும் நையாண்டியாகவும் நகைச்சுவையாகவும் எழுத்தில் வித்தை செய்யக் கூடியவராகவும், சாதாரண விஷயங்களைச் சொல்லும் போது மிகத் தெளிவாகவும் எளிமையாகவும் சிறு சிறு வசனங்களையும் எழுதக் கூடிய வல்லமையைக் கொண்டிருந்தவர் வல்லிக் கண்ணன் என்ற எழுத்துலக ஞானி. 1920 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 12 ஆம் திகதி இராஜவல்லி புரம் என்ற ஊரில் பிறந்த கிருஷ்ண சாமி என்ற இயற்பெயரைக் கொண்ட வல்லிக் கண்ணனின் தந்தையார் மு.சுப்பிரமணிய பிள்ளை. தாயார் மகமாயி அம்மாள். இரு அண்ணன் மாரையும் ஒரு தம்பியாரையும் உடன் பிறப்புகளாகக் கொண்டிருந்த கிருஷ்ண சாமி 2006 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 9 ஆம் திகதி ஓரிரு வாரங்கள் சுகயீனமுற்ற வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றும் பூரண சுகமடைய முடியாமல் இயற்கையெய்தினார். தனது பதினேழாவது வயதில் "இதய ஒலி" எனும் கையெழுத்துப் பிரதியொன்றை தானாகவே ஆரம்பித்து நடத்தி எழுத்துலகில் காலடியைப் பதிக்கத் தொடங்கிய வல்லிக் கண்ணன் என்ற புனைப் பெயரைச் சுமந்து கொண்ட கிருஷ்ண சாமி இரு வருடங்களின் பின்னர் `பிரசண்ட விகடன்' என்ற பத்திரிகையில் `சந்திர காந்தக்கல்' என்ற தனது முதலாவது சிறு கதையை வெளியிட்டு தனது எழுத்திற்கான அங்கீகாரத்தைப் பதிவு செய்து கொண்டார். ஆக்க இலக்கியத்தின் மீதுள்ள ஆர்வம் பிடரியைப் பிடித்துத்தள்ளவும் படைப் பிலக்கியத்தின் பல்வேறு துறைகளிலும் பத்திரிகை சிறு சஞ்சிகைகள், கதை, கட்டுரை, நாவல், மொழி பெயர்ப்பு, விமர்சனம், திரைக்கதை வசனம், கவிதை எனப் பற்பல அம்சங்களிலும் கூர்மையான பார்வையுடன் பேனாவைச் செலுத்தி தனது அறிவையும் ஆற்றலையும் மேன் மேலும் வளர்த்துக் கொண்டார். இதன் நிமித்தமாகத் தினமணி ஏ.என்.சிவராமன், மஞ்சரி ஆசிரியர் தி.ஐ.ரங்கநாதன், `எழுத்து' ஆசிரியர் சி.சு.செல்லப்பா, தி.க.சி, கண முத்தையா, அகிலன், கு.அழகிரி சாமி டாக்டர் மு.வரதராஜன் தி.ஜானகிராமன், தொ.மு. சிதம்பர ரகுநாதன், சின்னக் குத்தூசி, இந்திரா பார்த்த சாரதி பி.எஸ்.இராமையா, ந.பிச்சமூர்த்தி, சே.கணேஷலிங்கம், ஜெயகாந்தன், திருப்பூர் கிருஷ்ணன், பொன்னீலன், தாமரை மகேந்திரன் போன்ற தலைசிறந்த சிந்தனையாளர்களதும் எழுத்துலகப் பிரம்மாக்களதும் மத்தியில் மிகவும் மதிப்பு வாய்ந்தவராகவும், போற்றப்படுபவராகவும், மிக மிக வேண்டிய வராகவும் விளங்கினார். குடும்பச் சுமைகளையோ, லௌகீக வாழ்க்கையையோ மேற்கொண்டிராத வல்லிக் கண்ணன் ஆக்க இலக்கியத்தின் மீதான விடுதலறியாப் பற்றினால் பல இலக்கியச் சுமைகளைத், தனது முதுகிலேயே சுமந்து கொண்டு மகிழ்ந்தார். சஞ்சிகை உலகில் சில காலம் அனுபவம் பெற்ற இவர். சிறுகதை, கவிதை, கட்டுரை ,எழுத்து என்பவற்றில் தனது மனதை முற்று முழுதாக ஈடுபடுத்தி உழைத்துக்கொண்டிருந்த வேளைகளில் ஈழத்து எழுத்தாளர் பலரைச் சந்தித்துப் பேசி ஈழத்து இலக்கியத்தில் பெரும் ஆர்வமும் அக்கறையும் ஈடுபாடும் கொண்டிருந்தார். ஈழத்து இலக்கியத்தை அறியும் ஆவல் ஈழ இலக்கியத்தின் வீச்சையும் போக்கையும் நன்கு அவதானித்து பாராட்டினார். பலருடைய ஆக்கங்களைப் பொறுமையோடும் அவதானிப்போடும் வாசித்து அவற்றை எடை போட்டு மெலெழுந்து நிற்பவற்றைப் புகழ்ந்தும் நசிவானவற்றைச் சுட்டிக் காட்டித் திருத்தியும் உதவுவதில் பெரும் பங்கு கொண்டிருந்த போக்கை அவரது இலக்கியத் தடத்தின் பரிமாணங்களில் சிலவாகக் கொள்ள முடியும். ஆகையினாலன்றோ ஈழத்து ஆக்க இலக்கியக் காரர் பலருடைய நூல்களுக்கு டாக்டர் நந்தியின் `தரிசனம்', பத்மா சோமகாந்தனின் `வேள் விமலர்கள்' நீ.பி.அருளானந்தத்தின் `வாழ்க்கையின் வர்ணங்கள்' என்றநாவல், எனப் பலருடைய ஆக்கங்களை வரவேற்று முன்னுரை வழங்கி வாழ்த்தியுள்ளார். கடந்த 1996 ஆம் ஆண்டு ஜூன் மாசக் கடைசி வாரங்களில் இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கம் கொழும்பில் இரு தினங்கள் முற்போக்கு எழுத்தாளர் சங்க மகாநாட்டைச் சரஸ்வதி மண்டபத்தில் நடாத்தியது. இரு நாள் நிகழ்ச்சிகளிலும் பங்கேற்று உரையாற்றும் விசேட விருந்தினராகத் தமிழகத்திலிருந்து பிரபல நாவலாசிரியர், பொன்னீலன் தாமரை ஆசிரியர் மகேந்திரன் ஆகியோருடன் எழுத்தாளர் வல்லிக்கண்ணனும் இலங்கைக்கு முதன் முதலாக வருகை தந்திருந்தார். பல சிரமங்களின் மத்தியிலும் முதன் முதலாகத் தான் இலங்கை வந்துள்ள விபரங்களையும் `வல்லிக் கண்ணன்' என்ற புனைபெயரையே `விசா' கடவுச் சீட்டு எடுப்பதற்காகவும் போடப்பட்ட சங்கடங்களை மாநாடு ஆரம்பித்த பின்னரே கொழும்பு சரஸ் வதி மண்டபத்தை வந்தடைய முடிந்த சிக்கல் நிறைந்த தனது பிரயாணம் பற்றியும், தனது இயற்பெயரை அறவே மறந்து விட்ட உண்மையையும் ஈழத்து இலக்கியச் கலைஞருடைய எதிர்பார்ப்பையும் வரவேற்பையும் சுவைபடத் தனது பேச்சின் இடையே திணித்துப் பேசி ஈழத்து மக்களுடைய அன்பையும் இலக்கியதாகத்தையும் தீர்த்துக் கொண்டது இன்று நிகழ்ந்த சங்கதி போல் நினைவில் நிற்கிறது. ஈழத்தில் வ.