________________________________ தினக்குரல் பத்திரிகையில் வந்த கட்டுரையிது. பயன்கருதிப் பதிவாக்கப்படுகிறது. தகவல்களைப் பொறுக்கவோ புது விவாதமொன்றை உருவாக்கவோ உதவக்கூடும். ________________________________
ஈழத்து எழுத்தாளர்கள் மத்தியில் மார்க்சிய இலக்கிய பரிச்சயம் பனுவல் - நந்தினி சேவியர்
கடந்த நூற்றாண்டின் மத்திய பகுதியிலேயே மார்க்சிய இலக்கிய பரிச்சயம் ஈழத்தவர்கள் மத்தியில் ஏற்பட்டது. இலங்கையின் முதல் இடதுசாரிக் கட்சியான சமசமாஜக் கட்சி ஒரு மார்க்சியக் கட்சியாக 1935 இல் உருவாக்கப்பட்டது. 1935 இல் ஐக்கிய சோஷலிசக் கட்சியாகவும் பின்னர் 1943 இல் இலங்கைக் கம்னியூஸ்ட் கட்சியாகவும் மார்க்சிய இயக்கம் வளர்ந்தது.
பொன்னம்பலம் கந்தையா, அ. வைத்தியலிங்கம், கார்த்திகேசன், வி. பொன்னம்பலம், நா. சண்முகதாசன் போன்றவர்களே மார்க்சிய சிந்தனையை தமிழ் மக்கள் மத்தியில் அறிமுகம் செய்தவர்களாவர்.
1946 இல் கே. கணேஸ், கே. ராமநாதன் போன்றவர்களால் வெளியிடப்பெற்ற "பாரதி" எனும் சஞ்சிகையே தமிழின் முதல் முற்போக்குச் சஞ்சிகை என கருதப்படுகின்றது. இதன் ஆசிரியர்கள் இலங்கைக் கம்னியூஸ்ட் கட்சியைச் சேர்ந்தவர்களாகும். கே. ராமநாதன் இலங்கைக் கம்னியூஸ்ட் கட்சியின் தமிழ் பத்திரிகையான `தேசாபிமானி'யின் ஆசிரியராகவும் விளங்கினார். இலங்கை எழுத்தாளர் சங்கத்தை 1947 இல் உருவாக்கியவர்களும் இவர்களே.
`பாரதி' சஞ்சிகையில் அ.ந. கந்தசாமி, அ.செ. முருகாநந்தன், கே. கணேஸ், மகாகவி போன்றவர்கள் எழுதியுள்ளனர்.
அ.ந. கந்தசாமி இலங்கைக் கம்னியூஸ்ட் கட்சியின் தேசாபிமானிப் பத்திரிகையில் பணியாற்றினார். பின்னர் `சுதந்திரன்', `வீரகேசரி' பத்திரிகையிலும் பணியாற்றினார். மறுமலர்ச்சி கால எழுத்தாளராக கணிக்கப்படும் அ.ந. கந்தசாமி, பாரதியாரின் ஞானகுருவான யாழ்ப்பாணத்துச் சாமியார் அல்வையூர் அருளம்பலம் சுவாமிகள்தான் என்பதை தெளிவுற நிலைநாட்டியவராகும்.
யாழ்ப்பாணத்தில் சாதி ஒடுக்குமுறைக்கு எதிராக எம்.சி. சுப்பிரமணியம் தலைமையில் உருவான சிறுபான்மை தமிழர் மகா சபையில் அங்கத்தவர்களாக இருந்த டானியல், ஜீவா, எஸ். பொன்னுத்துரை, என்.கே. ரகுநாதன், கவிஞர் பசுபதி போன்றவர்களே ஆரம்பகால முற்போக்கு எழுத்தாளர்களாகக் கருதப்பட்டனர். இவர்கள் மார்க்சிய சிந்தனையால் கவரப்பட்டவர்களே.