க. தங்கியிருந்த வேளைகளில் இங்கு வாழும் இலக்கிய நெஞ்சங்களையும் எழுத்தாளர், அறிஞர், கவிஞர், விமர்சகர், சுவைஞர், கலைஞர், எனப் பலதுறை சார்ந்தவர்களையும் சந்தித்துப் பேசுவதிலும் உரையாடி மகிழ்வதிலும் மிகுந்த நேசம் கொண்டிருந்தார். சாகித்ய இரத்தினம் வரதர் அவர்களுடைய பிறந்த நாளான முதலாம் திகதி ஜூலை மாசத்தன்று "வரத கதைகள்" என்னும் நூலை வெளியிட்டு வைத்து மகிழ்ந்து உரையாற்றினார். நவீன இலக்கியத்தின் மீது தீராத காதல் கொண்டிருந்த வல்லிக் கண்ணன் சராசரியான தமிழக மக்கள் உரையாடுவது போலன்றி, மிகச் சுருக்கமாகவும் நறுக்கான இரண்டொரு சொற்களுடனும் மிகக் குறைவாகவே பேசுவார். ஆனாலும், அவை மிக ஆணித்தரமாகவும் வெகு நிதானமாகவுமே இருக்கும். இதுவே அவருடைய உரையாடலின் இயல்பு. அதீதிமான அமைதியும் அடக்கமான மெதுவாகப் பேசும் பாங்கையும் உடையவரே இந்த இலக்கிய யோகி. இலக்கிய சம்பந்தமான விஷயங்களையோ கடந்த கால சிறு சஞ்சிகைகள் பற்றியோ நவீன இலக்கியத்தின் வரலாறு, எழுத்துலகப் பிரம்மாக்கள் பற்றி யெல்லாம் பேசத் தொடங்கினால், காலம், நேரம், ஆண்டுகள், இடங்கள், பெயர்கள், விஷயங்கள் ஆகிய விபரங்கள் கூடச் சற்றும் பிசகாமல் அச் சொட்டாகச் சொல்லி ஆற்றொழுக்கு நடையில் விபரித்துக் கொண்டே போவார்; அவ்வேளையில் `ஜெட் விமானத்தின் வேகம் போல இருக்கும் அவர் பேச்சு. பெருங்காற்று அடித்தால் எங்கே அள்ளுப்பட்டு வீசப்பட்டு விடுவாரோ என்று எண்ணக் கூடிய மிக மெலிந்த சுள்ளலான உருவம். இந்த மனிதனிடம் இத்தனை ஞாபகசக்தி நிறைந்த விடய அடக்கமும் ஆளுமையும் எப்படி?....! என வியந்து நிற்போரே பலர். அத்தனை தூரம் நவீன இலக்கியப் பரப்பில் தோய்ந்து எழுந்தவர் இந்த இலக்கியத் திருமூலர். நாம் தமிழகம் சென்று இவரைச் சந்தித்த வேளைகளிலெல்லாம் வரதர், டொமினிக் ஜீவா, சாந்தன் போன்ற எழுத்தாளர்கள் சிலரது பெயர்களைக் கூறியும் இங்கிருந்து வெளிவரும் இலக்கிய சஞ்சிகைகள், பத்திரிகைகள், அவற்றின் செல் நெறிகள் பற்றியெல்லாம் புகுந்தகத்தில் வாழ்ந்து கொண்டு பிறந்தகத்தின் நிலையைப் பற்றி அறிய அவாவும் மணப் பெண் போல வெகு அக்கறையோடு கேட்டறிந்து கொள்வார். கடைசி நாட்களில், சுகவீனமுற்றிருந்த சில நாட்கள் தவிர ஏனைய நாட்களில், எண்பத்தாறு ஆண்டுகள் நிறைந்த இவரது வாழ்வில் இறக்கும் வரை காந்தியடிகளின் கொள்கைகளைச் சார்ந்து தான் உபயோகிக்கும் உடைகளையும், தான் உணவுண்ணும் பாத்திரங்களையும் தனது கரங்களாலேயே சுத்தம் செய்து கொள்ளும் பழக்கமும் பண்பும் கொண்டவர். எளிமையான தோற்றத்தையும், வாழ்க்கையையும் மேற்கொண்டிருந்த இவர் மிக உயர்ந்த சிந்தனைகளுக்கு உரியவராகவே வாழ்வை மேற்கொண்டிருந்தார். எழுத்தையே நேசித்து எழுத்தையே காதலித்து எழுத்தையே மணஞ்செய்து எழுத்திலேயே வாழ்ந்து கொண்டிருந்த வல்லிக்கண்ணன் தனது பிரமச்சரிய வாழ்வினால் மட்டுமல்ல ஏனைய எழுத்தாளர்களை விட மிகவும் வித்தியாசமான போக்குகள் வரித்துக் கொண்டவர். எவ்வித தீய பழக்கங்களுக்கும் அடிமையாகாத இவர் உயர்ந்த ஒழுக்க சீலராகவே வாழ்ந்தார். வ.க, சொனாமுனா, கோரநாதன், இளவல், ஆர். ரத்னம், நையாண்டி பாரதி, மார்பியல், அவதாரம், ரா.சு.கி. ஞானப்பிரகாசம், எஸ். சொக்கலிங்கம், மிவாஸ்கி என ஏகப்பட்ட புனைபெயர்களுள் ஒளிந்து கொண்டு எழுதும் வல்லிக்கண்ணன் வாசிப்பதில் சூரனென்றும் எழுதுவதில் `ராட்சஸன்' என்றும் பலர் கூறி வியந்தாலும் இவ்விரு சூரத்தனமான பெயர்களுக்கும் அவரது இயல்பான சுபாவம் மிகவும் மாறுபட்டது. சிறுகதைகளைப் படிக்கும்போது அவற்றிக்கேற்ப லாவகமான நடையில் இனிமையாக எழுதும் வல்லிக்கண்ணன் புனைபெயர்களுள் மறைந்து கொண்டு அப்பெயர்களுக்கும் தான் எழுதும் விடயத்துக்குமேற்றதாகத் தன் நடையை மாற்றிக் கொள்வதில் விற்பன்னராகவே விளங்கினார். இந்த ரீதியில் வ.க. அவர்களைப் பு. பித்தனுடன் ஒப்பிடலாமெனவும் பொருளுக்கேற்ப நடையை மாற்றிக் கொள்வது ைநயாண்டியாகவும் அரசியல் கட்சி சார்பற்றும் எழுதும் வகையில் வ.க., புதுமைப்பித்தனை முன்னோடியாகக் கொண்டவரென எழுத்தாளர் ம.ந. ராமசாமி குறிப்பிடுவார். குறைவில்லாத பூரண உன்னத இலக்கியமென்பது கிடையாது. அப்படியிருக்கையில் குற்றம் குறைகளைச் சுட்டிக்காட்டி எழுத்தாளனை முடக்குவது இலக்கியத்துக்குச் செய்யும் சேவையல்ல என்பதே வ.க. வின் கருத்தென்பதால் அவர் குறைவான இலக்கியங்கள் மட்டையை இரு கீற்றாகக் கிழித்துத் தலைமாடு கால்மாடாகப் போட்டுக் கழிப்பது போலச் செய்யமாட்டாரென்று இவர் அபிப்பிராயப்படுகிறார். எழுத்தாளர் என்போர் மனிதப்பிறவியில் சிறந்தவர்கள் என்ற நல்லெண்ணமே வ.க. வின் உடம்பெல்லாம் விகசித்து நின்றது. 20 ஆம் நூற்றாண்டின் நவீன தமிழ் இலக்கியத்தை எதிர்கால இளைஞர்களும் ஏனையோரும் நன்கு விளங்கிக் கொள்ளும் வகையில் வ.க. மணிக்கொடிக்காலம், தீபம் யுகம், புதுக்கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும், பாரதிக்குப்பின் உரைநடை, சரஸ்வதிகாலம் என்ற தொகுப்பு நூல்களின் மூலம் தற்கால நவீன இலக்கியச் செல்நெறியை எழுத்தாளர்கள், பத்திரிகையாளர்கள், விமர்சகர்கள் போன்றோரின் படைப்புகளோடு தொகுத்து வெளியிட்டு எதிர்கால சந்ததிக்கு கடந்தகாலம் பற்றிய ஒளியை ஏற்றி வைத்த இந்த மணிக்கொடி சகாப்த எச்சமான இம் மாணிக்கத்தின் புகழ் என்றென்றும் மங்காமல் நவீன இலக்கியம் கொடிவிட்டுப்படர ஒளிவீசிக் கொண்டே இருக்கும் என்பது சத்தியமான உண்மை; வெறும் புகழ்ச்சி*. *பத்திரிகையில் 'வெறும் புகழ்ச்சி' என்றுதான் பதிவாகியிருக்கிறது. 'வெறும் புகழ்ச்சியன்று' என்று வந்திருக்க வேண்டும். ___________________________________ நன்றி: ஞாயிறு தினக்குரல் January 14, 2007 Labels: இலக்கியம், எழுத்தாளர், நினைவு, படைப்பாளி |
Sunday, January 14, 2007
கலந்துரையாடல் ஒலிப்பதிவு -தைப்பொங்கல் சிறப்புப் பதிவு
வலைப்பதிவு அனுபவங்கள் பற்றி வலைப்பதிவாளர் இருவர் கலந்துரையாடிய ஒலிப்பதிவை இங்குப் பதிவாக்குகிறோம். தைப்பொங்கலை முன்னிட்டு நாம் தரும் சிறப்புப் பதிவு இது. நானும் சயந்தனும் மூன்று மாதங்கள் இடைவெளியில் வலைப்பதிய வந்தவர்கள். இரண்டு வருடங்கள் நிறைவாகிவிட்டன. இந்நிலையில் நாங்கள் வந்த காலப்பகுதி பற்றிய சில மீளும் நினைவுகளோடு குறுகியநேர கலந்துரையாடலொன்றை கணினி-தொலைபேசி வழித் தொடர்புமூலமாகச் செய்தோம். இதுவரை கட்டிக்காத்த சில இரகசியங்கள் இதில் கசியவிடப்பட்டுள்ளன. எதுவித ஆயத்தமுமின்றி திடீரென கதைத்ததில் இருபத்தைந்து நிமிடங்கள் வரை நீண்ட கலந்துரையாடலை வெட்டிச் சுருக்கித் தொகுத்தவர் சயந்தன். கலந்துரையாடலின் தொடக்கப்பகுதியும் முடிவுப்பகுதியும் தெளிவற்றுப் பதிவாகியதால் அவையும் வெட்டப்பட்டன. எனவே சிலருக்கு தொகுப்பு மொட்டையாகத் தொடங்கி மொட்டையாகவே முடிவதுபோல் தோன்றலாம். மீண்டும் ஒலிப்பதிவு செய்ய நாங்களெடுத்த முயற்சிகள் பலனளிக்கவில்லை. எனவே அப்படியே தருகிறோம். ஒலிப்பதிவைக் கேட்டுவிட்டு உங்கள் கருத்துக்களைச் சொல்லுங்கள். Labels: அனுபவம், ஒலி, கலந்துரையாடல், பதிவர் வட்டம், வரலாறு |
Thursday, January 11, 2007
மண்
மண் திரைப்படம் பற்றி ஒருபக்கம் ஆகா ஓகோ என்றும் இன்னொரு பக்கம் திட்டித் தீர்த்தும் பலவாறான கருத்துக்கள் எழுதப்பட்ட நிலையில் நானும் எனக்குப்பட்டதைச் சொல்வோமென்று எழுதியது இப்பதிவு. ஈழத்துத் தமிழ்த்திரைப்படமாகப் பலராலும் கருதப்படும் 'மண்' படத்தின் கதை ஈழத்தின் வன்னியை மையமாக வைத்து நடக்கிறது. பெரியளவில் பேசப்படாமற்போன, தற்போது பலராற் பேசத் தயங்கப்படும் களமொன்றை திரைக்கதை கொண்டிருக்கிறது. என்னைப்பொறுத்தவரை, அக்களமான சாதிப்பிரச்சினை, ஒடுக்குமுறை என்பவற்றை படம் ஓரளவு வெற்றிகரமாக வெளிப்படுத்தியுள்ளது. அந்தளவில் பாராட்டும் வரவேற்புமுண்டு. பாராட்டப்பட வேண்டி அம்சங்களிருக்கும் அதேநேரம், ஏதோ புரட்சிகரமான, வித்தியாசமான படம் என்று தூக்கிவைத்து ஆடுமளவுக்கு இல்லாமல், வழமையான தமிழ்ச்சினிமா மாசாலக்கள் இரண்டொன்றைத் தூவி சிலசந்தர்ப்பங்களில் வெகுசாதாரண படமாகத் தோன்றும்படி வந்துள்ளதுதான் மண். அவை எவையென்று பின்னர் பார்ப்போம். முதலில் இதுவோர் ஈழத்துத் தமிழ்ப்படம் என்றளவில்தான் நானும் கருதிக்கொண்டிருந்தேன். அதற்கான கூறுகள் நிறையவேயுள்ளன. கதைக்களம் நடக்கும் கனகராயன்குளப் பகுதியில் படப்பிடிப்பு நடத்தப்படவில்லையென்றாலும் அம்மண்ணை, மண்வாசனையை படத்தில் கொண்டுவருகிறார்கள். குளக்கட்டுப் பாதைகள், பற்றைகள், வயல்கள், முதிரைக் கட்டைகள் நட்டு முள்ளுக்கம்பி வரிந்த வயல்வேலிகள், தென்னந்தோப்புக்கள் என்று காட்சிகள் இயல்பாகவே கதைக்களத்துக்குப் பொருந்துகின்றன. படத்தில் அவ்வப்போது வரும், குளக்கரையில் தாழ்வாக விரிந்த பெருங்கிளைகளுடன் விசாலமாக வளர்ந்த மருதமரங்கள் எனக்குக் கிளர்ச்சியூட்டின. ஈழத்தவரின் பேச்சுவழக்கில் படம் எடுக்கிறோமென்ற பேரில் சிலர் நடத்திய கூத்துப்போலில்லாமல் கதைக்களத்துக்குரிய பேச்சுவழக்கு பெருமளவு சரியாகவே பொருந்துகிறது. ஆனால் இடையிடையே தோன்றும் - மேடைநாடகத்தில் கதைப்பதுபோன்ற இழுவையுடன் கூடிய பேச்சுவழக்கைக் குறைத்திருக்கலாம். பெற்றோர் கொடுக்கும் தண்டனை முறைகள் - குறிப்பாக கண்ணில் மிளகாய்த்தூள் தூவுவது குறிப்பிட்டுச சொல்லவேண்டிய காட்சிகள். சின்னச்சின்ன விசயங்கள் பலவற்றில் நல்ல முயற்சி எடுக்கப்பட்டுள்ளது. அப்படியே பச்சைமிளகாய் தின்னவிடும் தண்டனையையும் ஒரு காட்சியாக்கியிருக்கலாம். பூசி மெழுகிக்கொண்டு வரும் கதாநாயகர், நாயகி, பிறபாத்திரங்கள் என்றில்லாமல் மண்ணோடு ஒட்டிய பாத்திரங்கள் நன்றாகப் பொருந்துகின்றன. இதுவரை பார்த்த தமிழ்ப்பட நாயகிகளில் அதிகம் கவர்ந்தவர் இந்த இலட்சுமிதான். ஆலங்குளம், கரப்புக்குத்தி, குறிசுட்டகுளம்... என்றுவரும் சுற்றுப்புற ஊர்களின் பெயர்களோடு கதைக்களம் மிகமிக