இவர்களோடு செ. கணேசலிங்கன், முருகையன், சில்லையூர் செல்வராசன், அகஸ்தியர், இளங்கீரன், எச்.எம்.பி. முகைதீன் போன்ற படைப்பாளிகளும் க. கைலாசபதி, கா. சிவத்தம்பி போன்றவர்களும் முற்போக்கு அணியைச் சேர்ந்தவர்களாகக் கருதப்பட்டனர். இவர்களால் உருவாக்கப்பட்ட இயக்கமே இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கம். இது 1954 ஜூன் 27 ஆம் திகதி உருவாக்கப்பட்டது. யாழ்ப்பாணத்தில் தலைமறைவு வாழ்க்கையை மேற்கொண்டிருந்த அமரர் பா. ஜீவானந்தம் அவர்களின் தொடர்பாடல், டொமினிக் ஜீவா, டானியல் போன்றவர்கள் மார்க்சியத்தின் பால் ஆழமான ஈடுபாடு கொண்டார்கள்.
இவர்களது படைப்புகள் பிற்கால `ஈழகேசரி'யிலும் `சுதந்திரன்' போன்ற பத்திரிகைகளிலும் ஏராளமாக வெளிவந்தன.
1960 ஆம் ஆண்டில் மு.போ.எ. சங்கம் தேசிய இலக்கியம் என்ற கொள்கையைப் பிரகடனம் செய்தது. அதே ஆண்டில் எழுத்தாளர் கூட்டுறவுப் பதிப்பகமும் ஆரம்பிக்கப்பட்டது.
1961 இல் வெளியான இளங்கீரனின் `மரகதம்' பத்திரிகையில் தேசிய இலக்கியம் பற்றிய முதலாவது கட்டுரையை க. கைலாசபதி எழுதினார். பின்னர் ஏ.ஜே. கனகரட்ணா, அ.ந. கந்தசாமி போன்றவர்கள் தேசிய இலக்கியம் பற்றி எழுதினார்கள்.
தேசிய இலக்கியம் முன்வைக்கப்பட்டு அதற்கு ஆதரவு பெருகி வந்ததனால் ஆத்திரம் கொண்ட இலக்கிய சனாதனிகள், படைப்பிலக்கியவாதிகள் மீது கடுமையான தாக்குதலை நடத்தினார்கள். போதிய கல்வியறிவு இல்லாதவர்கள், தமிழ் மரபு தெரியாதவர்கள், மரபை மீறி எழுதும் மட்டமான எழுத்தாளர்கள், இவர்கள் எழுதும் இலக்கியம் இழிசினர் இலக்கியம் என்றெல்லாம் இகழப்பட்டன.
1962 இல் தினகரனில் ஆரம்பிக்கப்பட்ட விவாதத்தில் மரபுவாதிகள் தரப்பில் கலாநிதி அ. சதாசிவம், பண்டிதர் இளமுருகனார், பண்டிதர் வ. நடராஜா போன்றவர்கள் வாதிட எழுத்தாளர் தரப்பில் இளங்கீரன் அ.ந.க. சிவத்தம்பி போன்றோர் வாதிட்டு வென்றனர். க. கைலாசபதி `தினகரன்' ஆசிரியராக இருந்த காலத்தில் முற்போக்கு எழுத்தாளர்களுக்கு நிறைய ஊக்கம் வழங்கினார். இளங்கீரன், செ. கணேசலிங்கன், நீர்வை பொன்னையன் போன்ற எழுத்தாளர்கள் மிகவும் உற்சாகமாக தமது படைப்புகளை வெளியிட்ட காலகட்டமும் அதுவே.
கைலாசபதி பல்கலைக்கழக விரிவுரையாளராகிய பின்னர் மார்க்சிசத்தை ஆதரித்த பல எழுத்தாளர்கள் பல்கலைக்கழகத்தில் இருந்து தோன்றினார்கள். செ. யோகநாதன், செ. கதிர்காமநாதன் போன்றவர்கள் அதில் குறிப்பிடப்பட வேண்டியவர்கள். யோ. பென்டிக்ற்பாலன் இவர்களது சமகாலத்தவரே. முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தில் மார்க்சியத்தை ஏற்றுக் கொள்ளாதவர்கள் பலரும் இருந்துள்ளனர். வ.அ. இராசரத்தினம், அ.ச. அப்துஸ்சமது, மருதூர் கொத்தன் போன்றவர்கள் இதில் முக்கியமானவர்கள்.