உண்மையாக இருக்கிறது. விடுமுறைநாட்களில் வயற்காவலுக்கும் ஆடுமாடு மேய்க்கவும் மாணவர்கள் (முதலாளிகளின் மகன்மாரும்) போகவேண்டிய யதார்த்தம் நன்றாக வந்திருக்கிறது. இவைகள் சரியாக அமைந்தமைக்கு திரைக்கதையும் இயக்கமும் ஈழத்தவரே என்பதும் முக்கிய காரணம். கதைக்களத்தையும் மக்களையும் 'கதை நடந்த காலப்பகுதியில்' நன்கறிந்தவரென்பதால் இப்படி வந்தது. [இன்னும் சிலவற்றைச் சேர்த்திருந்தால் நன்றாயிருந்திருக்கும். குறிப்பாக வன்னியில் இன்றியமையாமற் போய்விட்ட ஆடுமாடுகளைப் பெருமளவில் காணவேயில்லை. ஒருமுறை பட்டியொன்று காட்டப்படுகிறது. மாடுகள் மேயாத, படுத்துக்கிடந்து தொல்லைப்படுத்தாத வன்னி வீதிகள் சற்று இடறுகின்றன. அதேபோல் நாயகன் குறும்படமெடுக்க வந்த நிகழ்காலமும் சரியாகக் காட்சிப்படுத்தப்படவில்லை. வீதிப்போக்குவரத்தில் நிற்கும் காவற்றுறையையோ, அங்கிங்கு ஓடித்திரியும் புலிகளின் வாகனங்களையோ காணவில்லை. இப்படத்தை வன்னியில் எடுக்க முடிந்திருந்தால் இவற்றைக் கொண்டுவந்திருக்கலாம் என்பதைக் காரணமாகச் சொல்லிக்கொள்ளலாம். எனினும் இது 'இந்தியப் படமாக' திரையிடப்பட்டதும் காரணமென்றுதான் தோன்றுகிறது] இப்படத்தின் பின்னணி பற்றிய ஒரு சம்பவம் அண்மையில் படிக்க நேர்ந்தது. முதலில் திட்டமிடப்பட்டதிலிருந்து மாற்றங்களுடன்தான் இப்படம் திரையிடப்பட்டிருக்கிறது. இந்தியாவில் திரையிட வேண்டுமென்பதற்காக சிலகாட்சிகள் (தமிழீழக் காவற்றுறை சம்பந்தப்பட்ட காட்சியும் அதிலொன்று) நீக்கப்பட்டு அல்லது மாற்றியமைக்கப்பட்டு படம் இந்திய தணிக்கைக் குழுவின் அங்கீகாரம் பெறப்பட்டு வெளியிடப்பட்டது என்ற தகவலே அது. யதார்த்தத்தை மீறியதாகத் தெரியும் அக்கொலைக் காட்சிக்கு நீக்கப்பட்ட அல்லது கைவிடப்பட்ட காட்சிகளில் பதில் இருந்திருக்கக் கூடும். ஆக இந்தியத் தணிக்கைக் குழுவுக்கு ஏற்றாற்போல் தயாரிக்கப்பட்ட இப்படம் யாருக்குரிய திரைப்படம் என்ற கேள்வி இயல்பாகவே வருகிறது. 'ஈழத்துத் திரைப்படம்' என்று ஆவலோடிருந்த எனக்கு இது ஒருவித ஏமாற்றத்தையே தந்தது. ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு பார்வை. சிலர், ஆணிவேரையே ஈழத்துத் திரைப்படமென்று சொல்லிக் கொண்டிருந்தனர். _______________________________________ இனி இப்படத்தை சராசரி தமிழ்ப்படமாகக் கருத வைப்பவற்றில் இரண்டொரு கூறுகளைப் பார்ப்போம். *** படம் தொடங்கி முக்கால் மணிநேரமாகியும் எதுவும் வரவில்லையென்று ஆச்சரியப்பட்டபோது அடுத்த நிமிடமே வந்தது தமிழ்ச்சினிமாவின் சாபக்கேடான பாடற்காட்சி. 'ஒரு படமெடுத்தால் கட்டாயம் சில பாட்டுக்களும் ஆட்டங்களும் இருக்கவேணும்; அதிலயும் கட்டாயம் ஒரு காதல் பாட்டு வேணும்' என்ற எழுதாத விதி இங்கும் பின்பற்றப்படுகிறது. இரண்டுபேர் காதலிக்கிறார்கள் என்பதைச் சொல்ல எங்கள் இயக்குனர்களுக்கு இருக்கும் மிகச்சுலபமான வழியாக ஒரு பாட்டுக்காட்சியைத்தான் கருதுகிறார்கள். அப்படித்தான் 'மண்' இயக்குனர் புதியவனும் நினைத்தாரோ என்னவோ? *** BBQ பாட்டும் நடனமும்: வெளிநாட்டிலிருந்து சுற்றுலாவுக்கோ இன்னபிற தேவைக்கோ தாயகம் வருபவர்கள் அங்கே குடிப்பதோ கூத்தாடுவதோ இல்லையென்று நான் சொல்ல வரவில்லை. வெளிநாட்டுச் சரக்கில் நாலைந்து போத்தல்கள் கொண்டுவந்து (அதற்கு வரிகட்டாமல் வருவதற்கு இவர்கள் படும்பாடு!) தங்கள் ஆடம்பரங்களை மண்ணின் மைந்தர்களுக்குக் காட்டமாட்டார்கள் என்றும் இல்லை. சொல்லப்போனால் சிலர் தாயகம் வருவதே அதற்குத்தான். வெளிநாட்டில் வெயிற்காலத்தில் எப்படி உடுத்துவார்களோ அதைவிடவும் குறைவாக உடுத்தி எங்கள் பெண்கள் வன்னியர்களுக்கு பாஸ் காட்டுவார்களென்பதையும் மறைப்பதற்கில்லை. ஆனால் மண் படத்தில் இடம்பெற்ற இப்பாடற்காட்சி இப்படியான இயல்பைச் சொல்லும் நோக்கத்தின் பாற்பட்டதன்று. வெளிநாட்டிலிருந்து வந்த ஒருவர் தன் சொந்தங்கள், தெரிந்தவர்களுக்கு விருந்தொன்று வைக்கிறார் என்பதை வெளிப்படுத்தும் நோக்கமுமன்று. அல்லது பாடல்வரிகள் சொல்வதைப் போன்று வன்னிமக்களின் வாழ்வைச் சொல்வதற்காகப் புகுத்தப்பட்ட பாடற்காட்சியுமன்று. இயக்குனருக்கு ஒரு ஆசையும் தேவையும் தெரிகிறது.. ஒரு நடனக்குழுவை வைத்து வண்டியையும் குண்டியையும் ஆட்டி வழமையான தமிழ்ச்சினிமாப் பாணியில் ஒரு பாடற்காட்சி தேவைப்படுகிறது. இன்றைய மொழியில் ஒரு 'குத்துப்பாட்டு'. 'உங்களுக்கு நாங்கள் எவ்விதத்திலும் சளைத்தவர்களில்லை'யென்பதை கோடம்பாக்கத்துக்கு நிரூபிக்கும் இலட்சியம் இயக்குனருக்கு இருந்திருக்க வேண்டும். அதற்கென்று கோடம்பாக்கத்திலிருந்தே நடன இயக்குனர் ஒருவர் நியமிக்கப்பட்டுத்தான் இப்படம் எடுக்கப்பட்டுள்ளது. படத்துக்குச் சம்பந்தமில்லாமல், படம்பார்க்க வருபவரை கிளுகிளுப்பூட்டும் நோக்கத்தை மட்டும் கொண்டு சினிமாப் பொதுப்புத்தியோடு புகுத்தப்பட்ட பாடற்காட்சியாகவே அது தெரிகிறது. என்ன மாற்றமென்றால், கோடம்பாக்கம் கமராவைத் தூக்கிக்கொண்டு வெளிநாடு போகும்; இங்கு மாறி நடந்திருக்கிறது. *** படத்தில் வரும் காதலை விளங்கிக்கொள்ள முடியவில்லை. நான் நினைக்கிறேன், படம் பார்த்த யாருக்குமே அது முடியாத விசயம். நாயகன் உண்மையில் காதலித்தானா இல்லையா என்பது தெளிவில்லை. முன்படத்தி்ல் வரும் காட்சிகள், அவன் மனமொத்துக் காதலிப்பதாகவே வருகிறது. காதலியை இழிவாய்ப் பேசியதற்காக நண்பனோடு அடிபடுகிறான். ஆனால் பின்னர் வரும் காட்சியில் அனைத்தும் திட்டமிட்டுச் செய்தாகக் காட்டப்படுகிறது. பொன்ராசுவைக் கொலை செய்யும் காட்சியின்பின் திரையில் வரும் வசனம்தான் இயக்குனர் படம்மூலம் சொல்ல வந்த கருத்தென்றுபடுகிறது. அந்தக் கருத்தை நியாயப்படுத்த வேண்டும்; கொலையாளியை நியாயப்படுத்த வேண்டும்; எனவே பொன்ராசுவை வில்லனாக்க வேண்டும். அல்லாதபட்சத்தில் சந்தர்ப்பவசத்தால், சமூகத்தின் தவறால் வெளிநாடு போகவேண்டிவந்த ஓர் அப்பாவியைக் கொலை செய்துவிட்டு புரட்சிவசனத்தைக் கருத்தாய்ச்சொல்லும் படத்தின் அபத்தம் உறைக்கும். இவை அனைத்துக்காகவும் படத்தின் இடையில் அடித்த குத்துக்கரணம்தான், பொன்ராசு எல்லாம் திட்டமிட்டே லட்சுமியை ஏமாற்றினான் என்ற கதை. இது பட இயக்கத்தில், திரைக்கதையில் மிகப்பெரிய பலவீனமாகவே எனக்குத் தோன்றுகிறது. தகவற்பிழைகள், தர்க்கப்பிழைகள் என்பனவும் ஆங்காங்கே வருகின்றன. படத்தில், 'காயாக்கன்னி' என்ற பேரில் நாயகனால் நாயகிக்கு அறிமுகப்படுத்தப்படுகிறது ஒருமரம். 'இந்த மரத்தைப்போல உறுதியாகவும் கன்னியாகவும் எங்கட காதல் இருக்க வேணும்' என்றும் சொல்லப்படுகிறது. அதேமரத்தில் நாயகனைக் கட்டிவைத்துவிட்டு மகன்(கொலையாளி) பேசும்போது 'விளாத்தி மரத்தைக் காட்டி என்ன சொன்னனி? வைரமான மரமோ?' என்று கேட்கிறார். காயாக்கன்னி விளாத்தியானது விளங்கவில்லை. குறும்படமெடுக்க தாயகம் திரும்பிவரும் நாயகனுக்குச் சற்று இளைத்த தோற்றத்தைக் காட்டியிருக்கலாம். கதைப்படி குறைந்தபட்சம் முப்பத்தைந்து வயது கொண்டவர். பெண்கள் எப்படியென்றாலும், பொதுவாக புலம்பெயர்ந்த எங்கட ஆண் சிங்கங்கள் விரைவில் வயக்கெட்டுப்போவார்கள் என்றுதான் நினைக்கிறேன் ;-). அடுத்து படத்தில் வரும் இயக்கம் சம்பந்தப்பட்ட காட்சிகள்: கொலையாளி போராளியா இல்லையா என்பது நேரடியாகக் காட்டப்படவில்லை. ஆனால் அதைவைத்தே சப்பைக்கட்டு கட்ட முடியாது. அவனும் நண்பனும் 'ஜெயசிக்குறு நேரத்தில் ஆமிக் கொமாண்டர் இருந்த வீடு' பற்றிக் கதைக்கிறார்கள். அதைவிட குறும்படம் எடுக்க வந்தவருக்கு உதவிசெய்யவென்று நியமிக்கப்பட்டவர்கள்தாம் அந்த இருவரும். மேலும் பொன்ராசு பற்றி பழைய கோப்புக்கள் பார்த்து விவரத்தை உறுதிப்படுத்துகிறார்கள். படத்தில் காட்டப்படும் இயக்கம் விடுதலைப்புலிகளைச் சுட்டவில்லையென்பதும் வெறும் சப்பைக்கட்டுத்தான். தெளிவாகவே காலமும் இடமும் சொல்லப்படுகிறது. யுத்தநிறுத்த ஒப்பந்த காலத்தில் கனகராயன்குளம் புலிகளின் நிர்வாகப்பகுதிதான். அங்கிருக்கும் ஆயுதம் தாங்கியவர்கள் புலிகள் மட்டுமே. BBQ பாட்டு முடியும் நேரத்தில் பொன்ராசுவைக் காணவரும் இயக்கத் தளபதிக்கிருக்கும் பாதுகாப்பு, குறைந்தபட்சம் ஒரு கேணல் தரத்தைக் காட்டுகிறது. உடனேயே அடையாளம் கண்டது ஒருபுறமிருக்க, அடுத்தகணமே பதினெட்டு வருசத்துக்கு முன்பு பழகியதுபோலவே 'என்னடா மச்சான்' என்று பேசத்தொடங்குவதும் இயல்பாகவே இல்லை. கனகரயான்குளத்தில் கொலையாளி கைத்தொலைபேசியில் கதைக்கிறார். மறுமுனையும் வன்னிக்குள்தான் இருக்கிறது. வோக்கி ரோக்கியில் கதைப்பது போல் எடுத்திருக்க வேண்டிய காட்சியது. கதையில் றிவோல்வர் வருகிறது. எங்காவது ஆவணமாகப் பத்திரப்படுத்தியிருந்ததைத் தூக்கிவந்துவிட்டார்களோ? அல்லது உண்மையில் புலிகள் தவிர்ந்த வேறு யாராவதுதான் கொலையாளிகளோ தெரியவில்லை. புலிகள்தான் என்று இயக்குனர் நினைத்திருந்தால் அவர்மனதில் இருக்கும் புலிகள் இயக்கம் எண்பதுகளுக்குப்பின் Update ஆகவில்லை போலுள்ளது. _________________________________________ மேற்குறிப்பிட்டவற்றில் நிறைய விதயங்கள் பலருக்கு பொருட்படுத்தத் தேவைற்றவையாகவே இருக்கும். அவரவர் பார்க்கும் பார்வையில் மாறுபடும். என்வரையில் மணிரத்தினமோ புகழேந்தியோ எடுக்கும் படத்துக்கும் புதியவன் எடுக்கும் படத்துக்குமிடையில் வித்தியாசத்தை எதிர்பார்க்கிறேன். முன்னவற்றை ஒரு சினிமா என்றளவில் பார்ப்பதோடு பின்னதற்கு முட்டையில் மயிர்பிடுங்கிப் பார்ப்பேன். இந்தியர் ஒருவர் 'மண்' பார்ப்பது வேறு; நான் பார்ப்பதும் எதிர்பார்ப்பதும் வேறு. அதுபோல் இந்தியர்களுக்கு 'மண்' காட்டுவது வேறு; எங்களுக்குக் காட்டப்பட வேண்டியது வேறு. முடிவாக, ஈழத்தமிழ்ச் சமூகம் சார்ந்த இறுக்கமான பிரச்சினையை அடித்தளமாகக் கொண்டு அதைப்பற்றிப் பேசப்புறப்பட்ட(தாக நானும் பலரும் கருதும்) படம், சில தவறுகளாலும் இலக்கற்ற தன்மையாலும் வழமையான