சமசமாஜக் கட்சியினைச் சேர்ந்த சு. இராசநாயகன் மார்க்சிய எழுத்தாளராக தம்மை இறுதிவரை காட்டிக்கொள்ளவில்லை. இன்னுமொரு முக்கிய விசேடம் க. கைலாசபதியினால் அறிமுகமான அ. முத்துலிங்கம் ஒரு மார்க்சிய எழுத்தாளராக உருவாகாமல் போனார். இளங்கீரனின் தென்றலும் புயலும், நீதியே நீ கேள், செ. கணேசலிங்கனின் நீண்ட பயணம், ஒரே இனம், நல்லவன், சடங்கு, டானியல் கதைகள், மேடும் பள்ளமும், (நீர்வை பொன்னையன்) குட்டி, (யோ. பெனடிக்ற்பாலன்), ஜீவாவின் தண்ணீரும் கண்ணீரும், பாதுகை சாலையின் திருப்பம், என்.கே. ரகுநாதனின் நிலவிலே பேசுவோம், யோகநாதன் கதைகள், கவிஞர் பசுபதியின் புது உலகம் முதலியன அறுபதுகளில் வெளிவந்தவையாகும். சோசலிச யதார்த்தவாத படைப்புகள் பற்றிய கருத்துகளும் மார்க்சிய விமர்சகர்களால் இக்கால கட்டத்திலேயே வலியுறுத்தப்பட்டன.
கவிதைத் துறையில் முருகையன், சில்லையூர், கவிஞர் பசுபதி போன்றவர்கள் முற்போக்காளர்களாக அறியப்பட்டதுபோல் மகாகவி அறியப்படவில்லை. அவர் மார்க்சியத்தின்பால் ஈடுபாடு கொண்டவராகவும் இருக்கவில்லை. இத்தலைமுறையினைத் தொடர்ந்து சண்முகம் சிவலிங்கம், நுஃமான் போன்றவர்கள் அறிமுகமானார்கள். கவிதை புதுவீச்சுக் கொண்டது. மு. தளையசிங்கம், மு. பொன்னம்பலம் போன்றவர்கள் முற்போக்காளர்களோடு முரண்பட்ட காலகட்டமும் இதுவே. விமர்சன விக்கிரகங்கள், ஏழாண்டு இலக்கிய வளர்ச்சி, முற்போக்கு இலக்கியம் ஆகிய கட்டுரைகள் இக்காலகட்டத்தில் மு. தளையசிங்கத்தால் எழுதப்பட்டன.
எஸ்.பொ. முற்போக்கு அணியினரால் வெளியேற்றப்பட்டு, நற்போக்கு இயக்கத்தை ஆரம்பித்து, முற்போக்காளரை எதிர்த்ததும் இக்கால கட்டத்தில்தான்.
தமிழ் நூல்களுக்கு சாகித்திய மண்டல பரிசில்கள் வழங்கப்பட ஆரம்பித்ததும் டொமினிக் ஜீவாவின் தண்ணீரும் கண்ணீரும் பரிசு பெற்றதும் இக்காலகட்டத்தில் தான். இதனை அடுத்து, புகழ் பெற்ற முட்டை எறிவு நிகழ்வு யாழ்ப்பாணத்தில் நடைபெற்றமையும் குறிப்பிடத்தக்கது.
இழிசினர் வழக்கு மண்வாசனை என்றெல்லாம் பேசப்பட்ட இலக்கிய வகைக்கமைய மரபு வாதிகள் எழுதத் தொடங்கினார்கள். பின்னர் மண்வாசனையின் பிதாமகர்கள் தாமே என மார்தட்டும் நிலைக்கு அவர்கள் வந்தனர். இந்த ஆரோக்கிய நிலைக்கு மார்க்சியத்தை ஏற்றுக்கொண்ட இயக்கத்தினரின் போராட்டமே காரணியெனலாம்.
இலங்கை கம்னியூஸ்ட் கட்சி சீன சார்பு, ரஷ்ய சார்பாக பிளவுபட்ட காலத்தில் க. கைலாசபதியுடன் இளங்கீரன், டானியல், என்.கே. ரகுநாதன், செ. கணேசலிங்கம் போன்ற எழுத்தாளர்களும் யாழ்ப்பாணக் கவிராயர் சுபத்திரன் போன்ற கவிஞர்களும் சீனச்சார்பு எடுத்தார்கள். க. சிவத்தம்பி, ஜீவா, அகஸ்தியர் போன்றோர் ரஷ்ய சார்பு எடுத்தனர்.
"வசந்தம்" பத்திரிகை யாழ்ப்பாணத்தில் இ.செ. கந்தசாமியால் வெளியிடப்பட்டது.
இதன்பிறகு, டொமினிக் ஜீவாவினால் "மல்லிகை" ஆரம்பிக்கப்பட்டது.
ரஷ்ய சார்பு எழுத்தாளர்களின் படைப்புகளின் உத்வேகம் மந்த நிலையை அடைந்திருந்தமையால் மு. போ. எழுத்தாளர் சங்கத்தின் செயற்பாடுகள், 1963 இற்கும் 1973 இற்கும் இடையில் பெரும் தேக்கம் அடைந்திருந்தமை அவதானிக்கத்தக்கதாகவும் பிரேம்ஜி ஆயுள்காலச் செயலாளர் என கிண்டலாகப் பேசப்பட்ட நிலையும் தோன்றியது.
யாழ்ப்பாணத்தில் பாராளுமன்றப் பாதைக்கு எதிரான சக்திகள் வலுப்பெற்று வந்தன. செ. கணேசலிங்கனின் செவ்வானம், தரையும் தாரகையும், யோ. பெனடிக்ற் பாலனின் சொந்தக்காரன் நாவல்களும், நீர்வை பொன்னையனின் உதயம், செ. கதிர்காமநாதனின் கொட்டும் பனி, செ. யோகநாதனின் `ஒளி நமக்கு வேண்டும்' தொகுதிகளும் வெளிவரத் தொடங்கின. தமிழக விமர்சகர்களான க.ந. சுப்பிரமணியம், வெங்கட் சாமிநாதன் போன்றவர்களுக்கு பதிலிறுக்கும் க. கைலாசபதியின் மார்க்சிய விமர்சனக் கட்டுரைகளும் நாவலிலக்கியம் பற்றிய கட்டுரைகளும் வெளிவந்தன.
தீண்டாமை ஒளிப்பு வெகுஜன இயக்கம் போராட்ட இயக்கமாக உருவெடுத்தது. சாதி அமைப்பு தகரட்டும் சமத்துவ நீதி ஓங்கட்டும் என்ற அறை கூவலுடன் இயக்கம் வளர்ந்தது. புகழ் பெற்ற மாவிட்டபுரப் போராட்டம், மட்டுவில் பன்றித்தலைச்சி அம்மன் ஆலயப் பிரவேசப் போராட்டம், நிச்சாமம், மந்துவில், மட்டுவில், அச்சுவேலி, கன்பொல்லை என்ற சாதி அமைப்புக்கெதிரான அலை கொதித்தெழுந்தது.
போராட்ட இலக்கியங்கள் உருவாகின. சுபத்திரனின் இரத்தக்கடன், என்.கே. ரகுநாதனின் மூலக்கதையுடன் அம்பலத்தாடிகள் அவைக்காற்றிய கந்தன் கருணை, மௌனகுருவின் சங்காரம் என்பன தோன்றின. களனி, தாயகம், சமர் அணு, வாகை என முற்போக்குச் சஞ்சிகைகள் பல ஆரம்பிக்கப்பட்டன. டானியலின் பஞ்சமர், செ. கணேசலிங்கனின் போர்க்கோலம் போன்ற நாவல்கள் வெளிவந்தன.
சமூக அடக்குமுறைகளுக்கு எதிராக கிளர்ந்தெழும் மக்களின் எழுச்சியைக் கூறும் இலக்கியங்கள், மார்க்சிய இலக்கியங்களாக விமர்சகர்களால் அடையாளம் காணப்பட்டன. புதுக்கவிதை முற்போக்காளர்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டமையும் நிகழ்ந்தது.
மு.போ.எ. சங்க செயற்பாடுகளில் அதிருப்பியுற்றவர்களால் செம்மலர்கள், இலக்கியவட்டம், தேசியகலை, இலக்கியப்பேரவை, திருகோணமலை முன்னோடிகள், சங்கப்பலகை போன்றவை தோற்றுவிக்கப்பட்டன. இவைபோன்ற இயக்கங்கள் கல்முனை, மன்னார் போன்ற பிரதேசங்களில் உருவாகின.