சினிமாப்படமாகிப்போனது. _________________________________________ இந்தியாவில் ஜனரஞ்சக அந்தஸ்துடன் ஓடிய ஈழத்தமிழரின் முதலாவது திரைப்படம் இதுவென்று நினைக்கிறேன். பயணத்தில் தொடர்ந்து முன்னேற வாழ்த்து. _________________________________________ ரெறறிஸ்ட் படத்தின் பின்னானவை போலவே, கொலையாளி சரணடையாத பட்சத்தில் 'மண்' படத்தின் தொடர்ச்சியாக நடப்பவை குறித்தும் திகிலூட்டும் படமொன்று எடுக்கலாம். கொலையாளி எப்பாடுபட்டாவது வன்னிக்குள்ளிருந்து தப்பவேண்டிய சூழ்நிலையில் நடப்பவை நிச்சயம் திகிலூட்டுபவையாகவும் விறுவிறுப்பாகவும் இருக்கும். வெளிநாட்டிலிருந்து வந்த ஒருவரின் கொலை வன்னி நிர்வாகம்மீது ஏற்படுத்தும் அரசியல் பிரச்சினை, நிர்வாக நற்பெயர் இழுக்கு என்பவையும் சேர்ந்துகொள்ள நடக்கும் துரிதகதி விசாரணைகளும் தேடுதல்களும், பெரும்பாலும் முடிவில் நிகழப்போகும் இன்னொரு கொலையும் என்று ஒரு விறுவிறுப்புப் படம் பண்ணலாம். Labels: திரைப்படம், படைப்பாளி, விமர்சனம், விவாதம் |
Monday, January 08, 2007
உச்சரிப்பு மயக்கம் - ஒலிப்பதிவு
உச்சரிப்புத் தொடர்பான ஒலிப்பதிவுகளை இணைத்துள்ளேன். இருபகுதிகளாக உள்ள ஒலிக்கோப்புகளில் ஒவ்வொன்றிலும் இரண்டு ஒலிக்கோப்புக்கள் இணைத்துள்ளேன். தரவிறக்கிக் கேட்க இறுதியில் இணைப்புக்கொடுத்துள்ளேன். ஒலிப்பதிவுகளைக் கேட்டுக்கொண்டே பதிவைப் படிப்பது பயனளிக்கும். பகுதி ஒன்று |
Tuesday, January 02, 2007
கிளாலிக் கடனீரேரி - சில நினைவுகள்
************ படகுகள் ஒவ்வொன்றாக நகர்கின்றன. ஒவ்வொன்றிலும் பதினெட்டுப் பேர் என்றளவில் நிரப்பப்பட்டு பயணம் தொடங்குகிறது. எல்லாமே தனித்தனிப் படகுகளாகப் பயணிக்கின்றன. பெரும்பாலானோர் கரையிலிருந்தே தமது விருப்பத்துக்குரிய தெய்வங்களை மன்றாடத் தொடங்கிவிட்டார்கள். அனேகமாக அக்கரை சென்று சேரும்வரை இப்படித்தான் மன்றாடிக்கொண்டிருப்பார்கள். மன்றாட்டை முணுமுணுக்கும் அளவுக்குக்கூட மெதுவாக வாய்விட்டுச் சொல்லவில்லை. மற்றவர்களைக் குழப்புமென்ற நோக்கமில்லை, மாறாக குரலெழுப்ப முடியாப் பயம். இரண்டுநாட்களின் முன்புதான் இதேபோல் பயணம் செய்தவர்களில் ஐம்பது வரையானவர்கள் வெட்டியும் சுட்டும் கொல்லப்பட்டிருந்தார்கள். அவர்களும் இப்படி செபித்துக்கொண்டுதான் பயணித்திருப்பார்கள். யாருக்கும் செத்தவர்களின் சரியான கணக்குக்கூடத் தெரியாது. எங்கும் கடல் பரந்திருக்கிறது, கடுமையான இருட்டு, படகியந்திரத்தின் சத்தத்தையும் படகு அலையுடன் மோதும் சத்தத்தையும் தவிர வேறு ஒலிகளில்லை. அப்படியேதாவது ஒலி வருகிறதா என்று காதைக் கூர்மையாக்கிக் கொண்டே பயணம் தொடர்கிறது. நீண்டதாகவும் நெடியதாகவும் தோன்றிய மரணவேதனையான பதினெட்டுக் கடல்மைல் பயணத்தில் தூரத்தில் சில வெளிச்சங்கள் தெரிகின்றன. அவை ஆலங்கேணி, நல்லூர் கரைகள். பயணிகள் சேரவேண்டிய கரை. கரையில் எரியும் அரிக்கன் லாம்புகளின் வெளிச்சத்தில் போன உயிர் எல்லோருக்கும் திரும்பி வந்தது. ஆழம்குறைந்த கடற்கரையில் வாய்க்கால்போல் வெட்டி ஆழமாக்கப்பட்ட பகுதியூடாக படகுகள் நகர்ந்து கரையை அடைகின்றன. ஓளியை, வாழ்க்கையின் வெற்றியாகவும் நம்பிக்கையாகவும் பிரச்சினையொன்றின் விடிவாகவும் சித்தரிக்கும் சொற்றொடர்களின் வெளிப்பாட்டை, சிக்கலான காலப்பகுதியில் கிளாலிக் கடனீரேரியில் பயணித்தவர்கள் அனுபவித்திருப்பார்கள். கரையில் எரியும் நாலைந்து அரிக்கன் லாம்பு வெளிச்சம், ஆயிரம் பேருக்கு தாம் இன்னும் சிலகாலம் உயிரோடிருப்போமென்ற நம்பிக்கையைத் தந்தது. *********** ஈழத்தைச் சேர்ந்த எவருக்கும் இப்பெயர் தெரிந்திருக்கும். இவ்விடத்தை அறியாதோரும் பெயரைக் கேள்விப்படாமலிருந்திருக்க முடியாது. தொன்னூறுகளில் யாழ்ப்பாணத்தவருக்கு இரத்தமும் சதையுமாக வாழ்க்கையோடு ஒன்றித்திருந்தது இந்நீரேரி. வாழ வைத்ததும் இவ்வேரிதான்; வாழ்க்கையைக் குடித்ததும் இவ்வேரிதான். முதலில் ஆனையிறவுக்கு கிழக்குப் பக்கமாக கொம்படி-ஊரியான் பாதையை மக்கள் பயன்படுத்தினர். இடுப்பளவு உயரத்தில் தேங்கிநிற்கும் நீருக்குள்ளால் சிறுபடகுகளில் கிட்டத்தட்ட ஐந்து மைல் தூரம் பயணித்து வன்னி சென்றடையவேண்டும். பின் தாண்டிக்குளம் வழியாக வவுனியா செல்ல வேண்டும். இந்தப்பாதை பறறித் தனியே சொல்லலாம். இரண்டுமுறை பயணித்திருந்தாலும் 'உயிர்போகும்' அனுபவமேதும் இல்லாமல் சுவாரசியமாகவே அவ்விரு சந்தர்ப்பங்களும் அமைந்திருந்தன. இராணுவத்தினர் ஆனையிறவிலிருந்து மேற்கொண்ட ஒரு முன்னேற்ற முயற்சியுடன் கொம்படி-ஊரியான் போக்குவரத்துப் பாதையும் மூடப்பட்டது. மாற்றுப்பாதையாக கிடைத்ததுதான் கிளாலிக் கடனீரேரிப் பாதை. நான் நினைக்கிறேன், இப்பயணம் தொடங்கப்பட்ட பின்தான் அக்கடனீரேரி 'கிளாலிக் கடனீரேரி' என அழைக்கப்பட்டது; அதற்கு முன் வெறும் 'யாழ்ப்பாணக் கடனீரேரி'. சரிதானா? கிளாலிப் பாதையும் அதனோடு சம்பந்தப்பட்டவை பற்றியும் பூராயத்தில் படத்துடன் எழுதப்பட்ட பதிவு சிலவேளை பலனளிக்கலாம். தொடக்கத்தில் அடிக்கடி மக்கள் படுகொலை செய்யப்பட்டனர். இரவு புறப்படும் படகுகள் விடியும்போது மறுகரையை அடையுமா அடையாதாவென்று யாருக்கும் தெரியாது. இடையில் கொல்லப்படுவதற்கும் தப்பிப் பிழைப்பதுக்குமான சாத்தியக்கூறு ஒரேயளவுதான். விடியும்போது வெட்டிக்கொல்லப்பட்ட அல்லது சுட்டுக்கொல்லப்பட்ட உடல்களோடு படகுகள் வந்துசேரும். அல்லது மூழ்கடிக்கப்பட்ட படகிலிருந்தவர்களின் சடலங்கள் மிதந்து வரும். ஆனாலும் யாழ்ப்பாணத்தாரின் பயணங்கள் தொடர்ந்துகொண்டிருதானிருந்தன. பதின்மூன்றாண்டுகள் கழித்து இன்று நினைத்தால் ஆச்சரியமாக இருக்கிறது, கடலில் படுகொலையொன்று நடந்த இரண்டாம் நாளே எதுவும் நடவாததுபோல் சாதாரணமாக அதேவழியிற் பயணிப்பர் மக்கள். __________________________________ அப்போது யாழ்ப்பாணத்திற்கும் வெளியிலும் தகவற்றொடர்பென்பது மிகமிக மோசமாக இருந்தது. தொலைபேசிச் சேவை அறவே இல்லை. கடிதப் போக்குவரத்து மாதக்கணக்கில் செல்லும். யாழ்ப்பாணத்துக்கு உணவுப்பொருட்கள் கொண்டுவரும் கப்பலில்தான் தபாலும் வரும், போகும். கொழும்புக்கும் யாழ்ப்பாணத்துக்குமிடையில் ஒரு கடிதம் பயணிக்க இரண்டோ மூன்றோ மாதங்கள் வரை செல்லும். அந்நேரத்தில் அரச தபாற்சேவையை விடவும் கடினமாக உழைத்தது போக்குவரத்துச் செய்பவர்கள்தாம். ஒருவர் யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு - ஏன் வவுனியாவுக்குப் புறப்பட்டாலே அவரிடம் நிறையக் கடிதங்கள் சேரும். அவர் அவற்றைக் காவிச்சென்று வவுனியாவில் தபாற்பெட்டியில் போட்டுவிட வேண்டும். கொழும்பிலிருந்து வருபவர்களிடமும் அப்படித்தான். அவர்கள் யாழ்ப்பாணத்துக்கான கடிதங்களைக் காவிவருவார்கள். இச்சேவை யாராவது தெரிந்தவர்களுக்குத்தான் செய்யவேண்டுமென்பதில்லை. கடிதத்தைத் தூக்கிக்கொண்டு பயணிகள் குவிந்திருக்கும் குறிப்பிட்ட இடத்துக்குச் சென்று அங்கிருப்பவர்களில் முகவெட்டைப் பார்த்து யாராவது நம்பகத்தன்மையுள்ளவராக இனங்கண்டு அவரிடம் 'அண்ணை/அக்கா/அம்மா/ஐயா, இதையொருக்கா வவுனியாவில போஸ்ட் பண்ணிவிடுங்கோ" என்று சொல்லிக் கொடுத்துவிடலாம். ஒருவர் கொழும்பிலிருந்து புறப்படுகிறாரென்றால் அதற்குமுன் யாரிடமாவது கடிதம் கொடுத்துவிடப்படும், 'இன்ன திகதியில் வெளிக்கிடுறன்' என்று. அதன்பின் இங்குள்ளவர்கள் கணக்குப்பார்த்து இன்ன திகதியில் யாழ்ப்பாணம் வந்து சேருவார் என்று தீர்மானித்துக்கொள்வர். குறிப்பிட்டவர் பயணத்தைப் பின்போட்டால் இங்கு யாருக்கும் தெரியாது. அது அடுத்த கடிதத்தில்தான் வரவேண்டும். எனது அம்மம்மா ஒருமுறை கொழும்புசென்று வந்தபோது ஏற்கனவே கிடைத்த கடிதத்தின்படி இப்படித்தான் நாங்கள் ஒருநாளை எதிர்பார்த்திருந்தோம். அம்மம்மா கிளாலிக் கடல் கடப்பதாக நாங்கள் கணக்குப்பார்த்த நாளில் அதில் பயணம் செய்த படகுகள் சிங்களக் கடற்படையால் தாக்கப்பட்டு பலர் கொல்லப்பட்டார்கள். எத்தனை படகுகள் தாக்குதலுக்குள்ளாயின என்று யாருக்கும் சரியாகத் தெரியாது. பல படகுகள் எதிர்க்கரைக்கே திரும்பிவிட்டன, சில படகுகள் இக்கரைக்கு வந்துவிட்டன. அதிகாலை செய்தியறிந்து பதைத்துப்போனோம். அம்மம்மா இந்தநாளில் பயணித்தாவா இல்லையா என்றே தெரியாது. எங்கள் நாட்கணிப்பின்படி இந்தப்பயணத்தில் வந்திருக்கவேண்டும். நூறுவீதமும் இதைத்தான் நாங்கள் நம்பவேண்டும். கிளாலிக் கரையில் வந்துசேர்ந்த படகுகளில் அம்மம்மா வரவில்லை. எங்களைப்போல நூற்றுக்கணக்கானவர்கள் தங்கள் உறவினர் தப்பினார்களா செத்தார்களா என்று தேடியலைந்துகொண்டிருந்தனர். சடலங்களும் தாக்கப்பட்ட படகொன்றும் கரைக்கு அடைந்தது. சில சடலங்கள் உடனடியாக அடையாளம் காணப்பட்டன. அதற்குள் அம்மம்மா இல்லை. காலை பத்துமணிக்குள், இரண்டு படகுகள் மட்டும் தாக்கப்பட்டன, மற்றவை பத்திரமாக இருகரையில் ஏதோவொன்றுக்குத் திரும்பிவிட்டன என்ற உறுதிப்படுத்தினார்கள். கிளாலிக் கரைக்கு அம்மம்மா வரவில்லை. அம்மம்மா வந்தது தாக்கப்பட்ட மற்றொரு படகா, இல்லை எதிர்க்கரைக்கே திரும்பிவிட்ட படகொன்றிலா என்று தெரியவில்லை. மற்றவர்களைப்போலவே நாங்களும் 'உண்மை'யுணர அலைந்துகொண்டிருந்தோம். அன்றுமுழுவதும் எந்த முடிபும் தெரியவில்லை. பணங்கள் நிறுத்தப்பட்டாலும் அன்றிரவு அக்கரையிலிருந்து பெயர் விவரங்களோடு ஓர் ஓட்டி கிளாலிக்கு வந்துசேர்ந்ததோடு பலரின் பிரச்சினை ஓரளவுக்கு முடிவுக்கு வந்தது. பிரச்சினையென்பது யார் செத்தார்கள், யார் தப்பினார்கள் என்ற விவரம் தான். கொல்லப்பட்டதாக இனங்காணப்பட்டவர்களின் உறவினர்கள் ஒப்பாரி வைக்க, தப்பியதாக விவரம் கிடைத்தோரின் உறவினர் ஒருவித ஆசுவாசத்தோடு திரும்பினர். நாங்கள் சிலர் இரண்டு குழுவிலுமில்லை. எங்களுக்கு வேறொரு சிக்கல். இரண்டிலும் அம்மம்மா பெயரில்லை. எஙகளோடு இன்னும் சிலருக்கு இதேபிரச்சினை. தேடிவந்தவர்கள் கொல்லப்பட்டவர்களிலுமில்லை, தப்பியோரிலுமில்லை. விவரங்களில் பிழையிருக்குமோவென்று