இவர்கள் திருகோணமலையில் மாபெரும் மாநாடு ஒன்றை நடத்தி புதிய ஜனநாயக கலாசாரத்தின் தேவையை வலியுறுத்தினார்கள். முற்போக்கு எழுத்தாளர் சங்கத்திலிருந்து வெளியேற்றப்பட்ட டானியல், என்.கே. ரகுநாதன், சில்லையூர் செல்வராசன், செ. கணேசலிங்கன் போன்றவர்களும் இம்மாநாட்டில் கலந்து கொண்டனர்.
மு.போ.எ. சங்கம் 1975 இல் தேசிய ஒருமைப்பாட்டு மாநாட்டை கொழும்பில் நடத்தியது. தேசிய இனப் பிரச்சினைத் தீர்விற்கான 12 அம்சத் திட்டம் முன்வைக்கப்பட்டது. அங்கு நடைபெற்ற கவியரங்கில் சண்முகம் சிவலிங்கம் மாநாட்டின் நோக்கத்தை அம்பலப்படுத்தும் கவிதை ஒன்றைப்பாடி பரபரப்பை ஏற்படுத்தினார்.
மார்க்சிசத்தை ஏற்றுக்கொண்ட டானியல், அன்ரனி, நந்தினி சேவியர், வ.ஐ.ச. ஜெயபாலன், சாருமதி, சசி, கிருஷ்ணமூர்த்தி, நல்லை அமிழ்தன், தில்லை முகிலன், இராஜ தர்மராஜா, பாலமுனை பாறூக் அன்புடீன், முல்லை வீரக்குட்டி, முருகு கந்தராசா, க. தணிகாசலம், சி. சிவசேகரம் போன்றவர்களும் மு. நித்தியானந்தன், சமுத்திரன் சித்திரலேகா போன்ற விமர்சகர்களும் உருவானார்கள்.
சுந்தரலிங்கம், மௌனகுரு, தாசிசியஸ், பாலேந்திரா, இளைய பத்மநாதன் போன்ற நாடக நெறியாளர்கள் உருவானதும் இக்காலகட்டத்திலேயே நிகழ்ந்தது.
செ. கணேசலிங்கனின் குமரன் சஞ்சிகையில் அ. யேசுராசா ஒரு கவிதையை எழுதியமையும் பின் `அலை' சஞ்சிகையை ஆரம்பித்ததும் இக்காலத்தில்தான். மல்லிகையில் கூட அ. யேசுராசாவின் முற்போக்கான ஒரு கவிதை வெளிவந்தமை குறிப்பிடத்தக்கது. "ஊரில் பெருமனிதர் எடுத்த விழாவிடை பேருரைகள் ஆற்ற சில பெரிய மனிதர் மேடை அமர்ந்திருந்தார்...." என அக்கவிதை தொடங்குகிறது.
தொலைவும் இருப்பும் ஏனைய கதைகளும் தொகுப்பின் காரசார விமர்சனம் அவரை எதிரணிக்கு தள்ளியது என்ற கருத்தும் நிலவியது.
பிரசார இலக்கியங்கள் என அக்காலத்தில் வெளிவந்த இலக்கியங்களை விமர்சிக்கப்பட்டபோது புதிய இளந்தலைமுறை கலைத்துவப்பாங்கான இலக்கியங்களை உருவாக்கும் முனைப்புடன் செயற்பட்டது. பழைய தலைமுறை எழுத்தாளர்கள் விமர்சகர்களின் தொடர்புகளைத் தவிர்த்து சுயமாக இயங்கும் பக்குவம் இத்தலைமுறைக்கு இருந்தது.
மா.ஓ. வின் யெனான் கருத்தரங்கு உரை அவர்களுக்கு ஆதர்சமாக இருந்தது.
செ. கணேசலிங்கன், டானியல் போன்றோரின் படைப்புகளை தோழமையுணர்வுடன் கடுமையான விமர்சனத்துக்கு இவர்கள் உள்ளாக்கினார்கள்.
பஞ்சமர் நாவல் வெளியீட்டு விழாவில் அன்றைய தினம் தினகரனில் க. கைலாசபதி தாம் எழுதிய விமர்சனத்திற்கு முற்றிலும் மாறான ஒரு விமர்சனத்தை முன்வைக்கும் ஒரு நிர்ப்பந்தத்திற்கு உள்ளாகும் அளவிற்கு விமர்சனம் மிகவும் காத்திரமான முறையில் வளர்ச்சி கண்டது.
சீனாவில் நடைபெற்ற கலாசாரப் புரட்சியின் தாக்கம் இலங்கை விமர்சனத்துறையிலும் படைப்பிலக்கியத் துறையிலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது.
. ஏ.ஜே. கனகரட்ணா போன்றவர்களே கலாசாரப் புரட்சியை வரவேற்று கருத்துக் கூறும் நிலை இருந்தது. சீனாவில் இருந்து நாடு திரும்பிய மாதகல் வ. கந்தசாமி, பாரதியார் கவிதைகளை விமர்சிக்கும் தீவிர போக்கு எடுத்தார். காலக்கிரமத்தில் அவர் தனது கொள்கையை மாற்றிக்கொள்ள வேண்டி ஏற்பட்டது. திக்வெல்லை, நீர்கொழும்பு, அநுராதபுரம், மன்னார், மட்டக்களப்பு, திருகோணமலை, புத்தளம், கல்முனை, அக்கரைப்பற்று என்று முற்போக்கு சிந்தனைகளை அங்கீகரித்தவர்கள் பரஸ்பரம் இணைந்து கொள்ளும் சூழ்நிலைகள் உருவாகின.
டானியல் பஞ்சமர் வரிசை நாவல்களை முனைப்புடன் எழுதத் தொடங்கினார். இன்று தலித்திலக்கிய முன்னோடியாக கணிக்கப்படும் டானியல் தன்னை ஒரு மார்க்சிய எழுத்தாளராகவே இறுதிவரை கூறி வந்துள்ளார் என்பதையும் நாம் மறந்துவிட முடியாது.
1983 க்குப் பின்னர் ஈழத்தில் ஏற்பட்ட மாற்றம் மிக முக்கியமானது. தேசிய ஐக்கியத்தை வலியுறுத்திய முற்போக்கு எழுத்தாளர்கள் தவிர்க்க முடியாதபடி தமிழர் பிரச்சினைகளை எழுதத் தலைப்பட்டனர்.
1986 செப்டெம்பர் 17 இல் இனப்பிரச்சினையில் இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் நிலைப்பாட்டை வலியுறுத்தும் மாநாடு ஒன்று யாழ். நாவலர் கலாசார மண்டபத்தில் நடைபெற்றதும் குறிப்பிடப்பட வேண்டியது.
வானம் சிவக்கிறது எழுதிய புதுவை இரத்தினதுரை, தமிழரின் ஆஸ்தான கவிஞராக மாறினார். இரவல் தாய்நாடு போன்ற செ. யோகநாதன், செ. கணேசலிங்கன் ஆகியோரின் நாவல்கள் வெளிவரத் தொடங்கின.
இது சிலரால் முற்போக்கு எழுத்தாளர்களின் பின்னடைவாக கருதப்பட்டது. ஆனாலும், இதுவும் மார்க்சியத்தை ஏற்றுக்கொண்டவர்களின் ஒரு முற்போக்கான நிலைப்பாடாகவே கருதப்பட வேண்டும். பேராசிரியர் சிவத்தம்பியின் மறுபரிசீலனை விமர்சனங்கள் வெளிப்பாடடைந்தது இந்தக் காலகட்டத்தில்தான்.
மார்க்சிய விமர்சனத்தை அங்கீகரிக்காது இருந்த ந. சுப்பிரமணியம் போன்றவர்கள் மார்க்சிய விமர்சகர்களாக மாறியதும் இக்காலத்தில்தான்.
ஈழத்தின் தமிழ் இலக்கிய வரலாற்றில் மிக முக்கிய விடயம் மார்க்சிய எழுத்தாளர்களையும் மார்க்சிய இலக்கியத்தையும் எதிர்த்தவர்கள், மார்க்சியத்தை எதிர்க்கவில்லை என்பதுதான்.