சந்தேகப்பட்டால், ஓட்டி அது சரியானதென்று சாதித்தார். தொன்னூற்றொன்பது வீதம் விவரம் பிழைக்க வாய்ப்பில்லை. ஏனென்றால் பயணம் செய்வோர் அனைவரும் பதிவுசெய்யப்பட்டுத்தான் பயணிக்கின்றனர். படகுகளில் மாறிச்சாறி ஏறியிருந்தாலும் ஆட்தொகை பிழைக்க வாய்ப்பில்லை. கொல்லப்பட்டோர், தப்பியோர் தொகை சரியாகப் பொருந்துகிறது. இப்போது ஒரே குழப்பம். ஒரேசாத்தியம், நாங்கள் தேடுவோர் ஆலங்கேணிக்கு இன்னும் வந்துசேரவில்லையென்பதுதான். இரண்டுநாட்கள் மிகக் கொடுமையாகவே கழிந்தன. இறுதியில் அம்மம்மா வந்து சேர்ந்தா. எங்களுக்குச் சொல்லப்பட்டதிலிருந்து இரண்டுநாட்கள் பிந்தித்தான் கொழும்பிலிருந்து புறப்பட்டிருந்தா. கிளாலிப் பயணம், கடலிற் பயணிப்பவர்களுக்கு மட்டுமன்றி அவர்கள் வருகைக்காகவும் வழியனுப்பிவிட்டும் காத்திருக்கும் உறவுகளுக்கும் மிகக்கொடிய அனுபவங்களைத் தந்தது. கிளாலியைத் தவிர வேறெந்தத் தெரிவுமின்றி அதன்வழியால்தான் சகலதும் நடந்துவந்தன. அடிக்கடி சிங்களக் கடற்படையினரின் வெறியாட்டம் நடந்தது. சிலநாட்களின் விடியல்கள் கிளாலிக் கரையில் சடலங்களோடு விடிந்தன. _____________________________ ********************* 1996 மாசிமாதத்தில் ஒருநாள். யாழ்ப்பாணத்திலிருந்து நான் முற்றாக வெளியேறியநாள். அதுவும் இதே கிளாலியால்தான். இம்முறை தனித்தனிப் படகுகளில்லை, இயந்திரம் பூட்டப்பட்ட ஒருபடகில் பத்துப் படகுகள் தொடராக இணைக்கப்பட்டிருந்தது. முதற்படகுமட்டும் இயந்திரத்தில் பயணிக்க ஏனையவை பின்தொடந்தன. பயமற்ற, மகிழ்ச்சியான -கிட்டத்தட்ட ஓர் உல்லாசப் படகுப்பயணம். முன்பு பயத்தில் உடல் விறைத்தது, இப்போது மாசிப்பனியில் விறைத்தது. (யாழ்ப்பாணத்தை விட்டு நீங்குவது எப்படி மகிழ்ச்சியென்று கேட்காதீர்கள். எனக்கும் தெரியவில்லை. முடிந்தால், ஞாபகமிருந்தால் மாசியில் அதையொரு பதிவாக்குகிறேன்) ********************* கிளாலிக் கடலில் நடந்த பல படுகொலைகளின்பின் அக்கடலில் கடற்படையினரின் வெறியாட்டத்துக்கு கடற்புலிகளால் முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது. கடற்புலிகளின் பாதுகாப்பில் தொந்தரவின்றி பயணங்கள் தொடர்ந்தன. யாழ்ப்பாணக் குடாநாடு முற்றாகப் படையினரின் வசம் வந்தபின் அப்பாதைக்கு வேலையில்லாமற்போயிற்று. _____________________________ காலங்கள் ஓடி 2000 ஆம் ஆண்டு வந்தது. ஆனையிறவுப் படைத்தள மீட்புக்கான இறுதிச்சண்டை கடுமையாக நடக்கிறது. சுற்றிவளைக்கப்பட்டு, குடிநீர்கூட இல்லாத நிலைக்கு ஆனையிறவுப்படைத்தளம் முடக்க்பபடுகிறது. இனிமேல் தப்பியோடுவதைத்தவிர வேறுவழியில்லையென்ற நிலையில் படையினர் ஓடத்தொடங்குகின்றனர். இப்போது அவர்களுக்கிருந்த ஒரேபாதை கிளாலிக்கடற்கரைதான். எல்லாவற்றையும் போட்டுவிட்டு கடற்கரை வழியாக ஓடுகிறார்கள். விடுதலைப்புலிகளால் வெளியிடப்பட்ட சில வீடியோக்களில் பார்த்தவர்ளுக்குத் தெரிந்திருக்கும். கும்பல் கும்பலாக கடற்கரைவழியாக இராணுவத்தினர் ஓடுகிறார்கள். கும்பல் கும்பலாகவே செத்துக்கொண்டிருந்தார்கள். மிகக்கிட்டத்தில் அவை படம்பிடிக்கப்பட்டன. பல கோப்புக்கள் வெளியிடப்படவில்லை. தாக்குதலைச் சமாளிக்க முடியாது பலர் கடலுள் இறங்கி நீருக்குள்ளால் தப்ப முயற்சிக்கின்றனர். ஆனையிறவு முற்றாக வீழ்ந்த மறுகணமே வன்னிமக்கள் அனைவரும் அங்குச் சென்று கூத்தாடினர். கிளாலிக் கடற்கரையையும் பார்க்கும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. முந்தி பார்த்ததைவிடவும் மோசமாக இருந்தது. முந்தி கரையில் அடைந்ததை விடவும் அதிகளவு பிணங்கள். முன்பு எம்மக்கள் கொல்லப்பட்டபோது, 'கடல்நீர் இரத்தத்தால் சிவந்தது' என்று சிலர் எழுதியது கவிதைக்குச் சரியென்றாலும் நடைமுறையில் அப்படித் தோன்றியதில்லை. ஆனால் இம்முறை உண்மையில் கரையிலிருந்த நீர் சிவப்பாகவே தெரிந்தது. ஆனால் பிணங்களும் இரத்தமும் நிச்சயமாக தமிழனுடையதாக இருக்கவில்லை. __________________________________ __________________________________ இன்று கிளாலிப்படுகொலைகளுள் பெரியதான ஒரு படுகொலையின் பதினான்காம் ஆண்டு நினைவுநாள். 1993 ஜனவரி இரண்டாம் திகதி ஐம்பது வரையான பொதுமக்கள் கிளாலியில் பயணிதத்துக்கொண்டிருந்தபோது சிறிலங்காக் கடற்படையால் கோரமாகக் கொல்லப்பட்டார்கள். அந்த நினைவில் இப்பதிவை எழுதிப் பதிவேற்றும்போது இன்னொரு படுகொலை வன்னியில் நடந்துள்ளது. சிறிலங்கா அரசின் வான்படை ஒரு கிராமத்தை முற்றாக அழித்துள்ளது. பதினைந்து பேராவது கொல்லப்பட்டுள்ளார்கள், பலர் காயமடைந்துள்ளார்கள். வழமைபோல அது புலிகளின் கடற்படைத்தளம்தான் என்று அரசாங்கம் சொல்லியுள்ளது. மன்னார் மாவட்ட ஆயர் இராயப்பு ஜோசப் அவர்கள் நேரிற்சென்று பார்வையிட்டு படுகொலையை உறுதி செய்துள்ளார். _____________________________________________ தமிழ்ப்பதிவுகள் Labels: அனுபவம், நினைவு, மக்கள் துயர், வரலாறு |