இதற்கு சில உதாரணங்களைக் குறிப்பிடலாம். எஸ். பொ. சுபமங்களா பேட்டியில் தன்னை ஒரு மார்க்சியத்து உடன்பாட்டுக்காரராக குறிப்பிடுகிறார். அதேபோல், மு. பொன்னம்பலம் மூன்றாவது மனிதன் பேட்டியில் தன்னை மார்க்சிய விரோதியாகக் காட்டவே இல்லை. அத்தோடு, தீவிரமாக கவனிக்க வேண்டிய விடயம் மு.பொ. 50 இக்குப் பின் ஈழத்து இலக்கியம் பற்றிய பார்வை என்ன என்ற மூன்றாவது மனிதன் கேள்விக்கு.
50 க்குப் பின் ஈழத்து தமிழ் இலக்கியம் வளர்ச்சியுற்றுத்தான் வந்திருக்கிறது என ஆரம்பித்து.....
முற்போக்கு எழுத்தாளர்கள் டானியல், டொமினிக் ஜீவா, எஸ். பொன்னுத்துரை, காவலூர் ராசதுரை, அ.ந. கந்தசாமி, சில்லையூர் செல்வராசன் போன்றவர்களின் பணியைக் குறிப்பிட்டுச் சொல்லி `கைலாசபதி' தினகரன் ஆசிரியராக இருந்ததும் முக்கிய பங்களிப்பு என்றும் கூறிவிட்டுத்தான் கைலாசபதி போன்றவர்கள் தங்களுக்குப் பிடித்தவர்களையே தூக்கிப்பிடித்து நின்றார்கள் என்று கூறுகிறார்.
எம்.ஏ. நுஃமான் `ஞானம்' சஞ்சிகைப் பேட்டியில் பின்வருமாறு ஒரு கருத்தை வைத்துள்ளார்.
குழு விமர்சனம் நமது மார்க்சிய விமர்சகர்களைக் குற்றக் கூண்டில் நிறுத்துவதற்கு மற்றவர்களால் உருவாக்கப்பட்டது. இவர்கள் யாவரும் வெவ்வேறு குழுக்களாக இயங்கினார்கள். ஆயினும், மார்க்சிய விமர்சகர்களின் சாதனையை இவர்கள் எட்டவில்லை. மார்க்சிய விமர்சகர்களை மட்டும் குழு விமர்சகர்கள் என்று குற்றம் சாட்டுவதற்கு இவர்களில் யாருக்கும் தார்மீக உரிமையில்லை. மார்க்சிய விமர்சகர்களை விட மற்றவர்களே வசை விமர்சனத்திற்கு அதிக பங்களிப்புச் செய்துள்ளார்கள் என்ற பொருள்பட சில விடயங்களைக் கூறியுள்ளார். இதே பேட்டியில் இன்னோரிடத்தில், நான் ஒருபோதும் எந்த ஒரு மார்க்சிய இயக்கத்துடனும் என்னை இணைத்துக்கொண்டு செயற்பட்டவனில்லை. தத்துவார்த்த ரீதியில் மார்க்சியத்துடன் எனக்கு உடன்பாடு இருந்தது என்றும் பல அம்சங்களில் அந்த உடன்பாடு தொடர்கிறது என்று கூறியிருக்கிறார்.
செங்கையாழியான் `ஈழகேசரி'க் கதைகள் முன்னுரையில் பின்வருமாறு குறிப்பிடுகிறார். "கலைக்காகவும் பொழுதுபோக்குக்காகவும் சிறுகதை படைக்கின்ற காலச்சூழலை நாம் கடந்த இந்த மண்ணில் ஏற்றத்தாழ்வற்ற சகல சுதந்திரங்களையும் அனுபவிக்கும் மானிட இருப்பினை நிலைநாட்டுவதற்கான தத்துவப் புரிதலோடு புனைகதைகளைப் படைக்க வேண்டிய காலத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். பிரபஞ்ச முன்னேற்றத்திற்கும், உலக சமூகத்தின் ஒருங்கிணைந்த விடுதலைக்கும், உயர் மானிடன் எதிர்பார்க்கும் சமூக மாற்றங்களுக்கும் உகந்த தத்துவப்புரிதலை மார்க்சியம் ஒன்றுதான் இன்றும் கொண்டிருக்கின்றது."
இக்கருத்துகள் சமீபத்தில் வெளிவந்தவையே. எனவே, மார்க்சிய இலக்கியத்தையோ விமர்சனத்தையோ எவரும் நிராகரிக்கவில்லை. மார்க்சிய விமர்சகர்களை மட்டுமே எதிர்த்தார்கள் என்பது தெளிவு.
இன்றைய நிலையில் தமிழர் பிரச்சினையை விட்டு விட்டு இலக்கியம் படைப்பது என்பது சாத்தியமற்றதாகிவிட்டது.
இயக்கம் சார்ந்த படைப்புகளாக நிராகரிக்கப்பட்ட முற்போக்கு இலக்கியங்களை விஞ்சுமளவுக்கு, தமிழ்ப் போராளிகள் குழுக்களை ஆதரித்த, எதிர்த்த படைப்புகள் வெளிவரத் தொடங்கியுள்ளன. இவை புலம்பெயர்ந்தோர் சஞ்சிகைகளில்தான் வெளி வருகின்றன என்பதும் குறிப்பிடத்தக்க ஒரு நிகழ்வு.
இது சென்ற நூற்றாண்டின் மார்க்சிய இலக்கியத்தின் வெற்றியென்றே கருதப்பட வேண்டும்.
நமது ஈழத்து நிலைமை தமிழக நிலைமையை விட வித்தியாசமானது. எமது சூழலை நிகர்த்த வேறு பல நாடுகளின் இலக்கியங்களோடு எமது இலக்கியங்களை ஒப்பிட்டுப் பார்க்கும் ஒரு இலக்கிய விமர்சன முறைமையை நாம் செய்வதுதான் தற்போதைய கடப்பாடாக நாம் கருத வேண்டும். அதுவே இந்த நூற்றாண்டின் மார்க்சிய இலக்கியவாதிகளின் முக்கிய பணியாகவும் இருக்க வேண்டும்.
உசாத்துணை
1. புதுமை இலக்கியம் 2. சிறுபான்மை தமிழர் மகாசபை மலர் 3. இளங்கீரனின் தேசிய இலக்கியமும் மரபுப் போராட்டமும் 4. புதுமை இலக்கியம் பேரரங்கு- 96 5. மூன்றாவது மனிதன் இதழ்- (04) 6. மூன்றாவது மனிதன் இதழ்- (05) 7. ஞானம் இதழ்- 02 8. ஞானம் இதழ்- 03 9. சுபமங்களா நேர்காணல் 10. ஈழகேசரிக் கதைகள் முன்னுரை
பின் இணைப்பாக சில குறிப்புகள்
மார்க்சியத்தை அங்கீகரிக்கும் கே.ஆர். டேவிட், ந. ரவீந்திரன் (வாசீகன்), எம்.வை. ராஜ்கபூர் போன்றவர்களும் எழுபதுகளில் முன்பின்னாக அறிமுகமாகியவர்களே. ந. ரவீந்திரனின் விமர்சனக் கட்டுரைகள் மார்க்சிய நோக்கிலானவை. லெனின் மதிவாணம் ஒரு மார்க்சிய விமர்சகராக 90 களில் அறிமுகமாகியுள்ளார்.
தனது 25 ஆவது ஆண்டு விழாவைக் கொண்டாடிய தேசிய கலை இலக்கியப் பேரவை கடந்த நூற்றாண்டில் வெளியீட்டுத் துறையில் மிகக் காத்திரமான பங்கினைச் செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
மார்க்சிய இலக்கியவாதிகள் அல்லாதவர்களினதும் படைப்புகளையும் தே.க.இ. பேரவை வெளியிட்டுள்ளது. கவிதை, சிறுகதை, நாவல், விமர்சனம் என பல்துறை சார்ந்த நூல்களை வெளியிட்டு வருவது ஈழத்து மார்க்சிய இலக்கியத்துக்கு பெருமை சேர்க்கும் ஒரு முக்கிய விடயமாகும். `தாயகம்', பத்திரிகையை மிகுந்த நெருக்கடிகள் மத்தியில் யாழ்ப்பாணத்திலேயே வெளியிட்டு வருவது பாராட்டப்பட வேண்டிய நிகழ்வாகும்.
______________________________ நன்றி: ஞாயிறு தினக்குரல் December 10, 2006 Labels: இலக்கியம், ஈழ அரசியல், ஈழ இலக்கியம், எழுத்தாளர், விமர்சனம், விவாதம் |